மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு/34. உயிர் இழந்த உத்தமர்கள்

விக்கிமூலம் இலிருந்து

34. உயிர் இழந்த உத்தமர்கள்

மற்றஇரு கூட்டத்தினர் முன்போலவே, பெருமானார் அவர்களிடம் வந்து தங்கள் கூட்டத்தார் இஸ்லாத்தைத் தழுவி இருப்பதாகவும், அவர்களுக்கு மார்க்க சம்பந்தமான விஷயங்களைப் போதிப்பதற்காகச் சிலரை அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள்.

அவர்களின் வேண்டுகோளின்படி, ஆஸிம்-இப்னு-தாபித் உட்பட ஆறு பேரை பெருமானார் அவர்கள் அனுப்பி வைத்தார்கள்.

அவர்கள் அர்ரஜீஃ என்னும் இடம் போய்ச் சேர்ந்ததும், அவர்களை அழைத்துக்கொண்டு சென்றவர்கள் பக்கத்திலுள்ள வேறு ஒரு கூட்டத்தாரைத் தூண்டிவிட்டு, முஸ்லிம்களைத் தாக்கிக் கொல்லும்படி செய்தார்கள். அவர்கள் இருநூறு பேர் ஆயுதங்களுடன் தாக்குவதற்கு வந்தனர். முஸ்லிம்கள் அறுவரும் அருகிலிருந்த ஒரு குன்றின்மீது ஏறிக் கொண்டார்கள்.

"நீங்கள் கீழே இறங்கி வந்தால், உங்களை நாங்கள் பாதுகாப்போம்" என்றார்கள் அந்தக் கூட்டத்தாரில் அம்பு எய்வோர்.

முஸ்லிம்களின் தலைவர் ஆஸிம் அதற்கு, "விசுவாசமற்றவர்கள் ஆதரவில் வரமாட்டோம்" என்று பதில் அளித்துக் கீழே இறங்கி சண்டை செய்து வீர மரணம் அடைந்தனர்.

குன்றின்மீது மீதி இருவர் மட்டும் இருந்தனர். அவர்கள் பகைவர் பேச்சை நம்பி கீழே இறங்கி வந்தனர். அவர்களைச் சிறைப்படுத்தி மக்காவுக்குக் கொண்டுபோய் அடிமைகளாக விற்றுவிட்டனர். அந்த இருவரில் ஒருவர் குபைப், மற்றொருவர் ஸைத்.

மேற்படி இருவரும் பத்ருப் போரின்போது மக்காவாசியான ஹாரித்-இப்னு-ஆமீரைக் கொன்றதற்குப் பழி வாங்கும் நோக்கத்தோடு ஹாரிதின் மக்கள் அவர்களை விலைக்கு வாங்கி, கொஞ்ச நாள் வைத்திருந்து பிறகு கஃபாவின் எல்லையைக் கடந்து வெளியே கொண்டு போய் வதைத்துக் கொன்று விட்டனர்.

அந்த இருவரில் ஒருவரான குபைப் வெட்டப்படுவதற்கு முன்னர், இரண்டு முறை தொழுகைக்கு அனுமதி கேட்டார். தொழுகை நிறைவேறியதும் எதிரிகளை நோக்கி, "வெகுநேரம் வரை, தொழ எனக்கு விருப்பம் உண்டு. ஆனால் நான் மரணத்துக்குப் பயந்து அவ்வாறு செய்தேன் என்று நீங்கள் நினைத்து விடக்கூடும். ஆதலால் வெகுநேரம் தொழவில்லை" என்று கூறிவிட்டு, அரபியில் ஒரு கவிதை பாடினார். அதன் கருத்து: "இஸ்லாத்துக்காக நான் வெட்டப்படும் போது, எவ்வாறு வெட்டப்படுவேன் என்ற கவலை எனக்கு இல்லை, நான் வெட்டப்படுவது ஆண்டவனுக்காகவே. அவன் விரும்பினால் என்னுடைய உடலின் ஒவ்வொரு சிறிய பகுதிக்கும் நல்லருளை இறக்கலாம்"

மற்றொருவரான ஸைதை விலைக்கு வாங்கியிருந்த ஸப்வான் என்பவர் அவரைச் சிரச்சேதம் செய்வதற்கு ஒரு நாள் குறிப்பிட்டு, இந்த நாளில் குறைஷிகள் எல்லோரையும் வருமாறு சொல்லியிருந்தார். அதைக் காண்பதற்காக எல்லோரும் வந்து கூடினார்கள். அவர்களில் அபூஸுப்யானும் ஒருவர்.

அப்பொழுது ஸைதை பார்த்து, "இந்த நேரத்தில் உமக்குப் பதிலாக, முஹம்மதை வெட்டுவதாயிருந்தால், அதை உம்முடைய நல்வாய்ப்பாக நீர் கருதமாட்டீரா? உண்மையை கூறும்" என்று கேட்டார் அபூஸுப்யான்.

அதற்கு, "நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களின் பாதங்களில் முள் தைப்பதனால், என் உயிர் பாதுகாக்கப்படும் என்ற போதிலும் அவர்கள் பாதங்களில் முள் தைப்பதைவிட, என் உயிரைப் பலி கொடுக்கவே நான் மனப்பூர்வமாகத் தயாராயிருப்பேன் என்பதை ஆண்டவன் சத்தியமாக நான் கூறுகிறேன்" என்றார் ஸைத்.

அதைக்கேட்ட அபூஸுப்யான், "முஹம்மதை அவரைச் சேர்ந்தவர்கள் எவ்வளவு உண்மையான அன்போடு நேசித்து வருகிறார்களோ அவ்வளவு அன்போடு வேறு எவரையும் அவருடைய தோழர்கள் நேசித்து வந்திருப்பதை நான் பர்ர்த்ததில்லை" என்று கூறி வியப்படைந்தார்.

அதன்பின் ஸைதை வெட்டிக்கொன்றுவிட்டனர்.