மார்ட்டின் லூதர் கிங்/மார்டின் லூதர்

விக்கிமூலம் இலிருந்து

மார்டின் லூதர்

காலம்

15-வது நூற்றாண்டு வரையிலும் சமுதாயக் கடலில் கொந்தளிப்பில்லாத ஐரோப்பா கண்டம் 16-வது நூற்றாண்டின் இடைக்காலத்தில் ஒரே கொந்தளிப்பும், புயல் காற்றும், நாவாய்கள் திசை மாறிப் போவதுமான பயங்கர நிலைக்குட்பட்டது.

அதுவரை மன்னர்கள் அரியாசனத்தின் பக்கத்தில் சரியாசனத்தில் வீற்றிருந்த போப் பரம்பரை, "நான் நினைத்து சூட்டினால் முடி, இல்லையானால் சாபம் பிடி," என்று வேந்தர்களை விரட்டித் திரிந்த வீணர்கள் ஊதிய மகுடிக்குப் படமெடுத்தாடிய பாராளு மன்னனைத் தங்களுக்கு அடிமையாக்கி வைத்திருந்த போப்பாண்டவர்கள் பவனி வந்த நேரம்.

தன் புன்சிரிப்பால் பாமரரைப் பரமண்டலம் அனுப்ப முடியும் என்றும், சினத்தால் அவர்கள் வாழ்க்கையை சிதைத்து சித்ரவதை செய்து சீரழிக்க முடியும் என்றும் நினைத்துக்கொண்டிருக்க மதத் தலைவர்கள், அவை அவ்வளவும் உண்மைதானென நம்பிக்கொண்டிருந்த மக்கள் வாழ்ந்த நேரம். அறியாமையால் பிழை செய்த மக்களைத் தன் பாப மன்னிப்புச் சீட்டின் மூலம் பரலோகத்துக்கு அனுப்ப முடியுமென்று ஏமாற்றி, ஏழைகளின் காசை ஈவிரக்கமில்லாமல் சுரண்டிய ரோமாபுரி வல்லூறுகள் அகில ஐரோப்பாவையும் சுற்றித் திரிந்துகொண்டிருந்த நேரம்.

ஒரு சில நேரங்களில் மன்னர்களைக் கூட எதிர்த்துவிடலாம், ஆனால் இந்த மதத்தலைவர்களை எதிர்ப்பதென்பது தீத்துணைத் தழுவுவதற்கொப்பாகும் என்று மக்கள் நடு நடுங்கி வாழ்ந்த காலம்.

போப்பின் நாவசைந்தால் சிரமற்று விழும், சீறினால் சமுதாயமே சாம்பலாகும், மன்னனை மனிதனாக்குவதும் அந்த மதத் தலைவர்களுக்கு ஜெப மாலையின் மணியையுருட்டுவதைப் போலத்தான். அவர்கள் செய்த சகிக்க முடியாக கொடுமைகளுக்கெல்லாம் தேவ கட்டளை என்ற முத்திரை.

அறிவுக்கே எட்டாத ஒன்றை, "ஆண்டவன் கட்டளையால் செய்தே முடித்துவிட்டோம்," என்று ஆர்ப்பரித்துத் திரிந்துகொண்டிருந்த நேரம். அதை ஆம், ஆம்! என்று சொல்லிக் தலையசைக்க கூலிகள், வெண்சாமரம் வீசிகள், விருதுகள் பிடிப்போர் அனேகர்.

ஒருவன் தன் குற்றங்களை யுணர்ந்து மனம் கசிந்து கண்ணீரால் தன் உடலைக் கழுவினலும் போப்பின் புண்ணிய நீராலன்றிப் புனிதவனாக மாட்டான் என்ற புரளியைப் பரப்பிக்கொண்டிருந்த நேரம். போப்பாண்டவர் வருகிறார், என்றால், சூரியனோ, சந்திரனோ, இடம்விட்டுப் பெயர்ந்து பூலோகத்துக்கு வந்ததைப் போலவே நினைத்து, வேண்டிய மரியாதைகள் செய்து, தன் பசிக்காக, ரொட்டித் துண்டுகளை வாங்க வைத்திருந்த கடைசி காசையும் போப்புக்குப் பாதகாணிக்கையாகச் செலுத்திவிட்டு, பசித்த வயிற்றைத் தன் கையால் தடவிக்கொண்டு, "பசி ஒழியவில்லை, ஆனாலும் பாபம் ஒழிந்தது, அதுவே போதும்," என்று அறியாமைக் குட்டையில் அற்ப சந்தோஷத்தோடு நீந்திய நிரபாதிகள் நிரம்பியிருந்த நேரம்.

விடி வெள்ளி

சாம பேத தான தண்டம் என்ற சதுர்வித உபாயங்களை நம் நாட்டுப்பழமை வைத்திருந்ததைப் போல், அங்கும், அன்பாகப் பேசுவது, ஆசீர்வதிப்பது, அணைக்க வருவது, எதிர்த்தால் ஏசுவது அதற்கும் கட்டுப்படாவிட்டால், உரத்த குரலில் ஊர் அறியச் சொல்வது, மதப்பிரஷ்டம் செய்வது, சமூகப்பிரஷ்டம் செய்வது, அதையும் தாங்கி நின்றால் அரசனிடம் சொல்வது, வீண்பழி சுமத்துவது, விலாமுறிய அடிப்பது, கசை கொண்டடிப்பது, அங்கேயும் எதிர்த்தால் தூணில் கட்டிச் சாட்டையால் அடிப்பது, அதற்கும் கட்டுப்படாவிட்டால் தீயில் தள்ளிக் கொல்வது என்ற பல படிகளைப் பாராளுமன்றத்துக்கே உரிமையாக்கி இருந்தார்கள் இந்த பசுத்தோல் போர்த்து போப் உருவில் நடமாடிய புலிகள்.

எதையும் எளிதில் நம்பும் இயற்கைக் குணமுள்ள சாதாரண மக்களுக்கு, மெய்யாகவே பொன்னா அல்லது மெருகிட்ட பித்தளையா, என்று தெரிந்துகொள்ள முடியவில்லை. புலியைப் பசுவென நம்பினர், புல்லையும் சேகரித்துக் குவித்தனர். புல்லைத் தின்று பழக்கமில்லாத புலி பராமரித்தது. அதிலும் ஓர் மகத்துவம் இருப்பதாகவே நினைத்து அதிசயப்பேரேட்டில் அதையும் சேர்த்து ஒரு கணக்கு எழுதிவிட்டனர்.

காட்டில் காய்ந்த நிலா, கடலில் பெய்த மழை, பாறையில் விதைத்த விதை, பயனளிக்காது போவதைப்போல, போப்பின் ஆசிர்வாகம் பொருளற்றது என்று தெரிந்துகொள்ள முடியாத மக்கள் வேறு என்னதான் செய்ய முடியும். பல நாட்கள் ஒளிந்து திரிந்த மிருகம் ஒரு நாள் வேடன் கை அம்புக்கு இரையாவதைப் போல, போப்பாண்டவர்களின் அக்ரமத்துக்குக் குழி தோண்டப்பட்டது.

1453 நவம்பர் 10-ந் தேதி, விதிக்கும் மதிக்கும் வித்தியாசம் தெரிய ஒட்டாமல் தடுத்த குருமார்களின் சதிக்குச் சவக்கிடங்கு வெட்டப்பட்ட நாள் அது. நம்மை யாராலும் அசைக்க முடியாதென்று தந்திரத் திரைக்குள் மறைந்து கொண்டு, மண் மக்களின் நெஞ்சைப் பிளந்து கொண்டிருந்த பலரின் முக மூடியைக் கிழிக்க ஓர் விடி வெள்ளி தோன்றிய நாள் அது.

செத்த வடமொழிக்குச் சர்க்காரும் சனாதனமும் இங்கே சலுகை காட்டுவதைப்போல, ஜர்மனியில் ஜர்மன் மொழியிருக்க லத்தீன் மொழி ஆட்சி பீடமேறிச்செலுத்திய அதிகாரத்தைச் செல்லரிக்கச் செய்த ஓர் சுதந்திர வீரன் பிறந்த நாள்.

அகண்ட சாம்ராஜ்யங்களைக் கட்டியாள, அரியாசனத்தை வீரர்களின் ரத்தாபிஷேகத்தால் தூய்மைப்படுத்த, அதை அறியாத மன்னர்கள் போப்பின் தண்ணீரால் கழுவி, அவர் பாதத்தில் விழுந்து கண்டனிட்ட தார்வேந்தர்களுக்கு ஓர் அபாயச்சங்காக அமைந்த நாள் அந்த நாள்.

ஆதிக்கம்

"ஜெர்மன் நாடு ஜெர்மானியர்களுக்கே" என்ற ஓசை, கிணற்றிலிருந்து பேசிக்கொண்டே மேலே ஏறுபவன் ஓசைபோல், முதலில் மெதுவாக கேட்க ஆரம்பித்து, வரவர வானவெளியிலே வட்டமிட்டு ஜர்மன் எல்லை எங்குமே கேட்க ஆரம்பித்தது. அதுவரையிலும், நம்மை யார் ஆளுகின்றார்கள் என்று பெருவாரியான ஜர்மன் மக்களுக்குத் தெரியாது. ஆள்பவன் ஸ்பெயின் நாட்டு மன்னன். மதகுருவோ, இத்தாலியத் தலைநகராம் ரோமாபுரியின் போப். மொழியோ லத்தின். அந்த நாட்டிலே பிறந்த தாயகத்தாருக்கு ஒருவித உரிமையுமில்லை. அதுவரையிலும் விவிலியம் (Bible) கூட ஜர்மன் மொழியில் எழுதப்படவில்லை. அது, அன்றைய ஜெர்மனிக்கு சகிக்க முடியாத அவமான மாயிருந்தது. ஜர்மனி என்றால் அகில உலக வல்லரசுகளின் மணிமுடிபோன்றது என்று அப்போது யூகித்தறியக்கூட முடியாத காலம். ஒரு ஹிட்லர் பிறப்பான், வான் ஹிண்டன்பர்க் ஆட்சி யைத்தட்டிப் பறிப்பான், யூதர்களின் கொட்டத்தை அடக்குவான், உலக மக்களின் உயிரைக் குடிப்பான், சூரியனே அஸ்தமிக்காத ஆங்கிலேய ஆட்சியை ஆட்டிப்படைப்பான் என்றெல்லாம் யாருக்குத்தெரியும். அன்றாடம் ஆண்டவனிடம் பேசும் போப்புக்கே தெரியாது. பொதுமக்களுக்கு எப்படித் தெரியும்? அதே ஜர்மனியில் ஒரு சிறு கிராமமாகிய துரிங்கியர் என்ற ஊரில் ஒரு ஏழை விவசாயிக்குப் பிறந்தவன்தான் நமது பிரஸ்தாபத்துக்குரிய கதாநாயகன் மார்டின் லூதர்.

