உள்ளடக்கத்துக்குச் செல்

மலரும் உள்ளம்-1/கண்ணாடி

விக்கிமூலம் இலிருந்து

மெத்தப் பெரிய கண்ணாடி
வீட்டில் என்னிடம் இருக்கிறது.

நித்தம் நித்தம் அதன்முன்னால்
நின்றே அழகு பார்த்திடுவேன்.

அதனைப் பார்த்துச் சிரித்தபடி
அப்படி இப்படி ஆடிடுவேன்.

அதனில் தெரியும் உருவமுமே
அதுபோல் ஆடிச் சிரித்திடுமே.

‘கொன்றிடு வேன்’என விரலைநான்
கோபமாய் எதிரே நீட்டிடுவேன்.

‘நானும் அப்படித் தான்’என்றே
நன்றாய்த் திருப்பிச் செய்திடுமே.

எப்படி எப்படிச் செய்தாலும்
என்போல் அதுவும் செய்திடுமே.

நன்மை செய்தால் நன்மைதான்
நம்மை நாடி வந்திடுமே.

தீமை செய்தால் தீமைதான்
திரும்பி வந்து சேர்ந்திடுமே!

"https://ta.wikisource.org/w/index.php?title=மலரும்_உள்ளம்-1/கண்ணாடி&oldid=1724554" இலிருந்து மீள்விக்கப்பட்டது