உள்ளடக்கத்துக்குச் செல்

மாபாரதம்/குலகுரு மரபினர்

விக்கிமூலம் இலிருந்து
மா பாரதம்

1. குரு குல மரபினர்

மன்னர்கள் மற்றவர்களைப் போல் உதிரிப் பூக்கள் அல்லர். அவர்கள் வரலாறு படைத்தவர்கள், கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்த குடி எனத் தமிழ் மறவர் பற்றிப் பேசுவது உண்டு. அது போல மா மன்னர்கள் சூரிய வம்சம் என்றும், சந்திர வம்சம் என்றும் கூறப்படுகின்றனர்.

சந்திரனே இக்குலத்தில் தோன்றிய முதல் அரசன் என்று கதை தொடங்குகிறது. அவனுக்குப் பின்னர்ப் பெயரும் புகழும் படைத்த பெரு நில மன்னர்கள் வரலாறு சில அறியக் கிடைக்கின்றன.

இவர்கள் குலம் குருகுலம் என்று அழைக்கப்படுகிறது. குரு என்பவன் கல்வி கேள்விகளில் வல்லவனாக இருந்தான். மனுவைப் போல நீதி நூல்களை வகுத்துக் கொடுத்தவன். ஆசான் என்று அவனைப் பற்றிப்பேசினர். அவன் மரபில் வந்தவர்கள்தாம் பாரதக் கதைக்குரிய பாண்டவர்களும் கவுரவர்களும் ஆவர். பாண்டுவின் மைந்தன் பாண்டவர்கள் எனப்பட்டனர். திருதராட்டிரனுக்குக் கவுரவன் என்ற பெயரும் இருந்தது. அதனால் அவன் மைந்தர்கள் கவுரவர் எனப்பட்டனர்.

புரூரவசு என்பவன் மிகப் பழமையானவன்; அரம்பை ஒருத்தியைக் காதல் கொண்டு அவளை மணந்து ஒரு மகனைப் பெற்றான். இவன் அழகில் மன்மதனையும் தோற்றத்தில் முருகனையும் ஒத்து இருந்தான். உருப்பசி என்ற நடனப்பெண் சோலை ஒன்றில் உலவிக் கொண்டிருந்தாள். அங்குத் திரிந்து கொண்டிருந்த அசுரர்கள் சிலர் அவளைத் தேரில் ஏற்றிக் கடத்திச் சென்றனர். அவள் அபயக்குரல் கேட்டு இம்மன்னன் புரூரவசு அவர்களைப் பின் தொடர்ந்து போரிட்டு அவளை மீட்டு வந்தான் இவன் வீர சாகசம் கண்டு அவனை மணக்க இசைந்தாள். அவர்கள் இல்வாழ்க்கையில் மகன் ஒருவன் பிறந்தான்; ஆயு என்பது அவன் பெயர்.

அவன் மகன் நகுடன்; வேள்வி நூறு செய்து இந்திரப் பதவியை அடைந்தான், சுந்தரியாகிய இந்திராணியை அவன் அடைய விரும்பினான். அவள் அவனை ஏற்க விரும்பவில்லை; தடுக்கவும் இயலவில்லை. வேறு வழியில்லாமல் பல்லக்கு ஒன்று அனுப்பி வைத்தாள்; ரிஷிகள் எழுவர் அவனைச் சுமந்து சென்றனர், அதன் மேலே எறியதும் சர்ப்ப சர்ப்ப என்றான். மிக விரைவில் செல்க என்பது அச்சொல்லின் பொருள் ஆகும். சர்ப்பம் ஆகுக என்று அதைத் திருத்தி அவர்களுள் அகத்திய முனிவர் சபித்தார். பதவி இழந்து பரிதாபத்துக்கு உரியவன் ஆனான். அவன் மகன் யயாதி என்பவன் அவனுக்குப்பின் அரசனானான்.

யயாதி என்பவன் காதல் வியாதியால் தவறு செய்தான். இவன் விற்கலையில் விறலோன் ஆக இருந்தான். வெற்றித் திருமகள் அவன் தோள்களில் வந்து குடிகொண்டாள். புகழும் பெருமையும் பெற்ற இவன் சுக்கிரனின் மகள் தேவானையைத் திருமணம் செய்து கொண்டான். இரு புதல்வர்களைப் பெற்றான். அவர்கள் இருவரும் தறுதலைகளாக மாறினர். களர் நிலத்தில் பூத்த காளான்கள் ஆயினர்.

தேவையானைக்கு உற்ற தோழி ஒருத்தி இருந்தாள். விடபன்மன் என்னும் அசுரனின் மகள் அவள்; சன்மிட்டை என்பது அவள் பெயர். அவள் அடிக்கடி அங்கு வந்து போய்க்கொண்டிருந்தாள்; மணமாகாதவள், இவனோடு மகிழ விரும்பினாள். இது கள்ளக்காதலாகக் கனிந்தது; உள்ளம் கலந்து அவர்கள் உறவு கொண்டனர், பூரு என்னும் புண்ணியப் புதல்வன் ஒருவன் பிறந்தான். அச்சில் வார்த்த பொம்மைகள் என அடுத்து அடுத்து இருவரைப் பயந்தாள். அம்மூவருக்கும் மூல அச்சு யயாதி தான் என்பதை உருவ ஒப்புமை கொண்டு கட்டியமனைவி கண்டுகொண்டாள்.

அவள் தன் தந்தையிடம் அவன் செய்த தவறுகுறித்து அவதூறு கூறினாள். வாலிபக் கிறுக்கால் அவன் விளையாடியதை அறிந்து அவனை முதியவன் ஆகுக என்று சபித்துக் கோபித்தான். ஆசைகள் அறுமுன் நாற்பதைக் கடந்து நூற்றினை அவன் எட்டிப்பிடித்தான். உடல் நூறு வயது ஆகியது; உள்ளம் துள்ளி விளையாடியது. ஒருத்திக்கு இரண்டு மனைவியர் இருந்தும் மூப்பு அவனை யாப்பிட்டது; எண்ணிப்பார்த்தான், வயதில் சிறிய வாலிப மைந்தர்களைப் பார்த்து இளமையை இரவல் கேட்டான். மூத்தவன் மட்டும் பாசத்தின் பிணைப்பால் இளமையைப் பரிமாறிக் கொண்டான். யயாதி சிற்றின்ப வாழ்க்கையில் எஞ்சி நின்ற அரைகுறை இன்பத்தை அழகியர் கொண்டு அனுபவித்தான். அவனுக்கு அதில் சலிப்பு ஏற்பட்டுவிட்டது. வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுத்தான்; முதுமையைத் தான் திருப்பிப் பெற்றுக்கொண்டு தவ வாழ்க்கையில் தலைவைத்தான்.

மகன் பூரு என்பவனுக்கு மணிமுடி சூட்டி அவனைப் பார் ஆள வைத்தான். அவன் தியாகத்தைப் பாராட்டி அவனை வாழ்த்தி யயாதி காலன் அழைக்கத் தன் கணக்கை முடித்துக் கொண்டான்.

யயாதிக்குப் பின் தோன்றியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் குரு, பரதன், அத்தி என்பவர் ஆவர். குரு என்பவன் கற்றவன். நூல்பல செய்தவன்; ஆசான் என்று முன் கூறப்பட்டது. பரதன் என்பவன் துஷியந்தனுக்கும் சகுந்தலைக்கும் பிறந்தவன் நாட்டியக்கலை நன்கனம் வகுத்துப் பரதம் என்னும் நூலைச் செய்தவன். இவன் பெயரால்தான் இந்த நாடு பரத கண்டம் எனப் பெயர் பெறுவது ஆயிற்று; அத்தி என்பவன் நிர்மாணித்ததால் அவர்கள் தலைநகர் அத்தினாபுரி எனப் பெயர் பெறுவது ஆயிற்று.

சந்தனுவின் தோற்றம்

புகழ்மிகு குருகுலத்தில் பிற்காலத்தில் தோன்றியவன் சந்தனு அரசன். இவனுக்குப் பின்னால்தான் பாரதமன்னரின் சரித்திரம் ஒழுங்காகக் கிடைக்கிறது. இவன் திருதராட்டிரன், பாண்டு இவர்களின் பிதாமகன் ஆவான்.

சந்தனு மன்மதன் என விளங்கிய நாட்களில் வன வேட்டையாடக் கங்கைக் கரையை அடைந்தான். அங்கே ஒரு மங்கை நல்லாளைக் கண்டு நயப்புக் காட்டினான் அவன் அவளைக் கண்டதும் ஒர் கவிஞன் ஆனான்; அவள் வனப்பைக் கண்டு அவ்வணிதை வான்மகளோ என ஐயம் கொண்டான். கண்கள் இமைத்தன; கால்கள் காசினியில் தோய்ந்தன; அதனால் இவள் மண்மகளே என முடிவு செய்தான். கண்கள் காதற் குறிப்பைக் காட்டின. ஒருவரை ஒருவர் காதலித்தனர். அவள் ஒரு விதி வகுத்தாள். அதை எந்தநாளும் காக்க வேண்டும் என உறுதி கேட்டாள் அதற்கு அவன் சம்மதித்தான். தான் எது செய்தாலும் தடுக்கக்கூடாது. தடுத்தால் விடுதலை பெற்று விலகுவதாக அச்சுறுத்தினாள். விடுதல் அறியா விருப்பினனாகி அவளிடம் வேண்டிய இன்பம் பெற்றான்.

இல்லற வாழ்வு அரும்பி மலர்ந்து ஏழு தளிர்களை ஈன்றது. பிறந்தபோதே அக்குழந்தைகளைத் துளிர்விடாமல் கிள்ளிக் களைந்து விட்டாள். அவற்றிற்கு ஜனன மரணக் கணக்கு ஒரே நாளில் எழுதப்பட்டது. கங்கை நீரில் தூக்கி எறிந்துவிட்டாள். அவன் வாய் திறவா மவுனியாக இருந்துவிட்டான். தடுத்தால் அவளை இழக்க வேண்டும் என்பதால் தாயுரிமைக்கு மதிப்புத் தந்தான். தாய்வடிவில் அவள் பேயாகச் செயல்பட்டாள்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்தான். அவன் பொறுமைக்கும் ஒர் எல்லை ஏற்பட்டது. எட்டாவது குழந்தை பிறந்தது. மூக்கும் முழியுமாக இருந்த அந்தக் குழந்தை அவனை நோக்கி ‘வாழப்பிறந்தவன்’ என்று சொல்வது போல இருந்தது. நீரில் அவனை ஆழ்த்தி மூழ்கடிக்க விரும்பவில்லை.

‘மங்கலம் என்ப மனைமாட்சி’ என்று அரை குறையாகப் படித்தவன்; அவன் ‘அதன் நன்கலம் நன்மக்கட் பேறு’ என்று அடுத்த அடியையும் முழுமையாகக் கற்றான். அவன் மனம் பண்பட்டது. மனைவியின் முயக்கத்தைவிட மழலை மொழியின் மயக்கமே சிறந்தது எனக்கண்டான்.

‘போடாதே போடாதே என் மகனை. பொல்லாத செயல்கள் இனி நீ செய்ய வேண்டாம்’ என்று கூறித் தடுத்தான். அவள் அவன் புதிய பாசத்தைக் கண்டு வெறுக்கவில்லை. முன்னினும் அவனிடம் நேசம் காட்டினாள்.

“உன்னால் இவனை வளர்க்க முடியாது. இவனை வளர்த்து வாலிபன் ஆக்கிக் கலைகளும் கல்வியும் கற்பித்து உன்னிடம் ஒப்புவிக்கிறேன்” என்றாள்.

கலங்கரை விளக்குபோல் கரையில் நின்று அவர்கள் செல்வதைக் கண்டு மனம் கலங்கினான். அவர்கள் மறையும்வரை பார்த்துக்கொண்டே நின்றான். அவள் குழந்தையோடு கங்கையாற்றில் மறைந்தாள்.

அவனுக்கு நடந்தவை ஒன்றும் விளங்கவில்லை. அவள் தன்னிடம் விடைபெறு முன்னர்ச் சில வினாக்களை எழுப்பி அவளிடம் விடைபெற்றான். கங்கை இச்செய்திகளைச் சொன்னாள்.

கங்கைக்கு ஏற்பட்ட சாபம்

நான்முகன் அவையில் வான் நதியாகிய கங்கை வண்ணச் சேலை உடுத்திக் கண்ணைக் கவரும் அழகோடு நடந்து சென்றாள். விண்ணைப் பிளக்கும் இடிக்கும் மழைக்கும் கடலுக்கும் கடவுளாகிய வருணன் அவள் அழகில் மயங்கி நின்றான். காற்று வேந்தன் ஆகிய வாயு அவள் சேலையைச் சற்று விலகச் செய்தான். தங்க நிறமுள்ள அவள் அங்க அழகில் வருணன் தன் மனதைப் பறி கொடுத்தான். அவனுக்கு மனத்தில் சலனம் ஏற்பட்டது. “காற்றே நீ ஒரு கவிதை தாராயோ” என்று ஏக்கம் கொண்டான். நான்முகன் எத்திசையிலும் எது நடக்கிறது என்பதை எளிதில் அறிந்து கொண்டான்.

“தெய்வ நிலை அடைந்தும் உம் மனம் பக்குவப்படவில்லை, ஆசைகள் அலை மோதுகின்றன. அதனால் நீர் பிறவி எடுத்து உறவுகளை வளர்ப்பீர்” என்று சாபம் இட்டான்.

இருவரும் பதவி இழந்து பரிதாப நிலை அடைந்தனர், கங்கை மூட்டை முடிச்சுகளை எடுத்துக்கொண்டு அமரரின் நாட்டை வீட்டு பூலோக யாத்திரைக்குப் பயணம் ஆனாள்.

வழியில் வசுக்கள் எண்மர் சந்தித்தனர்; கள்ளத்தனமாக விழிகளை மோதவிட்டுக் காதல் செய்வதும் களவேயாகும்; பிறர் பொருளைக் கவர்வதும் களவேயாகும். அத்தகைய பள்ளத்தில் விழுந்த வசுக்கள் எண்மரும் சாபத்தால் பிடிபட்டு பூமிக்குத் தள்ளப்பட்டனர்.

பிரபாசன் என்ற வசு ஒருவன் தன் மனைவியின் விருப்பத்தை நிறைவேற்ற வசிட்டர் வீட்டில் இருந்த காமதேனுவைத் தன் நண்பர் எழுவருடன் சென்று களவாடினான். ஞானப் பார்வையில் இச் செய்கையை அறிந்த வசிட்டர் எண்மரையும் மானிடர் ஆகுக எனச் சபித்தார். அவர்களுள் பிரபாசன் மட்டும் நெடிய காலம் மண்ணுலகில் உழன்றுபெண் வாடையின்றி வறண்ட வாழ்வு வாழ வேண்டும் என்று கூடுதலாகச் சபிக்கப்பட்டான். மற்றும் எழுவரும் கங்கையிடம் தம்மைப் பிறந்தவுடன் அழித்து விடுமாறு வேண்டினர். வசுக்களின் வேண்டுகோளுக்கு இணங்கி அவர்கள் எண்மரும் பிறக்கும் புண்ணிய பூமியாகத் தன்னை அவர்களுக்குத் தந்தாள்.

இந்த வரலாற்றை எடுத்துச் சொல்லி மர்ம நாவலில் வரும் சிக்கல்களை விளக்குவது போலத் தம் செயல்களுக்– குக்காரணம் கூறினாள். அழைத்துச் சென்ற மகனைவேத சாத்திரங்களும் வாட்பயிற்சியும் கற்பிக்க முறையே வசிட்டரையும் பரசுராமனையும் அணுகினாள். கல்வியும் ஒழுக்கமும் மிக்க சான்றோர்களால் அவன் வளர்க்கப்பட்டான். ‘தேவ விரதன்’ என்று பெயரிடப்பட்டுப் பெரியோன் ஆக்கப்பட்டான்.

