மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்/பெற்ற நாளினும் பெரிது மகிழ்ந்தாள்
Appearance
வயதான மறத்தி, நரம்பு புடைத்துத் தோன்றியது தோள் மெலிந்திருந்தது. தாமரை இலை போல் அடி வயிறு ஒட்டியிருந்தது. போருக்கு சென்ற புதல்வனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்.
“போர்க்களத்தில் உன் மகன் புறங் கொடுத்தான்” என்று கூறினர் பலர். அது கேட்டு ஆர்த்தெழுந்தாள் அம் முது மகள்.
“என் மகன் புறங் கொடுத்திருப்பின் அவனுக்குப் பாலூட்டிய என் மார்பை அறுத்தெறிவேன் என்று வஞ்சினங் கூறி, வாளேந்திப் போர்க்களம் நோக்கி ஓடினாள்.
போர்க்களம் புகுந்தாள். எங்கும் பிணக் குவியல். பிணங்களை நீக்கி விட்டுத் தன் மகனைத் தேடினாள். செங்குருதி நடுவே சிதைந்து கிடந்தான் மகன். பெற்ற நாளினும் பெருமகிழ்ச்சி கொண்டாள் அம் முது மறத்தி.