உள்ளடக்கத்துக்குச் செல்

மலரும் உள்ளம்-1/ஐந்தாம் பகுதி

விக்கிமூலம் இலிருந்து

வண்ணங்கள் காட்டுது நமது கொடி.
வானத்தை முட்டுது, நமது கொடி
எண்ணங்கள் ஊட்டுது நமது கொடி.
என்னென்ன காட்டுது நமது கொடி?

தீரத்தைக் காட்டுது, சிகப்பு நிறம்.
தியாகத்தைக் காட்டுது. சிகப்பு நிறம்.
வீரத்தைக் காட்டுது, சிகப்பு நிறம்.
வெற்றியைக் காட்டுது, சிகப்பு நிறம்.

ஒளியினைக் காட்டுது, வெள்ளை நிறம்.
உண்மையைக் காட்டுது, வெள்ளை நிறம்.
தெளிவினைக் காட்டுது, வெள்ளை நிறம்.
சிறப்பையும் காட்டுது, வெள்ளை நிறம்.

வளமையைக் காட்டுது, பச்சை நிறம்.
வறுமையை ஓட்டுது, பச்சை நிறம்.
குளுமையைக் காட்டுது, பச்சை நிறம்.
குறைவெலாம் ஓட்டுது, பச்சை நிறம்.

சத்தியம் காட்டிடும், நடுவினிலே,
சர்க்காவின் முக்கிய சக்கரமாம்.
நித்தியம் சுற்றிடும் நில்லாமலே,
நீதியை நாட்டிடும் சக்கரமாம்.

சூறைக் காற்று வந்தது;
சுழன்று சுழன்று அடித்தது;
கூரை வீட்டைப் பிய்த்தது;
குடியைக் கெடுத்துச் சென்றது!

பலத்த மழைதான் பெய்தது;
பயிரை அழித்துச் சென்றது;
ஜலத்தி னாலே மக்களைத்
தத்த ளிக்கச் செய்தது!

நெருப்பு எங்கோ பிடித்தது;
நீண்டு பரவ லானது;
அருமை மிக்க பொருள்களை
அழித்துப் பொசுக்கிச் சென்றது!

பூமி ஆட லானது.
பிளவு நடுவே கண்டது.
ஆவி போக உயிர்களை
அதிலே அழுந்தச் செய்தது!


இருந்து வாழ உதவிடும்
இயற்கை என்று எண்ணினேன்.
இறந்து போகச் செய்யுதே!
இதுவும் விந்தை தானடா!

பாப்பாப் பாட்டைப் பாடித்தந்த
பாரதி யாரைப் போற்றிடுவோம்.
கேட்போம். அவரது வார்த்தைகளை
கேட்ட படியே நடந்திடுவோம்.

‘குன்றெனத் தலைநிமிர்’ என்றிடுவார்.
‘கொடுமை தொலைந்திட வேண்டு’மென்பார்.
‘ஒன்றுபட் டாலே வாழ்வு’ என்பார்.
‘உலகிலே யாவரும் ஒன்று’ என்பார்.

‘சண்டைச் சச்சரவை மூட்டிவிடும்
சாதி ஒழிந்திட வேண்டும்’ என்பார்.
பண்டைப் பெருமை வளர்ந்திடவே
பற்பல உண்மைகள் கூறிடுவார்.

‘பெண்ணுக் குரிமைகள் வேண்டு’மென்பார்.
‘பேச்சொடு செய்கையும் வேண்டு’மென்பார்.
கண்ணிற் சிறந்த விடுதலையைக்
கண்டிட வழிதனைக் காட்டிவந்தார்.


தமிழை வளர்த்திடப் பாடுபட்டார்.
தாய்மொழி ஆசையை ஊட்டிவிட்டார்.
அமுதாம் அவரது வார்த்தைகளை
அறிந்து செயலிலே காட்டிடுவோம்.

கட்டை அவிழ்த்து விட்டிடின்,
களித்துக் கன்று துள்ளிடும்.
வெட்ட வெளியில் சுற்றிடும்
மிகவும் மகிழ்ச்சி கொண்டிடும்.

கூட்டைத் திறந்து விட்டிடின்,
குதித்துக் கிளியும் பறந்திடும்.
வாட்டம் நீங்கி வானிலே,
வட்ட மிட்டுத் திரிந்திடும்.