கங்கைக்கரையில் தன் மைந்தனைக் கொண்டு வந்து விட்டுச் சங்கை இல்லாமல் தன் மகனை அவன் கண்டு கொள்ளச் செய்து இருவரையும் இணைத்து விட்டுச் சந்தனுவிடம் விடை பெற்றாள். மகனைப் பெற்ற மகிழ்ச்சியில் மனைவியைப் பிரிந்த துயரத்தை மறந்தான். மகனுக்கு மணிமுடி சூட்டி ஆட்சி தந்து அவனால் உலகம் நன்மையுறச் செய்து விட்டுப் பின் விண்ணுலகம் வந்து சேரும்படி சொல்லிப் போயினாள். கூடியவர் பிரிந்து சென்றனர்.

நினைவு அலைகள்

கங்கையின் மகனை இளவரசனாக்கி வைத்துப் பித்தம் பிடித்தவன் போல் சித்தம் கங்கையின் பால் செலுத்திக் கங்கைக்கரையின் சோலைகளிலும் காடுகளிலும் வேட்டை மேல் வேட்கையனாய்த் திரிந்து வந்தான்; ஒழிந்த நேரத்தில் கழிந்த நாட்களை எண்ணி மனம் அழுங்கியவனாய்க் கிடந்தான். அவள் உருவெளித் தோற்றத்தில் வாழ்ந்து கனவு உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தான். அவள் தெய்வப் பெண் என அறிந்தும் அவனால் மறக்க இயலவில்லை. பழைய வாசனை அவனைப் பிடித்துத் தின்றது. விரகதாபம் அவனை நரக வேதனையில் சுழற்றியது.

அங்கே பளிங்குக்கற்கள் இருந்திருந்தால் பாவைக்கு ஒரு கங்கை மண்டபம் எழுப்பி இருப்பான். அக்கல்லின் நிழலில் அவள் முகத்தின் முறுவலைப் பார்த்திருப்பான். கவிஞனாக இருந்திருந்தால் அவள் பேரில் ஒரு காதற் கோவை தொடுத்து இருப்பான். கல்லைச் செதுக்கும் சிற்பியாக இருந்திருந்தால் அங்கே எழில் மிக்க பொற் சிலையை வடித்திருப்பான். ஒவியனாக இருந்திருந்தால் தாடி வளர்த்துக் கொண்டு குழிவிழுந்த கண்களோடு சித்திரம் வரைந்து சீரழிந்து இருப்பான்.

சோலைக் குயில்கள் எல்லாம் அவள் குரலைக் கூவிப் பாடிக் கொண்டிருந்தன. தோகை மயில்கள் எல்லாம் அவள் கோல அழகை விரித்துக் காட்டிக் கொண்டிருந்தன. முல்லைக் கொடிகள் எல்லாம் அவள் வெள்ளைப் பற்களைக் காட்டிச் சிரித்துக் கொண்டிருந்தன. கொடிகள் எல்லாம் அவள் தன்னைத் தழுவ விழைந்த விழைவுகளை நினைப்பூட்டிக் கொண்டிருந்தன.

பரிமளகந்தியைச் சந்தித்தல்

அந்த நிலையில் நீலவானத்து நிலவு ஒளியில் யமுனை நதிக்கரையில் யவ்வனம் மிக்க பேரழகியைக் கண்டான். படகு ஓட்டிக் கொண்டு வந்து துடுப்பை எடுத்துச்செலுத் விட்டுக் கரை நோக்கி நடந்தாள்; அவள் மீன்கண் அவள் மீனவப் பெண் என்ற நினைப்பை எழுப்பியது; அருகில் வந்த அவளை மனம் உருகி “என்னைக் கரை சேர்க்கமாட்டாயா?” என்று வினவுவது போலப் பார்த்தான்.

இருவருக்கும் வயது இடைவெளி தடை செய்தது.

வயது மிக்க ஒருவன் இளநங்கையை விரும்பினான். சாதியில் அவன் அரசன்; இவள் மீனவள். அரசன் என்ப– தால் இந்தத்தடைகளை மீற முடியும் என்று நினைத்தான். நாணம் மிக்க அவள் நயமாகத் தந்தையிடம் தன் வாழ்வை முடிவு செய்ய ஒப்புவித்தாள்.

அரசன் தேர் ஒட்டியை அனுப்பித் திருமணப் பேச்சை எடுத்தான். “அந்தப்புரத்துச் சிறைக்கைதி அல்ல என் மகள்; அவள் ஆட்சியில் உரிமை பெற வேண்டும். அவள் வயிற்றில் பிறக்கும் மைந்தர்கள் சிம்மாசனம் ஏற வேண்டும்” என்றான்; அதற்குத்தடை மூத்தவன் இருப்பதைச் சுட்டிக்காட்டினர். பேச்சு முறிந்தது; மறுபடியும் அதைப் பற்றி மூச்சு விட முடியாமல் போய் விட்டது.

“அவள் பெயர் என்ன?”

“பரிமள கந்தி”

“குப்பை மேட்டுக்கு மேனகை நகர் என்றா பெயர்"?

“நத்தை வயிற்றில் முத்து பிறக்கும்”

“குலத் தொழில்"?

“படகு ஒட்டுதல்?”

“இப்பெயர் வரக் காரணம்?”

“முல்லை மணம் வீசும் மேனியாள் அவள்; அதனால் அவளுக்குப் பரிமளகந்தி என்று பெயர்; யோசனகத்தி என்றும் அழைப்பர்”

“பழமொழியை மாற்ற வேண்டியதுதான்”

“என்ன என்று?”

“நத்தை வயிற்றில் முத்து மணக்கும் என்று மாற்ற வேண்டும்”.

விசாரணையில் வெளி வந்த செய்திகள் இவை.

வெளியே சொன்னால் வெட்கம்; அடக்கி வைத்தால் துக்கம்; அவள் நினைவு வந்தால் ஒரே மயக்கம். பாவம் என்ன செய்வான் சந்தனு நாளும் மெலிந்து நலிந்து வரும் தந்தையின் போக்கைக் கண்டு அவரைக் காக்கக் கருதினான். “மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தைக்குப் பெண் பார்த்தல் என்னும் செயல்” என்பதற்கு இலக்கணம் ஆகும் வகையில் யமுனைக் கரைக்குச் சென்றான்; படகோட்டியைப் பார்த்தான்; பேசினான்.

“தந்தை போனான்; தனயன் வந்தான்” என்று தனக்குள் பேசிக் கொண்டான் படகோட்டி.

“என் அன்னையைக் காண வந்தேன்” என்றான்.

பரிமள கந்தி அவனுக்குச் சிற்றன்னை ஆனாள்.

“என் தம்பியருக்குத்தான் ஆட்சி உரிமை” என்றான்

‘நீ மணக்கும் மனைவி சும்மா இருப்பானா?”

“அந்தக்கவலை உமக்கு வேண்டாம்; இனி எந்தப் பெண்ணும் எனக்குச் சகோதரியே” என்றான்.

“உன் மனைவி?”

“அப்படி ஒருத்தி வரமாட்டாள்;

நிரந்தர பிரம்மச்சரியாவேன்; இது உறுதி” என்றான்.

“துணிந்துதான் சொல்கிறாயா?”

“தீர யோசித்துத்தான் சொல்கிறேன்”.

இந்த அரிய விரதம் எடுத்தமைகண்டு விண்ணவர் வியந்தனர்; மண்ணவர் அயர்ந்தனர்; ‘யீடுமன்’ என்று இவனைப்பாராட்டி அரிய சாதனைக்கு உரியவன் என்ற பொருளில் இப்பெயரை வைத்தனர். புலன் அடக்கம் ஒரு விரதமே தவிர அதுவே முடிவு அன்று ஒழுக்கத்திற்கு ஒரு துணையே அன்றி அதுவே ஒழுக்கம் ஆகாது. இன்ப சுகம் அனைத்தையும் இழக்கத் துணிந்தான். எனினும் இஃது ஓர் அரிய சூள் உரையே. யாரும் இவ்வகையில் உறுதி படைத்தவர் ஆகார்.

தேவ விர தன் இத்தகைய பயங்கரமான விரதம் மேற் கொண்டது சந்தனுவை வியப்பில் ஆழ்த்தியது; அதிர்ச்சியையும் தந்தது. பட்டத்துக்கு உரிய பாராளும் வேந்தன் மகன் தந்தைக்காகத் தன் வாழ்க்கை இன்பத்தையே துறந்த தூய்மையும் தியாகமும் அவனை மேலோன் ஆக்கின.

யயாதிமகன் இளமையை ஈந்து தந்தைக்கு வாழ்வு தந்தான். “இளமையோடிருந்து இன்பத்தைத்துறந்தாயே யயாதி மகன் உனக்கு நிகர் ஆக மாட்டான்” என்றான் அவன் தந்தை சந்தனு.

“காலனும் உன்னைக் கண்டு சாலவும் அஞ்சுவான்; நீடித்த ஆயுள் பெறுவாய், அவனும் உன் அனுமதி பெற்றே உனக்கு ஆயுள் முடிப்பான்” என்று அவனை வாழ்த்திப் பாராட்டினான்.

சந்தனுவின் சந்ததியர்

பரிமள கந்தியைச் சந்தனு பாணிக்கிரகணம் செய்து கொண்டான்; கங்கையிலும் இவள் இளையவள் அதனால் இவள் இன்பம் இருமடங்கு ஆகியது. மீனவர் குலத்தினள் ஆயினும் அரசிக்கு வேண்டிய அறிவும் ஆசாரமும் அவளிடம் மிகுந்து இருந்தன. சத்தியவதி என்னும் புதுப்பெயர் அவளுக்குப் பெருமை சேர்த்தது.

சந்ததிவேண்டியே சந்தனு அவளை மணந்தான்; சித்திராங்கதன், விசித்திர வீரியன் என்ற இரண்டு மைந்தர்களை அவள் பெற்றெடுத்தாள். வீடுமனின் பார்வையில் அவர்கள் கலைகளைப் பயின்ற காளையர் ஆயினர்.

சந்தனு ஆயுள் முடிந்தது; இயற்கை அவனுக்கு விடுதலை அளித்தது. சாபம் தீர்ந்து பிறவி முடிந்து விண்ணவன் ஆயினான்; அவன் சந்ததி ஆட்சிக்கு உரிமை பெற்றது.

சித்திராங்கதன் கந்தருவனைப்போல அழகு மிக்கவன்; அதனால் யவ்வன அழகியர் அவனைக் காதலித்தனர். கந்தருவன் ஒருவனுக்கும் இப்பெயர் இருந்தது; அவனுக்குப் போட்டியாக இவன் காரிகையரைக் கவர்ந்தான். இவனை ஒழித்தால்தான் தனக்கு நன்மை என்று அக்கந்தருவன் இவனைத் தனி வழியில் இரவு நேரத்தில் தீர்த்துவிட்டான். வீடுமனுக்கு இவனை யார் கொன்றது என்பது தெரியாது: “வாலிபக் கோளாறு; எங்கேயோ மோதிக் கொண்டான்” என்பது மட்டும் தெரிந்தது.

அவன் தம்பி விசித்திர வீரியன்; குடிக்கு ஒரே மகன்; அவனை மணி முடி சூட்டிப் பார் ஆளும் பார்த்திபன் ஆக்கினான். சத்தியவதி அவனுக்கு மணம் முடித்து மகிழ்வு காண விரும்பினாள். வீடுமன் அப்பொறுப்பை ஏற்றுக் கொண்டான்.

காசி நகரத்து அரசனின் கன்னியர் மூவர்க்கு மண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. சுயம்வரம் என்று பேசி அரசர்க்குச் செய்தி செப்பினர். மலரை மொய்க்கும் வண்டு என மன்னன் சிறுவர்கள் வந்து கூடினர். அம் மூவரின் பெயர்களும் அகரத்தில் தொடங்கின. அம்பை, அம்பிகை, அம்பாலிகை என்பவை அவர்களின் பெயர்கள்.

வழக்கப்படி மாலை ஏந்திய மங்கையர் மூவரும் மண்டபத்தில் நிறுத்தப்பட்டனர். பாங்கியரும் செவிலியரும் பக்கத்தில் இருந்து பார்த்திபரை அறிமுகம் செய்தனர்.

வீடுமனைக்கண்டதும் அவர்கள் சற்று ஒதுங்கினர். முற்றிய முருங்கை கறிக்கு உதவாது என்று அம்முதிர்க் காளையை வெறுத்தனர். அவன் அதனை மான இழப்பாகக் கருதினான். ஒருத்திக்கு மூவரைத் தம்பிக்குக் கட்டி வைப்பது என்ற முடிவோடு அம் மூவரையும் தன் தேரில் ஏறச்சொல்லி அத்தினாபுரி நோக்கிச் சென்றான். ஒருத்தியோடு போகாமல் மூவரோடு போனது மற்றைய மன்னர் மைந்தர்களுக்கு எரிச்சல் ஊட்டியது.

வீடுமனை மடக்கிப் போர் தொடுத்தனர். அவர்கள் குறைக்காற்று முன் இலவம் பஞ்சு ஆயினர். சாலுவ மன்னன் ஆகிய பிரமதத்தன் என்பவன் மட்டும் தொடர்ந்து போர் இட்டான். விற்போரில் முற்றிய கலைஞனான வீடுமன் அவனை முறியடித்து முதுகு காட்டச்செய்தான், சாலுவனின் பேரழகும் வீரமும் அம்பிகையைக் கவர்ந்தன. அவள் அவனை மணம் செய்து கொள்ள விரும்பினாள்.

அவள் நெஞ்சில் மற்றொருவன் குடி கொண்டிருந் ததை அறிந்த வீடுமன் அவளைச் சிறைபடுத்த விரும்ப வில்லை. பெண்ணைத் தொடாதவன் ஆயினும் அவள் உரிமையை மதித்தான். அவளுக்கு விடுதலை தந்தான்.

கூண்டில் சிறைப்பட்ட புறா விண்ணில் பறந்தது. சிபிச் சக்கரவர்த்தி அடைக்கலம் தர மறுத்துவிட்டான்; “வீடுமனிடம் சிறைப்பட்ட நீ அவனையே மண்க்க வேண்டும்” என்று சாலுவன் வீர மரபு பற்றிப் பேசினான்; மறுபடியும் அத்தினாபுரம் நாடி வந்தாள். தன்னை வீடுமனை மணந்து கொள்ளும்படி வினயமாக வேண்டினாள். அவன் தன் விரதத்தைப் பொய்ப்பிக்க முடியாதே என்று அவளிடம் வாதாடிப் பார்த்தான். அவன் மறுக்க அவனை எப்படியும் மணப்பது என்று அவள் மன உறுதி கொண்டாள்.

வில்வித்தை பயில்வித்த ஆசான் பரசுராமனிடம் சென்று அவள் முறையிட்டாள். குறை கேட்ட அவன் தன் மாணவன் ஆயிற்றே என்று அவனிடம் வந்து மன்றாடினான். ‘பெண்ணைத் தொடாத வாழ்வு நன்மை பெறாது’ என்று எடுத்துக்காட்டினான். சொற்கள் மாறின; அவை தோல்வி பெற்றன; அச்சுறுத்திப் பார்த்தான்; அது விற் போரில் சென்றது; இருவரும் வில் வித்தையில் நிகரானவர்தாம்; எனினும் வீடுமன் இளையவன்; கிழப்புலி இளஞ் சிங்கத்தின் முன் சீற்றம் அடங்கியது. மாற்றம் வேறு ஒன்றும் கூற இயலாது அவன் தன் தவத்தில் ஆழ்ந்தான்.

மனிதர் யாரும் உதவவில்லை. தெய்வங்களை வழி பட்டாள். வீடுமனைக் கொல்லும் ஆற்றல் தனக்கு வேண்டும் என்று சிவனை வழிபட்டாள். “அடுத்த பிறவியில் நீ இவனை வெல்வாய்” எனறு வரம் அருளப்பட்டது; சிகண்டி என அவள் பெயர் பெற்றாள். வீடு மனைக் கொல்ல அவள் வஞ்சினம் கொண்டாள்.

