மாபாரதம்/தூது உரைகள்
உலூகன் தூது
உபப்பிலாவியம் என்னும் நகரில் சீட்டு விளையாடச் சிறுவர்கள் கூடவில்லை. நாட்டு உரிமையை அடைய வழிவகை காணப் பாண்டவர்கள் கூடிப் பேசினர்.
அணுகுமுறை பற்றி அரச அவையில் விவாதம் தொடங்கினர். சூது ஆடி அவர்கள் நாட்டை இழந்தனர். மறுபடியும் அதே தவறு செய்துதான் ஆட்சியைப் பெற வேண்டும் என்று சூதுகள் நிறைந்த கண்ணன் தன் கருத்தைத் தெரிவித்தான்.
பலராமன் ஆட்சேபித்தான். அவன் சட்ட நுணுக்கம் அறிந்தவன். ஆதலின் சட்ட விளக்கத்தை எடுத்து உரைத்தான்.
“அடிப்பட ஆண்ட நாட்டைப் பிடிபடக் கேட்பது எடுபடாது” என்று உரைத்தான். பன்னிரண்டு வருஷம் ஒரு உடைமை ஒருவரிடம் இருந்தால் அது அவர்க்கு உரிமையாகும் என்று உரிமை பற்றிய சட்டத்தை எடுத்துப் பேசினான்.
சாத்தகி என்பவன் கண்ணனுக்கு இளையோன் ஆவான். “பலராமன் வெள்ளை நிறைத்தினன். அவன் உள்ளமும் ஏன் வெண்மை நிறைந்ததாக இருக்கிறது” என்று அவனைப் பாராட்டுவது போலப் பேசினான்.
அறிவு இருக்கிறதா என்று வெளிப்படையாகக் கேட்காமல் ஒண்மை அற்றவன் என்று அவனைச் சாடினான்.
இருவரையும் அமைதிப்படுத்திக் கண்ணன் வழிகள் இரண்டே உள்ளன என்று விளக்கிக் கூறினான். சூது உதவாது என்றால் மோதல் தான் உண்டு என்று ஒதினான். நாட்டைக் கேட்டால் அவன் திருப்பித்தர என்ன வழியை நாடுகிறான் என்று கேட்டுவரத் தக்க ஆள் அனுப்ப வேண்டும் என்றான்.
பஞ்சாங்கம் பார்த்துவரும் புரோகிதன் ஒருவன்; உலூகன் என்பது அவன் பெயர் ஆகும்.
அவன் அக்காலச் செஞ்சிலுவைச்சங்கம் சார்ந்தவன்; அவனுக்கு யாரும் ஊறு செய்யமாட்டார்கள். உறவுகள் துறந்த ஞானி என்பதால் உண்மையை எடுத்து உரைப்பான் என்று கண்ணன் கூறினான்.
உலூகன் தூது அனுப்பப்பட்டான்; முனிவன் ஆதலின் இனிதாக வரவேற்கப்பட்டான்.
“நாடு கொடுக்க நயமான உரை நல்குக” என்று துரியனைக் கேட்டான்.
“மேலும் விசயனும் வீமனும் வீரம் மிக்கவர்கள். அதனால் யோசித்துக் கூறுங்கள்” என்றான்.
“வீரம் மிக்கவன் விசயன்” என்ற சொல்லைக்கேட்கக் கன்னனின் பொறுமை இடம் கொடுக்கவில்லை.
“போரில் சந்திப்போம்” என்று துரியன் செய்தி சொல்லி அனுப்பக் கன்னன் காரணன் ஆயினான்.
ஆரம்ப ஆசிரியன் ஆன கிருபனும், அருச்சுனன் பால் நேசம் கொண்ட துரோணனும், அரசியல் காமராசராக விளங்கிய விடுமனும் வில்லைத் தாங்கிய விதுரனும் அமைதி தரும் ஆக்கத்தை அடித்துச் சொல்லினார்கள். கன்னனும் துரியனும் அவற்றைக் கேட்க மறுத்தனர். ‘நகம் மழுங்கிய கிழட்டுப்புலிகள்’ எனக் கன்னன் அவர்களை அவமதித்தான். வீடுமனும் கன்னனைக் கடிந்து பேசினான். அவன் இதுவரை அருச்சுனனிடம் அடைந்து வந்த தோல்விகளை எடுத்துக் கூறினான். பன்முறை தோற்றும் படிப்பினை பெறவில்லையே என்று பாடிச் சொன்னான். கேடு நினைப்பவர்க்கு நல்ல அறிவுரைகள் ஏற்கப் போவதில்லை என்றான்.
ஆத்திரத்திலும் பேராசையிலும் பகைமையிலும் சிக்கிய அவர்கள் ஆவேச உரை பகர்ந்தனர். போரில் சந் திக்கலாம் என்று பேசி அனுப்பினர்.
சல்லியனின் ஏமாற்றம்
நகுல சகாதேவர்களின் அன்னை மாத்திரிக்குச் சல்லியன் உடன் பிறந்த சகோதரன். அவன் மத்திர நாட்டு அரசன். உபப்பிலாவிய நகரத்தில் பாண்டவர்கள் போருக்கு அணி வகுக்கின்றனர் என்பது அறிந்து படை யுடன் அவர்கள் இடம் நோக்கிச் சென்றான். அதை அறிந்து உதவி செய்யவழியில் துரியன் தன் ஆட்களை அனுப்பி அவனுக்கு உணவு, இடம் முதலிய வசதிகள் தந்து மகிழ்வித்தான்; தனக்கு உபசாரங்கள் செய்தலுக்குப் பிரதி உபகாரம் செய்ய வேண்டும் என்று நினைத்தான். பாண்டவரே விருந்து தந்தனர் என்று அவர்கள் பால் அன்பு கொண்டான். துரியன் தான்தான் இந்த ஏற்பாடுகளைச் செய்தது என்றான்.
அவன் பெருமிதத்தைப் பாராட் டினான். பாண்ட வர்க்குத் தான் வேண்டியவன் என்று தெரிந்தும் தனக்கு உபசாரங்கள் செய்தது அவன் பெருந்தன்மை என நினைத்தான்.
பிறகு தெரிந்தது சோழியன் குடுமி சும்மா ஆட வில்லை என்பது, “வரப்போகும் போரில் நீ என் பக்கம் நின்று உதவ வேண்டும்” என்றான்.
அவன் தந்திரம் அறிந்தும் அதில் இருந்து தப்ப இயல வில்லை; மந்திரத்திற்குக் கட்டுப்பட்ட நாகம் ஆனான், பிறகு தருமனைச் சந்தித்தான். அவன் முந்திக் கொண்டான் என்பதை அறிவித்தான் “நீ எங்கள் சாவுக்குத் துணை போகக்கூடாது” என்று தருமன் கேட்டுக் கொண்டான்.
“வார்த்தை தவற முடியாது; உபகாரம் செய்தலுக்கு அபகாரம் செய்ய முடியாது” என்றான்.
“அருச்சுனனைக் கொல்ல நீ துணை இருக்கக்கூடாது” என்றான்.
“நான் கன்னனுக்குத் தேர் ஒட்டுவேன்; அப்பொழுது என் பேரொளியால் கன்னன் மங்கிப்போவான்; அவனை எளிதில் அருச்சுனன் வென்று விடலாம்” என்றான்.
துரியன் புத்திசாலியாகிவிட்டானே என்பதற்குத் தருமன் வருந்தினான். போரில் கூரிய அறிவும். திட்ட மிட்டுச் செயல்படும் திறனும், காலம் கருதி எதையும் சாதிக்கும் இயல்பும் வேண்டும் என்றும் நினைத்துத் தெளிவு பெற்றான்.
வாசுதேவனைப் படைத்துணைக்கு அழைத்தது
தொட்டிலையும் ஆட்டுவான்; பிள்ளையையும் கிள்ளு வான்” என்பதற்கு இலக்கியமாக விளங்கிய கண்ணனை நம்பி இருப்பதற்கு இயலவில்லை. நட்டாற்றில் இறங்கினால் அவன் யாரைக் கை தூக்கி விடுவான் யாரைக் கால் தடுக்கி வீழ்த்துவான் என்பதைச் சொல்ல முடியாமல் இருந்தது.
‘மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்’ என்று கேட்டு அறிந்தும் நச்சினை இச்சிக்கும் அரவக்கொடியோன்போர் செய்வது என்ற முடிவுக்கு வந்து சேர்ந்தான். புயலுக்குப் பின் அமைதி ஏற்பட்டது. நாயும் பூனையும் சண்டை போட்டுக் கொண்டு இருந்தன, குலைத்தும், கத்தியும் அடங்கி விட்டனர். கன்னனையும் வீடுமனையும் அமைதிப்படுத்திவிட்டுத் துரோணனைக் கலந்து பேசிக் கண்ணனைப் படைத்துணைக்கு அழைப்பது என்று முடிவு செய்தான்.
துரியன் துவாரகை நோக்கித் தனியாளாய்ப் புறப்பட்டான். அங்கே கொடிச்சீலைகள் அசைந்து ஆடிக்கொண்டிருந்தன. அவனை “வராதே நீ போ; வாசுதேவன் படைத் துணைக்கு ஆகமாட்டான்” என்று கை மறித்துக் கூறுவது போல இருந்தது.