மடையைத் திறந்து விட்டிடின்
மகிழ்ந்து நீரும் பாய்ந்திடும்.
தடையில் லாது வேகமாய்,
‘தடத’ டென்று ஓடிடும்.

புனித மான விடுதலை
பெறவே அவைகள் துடிக்கையில்,
மனிதன் மட்டும் அடிமையாய்
மண்ணில் வாழ நினைப்பதோ?

காந்தி சொன்ன வழிகளைக்
கடைப்பி டித்து நடந்திடின்,
சாந்தி எங்கும் நிலவிடும்;
சத்தி யந்தான் வென்றிடும்.

அன்பு ஓங்கி வளர்ந்திடும்;
அஹிம்சை என்றும் நிலைத்திடும்;
இன்ப வாழ்வு பெருகிடும்;
ஏழை துன்பம் ஒழிந்திடும்.

சாதிச் சண்டை தொலைந்திடும்;
தருமம் எங்கும் தழைத்திடும்;
நீதி எங்கும் நிலைத்திடும்;
நிறத்து வேஷம் நீங்கிடும்.

உலகில் அமைதி ஏற்படும்;
யுத்தம் யாவும் ஒழிந்திடும்;
கலகம் நீங்கி எங்குமே,
கருணை வெள்ளம் பெருகிடும்.

ஒன்று கூடி நாட்டுக் காகத்
தொண்டு செய்வோமே—நாமும்
தொண்டு செய்வோமே.
அன்றே நமது நாட்டின் பெருமை
அதிக மாகுமே—இன்னும்
அதிக மாகுமே.

சாதி மத பேத மின்றித்
தழைத்து வாழ்வோமே—நன்கு
தழைத்து வாழ்வோமே.
நீதி யார்க்கும் ஒன்று என்றே
நினைத்து வாழ்வோமே—என்றும்
நினைத்து வாழ்வோமே.

நாளை வாழ்வு தன்னில் நாமே
நாட்டை ஆள்பவர்—நமது
நாட்டை ஆள்பவர்.
கோழை எண்ணம் விட்ட வாழ்வு
கொண்டு நிற்போமே—வாழ்வு
கொண்டு நிற்போமே.


ஏட்டி லுள்ள உண்மை யெல்லாம்
எடுத்துச் செய்வோமே—நன்கு
எடுத்துச் செய்வோமே.
நாட்டு மக்கள் உயர்வு கொள்ள
நாமு ழைப்போமே—என்றும்
நாமு ழைப்போமே.

பலத்தைக் கொண்டு உலக வாழ்வைப்
பாழ்படுத்தோமே—வாழ்வைப்
பாழ்ப டுத்தோமே.
நலத்தைக் கொண்டு உலக வாழ்வில்
நன்மை செய்வோமே--மிக்க
நன்மை செய்வோமே.

பார தம்போல் உலகி லேயே
பண்புள் ளபூமி—மிக்கப்
பண்புள் ளபூமி?
வேறு ஏதும் இல்லை யென்றே
விளங்க வைப்போமே—என்றும்
விளங்க வைப்போமே.

தலையே, உலகில் நீதிக்குத்
தாழ்ந்து பணிந்திட வேண்டும், நீ,

கண்ணே, பார்க்கும் பார்வையிலே,
கருணை பொழிந்திட வேண்டும், நீ,

காதே, நல்ல வார்த்தைகளைக்
கருத்தாய்க் கேட்டிட வேண்டும், நீ.

வாயே, உள்ளம் குளிர்ந்திடவே,
வார்த்தை கூறிட வேண்டும், நீ.

மூக்கே, இன்ப விடுதலையே
மூச்சாய் வெளியிட வேண்டும், நீ.

வயிறே, ஏழை மனங்குளிர
வழங்கி உண்ணுதல் வேண்டும், நீ.

கையே, கஷ்டப் படுவோர்க்கு,
கைகொடுத் துதவிட வேண்டும், நீ.

காலே, பாதகச் செயல்யாவும்
கடிதில் நசுக்கிட வேண்டும், நீ.

உடலே, உலகில் புகழென்னும்
உடலை நாட்டிட வேண்டும், நீ.

தூங்கு கின்ற போதிலே,
துயரம் எதுவும் இல்லையே.
ஏங்கச் செய்யும் எண்ணமும்
எழுவ தில்லை, இல்லையே!