பிறப்பால் பெண் ஆயினும் செய்கையால் ஆணாக நடந்து தக்க காலம் வரும் வரை அவனைக் கொல்வதற்காகக் காத்து இருந்தாள். போர்க்களத்தில் அருச்சுனனின் தேரில் முன் அமர்ந்து வீடுமனைத் தாக்கினாள்.

2. பாண்டவர் துரியோதனாதியர் பிறப்பு

ஒரே மகன் விசித்திர வீரியனும் அற்ப ஆயுளில் தன் கதையை முடித்துக் கொண்டான். சந்தனுவின் இளைய மனைவி பரிமளகந்தியும் ஒரு விதவை; அவளோடு வீட்டில் மூன்று விதவைகள் அறுத்துவிட்டு அமங்கலமான வாழ்வு நடத்தினர்.

விதவைத்தனம் என்பது பருவ மாறுதல் அல்ல; அது கணவனை இழந்த அவலநிலை; விதவைகளும் மறுமணத்– திற்கு உரியர் என்ற கருத்து இப்பொழுது உருவாகி வருகிறது, இளம் விதவைகள் தாய்மை அடையாவிட்டால் வமிச விருத்தி இல்லாமல் போய்விடும். ஆட்சிக்கு ஒரு ஆண்மகன் இல்லை என்று ஆகிவிடும்; அந்த நிலை அவர்களுக்கு ஏற்பட்டது.

சத்தியவதி ஒரு அசாதாரண அறிவாளி; வீடுமனைக் கொண்டு ஏன் ஒரு மகனைத் தன் மருகியர் பெற்றுத்தரக் கூடாது என்று தீவிரமாகச் சிந்தித்தாள்; வீடுமனை அழைத்துப் பேசினாள்.

“அவசரப்பட்டு நீ சூள் உரைத்தாய்; அதனால் மணத்தை மறுத்தாய்”.

“அவசியத்துக்காகத் தானே எடுத்தேன்”.

“இப்பொழுது குடும்பத்திற்கு வாரிசு இல்லாமல் போய்விட்டதே”.

“அதற்காக இந்த வயதில் நான் திருமணம் செய்து கொள்ள முடியுமா?”

“காலம் கடக்கவில்லை”

“ஆசைகளை அடிவேருடன் களைந்து வாழ்ந்து வரு கிறேன். கொள்கை என் உயிர்; அது என் மூச்சு” என்றான்.

“நீ எனக்கு மூத்தமகன்”

“மறுக்கவில்லை”

“நீ ஒருத்தியோடு உறவு கொள்; மகனை அளித்து எங்களை மகிழவை”

“இயலாது; அவர்கள் என் சகோதரிகள்; இந்த மன நிலையை என்னால் மாற்றிக் கொள்ள இயலாது”.

“இப்பொழுது என்ன செய்யலாம்?"

“தவ முனிவர் தயவை நாடலாம். அவர்கள் கடமையை முடித்துக் கண்ணியத்தோடு போய்விடுவார்கள்” என்றான் வீடுமன்.

“இதற்கு முன் எப்பொழுதாவது இவ்வாறு நடந்துள்ளதா?”

“இராமர் காலத்தில் பரசுராமன் அரச குலத்தினரை வேர் அறுத்தான்; ஆண்கள் குறைந்ததால் சந்ததிக்குப் பஞ்சம் ஏற்பட்டது; அப்பொழுது தவ முனிவர்கள் தாம் இந்தத் தரித்திரத்தைப் போக்கினார்கள்”.

“வியாசன் உனக்குத் தெரியுமா?’ என்று அவள் கேட்டாள்.

“பராசர முனிவரின் மகன்”

“அவன் தாய் யார் தெரியுமா?”

“தாயின் பெயர் சொல்வதில்லையே”

“பரிமளகந்தி; நான் தான் அவனுக்குத் தாய்” என்றாள்.

“அதிர்ச்சியாய் இருக்கிறது’ என்றான் அவன்.

“படகு ஒட்டி வந்தேன், படகு அவனுக்குத் தெரிய வில்லை; என் அழகுதான் தெரிந்தது. அப்பொழுது என் பெயர் மச்ச கந்தி, பராசர முனிவன் தனக்கு ஒரு மகன் வேண்டும் என்று என்னிடம் கூறி என்னை உதவுமாறு வேண்டினான். அவன் நாட்டம் என் மீது சென்றது. என்னோடு கூட்டம் வேண்டினான்; அவனைக் கழிக்க இயலவில்லை”.

“மீனவர் மகளையா விரும்பினான்?”

“முனிவர்கள் பேதங்கள் பார்ப்பதில்லை; அதுமட்டும் அல்ல; கன்னிப் பெண்களைத் தொடும்போது யாரையும் சாதிகள் தடுப்பது இல்லை.”

“மீன் நாற்றம்?”

“அதை மாற்றி எனக்கு மலர்நாற்றம் தந்தான்.”

“மச்ச கந்தியாக இருந்த நான் பரிமளகந்தியானேன், பரவிய கமழ் மணம் பெற்றேன். ஆதலின் யோசன கந்தி எனவும் அழைக்கப்பட்டேன்.”

“வியாசன் உன் மகனா? வியக்கும் செய்தியாக உள்ளது.”

“மூத்தவன் அவன் உனச்கு அவனை அழைத்தால் வருவான்.”

“அவனையே அழைத்து இந்தப் பணியை முடிக்கலாமே”

“உண்மைதான்; இரண்டு வகையில் பொருந்தும். சாத்திரப்படி அவன் தவமுனி, கோத்திரப்படி என் மூத்த மகன். குரு குலத்துக்குத் தக்க வாரிசு கிடைக்கும்” என் றாள் சத்தியவதி.

“அதுவே தக்கது” என்று கூறி வீடுமன், தன் மனக் கருத்தை அறிவித்தான்.

வியாசனுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. தன் மருகியரை அழைத்து அருகில் உட்காரவைத்துப் படைப்பு இலக்கியம் பற்றிப் பாடம் சொல்லி அவர்களை மனங் கொள்ளச் செய்தாள்.

பாரம்பரியக் கற்பில் கட்டுண்ட மரபினை உடைய அவர்கள் இதை ஏற்க ஒருப்படவில்லை; எனினும் அரசியல் காரணம் இதில் அடங்கி இருப்பதால் அவர்களால் அதற்குத் தடை செய்யமுடியவில்லை. தன் உடலைத் தர இசைந்தார்கள்; உள்ளம் அதற்கு இசையவில்லை.

கட்டில்கால்களுக்குச் சுமை ஏறியது; வியாசன் அதில் அமர்ந்து கட்டுரை எழுதினான்; எனினும் தொட்டில் குழந்தைக்கு ஒரு பழுது ஏற்பட்டது. அவள் அம் முனிவர் கூடியபோது வெட்கத்தால் கண்களை முடிக்கொண்டாள். அதனால் பார்வை அற்றவனே பிறப்பான் என்று வியாசன் சொல்லிச் சென்றான். அம்பிகை நிலை இது ஆயிற்று.

அம்பாலிகை அடுத்த தேர்வு. அவளும் இதில் சோர்வு காட்டினாள், வெட்கத்தால் உடல் வியர்த்து வெளுத்து விட்டாள்.

அதனால் வெள்ளை நிறத்துச் சோகையன் அவளுக்குப் பிறப்பான் என்று சொல்லிப்போனான்.

இருமுறையும் தவறுகள் நிகழ்ந்துவிட்டன. நாட்டம் இல்லாத கூட்டங்கள் முழு வெற்றியைத்தரவில்லை.

அம்பிகைக்குத் திருதராட்டிரன் பிறந்தான்; அம் பாலிகைக்குப் பாண்டு பிறந்தான். ஒருவன் பார்வை அற்றவன்; மற்றொருவன் சிவப்பு அணுக்கள் குறைந்து வெளுத்துக் காணப்பட்டான்.

மறுபடியும் வியாசன் அழைக்கப்பட்டான். இம்முறை அம்பாலிகை மறுப்புச் சொல்லவில்லை. பணிப்பெண் ஒருத்தியைத் துணையாக அழைத்துச் சென்றாள். வேண்டுமென்றே பயண வண்டியைத் தவறவிட்டாள். அம்பாலிகை மனம் மாறினாள். கட்டிலில் பணிப்பெண்ணைக் கிடத்திவிட்டுத் தாயாவதிலிருந்து தான் தப்பித்துக் கொண்டாள். பணிப்பெண் தாசிப்பெண்; அவள் கூசி ஒதுங்கவில்லை; இதில் எந்தத் தயக்கமும் காட்டவில்லை; தொழில் அறிந்தவள். வியாசனுக்கு விருந்து படைத்தாள்; காமநூலின் எழுத்துக்களை எண்ணிப் படித்துக் களிப்பு என்பதன் கரையை வியாசன் கண்டான். மனமுவந்து அறிஞன் ஒருவனை அன்று அவள் அனுமதித்தாள்.

அறிவுடைய மகன் பிறப்பான் என்று வியாசன் சொல்லிப் போனான்.

அறிவும் ஒழுக்கமும் மிக்க விதுரன் அவளுக்கு நன் மகனாகப் பிறந்தான்; எனினும் மற்றவர்களைப் போல அந்தஸ்து அவனுக்குக் கிடைக்கவில்லை; தாசி மகன் என்ற ஏசுதலுக்கு அடிக்கடி இரையாக வேண்டி இருந்தது.

மூவர் குரு குலத்து வாரிசுகள் பிறந்ததால் வீடுமனும் பெரு மகிழ்வு பெற்றான். மூவரையும் சரி சமமான நிலையில் மதித்து வளர்த்து அதில் மகிழ்வு கண்டான்.

அம்பிகையின் மகன் திருதராட்டிரன் மூத்தவன்; ஆகையால் மணி அவனை முடி சூட்டிப் பாராளும் மன்னன் ஆக்கினான். அடுத்து அம்பாலிகை மகன் பாண்டுவைச் சேனாதிபதியாக்கினான்; விதுரனை அமைச்சனாக இருக்கச் செய்தான்.

திருதராட்டிரன் திருமணம்

காந்தார நாட்டுக் கன்னியை மணம் பேச வீடுமன் தக்கவரை அனுப்பி வைத்தான். மதிகுலத்தில் தோன்றிய மன்னன் மகனை விழியில்லாதவன் என்று சிலர் ஏசிப் பேசினர். காந்தாரி அதற்காகக் கூசி மறுப்புச் சொல்ல வில்லை; விதி அளித்தது என்று உள்ளம் மகிழ்ந்தாள்; அருந்ததி போன்ற கற்புடைய அவள் அக்குறையைப் போக்கத் தக்க மருந்தாகத் தன் பார்வையை மறைத்துக் கொண்டாள்.

இமைத்த கண்கள் கொண்டு இனி நோக்குவது இல்லை என்று துணிப்பட்டை ஒன்று நெற்றியில் கட்டி மறைத்துக் கொண்டாள். செவிப்புலன் மட்டும் இருவருக்கும் பொதுவாக இயங்கியது. காணுதல் தவிர மற்றைய புலன்கள் உறவாடின. அவன் கண்ட இருள் அதனைத் தானும் பங்கிட்டுக் கொண்டாள்.

பாண்டுவின் மணம்

சூரன் என்ற பெயருடைய யதுகுல அரசனின் மகள் குந்தி ஆவாள். பிரதை என்பது அவள் பெற்றோர் வைத்த பெயராகும். சூரனின் அத்தை மகனான குந்திபோசன் என்பவனுக்கு மகவு இல்லை. அதனால் இவளை அவன் வளர்த்துக்கொள்ள அனுமதித்தான். குந்தி என்ற பெயரைப் பெற்றாள். அவளைப் பாண்டுவிற்கு மணம்பேசி அவனுக்கு மனைவியாக்கினர். அவள் கன்னிப் பருவத்தில் துர்வாச முனிவனை உபசரித்து அவனால் பாராட்டப் பெற்று மந்திரங்கள் உபதேசிக்கப்பெற்றாள்; அதைச் சொல்லி யாரை அழைத்தாலும் அவன் அவளைக் கூடி மகவு நல்குவான் என்று சொல்லிவிட்டுப் போனான். மந்திரம் கற்ற அவள் அவசரப்பட்டாள்; முனிவன் மறைவதற்கு முன் அந்த மந்திரத்தைக் கன்னிமாடத்தில் சொல்லக் கதிரவன் அவள் நினைத்தபடி வந்து சேர்ந்தான். அவளுக்கு அது அதிர்ச்சியைத்தந்தது. கனல் போல் எரித்து அழித்துவிடுவான் என்று அஞ்சி அவனுக்கு அவள் தன் கன்னிமையைத் தந்தாள். கன்னனைப் பரிசாகப் பெற்றாள்.

கர்ணன் என்பது வடமொழிப்பெயர். அதனைத் தமிழில் கன்னன் என்றே வில்லிபுத்துாரார் வழங்குவர்; அந்தப்பழியை மறைக்க அவனைப் பெட்டி ஒன்றில் வைத்துக் கங்கையில் விட்டு “எங்குச்சென்றாலும் வாழ்க” என்று வாழ்த்தி அனுப்பினாள்; மணமாவதற்கு முன் மகனைப் பெற்ற அவள் அதை மறைத்து வைத்துவிட்டுப் பாண்டுவிற்குக் கழுத்தை நீட்டினாள்.

குந்திக்குச் சுயம்வரம் வைத்தே மணமகனை உறுதி செய்தனர். குமுதம் சந்திரனைக்கண்டு மலரும்; அதுபோலக் குந்தி பாண்டுவையே தேர்ந்து எடுத்து மலர்மாலை சூட்டினாள். தவறுகள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்குத் தடையாகவில்லை என்பதை அவள் வாழ்க்கை காட்டியது.

மற்றும் மத்திர நாட்டு அரசன் அவனும் தன் மகள் மாத்திரியைப் பாண்டுவிற்கு அடுத்து மணம் செய்து கொடுத்தான்; புதுமணத் தம்பதியராக மாத்திரியோடு பாண்டு சோலைகுச் சென்று களித்து விளையாட விரும்பினான்.

அங்கு வேட்டையாடி வன விலங்குகளை மாய்த்து மகிழ்ந்தான்.

அங்கு ஒரு கலை மானும் அதன் பிணையும் மகிழ்ந்து இணைந்து இருந்தன; அவன் அம்பு பட்டுக் கலைமான் துடித்து அவன் முன் விழுந்தது, அது ஒரு முனிவன் வடிவம் கொண்டது. அவன் பாண்டுவின் கண்முன் இறந்தான் பெண் மானும் மானுட வடிவம் பெற்றுப் பின் உயிர் நீத்தது. அம்முனிவன் பெயர் கிந்தமன் என்பதாகும்.

“என்போல் இன்பத்திடை நீயும் இறப்பாயாக” என்று அம்முனிவன் சாபமிட்டான். அதனால் பாண்டு சிற்றின்ப வாழ்வைத் துறந்து தன் துணைவியருடன் தவம் செய்யக் கருதிக் காட்டுவாசத்தை ஏற்றுக் கொண்டான்.

மக்கட் செல்வம்

வியாசனை வணங்கி ஆசி பெற்றுத் திருதராட்டிரன் மனைவி காந்தாரி நூறு மகவுகள் பெறக்கூடிய கருப்பம் அடைந்தாள். இச் செய்தியைப் பாண்டு கேள்விப்பட்டான். தனக்கு மகவு இல்லையே என்ற ஏக்கம் அவனை வாட்டியது சாபத்தால் அவன் தன் மனைவியோடு கூட முடியாத நிலை ஏற்பட்டு விட்டது; என்ன செய்வான்? பாவம்! சுவர் இருந்தும் சித்திரம் வரைய முடியவில்லை.

மிகவும் முற்போக்குச் சிந்தனையுடையவனாய்த் தன் மனைவியிடம் துணிந்து ‘வேறு ஒருவர் துணை கொண்டு தாய்மை அடைக’ எனக் கூறினான். பழமை அவனை விலங்கிடவில்லை. தேவை அவனுக்குப் புதிய சிந்தனையைத் தோற்றுவித்தது. மழலை பேசும் குழந்தை பெறாத வாழ்வு ஒரு வாழ்வாகாது; அதனைப் பேரிழப்பாகக் கருதினான்.