“ஈண்டு நீ வரினும் எழில் உடை எழிலி வண்ணன் பாண்டவர் தங்கட்கு அல்லால் உமக்குப் படைத்துணை யாக மாட்டான்; மீண்டுபோக” என்று வியன் மதிற்குடுமி தோறும் கொடிச் சிலைகள் கைகளால் தடுப்பது போன்று இருந்தது.
வாரல் என்பனபோல் அக்கொடிச் சீலைகள் மறித்துக் கைகாட்டின.
வருவது அறிந்து பாண்டவர்க்கு உறுதிகள் செய்யக் கருதிய கண்ணன் துரியனைத் தடை செய்யாது உள்ளே விடுக என்று சொல்லிவிட்டு அநந்த சயனன் ஆகி அரிதுயி லில் பள்ளி கொண்டான். வந்தவன் நேரே அவனைத்தட்டி எழுப்பாமல் அவன் தலையணைக்கு இவன் ஓர் அணையானான்.
சற்று நேரத்தில் பற்றுமிகு அருச்சுனனும் உள்ளே வந்து கண்ணன் திருவடி தீண்டி அவன் திரு முன் அமர்ந் தான். விழித்து எழுந்தான். முன் இருந்த விசயனைக் கண்டு முறுவல் காட்டி, ‘நன்மை எய்துக’ என்று வாழ்த்துக் கூறினான்.
இருவரும் உதவி வேண்டிக் கண்ணன்பால் நேயம் காட்டினர்.
தருமனிடம் அவனுக்குத் துணையிருப்பதாகத் தான் சொல்லியதையும், முதற்கண் தன்கண் அருச்சுனனைப் பார்த்ததையும் எடுத்துச் சொல்லி தருமனுக்கே உதவத் தான் கடமைப்பட்டிருப்பதாகக் கண்ணன் கூறினான்.
பாண்டவர்களுக்குப் படைகளை உதவி அவர்கட்குத் துணை போகக்கூடாது என்று பாண்டவரின் பகைவன் வேண்டுதல் விடுத்தான்.
அருச்சுனன் கருத்தை அறிய, “நீ என்ன சொல்கிறாய்?” என்று கேள்வி விடுத்தான்.
“என் தேரை நீ செலுத்தினால் அதுவே போதும்” என்றான்.
துரியனுக்கு எல்லையற்ற மகிழ்ச்சி கண்ணன் படை எடுத்துப் போருக்கு வரமாட்டான் என்பதால்
“யாதவர் சேனையும் பலராமன் துணையும் வேண்டு மானால் நீ கொள்ளலாம் எனக்குத் தடையில்லை” என்று கூறி விடை தந்து அனுப்பினான்.
மாயம் வல்ல கண்ணன் அருச்சுனனுக்குக் கைகொடுத் துத் தெய்வம் ஆயினான்; அரவக்கொடியோனுக்குக் காலைவாரிக் குப்புறத் தள்ளிக் குழி பறிக்கும் குதிரையாயினான்.
சஞ்சயன் தூது
குருட்டு அரசன் திருதராட்டிரன் மனத்தில் திருட்டு யோசனை உதயம் ஆயிற்று தன் மகனைக் காக்க அவ னுக்குத் தோன்றிய வழி இது. சஞ்சயன் என்னும் முனிவன் ஞான நெறியில் நின்று தத்துவ போதனைகள் சாற்றுவ தில் வல்லவன். அவனை அவர்களுக்கு அறிவுரை கூற அனுப்பி வைத்தான்.
“காயமே இது பொய்யடா காற்றடைத்த பையடா” என்றுபாடிக் கொண்டு பாண்டவர் பால் சென்றான்.
அவனுக்கு வரவேற்புக் கிடைத்தது.
“தவசிகளோடு பழகிய உங்களுக்குத் தவத்தின் பெருமையை அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. காட்டில் வாழ்ந்து பழகிய நாட்கள் மறுபடியும் வரப்போவதில்லை, பழகிவிட்ட காட்டிலேயே தவம் செய்து எஞ்சிய நாட்களைக் கழிப்பது ஏமம் ஆகும். ‘வாழ்வே மாயம்’ மண், பொன், பெண் இந்த மூன்று ஆசைகளை விட்டவர்கள் பொன்னுலகம் புகுவார்கள்” என்று அவன் கற்ற வேதாந்த போத மூட்டையை அவிழ்த்து விட்டான்.
“வீரம் குன்றி விவேகம் பேசி எங்களை நாங்கள் ஏமாற்றிக் கொள்ள விரும்பவில்லை; இந்த பூமிக்குப் பாரமாக இருக்கின்ற நூற்று வரையும் அவர்களைப் போற்றுப வரையும் காலன் ஊருக்கு அனுப்பி வைத்துக் கணக்கு முடிப்பதே எங்கள் அறம், கடமை; செயல்முறை” என்று தருமன் கூறினான். “நீ சொல்லும் தவ வேள்வியை விட்டுக் குருதி சிந்தும் கள வேள்வியே யாம் செய்யத் தகும் தவம் ஆகும். நரகத்தில் எங்களுக்கு நிறையக் கடமைகள் இருக்கின்றன. அதனைச் சீர்படுத்தி அதை வாழத் தகுந்த தாக ஆக்குவது சிறந்த பணியாகும். எம் பெரியதந்தை திருதராட்டிரனுக்கு எப்போதும் ஒரு கண்ணில் வெண் ணெய்; இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு; அவர் பின் புத்திக்காரர். அவர் பேச்சைக் கேட்டு எங்களுக்குத் தவம் போதிக்க வந்து இருக்கிறாய், அதைச் சோம்பேறிக்கு, உழைக்காதவர்களுக்கு, மடாதிபதிகளுக்கு, மதத்தை வியாபாரம் செய்யும் போலிகளுக்குப் போய் உரை. அவர் களுக்கு ஆறுதலாக இருக்கும். பாரதத் திருநாட்டில் மதத்தை அரசியல் ஆக்கும் பிற்போக்குவாதிகள் இருக்கிறார்கள். அவர்களுக்குப் போய்ச் சொல்” என்றனன்
கண்ணன் அதையே மிகவும் அழகாகச் சொன்னான். “நீர் கவலைப்பட வேண்டாம் இவர்கள் பூமியை ஆள் வார்கள். அது அவர்களுக்குத் தகுதியாகும்; உம்மவர்கள் வான் ஆள வானவர் பதம் தருவார்கள். அவர்களை அமரர் உலகு ஆளச் செய்வார்கள்; போய் வாருங்கள்” என்று சொல்லி அனுப்பினான்.
“காயமே இது பொய்யடா காற்றடைத்த பையடா” என்றுபாடிக் கொண்டுவந்தவன் “போரே இனி மெய்யடா அது தடுப்பது இயலாதடா” என்று வேறு வகையாகப் பாடிக்கொண்டு துரியனிடம் போய்ச் சேர்ந் தான், தாளம் மாறிவிட்டது; அவன் பாட்டுப் புதிய ராகத்தில் அமைந்து விட்டது.
கிருட்டினன் தூது
அக்கால ஐ. நா. பாதுகாப்புச் சபையின் தலைவனா கிய துவரைக் கோமான் போரைத் தவிர்ப்பது தம்கடமை எனக் கொண்டான். துரியனிடம் நேரிடைப் பேச்சு நடத்துவது தக்கது என்று நினைத்தான். இது குறித்துத் தருமனின் கருத்தைச் சொல்லுமாறு கேட்டான்.
தருமன் தன் கருத்தைக் கூறத் தொடங்கினான்.
“போர் என்பது விரும்பத்தக்கது அன்று; எனினும் சர்வாதிகாரிகள் திணிக்கும் போது கைமுடங்கி நாம் எப்படி அடங்கி இருக்க முடியும்? நஞ்சு என்பதால் அஞ்சிச் சும்மா இருக்க முடியுமா? அதனை நீக்க நன்மருந்து தேட வேண்டும்” என்றான் தருமன்.
“போர் புரியும் வகையே அரவுயர்த்தோன் உரைத்தி ருக்கிறான். அதற்கேற்ப நம் செயல் அமைதல் வேண்டும். மூன்று வழிகள் இருக்கின்றன. இமயமலையில் குளிர்ந்த மலைச்சாரலில் குடிசை வேய்ந்து தவம் என்ற பேரால் கண்மூடிக் கொண்டு இருக்கலாம்; அன்றி முறைப் படி தாயபாகம் கேட்டு அவன் தடை எதுவும் இன்றி “அன்புச் சகோதரர்களே வம்பு தும்பு வேண்டாம் ஆட்சி தருகிறேன்” என்றால் நீங்கள் அரசு கட்டில் ஏறி அரம்பை போன்ற அழகியர் கவரி வீசக் காற்று வாங்கிக் கொண்டு அதிகாரம் செய்யலாம். அவன் அதற்கு இசையாவிட்டால் மண்ணுக்காகப் போர் செய்து புகழ்மாலை சூட்டிப் பின் உரிய பாகத்தை அடையலாம்: இவற்றுள் எது உங்களுக்கு விருப்பம்?” என்று கேட்டான் கண்ணன்.