இளமை

மார்டின் லூதர்! மார்டின் லூதர்!! ஏளனச் சிரிப்பு முதலில், மரணக் கனவு பிறகு, இளம் வயதில் மகிழ்ச்சியில்லை. காரணம், குடும்பம் ஏழ்மையைத் தழுவியது. பள்ளி ஆசிரியரின் பார்வையோ பயங்கரமாயிருந்தது. ஏனெனில் மற்றப் பிள்ளைகளைப்போல் ஆடம்பரமாயில்லாமல் கந்தை யுடுத்தியிருந்தான். கர்ம வீரர்களின் ஆரம்பம் மர்மமாகவே இருந்ததுண்டு என்ற இலக்கணத்துக்கு மார்டின் லூதர் விதி விலக்கா என்ன? நீர்பூத்த நெருப்பு போல், அமைதிகொண்ட கடல் போல், ஆடி நின்ற காற்று போல், அமைதியாய் தன்னை எல்லா வகையாலும் பிறர் மதிக்கத்தக்க மனித னாகத் தயார் செய்துகொள்ள முற்பட்டான். அந்த அடிப்படையில் அவன் கொண்ட முடிவு மதத்தைப் பற்றி (Theology) படிக்க வேண்டுமென்பது. அந்தத் துறையில் அன்று ஜர்மனியில் இருந்த பெயர் போன எர்பர்ட் ( Erfurt) என்ற கல்லூரியில் படித்து M. A. பட்டம் பெற்றன் தன் 18-வது வயதில். செடியின் வளர்ச்சி நிலத்தின் சத்தைக் காட்டுவதைப்போல் 18-வது வயதிலேயே M. A., படித்து முடித்த அவன் அறிவை அளந்துகாட்டி விட்டது. ஆனால் இவன் தந்தை வருவாயை வேண்டி இவனை வக்கீலாக்க வேண்டுமென்று விரும்பினர். ஆனால் மகனின் முடிவு வேறாயிருந்து அதன்படியே முடிந்துவிட்டது. ஒரு சமயம் இவன் வக்கீலாக இருந்திருந்தால் பொய்க்குப் புகலிடம் எங்கே என்று சட்ட புத்தகத்தைப் புரட்டுவதிலேயே நின்றுவிட்டிருக்கும். அல்லது தன்னால் வெல்ல முடியாக வழக்கின் சொந்தக்காரனைப் பார்த்து "நான் என்னப்பா செய்யட்டும், நான் சொல்லிக் கொடுத்ததைப்போல நீ நீதி மன்றத்தில் சொல்லவில்லை. உண்மையை உளறிக் கொட்டிவிட்டாய், உண்மை சொல்ல வேண்டியதுதான். அதை நான் தவறென்று சொல்லவில்லை. ஆனால் அந்த பாழாய்ப்போன உண்மையைக் கோர்ட்டில் சொல்லிவிட்டாயே என்றுதான் எனக்கு வருத்தம். நாங்கள்தான் என்ன செய்வோம். சட்டங்கள் தான் என்ன செய்யமுடியும். சட்டம் ஓர் தடாகம். நீந்தத் தெரிந்தவன் அதில் தப்பித்துக்கொள்வான். தெரியாதவன் அதில் விழுந்து சாகவேண்டியதுதான். இப்போதும் குடிமுழுகிப் போகவில்லை. இன்னும் ஒரு அந்தரங்கக் கதவு இருக்கிறது திறக்க, அதுதான் அப்பீல். அங்கே பார்த்துக் கொள்ளலாம். அடுத்த வாரம் ஒரு ஐயாயிரத்தோடு வா!” என்று தன் முட்டாள் தனத்துக்கு மூடு மந்திரம் போடமுடியும். ஆகவே அந்த சிலந்திக் கூண்டில் அகப்பட்டுக் கொள்ளவில்லே.

யாத்திரை

ண்டவன் அருள்கடாட்சத்தைப் பெற்ற அறிஞர்களைக்காண அவாவுற்றான். அவர்களிடம் பலவற்றைத் தெரிந்துகொள்ள ஆசை கொண்டான். மதியால் மக்களை மார்க்க போதனையில் இழுத்துச் சென்று மாபெரிய நன்மைகளைச் செய்து கொண்டிருக்கும் மதத் தலைவர்களைக் காண வேண்டுமெனத் துடித்தான். அவர்களைக் காணும் நாளைத் தன் பிறவியிலேயே ஒரு புனித நாளென நினைத்தான். பந்தபாசங்களற்ற அந்தப் பரமனின் பக்தர்களை நாவார வாழ்த்தி, நெஞ்சார நினைத்து அஞ்சலி செய்ய முடிவுசெய்து கொண்டான். பற்றற்ற ஞானிகளின் பாத சேவையால் தன் பாவங்கள் பஞ்செனப் பறக்கும் என எண்ணி எண்ணி இறுமாந்து உளம் பூரித்து உவகை பூத்தான்.

ஆகவே படித்து முடித்ததும் நேராக ரோமாபுரி சென்றான், தான் படித்த மதத்தலைவர்களைக் காண, மதம் எந்தக் குறிக்கோளோடு அமைக்கப் பட்டதோ அந்த உண்மையின் பிரதிநிதிகளைக் காண, மக்களை நல்வழிப்படுத்தும் மதத்தலைவர்களை மனமாரப் போற்ற.

ஏமாற்றம்

னால் அங்கு அவன் மதத்தின் உண்மையுருவைக் காணவில்லை. மதத்தின் பெயரால் உருமாறித்திரியும் மதோன்மத்தர்களைக் கண்டான். எல்லார்க்கும் பொதுவாக ஏசுவால் அளிக்கப்பட்ட கொள்கைகளைக் கள்ளச் சந்தையில் விற்கும் கயவர்களைக் கண்டான். "உன்னை நீ நேசிக்கிற மாதிரி பிறரையும் நேசி," என்ற இயேசுவின் பொன்மொழிக்குப் புறம்பாய், அவர்களை அவர்களே போஷிக்க பிறரை ஏசித்திரிந்த பொல்லாதவர்களைக் கண்டான். சிலுவையில் அறைந்து இரும்பு முள்ளால் செய்த தொப்பியைத் தலையில் போட்டு சம்மட்டியால் அடிக்கப்போகும் நேரம். இயேசுவே! "இதோ உம்மைக் காட்டிக் கொடுத்த ஜூடாஸ்" என்று, அவனைக் கொண்டுவந்து தன் முன் நிறுத்தியபோது, ஆண்டவா! எனக்காக அவனை மன்னித்துவிடு," என்ற அப்பெருந்தகையின் பேரால் மக்களைக் கசக்கிப் பிழிவதே கடமை எனத்திரிந்த கயவர்களைக் கண்டான். எந்த மரச்சிலுவையில் இயேசுவை அறையப் போகின்றார்களோ, அந்த மரச் சிலுவையை அதே இயேசுவின் தோளில் வைத்து சுமக்கச் செய்த கோரக் காட்சியைக் கண்டும், கேட்டும், படித்தும், அதே சிலுவையை பொன்னாலும் வெள்ளியாலும் அணிந்து திரியும் பொல்லாதவர்களைக் கண்டான்.

எப்படி இரண்டாம்பிலிப் என்ற மன்னன் இயேசுவை நிறுத்தி விசாரிக்கிறபோது, தன்னை வளர்த்த இடையனே தன் உடலில் வளர்ந்திருக்கும் ரோமத்தைக் கத்தரிக்கும்போது எப்படி ஆடாமல் அசையாமல் ஆடு நின்றதோ அதைப் போலவே இயேசு, தன் மரண தண்டனையைக் கேட்டு ஆடாமல் அசையாமல் நின்றார் என்று சொல்லப்படுகிறதோ, அதைப் போலவே லூதர் ஸ்தம்பித்து நின்றுவிட்டான். தனது ஏமாற்றத்தை எண்ணி எண்ணி மனம் கசிந்தான். எழுத்துக்கும் இயற்கைக் குணத்துக்கும் எவ்வளவு இடைவெளியெனக்கருதினான். சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள தாண்ட முடியாத பள்ளத்தை எண்ணி மனம் புழுங்கினான்.

மதக் கோட்பாடுகளை ஏதுமறியாத பாமர மக்கள்தான் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும், மதத் தலைவர்களுக்கு அந்த விதியில்லை என்பதை ஜாடையாகக் காட்டுவதைப் போன்றிருந்த சண்டாளத் தனத்தைச் சவக் குழிக்கு அனுப்ப எண்ணினான், மானாபிமானம், மக்கள் அனுசரிக்க வேண்டிய முறை, மதத் தலைவர்களுக்கு அந்தக் கட்டாயமில்லை என்ற மடக் கொள்கையை இடம் தெரியாமல் ஓட்ட திட்டமிட்டு விட்டான். கோபச் சிரிப்பு கொப்பளித்த கண்ணீர் நெஞ்சுரம், நீதியிலே நாட்டம் ஆகிய இந்தப் படைகளின் துணை கொண்டே ரோமாபுரியை விட்டு வெளியேறினான்.

கண்ணீர்

தக் கோட்டையின் கலைவாயில் வரையிலும் திரும்பாமல் பின்பக்கமாகவே நகர்ந்து வரும் வழக்கத்துக்கு மாறாகச் சரேலென்று திரும்பி வரும் இவனைக் கண்ட போப்பின் கையாட்கள் கொல்லென சிரித்தார்கள். கண்ணீர் வேதனைப்பட்டு வெளியேறுகிறது. இந்தக் கண்ணீர் வேதனை மட்டிலுமல்ல, வெட்கமும்பட்டது என்று அந்தப் பன்னீருக்குத் தெரியவில்லை.

கண்ணீரில் வெப்பம் இருக்கிறது என்று அந்தப் பன்னீருக்கு எப்படித் தெரியும். மனம் கசியும் போதெல்லாம் கண்ணீர் வரும். ஆனால் பன்னீர், செம்பில் உள்ளவரையிலும்தான் வரும் என்று, அந்த வயோதிகப் போர்வையில் வனிதைகளின் பாவங்களைப் போக்குவதாகச் சொல்லும் போப்பின் வெண்சாமரம் வீசிகளுக்கு எப்படித் தெரியமுடியும்.

