உள்ளடக்கத்துக்குச் செல்

மலரும் உள்ளம்-1/கடற்கரை

விக்கிமூலம் இலிருந்து
வா

கடற்க ரைக்குச் சென்றிடலாம்
வா, தம்பி, வா—அங்கே
காற்று வாங்கி வந்திடலாம்,
வா, தம்பி, வா.

உடல் வளர நல்லதடா
வா, தம்பி, வா—அந்த
உப்பங் காற்றின் சக்தியடா
வா, தம்பி, வா.

வெள்ளை மணல் மீதிருப்போம்
வா, தம்பி, வா —சற்றே
விளை யாடித் திரும்பிடுவோம்
வா, தம்பி, வா.

பிள்ளை களும் வந்திடுவார்
வா, தம்பி, வா—அங்கே
பெரிய வரும் கூடிடுவார்
வா, தம்பி, வா.


பார்
கடலின் மீது செல்லும் கப்பல்

பார், தம்பி, பார்—அதைக்
காணப் பலர் வருவதையே
பார், தம்பி, பார்.

‘தடத’டென்று அலைகள் வந்து
பார், தம்பி, பார்—காலைத்
தழுவி விட்டுப் போவதையே
பார், தம்பி, பார்.

சங்கும் நல்ல கிளிஞ்சல்களும்
பார், தம்பி, பார்—இங்கே
சரள மாகக் கிடைக்குதடா
பார், தம்பி, பார்.

பொங்கு கின்ற பாலினைப்போல்
பார், தம்பி, பார்—இங்கு
தங்கி நிற்கும் நுரையுமுண்டு
பார், தம்பி, பார்.


கேள்

முத்து நல்ல முத்துக்களாம்
கேள், தம்பி, கேள்—உள்ளே
முழ்கி, மூழ்கி எடுத்திடுவார்
கேள், தம்பி, கேள்.

எத்த னையோ மீன்வகைகள்
கேள், தம்பி, கேள்—இங்கே
எண்ண யாரால் முடியுமென்றே
கேள், தம்பி, கேள்.

மழையே பெய்யா திருந்திடினும்,
கேள், தம்பி, கேள்—கடல்
வறண்டு போவ தில்லையடா
கேள், தம்பி, கேள்.

அலைகள் போடும் சத்தமடா
கேள், தம்பி, கேள்—அதை
அடக்க யாரால் முடியுமென்றே
கேள், தம்பி, கேள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=மலரும்_உள்ளம்-1/கடற்கரை&oldid=1724780" இலிருந்து மீள்விக்கப்பட்டது