“நாடா காடா அது தெரியாது அமைதிக்கு வழி வேண்டும்; இருவரும் சமாதானமாக வாழ வழி செய்ய வேண்டும். இதுதான் யான் விரும்புவது” என்று தருமன் கூறினான்.
“இதுவரை அமைதிபேசி அதைச்சாதித்தவர்கள் உலகில் இருந்ததாகத் தெரியவில்லை; அப்படிப் போரைத் தவிர்த்திருந்தால் சரித்திர பாடங்களுக்கே வேலை இருக்காது; அழிவு வரும் என்று தெரியும்; தெரிந்துதான் புத்தி சாலிகள் போரைத் துவக்குகிறார்கள். இதுதான் உலக வரலாறு” என்றான் கண்ணன்.
“சுற்றத்தையும் நற்றவ ஞானிகளாகிய குருக்களையும் கொன்று நாடாள்வதைவிடக் கனியும் கிழங்கும் தின்று காடு சென்று ஒதுங்கி வாழ்வதே தக்கதாகும்” என்றான் தருமன்.
“வீரத்தைச் சோர விட்டு விடுதலை பெறாவிட்டால் நீங்கள் கோழைகள் என்று இந்த உலகம் ஏசுமே; வஞ்சினங்கள் வாய்கிழியப் பேசிவிட்டு அஞ்சினம் என்று சொன்னால் அடுக்குமோ! உலகம் எடுக்குமோ என்ன செய்வது?” என்றான் கண்ணன்.
அதற்குமேல் தருமனால் வாது செய்ய முடியவில்லை. ஏழையாக ஆவதற்குத் துணிந்தவன் கோழை என்ற பெயரை எடுக்க விரும்பவில்லை. அதனால் கண்ணனைத் தூது சென்று விடை கேட்டு வரும்படி அனுப்பினான்.
“நாடு கேள்; மறுத்தால் கேளிர் என்று கருதத் தேவை யில்லை; போரில் அவர்களை வளைத்து நம் தாளில் விழ வைப்போம்” என்றான் தருமன்,
“நாட்டு ஆசையால் நாம் கேட்டுத் தாழ்ந்தோம் என்ற பெயர் நமக்கு வேண்டாம்; நிதானம் கருதி நின்று விட்டோம் என்ற நிலைமையும் வேண்டாம்; மானம் பெரிது; நாட்டில் பாதி; அது தவிர்த்தால் ஊர்கள் ஐந்து; அதுவும் மறுத்தால்போர் தொடுத்துத் தகர்ப்பது அல்லால் விடிவு வேறு வழியில்லை” என்றான். தொடர்ந்து வீமன் இடிபட உரையாடினான்.
“வேத்து அவையில் பாஞ்சாலி கண்ணனை ஏத்தி ஒலமிட்ட நாள் வெகுளாதீர் என்று பேசி எங்களை அடக்கி வைத்தான்; அந்தப்பழிச்சொல் தீர இன்னும் பகை முடிக்க வழி காணத் தயங்குகின்றான். அரவு உயர்த்தவன் கொடுமையைவிட அறம் உயர்த்தும் என் தமையனின் அருளுக்குத் தான் அஞ்சுகிறேன்”.
“காட்டுக்கு எம்மை அனுப்பிய அக்கண்ணிலான் செல்வமகனை வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன். முடி சூட்டி முதல்வனாக என் தமையனை ஆக்கி வைக்கிறேன்” என்றான் தொடர்ந்து.
தன் தமையனின் செயல்படாத தன்மையைச் சாடி. வீடுமன் அங்கதச் சொற்களில் மேலும் அடுக்கினான்; “போர் முடித்தான்; பாஞ்சாலியின் கரிய கூந்தலை முடித்துக் கொடுத்தான். இளையவர் கூறிய வஞ்சினங்களைச் செயல் படுத்தினான். இவனைப்போல் இதுவரை யாரும் முடித்துத் தந்தது இல்லை” என்று இகழ்ச்சியாகக் கூறினான்.
“அண்மையில் வரும் சமரில் எதிர்த்துத் துரியனை இருகூறாய் ஆக்கி வென்று அரசாள்வதை விட்டு அறமும் உறவும் கொண்டாடிப் பணிந்து இருந்து புவி கேட்க விரும்புகிறான்; அடிமைத்தனம் அழகிது” என்றான்.
தருமன் வீமனைச் சமாதானப்படுத்திக் “குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை; மண்ணுக்காக மாந்தர் போரிடு வது கண்ணைவிற்றுச் சித்திரம் பெறுவது போலாகும்; நாம் வாழ வேண்டும்; பிறரையும் வாழ விடவேண்டும். அது தான் நல்லது” என்று தருமன் சாந்தப்படுத்தினான்.
“நம் கண்ணை நாமே குத்திக் கொள்ள முடியுமா? அவன் நெருங்கிய உறவினன்; அவனை வெறுப்பது அறிவுடைமையாகாது; வற்புறுத்திப் பெறுவது கீழ்த் தரமான செயல் ஆகும்” என்றான்.
வீமன் அதற்குமேல் வாதிட விரும்பவில்லை. தன் முடிந்த கருத்தைக் கூறினான். இதற்கு நம் தெய்வத்திரு மகன் கண்ணன் பாதம் சிவக்க அங்குச் செல்லவேண்டாம். என்னை அனுப்பிவையுங்கள். பாஞ்சாலி விரித்த கூந்தலை முடித்துத்தருகிறேன்; என் வஞ்சினத்தையும்படித்து உரைக் கிறேன்; அதற்கு வழி வகுத்து முடித்தும் வைக்கிறேன்” என்றான். “என் கையில் கதையிருக்கிறது அவனை வதைக்க, தம்பியின் கையில் வில் உண்டு அவன் மார்பில் அம்பு செலுத்த, நகுலன் சகாதேவன் தோள்வலி கண்டும் எதற்கு அஞ்ச வேண்டும்?” என்று மீண்டும் கேட்டான்.
“உதிட்டிரன் குடும்பத்தலைவன்; அவன் சொல்வதை உதாசீனம் செய்வது உகந்தது அன்று; முதலில் அடக்கம்; பின் தேவைப்படும்போது உன் செயல்காட்டு” என்று கூறி அவனைக் கண்ணன் அமைதிப்படுத்தி உட்காரவைத்தான்.
அருச்சுனன் அதைவிடக் கடுமையாகப் பாய்ந்தான்.
“மைக்குழலாள் மன்னர் தம் அவையில் அரற்றிய நாளிலும் அடக்கி வைத்தாய். இக்காலமும் எங்களை முடக்கி வைக்கிறாய்; எக்காலம் நாங்கள் எம் பகையை முடித்து வைப்பது” என்று கேட்டான். “மாசு படிந்த கூந்தலாள் ஆசைதீர அவர்களை அழிப்பதை விட்டு அறத்தைப் பற்றிப் பேசுவதால் என்ன பயன்? பாம்புக்கு அமுதம் தந்தாலும் அது நஞ்சைத்தான் கக்கும்” என்ற கருத்தை உரைத்தான்.
நகுலன் அதிகம் பேசவில்லை; நாலு வார்த்தை சொன்னாலும் அவை நறுக்கென்று இருந்தன.
“தூது, அறவுரை, பகைவர்பால் இரக்கம், இவை அறநெறிச்சாரம், போர்தான் முடிந்த வழி” என்று பரி செலுத்துவதில் தேர்ந்தவனாகிய நகுலன் தான் அறிந்தது கூறினான்.
சகாதேவன் அறிவு மிக்கவன்; அனைத்தும் அறிந்தவன். அடக்கம் அவனை அமரருள் சேர்த்து இருக்கிறது. மற்ற வர்களைவிட அவன் மாறுபட்டுப் பேசினான்.
கண்ணன் நடத்துவது நாடகம் என்பதை அவன் நன்கு அறிந்தவனாகக் காணப்பட்டான்.
“உன் மனக்கருத்து எதுவோ அதுவே என் மனக்கருத்தாகும்” என்று பட்டும் படாமலும் பேசி முடித்தான். பிழைக்க வழி தெரிந்தவனாகக் காணப்பட்டான். அவனைத் தனியே அழைத்து நீ விரும்பும் என் மனக் கருத்து யாது?” என்று கேட்டான். “நீ பாரதப்போரில் யாரையும் விட்டுவைக்கப் போவதில்லை; படு சாம்பல் ஆகப் போகிறது இந்த பாரதகளம்: பூபாரம் தீர்ப்பதற்கு நீ முடிவு செய்து விட்டாய். இதுதான் உன் மனக்கருத்து” என்றான்.
“பாராளக் கன்னன்; இகல் பார்த்தனை முன் கொன்று அணங்கின்
காரார் குழல் களைந்து காலில் தளை பூட்டி
நேராகக் கைப்பிடித்து நின்னையும் யான் கட்டுவனேல்
வாராமல் காக்கலாம் மாபாரதம்” என்றான்.