தோற்றத்தில் மயங்குபவர்கள் எப்போதும் உலகின் எந்தக் கோடியிலும் இருக்கத்தான் செய்தார்கள். கண்ணீர், பல கமண்டல வாதிகளின் முக மூடியைக் கிழித்திருக்கிறது என்பதை இந்தக் கண்மூடிகள் அறிந்துகொள்ள முடியாது. பாஸ்டில் சிறையைத் தகர்த்தெறிந்தது, சார்லசைத் தூக்கிலேற்றியது, பல மதோன்மத்தர்களை வனவாசஞ் செய்ய வைத்தது, ஜாரைக் கொன்றது, சட்டங்களை மாற்றி எழுதியது, நாட்டின் எல்லைக்கோடு களை அழித்தெழுதியது, சர்வாதிகார ஆட்சியை முறியடித்து ஜனநாயகத்தை மலரச் செய்தது இந்தக் கண்ணீர்தான் என்று தெரிந்து கொள்ள முடியாத அப்பாவிகளின் அறியாமைக்காக இரங்கி ஏளனச் சிரிப்போடு ரோமாபுரியை விட்டு வெளியேறினான்.

கேலி

போப்பின் உத்திரவு பெற்ற பிறகே, எதையும் செய்து பழகிவிட்ட மக்கள், தனி ஒருவனால் என்ன செய்ய முடியும் என்று யாரும் துணிந்து கூற வேண்டிய காலந்தான் அது. தேய்ந்த பாட்டையிலேயே போய் பழகிவிட்ட மாடுகள் புதுப்பாதையில் போவதென்பது கடினமான வேலைதான் என்று எல்லோரும் ஏகமனதாகத் தீர்ப்பளித்துத் தீர வேண்டிய நேரந்தான் அது.

எனினும், ஓர் புதுப்பாதையில் மாடுகளை ஓட்ட முடியும் என்ற புதியதோர் நம்பிக்கை பிறந்தது மார்டின் லூதர் ஒருவனுக்குத்தான்.

ஏற்கெனவே தேய்ந்துவிட்ட பாதை முதன் முதலில் எப்படி இருந்திருக்கும். தேயாமல் இருந்திருக்கும். பிறகு வண்டிகளை ஓட்டி ஓட்டி எப்படி அந்தப் பாதையை தேய வைத்தார்களோ-அதே போலத்தான் நாம் அமைக்கப் போகும் புதிய பாதையும் முதலில் இருக்கும். பிறகு வரிசையாக வண்டிகளை அதன்மேல் ஓட்ட ஓட்ட நிச்சயம் நமது புதிய பாதையும் பழமையாய்விடும், பயமில்லை என்று துணிந்து புதியதோர் பாதையைப் போடத் திட்டமிட்டவன் லூதர் ஒருவன் தான்.

வைராக்கியம்

தம் என்றால் என்ன? மக்களுக்கு அபினியாக விளங்குவதா? சாகடிக்கும் நஞ்சாக விளங்குவதா? அல்லது அவர்கள் அறிவுக்கண்களைத் திறப்பதா, எது உண்மையான மதம் என்பதை ஊர் அறிய உலகறியச் செய்கின்றேன் என்று சூள் உரைத்துக்கொண்டான். மோட்சம் என்பது வெளி வேடத்திலோ, மக்கள் கூட்டத்திலோ யாத்திரிகர்களின் எண்ணிக்கையிலோ இல்லை என்றும், ஆழ்ந்த உள்ளத்தின் கண் உண்டாகும் பக்தியில் உள்ளதென்றும் நம்பினான். அதைத் தீவிர ஆராய்ச்சியின் மூலம் முடிவுகட்ட St. Augustin order of friarல் சேர்ந்து அந்த ஞானியைப்பற்றி நிறையப் படித்தான்.

1512-ம் ஆண்டில் விண்டம்பர்க் (Wintenberg) கலாசாலையில் மதப் பேராசிரியராகச் சேர்ந்தான் அது மனிதர்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் கலா சாலை. ஐரோப்பா முழுவகற்கும் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட கலாசாலை இது ஒன்றுதான். இங்கேதான் ரோம் சர்ச்சி (Rome Church)ல் உள்ளவைகளை நன்றாயுணர்ந்தான். செந்தீயிலிட்டப் புழுவெனத் துடித்தான். அதுமாத்திரமல்ல, அவன் கோபக்கனலை மென்மேலும் கிளப்பியது :-அந்த நேரத்தில் எராஸ்மஸ் (Erasmus) என்பவன் மதத்தின் மூடக்கொள்கைகளைத் தாக்கி "ஜேபியின் கத்தி" (Pocket Dagger) என்ற ஒரு நூல் எழுதியிருந்தான். ஆனால் அதைத் தொடர்ந்து பல நூல்கள் வெளியிட முடியாமல் அரசனையும் போப்பையும் கண்டு எராஸ்மஸ் பயந்துவிட்டான்.

இந்த நிலையை லூதர் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு முதன் முதலில் மக்களிடம் தைரியமாக இவன்தான் கூறினான், பேசினான், எழுதினான்.

புண்ணியக்கடை பாவச்சீட்டு

தே நேரத்தில்தான் போப்பின் கையாள் ஜான் டெட்சால் (John Tetzal) என்பவன், போப்பின் கையெழுத்திட்ட பாப மன்னிப்புச் சீட்டுகளோடு ஜர்மனிக்குள்ளே நுழைந்தான். "கொலை, களவு, காமம், பொய் எது செய்திருந்தாலும் சரி இந்தச் சீட்டை வாங்கினால் மன்னிக்கப்படுவார்கள். கற்பழிதல், கற்பழித்தல், ஒழுக்கங்கெடல், கர்ப்பச் சிதைவு, சட்டவிரோதக் குழந்தைகளை உயிரோடு புதைத்தல், வழிப்பறிக் கொள்ளை எது செய்திருந்தாலும் சரி இந்தச் சீட்டின் மூலம் மன்னிக்கப்படுவார்கள். மனச்சாட்சி ஒன்று இருப்பதாகவே நினைக்காமல் யார் யார் எந்தெந்த பாவத்தை எங்கெங்கே எதற்காகச் செய்தாலும் இந்த பாப மன்னிப்புச் சீட்டின் மூலம் மன்னிக்கப்படுவார்கள்" என்றே விலை கூறி வந்தான் டெட்சால். பலர் வாங்கினார்கள். சிலர் வெறுத்தனர். ஆனால் லூதரின் அருமை நண்பனான சாக்ஸன் நாட்டுச் சிமான், அந்தக் கபட சன்யாசி டெட்சாலைத் தன் நாட்டில் துழையக் கூடாகதெனத் தடுத்துவிட்டான். போப்பின் எண்ணங்களையும் ஏற்பாடுகளையும் தவிடு பொடியாகத் தாக்கினான்.

வாதகேசரி

சாதாரண பாமர மக்கள் கேட்டுத் தெரிந்து கொள்ளுமளவுக்கு, தனது சிக்கலான வாதத்தை நேர்படுத்தி எளிய நடையில் ஆணித்தரமாகப் பேசும் ஆற்றல் மிக்கோன் மார்டின் லூதர். வாதப் பிரதிவாதங்களை இவனே எழுப்பித் தக்ககோர் விடையை மக்கள் மனதில் பதிய வைக்கும் பக்குவமறிந்த பேச்சாளி. படித்தவர் முதல் படிக்காத பாமரர்வரை எளிதில் புரிந்து கொள்ளுமளவுக்கு சரளமான சொற்களை நயமான நடையில் சமநிலத்தில் ஓடும் நீர் அருவிபோல் நளினமாகப் பேசும் சொற்செல்வன். பிறருடைய அடுக்குச் சொற்களைக் தான் அடுக்கிப்பார்த்து, சரியாய் அடுக்க முடியாததால் அடுக்குகள் சரித்துவிழுந்து, அதன் அடிவாரத்திலே அகப்பட்டுக் கொண்டு அவதிப்படும் அப்பாவியல்ல அவன். அடுக்குச் சொல் என்று ஆரம்பித்து, சொற்களின் பொருளும் தன்மையுமறியாமல், "சமதருமத்தைச் சாடுவேன்; பொது உடமையைப் பொடிப் பொடியாக்குவேன்", என்று நாத்தடுமாறி உளறிக் கொட்டி, ஊரார் சிரித்தபின் விழித்துக்கொண்டு விழிக்கும் ஊதாரிக் கூட்டம் ஒன்று கிளம்பி இருக்கிறதே நமது நாட்டில், அந்த ரகத்தைச் சேர்ந்தவனல்ல லூதர். தன்னுடைய சொந்த நடையில், சொற்களின் தராதரம் மியமறிந்து இடம், பொருள், ஏவல் என்பதை யுணர்ந்து கருத்துக்களைக் கோர்வையாக்கி, எதிரி களையும் தன்பால் இழுக்கும் நாவன்மை படைத்தவன் லூதர்.

அறியாமை

சீட்டுகளை வாங்காதீர்கள். அதை நீவீர் வாங்கினால் , உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்வதாகும். உங்கள் பகுத்தறிவை நீங்களே செய்ய, பாவிகள் விற்கும் பாவ மன்னிப்பு சீட்டைத் துணைக்கழைக்கின்றீர்கள் என்றுதான் பொருள்.

குற்றம் செய்யாத மனிதனே உலகில் இல்லை. காரணம், குற்றம் இன்னதென்று தெரியாத காரணத்தால், இன்னதென்று தெரிந்தும், செய்து தீரவேண்டிய சூழ்கிலையால், தனக்கு வேண்டாமென்றாலும் தன்னை நம்பியவர்கள், தன்னால் போஷிக்கப்பட வேண்டியவர்களை வாழவைக்க வேண்டிய கட்டாயத்தால் மனிதன் குற்றம் செய்ய வேண்டிய நிலை ஏற்படத்தான் செய்கிறது. ஆனால், அதற்காக பச்சாதாபப்படாமல், இனி என்னால் குற்றம் செய்யாமல் வாழ முடியும் என்று திட நம்பிக்கை கொள்ளாமல், எப்படி பாப மன்னிப்புச் சிட்டின் மூலம் பாபங்களை ஒழிக்க முடியும். வெறும் பொய், பித்தலாட்டம், நம்பாதீர்கள், உங்கள் பாவங்களெல்லாம் உலர்ந்த சருகென்றும், அந்த பாவமன்னிப்புச் சீட்டென்றால் நெருப்பென்றும், உங்கள் பாவச் சருகுகளை அந்தத் தீ எரித்துவிடுமென்று எண்ணுகின்றீர்கள், அறியாமை! உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளுகின்றீர்கள். உங்களுக்கான சவக் குழியை உங்கள் சொந்தக் கையால் வெட்டிக் கொள்ளுகின்றீர்கள். அவசரத்தால் அறிவை இழந்துவிட வேண்டாம். பயத்தால் பாதையை விட்டு விலக வேண்டாம். அறியாமையால் அக்ரமக்காரர்களை ஒன்றுக்கு ஆயிரமாக உற்பத்தி செய்ய வேண்டாம். வாழப் பிறந்தவர்களை சாக மருந்துண்ணாதீர்கள்.

அறைகூவல்

பிறகு, 95 காரணங்களைக் காட்டினான், எழுதினான், தாக்கினான், கத்தோலிக்க மார்க்கத்தைத் திணற அடித்தான். மக்கள் இவன் பக்கம் கூடினர். விழித்தனர். ஆரவாரித்தனர். அன்று பிறந்தது ப்ராடெஸ்டெண்டு (Protostant) மதம்.

