மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு/38. தளராத உறுதி
தங்களுடைய படைகளை மூன்று பிரிவுகளாகப் பிரித்து குறைஷிகள் மதீனா நகரத்தின் மூன்று புறங்களைத் தாக்கினார்கள்.
ஆரம்பத்தில், முஸ்லிம் படையில் முனாபிக்குகளும் சேர்ந்திருந்தார்கள். அப்பொழுது குளிர்காலமாயிருந்தது. உணவும் போதிய அளவு கிடைக்கவில்லை. தவிர இரவில் கண் விழித்திருக்க வேண்டியதிருந்தது. மேலும் பகைவர்களின் படையோ எண்ணிக்கையில் பன்மடங்கு அதிகமாயிருப்பதையும் கண்டு முனாபிக்குகள் தப்பித்துச் செல்ல வழி பார்த்தார்கள். தங்களுடைய வீடுகள் பாதுகாப்பற்று இருக்கின்றன என்றும் "அவற்றைப் பாதுகாக்க தாங்கள் போக வேண்டியது அவசியம்" என்றும் காரணம் கூறி, பின்வாங்கிச் செல்லத் தொடங்கினார்கள்.
ஆனால், பகைவர்களின் மிகுந்த படை பலத்தைக் கண்டு, உண்மையான முஸ்லிம்களுக்கு ஊக்கம் அதிகரித்தது.
முற்றுகை கடுமையாக இருந்தது. அப்போது சில வேளைகளில் நபி பெருமானாரும் தோழர்களும் தொடர்ந்து மூன்று வேளையும் பட்டினிக் கிடக்க நேரிட்டது.
ஒருநாள், தோழர்களில் சிலர் பசியினால் வாடி வருந்திப் பெருமானார் அவர்களிடம் வந்து தங்கள் வயிற்றைத் திறந்து காட்டினார்கள். ஒவ்வொருவருடைய வயிற்றிலும் ஒரு கல் வைத்துக் கட்டப்பட்டிருந்தது.
அப்போது பெருமானார் அவர்கள் தங்கள் வயிற்றைக் காட்டினார்கள். அதில் மூன்று கற்கள் வைத்துக் கட்டப்பட்டிருந்தன.
அரபி தேசத்தில், பசி வேளையில் குறுக்கு வளையாமல் இருப்பதற்காக, மக்கள் வயிற்றில் கல்லை வைத்துக் கட்டிக் கொள்வது அக்காலத்தில் வழக்கமாயிருந்தது.