மற்றும் குழந்தைப் பேற்றின் அவசியத்தைத் தொடர்ந்து கூறினான்; உண்மை பேசுதல், தானம் செய்தல், வேள்வி இயற்றல் இவற்றை நாளும் செய்தாலும் குழந்தை முகம் பார்த்து அடையும் இன்பத்துக்கு இவை நிகர் ஆகா.

தென்புலத்தார், தெய்வம், சுற்றத்தார். விருந்து இவர்களை ஒம்பும் இல்லற வாழ்வுக்கு மகப்பேறு அடிப் படையாகும். குழந்தைதான் அன்பின் வளர்ச்சிக்கு ஆரம்பப்பள்ளியாகும்.

குறு குறு நடந்தும்,சிறுகை நீட்டியும், இட்டும் தொட் டும் கல்வியும் துழந்தும், உண்ணும் சோற்றை மெய்பட விதிர்த்தும், சிறு நகைசெய்து விளையாடும் சிறுவர் இல்லாத வாழ்வு பெருமை பெறுவதில்லை என்றான்.

“யான் செய்த தீவினையால் அந்த பாக்கியத்தை இழந்து விட்டேன். நீ மனம் வைத்தால் அந்தக் குறை எனக்குத் தீரும்” என்றான்.

“துறக்க பூமிக்கச் சென்ற பிறகு இங்கு இருந்து எனக்குப் பிதிர்க்கடன் செய்ய மகன் ஒருவனைப் பெற்றுத்தர வேண்டுகிறேன். இல்வாழ்பவர்க்குத் தாய்மையால் பெண்கள் இன்பம் சேர்த்துத் தரமுடியும்” என்று அவனுக்குத் தோன்றிய அறநெறிகளைச் சொல்லிப் பிறன் ஒருவனைக் கொண்டு மகவு பெறுக என்றான்.

கணவன் மொழிகேட்ட பொற்பாவை போன்ற குந்தி அனுமதி அளித்தாலும் அதை ஏற்க அவள் மதி இடம் தர வில்லை; மறுத்தாள். உயிர் இறுவது போன்று வெட்கம் அடைந்தாள்: சொல்லத்தகாத சொற்களைக் கூறுவது தகாது. பழிக்கு ஆளாக வேண்டிவரும். அது மட்டும் அல்ல; கடலைச்சேர வேண்டிய நதி குட்டையில் பாய்வது தகுமா? இல்வாழ்பவள் பிறர் மேல் மனம் செல்வது எவ்வாறு ஏற்க முடியும்” என்று கூறி அவனோடுவாதிட்டாள்; மீண்டும் பழைய தவறைச் செய்ய அவள் விரும்பவில்லை.

“இதில் எந்தத் தவறும் இல்லை” என்றான்.

வியாசன் மூலம் திருதராட்டிரனும் விதுரனும் தானும் பிறந்ததை முன் உதாரணமாகக் காட்டினான். “இப்படி எத்தனையோ வரலாறுகள் உள்ளன. ஆபத்துக்குப்பாவம் இல்லை என்ற பழமொழியைக் கேட்டதில்லையா? நான் உரிமை தரும்போது அதனை எடுத்துக்கொள்வதில் சிறுமை இல்லை” என்றான். அவன் மன உறுதியை மதித்தாள்.

“தாய்மை அடைவது பெண்ணின் உரிமை; அதற்குத் தான் தடையாக இருப்பது பொருந்தாது” என்றான். இது ஒரு புதுமைக் கருத்தாக இருந்தது.

வாழ்க்கை என்பது நிகழ் காலத்தை நம்பி மட்டும் அமைவது அன்று; நமக்குப்பின்னால் நிலைத்து நிற்கும் செயல்களைச் செய்வதுதான் அறிவுடைமை. நம்பெயரைச் சொல்வதற்கு நன்மக்கள் வேண்டாமா? கற்பு என்பது கணவன் மனைவி உறவு பற்றியது, பிள்ளைப் பேறு என்பது படைப்புத் திட்டத்தின் ஆணை” என்றான். கற்பியல் வேறு; பிறப்பியல் வேறு என்று அத்தியாயங் களைப் பிரித்துக் காட்டினான்.

“பாண்டு என்பவன் இருந்தான்; அவனுக்கு ஒருத்திக்கு இருவர் மனைவியர் இருந்தனர். இருந்தும் என்ன பயன்! பெயர் சொல்வதற்குக் கூடப் பிள்ளைகள் இல்லையே! சிந்தித்துப்பார்”.

“வாழ்க்கை என்பது நீர் ஒட்டம் போன்றது; நம் மோடு முடிவது அன்று; அதைத்தடைப்படுத்த நாம் யார்?”

“மேலும் நாம் சாதாரண குடி மக்கள் அல்ல; ஆட்சி செய்யும் மன்னர் குலத்தில் வந்தவர்கள், சந்ததி என்பது அடிப்படைத் தேவை”.

“இந்த அத்தினாபுரிக்கு ஆட்சி செய்ய நமக்கு உரிமை உண்டு; எனக்குப்பின் அதை ஏற்று நடத்த வாரிசுகள் வேண்டாமா? ஒழுக்க வரையறை தனி மனிதனின் கட்டுப் பாட்டுக்கு உதவுவது: சமூக நலனுக்காக அதைச் சிறிது மாற்றிக் கொள்ளும் உரிமையும் அறிவும் தேவைப் படுகின்றன. பின் அதுவும் நியாயம்தான் என்று உலகம் பேசும். பயனைப் பொறுத்துத்தான் நன்மை தீமைகள் முடிவு செய்யப்படும்” என்று தொடர்ந்து அறிவுரை கூறினான்.

அதற்குப்பிறகு அவள் இசைவுதந்தாள்; தான் துர்வாச முனிவனிடம் மந்திரம் பெற்றுள்ள வரலாற்றை விளம்பினாள். கன்னனின் பிறப்பை மட்டும் சொல்லவில்லை. அதனால் அவன் மனம் வருந்தும் என்பதால் அச் செய்தியை மறைத்து விட்டாள். அறிவுள்ளவள்; அதனால் தேவையானது மட்டும் செப்பினாள்.

அவள் மந்திரம் பெற்றுள்ள இச்செய்தி கேட்டு அவன் மகிழ்ச்சி பன் மடங்கு ஆகியது. அவனிடம் அனுமதி பெற்று அவள் தருமத்தின் தலைவனாகிய யமனை நினைத்து மந்திரம் சொன்னாள். அறக்கடவுள் ஆகிய எமதருமன் அவளுக்கு அருள் செய்தான்; அதனால் தருமன் பிறந்தான்; இவனே மூத்த மகன் எனக் கருதப் பட்டான். இச்செய்தி எங்கும் பரவியது; குந்தி தனக்கு முந்தி மகனைப் பெற்றுவிட்டாள் என்ற செய்தி காந்தாரிக்குப் பொறாமையைத் தாண்டியது; நூறு மகவு பிறக்க இருந்த கரு தன்னுடையது; இரண்டாண்டுகள் ஆகியும் உருப்பட்டு வெளிவர வில்லையே என்ற வேதனையால் அம்மிக்குழவி கொண்டு வயிற்றில் மோதிக் கொண்டாள். அவசரப்பட்டுச் செயல்பட்டது தவறாக முடிந்தது. கரு நிலை பெயர்ந்தது.

பையோடு கழன்று விழுந்த கரு பார்மிசை குருதி பெருக விழுந்தது; இதை அறிந்த வியாசன் ஓடோடி வந்தான். குழம்பிக் கலைந்த கருச்சிதைவை உருப்படுத்தித் தாழிகள் நூறு கொண்டு வந்து அவற்றில் தனித்தனியே நிரப்பி எஞ்சியவற்றை மற்றும் ஒரு பானையில் இட்டான். அத்தனித்தாழி பெண்மகள் பிறக்க என்று வைத்தான்.

“தாழியில் இட்ட தசைகள் உருப்பெறும் வரை அவற்றைக் கைபடாது காக்க வேண்டும்’ என்ற காந்தாரி யிடம் சொல்லிவிட்டுச் சென்றான். முட்டையில் இருந்து வெளிப்படும் பாம்பு போல அவை வெளிவரும் வரை காந்தாரி காவல் காத்தாள்.

தருமன் பிறந்த சில ஆண்டுகளில் மற்றொரு மகவு பெறப் பாண்டு விரும்பினான்; குந்தி காற்றின் வேந்தனாகிய வாயுபகவானை மனத்தில் நினைத்து மந்திரம் கூறினாள்; அவன் வருகையால் மற்றொரு மகன் பிறந்தான்; அவனுக்கு வீமன் என்ற பெயர் இட்டனர், பீமன் என்பது வடசொல் ஆகும்.

வீமன் பிறப்பதற்கு முந்திய நாளில் தாழியில் இருந்து துரியோதனன் வெளிப்பட்டான்; தருமன் மூத்தவன் ஆகின்றான்; ஒருநாள் வேறுபட்டால் துரியன் வீமனுக்குப் பின்னவன் ஆகியிருப்பான்.

துரியனுக்குப்பிறகு ஒவ்வொரு நாளும் தம்பியர்கள் தொடர்ந்து பிறந்தனர். அவர்களுக்குப்பின் தனித்தாழியில் ஒரு பெண் மகவு பிறந்தாள். பெயர் துச்சனை என்பது அதற்குப் பிறகு தொடர்ந்து இந்திரனை வேண்ட இந்திரன் வருகையால் அருச்சுனன் பிறந்தான். பங்குனி மாதத்தில் பூரண நிலவு நாளில் அவன் பிறந்ததால் அவனுக்குப் பங்குனன் என்ற பெயர் உண்டாயிற்று. பார்த்திபன், விசயன், பார்த்தன், காண்டீபன் முதலியன அவனுக்கு வழங்கிய வேறு பெயர்களாகும்.

பாண்டுவின் மரணம்

பாண்டு மனம் மகிழ்ந்தான். அதன் பின்னர் அம்மந்திரத்தை மாத்திரிக்குச் சொல்ல அவள் இரட்டைப் பிள்ளைகளை ஒரேகருவில் பெற்றாள். சூரியனின் மைந்தர்களான அஸ்வினி தேவர்கள்; அவர்களும் இரட்டையர்கள். அவர்களை நினைத்ததால் அவர்கள் வருகையால் நகுலன் சகாதேவன் ஆகிய இரட்டையர்கள் பிறத்தனர்:

பிறந்த மக்கள் ஐவரையும் சிறந்த முறையில் பாண்டு வளர்த்துப் பெருமகிழ்வு கண்டான்; உரிய பருவங்களில் அவ்வப்பொழுது செய்யப்படும் சடங்குகளால் அவர்கள் பெருமை பெற்றனர். கல்வி கேள்வி கற்று அறிவு பெற்ற னர்:விலங்குகளை வேட்டையாடும் திறமையையும் பெற்று உயர்ந்தனர். உள்ளம் நிறைந்த வாழ்வில் அவன் தனக்கு ஏற்பட்ட சாபத்தை மறந்தான்.

வசந்த காலம் வந்தது. தென்றல் சுகத்தைத்தந்தது. வண்டுகள் மலர்கள் நாடித் தேன் உண்டன. வேனிற் பருவத்து விளைவு, மன்மதன் அம்புகள் இடும் வளைவு. அதனால் குவளை போன்ற அழகுடைய மாத்திரியின் நினைவு; இவை பாண்டுவை வாட்டின. அவள் வனப்பு அவனுக்குக் கிளர்ச்சியை உண்டாக்கியது. தனக்கு விதிக்கப்பட்டிருந்த சாபத்தையும் மறந்து விட்டான். விரக தாபம் போக்க அவள் சேர்க்கையில் தன்னை மறந்தான். இன்பம் ஈர்த்தது, தன் வாழ்வைத் துறந்தான், இறப்பு அவனை ஏற்றுக் கொண்டது. அவன் அசதியாக மெய் மறந்து அயர்ந்து உறங்குகிறான் என்று மாத்திரி நினைத்தாள். அவன் வசதியாக வான் உலகு அடைந்து சேர்ந்தான் என்பதை அறிந்திலள்.

மாத்திரி கணவன் இறந்தது கண்டு வாய்விட்டு அரற்றினாள். அவன் உயிரைத் தேடித் தன் உயிரை அனுப்பி– னாள். இரண்டு உடல்கள் ஒரே எரியில் தகனம் செய்யப் பட்டன. ஈமக்கடன் இருவருக்கும் தன் மக்களைக் கொண்டு செய்து முடித்துவிட்டுக் குந்தி அக்கானகத்தை விட்டு அத் தினாபுரி அடைந்தாள். அத்தினாபுரியை அவர்கள் அடைந்தபோது அறச்செல்வனுக்கு வயது பதினாறு; வீமனுக்குப் பதினைந்து, அருச்சுனனுக்குப் பதினான்கு, நகுல சகாதேவர் இருவருக்கும் வயது பதினொன்று என்று மூல நூல் கூறுகிறது.

அத்தியை அடைந்த ஐலரும் அன்னை குந்தியும் அங்கே ஆறுதல் பெற்றனர். தம்பியின் மைந்தரைத் திருதராட்டிரன் தழுவிக் கொண்டு தடவிக் கொடுத்து அவர்களிடம் அன்பு காட்டினான். துக்கம் விசாரிக்கத் தூரத்தில் இருந்து உறவினர்கள் வந்தார்கள். கரிய மேக வண்ணன் ஆகிய கண்ணனும் வந்து துக்கம் விசாரித்தான். குந்திக்கு ஆறுதல் கூறினர். கிருஷ்ணன் என்ற சொல்லே கண்ணன் என மருவி வழங்கியது.

தன் பதிக்கு வந்தவர்களை வீடுமன், விதுரன் மற்றும் உள்ள பெரியோர்கள் எல்லாம் வரவேற்று விருந்து செய்து அன்பு மொழி பேசிமகிழ்வித்தனர். நூற்றுவரும் ஐவரும் சேர்ந்து வாழ்வர், அதனால் அவர்கள் பகைவர்கள் அழிவர். அவர்களுக்கும் யாதொரு குறையும் நேராது. உதவிக்குப் பெரியவர்கள் நீங்கள் இருக்கிறீர்கள்,” என்று வந்தவர்கள் முகமன் கூறினர்; அவர்களை வீடுமன் வழி அனுப்பினான். ஒரே குளத்தில் மலரும் தாமரையும் ஆம்பலும் போலப் பாண்ட வரும் கவுரவரும் மிக ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர். வேறுபாடு அறியாமல் வாழ்ந்தனர்.

துரியன் தந்த தொல்லைகள்

பாண்ட வரும் துரியோனாதியரும் மனவேறுபாடு அற்றுப்பழகி வந்தனர். எனினும் தருமனைப்பற்றி நகரத்தவர் புகழ்ந்து பேசுவதைத் துரியனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எதிர்பாராத விதமாகத் தேரோட்டியின் வளர்ப்பு மகனான கன்னன் இவனுக்கு நெருங்கிய நண்பன் ஆனான். வலிமை மிக்க வீரன் ஒருவன் தனக்கு நண்பனாக வாய்த்ததால் அவன் தலை கனத்தது. சொந்த வலிவால் அவன் நிற்காமல் துணை வலியால் துள்ளினான். தொடர்ந்து வீமனுக்குத் தொல்லைகள் தந்தனர். ஒரு நாள் கங்கை நீரில் இவர்கள் அனைவரும் நீந்தி விளையாடிக் கரை ஏறினர். பிறகு வீடு வந்து சேர்ந்த வீமனைக் கயிறு கொண்டு கட்டி அவனைக் கங்கை நதியில் போட்டனர். இலக்குவன் இந்திரஜித்தின் நாகபாசத்தில் இருந்து விடுபட்டது போல அக்கயிறுகளை அறுத்து முறித்துக் கொண்டு வீமன் வீடு வந்து சேர்ந்தான்.