விண்டன் பர்க்கிலுள்ள கோயிலி (Church of all Saints)-ன் கதவில், ஜான்டெட்சலுக்கு ஒரு அறைகூவலை விடுத்தான். அதாவது, போப்பின் கைப்பாவையே! வெளியே வா! கபடசன்யாசியே! வா வெளியே! உன்பாப மன்னிப்புச் சிட்டுத் தவறானது. மோசடியும் கொள்ளையும் சேர்ந்தது. பேச்சின் மூலமோ எழுத்தின் மூலமோ வாதிடலாம் வா வெளியே! என்று பகிரங்கமாக ஒரு அறிக்கையைக் கதவில் ஒட்டினான்.

இதைப் பார்த்த கபடசன்யாசி, போப்பின் கையாள் பாபமன்னிப்புச் சீட்டு வியாபாரி, ஏழைகளை ஏமாற்றிக் கடவுள் பெயரால் கள்ளமார்கெட் செய்த கயவன் டெட்சால் எங்கேயோ ஓடி ஒளிந்தான். சீட்டுகளை விற்பாரில்லை. வியாபாரம் குறைந்தது. அதனால் பணம் குறைந்தது. பணம் குறையவே போப்பின் வெறி விஷம்போல் ஏறிற்று. இறுதியாக லூதரை ரோமுக்கு அழைத்தான் போப். அதற்குள் அந்த நாட்டு மன்னன் ஐந்தாம் சேர்லெஸ், லூதரைப்பற்றி எண்ணினான், ஏசினான், சிறையிடுவேன் என்றான். தூக்குக்கயறு உனக்குப் பரிசாகத்தரப்படும் என்றான்.

இந்த உத்திரவுகளைப் பார்த்து நகைத்துக் கொண்டே செல்கிறான் லூதர். குதிரை வீரன் ஒருவன் குறுக்கே வந்தான். தாங்கள்தானே மார்டின் லூதர்? என்று வினவினான். ஆம், என்ன சேதி? என்றான் லூதர். "ஒன்றுமில்லை, போப்பாண்டவர் தங்களுக்கு ஒரு பரிசளிப்பு அனுப்பியிருக்கிறார்." போப்பாண்டவரா? எனக்கா! பரிசா அனுப்பியிருக்கின்றர். உளராதே சரியாகச்சொல். உளரலல்ல, உண்மை உண்மை.

லஞ்சம்

விரோதியின் காலுக்கு வீரப்பட்டயம் கட்டியதைப் போன்றிருக்கின்றது. சிங்கத்தை விருந்துக்கழைக்கும் சிறு நரியுண்டா, உலக அதிசயத்திலே இதுவும் ஒன்றுதான். எதோ அந்தப் பரிசு, என்று வாங்கிப் பார்க்கிறான், பசும் பொன்னால் செய்த ரோஜா, பிரமித்துப் போனான். என்னால் என்ன ஆகும் என்று நினைத்து பொன்னாலான ரோஜாவைப் பரிசளிக்கிறார் உங்கள் போப். நான் மிக மிக எளியவன், போப் எங்கே, நான் எங்கே, அவர் ஆல்ப்ஸ்மலை, நான் அதன் அடிவாரம். அவர் பஞ்சபூத சாட்சியாகக் கொடுத்ததல்ல, வஞ்சகந்தீர்க்க எனக்கவர் அளித்த லஞ்சம். என் ஒருவன் உயிரை மாத்திரமல்ல, எனக்குப் பின்னால் இருக்கும் எண்ணற்றவரின் உயிரை எல்லாம் இந்த ஒரு தங்க ரோஜாவுக்கு விலை மதிக்கிறார் போப். தங்க ரோஜா, உண்மை ரோஜாவாக இருந்தாலும் மனம் இருக்கும், இதில் என்ன இருக்கு. உண்மை ரோஜாவிலாகிலும் வண்டுகள் மொய்க்கும். தரித்திரர்கள், திருடர்கள், வாழ வழியற்றோர், வறுமையில் வாடுவோர், தவிர வேறுயார் இதை சீந்துவார்கள். என்னையும் என் வருங்கால சந்ததிகளையும் நாட்டையும் ஏமாற்ற முடியுமென்றா நினைக்கின்றார் போப்.

"இதைக் கண்டவுடன் கட்டுப்பாடில்லாமல் சிரிக்கின்றேன். எனக்கும் ஒரு பாப மன்னிப்புச் சீட்டனுப்பாமல், இந்தக் தங்கரோஜாவை அனுப்பினாரே. அது ஒன்றே, மற்ற மனிதர்களிலிருந்து என்னை வேறாகப் பிரிக்கிறது என்பது மட்டிலும் உண்மை. ஏதோ ஓர் நாகரிகச் சதி செய்கிறார் போப். அவர் வீற்றிருக்கும் ரோமாபுரியின் மகுடத்தையே எனக்களிப்பதானாலும் என் எண்ணத்தை மாற்றிக்கொள்வதாயில்லை என்பதைக் கண்டிப்பாகத் தெரிவித்து விடு." எவன், தான் எண்ணியதை வெளியே சொல்லப்பயப்படுகிறானோ அவன் கோழை.

படிப்பினை

னால் இந்த ரோஜாவின் மூலம் இரண்டு உண்மைகளை யுணர்த்துகிறார் போப்.

ஒன்று, இந்த ரோஜாவை நீ வாங்குவாயானால் உன் கொள்கையைத் தங்கத்துக்கு விற்கிறாய் என்பது.

மற்றொன்று, இந்த ரோஜாவைப் போன்ற உண்மை மலரின் வாசத்தை உலகுக்குக் கொடுக்க நினைத்துப் பறிக்க முற்பட்டால் அதனடியிலே முட்கள் நிரம்பியிருக்கும். பத்திரம் என்று எச்சரிக்கை செய்கிறார், கொண்டு போ மனிதன் சிந்தனை யந்திரம், மாயாவாதியல்ல. களங்கமில்லாத உள்ளத்தினருக்குக் காஷாயம் வேண்டியதில்லை. சீக்கிரம் சந்திக்கின்றேன் என்று சொல்.

போப் தன்னைப் பார்த்து தலையசைத்தால் தரித்திரமே ஒழிந்துவிட்டதென்று நினைக்கும் காலம். அவர் காலடி மண் கிடைக்கால் அதுவே கர்மம் ஒழிக்கும் மருந்தென நினைக்கும் காலம். கமண்டல நீர் பட்டால் பரமண்டலத்தில் தனக்குத் தனியாக ஓர் இடம் ஒதுக்கப்படும் என்று நினைத்துக்கொண்டிருந்த காலம். அந்தக் காலத்தில்தான் மார்டின் லூதர் தனக்களித்த பொன் மலரை வாங்க மறுத்தான். திரும்பிப் போய்விட்டான் வாளேந்தி. திரும்பிப் பார்க்காமல் புறப்பட்டான் தூதர்.

நடுக்கம்

டைத்தெரு, மக்கள் கூட்டம், எங்கும் குசு குசு என்ற பேச்சு, "போப்பாண்டவரை அவமதித்தான் இந்தப் பொல்லாதவன். ஏதோ போதாத காலம் இவனுக்கு அதுவும் பொன் மலராம். தங்கத்தின் உயர்வை அறியாத தரித்திரன். எவ்வளவு புனிதமான உலோகம் பசும்பொன்! கேடு சூழ வேண்டியதற்கு முன் கெடவேண்டிய மதி. இவனை விதி வழி, கெடுமதி அழைத்துச் செல்கிறது. போன ஆள் போப்பினிடம் செய்தியை எட்டவைத்தால் ஒரு வார்த்தையில் சபித்து விடுவார். ஆண்டவன் வேறு, அவர் அடியார் வேறா? அவரேதான் இவர், இவரேதான் அவர். அவர் பரமண்டலத்தில் இருக்கிறர். இவர் பாமர மண்டலத்திலே இருக்கிறார். ஆண்டவன், போப் கண்ணுக்குத் தெரிவார் . போப் பாவிகள் தவிர, மற்ற எல்லாருடைய கண்களுக்கும், தெரிவார். ஆண்டவர் அனைவரிடத்திலேயும் பேச முடியாது. அதனால்தான் போப்பைத் தன் பிரதிநிதியாக்கியிருக்கின்றார். அது ஞானிகளுக்கு மாத்திரந்தான் தெரியும். இந்த அஞ்ஞானி எப்படி அறிவான் அவர் மகிமையை. காட்டுக் கூச்சல் போடுகிறன் சிலர் கைதட்ட இருப்பதால். தான் சாக மருந்துண்கிறான். கண்ணைக் கட்டிக்கொண்டு கடலிலே குதிக்கிறான்," இப்படி பேசுகின்றனர் அங்காடியிலே கூடியிருந்த மக்கள்.

மக்களின் கலக்கம்.

தற்குள் மார்ட்டின் கடைத் தெருவை அடைந்துவிட்டான். அன்றாடம் ஆயிரம் பேர்கள் அவ்வழிச் செல்பவர்கள். இவனும் அவ்வழி ஆயிரந் தடவை சென்றிருப்பான் ஆனால் அன்று இவன் அனைவருடைய கண்களுக்கும் காட்சிப் பொருளாகவே காணப்பட்டான். பெயரை மாத்திரம் கேள்விப்பட்டு, ஆளை நேரில் பார்த்தறியாதவர்கள் கற்சிலை போல் நின்றுவிட்டார்கள். "இவனா மார்ட்டின் லூதர்? துரிங்கியாவின் ஏழைக்குடியானவன் மகன். படித்துப் பட்டம் பெற்ற இவன் ஏதாவது பிழைப்பைப் பார்க்கக்கூடாதா? நமக்கேன்டா விஷப்பாம்போடு விளையாட்டு," என்ற வேதாந்தம் பேசினர் மக்கள்.

அகற்குள் மற்றோர் ஆள் ஓடி வந்து மற்றேர் உத்திரவைக் கொடுக்கின்றான். பார்த்து படித்துப் பார் குலுங்க சிரிக்கின்றன். விழுந்து விழுந்து சிரிக்கின்றான், விலாநோகச் சிரிக்கின்றான். சிரிக்க சக்தியற்று கீழே விழும்வரையில் சிரிக்கின்றான். அந்த அடங்காத சிரிப்புக்கு என்ன காரணம்? அது அவ்வளவும் கோபச்சிரிப்பு ஏன்? போப் அனுப்பிய உத்திரவில், லூதரை மதப்பிரஷ்டம் செய்திருப்பதாக எழுதியிருந்தான்.

