உள்ளடக்கத்துக்குச் செல்

மார்க்சீய அழகியல்/முன்னுரை

விக்கிமூலம் இலிருந்து


முன்னுரை

மார்க்சீய அழகியல் கொள்கை, எல்லாவிதக் கலைப் படைப்புக்களையும், அனைத்துக் காலக் கலை வரலாற்றையும் விளக்குவதற்கு, மார்க்சீய அறிதல் தோற்றக் கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.

‘அறிதல் தோற்றம்’ என்னும் கொள்கை, கருத்து முதல்வாத அறிதல் தோற்றக் கொள்கையை எதிர்த்த போராட்டத்தில் உருவானது. இதனை மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின் ஆகிய மார்க்சீயத் தத்துவத்தின் முதலாசிரியர்கள் உருவாக்கினார்கள்.

கருத்துப் போராட்டங்களில் உருவான மார்க்சீய அறிதல் தோற்றத்தின் முக்கியமான அடிப்படைகள் பின்வருமாறு: இவை பிரதிபலிப்புக் கொள்கையென மார்க்சீயவாதிகளால் அழைக்கப்படும்.

1 பொருள்கள் நமது உணர்விற்கு வெளியே சுதந்திரமாக நிலைபேறு கொண்டுள்ளன.

2 ஒரு பொருளின் சாரம் என்பதே (thing in itself) பொருளின் தன்மை அல்லது பொருளின் நிகழ்வுத் தொடர்தான்.

பொருளைப் பற்றி எந்த அளவு தெரிந்து கொண்டிருக்கிறோம், எந்த அளவு தெரிந்துகொள்ளவில்லை என்ற அளவில் தான் வேறுபாடு உள்ளது. முற்காலத்தில் அணு என்ற பொருளைப் பற்றித் தெரிந்ததைப் (லுக்ரீஷியஸ் கானடர்) பண்டையத் தத்துவ ஞானிகள் வெளிப்படுத்தினார்கள். பிற்காலத்தில் டால்டன் அவர் காலம் வரை அணுவைப் பற்றித் தெரிந்ததைத் தொகுத்துக் கூறினார். தற்காலத்தில் அதே பொருளைப் பற்றி உலக விஞ்ஞானிகள் ஆராய்ந்து அணு பற்றிய கருத்தை மாற்றியுள்ளார்கள். அறிந்த அளவில்தான் மூன்று கட்டங்களிலும் வேறுபாடுள்ளதே தவிர அணு, இயக்கவியல் முரண்பாடுகளோடு இருப்புக் கொண்டுள்ளது.

3 எந்த அறிவியல் துறையிலும் நாம் சிந்திப்பது போலவே, அறிவுத் தோற்றவியல் துறையிலும் நாம் இயக்கவியல் முறையில் சிந்திக்கவேண்டும். மாற்ற முடியாத சட்டுத் தந்த தோசையைப்-

போல் முடிவு பெற்ற ஒன்றாக அறிவைக் கருதலாகாது.
மார்க்சிய அறிவுத் தோற்றக் கொள்கை அளித்துள்ள நன்கொடைகள் இரண்டு.
1. அறிவை ஆராயப் பொருள்முதல் இயக்க முறையைப் பயன்படுத்தவேண்டும்.
2 உண்மையான அறிவுக்கு அனுபவமே (சமூக அனுபவமே அடிப்படையானது. பொருள் முதல் இயக்கவியல் (Materialist Dialectics) புற உலகின் இயக்கத்திறகும் அக உலகின் இயக்கத்திற்கும் பொதுவானது. புற உலக, இயக்க விதிகளை அகஉலக இயக்க விதிகளிலிருந்தும் பிரித்துப் பொருளின் பிரதிபலிப்பை, பொருளில் இருந்து பிரிக்கும் முறையியல் தவறை நமது சிந்தனையில் இருந்து மார்க்சிய அறிவுத் தோற்றக் கொள்கை முழுமையாக அகற்றுகிறது.
எங்கல்ஸ் கூறுகிறார்:
இருவகைப் பட்ட பொது நியதிகள் உள்ளன. இவை சாரத்தில் ஒன்றுதான். இவற்றை உணர்ந்து மனிதன் பயன்படுத்துகிற விதத்திலதான் வேறுபாடு உள்ளது. இயற்கைக்கும் மனித வரலாற்றிற்கும் இந்த நியதிகளை மனிதன் பயன்படுத்தும்போது வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஆனால் இவ்வகைப்பட்ட நியதிகள் பிரக்ஞை அற்றவை. இயற்கை விதிகளாயினும் சரி, மனித வரலாற்று விதிகளாயினும் சரி, இரண்டிற்கும் இது பொருந்தும்.
அறிவும் அதன் இயக்கவியலும், மூளையினுள் புறஉலக இயக்கத்தின் பிரதிபலிப்புகள். புற உலக இயக்கம், நமது மனத் தற்கு வெளியே அதன் கட்டுப்பாடின்றி இயங்குவது. இதனை மூளையினுள் பிரதிபலிக்கச் செய்து, இயக்கத்தின் தன்மை களையும் தொடர்புகளையும் உணர்வதன் விளைவே அறி வெனப்படும்.
அறிவு சமூக மனிதனது நடைமுறைச் செயல்களால் தோன்றுவது. இயற்கையின் செயல்முறைகளைத் தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர மனிதன் செய்யும் முயற்சிகளின் அடிப்படையிலேயே அது தோன்றி வளருகிறது.
இதுவே அறிவுத் தோற்றம் பற்றி மார்க்சீய விளக்கத்தின் சுருக்கம்.

