உள்ளடக்கத்துக்குச் செல்

மலரும் உள்ளம்-1/கருங்கடல்

விக்கிமூலம் இலிருந்து

ஊஞ்சல் போல முன்னும் பின்னும்
கருங்கடலே—நீயும்
ஓடி ஓடி வந்து போவாய்
பெருங்கடலே.

நீல வர்ண மேகந் தானோ
கருங்கடலே—இங்கே
நிழலை உன்மேல் வீசி யதோ
பெருங்கடலே?

கரையில் மண்ணை நீயே சேர்த்தாய்
கருங்கடலே—அதனைக்
கடந்து செல்ல முயல்வ தேனோ
பெருங்கடலே?

உப்புத் தந்தே உணர்வ ளிக்கும்
கருங்கடலே—நாங்கள்
உன்னை யென்றும் மறந்தி டோமே
பெருங்கடலே.


பரந்த உன்றன் அளவு போலக்
கருங்கடலே--நாங்கள்
பரந்த எண்ணம் பெற்றி டுவோம்
பெருங்கடலே.

தொண்டை மான்கள் என்றிட் டாலும்
கருங்கடலே --- மிக்கத்
துணிச்ச லோடு எதிர்த்து மோதும்
பெருங்கடலே.

தோட்டி தொண்டை மானெ வர்க்கும்
கருங்கடலே---நீயும்
தொட்டுப் பாதம் கழுவி நிற்பாய்
பெருங்கடலே.

காற்றைத் தந்து மகிழ்ச்சி யூட்டும்
கருங்கடலே-நாங்கள்
கரையை நோக்கி வரவே செய்யும்
பெருங்கடலே.

முத்தை யெல்லாம் தோற்று விக்கும்
கருங்கடலே -- நல்ல
முத்துப் போன்ற எண்ணங் கொள் வோம்
பெருங்கடலே.