கோபச் சிரிப்பு

ழுத்துக்கள் ஒவ்வொன்றையும் எறியீட்டியாகவே கருதினான். போப்பின் ஆதிக்க வெறியைக் கண்டு கொதித்தது அவன் உள்ளம். கோபம் கொண்டன. அவனது அறிவுக் கண்கள். இதற்கு ஓர் முடிவே கிடையாதா ? என்று கோபாவேசங் கொண்டான். பார்க்கிறேன் ஒரு கை எனப் பார் முழுதும் முழக்கஞ் செய்தான். இவன் யார் பேதை, என்னை மதப்பிரஷ்டம் செய்ய.

"நான் ஜர்மன் நாட்டின் கெளரவக் குடியென்ற காரணத்தால் ஒப்புக்கொள்ளலாம். நான் ஓர் நல்ல கிருஸ்தவக் குடும்பத்தில் பிறந்தேன் என்ற காரணத்துக்காக இவனைப் பெரியவன் என்று ஒப்புக்கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்படலாம். அரசன், இவன் முன் அஞ்சலி செய்வதால், அவன் அரசாட்சிக்குட்பட்ட மக்கள் தொகையிலே நானும் ஒருவன் என்ற முறையிலே ஒப்புக்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படலாம்! என் பெற்றோர்கள் ஒப்புக்கொண்டதால், அவர்கள் வழிவந்த நான் ஒப்புக்கொள்ளவேண்டிய சம்பிரதாயம் ஏற்படலாம், அரசியல் சட்டங்களோ, அல்லது சமுதாய சட்டங்களோ என்னை ஒப்புக் கொள்ளும்படி நெட்டித்தள்ளலாம், ஆனால் என் அறிவு இவனை ஒப்புக்கொள்ள மறுக்கிறது.

என் அறிவு சொல்வழி நடப்பதன்றி அரசனே ஆணையிட்டாலும் அடிபணியமாட்டேன். இந்த என் முடிவு எனக்கு எவ்வளவு பயங்கரத் தீர்ப்பையளித்தாலும் புன்னகையோடு வரவேற்கிறேன். சாவே வா! என்றழைக்க மாலையோடு காத்துக் கொண்டிருக்கிறேன்.

மக்கள் உள்ளத்தில் கொழுந்து விட்டெரியும் செந்தீப்போல், இந்த மதத் தலைவனின் உத்திரவும் நானிட்ட தீயால் நாசமாகட்டும் என்று அந்த போப்பின் உத்திரவை கடைத்தெருவில் பகிரங்கமாகத் தீயிட்டுக் கொளுத்தினான். எரிந்தது சிறிய தீதான். ஆனால் அதில் கத்தோலிக்க மார்க்க மாளிகை சடசடவெனச் சரிந்தது யாருக்குக் தெரியும். போப்பின் உத்திரவு பொசுக்கப்பட்ட போது, அந்தக் காட்சியைக் காணவே பயந்து பதுங்கியவர்கள் எவ்வளவு பேர் ஏன்? எத்தனைக் குதிரைப் பட்டாளங்கள் வருமோ, யார் யாரைக் கொல்லுமோ, எந்தெந்த நிரபராதி உயிரிழக்க நேரிடுமோ, குதிரைக்குத் தெரியுமா? யார் குற்றவாளி என்று. ஆகவே அனைவரும் ஒதுங்கி ஓடினார்கள். அங்காடியிலும் அவன் ஒருவனே தனியாக நிற்கிறான்.

அழைப்பு

மார்டின் லூதரை மக்கள் பின்பற்றுவதைப் பார்த்து, மன்னன் ஐந்தாம் சார்ல்ஸ், (King of Charles V) இவன் வாதத்தை (Dub) டப் என்ற பார்லிமெண்டில் போப்பாண்டவர் முன்னால் சொல்லவேண்டுமென அழைத்தான். முன்பு தூக்கி விடுவேன் என்று பயமுறுத்திய அரசன் இன்று, "உன் உயிருக்கு ஆபத்து ஒன்றும் வராமல் நான் பார்த்துக்கொள்ளுகிறேன்." என்ற உத்திரவாகத்தோடு அழைக்கிறான். (Pope Leo X) பத்தாம் போப் லியோவும் இதை ஒப்புக்கொண்டான்.

லூதர் தனியாகவே பார்லிமெண்டுக்குச் செல்லத் தீர்மானித்துவிட்டான். ஆனால் அதற்குள் வேறோர் நண்பன் வேர்த்த முகத்தோடு ஓடோடி வந்து நிற்கிறான். அவனும் தன்னைத் தடுக்க வருகிறானென்று நினைத்து வேகமாக நடக்கிறான் லூதர். மார்டின், நில்! நில்; ஒரு மரணச் செய்தி, எனலும், திடுக்கிட்டுத் திரும்பினான்.

துக்கச் செய்தி

மது நண்பன் ஹெஸ் எதிரிகளால் எரிக்கப்பட்டான். இந்தத் துக்கச் செய்தியைக் கேட்ட லூதர் கொஞ்சமும் மனங்கலங்காது சொல்லுகின்றான், "ஹெஸ் எரிக்கப்பட்டான், ஆனால் அவனிடமிருந்த உண்மைகளையல்ல. "Hess was burnt but not the truth with him,” என்று ஒரு சாதாரண சிரிப்பு சிரித்துவிட்டு வழிமேல் விழி வைத்து நடந்தான்.

பார்லிமெண்டில் வாதாடத் தனியாகவே செல்கின்றான் லூதர் மதத்தை ஒப்புக்கொண்டு, அதில் மறுமலர்ச்சி வேண்டுமென்ற மதப் பேராசிரியன் மார்டின் லூதர் தன் மனச்சாட்சியை மட்டிலும் அழைத்துக்கொண்டு அரச பலிபீடம் நோக்கிச் செல்கின்றான், தடுக்கின்றார்கள் நண்பர்கள், அதிலும் குறிப்பாகக் தன் ஆருயிர்த் தோழன் சாக்ஸன் நாட்டுச் சீமான் பிரடரிக்.

ராணுவ நடை

'பலி பீடம் நோக்கிச் செல்கிறது பரிதாபத்துக்குரிய ஆடு' என்கின்றனர் பச்சாதாப உள்ளத்தினர். கண்களை நீர்த் தேக்கமாக்கினர் கவலை கொண்டோர். "எறித்தூணைத் தழுவப் போகின்றான் ஏமாளி" என்றனர் ஏதுமறியா மக்கள். "விஷக் கடலில் குதிக்கப் போகின்றான்," என்றனர் வயோதிகர்கள். இவன் மதக் கொடுமைகளை எதிர்த்து மன்னன் மன்றத்தில் வழக்காடப் போகவில்லை, உயிரை வெகுமதியாகக் தரப்போகின்றான் கபோதி," பாவம் யார் பெற்ற பிள்ளேயோ! என்றனர் அன்புள்ளம் படைத்தோர். "திரும்பி உயிரோடு வரவேமாட்டான் உடலையும் ஊராருக்குக் காட்டுவார்களோ இல்லையோ, இது ஊர் மக்கள் ஒரு முகமாகக் கொடுத்த தீர்ப்பு

பாராளுமன்றத்தின் தலைவாயில் வரையிலும் தடுக்கின்றான் நண்பன் பிரடரிக். கண்ணீரும் கம்பலையுமாக வாய்குளறிக் கத்துகின்றான். நண்பனை இழந்துவிட்டதாகவே முடிவுகட்டிவிட்டான். பூனை வாயில் சிக்கிய கிளி பிழைக்கப் போவதில்லை, யானை காலடியில் சிக்கிய பூனை உயிர் வாழாது. இழந்துவிட்டோம் அரிய நண்பனை. வாதப் போரில் மாற்றாரைப் புறங்காணச் செய்த மனிதரில் மாணிக்கத்தை மரணத்தின் கோரப்பற்களுக்கிடையே தள்ளி விட்டோம். மதக்கோட்பாடுகளைத் தன் படுக்கையென நினைத்து அதன் மேல் இஷ்டம் போல் புரண்ட ஈனர்களின் செய்கைக்கு ஈம ஓலை வாசித்த ஏந்தலை இழந்து விட்டோம். என் அருமை மார்டின் லூதரை இழந்தே விட்டேன், என்ற கதறலைக் கேட்கின்றான் லூதர்.

ஆயினும் செல்கிறான் அஞ்சா நெஞ்சன். உனக்கு யார் துணை? நீ யாரை நம்பிப் போகிறாய், என வினவுகின்றனர் நண்பர்கள். அரசனுக்கு சட்டமும் செங்கோலும் வாளேந்திய வீரர்களும் துணை. வீரர்களுக்கு வேகமாய் ஓடும் புரவிகள் துணை, புரவிகளுக்குக் குளம்புகள் துணை. காலடிக் குளம்புகளுக்கு செப்பனிடப்பட்ட பாதை துனை. போப்பாண்டவர்களுக்கு பக்கர்கள் துணை. பக்தர்களுக்கு மக்கள் செலுத்தும் பாதகாணிக்கை துணை, பக்தர்களுக்கு பாபமன்னிப்புச் சீட்டு துணை. ஆனால் எனக்கு அறிவே துணை. என்னையே நான் நம்பிச் செல்கிறேன். வீட்டின் மேல் கவிழ்ந்திருக்கும் ஓடுகளின் எண்ணிக்கைக் கதிகமாகப் பேய்கள் என்னை வழிமறித்து பயமுறுத்தினாலும் என் கொள்கையைச் சொல்லியே தீருவேன்.

“I would go even if there were as many devils as there are tiles on the house roof".மார்டின் லூதர் ஆறுதல்

ரை சேருவோம் என்ற நம்பிக்கையில்தான் கடலோடுகிறான் மீன்வலைஞன். புயலுக்குப் பயந்தால் அவன் புறப்பட முடியுமா?

வாழ்வோம் என்ற நம்பிக்கையில்தான் துணை தேடுகிறான் மனிதன். இடையிலே கைவிடப்படுவோம் என்ற அவநம்பிக்கை கொண்டால் மணம் செய்துகொள்ள முடியுமா?

ஊதியம் பெற்று உயிர்வாழ்வோம் என்ற நம்பிக்கையால்தான் தொழிலகம் செல்கிறான் தொழிலாளி. தடியடிபடுவோம் என்று நினைத்தால் அவன் வாழ முடியுமா?

முத்தெடுப்போம் என்ற நம்பிக்கையால்தான் கடலடிவாரத்தில் செல்கிறான் கடல் குளிப்போன். சுரா மீனுக்குப் பயந்தால் அவன் தன் முயற்சியில் வெற்றி பெற முடியுமா?

இறுதியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில்தான் ஆராய்ச்சியில் ஈடுபடுகிறான் விஞ்ஞானி. இடையிலேயே சந்தேகப்பட்டால், இன்றைய அதிசயப் பொருள்களைக் காண முடியுமா? என்றெல்லாம் ஆறுதல் கூறுமுகத்தான் இப்படிச் சொல்கிறான் லூதர், கடைசியாக அவன் நண்பனுக்குச் சொல்லிய ஆறுதல், “My dear brother If I do not come back, if my enimies put me to death, you will go on teaching and standing fast in truth, if you leave, my death will matter little" "ஆருயிர் சோதரா! நான் மீண்டும் திரும்பி வர முடியாமல் எனது பகைவர்கள் என்னைக் கொன்று விட்டால் நீ பிரசாரத்தை உண்மை நெறியில் நின்று விடாது நடத்து. நீ அதைக் கைவிட்டால் என் சாவு பயனற்று வீணானதாகிவிடும்" என்று சொல்லிவிட்டு மேலும் நடக்கின்றான்.

மன இருள்

ஆனால் எதிரிலே இருந்த கட்டடங்கள் கட்டடங்களாகக் காட்சியளிக்கவில்லை. மனதில் ஏதோ ஒரு குழப்பம் அறிவென்ற ஒரே ஆயுதத்தின் துணைகொண்டு செல்கிறான். இதே வேலை செய்யத் துணிந்த இத்தாலிய இளைஞன் சவன ரோலாவைத் தூக்கிலிட்ட காட்சி தன் கண்முன் தோன்றுகிறது. ப்ரூனோவைக் கொளுத்திய தீ தன் உடலைச் சுற்றுவதைப்போன்ற ஓர் உணர்ச்சி. ஜான் விக்லிக் வழி வந்த ஜான் பாட்லியை நடுக்தெருவில் தீ மூட்டி அதில் தள்ளி, ஒரு பக்கம் மன்னனும், மற்றோர் பக்கம் மத குருவும் தீயை ஏறத்தள்ளிய காட்சி தன் கண்முன் தாண்டவமாடிற்று. எனினும் அவன் உள்ளே செல்லத் தீர்மானித்துவிட்டான்.

"நீதியை நிலைநாட்டுகிறேன்" அல்லது அந்தப் பாராளுமன்றத்தின் பாபக் கறையை என் இரத்தத்தால் கழுவுகின்றேன். அதற்காக நீங்கள் உங்கள் கண்ணீரால் கழுவ வேண்டாம், நமது வருங்கால சந்ததிகளாகிலும் இந்தப் பாவிகள் முகத்தில் விழிக்காதிருப்பார்களாக! நமது வாழ்நாளோடு ரோமாபுரியின் பேராசை ஒழியட்டும்! கத்தோலிக்க மார்க்கத்தை சமர்களத்தில் சந்திக்கின்றேன். ஜர்மன் நாடு முழுதுமே இதைச் செய்யத் துணிந்தால் அரசன் ஆளப்போவது யாரை? வெறும் கல்லையும் மண்னையுமா? ஓரிருவரையடக்கலாம், ஓராயிரவரைச் சிறையிடலாம். யார் யார் நம்மை யடக்க அரசாங்கச் செலவில் பணிக்கப்பட்டிருக்கிருர்களோ, அவர்களே இதைச் செய்யத் துணிந்தால் அரசருக்கு ஆளேது ? பிறகு சமாதானத் தூது விடுவான். சமரசம் பேச வருவான். இது, வழி வழி வந்த அரசர்கள் கையாண்ட முறை. ஆகவே அஞ்சவேண்டாம் என மேலும் நடந்தான்.

வெளியே ஆயிரக்கணக்கான மக்கள் கூடி விட்டனர். ஆரவாரிக்கவில்லை. கைதட்டல் கிடையாது. சவத்தின் பின்னால் சென்று, சுடலையில் பிணம் புதைக்கப்பட்ட பின் மெளனமாகத் திரும்பும் மக்கள்போல பார்லிமெண்டு கட்டடம் வரையிலும் பின் தொடர்ந்து சென்ற மக்கள் இவன் உள்ளே நுழைந்ததும், இவர்களும் மெளனமாக வெளியே நின்றுவிட்டனர். மக்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது. மக்களுக்கும் உள்ளே செல்ல ஆசையும் கிடையாது. தவறிச் செல்பவர்களை வெளியே விரட்ட பட்டாளங்கள் அமைக்கப்பட்டிருந்தது. இந்தக் காட்சிக்கிடையே 1521 ஏப்ரல் 17-ந் தேதி டப் (Dub) என்ற பார்லிமெண்ட் சபையினுள்ளே நுழைந்துவிட்டான் லூதர்,

பார்லிமெண்டு

ட்டடத்தினுள்ளே சாளரங்களுக்குக் கட்டியிருந்த பட்டுத் திரைகள் காற்றால் படபடவென்று அடிக்கும் சத்தத்தை தவிர, அவரவர்கள் உட்காரத் தங்கள் தங்கள் நாற்காலிகளை இழுக்கும்போது, கீச் கீச் என்ற சத்தந்தவிர மற்ற எந்தச் சத்தமும் கேட்கவில்லை. போப்பின் முகத்தில் பிரேதக்களை படிந்துவிட்டது. அரசன் கண்கள் அக்கினி கோளங்களாய் விட்டன. மந்திரிப் பிரதானியர் மண்ணால் செய்த பொம்மைபோல் வீற்றிருக்கின்றனர். வாயில்காப்போன் வாயசைக்கவில்லை. நடன மாதர்களுக்கும் நாடக அரங்குக்கும் விடுமுறை. கத்தோலிக்க மார்க்கத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் நாள். மதகுருவின் மானத்தை வாங்கும் நாள். மார்டின் லூதரின் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் நாள். போப்பாண்டவர் ஜெயித்துவிட்டால், இந்தப் பொல்லாதவனைத் தூக்கிலிடலாம். ஆனால் இவனை ஜெயித்துவிட்டால் போப்பாண்டவரை என்ன செய்வது, என்று நீதிக்கும் நட்புக்குமிடையே மன்னன் மனம் ஊசலாடிக் கொண்டிருக்கும் நாள். ஒரு கையில் வாள், மற்றோர் கையில் கேடயம் தாங்கிய வீரர்கள் மாளிகையின் மேல்தளத்தைக் தாங்கும் தூண்கள்போல ஆடாமல் அசையாமல் நிற்கின்றனர். சரவிளக்கு ஆடும் சத்தம் மட்டிலும் சில நேரம் சலசலவென்று கேட்கின்றது. ஒரே மெளனம். இந்த நிலையில் மனதையே நம்பி வரும் மார்டின் லூதர் நடந்து வரும் காலடி சத்தமும் கேட்கவில்லை. காரணம், கீழே விரித்திருப்பது ரத்தனக் கம்பளம். உள்ளே சென்ற லூதர் தான் ஒரு கெளரவக்குடி என்ற காரணத்துக்காக அரசாங்க முறைப்படி அரசனை மட்டிலும் வணங்கி நின்றான். வலப்பக்கம் வீற்றிருக்கும் வயோதிக (வல்லூறை)ப் போப்பை தன் கடைக் கண்ணாலும் பார்க்கவே இல்லை.

இது போப்புக்கு விடுத்த முதல் எச்சரிக்கை. சகிக்கமுடியாத அவமானம். இதை யாராவது கவனித்துவிட்டார்களா என்று இருபக்கமும் கடைக்கண்ணால் பார்க்கின்றார் போப். யாராவது கவனித்திருந்தால் என்ன செய்வது என்ற அச்சம் அவர் உச்சியைப் பிடித்தாட்டியது. சமாளித்து ஓர் தந்திரத்தைச் செய்ய எண்ணினார். அதுதான்! லூதர் தன்னையும் வணங்கியதைப் போலவும், தானும் அவனுக்கு ஆசீர்வாதம் செய்ததைப் போலவும், தானே வலிய கையை உயர்த்திவிட்டார். இந்தக் கோமாளித்தனம் வெளியே எங்கேயாவது நடந்திருந்தால் மண்டபமே கொல்லென்று சிரித்திருக்கும். ஆனால், தன் அடிகளையே அளந்து போடவேண்டிய அரசன் தர்பாரல்லவா. அவரவர்கள் வாய்க்குள்ளேயே சிரித்துக்கொண்டனர்.

வாதம்

கேள்வி :- உன் கருத்துக்கள் சரி என்று நீ நம்புகிறாயா?

பதில் :- ஆம். கேள்வி :- அவை உன்னுடையவைதானா ?

பதில் :- ஆம்.

கேள்வி :- உனக்கு ஒரு நாள் அவகாசம் தருகிறோம். நன்றாய் யோசித்துக் கூறு.

பதில் :- சரி. சபை கலைந்தது.

மறு நாள் காலை.

கேள்வி :- ஏதாவது மாற்றமுண்டா?

பதில் :- இல்லை. என் கருத்தே சரி. என்றான்.

மேலும் போப்பின் கொடுமைகளை எடுத்துச் சொன்னான். ஒரு தனி மனிதனுக்காக அல்ல மதம். மக்களுக்காக மதம். பாவம் செய்த மக்களை போப் மன்னிக்கிறார். போப்பின் அக்ரமங்களை யார் மன்னிப்பது ? மதத்தால் மக்கள் அழிந்துவிடக்கூடாது. அறிவு பெறவேண்டும். ஆராய்ச்சிக் கூடமாகவேண்டும். பயம் தெளியவேண்டும். பாபத் தூண்டுதலிலிருந்து மக்கள் தப்பிவிடவேண்டும். மரணமே வருவதானாலும் மக்களுக்குத் தைரியம் வேண்டும். நீதிக்காகப் போரிடவேண்டும். நேர்மையை நிலைநாட்டவேண்டும். சபை முன் ஒன்று, சாதாரண மக்கள் முன் ஒன்று, என்று புறம் பேசாதிருக்கவேண்டும். பயந்தவரை மிஞ்சி, பகைவரைக் கெஞ்சி வாழும் நிலை அடியோடு மாறவேண்டும், பல நாட்கள் பட்டினியில் கிடந்த மக்கள் அறுவடைக் காலத்தில் அரை வயிற்றுச் சோற்றுக்கு சேமித்து வைத்திருக்கும் தானியத்தைப் பாப மன்னிப்பு சீட்டு என்ற பேரால் தட்டிப்பறித்துக் கொள்ளையடிக்கும் இந்தச் சண்டாளர்கள் ஒழிய வேண்டும். போப்புக்குப் பாதகாணிக்கை செலுத்த வேண்டுமே என்ற பயத்தினால் ஏழைகள், கொள்ளைக்காரர்களாய் திருடர்களாய் மாறியிருக்கும் கொடுமை நமது தாயகத்தின் மண்ணிலிருந்து ஒழியவேண்டும். பொது நட்பு உலவ வேண்டும். மதிப்பு மலரவேண்டும். மக்களுக்கு நல்லொழுக்கம் வளரவேண்டும். தன் தவறை தானே உணர்ந்து மனம் நோகும் மாபெரிய சக்தியை நாம் அவர்களுக் களிக்க வேண்டும். நான் ஆண்டவனை நம்புகிறேன். அவனிடம் அழியாத அன்புகொள்கிறேன். மாறாத பக்தி செலுத்துகிறேன். எனது மாற்றானையும் மன்னித்துவிட அவனிடம் மன்றாடுகிறேன். அவன் பேரால் மக்களை ஏமாற்றும் சடங்குகள் எதுவாயினும் வெறுக்கிறேன். யார் செய்தாலும் எதிர்க்கிறேன். இந்த இடம், அந்த இடம், சொந்த இடம் என்ற பேதமில்லாமல் எந்த இடத்திலும் எதிர்க்கிறேன். ஓராயிரம் ஈட்டிகள் என் உடலில் பாய்ந்து குடல் சரிந்து நான் கோர மரணம் எய்துவதானாலும் என் கடைசி மூச்சுல்லவரையிலும் இக்கொடுமைகளை எதிர்த்தே தீருவேன். கடலுக்கு இப்பாலுள்ள நாடுகளிலும் சரி, அப்பாலுள்ள நாடுகளிலும் சரி எங்கெல்லாம் இந்த நாசவேலை நடக்கிறதோ அங்கெல்லாம். என் ஆவேசக்குரல் கொண்டு எதிர்த்தே தீருவேன். இந்த நோய் உலகில் எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம் ஒழியவேண்டும்.