மார்க்சீய அழகியல் கொள்கைக்கு, இவ்வறிதல் தோற்றக் கொள்கையே தொடக்கப்புள்ளி. 

8

முன்னுரை

கலை, மனித உணர்வின் ஒரு வடிவம். அக உலகிற்கு வெளியே உள்ள புற உலகை அது அகத்தினுள் பிரதிபலிக்கிறது. மார்க்சிய அறிதல் முறைக் கொள்கையின்படி அறியப் படும் பொருளும், அதன் அகப் பிரதிபலிப்பும் உ ற்பத்தி நிலைகளுக்கும் சமூக வரலாற்றிற்க்கும் கட்டுப்பட்டவை.

ஆனால், கலை இக்கட்டுப்பாடுகளையும் விதிகளையும் மீறுவதற்கு முயலுகிறது. இம்மீறுதலையே குறிக்கோள், கனவு என்று சொல்லுகிறோம்.

கம்பன், ஷெல்லி, புஷ்கின், வால்ட் விட்மன், பாரதி போன்ற கவிஞர்கள் உற்பத்தியாலும், சமூக வரலாற்றின் சமகால நிலைகளாலும் கட்டுப்படுத்தப்பட்ட அகவய இயக்கத் தைக் குறிக்கோள், கனவுகளால் துரிதப்படுத்தினார்கள். இது. தான் மார்க்சீயத்தின் சிந்தனைப் புரட்சி, புறஉலகின் பிரதி பலிப்பு, அகஉலகக் குறிக்கோள்களாக மாறி, புற உலகை மாற்றுகிற சக்தியாக வெளிப்படுகின்றது. புற உலகுதான் மாற் றப்படவேண்டும். அக உலகில் பழைமையான உலகத்தின் அழுத்தம் மிகுதியாக இருக்கும் வரை, புற உலகை மாற்றும் சிந்தனையே மனிதனுக்கு ஏற்பட முடியாதே.

எந்தச் சிறந்த கலைப்படைப்பிலும் அடங்கிய யதார்த்தம். உற்பத்தி நிலைக்கும் சமூக வரலாற்றிற்கும் கட்டுப்பட்டிருப்பினும், மனிதனது கற்பனையும் மனித சக்தியும் கலையுணர்வு என்ற வளர்ச்சியும் அவனை அத்தளைகளில் இருந்து விடு வித்துச் சமூக இயக்க விதிகளுக்குட்பட்டே குறிக்கோள் உலகில் உலவ விடுகின்றன.

கலைஞனும் கவிஞனும் சமூகத்தின் உண்மை நிலையைப் பிரதிபலிக்கும் பொழுது சமூகத்தின் தற்கால வளர்ச்சி நிலை வில் இருந்து அது வளர்ச்சியடைந்து செல்லுகிற போக்கையும், ஒரு குறிப்பிட்ட வளர்ச்சி நிலையில் அது எப்படியிருத்தல் வேண்டும் என்பதைக் குறிக்கோள் அல்லது கனவு நிலையிலும் காட்டுகிறார்கள். இங்குதான் புறவயமான பொருளின் (சமூ கம், மனிதன், இயற்கை அகவயமான பிரதிபலிப்பு மீண்டும் அகவயமான கலையுணர்வினாலும் கற்பனையாலும் கலைப் படைப்பாக சிலை, ஒவியம், நடனக்கலைகள், சிற்பம், இலக்கியம்) புற வெளிப்பாடு காண்கிறது.

