உள்ளடக்கத்துக்குச் செல்

மலரும் உள்ளம்-1/முதல் பகுதி

விக்கிமூலம் இலிருந்து

கண்ணன் எங்கள் கண்ணனாம்.
கார் மேக வண்ணனாம்.
வெண்ணெய் உண்ட கண்ணனாம்.
மண்ணை உண்ட கண்ணனாம்.
குழலி னாலே மாடுகள்
கூடச் செய்த கண்ணனாம்.
கூட்ட மாகக் கோபியர்
கூட ஆடும் கண்ணனாம்.
மழைக்கு நல்ல குடையென
மலை பிடித்த கண்ணனாம்.
நச்சுப் பாம்பின் மீதிலே
நடனம் ஆடும் கண்ணனாம்.
கொடுமை மிக்க கம்சனைக்
கொன்று வென்ற கண்ணனாம்.
தூது சென்று பாண்டவர்
துயரம் தீர்த்த கண்ணனாம்.
அர்ச்சு னர்க்குக் கீதையை
அருளிச் செய்த கண்ணனாம்.
நல்ல வர்க்கே அருளுவான்,
நாங்கள் போற்றும் கண்ணனாம்.

வட்ட மான தட்டு.
தட்டு நிறைய லட்டு.
லட்டு மொத்தம் எட்டு.
எட்டில் பாதி விட்டு,
எடுத்தான் மீதம் கிட்டு.

மீதம் உள்ள லட்டு,
முழுதும் தங்கை பட்டு
போட்டாள் வாயில், பிட்டு.

கிட்டு நான்கு லட்டு;
பட்டு நான்கு லட்டு;
மொத்தம் தீர்ந்த தெட்டு.
மீதம் காலித் தட்டு!

நில்,நில்,நில்.
நில்லா விட்டால், உடனே ஓடிச்
செல், செல், செல்.

கல், கல், கல்.
கல்லடி பட்ட நாயின் சத்தம்
ளொள், ளொள், ளொள்.

புல், புல்,புல்.
புல்லைப் பிடுங்கிப் பூமியை உழுதால்,
நெல், நெல், நெல்.
.
வெல், வெல், வெல்.
வென்றது ராமர் கையில் உள்ள
வில்,வில், வில்.

சொல்,சொல்,சொல்.
சொல்லித் தந்த பாட்டிக் கெங்கே
பல், பல், பல்?

அணிலே, அணிலே, ஓடிவா.
அழகு அணிலே, ஓடிவா.
கொய்யா மரம் ஏறிவா.
குண்டுப் பழம் கொண்டுவா.
பாதிப் பழம் உன்னிடம்;
பாதிப் பழம் என்னிடம்;
கூடிக் கூடி இருவரும்
கொறித்துக் கொறித்துத் தின்னலாம்.

பாப்பா, பாப்பா, அழாதே!
பலூன் தாரேன்; அழாதே!

கண்ணே பாப்பா, அழாதே!
காசு தாரேன்; அழாதே!

பொன்னே பாப்பா, அழாதே!
பொம்மை தாரேன்; அழாதே!

முத்துப் பாப்பா, அழாதே!
மிட்டாய் தாரேன்; அழாதே!


என்ன வேண்டும்? சொல் பாப்பா.
எல்லாம் வேண்டுமோ? சொல் பாப்பா.

சரி சரி பாப்பா, தருகின்றேன்.
சிரி, சிரி, கொஞ்சம் சிரி, பாப்பா.

ரொட்டி, ரொட்டி, ரொட்டியாம்!
வெட்டி, வெட்டி வெண்ணெயில்,
தொட்டுத் தொட்டு வாயிலே,
பிட்டுப் பிட்டுப் போடலாம்.

ரொட்டி என்று சொன்னதும்
மட்டில் லாத ஆசைதான்.
சொட்டு தம்மா எச்சிலும்.
துட்டுக் கெங்கே போவது?