நான் ஒரு நல்ல கிருஸ்துவனாக, அபிமானத்தின் தாயகமாக, அன்பின் சின்னமாக, அருளாளன் இயேசுவின் உண்மைத் தொண்டனாக இருக்க எண்ணுகின்றேன்.

மரச்சிலுவை இயேசுவின் உயிரைப் போக்கியது. இதோ இந்த பொற்சிலுவை போப்பை ராஜ போகத்தில் வைத்திருக்கிறது. இயேசுவின் முடிவு கண்டு எந்த நல்ல கிருஸ்தவனும் ரத்தக் கண்ணீர் சிந்துவான். ஆனால், அந்த கோர நிகழ்ச்சியைக் தன் இன்ப வாழ்வின் ஏணியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார் போப். ஆகவே எதிர்க்கிறேன்,

தாய் ஈன்றால், தந்தை படிக்க வைக்கிறான். மதம் அவனை மனிதனாக்க வேண்டும். மதம் ஓர் வியாபாரப் பொருளல்ல. தனியுடைமையுமல்ல. அரசர் ஐந்தாம் சேர்லெஸ் அவர்களின் ஆனையென்ற முத்திரையே அதற்கிருந்தாலும், இன்று நீர்பூத்த நெருப்புபோல் இருக்கும் மக்கள், நாளை எரிமலையானாலும் ஆவார்கள். அன்றந்த ஆவேச அணையை ஐந்து விரலால் தடுத்துவிட முடியும் என்பது வீராப்பில் முடியும், விவேகமற்ற செயல், வீரம் எல்லாவற்றிற்கும் பயன்படாது. விவேகம் வீரத்தை எத்தனையோவிடங்களில் அழித்துவிட்டிருக்கிறது. அதை வேந்தர் எண்ணிப்பார்க்க வேண்டும். ஆத்திரத்தால் நாம் அறிவை இழந்து விடக்கூடாது, என்று சொல்லி வாய் மூடுவதற்குள் திட்டினார்கள் சபைபோர்கள். சீறினான் சிங்காதன பொம்மை. சொல்லம்பால் தாக்கின அங்கு கூடியிருந்த சோற்றுக் துருத்திகள். பட படவெனப் பல்லைக் கடித்தன அப்பாராள் வோனைத் தாங்கி நின்ற மாமிச மலைகள்,

ஆனால் அங்கு நின்ற வீரன் ஒருவன் மட்டிலும் லூதரின் ஆணித்தரமான பேச்சைக் கேட்டு ஆமோதிப்பவன் போல் தலை அசைத்துவிட்டான், அதைப் பார்த்து கொக்கரித்தெழுந்தான் கோமான். ஏன் தலையாட்டினாய்! எங்களைவிட உனக்கு அதிகம் தெரியுமோ! உள்ளக்கிடக்கையை வெளிக்காட்டத் தலையாட்டும் சங்கீத ரசிகன்போல.

தன்னையுமறியாமல் தலையாட்டி விட்டான் அப்பேதை. அது மன்னன் மாளிகை, அதில் தான் ஓர் பணியாள். நீதிக்கும் அநீதிக்கும் நீர்மட்டம் பார்க்கும் நேரம். அதிலும் தான் செய்தது மன்னனுக்கு முற்றிலும் விரோதமான செயல் என்பதை மறந்தே போனான். வெடித்த குரலோடு கேட்ட வேந்தன் வினாவுக்குத் தக்கதோர் பதிலளிக்கத் தன்னைத் தயார் செய்து கொண்டான். அந்த சமயோசித புத்திக்காரன்.

ஒரு கையில் வாள், மற்றோர் கையில் கேடயம் இந்த நிலையில் முகத்தில் ஈயாடியது. இரு கைக்கும் வேலை. ஆயுதங்களை மறு உத்திரவுவரை கீழே வைக்கக்கூடாது. இது இராணுவக் தலைவனின் கண்டிப்பான கட்டளை. வேறுவழி யில்லை. ஆதலால் முகத்தில் உட்கார்ந்த ஈயைத் தலையாட்டியே துரத்திவிட்டேன் தார்வேந்தே! தவறாக எண்ணக்கூடாது. தமியேனை மன்னிக்க வேண்டும். "பிழைத்துப்போ!" புரவலன் இட்ட பிச்சை. தப்பினான் வீரன்.

அவன் ஒருவனாகிலும் உன்னை ஆதரித்தானோ என்னவோ என்று பார்த்தோம். அதுவுமில்லை, அதுவும் பொய்த்துவிட்டது. இப்போதென்ன சொல்கிறாய். இப்போதும் அதையே சொல்கிறேன். என்னை நீங்கள் எவ்வளவு பயமுறுத்தினாலும் நான் என் கருத்துக்களை சரி, சரி என்றுதான் சொல்வேன். என் கருத்துக்கள் தவறு என்று நான் ஒப்புக்கொள்ள வேண்டுமானால் தக்க ஆதாரங்களைக் கூறுங்கள். என்னை நீங்கள் கொன்றுவிடலாம். ஆனால் விளையப்போகும் பயன், விளக்கை அனைத்துவிட்டு இருட்டைக் தானாக வரவழைக்கப் போகிறீர்கள் என்பதுதான். ஓடி ஒளியும் கோழையல்ல நான். இங்கே நான் தனியாக நிற்கிறேன். என்னால் ஒன்றும் செய்ய முடியாது. கடவுள் என்னேக் காப்பாற்றுவார், ஆமென். “Here I stand. I cannot do otherwise, God help me, Amen' என்று கூறித் தன் வாதத்தை முடித்தான்.

மக்கள்

இதற்கிடையில் வெளியே மறுகாட் காலை கூடிய மக்கள், நேற்று உள்ளே சென்ற லூதர் இன்றுவரை வெளியே வரவில்லை. சவன ரோலாவின் சந்ததியல்லவா இவன். அவனை அனுப்பிய இடத்துக்கே இவனையும் அனுப்பியிருப்பார்கள். அல்லது ப்ரூனோவைப் பொசுக்கிய தீயில் கொஞ்சம் மிகுதியிருக்கும் அதில் தள்ளியிருப்பார்கள். ஏதோ ஒரு அதிசயத் செய்திக்காகக் காத்துக் கொண்டிருக்கும் மக்களைப்போலக் காத்துக்கொண்டிருந்தார்கள். கோட்டைச் சுவர்களை அணுக முடியாது. அவ்வளவு காவல்.

உயிரோடு வெளியே வந்துவிட்டான். மாண்ளவன் மீண்டான் என்றனர் மக்கள். மலைவாயில் மறைக்க சூரியன் கீழ்வாயிலில் தோன்றினான் என்றனர். குதூகலக் கடலில் குதித்தான் பிரடரிக். அணைத்துக்கொண்டான். ஆரவாரித்தான். வாள் முனையைத் தன் வாயசைப்பால் வென்ற வீரனே! வருக! வருக! என்று வரவேற்றனர் மக்கள். ஐந்தாம் சேர்லெசை தன் அறிவால் பணியவைத்த அஞ்சாநெஞ்சனே வருக! வருக! புலிவேடம் போட்டுத் திரிந்த பொல்லாத போப்பின் கதியைக் கலங்கவைத்த கர்மவீரனே! வருக! வருக ! மக்கள் துன்பத்தைத் துடைத்த மாவீரனே! மார்டின் லூதரே! வருக! வருக! மதத்தை அறிவுக் கண்கொண்டு ஆராய்ந்து அக்ரமக்காரர்களின் அயோக்கியத்தனத்தை அஸ்தமிக்கச் செய்த அறிவின் குன்றே வருக! வருக! யாராலும் அசைத்துப் பார்க்க முடியாது என்று எக்காளமிட்டிருந்த இதாலி கழுகுகளில் இழிதன்மையை ஈட்டியால் குத்திச் சாய்த்த ஏந்தலே வருக ! வருக! என வாயார வாழ்த்தி வரவேற்றனர் வாயிலில் கூடியிருந்த மக்கள்.

உத்திரவு

இதற்குள் எதிரிகளின் படையெடுப்பு என்ற சங்கநாதத்தைக் கேட்டான் சார்லெஸ். போர் முகங் காணவேண்டும்! அதற்கு போப்பின் ஆசீர்வாதமும், உத்திரவும் தயவும் வேண்டும். மார்ட்டின் லூதரை மனமார மன்னித்துத் தான் முன்பு தந்திருந்த வாக்குத்தத்தத்தின்படி உயிரோடு வெளியே அனுப்பிய மன்னன், அடுத்த வினாடியே அவன் எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் அகப்பட்டுக் கொண்டான். ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டானே இந்த உலுத்தனை என்று கோபங்கொண்ட போப்பின் மனச் சாந்திக்காக, "மார்டின் லூதரின் உடலைக் கொண்டு வரவேண்டும், மண்டையை மயானத்தில் சேர்க்க வேண்டும், அவன் எழுதிய நூல்களைத் தீயிலிட வேண்டும், அவன் இருக்க இடமோ, உடுக்க உடையோ, உண்ண உணவோ யாரும் அளிக்கக் கூடாது. அப்படிச் செய்பவர்கள் அரசாங்கப் பகைவர்கள். சட்ட விரோதிகள். நாட்டுத் துரோகிகள். மத விரோதிகள். சமூக விரோதிகள். ஆகவே உடனே பிடித்துக் கொடுங்கள் லூதரை" என்ற கட்டளையைப் பிறப்பித்துவிட்டான். போப் புன்னகை புரிந்தான். அறிக்கைகள் மக்கள் நடமாடும் இடங்களிலெல்லாம் ஒட்டப்பட்டது.