புற உலகில் உள்ள நிலைமைகள் அவ்வாறே நிழல் படம் எடுக்கப்பட்டு, வெளியிடப்படுவது கலையல்ல. மனித மூளை யென்பது வரலாற்றுக் கால மனித முயற்சிகள், சாதனைகள் அனைத்தின் பொக்கிஷமாகும். இது புற உலகை மதிப்பிட்டுப் பொதுவிதிகளை உருவாக்குகிறது. இவ்வளவுகோல்களைத் துணையாகக் கொண்டு, கட்டுப்படுத்தும் சக்திகளை மீறி 

முன்னுரை

9

அவற்றையே துரிதப்படுத்தும் கலைப்படைப்புகளை வழங்குகிறது.

எல்லாக் கலைஞர்களும், சமூக வாழ்க்கையின் முரண்பாடுகளில் இருந்துதான் கலைப் படைப்புகளைத் தொடங்குகிறார்கள். வாழ்க்கையின் இயக்கப் போக்கை மேலும் மேலும் அறிந்து கொண்டு வரலாற்றுக் கண்ணோட்டமும் தத்துவ நோக்கமும் பெறும்பொழுது அவர்களுடைய கலைப் படைப்புகள் செழுமையடைகின்றன.

மார்க்சீய அழகியல் அறிவு எல்லா வகையான கலைப் படைப்புகளையும் படைப்பவனுக்குத் துணை செய்கிறது. வாசகனுக்கும் அளவுகோல்களை வரையறுத்துத் தருகிறது. எல்லாக் குறுகிய நோக்கங்களுக்கும் மார்க்சீயம் எதிரியாகவே இருந்து வந்திருக்கிறது. இது குறித்து லெனின் எழுதினார்:

மார்க்சீயம் எல்லாத் துறைகளிலும் குறுகிய நோக்கத்திற்கு விரோதமானது. உலக நாகரிகம் என்னும் வளர்ச்சிப் பாதையில் மார்க்சீயம் தோன்றி முன்னேற்றம் அடைகிறது. எல்லாக் காலங்களிலும் வாழ்ந்து மறைந்த மூளைக் கூர்மையுடைய மூளைகள் எழுப்பியுள்ள வினாக்களுக்கெல்லாம் விடை கூறுவது மார்க்சீயம். -

அது போன்றே கலைத்துறையிலும் பண்பாட்டுத் துறையிலும் உலக முற்போக்கு இலக்கியங்களுக்கெல்லாம் வாரிசுகளாக மார்க்சீயவாதிகளும் பிற முற்போக்குவாதிகளும் விளங்குகிறார்கள்.

ஹோமர், தாந்தே, ஷில்லர், இளங்கோ, காளிதாசன், கம்பன் போன்ற காப்பியக் கலைஞர்கள், புற வாழ்க்கையையும் அக வாழ்க்கையையும் அக்காலக் கலை வடிவங்களில் படிமங் களாகப் படைத்தார்கள். வாழ்க்கையியக்கத்தைக் குறியீடு களாகவும் (images) படிமங்களாகவும் படைத்தார்கள். தெய்வங்களுக்கும் மனிதனுக்கும் நடைபெறும் போராட்டமாக இலியாதை ஹோமர் பாடினார். தெய்வங்கள் என்ற மனித சக்திக்கு மீறிய இயற்கைக் கூறுகளை எதிர்த்துப் போராடுகிற மனிதனைக் குறியீட்டு முறையில் கலைப் படிமம் ஆக்கினார்கள்; நிகழ்கால சமூக மதிப்புகளை, வருங்கால மதிப்புகளால் மாற்றினார்கள்.