“கன்னனுக்கு முடி சூட்டி மன்னன் ஆக்கினால் பாரதப்போர் நின்றுவிடும்; அவன் பாண்ட வரில் மூத் தோன்; கவுரவரின் நண்பன்; அதனால் அந்தக் கதை முடிந்தது. திருப்பதிக்கு அனுப்பி வைத்துத் திருமதிக்கு மொட்டை அடித்துவிட்டால் கூந்தலைப் பற்றிப் பேச்சு எடுபடாது; துள்ளிக்குதிக்கும் அருச்சுனனை முதலில் கொன்று முடித்து விடவேண்டும். கன்னனா விசயனா என்று வீரவசனம் பேசியவர்கள் அவர்கள்; கன்னன் வாழ்ந்தான் என்றால் அருச்சுனன் வாழ இயலாது. அதனால் அவனைக் கொன்றுவிட வேண்டும்; வேறுவழி யில்லை. முடிச்சுபோட்டுச் சிக்கல்களை ஏற்படுத்தி வரும் உன் இயக்கத்தைக் கட்டுப்படுத்தினால் எல்லாம் அடங்கி விடும்” என்று தன் கருத்தை விளக்கினான்.
“முன்னம் கூறியவை அனைத்தும் நீ முடித்தாலும் என்னை நீ எப்படிக் கட்டுவாய்?” என்றான் கண்ணன்.
“அன்புக்கு ஆண்டவன் கட்டுப்பட்ட வன்; உன்னை என் தியானத்தில் கட்டுப்படுத்த முடியும்” என்றான். கண்ணனை நினைத்துத் தியானம் செய்தான், அவன் தனித்த அன்புக்குக் கட்டுப்பட்டான் கண்ணன்.
தன்னை விடுவிக்குமாறு வேண்டினான்.
“இப்பொழுது பேசிய இந்த எதிர் உரைகளை வெளியே சொல்லாமல் காக்க உறுதி அளிக்க வேண்டும்” என்றான் கண்ணன்.
“பாரதப்போரில் எங்கள் ஐவரைக் காக்க உறுதி அளிக்கவேண்டும்” என்று கேட்டு வற்புறுத்தினான் சகா தேவன்
“ஒப்புக் கொண்டேன். அன்புக் கட்டில் இருந்து விடுவிக்குமாறு கண்ணன் வேண்டினான்; மறுபடியும்அவர்கள் அனைவர் முன் வந்து தொடர்ந்து பேசினர்.
தருமன் கருதுவது போலவே அடங்கிப் போவதுதான் சிறப்பு என்று தானும் கருதுவதாகக் கண்ணன் கூறினான். சமாதானமே உகந்தது என்றான்.
பாஞ்சாலி ஒப்பாரிவைத்தாள்: கண்களில் நீர் கரை புரண்டு பேசியது; பாஞ்சாலி ‘கோ’ என்று கதறினாள். அவன் திருவடியில் விழுந்து அலறி அழுதாள்.
“கற்றைக் குழல்பிடித்துக் கண்ணிலான் பெற்றெடுத்த பார்வேந்தன் பற்றித் து கில் உரியப் பாண்டவரும் பார்த்திருந்தார்; கொற்றத் தனித் திகிரிக் கோவிந்தா நீ அல்லாமல் அற்றைக்கும் என் மானம் யார் வேறு காத்தார்?” என்று அடுக்கி அவனை உயர்த்திப் பேசி அதற்கு மேல் தன் வாதத்தை எடுத்துப் பேசினாள்.
“மன்றினில் அழைத்து எனக்கு மாசு அளித்த மன்னவர் பால் சென்று தமக்கு ஐந்து ஊர் திறல் வீரர் பெற்றிருந் தால் அன்று விரித்த அருங்கூந்தல் வல்வினையேன் என்று முடிப்பது?” என்று அழுதாள்.
கண்ணனின் தம்பியாகிய சாத்தகி அதைக் கண்டு நெருப்புக்குத் துணையாகக் காற்று வீசுவதுபோல் கருத் துகளை அள்ளி வீசினான்.
“தண்டு இருந்தது இவன் கரத்தில், தனு இருந்தது அவன் கரத்தில்; வண்டு இருந்த பூங்குழல் மேல் மாசிருந்தது என இருந்தாள்; கண்டு இருந்தீர் நீவிர் அனைவரும்; பண்டு இருந்த பகைவர்பால் ஊர் கேட்டு உண்டு இருந்து வாழ்வதற்கே பேசுகிறீர்; இது மானமுள்ள பேச்சாகப்படவில்லை” என்றான்.
கண்ணன் அதற்கு மேல் வாதங்களை நீட்டிக்க விரும்பவில்லை; அன்புத் தங்கையை அரவணைத்து ஆறுதல் கூறினான். கவலைப்படாதே உன் மகன் அபிமன்யு இருக்கிறான்; வீரமகன் அவன் வஞ்சினத்தை முடித்துக் கொடுப்பான்” என்று உறுதி கூறினான்.
தருமன் அவைக்கண் அத்துமீறல் சட்டம் காட்டி அமுது அனையவளை அடக்கி வைத்தான். பெண் அவையில் பேசுவது அனுமதிக்க முடியாது என்றான்.
“துன்று பிணியோர், துறந்தோர், அடங்காதோர், கன்று சினத்தோர், கல்லாதவர், மகளிர் என்றும் இவர் அரச ஆலோசனை மண்டபத்தில் எய்தப் பெறாதாரே” என்று கூறிப் பெண்கள் ஆலோசனை மண்டபத்தில் அனு மதிக்கத் தக்கவர்கள் அல்லர் என்று அறிவித்தான்.
இன்று அப்படிப் பேசி இருந்தால் பெண்கள் கொடி பிடித்துக் கூட்டம் கூட்டிக் கூக்குரல் இட்டு இருப்பார்கள். சமநீதி வழங்காத காலம் அது. அதனால் இவ்வாறு பேச முடிந்தது.
கண்ணன் தூது போவதற்கு இசைந்து படைகள் சில பின் தொடர அந்தினாபுரி அடைந்தான். கண்ணன் வருகிறான் என்பதை அறிந்து அரவு உயர்த்தோன் சாலைகளில் குழிகள் தோண்டி வைத்துப் போக்கு வரத்துக்கு இடையூறு செய்தான். தேர்கள் ஒழுங்காகச் சாலைகளில் போகாதபடி மாற்று வழிகளில் திருப்பி விட்டு நெரிசல் நிலையை உண்டு பண்ணினான்.
துரியன் எடுப்பார் கைப்பிள்ளையாகிவிட்டான். தடுப்பார் தடுத்துத் தடை செய்ய முடியாமல் செயல்பட்டான். அந்தஸ்தை இடையில் வைத்து அரசன் மகனை அடி யெடுத்து வைக்காமல் செய்தான் சகுனி.
“மன்னன் மகன் நீ; மாடு மேய்க்கும் சின்ன குலத்தவன் அவன்; நீ சென்று வரவேற்பது இந்த பாரத மண்ணில் இல்லாத பழக்கம். உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற உத்தமமான பேதம் இருக்கும் வரை அதை நீ காப்பாற்றித்தான் தீரவேண்டும்” என்றான்.
மாமன் சொல்வதிலும் மதிப்பு உண்டு என்று அதிகார பூர்வமான அழைப்புத்தர மறுத்து விட்டான். அவையிலே சென்று அவன் வருகைக்காக முன் சென்று காத்திருந்தான். மன்னர்கள் கூடி இருந்தனர் கொலுப் பொம்மைகளாக.
இதற்கு இடையில் வில் விதுரன் இல் நோக்கி வரவேற்பு இல்லாமல் உள் நுழைந்தான் துவரைக் கோமான். எதிர்பார்க்கவில்லை; ஆனால் எதிர் கொள்ளத்தயங்க வில்லை. வந்தவன் கருமுகில்வண்ணன் நெடுமால் என்பதை உணர்ந்து விதுரன் பக்தியில் ஆழ்ந்தான். ‘என்ன மாதவம் செய்தது இச்சிறு குடில்’ என்று நாத்தழும்ப நாரணனைப் பாடி வரவேற்றான்.
“முன்னமே துயின்று அருளிய பாற்கடலோ! ஆதி சேடன் ஆகிய படுக்கையோ! பச்சையாலிலையோ, நால் வகைச் சுருதியோ! நீ இங்கு வருவதற்கு என்ன மாதவம் செய்தது இச்சிறுகுடில்!” என்றான்.
கண்ணனுக்கும் அவனுடன் வந்திருந்த தானைப் பெருவீரர்களுக்கும் நல்விருந்து நல்கினான்.
உண்டு களைப்பு நீங்கியதும் சாய்வு நாற்காலி கண்டு அதில் ஒய்வு கொண்டிருந்தான்.
‘நீ இங்குத் தனித்து வந்தது ஏன்?’ கேட்டான் விதுரன்.
“ஐந்து பேர் அவரும் உன் மைந்தர்கள் தாம். அவர்கள் குந்தி இருக்கக் குடிசை கேட்டு வந்தேன்” என்றான்.
“அடியாத மாடு படியாது; அடித்துத்தான் காயைப் பழுக்க வைக்க முடியும்” என்றான் விதுரன்.
“தானாகக் கணிகிறதோ” என்று பார்க்க வந்தேன்.