ஏழை, அடிமை என்றெலாம்
எவரும் இகழ்வ தில்லையே.
நாளை வாழ்வைப் பற்றியும்
நமக்குக் கவலை இல்லையே.

பயமும், பகையும் இல்லையே.
பணத்துக் கவலை இல்லையே.
தயவு வேண்டி எவரையும்
தாங்கத் தேவை இல்லையே.

அமைதி நமக்கு அளிப்பதும்,
அசதி நீங்கச் செய்வதும்
இமையை மூடித் தூங்கிடும்
இன்ப மான தூக்கமே.

‘மரமே, மாடே’ என்றெல்லாம்
மனிதர் திட்டிக் கொள்கின்றார்.
மரமும் மாடும் உதவுதல்போல்
மனிதர் எங்கே உதவுகிறார் ?


நிழலைத் தந்து களைப்பெல்லாம்
நீக்குதல் அந்த மரமாகும்.
பழத்தைத் தந்து உடலுக்கே
பலத்தைத் தருவது மரமாகும்.

விறகைத் தந்து அரிசியினை
வேகச் செய்வது மரமாகும்.
பறவை கூடு கட்டிஇனம்
பரவச் செய்வது மரமாகும்.


வயலை உழுது பயிர்களையே
வளரச் செய்வது மாடாகும்.
வெயிலில், மழையில் மனிதர்களை
விரைந்து இழுப்பது மாடாகும்.


கழுத்து நோகத் தினந்தினமும்
கவலை இழுப்பது மாடாகும்.
கொளுத்தும் வெயிலில் நடந்திடவே
கொடுப்பது மிதியடி, மாடாகும்.

செத்த மாட்டுத் தோலினால்,
செய்ய லாமே செருப்புகள்.

செத்த ஆட்டு மயிரினால்
செய்ய லாமே கம்பளி.

செத்த எருமைக் கொம்பினால்,
செய்ய லாமே சீப்புகள்.

செத்த யானைத் தந்தத்தால்,
செய்ய லாமே பொம்மைகள்.

செத்த பாம்புத் தோலிலும்,
செய்ய லாமே பைகளை,

செத்த மனிதன் உடலிலே,
செய்ய என்ன உள்ளதோ?

செருப்புக் கூடத் தைத்திட,
தீண்டு வோரும் இல்லையே!

சத்து நிறைந்த பாலையே
தந்து காக்கும் ஆட்டினைக்
கத்தக் கத்த அறுத்துநாம்
களித்துத் தின்ன லாகுமோ?

கூவி நம்மை எழுப்பிடும்
கோழி நல்ல பறவையாம்.
ஆவி போக அதனைநாம்
அறுத்துத் தின்ன லாகுமோ?

தாகம் தீர்க்கும் நீரிலே
தங்கி நிற்கும் அழுக்கினைப்
போகச் செய்யும் மீன்களைப்
பிடித்துத் தின்ன லாகுமோ?

சாது வான உயிர்களைச்
சாக டித்துத் தின்பதோ ?
போதும், போதும், இன்றேநாம்
புத்தர் வழியில் செல்லுவோம்.

ஒட்டுக் கேட்டு ரகசியம்
ஊரில் எங்கும் சொல்லுதல்
கெட்ட குணத்தில் ஒன்றடா.
கேட்பாய்; இன்னும் கூறுவேன்.

வேறு ஒருவர் பெயருக்கு
விலாச மிட்ட கடிதத்தை
யாரும் அறியா வேளையில்
எடுத்துப் பார்த்தல் கெடுதலாம்.

நண்பன் குற்றம் செய்திடின்
நயந்து கூறித் திருத்தலாம்.
புண்ப டுத்தும் முறையிலே
போதித் திடுதல் கெடுதலாம்.

ஆட்டம் தன்னில் தோற்றிடின்
ஆத்தி ரம்நீ கொள்வதேன் ?
வாட்ட மாக முகத்தினை
வைத்துக் கொள்ளல் கெடுதலாம்.


தீய வழியில் செல்கையில்
திருத்த முயற்சி செய்திடும்
தூய நண்பன் அவனைநீ
துரத்தி யடித்தல் கெடுதலாம்.

செவிடர், குருடர், முடவர்க்கு
செய்வாய் நல்ல உதவிகள்.
அவரைக் கேலி செய்வதோ
அதிகக் கெட்ட செய்கையாம்.