இவ்வாறே வீமனுக்குத் துரியன் தொடர்ந்து தொல்லைகள் தந்தான்; அவன் துங்கிக் கொண்டிருக்கும்போது அவன் மீது பாம்புகளை ஏவிக் கடிக்கவிட்டான். வீமன் அவற்றை மூட்டைப் பூச்சிகளை நசுக்குவது போலக் கை களால் பிசைந்து தூக்கி எறிந்தான்.

மற்றொரு நாள் நீரில் குதித்து விளையாடும் போது நீரில் ஈட்டிகளைப் புதைத்து வைத்தான், ஈட்டிகள் தோறும் வண்டுகள் வீற்றிருந்தன. கண்ணன் வண்டுகள் வடிவில் அவனைக் காத்தான். துரியனின் வஞ்சனையை அறிந்து வீமன் தன்னைக் காத்துக் கொண்டான்.

பின்னரும் ஒரு நாள் அவன் உண்ணும் சோற்றில் நஞ்சு கலந்து அவனைக் கொல்லச் சதி செய்தான். விடத்– திலே மயக்கமுற்ற வீமனை வடக்கயிறு கொண்டு கட்டிக் கங்கை வெள்ளத்தில் கொண்டு போய்ப் போட்டான். நீர் அடித்துச் சென்று வீமனைப் பாதளத்தில் கொண்டு சேர்த்தது. அங்கே பாம்பின் குட்டிகள் அவனை நெருங்கிக் கடித்தன. அவற்றின் நஞ்சு இவன் உணவில் உண்ட விஷத்தைப் போக்க மயக்கம் நீங்கிய அவன் கயிறுகளை அறுத்துக் கொண்டு உயிர்தப்பி விடுதலை பெற்றான்.

வந்திருப்பவன் வாயுவின் மைந்தன் என்பது அறிந்து ஆழ நீரில் அடங்கிக்கிடந்த வாசுகி என்னும் பாம்பு அவனை அழைப்பித்து விருந்து செய்து அமுதம் தந்து அவன் ஆயுளை நீடிக்கச் செய்தது, நஞ்சு நீங்க அமுதம் உண்டதால் அவன் மேனி ஒளி பெற்று விளங்கியது. வாசுகி அவனை அங்குத் தங்கி இருக்குமாறு வேண்டினான். எட்டு நாள் அங்கே இருந்து நல் விருந்து உண்டு மகிழ்ந்தான். ஒன்பதாம் நாள் பாம்புகள் அவனைச் சுமந்து கொண்டு வந்து கங்கை நீரில் அவன் விழுந்த இடத்தில் கொண்டு வந்து சேர்த்தன.

வீமனைப் பிரிந்த உடன்பிறந்தவர் நாற்புறமும் சென்று தேடினர். குந்தி மனம் குன்றி ஏங்கித்தவித்தாள். மற்றும் வீடுமன் விதுரன் இவர்கள் எல்லாம் மிகவும் வருந்தினர். இவன் எந்தவித ஊறும் இன்றி ஊர் வந்து சேர்ந்தான். தாயும், தம்பியரும், வீடுமனும், விதுரனும் உவகை கொண்டனர். துரியனின் நண்பர்களும், தம்பியரும் அவலம் கொண்டனர். விற்பயிற்சியும் அரங்கேற்றமும்; கிருபன் ஆசிரியன் ஆதல்.

கவுதம முனிவரின் பேரன் கிருபன் ஆவான். அவன் படைப் பயிற்சி தர ஆசிரியனாக வீடுமனால் அமர்த்தப் பட்டான். கவுதமனின் மகன் சரத்துவன் என்பவன் விற்கலையிலும் வேதநூல் கல்வியிலும் விவேகம் உடையவனாக இருந்தான். இவற்றோடு தவ வாழ்க்கை மேற் கொண்டு அவன் உயர் பதவிகள் அடைய விரும்பினான். அவன் தவத்தைக் கெடுக்க இந்திரன் அழகி ஒருத்தியை தேவர் உலகத்தினின்று அனுப்பி வைத்தான்.

சரத்துவன் என்னும் அம்முனிவன் அவள் அழகில் மயங்கித தவத்தைக் கெடுத்துக் கொண்டான். அவளோடு இன்ப வாழ்வு நடத்தி ஒரு மகனையும் மகளையும் பெற்றான். தான் செய்த தவறுக்காக வருந்தினான். அச்சரித்திரத்தை மறைத்து வைக்க அக்குழந்தைகள் இருவரையும் நாணற் காட்டில் தனது வில் அம்புகளோடு தவிக்க விட்டுச் சென்றான்.

ஆதரவு அற்ற அக்குழந்தைகளை அவ்வழியிற் சென்ற சந்தனு மகாராசன் தன் மனைக்கு எடுத்துச் சென்று வளர்த்தான். கிருபையால் எடுத்து வளர்க்கப்பட்டவன் ஆதலின் அவனுக்குக் கிருபன் என்று பெயர் வழங்கியது. அவன் தங்கையின் பெயர் கிருபி ஆகியது.

கிருபனின் தந்தையாகிய சரத்துவன் என்பவன் பிற் காலத்தில் அத்தினாபுரி வந்து தன் மகனுக்குத் தக்க வயதில் வில் வித்தை கற்பித்து விட்டுச் சென்றான். அதனால் கிருபன் வில் பயிற்சியில் விற்பன்னனாக இருந்தான்.

சந்தனு மைந்தனாகிய வீடுமன் அவனை ஆசிரியனாக அமர்த்திப் படைக்கலப் பயிற்சி பெறுமாறு குருகுல மைந் தர்கள் ஆகிய பாண்டவரையும் துரியோதனாதியரையும் அனுப்பி வைத்தான். வில்லும் வேலும் வாளும் அவர்கள் கற்ற வித்தைகள் ஆயின. மிகவும் அக்கரையோடு அவன் ஆரம்பக் கல்வி கற்பித் தான். எனினும் அவனினும் மேம்பட்ட ஆசிரியன் ஆகிய துரோணனிடம் சிறப்புப் பயிற்சிபெற வீடுமன் அவர்களை அனுப்பி வைத்தான். இருளைப் போக்க உலகம் திங்களை எதிர்பார்க்கிறது. எனினும் ஒளியும் சக்தியும் பெறச் சூரியனை இவ்வுலகம் விரும்பாமல் இருப்பது இல்லை. அதுபோல வீடுமன் ஆற்றல் மிக்க துரோணனை ஆசிரியனாக அமாத்தினான். கிருபனோடு துரோணன் அவர்களுக்கு ஆசிரியர் ஆயினன்.

துரோணனின் வருகை

பரத்துவாச முனிவரின் மகன் துரோணன் ஆவான், அவன் தன் தந்தையிடம் வேத சாத்திரங்களை முறைப்படி பயின்றான்; பரசுராமனிடம் வில் வித்தைகளைக் கற்றான், பரசுராமனின் ஆசிரமத்தில் படைக்கலம் பயின்ற நாட்களில் பாஞ்சால நாட்டு மன்னன் மகன் துருபதன் என்பவன் ஒரு சாலை மாணாக்கனாக அங்கு அவனுடன் பயின்று வந்தான். இருவரும் நெருங்கிப் பழகினர்; சிறந்த நண்பர்களாகத் திகழ்ந்தனர்.

தான் ஆட்சிக்கு வருங்காலத்தில் பாதி அரசு தன் நண்பனாகிய துரோணனுக்குப் பகிர்ந்து அளிப்பதாக வாய் தவறிக் கூறி விட்டான். துரோணனும் அதனை உண்மை என்று நம்பி விட்டான், அதற்காகக் காத்து இருந்தான்.

மலையும் மடுவுமாக வாழ்க்கை பிரிந்து இயங்கியது; அவன் முடிசூடும் மன்னன் ஆனான்; இவன் சுவடி ஏந்தும் ஆசிரியன் ஆனான். துரோணன் தனத்தில் ஆசை இல்லாமல் வனத்தில் தவம் செய்து வந்தான்; கிடைத்ததைக் கொண்டு மன நிறைவோடு வாழ்ந்து வந்தான். கிருபனின் தங்கை கிருபி ஆகிய அவளை மணம் முடித்து ஒரு மகவுக்குத் தந்தை யானான்; வாழ்க்கை அன்பில் மலர்ந்தது; அது கனிய வளம் இல்லாமல் போய் விட்டது.

ஐந்தாவது வயது வரை வறுமையில் உழன்ற அச் சிறுவன் எந்தவிதசுகமும் கண்டதில்லை. மாவின் கஞ்சியே அவனுக்குக் கிடைத்தது; ஆவின் பாலைக் குடித்து அறிய மாட்டான். அதனால் அந்தக் கோவின்பால் அடைந்து பழைய நட்பைப்பற்றிப் பேசினான். அச்சிறுவன்தான் அசுவத்தாமன் என வளர்ந்தான்.

“யார் நீ?” என்றான் துருபதன்; அறியாதவன் போல.

“யான் உன் பள்ளி நண்பன்; பாதி அரசு தருக” என்று உரிமை கொண்டு கேட்டான் துரோணன்.

“மன்னன் யான்; முனிவன் நீ எனக்கும் உனக்கும் எப்படி நட்பு உண்டாக முடியும்?” என்று அரச அவையில் அவனை ஏசி அனுப்பினான்.

“நீ வார்த்தை தவறுகிறாய்! நீ தவறி முடிக்காததை நான் முடித்துக் காட்டுகிறேன்; தேரில் ஏறி ஊர்வலம் வரும் உன்னை ஊரில் சிரிக்கக் கட்டிக் கொணர்வேன். நீ அறிவித்த பாதிப்பாகம் என் வலிமையால் பெறுவேன்; இது உறுதி” என்று சொல்லி வந்தான்.

பழைய வரலாற்றை வீடுமனிடம் எடுத்துச் சொல்லி இந்தச் சூளினை முடித்துக் கொடுப்பதாக இருந்தால் அங்கு ஆசிரியர் பணி ஏற்பதாகக் கூறினான்.

துரோணனும், அவன் மனைவி கிருபியும் மகன் அசு வத்தாமனும் அங்கு இருக்க ஆதரவு தரப்பட்டனர். ஆசிரியர் என்ற மதிப்புத் தரப்பட்டது; சகல வசதிகளும் உடன் செய்து தரப்பட்டன.

“இதுவரை முனிவனாக இருந்தாய்; இனி முனைவனாகப் பதவி உமக்குத் தந்து விட்டோம். நீ அரசர்களைப் போலப் போர் செய்யும் தகுதியும் பெறுகிறாய். பேத மின்றி எங்களில் ஒருவனாய் இருக்கலாம்” என்று கூறி அதற்குரிய மரியாதையையும் வீடுமன் தந்தான். அவனுக்கு வெண் கொற்றக் குடையும், பண்பட்ட பட்டமும். விண்பட்ட கொடியும் தந்து மதிப்பு உயர்த்தினான்.

ஆசிரியப்பணி

அன்று முதல் உதிட்டிரனும் (தருமன்), துரியோதனனும் மற்றும் அவர்கள் தம்பிமார்களும் இவனிடம் படைக்கலப் பயிற்சிகள் பெற்று வந்தனர். விற்பயிற்சியில் அருச்சுனன் மேம்பட்டவனாகக் காணப்பட்டான். அதனால் துரோணன் அவனிடம் அதிக அக்கரை காட்டினான். துரியோதனர்க்கு அதனால் அருச்சுனனிடம் அழுக்காறு உண்டாயிற்று. ஆசிரியன் காட்டிய பாரபட்சம் அவர்களைப் பிரித்து வைத்தது.

இவ்வாறு இருக்கும் நாளில் ஏகலைவன் என்ற வேடுவன் துரோணனிடம் விற்கலை பயில விரும்பி வந்தான். “நேரில் உனக்குக் கற்றுத்தர இயலாது. என்னைக் குருவாக நினைத்து நீயே பயிற்சி பெற்றுக் கொள்” என்று கூறி அனுப்பினான். அவன் துரோணனைப் போன்ற ஒரு சிலை வடித்து வைத்துக் கொண்டு அதனை வழிபட்டு விற்பயிற்சி செய்தான். எனினும் அவன் அருச்சுனனை விடத் திறமை மிக்கவனாக மாறினான்.

ஏகலைவனின் ஆசிரிய மதிப்பு

இதனை அறிந்து விசயன் தன்னினும் மேலவன் ஒருவன் உளன்; அவன் ஏகலைவன் என்றான்.

விசயன் மேல் இருந்த தனிவாஞ்சையால் ஆசிரியன் ஒரு தவறு செய்யத் துணிந்தான்.

ஏகலைவன் இருந்த இடத்துக்கு அருச்சுனனோடு சென்று அவன் வில் திறமையைப் பாராட்டினான்.

“குருவுக்கு நீ தரும் காணிக்கை யாது?” என்று கேட்டான். “உயிர் வேண்டினும் தருகிறேன்” என்றான்.

“உன் கட்டை விரல் தர முடியுமா?” என்றான். ஆசான் சொல்லி முடிப்பதற்குள் எதிர் பேசாமல் அதை வெட்டி அவன் முன் வைத்தான்.

விசயனுக்கு நிகர் மற்றொரு விசயன் வளராதபடி அவன் கற்ற கலையைச் செயல்படாமல் செய்து விட்டான்.

சிறந்த மாணவன் என்பதற்கு ஏகலைவன் எடுத்துக் காட்டாக விளங்கினான். அவன் அதற்காகக் கவலைப் படவில்லை. ஆசிரிய பக்தி இருந்தாலேயே கல்வியில் உயர முடியும் என்பதை அவன் செயல்படுத்திக் காட்டினான். தவறு செய்யும் ஆசிரியர்களும் உளர் என்பதற்குத் துரோணன் ஒரு எடுத்துக்காட்டாக நடந்து கொண்டான்.

படைக்கலப்பயிற்சி

கிருபனிடம் அரை குறையாகக் கற்ற வித்தைகளைத் துரோணனிடம் பயின்று முழுமை அடைந்தனர். ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு புதிய செய்திகளை அறிந்தனர்.

ஒரு சமயம் கிணற்றில் ஆசிரியனின் மோதிரம் ஒன்று விழுந்து விட்டது. அதனை எடுத்துக் கொடுக்குமாறு மாணவர்களிடம் துரோணன் கூறினான். அருச்சுனனே அதனை எடுத்துக் கொடுத்தான்.

அடுத்து அங்கிருந்த ஆலமரத்தில் இலைகள் அனைத்தும் உதிர்ந்து விழ அம்பு விடும்படி விசயனிடம் உரைத்தான். அவனும் அவ்வாறு தன் வில் திறனால் அம்மரத்தின் இலைகளைக் கீழே விழச் செய்தான். அம்மரம் இலைகள் அற்றுக் கிளைகள் மட்டும் தாங்கி நின்றன.

ஒரு முறை துரோணனின் கால்களை ஒரு முதலை பற்றிக் கொண்டது. பக்கத்தில் இருந்த அவன் சீடர்கள் அனைவரும் பதற்றமடையாமலும், அந்த முதலையைக் கொல்லும் முயற்சியில் ஈடுபடாமலும் வெறும் கையோடு வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றனர். அருச்சுனன் ஒருவன் மட்டும் வில்லோடு விரைந்து சென்று அம்பு விட்டு அவன் காலுக்கு ஊறு நேராதபடி அதனை வேறு படுத்தினான். ஆசிரியர் பால் கொண்ட அன்பும், விரைந்து செயல் படும் திறமும், மனத் திண்மையும் ஆசிரியனைப் பெரிதும் கவர்ந்தன. அவனுக்குத் தன்பால் இருந்த ‘பிரசிரஸ்’ என்னும் அத்திரத்தை தந்து அதைப்பயன்படுத்தும் மந்திரமும் சொல்லி அருளினான். இருவரும் உயிரும் உணர்வும் போல விரும்பிப் பழகினர். குரு தாம் காட்டிய அருளிலும், சீடன் ஆசிரியர்க்குச் செய்த வழிபாட்டிலும் ஒருவரை ஒருவர் பிணைத்துக் கொண்டனர்.