மறுநாள் கண்ணன் கடமையை முடிக்கக் கண்ணில்லாதவன் மைந்தனாகிய துரியனின் அவைக்கு வந்தான் வீடுமன், துரோணன், கிருபன், மற்றும் உள்ள பெரிய மனிதர்கள் சிறுமை பாராட்டாது அவனை வரவேற்பதில் பெருமை காட்டினர். கூசி ஒடுங்கிய சகுனியும் கன்னனும் கூனிக் குறுகித் தலை கவிழ்ந்தனர். துரியன் ‘வருக’ என்று கூறவும் வாய்வராமல் தவித்தான். இடம் இருந்தது; இருக்கை பெற்றான்.
“வர்க்கபேதம் பாராமல் விதுரன் வீட்டுக்குச் சென்றது ஏன்?” என்று துரியன் கேட்டான்.
“பேதம் என்பது வேதம் கற்ற எவருக்கும் ஏற்பட வாய்ப்பு இல்லை; உன்வீடு என் வீடு; நான் கேட்க வந்தது நாடு; இங்கே உன் வீட்டில் சோற்றை உண்டு அதன்பின் உன்னைப் பார்த்துக் குரைக்காமல் இருக்க முடியுமா” தூதுவனாக வந்த யான் ஏதிலன் ஆகிய விதுரன் இல்லில் தங்கினேன்” என்றான்.
“சரி! வந்த செய்தி யாது?” என்று வினவினான்.
“சொல்லித் தெரிய வேண்டியது இல்லை மன்மதக் கலை; தெரிந்தும் சொல்லவேண்டி உள்ளது அரசியல் கலை”.
“குருகுலத்தில் பிறந்த மைந்தர்க்கு உரிய நாடு கொடு; அதை மறுத்தால் அலர்கள் வாழ ஐந்து ஊர் விடு; அதற்கு நீ சொல்லி வரும் கெடு யாது?” என்றான்.
“ஐந்து ஊர் மட்டும் அல்ல; ஐந்து ஒட்டை வீடுகளும் அவர்களுக்கு இல்லை. காட்டில் வாழ்ந்தவர்கள் அந்தக் காட்டுமிராண்டிகள் நாகரிக உலகில் வாழத் தகுதி இழந்து விட்டனர்” என்றான்.
“வழி இல்லை; ஒரு படி ஏற வேண்டியது தான்” சங் கீதம் ஆரோகணத்தை நோக்கிச் சென்றது.
“உருப்படியாக ஏதாவது சொல்ல முடியுமா? “ என்றான் கண்ணன்.
“படிப்படியாக நீங்களே இறங்கி வந்து விட்டீர்களே”
“ஒருபடி அவர்கள் உயர்ந்து நின்று உங்களை அடித்து நொறுக்கி அடிபணிய வைப்பார்கள்; அவர்கள் சொற்படி உங்களைக் கீழ்ப்படிய வைப்பார்கள்; உமக்குப் பாடம் கற்பிப்பார்கள்” என்றான்.
உருத்து எழுந்தான் துரியன்;தன் கருத்தை இழந்தான். “சந்திப்போம் படுகளத்தில்” என்று போருக்கு உறுதி தந்தான். “கைபோட்டுக் கொடு; அது தான் வீரத்துக்கு அழகு” என்றான் கண்ணன்.
“பால் கறக்கும் கையில் கோல் பிடிக்கும் கை படுவது மரபுக்கு இழுக்கு” என்றான் துரியன்.
“கோல்பிடிப்பதில் நம் இரு சாதிக்கும் வேறுபாடு இல்லை; அந்த வகையில் நாம் சமம் தான்” என்று சிரித்துப் பேசினான்.
“ஞால முற்றும் இனிப் பாண்டவர்க்குத் தான்” என்று சொல்லிவிட்டு, வணக்கம்; வந்தே மாதரம் பாடி முடித்தான்.
கண்ணன் கண்ணில் மறைந்ததும் ஒண்டிக் குடித்தனம் செய்து கொண்டிருந்த அரசியல் துறவியாகிய விதுரனை விளித்து, “என் பகைவனுக்கு நீ எப்படி இடம் அளித்தாய்?” என்று கடு கடுத்தான்.
“தாசிமகன் நீ; அதனால் காசு கிடைக்கும் இடத்துக்கு முந்தானை விரித்தாய்; என் முகத்தில் விழிக்காதே” என்றான்.
சிற்றப்பன் என்றும் பாராமல் சிறுமை பேசினான். பேசிய அந்த அற்பனை எதிர்த்து விதுரன் வஞ்சின மொழி கூறினான்.
“நல்லது செய்ய நினைத்தேன்; நீ அல்லது செய்து அழிகிறாய்”
“அழிவுக்கு வழிகோலும் உனக்கு யான் இனிவழிப் பாதையாக இருக்க மாட்டேன்” என்று தன் கை வில்லை முறித்துப் போட்டான். அவை நடுங்கியது: “வில் வீரன் விதுரன் விடுதலை பெற்றுவிட்டால் விசயனின் வில்லுக்கு யார் இனி எதிர் நிற்க முடியும்” என்று கதி கலங்கினர்.
“அவையில் முற்பட்டுப் பேசிப் பழக்கப்பட்டுக் கவைக்கு உதவாத பேச்சு தரும் கன்னன் “விபீஷணன் போய் விட்டதால் இராவணன் வீரம் குன்றியதில்லை; கும்ப– கருணன் நான் இருக்கிறேன். கடமை முடித்துக் கொடுக்க” என்று கனன்று பேசினான்.
மண் குதிரை அவனை நம்பிக் கண் கெட்டவன் மகன் துரியன் பெருமிதம் கொண்டான்; “செஞ்சோற்றுக் கடன் மறவாச் சிலைவீரன் கன்னன் இருக்கும் போது வெறுஞ் சோற்று வீணன் விதுரன் போனால் என்ன?” என்று கூறி அவையைக் கலைத்தான்.
விதுரன் வீட்டுக்கு வந்த கண்ணன் அவனோடு சதுர மாகப் பேசிச் சதிர் விளையாடினான். கருத்துள்ள மொழி களைக் கல்வி வல்ல விதுரன் வாயில் இருந்து வரவழைத்தான்.
“வில் உம்மை என்ன செய்தது? அதனோடு விளையாடினர் என்ற சொல் கேள்விப்பட்டேன்” என்று கூறி அவனைச் சீண்டினான்.
“ஆகுவது கருதாவிட்டால், அமைச்சர் சொல் கேளா விட்டால், அழிவது சிந்திக்காவிட்டால், விளைவதை உணராவிட்டால், நாவது காக்காவிட்டால் அவனுக்காக ஒருவன் சாவது பழுதாகும்” என்றான் விதுரன்.
தன்னைப் பிரித்துப் போர்க்களம் போகா வண்ணம் செய்துவிட்ட சூழ்ச்சியை விதுரனால் உணர முடியாமல் போய்விட்டது. கண்ணன் புகழ் மொழி அவனைக் கோழையாக்கி விட்டது. படித்தவர்கள் பேசுவார்கள்; செயல்படப் பின்வாங்குவார்கள் என்பதற்கு விதுரன் ஒர் எடுத்துக்காட்டாக அமைந்தான். தவறு என்றால் துரி யனைக் கண்டித்து இருக்கவேண்டும். தன்னை இகழ்ந்தான் என்பதால் உணர்ச்சி வசப்பட்டு நாட்டு நலனை மறந்தான். அதே அவைக்களத்தில் துரியனை எதிர்த்துத் தாக்கித் தான் அங்கேயே மாண்டிருந்தால் பாரதமே வேறு விதமாக மாறி இருக்கும். அறிவாளிகள் என்றுமே அரசி யலுக்குப் பயன்பட மாட்டார்கள். என்பதற்கு அவன் விதி விலக்கு ஆகவில்லை. கடமையிலிருந்து தப்பித்துக் கொள்ள அவனுக்கு வழி கிடைத்தது. விதுரன் விலக்கப் பட்டான்.
குந்தியின் மனையில் கண்ணன்
வெளியுலக வேதனைகள் எதுவும் இன்றி வேந்தன் அரண்மனையில் புகலிடம் சென்ற பாண்டவரின் அன்னை குந்தியைக் கண்ணன் சென்று சந்தித்தான். கானுறை மைந்தர் தம்மைக் கண்ணுறக் கண்டது போல் அவள் மகிழ்ச்சி கொண்டாள்.
“வந்தது ஏன்?” என்று நேர் உரை கேட்டாள். நடந்தது கூறினான்; நடக்க இருப்பது பற்றிப் பேசினான்.
அமர் வந்தால் அவள் தமர் என்ன ஆவார் என்பதை எடுத்துச் சொன்னான். அவள் பெற்ற முதல் மகன் கன்னன்தான் என்பதைச் சுட்டிக் காட்டினான்.
“நாளை நடக்கப் போகும் போரில் கன்னனும் காளை அருச்சுனனும் போர் முனையில் மோதப் போகின்றனர். இருவரில் ஒருவர் சாவது உறுதி. அருச்சுனனோடு மற்ற நால்வரும் மாளுவது திண்ணம். இச்செய்தியைச் சொல்லி ஒருவனையா ஐவரையா யாரைப் பலியிட விரும்புகிறாய்?” என்று கேட்டான்.