மனிதர் வெறுக்கும் சேற்றிலே
மலர்ந்து நிற்கும் தாமரை.
புனித மான கடவுளைப்
பூசை செய்ய உதவுதே!

அழுக்க டைந்த சிப்பியில்
அழகு முத்தைக் காணலாம்.
கழுத்தில் நல்ல மாலையாய்க்
கட்டி மகிழ உதவுதே!

கன்னங் கரிய குயிலிடம்
காது குளிரும் கீதமாம்.
‘இன்பம், இன்பம்’ என்றுநாம்
இன்னும் கேட்கச் செய்யுதே!

விடத்தில் மிக்க பாம்பிடம்
விலையு யர்ந்த ரத்தினம்.
அடடா, அந்த ரத்தினம்
அரச ருக்கும் கிட்டுமோ!


ஊசி போன்ற முள்ளிலே
உயர்ந்த ரோஜா மலருதே.
வீசி நல்ல மணத்தினை
விரும்பி அணியச் செய்யுதே!

மோச மான இடத்திலும்
மிகவும் நல்ல பொருளுண்டு.
யோசிக் காமல் எவரையும்
ஏள னம்நீ செய்வதேன்?

ஊஞ்சல் போல முன்னும் பின்னும்
கருங்கடலே—நீயும்
ஓடி ஓடி வந்து போவாய்
பெருங்கடலே.

நீல வர்ண மேகந் தானோ
கருங்கடலே—இங்கே
நிழலை உன்மேல் வீசி யதோ
பெருங்கடலே?

கரையில் மண்ணை நீயே சேர்த்தாய்
கருங்கடலே—அதனைக்
கடந்து செல்ல முயல்வ தேனோ
பெருங்கடலே?

உப்புத் தந்தே உணர்வ ளிக்கும்
கருங்கடலே—நாங்கள்
உன்னை யென்றும் மறந்தி டோமே
பெருங்கடலே.


பரந்த உன்றன் அளவு போலக்
கருங்கடலே--நாங்கள்
பரந்த எண்ணம் பெற்றி டுவோம்
பெருங்கடலே.

தொண்டை மான்கள் என்றிட் டாலும்
கருங்கடலே --- மிக்கத்
துணிச்ச லோடு எதிர்த்து மோதும்
பெருங்கடலே.

தோட்டி தொண்டை மானெ வர்க்கும்
கருங்கடலே---நீயும்
தொட்டுப் பாதம் கழுவி நிற்பாய்
பெருங்கடலே.

காற்றைத் தந்து மகிழ்ச்சி யூட்டும்
கருங்கடலே-நாங்கள்
கரையை நோக்கி வரவே செய்யும்
பெருங்கடலே.

முத்தை யெல்லாம் தோற்று விக்கும்
கருங்கடலே -- நல்ல
முத்துப் போன்ற எண்ணங் கொள் வோம்
பெருங்கடலே.

அருமை மிகவுடைய தம்பி—மேலே
அண்ணாந்து பார்த்திடுவாய், தம்பி.
பெருமை மிகவுடைய நிலவு—எங்கும்
பேரின்பம் ஊட்டுதடா, தம்பி.

அம்மா வாசைஇரவில் தம்பி—மேலே
அளவற்ற் மீன்கள் தோன்றும் தம்பி.
இம்மா நிலத்தினிலே தம்பி—அவை
இருளினை ஓட்டுமோடா, தம்பி?

எண்ணற்ற மீன்களடா, தம்பி—வானில்
எத்தனை இருந்திடினும் தம்பி,
வெண்ணிலவு ஒன்றுபோலத் தம்பி—அவை
வீசிஒளி தந்திடுமோ தம்பி!

பெரியோர் ஒருவரைப்போல் தம்பி—பல
பேதையர்கள் கூடிடினும் ஆமோ?
சரியாய் உணர்ந்திடுவாய், தம்பி—இதே
தாழ்வு, உயர்வுணர்வாய், தம்பி.


பெரிதாய் வளர்ந்துநிலா, தம்பி—இன்பப்
பேரொளியை வீசுதடா தம்பி.
பெரியோர் தொடர்பும் அதுபோலே—மிக்கப்
பெருமை வளர்க்குமடா தம்பி.

