மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு/27. பெருமானார் அவர்களின் எளிய வாழ்க்கை
மதீனாவில் பள்ளி வாசலை ஒட்டி அமைந்திருந்த இரண்டு அறைகளில், பெருமானார் அவர்கள் குடும்பத்தோடு வாழ்ந்து வந்தார்கள். அறைகளோ மிகவும் சிறியன. இரவு நேரங்களில் அந்த அறையில் விளக்குக்கூட இருக்காது.
பெருமானார் அவர்களின் இல்லற வாழ்க்கை மிகவும் எளிமையாகவே இருந்தது. நாள் கணக்கில் அடுப்பு எரியாமலேயே இருக்கும். பெருமானார் அவர்கள் பேரீச்சம்பழத்தைச் சாப்பிட்டு தண்ணீரைப்பருகி, திருப்தி அடைவார்கள். ரொட்டி சுடுவதற்கு மாவு கிடைக்கவில்லையானால், வெறும் மாமிசத்தை மட்டுமே சமைத்து உண்டு விடுவார்கள். சில வேளைகளில், பெருமானார் அவர்கள் ஒட்டகப் பாலையும் அருந்துவார்கள்.
பெருமானார் அவர்கள் தாங்களே வீட்டைப் பெருக்குவார்கள்; நெருப்புப் பற்ற வைப்பார்கள்: தங்கள் உடைகளைத் தைத்துக்கொள்வார்கள்.
எவ்வளவோ வசதிகளைச் செய்து கொள்ளக் கூடிய வாய்ப்பும் வசதியும் இருந்தும் அவர்கள் அவற்றை யெல்லாம் விரும்பாமல், சாதாரணமாகவே இருப்பார்கள்.
அவர்களுடைய எளிய வாழ்க்கை மக்களைப் பெரிதும் கவர்ந்தது. மதீனாவில் உள்ள ஒவ்வொரு பிரிவினரும் பெருமானார் அவர்களிடம் சிறப்பு மிக்க மதிப்பு வைத்திருந்தார்கள்.