மார்க்சும் எங்கல்சும் அடிமைச் சமுதாயம் முதல், முத லாளித்துவச் சமுதாயம் வரை மனித குலத்திற்குக் கலைச்செல் வங்களைத் தந்த கலைப்படைப்புகளைப் போற்றிப் பேசியுள்ளார்கள். லெனின் அவர்கள் மரபையே பின்பற்றி, சமகாலக்கலைப் படைப்பாளர்களை விமர்சனம் செய்துள்ளார்.
காப்பியக் கவிஞர்கள் காலத்தில் சமூகப் புரட்சியை உருவாக்குகிற வர்க்கங்கள், உற்பத்தி அமைப்பில் தோன்றவில்லை என்பதை மறந்துவிடக் கூடாது. அதற்காக அம் மாபெருங்கவிஞர்களுடைய தத்துவப் போக்குகள் நம்முடைய தத்துவத்தில் இருந்து மாறுபட்டது என்பதையும் கவனிக்கத் தவறக் கூடாது. இதனை மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின் ஆகிய மூவருமே சுட்டிக் காட்டியுள்ளார்கள்.

பாரதி முதலாளித்துவ வர்க்கக் கவிஞன், கம்பன் நிலப் பிரபுத்து கவிஞன், வள்ளுவன் நிலப்பிரபுத்துவத் தோற்ற காலக் கவிஞன் என்று கலை 'பார்முலாக்'களுக்குள் கவிஞர்களை அடைத்துவிட்டு அப்புறம் நிலப்பிரபுத்துவக் கவிஞன், முதலாளித்துவக் கவிஞன் என்பவனது பொதுத் தன்மைகளை வரையறுத்துக்கொண்டு மேற்கூறிய கவிஞர்களின் எழுத்துக்களிலிருந்து சிற்சில சான்றுகளையும் காட்டித் தங்களை முற்போக்குவாதிகள் என்று பறைசாற்றிக் கொள்ளுகிறார்கள் சிலர்.

காலம், சமூகச் சூழல், வர்க்க உறவுகள், அச்சூழலில் எழுத்த இலக்கியம், இவற்றுள் முழுவதும் ஆளும் வர்க்கத்தை ஆதரிக்கும் போக்கு ஆகிய இவற்றை ஆராயாமல் மொத்தத்தில் 'லேபல்களை' ஒட்டவேண்டும் என்ற முனைப்பில் சில 'முற்போக்காளர்கள்' முயன்றுள்ளார்கள்.

கலை இலக்கியவாதிகளிடையே தத்துவ வேறுபாடுகள் இருப்பினும், கலை இலக்கியக் கோட்பாடுகளில் வேறுபாடுகள் இருப்பினும் சமூக வாழ்க்கையின் நிலையை அறிந்து, அது வளரும் போக்கை அறிந்து கலை இலக்கியம் படைப்பவன் முற்போக்கானவன். டால்ஸ்டாய் பக்திமான்; தாம் நேசிக்கும் விவசாயிகளின் துன்பங்களை நீக்கக் கடவுளைப் பிரார்த்தித்தார். அதே சமயம் தமது நிலங்களை அவர்களுக்கு உரிமையாக்கி ஒரு 'டிரஸ்டு' பிறப்பித்தார். மனித முயற்சிக்குக் கடவுள் துணையும் வேண்டுமென்று நம்பினார். தத்துவத்தில், மார்க்சீயத்துக்கு எதிர் அணியில் அவர் நின்றார்.

ஆனால், அவர் விவசாயிகளை, ஏழை மக்களை மனமார நேசித்தார். தத்துவத்தைவிட, இவ்வுணர்ச்சி அவரைச் செயல் படுத்தியது. தத்துவத்தோடு முரண்பட்டு, உணர்ச்சி வெல்லும் போதெல்லாம் அவர் சிறந்த செயலூக்கமுள்ள மனிதாபிமானியாகத் திகழ்ந்தார். அவர் கலைப்படைப்புக் கொள்கையில் கடவுளைக் கொண்டு வரவில்லை. அவர் தமது 'கலை என்றால் என்ன?’ என்ற நூலில் கீழ்வருமாறு கூறுகிறார்:

இலக்கியத்தின் உள்ளடக்கப் பொருள் மனித வாழ்க்கை. சிலர் இலக்கியத்தின் இலக்கியமாக மாற்ற முயன்று வரு-
கிறார்கள். இதுபோலவே கவிதையின் கவிதை, இசையின் இசை, ஓவியத்தின் ஓவியம் என்று பிறர் மனத்தில் தோன்றிய வாழ்க்கையின் நிழல்களைக் கலைப்பொருளாக்கிப் படைக்கிற போலிக் கலைஞர்கள் பெருகிவிட்டார்கள்.