அரங்கேற்றம்

மதிகுலத்து மன்னனாகிய திருதராட்டிரனும், விரதவீரனாகிய வீடுமனும், அறக்கடவுளாக விளங்கிய விதுரனும் குருகுலமைந்தர்கள் கற்ற படைக்கலப் பயிற்சியைக் கண்டு மகிழ்வதற்காக அரங்கேற்றம் செய்துகாட்டத் துரோணன் விரும்பினான். முதற்கண் கொற்றவையாகிய துர்க்கைக்குப் பலிகொடுத்து விழாவினைத் தொடங்கினான்.

அரசர்களும், அறிஞர்களும், ஆசாரியர்களும், மக்களுள் மேம்பட்டவர்களும் அங்கு வந்து அவ்வரங்கில் குழுமினர். விண்ணகத்தின் தேவர்களும், சித்தர்களும், மற்றுமுள்ள தெய்வங்களும் கூடிநின்றது போல் இவர்கள் காட்சி அளித்தனர்.

போர்ப் பயிற்சிக்கு உரிய படைக் கருவிகளை அழகுற வைத்துக் காட்டினர். யானை, குதிரை, தேர் இவற்றைப் பலவகையாக நடத்திக் காட்டினர். முனிவர்களும் அரசர் களும் மாடத்தில் இருந்து இவற்றைக் கண்டு களித்தனர். இவை மனிதர் வேகம் அல்ல; வாயு வேகம் என்று கூறிப் பாராட்டினர்.

வலிமையும் திறனும் செயற்பாடும் சரி நிகராக உடைய துரியனும் வீமனும் கதாயுதம் தாங்கி எதிர் எதிர் நோக்கி மோத முற்பட்டனர். மராமரங்களை எடுத்துக் கொண்டு காட்டுவாழ் யானைகளைப் போல நெருங்கிச் சென்றனர்.

தண்டும் தண்டும் மோதிக் கொண்டு பேரோலி செய் தது; அது இடிபோல் ஒலித்தது. இடதுசாரி வலது சாரியாக நடந்து தம் திறமையைக் காட்டினர். சுற்றி வளைத்தும், நேர் சென்றும் தன் திறமையைப் புலப்படுத்தினர். வீர நடையில் தன் பெருமிதத்தைப் புலப்படுத்தினர்.

பின் மறத்தோடு செயிர்த்து வைராக்கியம் கொண்டு ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ள முனைந்தபோது துரோணனின் மகன் அசுவத்தாமன் இடை சென்று தடுத் தான்.

இந்திரனின் மகனான அருச்சுனன் ஆயுத புரோகிதன் ஆகிய துரோணனின் மலர்த்தாளில் முடி வைத்து வணங்கி, அவன் காட்டிய குறிப்பு உணர்ந்து தான் கற்ற வித்தைகளை அவையோர் கண்டு வியக்கும்படி காட்டினான். கைகளில் வில்லும் அம்பும் ஏந்தினான்; மார்பில் கவசம் அணிந்து கொண்டான்.

ஓர் அம்பினால் யானையின் வடிவு தோற்றுவிப்பான்; மற்றோர் அம்பினால் யாளியைப் படைத்து அவ் யானையை அழிப்பான். இவ்வாறே பாம்பு, கருடன், நீர், நெருப்பு, இருள். சூரியன் இவ்வாறு மாறி மாறி அழிக்கத் தெய்வ அத்திரங்களை ஏவினான். அம்புகளில் பல வினோதங்களைச் செய்து காட்டினான். அவையோர் வியப்பு அடைந்தனர்.

கன்னன் அங்க பூபதி ஆதல்

வானத்து நட்சத்திரங்களைப் போலக் கூட்டமாக இருந்த அரசர்களின் முன்னே சூரிய குமரனான கன்னன் சங்கநாதம் என்று சொல்லும்படி வீர முழக்கம் செய்து அரங்கு நோக்கி அடி வைத்தான்.

தன் குருவாகிய பரசுராமனை மனத்தில் தியானித்து வணங்கிப் பின் அம்புகளைத் தொடுத்து அருச்சுனன் என்ன என்ன வில்திறன்களைச் செய்துகாட்டினானோ அவை அனைத்தையும் அவையோர் வியக்கும் வண்ணம் செய்து காட்டினான்.

கணைகள் போய் இலக்கைச் சரியாகத் தாக்கின. அதைக்கண்டு அரசர்கள் இவனை ‘இணையற்ற வீரன்’ என்று பாராட்டினார்கள். விசயன் தன்னினும் ஆற்றல் உடையவன் ஒருவன் இருப்பதைக் கண்டு சற்று நாணத்தால் தலைகுனிந்தான். துரியன் தன் தம்பிமாரோடு மிக்க களிப்பு அடைந்தான்.

கன்னன் அதோடு அமையவில்லை. அர்ச்சுனனை வில்லேந்திக் களம் நோக்கி வரும்படி அழைத்தான். நேருக்கு நேர் நின்று போர் செய்ய விழைந்தான். அதுகண்டு துரியன் செருக்குக் கொண்டான். அன்பு மிகுதியில் உள்ளம் உருகினான்.

“போர் செய்தற்கு நீயோ எனக்கு நிகர்?” என அருச்சுனன் சினந்து கூறினான். உடனே கன்னன் “துரியனுக்கு எதிராக முனையும் போரில் உன் தலையைக் கொய்து அரங்க பூசை செய்வேன்” என்று ஆர்ப்பரித்தான்.

இடிபோல அருச்சுனனை எதிர்த்துக் கன்னன் முழக்கம் செய்ய அங்கிருந்த அனைவரும் திகைப்புற்றனர்; அறிவில் முதிர்ந்த ஆசான் ஆகிய கிருபன் இடை மறித்து அமுதத்துளி போன்று ஒரு வினாவை எழுப்பினான்.

“தேர் ஒட்டியின் மகன் பார் ஆளும் மைந்தனோடு சரி நிகர் சமானமாகப் போருக்கு நிற்றல் சாத்திரம் அனு மதிக்காது; சாதி பேதங்களை மதிக்காது நடந்துகொள்வது தகாது” என்று சாதியின் நீதி அறிந்தவன் கூறினான்.

அதனை மறுத்த துரியோதனன், “கற்றவர்க்கு, அழகு மிக்க கன்னியர்க்கு, வள்ளல்களுக்கு, வீரர் க்கு, வெற்றி மிக்க அரசர்களுக்கு, ஞானிகளுக்கு சாதிகள் இல்லை என் பதை அறியாமல் பேசுவது வியப்பாக இருக்கிறது” என்று அவன் கற்ற சாத்திரத்தை எடுத்துக் கழறினான்.

“தேரோட்டி மகன் என்று இகழ்ந்ததற்கு வருந்துகிறேன். இன்று முதல் பார் ஆளும் மன்னன் அவன்; அங்க தேசத்திற்கு அதிபதி ஆக்கி விட்டேன்” என்று முழக்கம் செய்தான். கன்னன் களிப்புக் கொண்டான்; நட்பு இறுகியது.

துரோணன் குரு தக்களை கேட்டல்

சீடர்கள் காட்டிய சீர்மைகளைக் கண்டு ஆசான் துரோணன் அகமகிழ்வு கொண்டான். அவர்கள் வில் திற னையும், மல் திறனையும் பாராட்டினான். அவர்கள் கல்வியில் முழுமை எய்தியதாக முடிவுரை கூறினான்.

“இளஞ்சிங்கங்களே! இப்பொழுது உங்களுக்கு ஒரு தேர்வு வைக்கிறேன். உங்கள் வீரத்தைக் காட்ட விளை நிலம் காட்டுகிறேன். என் இளமை நண்பன் முதுமைப் பகைவன் பாஞ்சால நாட்டுத் துருபதன், அவனைக்கட்டித் தேரில் வைத்துச் சிறைப்படுத்திக் கொணர்வீர்; இதுவே உம்மிடம் எதிர் பார்க்கும் காணிக்கை.” என்று வீரம் ததும்ப உரையாற்றினான். ஆசிரியன் கட்டளையை ஏற்றனர்.

துரியன்முதல் நூறு பேரும் பாண்டவர் ஐவரும் படைகளுடன் பாஞ்சாலம் நோக்கிப் புறப்பட்டனர். அவரர்களுக்கு இது கன்னிப் போராக அமைந்தது. சோமகர்க்கும் குருகுலக் கோமகர்க்கும். போர் விளைந்தது கண்டு துருபதன் வருந்தினான். விசயனைப் போர்க் களத்தில் சந்தித்தான்.

படை வலிவு மிக்க துருபதன் நெருங்கி வந்து போர் செய்தான். துடை நடுங்கித் துரியன் சொந்தநாடு நோக்கித் தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடி வந்து விட்டான். விசயன் தனி ஒருவன் அம்புகளைக் கொண்டு துருபதனை மடக்கிப் பிடித்தான். அவன் கைவாளுக்கு அஞ்சி அடி பணிந்து அடிமையாயினான்; அவன் தன் வில்லின் கயிறு கொண்டே அவனைத் தேரில் கட்டி ஏறும்படி செய்தான். அவனைத் தேரில் கட்டிக் கொணர்ந்து தேசிகன் முன் கொண்டு வந்து நிறுத்திப் பேச வைத்தான்.

துரோணன் அவனைப்பார்த்து நகைத்து அவன் வீரம் என்ன ஆயிற்று என்று கேட்டான்.

“தேரில் கட்டிக் கொணர்வேன் என்றேன்; கொண்டு வந்து ஆயிற்று பார் முழுதும் இப்பொழுது என்னது ஆயிற்று; எனக்குரிய பூமியில் பாதி யான் உனக்கு அளிக்கி றேன் பெற்றுக்கொள். உயிர் வேண்டுமானால் ஊருக்குத் திருடபிப்போ” என்றான்.

“யானும் நீயும் சமமா என்று கேட்டாய்; இன்று நீ ஒர் சிறைக் கைதி; எல்லாம் எனக்குச் சொந்தம்; நான் ஓர் அரசன். நீயும் உன் தாழ்வு நீங்கி என்னைப்போல அரசனாக இருக்கவே பாதி தருகிறேன். நண்பர்கள் சமமாகி விட்டோம். ஏற்றத் தாழ்வு நீங்கி விட்டது. நட்புக்கு உயர்வு தாழ்வு தடையாக இருந்தது. உன்னைப்பழைய நண்பன் என்பதால் நேசிக்கிறேன். செல்வம், பதவி இவை வரும்; போகும்; நட்பு நிலைத்தது; இதை உணர்க. பகை நீக்கி வாழக் கற்றுக் கொள்”.

“அருச்சுனன் சிறுவன்; ஆனால் மாவீரன்; இதனை அறிந்துகொள். மறுபடியும் துணிந்து போருக்குநிற்காதே” என்று சொல்லி அவனிடம் அன்பு காட்டிக் கண்ணியமாக நடத்தி அனுப்பி வைத்தான். பாம்புக்குப் பால் வார்த்தாலும் அது நஞ்சைத்தான் கக்கும் என்பது பழமொழி அவன் திரும்பிச் சென்றான். பாம்பை அடித்துப் போட்டால் அது எப்படியும் பழி வாங்கி விடும் என்பார்கள்.

துருபதன் வேள்வி செய்தல்

நல் தவசிகள் ஆன உபயாசன், யாசன் என்னும் ஆசான் கள் கூறிய முறைப்படி பெருவேள்வி ஒன்று செய்தான். அவர்கள் ஒமப்பொருளில் ஒரு பகுதியை ஒரு பொன் தட்டில் வைத்துத் துருபதனின் மனைவிக்குத் தரும்படி கொடுத்தனர். அவள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் அதனை மீண்டும் வேள்வித்தீயில் சொரிந்தனர்; தலைமை ஆசான் ஆகிய உபயாசன் இமைப்பொழுதில் ஒரு மகனைத் தோற்றுவித்தான்.

பிறக்கும்போதே அவன் தேரோடு பிறந்தான். சிலையும் கையுமாகச் சிங்கக் குட்டி போல் தேர் மீது அமர்ந்தபடி தோன்றினான். மற்றும் உபயாசன் தான் பெய்த ஒமச்சருகால் வேள்வித் தீயினின்று ஒரு அழகிய பெண்ணைத் தோற்றுவித்தான். மின்னல் போன்ற இடையும், மூங்கில் போன்ற தோள்களும், முல்லை போன்ற முறுவலும் உடைய தங்க நிறமேனியளாக அவள் காட்சி அளித்தாள்.

முன் தோன்றிய மகனால் துரோணனுக்கு அழிவும், பின்தோன்றிய மகளால் அருச்சுனனுக்குவாழ்வும் ஏற்படும் என்று விண்ணில் தோன்றிய அசரீரி சொல்லியது

துருபதன் துரோணனைக் கொல்ல ஒரு மகனும், வில் திறன் மிக்க விசயனை மணக்க மகளும் வேண்டி இந்த யாகம் செய்தான். வேள்வித்தீயில் பிறந்த வெற்றிச் செல் விக்குத் திரெளபதி என்று பெயரிட்டான். துருபதனின் மகள் ஆதலின் அவள் திரெளபதி எனப்பட்டாள். அவள் தமையன் திட்டத்துய்மன் என அழைக்கப்பட்டான். பிறக்கும் போதே காளைப் பருவத்தில் ஒரு மகனும் கன்னிப்பருவத்தில் ஒரு மகளும் பிறந்தனர்.

திட்டத்துய்மன் வில்வித்தை கற்கத் துரோணன் பால் சென்றான். அவனால் தனக்கு மரணம் நிகழும் என்று அறிந்தும் பகைமை பாராட்டாமல் அவனை மாணவனாகத் துரோணன் ஏற்றுக் கொண்டான். இவ்வகையில் பெருமிதமாக நடந்து கொண்டான். தன்னை அணுகியவர்க்கு ஆதரவு தர வேண்டும் என்ற பரந்த உள்ளமும், வந்தவன் யாராக இருந்தாலும் பயிற்றுவித்தல் ஆசிரியர் தம் கடமை என்ற உணர்வும் போற்றத்தக்கனவாக அமைந்தன.

தருமன் இளவரசன் ஆதல்

இவ்வாறு இங்கே இவர்கள் இனிது வளருங்காலை அத்தினாபுரியில் நூற்றுவரும் ஐவரும் மிக ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர். திருதராட்டிரனும் விதுரனும் ஒழுக்கத்தில் சிறந்த தருமனை இளவரசனாக நியமிக்க எண்ணினர். வீடுமனும் கல்வி கேள்விகளிலும் நீதியிலும் தருமன் உயர்ந்தோன் என்று அவன் தகுதியைப் பாராட்டிப் பேசினான். சந்தனுவின் மரபு சிறக்கத் தருமனுக்கு மணி முடி சூட்டி அவனை இளவரசன் ஆக்கினர்.

துரியோதனின் எதிர்ப்பு

தருமன் இளவரசன் ஆவதைத் துரியானால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. அதனால் அவனும் அவன் தம்பியரே உயர்வு அடைவர் என்றும், தானும் தன் தம்பியரும் தாழ்வு பெறுவர் என்றும் கூறினான்.

“பாண்டுவுக்கு உரிய இளவரசு அவன் மகனுக்குத் தரு வதுதானே முறை; மற்றும் அவனே நம் குலத்தில் பிறந்த மூத்தவன், அவனுக்கே தகுதி இருக்கிறது.” என்று தந்தை சொல்லிப்பார்த்தான். துரியன் ஏற்றுக் கொள்ளவதாக இல்லை.

“எனக்கு என் இனிய நண்பன் கன்னன் துணை இருக்கிறான்; மாமன் சகுனி உண்டு; என் தம்பியர் துணை இருக்கிறார்கள். நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். திறமை உண்டு என்பதால் பெருமை கொண்டு எங்களைக் குறைவாக மதிக்கிறார்கள், அவர்கள் எம்மோடு நேசம் கொண்டது இல்லை; அவர்களோடு பாசம் கொண்டு ஒன்று பட்டு உறவோடு வாழ எங்களால் இயலாது” என்று கூறினான்.