கிட்ட உள்ள கடையிலே
ரொட்டி கூட விற்குது.
துட்டில் லாமல் கிடைக்குமோ?
தட்டி டாமல் தந்திடு.

டிங் டாங் டிங் டிங்
டிங் டாங் டிங் டிங்
கோயில் யானை வருகுது
குழந்தைகளே, பாருங்கள்.
டிங் டாங் டிங் டிங்
டிங் டாங் டிங் டிங்
மணியை ஆட்டி வருகுது.
வழியை விட்டு நில்லுங்கள்.
டிங் டாங் டிங் டிங்
டிங் டாங் டிங் டிங்
ஆடி ஆடி விருஇது.
அந்தப் பக்கம் செல்லுங்கள்.
டிங் டாங் டிங் டிங்
டிங் டாங் டிங் டிங்
ஊரைச் சுற்றி வருகுது.
ஒர மாக நில்லுங்கள்.
டிங் டாங் டிங் டிங்
டிங் டாங் டிங் டிங்
கோயில் யானை வருகுது.
குழந்தைகளே பாருங்கள்.
குழந்தைகளே பாருங்கள்.
குதித்து ஓடி வாருங்கள்.
டிங் டாங் டிங் டிங்
டிங் டாங் டிங் டிங்

தோ… தோ… நாய்க்குட்டி.
துள்ளி வாவா நாய்க்குட்டி.

உன்னைத் தானே நாய்க்குட்டி.
ஓடி வாவா நாய்க்குட்டி.

கோபம் ஏனோ நாய்க்குட்டி?
குதித்து வாவா நாய்க்குட்டி.

கழுத்தில் மணியைக் கட்டுவேன்;

கறியும் சோறும் போடுவேன்.

இரவில் இங்கே தங்கிடு.
எங்கள் வீட்டைக் காத்திடு !

சுண்டெலி, சுண்டெலி,
துறுது றுத்த சுண்டெலி!

பண்ட மெல்லாம் கெடுத்திடும்;
பானை சட்டி உருட்டிடும்;
கண்ட கண்ட பொருளெலாம்
கடித்து நாசம் செய்திடும்.

சுண்டெலி, சுண்டெலி,
துறுது றுத்த சுண்டெலி!

பையில் ஓட்டை போட்டிடும்;
பணத்தை இழக்கச் செய்திடும்;
கையைக் காலை இரவிலே
கடித்து என்னை எழுப்பிடும்.

சுண்டெலி, சுண்டெலி,
துறுது றுத்த சுண்டெலி!

ஜாடிக்கு மூடி.
சதிருக்கு ஜோடி.
பாம்புக்கு மோடி.
பறந்துவா ஓடி.

வாசிக்க ஏடு.
வசித்திட வீடு.
பாலுக்கு மாடு.
பண்ணாதே கேடு.

காருக்கு எண்ணெய்.
கண்ணனுக்கு வெண்ணெய்.
ரசத்துக்குத் தொன்னை.
நம்புவாய் என்னை.

படிப்புக்குப் போட்டி.
வேட்டைக்கு ஈட்டி.
கட்டிக்க வேட்டி.
கதைசொல்லப் பாட்டி.

பூனையாரே, பூனையாரே,
போவ தெங்கே சொல்லுவீர்?

கோலிக் குண்டுக் கண்களால்
கூர்ந்து ஏனோ பார்க்கிறீர்?

பஞ்சுக் கால்க ளாலேநீர்
பையப் பையச் சென்றுமே

என்ன செய்யப் போகிறீர்
எலி பிடித்துத் தின்னவா?

அங்கு எங்கே போகிறீர்?
அடுப்பங் கரையை நோக்கியா?

சட்டிப் பாலைக் குடிக்கவா,
சாது போலச் செல்கிறீர்?

சட்டிப் பாலும், ஐயையோ,
ஜாஸ்தி யாய்க் கொதிக்குதே!