போலிக் கலையை இவ்வாறு கண்டனம் செய்யும் டால்ஸ்டாய் புதுமையைப் (originality) பெரிதும் வற்புறுத்தியுள்ளார். இவரது மூலமந்திரம், "கலையின் பிரதிபலிப்புக்கு அடிப்படை வாழ்க்கையே" என்பதுதான்.

மாபெரும் படைப்பாளிகள் இலக்கியச் சூத்திரங்களைக் கற்றுக்கொண்டு படைப்பதில்லை. வாழ்க்கையை ஓர் உலகக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் கண்டுதான் இலக்கியம் படைக்கிறார்கள். ஆயினும் அழகியலின் பொதுவிதிகள் அவர்களுடைய படைப்பு முயற்சிகளுக்குத் துணை செய்கின்றன. அழகியல் மரபை அவர்கள் தங்கள் முன்னோர்களான கலைஞர்களிடமிருந்தும் தம் காலத்துக் கலைஞர்களிடமிருந்தும் கற்றுக் கொள்ளுகிறார்கள்.

தற்காலச் சோவியத் எழுத்தாளர்கள், சோசலிச நாடுகளின் எழுத்தாளர்கள், கார்க்கி, மாயகாவ்ஸ்கி மரபில் வளர்ந்தவர்கள். கார்க்கி கூறினார்:

நமது கலை உருவங்களில் தனித்துவம் இருக்கவேண்டும். அவற்றின் உள்ளடக்கங்களில் சோசலிஸ்டுத் தன்மை, லெனினியக் கண்ணோட்டம் இருக்கவேண்டும்.

மாயகாவ்ஸ்கி கூறினார்: "எல்லா வகையான கவிஞர்களும் தேவை" (இங்கு மாயகாவ்ஸ்கி உருவ வகைப்பாடுகளைக் குறிப்பிடுகிறார்).

சோசலிசப் படைப்பாளிகளுக்கு வழிகாட்டுவதும் துணை நிற்பதும் மார்க்சீய அழகியல் அறிவு, தங்கள் நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்குச் சோசலிசமே வழியெனவும், சமாதானமும் நட்புறவும் அவசியம் எனவும் கருதும் முற்போக்குக் கலைப்படைப்பாளிகளுக்கு இதுவே துணை நிற்கிறது.

இந்நூல் 'தாமரை'யில் கட்டுரைத் தொடராக வெளி வந்தது. இதனை நூலாக வெளியிட எனது ஞானபுத்திரன் டாக்டர் மே.து. ராசு குமார் முன்வந்தான். பல முற்போக்குப் படைப்பாளிகளும் வேண்டினர். தாமரையில் வெளிவந்த கட்டுரைகளில் புரியாத இடங்கள், முரண்பட்ட பொருள் தரும் பகுதிகள் ஆகியவை பற்றியெல்லாம் எழுத்தாளர் நண்பர்கள் எனக்கு எழுதினார்கள். நூலாக மாற்றி எழுதும்போது அவ்விடங்களையெல்லாம் மாற்றிச் செம்மைப்படுத்தியுள்ளேன்.

இலக்கியம், வரலாற்று ஆராய்ச்சி, சமூகவியல் ஆராய்ச்சி ஆகியவற்றிலெல்லாம் ஆர்வம் கொண்டுள்ள டாக்டர் மே.து. ராசு குமார் இந்நூலையும் இன்னும் ஏழெட்டு நூல்களையும் வெளியிடப் போவதாக அறிவித்துள்ளான். மகனுக்கு நன்றி சொல்வது மரபல்ல என்றாலும், மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்வது அவன் செயல்களை ஊக்குவிக்குமல்லவா!

இந்நூல் முற்போக்குப் படைப்பாளிகள், ஆய்வாளர்கள், இலக்கிய மாணவர்களிடையே விவாதங்களைத் தோற்றுவித்தால் நான் நூலெழுதியதன் பயனைப் பெற்றவனாவேன். கலை இலக்கியப் பெருமன்றக் கிளைகள் இந்நூலை விமர்சனம் செய்து கருத்துக்களை எனக்குத் தெரிவித்தால் அடுத்த நூலில் அவை பற்றி எழுதத் துண்டுதலாயிருக்கும்.

நா.வனமாமலை