மகன் பால் கொண்ட பாசத்தால் அவன் மனம் திரிந்தது. வீடுமனையும் விதுரனையும் அழைத்து அவர்கள் ஒரு சேர வாழாவிட்டால் மோதிக்கொண்டு அழிவார்கள்; அவர்களை வெவ்வேறு இடத்தில் வைப்பதே சரி என்று கூறினான். அவர்கள் அதற்கு மறுப்புக் கூறாமல் அவரவர் விருப்புடன் நடந்து கொள்வதே மேல் என்று சொல்லி விட்டுப் போயினர்.

அரக்கு மாளிகை

துரியன்பால் பாசம் உடைய அமைச்சன் புரோசனன் அழைக்கப்பட்டான். அவனோடு துரியனும் திருதராட்டி ரனும் கலந்து ஒரு முடிவுக்கு வந்தனர்.

வாரணாவதம் என்னும் நகருக்குத் தருமனை அனுப் புவது என்றும். புரோசனன் அவனுக்கு அமைச்சனாக இருந்து உடனிருந்து கெடுப்பது என்றும் திட்டம் தீட்டினர்.

வாரணாவதத்தில் சிவனுக்குத் திருவிழா எடுக்கிறார் என்றும்; அதில் பாண்டவர் பங்கு கொள்ள வேண்டும் என்றும் திருதராட்டிரன் சொல்லி அனுப்பினான். அங்கே ஆட்சி சீர் குலைந்துள்ளது என்றும், அதனை மாட்சி பெறச் செய்ய வேண்டும் என்றும் சொல்லித் தருமனை அனுப்பி வைத்தான்.

அவனும் தடை சொல்லாது தம்பியரோடும் தாய் குந்தி யோடும் வாரணாவதம் போய்ச்சேர்ந்தான். சிவனை வணங்கி வழிபட்டு அந்த அமைச்சன் காட்டிய மாளிகை யில் தங்கினர். அந்த அமைச்சன் அறிவுரைப்படி அங்கு தங்கி அந்நகருக்குக் காவலனாக இருந்து நன்முறையில் ஆட்சி செய்தான்.

அவர்கள் தங்கி இருந்த மாளிகை அரக்கினால் கட்டப் பட்டிருந்தது. முன்கூட்டி இந்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது அவன் நயவஞ்சகமாக நல்லவன்போல் நடித்துத் தீயது செய்யக் காத்திருந்தான். உடன் வந்த சேனையை யும் அவன் ஆதிக்கத்தில் வைத்திருந்தான்.

“தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்; ஒன்னார் அழுத கண்ணிரும் அனைத்து” என்ற குறளுக்கு இலக்கியமாக நடந்து கொண்டான். அவன் நடத்தைகள் எல்லாம் போலித்தனம் கொண்டிருந்தன.

பாண்டவர்களும் உண்ணும் உணவிலும், பருகும் நீரிலும் விழிப்பாக நடந்து கொண்டனர். உடுத்தும் ஆடையிலும், பூசும் சந்தனத்திலும், அணியும் அணிகலன்களிலும் கவனம் செலுத்தினர். அவன் மீது ஒரு கண்வைத்துக் கொண்டு விழிப்போடு வாழ்ந்து வந்தனர்.

இவ்வாறு இருக்கும் நாளில் விதுரன் அனுப்பி வைத்த சிற்பி ஒருவன் வீமனைத் தனியே சந்தித்தான். அவன் துரியனின் திட்டத்தை எடுத்துச் சொல்லி அதை முன் கூட்டி அறிந்த விதுரன் தன்னை இங்கு அனுப்பியதாகவும், தக்க பாதுகாப்புத் தரும்படி சொன்னதாகவும் கூறினான். அம்மாளிகையில் தப்பிச் செல்லச் சுரங்கப் பாதை ஒன்று தான் அமைத்திருப்பதாகவும் அதில் தப்பிச் செல்ல அட்டைத் தூண் ஒன்று நிர்மாணித்துள்ளதாகவும் கூறினான்.

அரக்கு மாளிகை பற்றி எரியும்போது அத்தூணைப் பெயர்த்துத் தள்ளி அதன் கீழே உள்ள சுரங்க வழியாக வெளியேறி விடலாம் என்ற ரகசியத்தைச் சொல்லி வைத்தான். அதனை வீமன் மட்டும் கேட்டு வைத்தான்.

தன் சகோதரருக்கும் தாய்க்கும் கூடச் சொல்லவில்லை, புரோசனனை மட்டும் கருத்தோடு கவனிக்கச் சொல்லி வைத்தான்.

பாம்போடு பழகும் பாம்பாட்டி போல அந்த அமைச்சனை வெளியே தனியே விடாமல் தம்மோடு இருக்குமாறு செய்து கொண்டனர். அவர்கள் பார்வையிலேயே அவனை வைத்துக் கொண்டனர்; அவன் மீது அவர்கள் முழு நம்பிக்கை வைத்திருப்பவர்கள் போலப் பழகினர்.

அங்ஙனம் பழகி வரும் நாளில் ஒரு நாள் இரவு நீண்ட நோம் நாட்டு அரசியலைப்பற்றி விவாதித்துப்பொழுதைக் கடத்தினர். நேரம் ஆகிவிட்டது; இங்கேயே தங்கலாம் என்று அவனிடம் சொல்லிப் படுக்கப் பாயும் தலையணையும் தந்தனர்.

நீள் துயிலில் அமைச்சன் கிடந்த போது வீமன் தனியே எழுந்து அரக்கு மாளிகைக்குத் தீ வைத்து விட்டுத் தன் சகோதரரையும் தாயையும் அழைத்துக்கொண்டு தூணைப் பெயர்த்துத் தள்ளிச் சுரங்க வழியாக வெளியேறித் தப்பிச் சென்றான்.

எதிர்பாராத விதமாகப் பற்றிய நெருப்பில் அகப்பட்டு சாம்பல் ஆயினான்; தன் வினையே தன்னைச் சுடும் என்பதற்கு அவன் இலக்கு ஆயினான். பாண்டவர்க்குத் தேனில் விஷம் கலந்து இடுவதற்காக வேடுவர் ஐவரை அழைத்து வந்திருந்தான். அவர்களுள் முதிய தாயும் உடன் வந்திருந் தாள். தீயவை தீய பயத்தலால் அவை தீயினும் அஞ்சப்படும் என்பது உண்மையாயிற்று. தீமை செய்ய வந்தவர் களைத் தீயே தீய்த்து விட்டது. வேடுவர்கள் படு பிணம் ஆயினர். பாண்டவர் ஐவரும் தாயும் தப்பி வெளியேறினர்.

பாண்டவர்கள் ஐவரும் அநியாயமாகத் தீயிற்கு இரையாகிவிட்டனரே என்று அத்தினாபுரி அரசஇல்லத் தினரும் முனிவர்களும் நாட்டு மக்களும் பேசிக் கவலை தெரிவித்தனர். துரியனின் நண்பர்கள் முதலைக்கண்ணிர் வடித்துப் பாண்டவர்க்கு முத்தாய்ப்பு வைக்கப்பட்டதற்கு உள்ளுர மகிழ்வு கொண்டனர். வீமனின் செயல் வெற்றி பெற்றது; அவன் திறன் வெளிப்பட்டது. இடிம்பன் வதம்

அரக்கு மாளிகை விட்டு ஐவரும், அன்னை குந்தியும் தப்பியபின் அவர்கள் கண்டது ஒரு மலைச்சாரல்; அது ஒரு பெருங்காடு; அங்கேயே இடிம்பன் என்பவன் வாழ்ந்து வந்ததால் அதற்கு இடிம்பவனம் என்று பெயர் வழங்கியது. அவ்வனத்தில் வாழும் இடிம்பன் என்ற அரக்கனின் தங்கை இடிம்பி என்பவள் வீமனை வந்து சந்தித்தாள்.

செந்தீ போன்ற செம்பட்டை மயிர் உடைய அரக்கி யாகிய இடிம்பி அரச மகள் போல் தன்னை அழகுபடுத்திக் கொண்டு அடல் ஏறு போன்ற வீமன் முன் நின்றாள்.

“நள்ளிரவில் கள்வரைப்போல வந்தது ஏன்? மற்றும் துணையாக உள்ள நால்வர் யார்? அன்னைபோல் அருகில் உள்ள மூதாட்டி யார்?” என்று வினவினாள்.

“என்னை வினவ நீ யார்? அதை முன்னர்ச் சொல்க” என்றான்.

“இந்திரசித்து நிகர் இளங்காளையாகிய இடிம்பனின் தங்கை யான்! அவன் அனுப்ப யான் இங்கு வந்திருக்கிறேன்” என்றாள்.

“விருந்து வைக்கவா?”

“அருந்தி உண்ண”

“மருந்து நான் என்பது உனக்குத் தெரியாது”

“சாகா மருந்து என்பதால்தான் உன்னை நேசிக்கி றேன். புத்திசாலி என்று நினைக்கிறேன்; புரிந்து கொள் வாய் என்று யாசிக்கிறேன்”

“கண்டதும் காதலா”

“ஊறுகாயைக் கண்டால் நா ஊறுவதை யாரால் தடுக்க முடியும். மாரன் என்னைத் துளைக்கிறான்; அதனால்தான் உன்னை வளைக்கிறேன்”

“வெட்கம், நாணம், அச்சம் இவற்றை விட்டுப் பேசுவது ஏன்?” .

“அதுதான் காதலின் வெற்றி; விளக்க நேரம் இல்லை: புறப்படு என்னொடு; தப்பித்துச் சென்று விடலாம்; இல்லையேல் என் தமையன் இடிம்பனின் இடிபாடுக்கு நீ இரையாக வேண்டியதுதான்”

“இந்த அச்சுறுத்தல் என்னை ஒன்றும் அசைக்காது; முத லில் அவன் வரட்டும். அவனைப் பார்த்துப் பேசுகிறேன்”

“அதுவும் முறைதான்; என்றாலும் அவன் அனுமதி தேவை இல்லை; மணம் என் விருப்பம்!”

“இல்லை அவனைப் பிணமாக்குவதற்கு”

இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும்போது சிவ பூசை யில் கரடி புகுந்ததைப் போல இடிம்பன் வந்து சேர்ந்தான்.

“யாரடா நீ? என் தங்கையிடம் உனக்கென்ன பேச்சு?"

“பெண் என்பதால் பேசுகிறேன்; வீரனாக இருந்தால் விளையாடி இருப்பேன்” என்றான்.

“காதலா அரக்கியோடு சல்லாபமா? உன்னை வானுலகம் அனுப்புகிறேன்! அங்கே அரமகள் உன்னை அர வணைப்பாள். அழகியர் அங்கே அநேகர் உளர்; உன்னைக் கட்டி அணைப்பர்!”

இருவரும் நெருங்கிப் போர் செய்தனர். இடிகள் இடிப்பது போல் பேரொலி எழுந்தது; தம்பியரும் தருமனும் ஒதுங்கி நின்றனர். குந்தி சற்றுத் தொலைவில் நின்றாள்; பாசத்துக்கும் காதலுக்கும் போராட்டம் நடந்தது. தமையனா காதலிக்கும் புதியவனா யாரை இழப்பது என்று தெரியாமல் இடிம்பி அலைமோதினாள்.

காதல் வென்றுவிட்டது; சாதல் இடிம்பனைத் தழுவியது.

தம்பியரும் தருமனும் “இவன் எதிரிகளைத் தாக்கும் வலிமையும் வீரமும் ஆற்றலும் உடையவன்” என்று அறிந்து மகிழ்வுகொண்டனர்; இடிம்பி அவலமும் உவகையும் ஆகிய இரண்டு உணர்வுகளில் அலைமோதினாள்.

மறுநாள் பொழுது விடிந்தது. இடிம்பியின் வாழ்க் கையும் புலர்ந்தது.

துணிந்து தன் காதற் குறிப்பை இடிம்பி வீமனிடம் வெளியிட்டாள். தன்னை மணந்து கொள்ளுமாறு வேண்டினாள்.

“அரக்கி நீ; மானுடன் நான்; சூர்ப்பனகை கதை கேட் டிருப்பாய்? அந்தக் கதிதான் உனக்கு நேரும்; விலகி விடு”

நீ என்னோடு விளையாடுகிறாய்; என் அண்– ணன் தருமனுக்கே இன்னும் மணம் ஆகவில்லை; எனக்கு எப்படி மணம் ஆகும்?”

“இங்கே இலக்குவன் இல்லை; இருந்தால் அவன் இலக்கு வேறாக இருக்கும்” என்று கூறி விரட்டினான்.

குந்தி நினைத்துப் பார்த்தாள்; அவள் காதல் உள்ளத்தை மதித்தாள். தமையனை இழந்து தனியாளாக இருப்பதையும் உணர்ந்தாள். தன் மற்றைய மக்களோடு பேசி ஒரு முடிவுக்கு வந்தாள்.

வீமனுக்கு ஏற்ற உடல்கட்டும் உரமும் உடையவள்; வந்தவளை உதறித்தள்ளுவது தரமும் அன்று” என்று முடி வுக்கு வந்தாள்.

அவனை மருகியாக ஏற்றுக் கொண்டாள். இடிம்பி மானுடக்காதலில் வெற்றி பெற்றாள். அரக்கியாக இருந் தால் என்ன? அவள் பெண்மை வெற்றி கொண்டது.

இவ்வாறு இடிம்பியின் புது உறவோடு அவ்வனத்தில் பாண்டவர்கள் இருந்தபோது வியாசன் அவர்களை வந்து சந்தித்தான்.

“மனித நடமாட்டம் இல்லாத இந்த மலைச்சாரலை நீங்கி முனிவர்கள் தங்கி வதியும் சாலி கோத்திரம் என்னும் வனத்தில் தங்குவீர்; பின் வேதியர் மிக்கு வாழும் வேத்திரகீயம் சேர்வீர்” என்று விளம்பி அவர்களிடமிருந்து விடை பெற்றான்.

சாலி கோத்திரம் என்னும் வனத்தில் சில காலம் தங்கினர். முருகனும் வள்ளியும்போல வீமனும் இடிம்பியும் ஒருவரை ஒருவர் விரும்பி இன்ப வாழ்வு பெற்றனர். சோலைகளிலும்,மலைச்சாரல்களிலும் திரிந்து விளையாடி இளமையின் இனிமையை நுகர்ந்தனர். அவளும் குந்தி யிடம் அன்பும் மதிப்பும் வைத்து மற்றவர்களுக்கு உதவி மாமி மெச்சும் மருமகளாக வாழ்ந்தாள். அவள் பணி அவர்களுக்கு மிகவும் பயன்பட்டது.

காதல் வினையில் ஒரு நன் மகனை இடிம்பி பெற்றெடுத்தாள். தாயின் நிறமும், தந்தையின் திறமும் கலந்த கலவையாக அவன் விளங்கினான். அவனும் வளர்ந்து மதிக்கத்தக்க வயதும் அறிவும் பெற்றவனாக விளங்கினான். திண்மையும் உரமும் பெற்றுத் தறு கண்மையோடு அச்சிறுவன் விளங்கினான். கடோற்சகன் என்னும் பெயர் அவனுக்கு அமைந்தது. அவன் தம் தந்தைமாரை நோக்கி “வேண்டும் போது நான் வந்து உங்களுக்கு உதவுவேன்” என்று கூறித் தன் தாயோடு அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு தம் சொந்த ஊராகிய இடிம்ப வனத்தை அடைந்தான். வியாசன் கூறியபடி பாண்டவர்கள் அந்தணர் மிக்கு வாழும் வேந்திரகீயம் நோக்கிப் புறப்பட்டனர்.

ஏக சக்கர நகரம் என்ற ஊரின் அக்கிரகாரப்பகுதி வேத்திரகீயம் எனப்பட்டது. வேத சாத்திரம் கற்ற முனிவர்களைப் போலப் பாண்டவர்கள் தம் உருவத்தை மாற் றிக் கொண்டு கோத்திரம், சூத்திரம், குடிப்பெயர்கள் இவற்றைக் கொண்டு அவர்களோடு தங்கி உறவுகொண்டனர்.