சிறிது சிறிதாகத் தம்பி—நிலா
தேய்ந்து மறையுமடா, தம்பி.
சிறியோர் தொடர்பும், தம்பி—அந்தத்
தேய்பிறையைப் போன்றதடா, தம்பி

துன்பம் இன்பம்இவைகள் போலே—நிலா
தேய்ந்து வளர்ந்துவரும் தம்பி.
துன்பம் இல்லாவிடிலோ தம்பி—இங்கு
இன்பமும் இல்லையடா, தம்பி.

பத்துமா தங்கள் கஷ்டமிகப் பட்டுப்
பாரினில் என்னையே கொண்டுவந்தாள்.
எத்தனை கஷ்டங்கள் நேர்ந்திடி னுமவள்
என்றுமே இன்முகம் காட்டிடுவாள்.

அம்மா பக்கத்தில் தூங்கிடும் போதுநான்
அழுது ‘ஓ’வெனக் கத்திடுவேன்.
‘சும்மா தூங்கிடு, ஆராரோ’ வெனச்
சொல்லுவள் தாலாட்டுத் தூக்கமின்றி.

குழந்தை யெனக்கு நோயுமே வந்திடின்
கொஞ்ச உணவேனும் கொள்ளமாட்டாள்.
பழகிய பாட்டிகள் வீட்டுக்கு வந்திடின்
பக்குவ மெல்லாம் கேட்டறிவாள்.

மாந்தம்போ லேசில வியாதிகள் எனக்கு
மாறி,மாறி வந்த காலமெல்லாம்,
சாந்தமாய் என்றன் பக்க மிருந்தவள்
தக்க மருந்துகள் தந்திடுவாள்.


பள்ளிக் கூடம்செல்ல வழியனுப் பியவள்
பார்த்து நிற்பாள்தலை மறையுமட்டும்.
பள்ளிக் கூடம்விட்டு வந்தது மேயவள்
அள்ளியே வாரி அணைத்திடுவாள்.

மார்பி லணைத்தே மடியி லிருத்தி
வட்டியில் சாதத்தை வைத்துக்கொண்டே,
“ஓர்வாய், ஓர்வாய், உண்டிடு வா”யென
ஊட்டி நானுண்டிடக் கண்டிடுவாள்.

“ஆரிவர்?” என்றே வீட்டுக்கு வந்தோரை
அன்னையும் காட்டியே கேட்டிடுவாள்.
நேரிய வழியில் கூறும் மழலையில்
நினைவு மறந்து மகிழ்ந்திடுவாள்.

சித்திரக் காரன் எழுதும் படத்தினில்
சிந்தனை யெல்லாம் செலுத்துதல்போல்,
அத்தனை கவனமும் அன்புட னென்மேல்
ஆர்வமாய் அன்னை செலுத்திடுவாள்.

அன்புடன் நம்மையே பேணி வளர்த்திடும்
அன்னைசொல் தட்டாது கேட்டிடுவோம்.
என்றுமே அன்பினைக் காட்டிடும் அன்னையை
ஏத்தித் தொழுதுநாம் போற்றிடுவோம்.



ஒன்றே முக்கால் அடியாலே
உலகம் தன்னைக் கவர்ந்ததுவாம்.
அன்றும் இன்றும் என்றென்றும்
அருமை பெருமை உடையதுவாம்.

பன்மொழி களிலும் வெளியாகிப்
பாரில் பரவி நிற்பதுவாம்.
பொன்மொழி யாவும் நிறைந்தஒரு
பொக்கிஷ மாகத் திகழுவதாம்.

உள்ளம் தூய்மை உற்றிடவும்,
உயரிய நன்மை பெற்றிடவும்
தெள்ளத் தெளிய உதவுவது
திருக்குறள், திருக்குறள், திருக்குறளே!

எங்கெங் கேநான் சென்றிடினும்
என்னைத் தொடர்ந்தே வந்திடுமே.

காதும் மூக்கும் இருந்திடினும்
கண்ணை மட்டும் காணவில்லை.

உருவம் என்னைப் போலிருந்தும்
உரையா தொன்றும் என்போலே.

மனிதர், மிருகம், மரங்களுமே
வளர்தல் சிறிது சிறிதாகும்.

அதுவும் அவைபோல் வளர்ந்திடுமே,
ஆனால், குறைந்தும் போய்விடுமே!

வளர்தல், குறைதல் அதனில்நாம்
மாறி மாறிக் கண்டிடலாம்.

வெள்ளையன், கறுப்பன் என்றெல்லாம்
வித்தி யாசம் அதற்கில்லை.

