உள்ளடக்கத்துக்குச் செல்

மலரும் உள்ளம்-1/குழந்தைச் சண்டை

விக்கிமூலம் இலிருந்து

பட்டு என்ற சிறுமியும்
பார்ப்ப தற்கு அழகுடன்
பட்டு ஆடை உடுத்தியே
பாலு வீடு வந்தனள்.

ஒன்று சேர்ந்து இருவரும்
ஓடி யாட வீதியில்
அன்று ஏதோ சண்டையும்
அவர்க ளுக்குள் வந்ததே!

சண்டை தன்னில் பாலுவோ
தள்ளி விட்டான், பட்டுவை.
அண்டை ஓடும் சாக்கடை
அதனில் பட்டு வீழ்ந்தனள்.

பட்டு மீது கெட்டநீர்
பட்ட தாலே ஆடையும்
கெட்டுப் போச்சு. ‘ஓ’வெனக்
கிளம்ப லாச்சு, அழுகையும்.


லியோ டால்ஸ்டாயின் கருத்தைத் தழுவியது

பட்டு அழுது வருவதைப்
பார்த்த தாயும் அவளையே
கட்டி அணைத்துக் கொண்டனள்;
கார ணத்தை அறிந்தனள்.

வேக மாகப் பாலுவின்
வீடு நோக்கிச் சென்றனள்;
கோப மாகப் பாலுவைக்
குற்றம் சாட்டி வைதனள்.

பட்டு தாயார் வைவதைப்
பாலு தாயார் கேட்பளோ?
திட்ட லானாள், அவளுமே.
சிறிய சண்டை வளர்ந்தது.

இரண்டு தந்தை யார்களும்.
இந்தச் செய்தி கேட்டதும்,
திரண்ட தோளைத் தட்டியே
தீர மாக வந்தனர்.

சண்டை வலுத்து விட்டது;
சத்தம் பெருக லானது;
கண்டு களிக்க மக்களும்
கணக்கில் லாமல் கூடினர்.


கம்பு ஒன்றை ஊன்றியே
கனிந்த வயதுப் பாட்டியும்
வம்பு மூண்ட அவ்விடம்
வந்து கூற லாயினள்:

பிள்ளை போட்ட சண்டையைப்
பெரிது செய்யும் மக்களே,
சொல்லைக் கொஞ்சம் கேளுங்கள்.
சுத்த மூடச் செய்கையேன்?

சண்டை மறந்து பிள்ளைகள்
சரச மாக அன்புடன்
ஒன்று சேர்ந்து திரும்பவும்
ஓடி யாடல் பாருங்கள்”

என்று பாட்டி கூறவே
எதிரில் வந்து பார்த்தனர்.
அன்பு கொண்டு பிள்ளைகள்
ஆடல் கண்டு வெட்கினர்.