தொட்டால் நாக்கைச் சுட்டிடும்.
தூர ஓடிப் போய்விடும் !

கரும்பு இருக்கும் இடத்திலே,
எறும்பு உண்டு மொய்க்கவே.

கண்ணன் தின்னும் பண்டத்தில்,
வெண்ணெய் உண்டு முதலிலே.

தோசை சுட்டால் ‘சுர்’ரென
ஓசை உண்டு கேட்கவே.

மீசை வெள்ளை ஆகியும்,
ஆசை உண்டு வாழவே.

துஷ்ட னான பையனால்,
கஷ்ட முண்டு வீட்டிலே.

தெம்பில் லாத பாட்டிக்கு,
கம்பு உண்டு கையிலே.

காலைக் கோழி கூவும் முன்னே,
கண்ணை விழித்துக் கொள்ளலாம்;
எண்ணெய் தேய்த்து முழுகலாம்.

பட்ட ணத்தில் வாங்கி வந்த
பட்டு ஆடை எடுக்கலாம்;
கட்டிப் பார்த்து மகிழலாம்.

பட்ச மான அப்பா விடம்,
பட்டாஸ் கட்டு வாங்கலாம்;
கட்டுச் சுட்டுத் தீர்க்கலாம்.

தருவாள் அம்மா, பட்ச ணங்கள்;
தட்டு நிறைய வாங்கலாம்;
பிட்டுப் பிட்டுப் போடலாம்.

கப்பல் நல்ல கப்பலாம்.
கடலில் செல்லும் கப்பலாம்.

அக்க ரைக்குச் செல்லவே
ஆட்கள் ஏறும் கப்பலாம்.

சாமான் ஏற்றும் கப்பலாம்.
சண்டை செய்யும் கப்பலாம்.

கப்பல் தன்னில் பலவிதம்
கடலின் மீது திரியுமாம்.

தூர தேசம் செல்லுமாம்.
துறை முகத்தில் தங்குமாம்.

கலங் கரை விளக்கினால்
கரையைக் கண்டு சேருமாம்.

கப்பல் ஏறி உலகெலாம்
காண வேண்டி ஆசையோ?

செல்வ தற்கே அனுமதிச்
சீட்டு எங்கே? காட்டிடு!

ஞாயிற்றுக் கிழமை நகையைக் காணோம்.
திங்கட் கிழமை திருடன் கிடைத்தான்.
செவ்வாய்க் கிழமை ஜெயிலுக்குப் போனான்.
புதன் கிழமை புத்தி வந்தது.
வியாழக் கிழமை விடுதலை யானான்.
வெள்ளிக் கிழமை வீட்டுக்குப் போனான்.
சனிக் கிழமை சாப்பிட்டுப் படுத்தான்.

அப்புறம் அவன்கதை

ஆருக்குத் தெரியும்?

நெல்லுக்குள்ளே அரிசி இருக்கு, சொல்லாதே!
நெருப்புக்குள்ளே சூடு இருக்கு, சொல்லாதே!
சொல்லுக்குள்ளே பொருள் இருக்கு, சொல்லாதே!
சோற்றுக்குள்ளே சத்து இருக்கு, சொல்லாதே!

பாட்டுக்குள்ளே இசை இருக்கு, சொல்லாதே!
பழத்துக்குள்ளே ருசி இருக்கு, சொல்லாதே!
காட்டுக்குள்ளே மரம் இருக்கு, சொல்லாதே!
கடலுக்குள்ளே உப்பு இருக்கு, சொல்லாதே!

பூமிக்குள்ளே நீர் இருக்கு, சொல்லாதே!
பூவுக்குள்ளே தேன் இருக்கு, சொல்லாதே!
நாமிப்போது பேசியதை யெல்லாம்நீ,
நாலுபேர்கள் காதுகேட்கச் சொல்லாதே!