அழுவதைத் தவிர அறிவுள்ள கருத்து எதுவும் சொல்ல இயலவில்லை. ஒருவன் கதிரவன் மகன்; மற்றவன் இந்திரனின் மகன். இருவரில் யாரை இழப்பது? அதனைத் தன்னால் முடிவு செய்யமுடியாமல் கலங்கி நின்றாள்.
“பாரதப்போரில் கன்னன் தன்னிடம் அடைக்கலம் வந்த அசுவசேனன் என்ற பாம்பை அத்திரமாக ஏவுவான்; அதனை மறுமுறை விடவேண்டாம் உன்று அறிவுரை கூறுக” என்று அவளிடம் சொல்லிவிட்டு விடைபெற்று விதுரனின் மனை திரும்பினான்.
“ஆரம்பத்திலேயே அவன் முகவரியைத் தந்திருந்தால் தம்பியரோடு சேர்த்து இருக்கலாமே” என்று வருந்தினாள். கன்னனை இழப்பது தவிர அவளுக்கு வேறுவழியில்லை. பால் திரிந்துவிட்டால் இனி அதுபயன்படாது; தாக்கி எறிய வேண்டியது தான். வயிரம் பாய்ந்த மரத்தை வாள் கொண்டு வெட்டுவது சிரமம்; உயிரையே துரியனுக்குத் தர இருக்கும் வயிரக் குன்றை அசைக்க முடியாது: அவன் பகைவருக்குத் துரணாகி விட்டான். துணுக்குச் சுமக்கத் தெரியுமே அன்றிச் சுமையை எறியத் தெரியாது. சுமை தாங்கியாகிய கன்னனைப் பல்லக்கு ஏறச் சொன் னால் அவன் பழைய பல்லவியையே பாடுவான். துரியன் தனக்குச் செய்த நன்மைகளைப் பாராட்டி ஒரு இதழே வாசித்துக் கொடுப்பான்.
“யாரும் அறியாத என்னைத் தேரும் பேரும் கொடுத்து அங்க நாட்டின் அதிபதி ஆக்கினான். துரியன் அவன் நட்புக்கு அரியன். போருக்குச் சிறியன்; அவனை விட்டு விலகுவது அறியேன்” என்று இலகுகனித வாய் பாட்டை ஒப்புவிப்பான். அதனால் உண்மையைச்சொல்லி உளறு வாயளாக ஆக அவள் விரும்பவில்லை. கண்ணன் சொற்படியே நடப்பதாகத் திண்மையாக உறுதி தந்தாள். அத்தை மடி மெத்தையடி என்று பாடிக் குழந்தையாக இருந்தபோது மகிழ்வித்த கண்ணன் தன் மெத்தைப்படி ஏறி அவள் சித்தத்தை மாற்றி ஒரு கலக்கு கலக்கிவிட்டான்.
அதற்குள்ளாகத் துரியனின் அவையில் கூடிப்பேசி துரிதமாகத் திட்டங்கள் தீட்டப்பட்டன.
கண்ணனைத் தீர்த்துக் கட்டுவது என்பது பற்றி வேர்த்துக் கொட்டிய துரியன் ஒரு கூட்டத்தைக் கூட்டினான். வீடுமனைத் தவிர மற்றைய பேடிகள் அங்குக்கூடிப் பேசிக் கண்ணனைக் குழி தோண்டிப் புதைப்பது என்று முடிவு செய்தனர். சகுனியும் துச்சாதனனும் இதில் பெரும் பங்கு ஏற்றனர்.
தனித்து வந்திருக்கும் கண்ணனை உண்டு இல்லை என்று பார்த்து ஒரு முடிவு செய்துவிட்டால் பின் தொடர்ந்து செயல்பட எந்த மண்டுவும் வரமாட்டான். அதனால் அவைக்கு அழைத்து அவனுக்கு வேட்டு வைத்தியம் தருவதே பாடம்; அதுவே படிப்பினை” என்றான் துரியன்.
“புலி வலையில் பட்டால் விடுவரோ வேட்டுவர் ஆனோர்; அழித்து அழிவு காணச் சேனைகளை ஏவுக” என்றான் குருட்டுத் தந்தை திருதராட்டிரன்.
இருட் டில் தோன்றிய ஒளி விளக்கு என்று கூறும்படி நாட்டுக்கு இப்படி நல்லவர்கள் உதிப்பதும் உண்டு என்பதைக் காட்டத் துரியனின் கடைசித் தம்பி விகர்ணன் இதைத் தடுத்துப் பேசினான். தூதுவனைக் கொல்வது தவறு என்பதைச் சுட்டிக் காட்டினான்.
“மூத்தவர், இளையோர், வேத முனிவர், பிணியின் மிக்கோர், தோத்திரம் மொழிவோர். மாதர், தூதுவர் இவர்க்கு ஊறு செய்யார்” என்று சாத்திரம் காட்டிப் பேசினான்.
“அரை வேக்காடு நீ; உன்னை யார் உள்ளே விட்டார்கள்” என்று சீறிய குரலில் அண்ணன் துரியன் அவனை அடக்கி வைத்தான்.
நச்சு அரவம் ஆகிய துச் சாதனன் அதனை ஆமோதித்துப் பேசினான்.
சிறியன சிந்தியாத கன்னன் அதற்கு இசையவில்லை. கண்ணனைத் தானே நேரில் சென்று வளைத் துப்பிடித்து அழிப்பது எனக் கூறிச் சிலம்பம் பேசினான்.
கூட இருந்து குழி தோண்டிப் பழகிய மாமன் சகுனி ‘கண்ணனை எதிர்க்கும் வல்லமை யாருக்கும் இல்லை’ என்றான். கூறியவை எல்லாம் புகழ் சேர்க்கும்; புண்ணியம் சேர்க்கும்; கண்ணியம் சேர்க்கும்; ஆனால் நண்ணியது அடைய முடியாது. அதற்குத் தேவை இல்லை. என்றும் சொல்லி அவன் சார்பில் புதிய சாதனை ஒன்று கூறினான்.
‘தரையில் குழி ஒன்றுதோண்டிக் குந்தியின் மருமகனை மேலே திரையிட்டுக் கீழே அறையிட்டு அதில் விழவைத்துப் பிடிப்பதே அறிவுடமை’ என்றான்.
“கொலைக்கு அஞ்சாத கொடுமையாளரைக் குழியில் வைத்துத் தடுக்கி விழும் கண்ணனை எதிர்த்துக் குத்திக் கொலை செய்து ஒழிக்க வேண்டும்” என்றான். குறுக்கு வழியில் சறுக்குமரம் ஏறிச் சரியும் பழக்கமுடைய துரியன் மாமன் பேச்சுக்கு மதிப்புத் தந்து “ஆமாம் அதுவே செய்க” என்று ஆட்களிடம் ஏவினான்.
மல்லர்களும், மடையர்களும், குத்துக்கோல் வீரரும், படியாத அடியாட்களும் மனை அடியில் பதுங்கி நின்று கண்ணனை அமுக்கிப்பிடிக்கக் காத்துக் கிடந்தனர். நில வறை ஒன்றை அமைத்து மூங்கில் பிணிப்பினால் மேலே முடித்தரையில் ஆதனம் அதன் மேல்வைத்து யாதவன் வருகைக்கு வஞ்சக்ர் அனைவரும் காத்து இருந்தனர்.
விடைபெற்றுச் செல்ல விடையன்ன நடையனாகிய கண்ணன் அரச அவையில் நுழைந்தான். தடையின்றி அவனை மட்டும் விடுத்து ஏனைய சேனைகளைத் தடுத்து நிறுத்தினர்.
வரவேற்பு இகழ் வாசித்தளித்து வந்தவனை உவந்து முகம் மலர உள் வரச் செய்து அகம் மலர ஆதனத்தில் அமர வைத்தனன். சதுரர்கள் சேர்ந்து சமைத்த நில வறை போல அறைகளும் படை வகைகளும் உள்ளே பதுக்கி வைத்திருந்தான். எதிர்பார்க்கவில்லை அதிர் வேட்டுக் கிளம்பும் என்று. வீரர்களும் சூரர்களும் கண்ணனின் விசுவரூபம் கண்டு குலை நடுங்கினர். அலை அலையாக மோதி அழிவு பெற்றனர். ஆலகால நஞ்சைக்கண்டு நடுங்கிய அமரரின் நிலையை அந்தகன் மைந்தரும் வந்திருந்த பேரறிஞரும், கண்ணனும் துரியனும் அடைந்தனர்.
“கண்ண! பொறுத்தருள்; மணிவண்ண பொறுத்தருள்: திண்மை இல்லாத தீயவர் செய்த பெரும் பிழை பொறுத்தருள்” என்று கூறிக் கண்ணனின் மலர் அடிகளில் விழுந்து வணங்கி வேண்டினர்.