அந்தணர் ஐவரும் அவர்கள் தாயரும் அந்த நகர் வந்தனர். கோத்திரம் பேசிப் பாத்திரத்தோடு வந்த வரைச் சாத்திரம் அறிந்த அந்தணர் என்று ஊரவர் கருதி ‘அதிதியர்’ வந்துள்ளனர் என முகமன் கூறி அவர்களை வரவேற்றனர். அவர்களுள் நல்லுள்ளம் படைத்த அந்தணன் ஒருவன் தன் மனையில் வந்து தங்கி இருக்கும்படி நருமனையும் அவன் தாயையும் தம்பியரையும் அழைத்து வரவேற்றான்.

இடம் அகன்ற மாளிகைபோல் இருந்த அவ்வீட்டில் இருந்து கொண்டு தினத்துக்கு ஒரு வீடு என முறை வைத்துக்கொண்டு உணவு அருந்தினர். எந்த விதக் குறைவும் இல்லாமல் மன நிறைவோடு அந்த ஊரில் அவர்கள் தங்கி இருந்தனர்.

பார்ப்பனியின் அழுகை

தாம் தங்கி இருந்த வீட்டில் அவ்வீட்டிற்கு உரிய தலைவி சோகமாகக் கண்ணிர் உகுத்துக் கொண்டிருந்தாள். குந்தியின் நெருங்கிய தோழியாகப் பழகியவள்; அழகி; விரதங்களை மேற் கொண்டு மங்கலகரமான வாழ்க்கையை உடையவள்; எந்தக் குறைவும் இல்லாத குடும்பம் அது; ஒரு மகன்; ஒரு மகள்; அன்புக்கினிய கணவன்; மாளாத செல்வ வாழ்க்கை இவ்வளவு இருந்தும் அவள் அழுதது குந்தியின் உள்னத்தை உருக்கியது; அவளிடம் பரிவு காட்டினாள்.

“தேம்பித் தேம்பி அழுகிறாயே. காரணம் என்ன? இயம்புக” என்று வினவினாள்.

“இந்த நகரை அடுத்துப் பேய் உறையும் பெருங்காடு இருக்கிறது. அங்கே ஒரு அரக்கன் இருக்கிறான்; பகன் என்பது அவன் பெயர். பகாசூரன் என்றும் கூறுவர். அவன் மிகவும் பொல்லாதவன். ஊருக்குள் புகுந்து, ஆடு மாடுகளையும், மனித உயிர்களையும் கொன்று தின்று வந்தான். தேவைக்குமேல் கொலை செய்து அழிவு செய்து வந்தான். ஊர்ப் பெரியவர்கள் கூடி அவனிடம் ஒர் ஒப்பந் தம் செய்து கொண்டனர்.

“உனக்கு ஒரு நாளைக்கு வேண்டிய உணவோ மிகவும் சிறியது; நீ கொன்று அழிப்பதுவோ அதனினும் பெரிது; அவை வீண் ஆகிவிடுகின்றன. நாங்களும் யாருக்கு எப்பொழுது என்ன நேருமோ என்று அஞ்சிக் கொண்டே இருக்கிறோம்; வீட்டுக்கு ஒரு ஆளும் மாடும் தினந்தோறும் முறை வைத்துக் கொண்டு நாங்களே அனுப்பி விடுகிறோம். நீ ஊருக்குள் வரவேண்டாம். நீ இருக்கும் இடம் தேடி உணவு உரிய நேரத்தில் வந்து விடும் என்று சொல்லி ஏற்பாடு செய்துள்ளனர்”.

“தப்பித் தவறி எதிர்த்தால் அந்தக்குடும்பமே நாசம் செய்து விடுவான். தின்பதும் குறைவு அல்ல; ஒரு வண்டி நிறையச் சோறும் கறியும் கொண்டு செல்ல வேண்டும்”.

“இன்று முறை எங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறது; யாரை அனுப்புவது என்று கலங்கிக் கொண்டு இருக்கிறோம்”

“மகளை அனுப்புவதாக இருந்தால் அவள் ஒருவனுக்கு மனைவியாகி விட்டாள். மகனை அனுப்புவதாக இருந்தால் குடிக்கு ஒரே மகன் அவனை இழந்து விட்டு எங்களால் வாழ முடியாது. என் கணவனை அனுப்புவதாக இருந்தால் அதற்கப்புறம் எங்களுக்குப் பாதுகாவல் இருக்காது. நானே போவது என்றால் இந்த வீட்டைக் கவனித்துக்கொள்ள வேறு ஆள் கிடையாது. இந்தச் சூழ் நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் கலங்கி நிற்கிறோம்” என்றாள்.

“இதற்காகவா கவலைப்படுகிறாய்? வீமனைப்போல என் மகன் ஒருவன் வாட்டசாட்டமாக இருக்கிறான். அனுமனைப்போல் ஆற்றல்படைத்தவன். அவனிடத்தில் இந்தச் சூரன் தவிடுபொடியாக வேண்டியதுதான், பிராமணகுலத்– தில் பிறந்துவிட்டான் என்று பார்க்கிறாயா? நம்மவர்களில் பலர் இப்பொழுது எல்லாம் சிப்பாய்களாக எத்தனையோ பேர் அத்தினாபுரியில் வேலை செய்கிறார்கள். இவன் வேதம் மட்டும் அல்ல; மல்யுத்தமும் கற்றிருக்கிறான்.இவனை வெறும் சாப்பாட்டு ராமன் என்று நினைக்கிறாயா? அதுதான் இல்லை; சொன்னால் போதும்; போய் அவனை உண்டு இல்லை என்று பார்த்து விட்டு வந்து விடுவான். ‘இடிம்பன்’ என்ற ஒரு அசுரன் இருந்தானே தெரியுமா? அவன் இவன் கைக்கு இடியாப்பம் ஆகிவிட்டான்; அவனுக்கு ஆசை, பாண்டவர் படையில் சேர்ந்து வீமனைப் போல் சண்டை போட வேண்டும் என்று; என்ன செய்வது வேத கீதத்தில் அவன் நாதம் அடங்கிக் கிடக்கிறது. ஏதம் வராமல் அவன் உங்களைக் காப்பான்”.

“நீ கவலைப்படாதே; அவனை அனுப்பி வைக்கிறேன்; நீ போய் சாப்பாடு தயார் செய்; வண்டிக்கு ஏற்பாடு செய்; அவன் வந்து விடுவான்” என்று கூறி ஆறுதல் தந்தாள்.

அந்த வீட்டு அம்மையாருக்கு அளவில்லா மகிழ்ச்சி ஏற்பட்டது. நால்வரில் யாரை இழப்பது என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த அவளுக்கு விடுதலை கிடைத்தது. இவன் அவனைக் கொள்ளாவிட்டாலும் இன்றைய உணவுக்கு இவன் இரையாவான்; அந்தக் குடும்பத்தினர் தப்பித்துக் கொள்கிறார்கள். இருந்தாலும் மனச்சாட்சி உறுத்தியது.

“அதிதியாக வந்தவருக்கு அழிவு சேர்ப்பது தவறு அல்லவா! என்று கேட்டாள்.

“அவனுக்கு ஒரு வாய்ப்புக் கொடுப்பதாகும்; அவன் சாக மாட்டான், கெட்டி ஆயுள்; இந்த ஊரைப்பிடித்த சனியன் ஒழிந்து விடும்; உனக்குச் செய்யும் நன்மை மட்டும் அல்ல; தீயவன் ஒருவனைத் தீர்த்துக்கட்டுவது மனித தர்மம். தருமம் தழைத்து ஒங்க வேண்டும் என்பதே எங்கள் ஆசை, பெரியவன் இருக்கிறானே அவனும் அப் படித்தான்; தர்மம் பிசகமாட்டான்; அவன் தம்பி இன் னும் மிகவும் சுறுசுறுப்பு;மற்ற இரண்டு பேரும் பார்த்தால் பசுப்போல் சாதுவாக இருப்பார்கள். ஆனால் பயங்கர மானவர்கள்; அரச குடும்பத்தில் பிறக்க வேண்டியவர்கள்; அதிருஷ்டக்கட்டைகள்” என்று நயமாகப் பேசினாள்.

அழுகை எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டது. எங்கிருந்துதான் சுறுசுறுப்பு வந்ததோ அந்தக் குடும்பத்தில்; அனைவரும் பகனுக்குச் சோறு சமைப்பதில் ஈடுபட்டார்கள். சோறா அது? முத்துக்குவியல் எனச்சோறு வடித்துக் கொட்டப்பட்டது. கயிலை மலையே இதன்முன் வெள்ளிக் குன்றாகக் காட்சி அளித்தது. மொண்டு சொரியும் குழம்பு வகைகளும், கடித்துத் தின்னத்தக்க கறிவகைகளும், பாலும், தயிரும், நெய்யும், பருப்பும் சமைத்து வைக்கப்பட்டன. அவற்றை வண்டியில் ஏற்று முன் பாண்டவர் ஐவரும் ஒரு கை பார்த்து விட்டனர்; வண்டியின் சுமையைக் குறைத்தனர்; வயிறார உண்டனர். பசி யாரத் தின்றனர். இவர்கள் உண்டு மீதியானவற்றை ஒரு வண்டியில் இட்டு நிரப்பினர். எருதுகள் இரண்டினை அவ் வண்டியில் பூட்டினர். குருதி கொட்டிய சோறு எனக்காட்சி தருவதற்குச் செந்நிற மலர்களைத் தூவினர். குருதி போன்ற கலவைச்சாந்து பூசினர்.

பகாசூரன் மரணம்

வண்டி வரும் போதே சூரனின் பசியை அது கிண்டியது, வீமன் சிங்கம் போல் சீறிய நிலையில் அவ்வண்டி முன் அமர்ந்து அதை ஒட்டி வந்தான். ஊருக்கு வெளியே காட்டுப் பகுதியில் வண்டி நிறுத்தப்பட்டது. காத்திருந் தவன் வண்டியில் இருந்த வகையான ஆளைக்கண்டு உவகை கொண்டான். நொய்ந்து கிடந்த அந்தண மைந்தர்களை உண்டவன் கொழு கொழுத்த நரனைக் கண்டதும் நாவில் நீர் ஊறக் காத்து இருந்தான்.

வேண்டுமென்றே அவன் பார்த்து வேகும்படி முதுகுப் புறம் பகன் காண அவ்வுணவினை அள்ளித் தின்றான். அவன் உள்ளம் கொதித்தது.

“ஏன் அடா உனக்கு என்ன திமிர்? கொண்டு வந்த சோற்றை நீயே சுவை பார்க்கிறாயே? உன்னை என்ன செய்கிறேன் பார்” என்று சொல்லிக் கொண்டு முதுகுப் புறம் வந்து இரண்டு குத்துகள் விட்டான். சோறு உள்ளே சென்றது. அப்பாடா நன்றி; இன்னும் இரண்டு குத்து விடு’ என்றான்.

“புலிக்கு இட்ட உணவைப் பூனை நீ உண்பதா?” என்று கூச்சவிட்டான்.

“உண்பது எங்கே போகப்போகிறது! அதுவும் உன் வயிற்றில் தானே பின் சேரப்போகிறது” என்று சொல்லிக் கொண்டு வீமன் பகனை நெருங்கினான்.

அருகில் வந்ததும் நெருக்கு நேர் வீமன் சந்தித்து, “பேசுவது போதும்; மோதுவது செய்வோம்” என்றான்.

“இழுத்துப்பிடித்து வேட்டியை இறுக்கக் கட்டிக் கொள். அழுத்திப் பிடித்து உன்னை உடம்பு பிடித்து விடுகிறேன்” என்றான் வீமன் தொடர்ந்து. இருவரும் மற்போர் தொடங்கினர். கைகளும் கைகளும் பிணைத்தனர். கால்களோடு கால்களைப் பின்னிக் கொண்டனர். தலையோடு தலை மோதிக் கொண்டனர். கொடிய சிங்க ஏறுபோல உறுமிய வண்ணம் அவர்கள் மற்போர் செய்தனர். பின் மரங்களைக் கொண்டு தாக்கிக் கொண்டனர். கற்களை வீசிக் குருதிக் கறைபட மலைந்தனர். களிறுகள் செய்யும் போரினை அக்காளையரிடம் காணமுடிந்தது.

வீமன் விட்ட உதையால் பகனின் விலா எலும்பு சிதைந்தது; மார்பு குன்றியது; முதுகு முறிந்தது; இரு கன்னங்களும் குழிந்தன. நீட்டிக் கொண்டிருந்த பற்கள் தம்மைக் காட்டிக்கொள்ளாது மண்ணில் விழுந்தன. அவன் செயலிழந்து மரம் போல நின்று விட்டான்.

உணவு இல்லாது பசியால் வாடிய அந்த அரக்கன் மேலும் மேலும் தாக்கப் பெற்றுத் தளர்ந்து சாய்ந்தான். அவன் மார் பின் மீது யானையின் மத்தகம் நோக்கிப் பாயும் சிங்கத்தைப் போல ஏறி மண்டியிட்டு உட்கார்ந்து அவன் கழுத்தை நெரித்துத் திருகி அவன் உயிரைப் போக்கி அவனை அவ்வண்டியில் தூக்கி எறிந்து போட்டுக் கொண்டு அதனை ஊர் வெளிப்புற வாயிலில் கொண்டு சேர்த்தான்.

ஏக சக்கர வனம் என்ற அப்பெருங்காட்டில் தங்கி இருந்து ஊருக்கு ஊறு விளைவித்து வந்த அசுரனை வீமன் தாக்கிக் கொன்று அவர்கள் தொல்லைகளைத் தீர்த்தான். அவனும் நீரில் சென்று நீராடி உடற்களைப்பைப் போக்கிக் கொள்ளச் சென்றான். ஊரார் புகழத்தான் தங்கியிருந்த இடம் வந்து சேர்ந்தான். அவர்களை வணங்கி அடக்க ஒடுக்கமாகத தான் செய்த செயலைச் சுருக்கமாகக் கூறி அவர்கள் மகிழ்ச்சியைப் பெருக்குவித்தான். நன்றிக் கடனோடு அவனை நயந்து பார்த்துத் தம் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். வீட்டில் விளக்குகள் வைத்து ஒளி ஏற்றி விழாக் கொண்டாடினர். குந்தியையும் தருமனையும் வணங்கித் தம்பியரிடம் அளவளாவி அவன் மகிழ்ச்சி காட்டினான். தீயவரை ஒழித்து நல்லோரைக் காக்கும் தெய்வத் திருமால் போல இவன் செய்கை இருந்தது என ஊரார் பாராட்டினர். அவ்வூரில் வளைந்திருந்த முதுகுகள் நிமிர்ந்து நின்றன. எந்த அசுரனும் வந்து தம்மை அண்ட முடியாது என்று பெருமை அடைந்தனர். ஊர் விழாக் கோலம் பூண்டது.வீமன் மாவீரன் என்று புகழப்பட்டான். பகனை ஊரார் அடக்கம் செய்தனர். மாவீரன் கதையைப் பற்றிப் பேசுவதில் மகிழ்வு காட்டினர்.

2. திரெளபதியின் சுயம்வரம்

துரோணனுக்கும் துருபதனுக்கும் பகை திரெளபதியின் பிறப்புக்குக் காரணம் ஆயிற்று. அடிபட்ட வேங்கை பதுங்கிப்பாயும் முயற்சியே துருபதனது. எப்படியும் துரோணனை உயிர் பறிப்பது என்று உறுதிகொண்டான். துரோணனுக்குப் பக்க பலமாக இருந்தவன் விசயன். அவனை வளைத்துப் போட்டுக்கொண்டால் துரோணன் தணிந்துபோக வேண்டியதுதான். துருபதன் தன் மகன் திட்டத்துய்மனைக் கொண்டு எளிதில் கொன்று விடலாம் என்று திட்டம் போட்டான்.

பிறந்தவுடனே பெரிவளாகச் சிறந்தவள் திரெளபதி. வனப்பு அவளை நாடி வந்து தேடிப் பெற்றது; பிறப் போடு கூடி வந்த ஒன்றாக இருந்தது. பாண்டவர்கள் அரக்கு மாளிகையில் நெருப்புக்கு இரையாகி விட்டார்கள் என்ற செய்தி பரவியது. எனினும் துருபதன் நம்ப