இப்படி எரிந்துகொண்டிருக்கும் இந்த நெருப்புக்கு நெய்யை வார்த்ததைப் போலக் கிளம்பியது மற்றோர் கண்டன அறிக்கை இங்கிலாந்திலிருந்து, எட்டாம் ஹென்றி, எந்த போப்பின் கட்டளைகளை மீறித் திருமணம் செய்துகொண்டானோ அந்த ஆங்கில நாட்டு மன்னன் எட்டாம் ஹென்றியே போப்பை ஆதரிக்கும் முறையில் லூதரைக் கண்டித்து அறிக்கைகள் விட்டான். அதன் காரணமாக அவன் நாட்டிலும் ஐந்தாம் சேர்லெஸின் அதிகாரத்துக்குட்பட்ட ஜர்மன் நாட்டிலும் போப்பாண்டவரின் புனித பூமி என்று நினைத்துக் கொண்டிருந்த ரோமாபுரியிலும் மத ஓடத்தில் ஏறிய மாந்தர்கள் அறியாமையின் காரணமாக அரசன் கட்டிளைக்குக் கீழ்படிந்து சில பலவிடங்களிலே லூதரின் நூல்களைத் தீயிட்டுக் கொளுத்தினார்கள். "நூல்களை எரிக்கலாம், அதனால் ஏற்பட்ட மனக் கிளர்ச்சியை யாராலும் அடக்கமுடியாது" என்றே அதை ஒரு சாதாரணமெனக் கருதினான் லூதர்.

காணவில்லை

னால் லூதரைத் தேடிக் கொண்டிருக்கும்போது திடீரென மறைந்து விட்டான். எங்கே சென்றான், யாரால் ஒளித்துவைக்கப்பட்டிருக்கிறான் அடுத்து என்ன செய்யத் திட்டமிட்டிருக்கின்றன், என்ற கிளர்ச்சியும் சந்தேகமும் பயமும் அரசாங்கத்தையும் போப்பையும் பிடித்தாட்டின. ஆனால் லூதரை சாமர்த்தியமாக அவன் தோழன் பிராட்ரிக் மறைத்துவிட்டான் அதனால் அவ்வீரன் வெளியே வர அனுமதிக்கப்பவே இல்லை தன் அதிகாரத்துக்குட்பட்டுத் தனக்குச் சொந்தமான சாக்ஸன் நாட்டிலிருந்து ஒரு மலையில் ஒளித்து வைத்து விட்டான். லூதரின் துண்டித்த தலையைக் காட்டிப் பரிசுபெறக் காத்திருந்தவர்கள் துடியாய்த் துடித்தனர். ஒற்றர்கள் ஒரு பக்கம், போப்பின் கையாட்கள் ஒரு பக்கம், மதக் தலைவர்கள் ஒரு பக்கம், மார்க்க போகர்கள் ஒரு பக்கம் இரவும் பகலுமாகத் தேடியும் லூதரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

அவனை யார் ஒளித்து வைத்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும், விட்டேனா பார் என்றெல்லாம் வெத்து வேட்டுக் கிளப்பிப் பார்த்தான் மன்னன். இந்த நிலமைக்குப் பிறகுதான், லூதரின் நூல்களைப் படிக்கக் கூடாதென்று வைராக்கியத்தோடிருந்த மக்களெல்லாம் படிக்க ஆரம்பித்தார்கள்.

மதப் போர்

விவசாயிகள் உணர்ந்தனர். மதப் போர் ஆரம்பமாகியது. மதப் போர் உள்நாட்டுப் போராக மாறியது. தான் ஏற்படுத்திய மதத்தால் தனது நாட்டு மக்கள் இரு பிரிவினராக ஆயுதந் தாங்கிப் போர் நடத்துவதைப் பார்த்தான். உடன் மாற்றம் உள்ள மாற்றமாக இருக்கவேண்டுமென்று விரும்பினான். அமைதி தேவை என்றான் ஆனால் அவன் வெளியில் பகிரங்கமாக மக்களிடம் சொல்ல முடியவில்லை.

மக்கள் சபை பலமுறை கூடியது. ப்ராடெஸ்டெண்டுகள் அழைக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் கொள்கைகளை சேர்லெஸ் ஒப்புக்கொள்ளவில்லை. Protestant League என்ற சங்கந்தான் மதச் சண்டையை நடத்தியது. தன் அடக்க முடியாக பரிதாபத்தால் பல முறை வெளியே ஓடிவந்து மக்களை நேரடியாகச் சந்தித்து, ஆயுதத்தைக் கீழே வைக்கும்படிக் கேட்டுக்கொள்ளலாமா என்று லூதர் துடியாய்த் துடிப்பான். ஆனால் நண்பன் இவனை விடுவதில்லை. "ஓர் உண்மைக் கருத்து நாட்டில் பரவிய போதெல்லாம் இப்படித்தான் ரத்த ஆறு ஓடியிருக்கிறது." ஆனால் இதைப்போன்ற நிகழ்ச்சிகள் நீடித்து நடப்பதில்லை. சில நாட்கள் கடந்து இறுதியில் ஓர் நல்ல முடிவை அடையும். அதுவரைதான் மறைவாயிருப்பது நல்லதென அடிக்கடி எச்சரித்து வந்தான். ஆனால் வன்மைமிக்க அவன் உடல் நலிந்துவிட்டது. அந்த சிந்தனைச் சிற்பியின் கண்களில் ரத்தக் கண்ணீர் வடிய ஆரம்பித்தது.

இதற்கோர் முடிவே கிடையாதா? என்ற ஏக்கத்திலேயே தூக்கத்தை மறந்தான். உடல் நலம் மேலும் குன்றியது தான் பெறுதற்கரிய பெருந்தனமாகவே இவனைக் கருதி போஷித்து வந்தான். எனினும், அன்றாடம் மக்கள் மதச் சண்டையிலே மாறும் எண்ணிக்கையைக் கேட்டுக் கேட்டு பெரு மூச்சுவிட்டான்.

இதற்கு இடையில் மத குருமார்களுக்குள் சாதகமாக அடித்துக்கொண்டிருந்த காற்று சீர்திருத்தவாதிகள் பக்கம் அடிக்க ஆரம்பித்தது. சீர்திருத்தவாதிகள் கை ஓங்கவும், மதவாதிகள் கை தாழவுமான நிலை ஏற்பட்டதற்குக் காரணம், மதத்துக்குக் கவசம்போல் விளங்கிய ஐந்தாம் சார்லெஸ் நாட்டைவிட்டு ஓடிவிட்டான் என்ற செய்திதான்.

எப்படி உள் நாட்டிலே இருந்த மக்கள் இரு பிரிவாகப் பிரிந்து ஆயுதங்களை ஏந்தி சண்டையிட, ஆரம்பித்தார்களோ, அதைப்போலவே சேர்லெஸ் மன்னன் ஓடிவிட்டான் என்ற செய்தியைக் கேட்டு. ஒரு சாரார் வெற்றி கொண்டாடவும், மற்றோர் சாரார் துக்கம் கொண்டாடவுமானர்கள்.

மறைவு

தையறிந்த நண்பன் பிரடரிக் இந்த சந்தோஷச் செய்தியை லூதருக்கு அறிவிக்க வருகின்றான். ஆனால் அதற்குள் லூதர் தன் நீலக் கண்களை மூடிக் கடைசி வணக்கத்தை நாட்டுக்குக் செலுத்தி மீளாத்தூக்கத்திலாழ்ந்து விட்டான். இப்போது இவனுக்கு வயது 72. நண்பன் துக்கித்தான், எனினும், செடியில் மலர்ந்த மலர் கொய்வாரின்றி செடியினடியிலேயே வீழ்ந்து வாடி விடுவதைப் போன்ற இந்த வாழ்க்கை என்ற தத்துவம் நன்றா யுணர்ந்தவனாகையால் கொஞ்சம் கொஞ்சமாக மன ஆறுதல் கொண்டான். மக்கள் கண்ணீர் வடித்தனர். பல மன்றங்கள் துக்கச் செய்தியை அனுப்பியது. எனினும் லூதரை இன்னும் காண்கிறார்கள் ப்ராடெஸ்டெண்டு மத உருவிலே. லூதரின் கல்லறை இன்னும் பல மத குருமார்களுக்குச் சிங்கக் கனவாகத் தோன்றுகிறது ஐரோப்பாவில்.

சட்ட உரிமை

சேர்லெசுக்குப் பிறகு வந்த மன்னனால்-ப்ராடெஸ்டெண்டு இயக்கம் 1555-ல் சட்ட அனுமதி பெற்று நாட்டில் உலவியது. அகில ஐரோப்பாவிலும் பரவி இருந்த Reformation of Europe ஐரோப்பாவின் சீர்திருத்தம் என்ற இயக்கத்தின் தந்தை இவன்தான்.

லூதரின் வாழ்நாள் முடிந்தது. ஆனால் அவன் நிலைநாட்டிய கொள்கைகள் இன்னும் நிலவுகின்றன. வாழ்க லூதரின் அஞ்சாத வீரம்!

மணமே செய்து கொள்ளாத-உலக இன்பத்தை ஒன்றையுமே அறியாத-சேய் வாழ மருந்துண்ணும் தாய்போல் மக்களை உய்விக்கக் தன் வாழ்நாள் முழுவதும், வாளோடு, சட்டத்தோடு, போப்பாண்டவரோடு, மதக் கொடுமையோடு, மதக் கூண்டில் அடைக்கப்பட்ட மக்களோடு அடிக்கு அடி போராடி வெற்றிகண்ட வீரன் லூதரின் கல்லறையில் இப்படி எழுதி வைத்திருக்கின்றான் நண்பன்.  He was hospitable kindly and gentle in his home life-but in his struggles with his foes he often displayed violence and even coarseness offensive to modern taste.

அவன் தன் குடும்ப வாழ்க்கையில் உபசரிக்கும் மனப்பான்மையோடும் அன்பாகவும் சாந்தமாகவுமிருப்பான். ஆனால் பகைவர்களோடு போரிலீடுபட்டாலோ நவீன முறைகளுக்கு மாறாக முரட்டுத்தனமாகப் போர் செய்வான்.

முடிந்தது மார்ட்டின் லூதரின் வாழ்நாள். ஆனால் இன்னும் முடியவில்லே நம் நாட்டில் மதக் கொடுமைகள். என்ன செய்யலாம்?

முடிவு

னால் இவன் இறந்த பிறகும் விடவில்லை. இவன் பெயருக்குக் கலங்கத்தை யுண்டாக்க வேண்டும் என்றெண்ணிய சில கபடர்கள், "லூதர் வயிறு வெடித்து இறந்தான்" என்றனர்.

மக்கள் சிரித்தனர்.