கங்கை மகனாகிய வீடுமனும், கதிரவன் மகனாகிய கன்னனும், அம்பிகை மகனாகிய திருதராட்டிரனும், அவன் மனைவி காந்தாரி பெற்ற நூற்றுவரும் மற்றும் இருந்த மன்னர்கள் அனைவரும் எழுந்து நின்று கண்ணனிடம் தங்கள் பிழையைப் பொறுத்தருள்க என்று கூறி வேண்டினர்
“நினைத்தால் எதையும் முடித்து விடும் ஆற்றல் எனக்கு உண்டு; மற்றும் படை எடுக்காதே என்று தொடை நடுங்கியாகிய துரியன் என்னை முன்னே வந்து வேண்டிக் கொண்டான், பஞ்சவர்கள் கூறிய வஞ்சின மொழிகள் வேறு உள்ளன; அவை உங்களை அழிக்கக் காத்து இருக்கின்றன. என் கரத்தில் இரத்தக் கறைபடிய நான் இங்கே குறைபட வேண்டியதில்லை எனக் கூறிச் சீற்றம் கொள் சிங்கமென முழங்கித் தன் பேருருவை அடக்கிக் கொண்டு தீராத விளையாட்டுப் பிள்ளையாகச் சிரித்து அந்த இடத்தை விட்டு நீங்கினான் ஆயர் குலக் கோமகன்.
அவன் ஏவிய முதல் அம்பு விதுரனை விலக்கியது. அடுத்துக் கன்னனிடம் பாய்ந்தான். தனியே அழைத்து அவன் பிறப்பு வரலாற்றை அவன் செவியில் ஒதினான். அவன் நம்பத் தயாராக இல்லை; நம்பாமலும் இருக்க முடியவில்லை. விதைகள் தூவப்பட்டன; மழை நீர் படும் போது தானாகப் பசும் பயிர் வளரும். பயனும் தரும் என்று கண்ணன் அவனை விட்டு நீங்கினான்.
அடுத்த சந்திப்பு அசுவத்தாமனோடு; எங்கேயோபோய்க் கொண்டிருந்தவனை “ஏன் அடாபணப்பையைக் கீழே போட்டுவிட்டாயே” என்றால் திரும்பிப் பார்க்காமல் இருக்கமாட்டார்கள்; அதுபோலக் கண்ணன் கைதட்டி அழைத்தான்; மார் தட்டிப் போர் செய்யும் அவ்வீரன் யார் அழைத்தது என்று அறிந்து அருகே சென்றான்.
“இதோ பாரு நீயே சாட்சி, போருக்கு வரத் துரியன் வீரம் பேசி இருக்கிறான்; நாளை இல்லை என்று சொல் வான் நீயே காட்சி” என்றான். அவன் உச்சி குளிர்ந்து விட்டது அவனைப் பெரிய மனிதனாக மதித்துப் பேசிய தால.
கையில் இருந்த மோதிரத்தை வேண்டுமென்றே கண் ணன் தவறவிட்டான். ஐயோ பாவம் என்று அதை எடுத்துக் கொடுத்தான். “ஊர்க்கோள் சூரியனைச் சுற்றுகிறது” என்றான். வானத்தை அண்ணாந்து பார்க்க வைத்தான்.
பின்னர் சிரித்துப் பேசி “நீ போய் வா” என்றான். இதைத் தூர இருந்த துரியன் தீர விசாரிக்காமல் அவசர முடிவுக்கு வந்தான்.
பாண்டவர்க்குத் தான் துணை என்று அவன் சத்தியம் செய்ததாகக் கற்பித்துக் கொண்டான். “வலியச்சென்று மண்ணையும் விண்ணையும் சாட்சி வைத்து மோதிரம் தொட்டுச் சூள் உரைத்தான். அதனால் அவன் நம்பத் தகுந்தவன் அல்லன்” என்று கருதிவிட்டான்.
அரச அவையில் அவனைக் கண்டித்துப் பேசினான். துரியனின் நம்பிக்கையை இளம் வீரன் அசுவத்தாமன் இழந்துவிட்டான். படைத்தலைமை அவனுக்கு இல்லை என்று பறை சாற்றிப் பலர் அறிய அவனை ஒதுக்கினான்.
பிரித்து வைக்கும்திறன் கண்ணனுக்குக் கைவந்த கலை யாக இருந்தது. விதுரனைப் பிரித்தான்; சதுரங்கம் ஆடி– னான். சாதனை செய்தான்; கன்னனைப் பிரிக்க விதைகள் துரவினான்.
அசுவத்தாமன் அவன் வீசிய வலையில் சிக்கித் திக்கு முக்காடினான்; அதற்குப் பிறகு தொடர்ந்து கன்னனை முடிக்க இந்திரனை அழைத்தான்.
விதுரன் மனையில் இருந்து கொண்டு அழைப்பு விடுத்து அவனை வரவழைத்தான்.
“பெற்றால் மட்டும் பிள்ளையா? அவனைக் காப்பது உன் கடமை இல்லையா” என்று புதிர் ஒன்று போட்டான்.
எதிர் ஒன்றும் பேசாது விதிர்ப்பு அடைந்து விளக்கம் கேட்டு வினயமுடன் நின்றான்.
“கன்னன் கதிரோன் மைந்தன்; அவன் அதிரத் தாக்கி னால் விசயன் வெற்றியை இழப்பான்; அதோடு அவன் வாழ்வும் அத்தமனம் ஆகும்” என்றான்.
“ஐயா! என் மகன் உயிர் தப்ப வழி உண்டா? இருந் தால் இயம்புக” என்றான்.
“கன்னன் மார்பில் கவசமும், காதில் குண்டலமும் அணிந்திருக்கும் வரை அவனை அவனியில் யாரும் அழிக்க இயலாது” என்றான்.
“யானும் என் மகனுக்கு அந்தக் கவசம் குண்டலம் மண் தலத்தில் விற்பனைக்கு எங்கிருந்தாலும் வாங்கித் தருகிறேன். கவசம் இருக்கும் இடம் அவசியம் உரை” என்று கேட்டான்.
“கடையில் வைக்கும் அங்காடிப் பொருள் அல்ல அவை; அங்கதேசத்து அதிபதி அவன்; அவன் பிறக்கும் போதே உடன் தோன்றியவை. அவை இரவி தன் மகனுக்கு விரும்பி அளித்தவை. அவற்றை இரந்து நீ பெற்றால் இருள் அவனை வந்து சூழும். அவன் ஒளி நீங்கும். அவனை எளிதில் உன் மகன் வெல்வான்” என்றான்.
“அந்தண வடிவத்தில் சென்று கேட்டால் எதுவும் கூறி மறுக்கான்; கேட்ட அதற்காக உன்னை வெறுக்கான்” என்றான்.
முதிய வடிவம் கொண்டு உதய குமரனிடம் பிச்சை கேட்கச் சென்றான்.
கொடுத்துச் சிவந்தவை அவன் கைகள்;அடுத்து இவன் கேட்ட போது தடுத்துப் பேச அவன் நா எழவில்லை.
“கேள் நீ; எனக்குக் கேள் நீ” என்றான். “கவசமும் குண்டலமும் போட்டுப் பார்க்க விரும்பினேன். ஒளி மிக்க அணிகள் மணிகள் அவற்றைக் கேட்டுப் பெற வந்தேன்” என்றான்.
“இல்லை என்ற சொல்லை எப்படி எழுதுவது என்பது மட்டும் நான் கற்கவில்லை” என்றான்.
“தருகிறேன்” என்று நீர்த்தாரை வார்த்துக் கொடுத் தான். வானத்து அசரீரி குரல் எழுப்பித் தடுத்துப் பார்த்தது. “வந்தவன் அந்தரத்து அரசன் இந்திரன்” என்றும், “அடுத்துக் கெடுக்க அணுகியுள்ளான்” என்றும் குரல் எழுப்பியது.
“கார்த்திகைக்குப் பின்னால் மழையும் இல்லை; கன் னனுக்குப் பின்னால் கொடையும் இல்லை” என்று வான் புகழ் பெற்றுவிட் டான்.
இந்திரன் அவனைப் பாராட்டி ஈட்டி ஒன்று பரிசாகத் தந்தான். அதைத் தன் மகன் மார்பில் எய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டான். கடோற்சகனே அதற்கு இலக்கு என்று சொல்லிக் கொடுத்தான். பதவியில் இருப்பவர் பாரபட்சமாக நடந்து கொள்வதால்தான் நீதியும் நேர்மையும் குறைகின்றன என்பதற்கு இந்திரன் எடுத்துக் காட்டாக விளங்கினான்.
வெட்கம் கெட்டு அந்தப் பரிசை வாங்கிய கன்னனும் தன் நிலையில் தாழ்ந்து விட்டான். கொடுக்கத் தெரிந் தவன் கேட்டுப் பெறுவதிலும் தன் பெருமையைக் காட்டி இருக்க வேண்டும். அவ்வகையில் அவன் மிகவும் தாழ்ந்து விட்டான். தெய்வம் என்பதால் எதுவேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைத்துவந்த காலமாக அது இருந் தது. இந்தத் தேசத்தின் சாபக்கேடே இதுதான் என்பதை அவன் செயல் காட்டியது. பதவியைத் தவறாகப் பயன் படுத்தும் அரசியல் தலைவர்கள் தாம் முதல் எதிரிகள் இந்த தேசத்துக்கு என்பதை இந்திரன் செயல் எடுத்துக் காட்டியது.
