மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு/45. இஸ்லாத்தை உலகுக்கு அறிவித்தல்
மக்கா வாசிகளுக்கும் முஸ்லிம்களுக்கும் இருந்து வந்த சச்சரவு உடன்படிக்கையின் மூலம் ஓரளவு ஓய்ந்து, சமாதானம் ஏற்பட்டதும் இஸ்லாத்தைப் பற்றி உலகத்துக்கு அறிவிக்கப் பெருமானார் அவர்கள் எண்ணினார்கள்.
அதற்காக, தோழர்களை எல்லாம் கூட்டி சொற்பொழிவு ஒன்று நிகழ்த்தினார்கள்.
"ஆண்டவன் என்னை உலக முழுவதற்கும் அருளாகவும், தூதனாகவும் அனுப்பியுள்ளான். ஹல்ரத் ஈசா அவர்களின் சீடர்களைப்போல், உங்களுக்குள் வேற்றுமை எதுவும் இருக்கக்கூடாது. என் சார்பாக, நீங்கள் போய் ஆண்டவனின் தூதை நிறைவேற்றுங்கள். உண்மையை உணருமாறு மக்களை அழைப்பீர்களாக" என்பதாக இறுதியில் குறிப்பிட்டார்கள்.
ரோமாபுரி அரசர் கெய்ஸர் (ஸீஸர்) பாரசீக அரசர் குஸ்ருபர்வேஸ், எகிப்து அரசர் முகெளகீஸ், அபிசீனியா அரசர் நஜ்ஜாஷி ஆகியோருக்கு இஸ்லாத்தின் பெருமையை எடுத்துக்கூறி, அதில் சேருமாறு கடிதம் எழுதி, தனித்தனியே தூதர்கள் மூலம் பெருமானார் அவர்கள் அனுப்பி வைத்தார்கள்.