யாரா யிருப்பினும் அதன்தோற்றம்
என்றும் கறுப்பு நிறமேதான்!

என்னிடம் கடவுள் வந்துனக்கு
எவ்வரம் வேண்டும் எனக்கேட்டால்
இன்னிசை பாடும் பறவையதாய்
என்னை ஆக்கிட வேண்டிடுவேன்.

விண்ணில் பறந்து திரிந்திடவே,
‘விர்’ரென மேலே கிளம்பிடுவேன்.
கண்ணுக் கினிய காட்சியெல்லாம்
கண்டே திரும்பி வந்திடுவேன்.

காடுகள் மலைகள் எல்லாமே
கடிதில் சென்று கடந்திடுவேன்.
வீடுகள் மாளிகை யாவிலுமே
விரும்பி யமர்ந்து வந்திடுவேன்.

இதயத் தின்பம் பாய்ச்சிடவே
இனிய கீதம் பாடிடுவேன்.
சுதந்திரம் பெற்ற வாழ்வினிலே
துயரம் இன்றிக் களித்திடுவேன்.


எப்படி உணவைச் சேர்ப்பதெனும்
ஏக்கம் இன்றி இருந்திடுவேன்.
இப்படி நாமேன் இல்லையென
எண்ணிட மாந்தர், வாழ்ந்திடுவேன்.

கல்லூரி :
உயிரெ ழுத்தும் மெய்யெ ழுத்தும்
ஒன்று ஒன்றாய்க் கூறியே
உயிரெ டுக்கும் பள்ளி யேஇவ்
வுலகில் நீதான் உயர்வோசொல்?

ஆரம்பப் பள்ளி :
பெரியோர், சிறியோர் என்ற பேதப்
பேச்சு ஏனோ? நண்பரே.
பெரிய கட்டி டத்தி னாலே
பெருமை வந்து சேருமோ?

கல்லூரி :
பட்டம் பலவும் பெற்றுச் சர்க்கார்
பதவி ஏற்று வாழவே
திட்ட மான கல்வி தன்னைத்
திறமை யோடு தந்ததார்?


ஆ. பள்ளி:
கையி லுள்ள பணமும் போகக்
கடனும் வாங்கி உன்னிடம்
பையன் பட்டம் பெறவே கொட்டிப்
பலன் பெறாதோர் எத்தனை?

கல்லூரி :
நாக ரிகம் என்ன தென்று
நன்கு காட்டி மாந்தர்கள்
வேக மாக மொழியைக் கற்க
வேண்டும் சக்தி தந்ததார்?

ஆ.பள்ளி :
கழுத்தில் ‘டை’யும், தலையில் ‘ஹேட்’டும்,
காலில் ‘பூட்’ஸும் அணிவோரும்
எழுத்துக் கூட்டிக் கற்றி டாமல்
எப்ப டிமுன் னேறினர்?

கல்லூரி :
என்னி டத்தில் பட்டம் பெற்றார்
எத்த னைபேர் தெரியுமோ?
எண்ணில் லாத பேர்க ளென்று
ஏனோ அறிய வில்லைநீ?


ஆபள்ளி :
நூற்றில் ஒன்றி ரண்டு பேரே
நுழைந்தார், உன்றன் வீட்டிலே.
வீட்டி லுள்ள பால ரெல்லாம்
விரும்பி வந்த தாரிடம்?

கல்லூரி :
சின்னஞ் சிறிய பள்ளி யேநீ
சிறிதும் பணிவு இன்றியே
என்ன, எதிர்த்துப் பேசுகின்றாய்?
எண்ணிப் பேசு என்னிடம்.

ஆபள்ளி :
ஏணி யாக என்னை வைத்தே
ஏறி வந்தார், உன்னிடம்.
வீணில் ஏனோ சண்டை? நான்தான்
வித்து என்ப துணருவாய்!

செல்வச் சிறுமி:


பொம்மைக்குப் பட்டாடை கட்டிடுவேன்.
பொன்னாலே நகைகளும் போட்டிடுவேன்.
அம்மாவோ அன்புடன் பட்சணங்கள்
அடிக்கடி தந்திடத் தின்றிடுவேன்.
காரிலே பள்ளிக்கும் சென்றிடுவேன்.
காலால் நடந்துமே நானறியேன்.
ஜோரான காட்சிகள் கண்டிடுவேன்.
சொகுசாக என்றுமே வாழ்ந்திடுவேன்.