கன்னனும் குந்தியும்
பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ என்று இராம காதை காதற் சந்திப்பைப் பற்றிக் கூறும்; தாய் சேய் சந்திப்பை அப்படிக்கூற இயலாது. பாலூட்டி வளர்க்க வேண்டிய மகனை அப்பால் விட்ட அன்னை அவனை மார்பிறுகப் புல்லி அந்த வயதில் பாலைக் குடிக்கச் சொல்லி அவன் தலையில் தட்டத் தவித்து நின்றாள். அவன் அவளைப் பெற்ற தாய் என்று உறுதி செய்ய முடியாமல் பாசம் காட்ட முடியாமல் திகைத்தான். எனினும் பாண்டவரின் தாய் என்பதால் அவளுக்கு உரிய மரியாதை தந்து வரவேற்றான். கன்னன் ஏற்கனவே துரியனை அவைக்களத்திலேயே சந்தித்து அவன் பிறப்பு வரலாற்றை எடுத்துரைத்தும் அவன் அதை நம்பத் தயாராக இல்லை. கண்ணனின் சூழ்ச்சிகளில் இது ஒன்றாகும் என்று நினைத் தவனாய் அவளைத் தாய் என்று ஏற்கத் தயக்கம் காட்டினான்.
“பெற்றவள் நான்தான்” என்று கற்று அறிந்தவனாகிய கன்னனிடம் எடுத்து உரைத்தாள்.
பசையற்று ஆற்றில் விட்டவள் என்று அவன் அடி மனம் அவனிடம் அடித்துப்பேசியது.
கண்ணனின் சூழ்ச்சியாக இருக்கும் என்று யோசித்தான்.
பெற்றவள் என்னை ஆற்றில் விட்டாள். அதோடு அவள் கட்டியிருந்த சேலையையும் அடையாளத்துக்கு வைத்தாள். அதைக் கட்டும் பொய்யர்கள் மெய் வெந்து சாவர். இதுவரை இறந்தவர்கள் பலபேர்” என்றான்.
“நீயும் சாகத் துணிந்துவிட்டாய் தடுக்க முடியாது. வைத்திருக்கிறேன்” என்று கூறி அந்தப் பட்டுத் துகிலைக் கட்டிக்கொள்ள முன் வைத்தான்.
அதைக் கட்டிய அம்முதியவள் ஆண்டுகள் பல பின்னோக்கி நடந்தாள். இளமைக் கோலத்தில் அவன் முன் நின்றாள்; பாசம் இருவரையும் பிணித்தது.
பேய் என்றாலும் தாய் என்று வந்தால் அவள் தெய்வம் ஆகிவிடுகிறாள் என்பதை உணர முடிந்தது.
அவன் அவளைப் பார்த்த பார்வையில் கேள்விகள் பல அடங்கி இருந்தன.
“எப்படியம்மா மனம் வந்தது பெட்டியில் வைத்து ஆற்றில்போட, தேர் ஒட்டி என்னை எடுத்து வளர்க்கா விட்டால் ஏர் ஒட்டிக்கொண்டு உழுது கொண்டு இருப்பேன். இல்லாவிட்டால் அடையாளம் தெரியாமல் அநாதை இல்லத்தில் வளர்க்கப்பட்டுக் கிடப்பேன். தார் வேந்தன் துரியன் என்னை அங்கத நாட்டின் அதிபதியாக்கினான். தம்பியரைவிட என்னிடம் அதிக தயவு காட்டினான். எனக்கு மணிமுடி சூட்டி மகுடம் தந்து அகிலம் மதிக்க வைத்தான். நட்புக்கு அவன் சிறந்த எடுத்துக் காட்டு. அவன் மனைவியுடன் யான் தனித்துக் காய் வைத்துச் சூது ஆடினேன். சூதுவாது தெரியாத அந்த மாது அவன் வந்த போது வெடுக்கென்று எழுந்தாள். அரைகுறை ஆட்டத்தில் நிலைகுலைந்து எழுகிறாள் என்று எண்ணி அவளை ஆடச் சொல்லி ஆடையைப் பிடித்து இழுத்தேன். ஆடையில் இருந்த மணிகள் நிலத்தில்விழுந்து சிதறின; சிதறிய முத்துக்களை எடுக்கவோ கோக்கவோ என்று கேட்டான் துரியன். அவன் மனைவி பதறிப்போன நிலையில் இந்த வினாவை உதிர்த்தான். அவன் அந்தரங்க சுத்தி அவதூறாக என்னைக் கருதவில்லை. செஞ்சோற்றுக் கடன்பட்டிருக்கின்ற என்னை என் தம்பியருடன் மீட்டுச் சேர்க்கலாம் என்று இப்பொழுது வந்திருக்கிறாய். அது எப்படி முடியும்? ஆளப் பிறந்தவர்கள் அவர்கள் என்றால் மாளப் பிறந்தவன் யான் ஆவேன்” என்றான்.
“தம்பியருக்குத் தலைமை தாங்கு, தரணிக்கு ஆவாய் நீ வேந்து” என்றாள்.
“வம்பு நீ சொல்வது; அவர்கள் தரும் ஆட்சியை என் நண்பனுக்குத் தந்து அவன் அடியில் வைத்து விழுந்து காணிக்கை யாக்குவேன். அதுதான் நடக்கும்” என்றான்.
“ஆகுவது ஆகுங்காலத்து ஆகும்; போகுவது யார் தடுத்தாலும் போகும்; காலம் கடந்துவிட்டது, ஞாலம் எப்படி இயங்கும் என்று கூற முடியாது. வேறு எதுவாயினும் கேள்” என்றான்.
தேள் கொட்டியதுபோல் இருந்தது; வாள் கொண்டு போழ்ந்த நெஞ்சத்தில் குருதி சிந்தத் தான் சொல்ல வந்த செய்தியைச் செப்பினாள். அதற்கு அவன் சொன்ன விடை இது.
“கருத்த மேகங்கள் வானைச் சூழ்ந்துவிட்டன; இனி வையகத்தில் இருள் சூழ இருக்கிறது; இடியும் மின்னலும் சேர்ந்து ஒலிக்கவும் ஒளிதரவும் போகின்றன. தீமை அழியும், நன்மை தழைக்கும்; போரைத் தடுக்க முடியாது; அறுவடைக்குக் காத்திருக்க வேண்டியது தான்” என்று கூறினான்.
“போருக்கு என்றே பிறந்த உங்களைப் பாருக்குப் பயன்படப் பெற்றேன். உயிர் உமக்குத் துச்சமாக இருக்கிறது. அதை உகுப்பது எப்போது என்று காத்துக் கிடக் கிடக்கின்றீர். வாழப் பிறந்தவர்கள் என்று உங்களை தெய்வங்கள் படைக்கவில்லை. உலகில் அறம் தழைக்க உங்களை இழக்கத்தான் போகிறீர்கள். ஒன்று கேட்க விரும்புகிறது இந்தத் தாய் மனம்; அதனை வரம் என்று கொண்டாலும் சரி அல்லது உளறல் என்று தவிர்த்தாலும் சரி";
“அசுவசேனன் என்னும் அரவு அருச்சுனனின் ஆவியை வாங்க உன்னிடம் தாவி வந்துள்ளது. ஒரு முறை ஏவிய அது தவறினால் மறுபடியும் ஏவுதல் வேண்டாம்; தவிர்க்கவும். அடுத்த தம்பியர் நால்வரையும் உயிர் தொடுவது இல்லை என்று எனக்கு உறுதி தருக” என்றாள்.
“இதில் தருவதற்கு எதுவும் இல்லை; வீரன் சாவை ஒரு முறைதான் சந்திப்பான். அதே போல் ஓர் அம்பை ஒரு முறைதான் தொடுப்பான். எளியவரைக் கொல்வதில் எனக்குப் பெருமை இல்லை. அருச்சுனன் என்னைக்கொன் றான் என்றால் அவனுக்குப் பெருமை; அவனால் எனக்கும் பெருமை. அதுபோல அவனை நான் கொன்றால் இருவருக்கும் பெருமை சேரும்; கதிரவன் மைந்தன் ஒளி குன்றும் செயல்களைச் செய்யான்” என்று உறுதிதந்தான்.
குந்தி புறப்பட இருந்தாள்; அவளை நிறுத்தி வந்து அழுத்தம் திருத்தமாக இரண்டு வரங்களைக் கன்னன் கேட்டான். பாண்டவர்க்கு எதையும் உரைக்கக் கூடாது. தான் இறந்தபின் தன்னை மடியில் கிடத்தி அழுது தான் யார் என்பதை உலகுக்கு உணர்த்த வேண்டும் என்றான்.
பாரதப் போர் அதற்குள் அணிவகுத்துப் படைகள் நிற்கத் தொடங்கின. மாதங்கள் வந்து குவிந்தன.
உறுதி கொண்ட நெஞ்சினர் புதிய பாரதம் அமைக்கக் களம் நோக்கிச் சென்றனர். வீரசுதந்திரம் வேண்டி நின்றவர் போல் தீரமாகப் போர் செய்யப் புறப்பட்டனர். குலகுரு மரபினர் இருவரும் சந்தித்த களம் குருக்ஷேத்திரம் எனப்பட்டது.