ஏழைச் சிறுமி:


நாயினும் கேடாய் அலைந்துவிட்டேன்.
நடுங்கிக் குளிரில் ஒடுங்கிவிட்டேன்.
ஆயிரம் ஓட்டை இருந்திடினும்
அணிந்திட ஒருதுணி போதுமய்யா.
ஊரெலாம் பல்லைநான் காட்டிவிட்டேன்.
ஒருபிடி அன்னமும் போடவில்லை.
யாரும் இரங்கிட வில்லையய்யா.
இப்போதே சாகவும் சித்தமய்யா!

மனித ருக்குள் மாணிக்கம்.
மக்கள் போற்றும் தலைவராம்.
புனித மான விடுதலை
பெறவு ழைத்த ஜவஹராம்.

பெருமை மிக்க குடியிலே
பிறந்த பெரிய தலைவராம்.
அருமை யான தொண்டுகள்
அதிகம் செய்த நேருவாம்.

சிங்கம் போன்ற வீரத்தால்
திறமை மிக்க செய்கையால்,
தங்க மான குணத்தினால்
தரணி போற்றும் தலைவராம்.

அருமை யான வாழ்விலே
அதிகப் பாகம் சிறையிலே
இருந்தார். ஆனால், அன்றுநம்
இந்தி யாவின் பிரதமர்!


நாட்டு மக்கள் நலமுடன்
நன்கு வாழும் வழிகளைக்
காட்டு கின்ற ஜவஹரைப்
போற்று வோம்நாம் யாவரும்.

குண்டு! குண்டு! உயிர்களைக்
கொண்டு, கொண்டு போகுதே!
சண்டை போடத் தானடா
கண்டார் இந்தக் குண்டுகள்.

வானம் மீது கப்பலில்
வந்து குண்டு போடுவார்.
ஈன மான புத்தியோ?
இரக்க மென்ப தில்லையோ?

குழந்தை, குட்டி யாவரும்
குலைந டுங்க ஓடியே,
விழுந்து கெட்டு உயிர்களை
விடவோ இந்தக் குண்டுகள்?

கையும் காலும் போகவே
கஷ்ட முற்றோர் எத்தனை ?
ஐயோ, பாவம்! யாரிடம்
அவர்கள் அண்டி வாழ்வதோ?


ஊர்கள் பாழாய்ப் போகவே,
உயிர்கள் யாவும் அழியவே,
மார்பு தட்டிப் பேசுவோர்
மனித ரல்லர்; பேயடா!

ஒன்றும் அறியா மனிதரின்
உடல்கள் சாம்பல் ஆவதைக்
கண்டு மகிழும் நெஞ்சமும்
கடின மான கல்லடா.

குண்டு தன்னை யூகமாய்க்
கண்டு தந்த மனிதரின்
மண்டை மூளை உலகையே
மாய்க்கத் தானோ கண்டது!

ஆராரோ, ஆராரோ,
ஆரிவரோ ஆராரோ.

சூடா மணியே!
துலக்கமாய் நின்றொளிரும்
வாடா மலரே, என்
மரகதமே கண்வளராய்.

கற்கண்டு சீனி
கனிவகைகள் எல்லாம்உன்
சொற்களால் நானடையும்
சுகத்தினுக்கே ஈடாமோ?

கால்களை நீட்டிநன்கு
கையைத் தலைக்குவைத்துப்
பாற்கடலிற் பள்ளிகொண்ட
பத்மநாபன் நீதானோ?

தர்மம் குறைகையிலே
தாரணியில் நானுதித்தல்
கர்மம் எனஉரைத்த
கண்ணபிரான் நீதானோ?


காசினியில் கொல்லாமை
கருணைமிக்க செய்கையென்ற
ஆசியத்துச் சோதி
அருமைப் புத்தர் நீதானோ?

சத்தியத்தைக் காப்பாற்றும்
தருமவான் காந்தியேபோல்
உத்தமனே நியுதித்தாய்.
உலகில் உயர்வடைவாய்.

யான்பெற்ற நற்குமரா,
இனிமை மழலையினால்
தேனான செந்தமிழில்
தினைமாவும் சேர்த்தனையோ?

அப்பா பெயரோங்க
அம்மா உளங்குளிர
இப்பாரில் நீநடந்து
இன்பமுடன் வாழ்வாயே.