மாவீரர் மருதுபாண்டியர்/இரகசியத்திட்டம்
11
இரகசியத் திட்டம்
பொது மக்களது நினைவாற்றல் மிகவும் பலவீனமானது என்ற அரசியல் அறிஞர் ஒருவரது கணிப்பு சிவகங்கைச்சீமை மக்களைப் பொறுத்த வரையில் அன்று நூற்றுக்கு நூறு உண்மையாக இருந்தது. கி.பி. 1772ல் நடைபெற்ற காளையார்கோவில் போரில் சிவகங்கை மன்னர் முத்துவடுகநாத பெரிய உடையாத் தேவர், வெள்ளையரது குண்டுபட்டு வீரமரணம் அடைந்தார். அதனால், சிவகங்கைச் சீமையை ஆக்கிரமித்த ஆர்க்காட்டு நவாப்பும், கும்பெனியாரும், மக்களது உடமைகளைச் சூறையிட்டு சொக்கப்பானை கொளுத்திக் கொண்டாடிய நேரம். தலைமை இல்லாது தடுமாறிய மக்களது வேதனை, விடியாத இரவாக நீண்டுகொண்டு இருந்தது. விரக்தி கொண்ட மக்கள் பொறுமை இழந்து, தங்களது மண்ணை மாசுபடுத்தும் அன்னிய அதிகார வர்க்கத்தை விரட்டியடிக்க எட்டு ஆண்டுகாலம் போராடிப்பார்த்தனர். பலன் இல்லை, இத்தகையதொரு இக்கட்டான சூழ்நிலையில் தாயகத்தை மீட்பதற்கு ஓடோடி வந்தனர் மருது சகோதரர்கள். அவர்களுடன் திண்டுக்கல் கோட்டையில் இருந்து மைசூர் மன்னர் ஐதர்அலிகான் வழங்கிய ஐயாயிரம் குதிரை வீரர்களுடன்.[1] கும்பெனியாரும் நவாப்பும் கூட்டாக பங்கு போட்டுக் கொண்டு இருந்த சிவகங்கை அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
திருப்பூவணம், சிவகங்கை, ஒக்கூர், திருப்பத்துார் ஆகிய ராணுவ நிலைகளில் இருந்து நவாப்பின் படைகள் துரத்தியடிக்கப்பட்டன. கும்பெனியாரது கூலிப்படைகளும் ஓட்டம் பிடித்தன. மீண்டும் சிவகங்கைச்சீமை மானம் மிகுந்த மறவர் சீமையாகியது. குழப்பங்களும் அரசியல் கெடுபிடிகளும் இல்லாது மக்கள் வாழத் தக்க அரசியல் அமைப்பை சிவகங்கை சேர்வைக்காரர்கள் ஏற்படுத்தினர். முத்துவடுகநாத பெரிய உடையாத் தேவரது விதவை ராணி, வேலுநாச்சியார், சிவகங்கை அரசின் தலைவியாக இருந்தாலும், உண்மையான ஆட்சி மருது சேர்வைக்காரர் கைகளில் இருந்ததால் மக்கள் ஆறுதல் பெறத்தக்க பல அரிய செயல்களை அவர்கள் நிறைவேற்றி வைத்தனர். அதனால் சாதாரண மக்கள் ராணியைவிட பிரதானிகளான மருது சேர்வைக்காரர்களைத் தான் மிகுதியாகத் தெரிந்து பாராட்டிப் புகழும் வாய்ப்பு இருந்தது.
மதுரைக்கோபுரம் தெரியக்கட்டியவர்கள் எனப்புகழத்தக்க வகையில் காளையார்கோவிலின் தெற்கு கோபுரத்தை விண்ணகரமாக எழுப்பினர். அதனையடுத்த ஆணைமடு தெப்பக்குளத்தை அழகாகவும் ஆழமாகவும் அமைத்து முடித்தனர். தேனாற்று மாதவர் எனக் கல்வெட்டுக்கள் குறிப்பிடுகிற குன்றக்குடி குமரனது திருக்கோயிலையும் மருதாபுரி குளத்தையும் சீர்திருத்தி அமைத்தனர். “தென் காட்டுத் திருப்பத்துார் திருத்தளியான்” எனத் தேவாரம் சிறப்பிக்கின்ற திருப்பத்துர் ஆலயத்தையும் திருமதிலையும் திறம்பட அமைத்தனர். ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் சூரக்குடி விசயாலய தேவனால் அமைக்கப்ப்ட்டு மதுரை சுல்தான்களால் சிதைக்கப்பட்ட அந்த ஊர் கோட்டையை அழகுற அமைத்தனர். அன்னசாலை, சத்திரம், இன்னும் கண்மாய்கள், வரத்துக்கால்கள், குளங்கள், கலுங்குகள், எனக் குடிமக்கள் தேவைகள் நிறைவுற அறப்பணிகள் பல அவர்கள் ஆற்றினர். மற்றும் அவர்களுக்கு காலத்தால் மக்கள் செய்த நன்றியினை நெஞ்சில் நிறுத்தி நன்றிக்கடனாக பல தானங்களையும் அவர்கள் வழங்கினர். பசிக்கு பழஞ்சோறு வழங்கிய மூதாட்டிக்கு “பழஞ்சோற்று ஏந்தல்”, கூழ் வார்த்த குடிமகனுக்கு “கூமூர்”, பணியாரம் அளித்துப் பசியாற்றிய பெண்ணுக்கு “பணியார ... ... நல்லூர்” ஆபத்தின் பொழுது அடைக்கலம் அளித்துக் காப்பாற்றிய சேசு சபைத் தொண்டரது தேவாலயத்திற்கு மாறணி என்ற சிற்றுார். மதுரைச் சொக்கர் ஆலயத்து திருவிளக்குச் செலவிற்கு “ஆவியூர்”; குன்றக்குடி குமரர் அருள்பெற செம்பொன்மாரி கிராமம்; மயூரகிரிக் கோவை பாடி வந்த புலவருக்கு மருதங்குடி கிராமம் இவையனைத்தும் மருது சேர்வைக்காரர்கள் முள்ளால் வரைந்து, சொல்லால் வழங்கிய தானங்கள்.
இவ்விதம், சிவகங்கைச் சீமையின் ஒப்பற்ற ராஜ மான்யராக அரசியலை நடத்திய மருது சேர்வைக்காரர்களின் மாண்புகளை
மக்கள் சில நிமிடங்களில் மறந்துவிட்டனர். பேராண்மையும், எளிய பண்புகளும் பெற்று இருந்த அந்தப்பிரதானிகளின் புகழுரு வியாபித்து நின்று அவர்களின் சிந்தனையில் பொய்மையான ஆடம்பரமும் விளம்பரமும் துணையாக விளங்கிய பழமையின் பிரநிதி பற்றிய கவர்ச்சி படர்ந்தது. கும்பெனியாரது சூழ்ச்சியைப் புரிந்து கொள்ளாமல், சிவகங்கைச் சீமை அரச பரம்பரையினர் பற்றி அக்கரை கொண்டனர். சிவகங்கைச் சீமையின் அரசராக ராணி வேலு நாச்சியாரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அன்னாரது மகளை மணந்து. சிவகங்கைச் சீமையின் அரசரான சக்கந்தி வேங்கன் பெரிய உடையாத்தேவர் உயிருடன் இருக்கும்பொழுது, சோழபுரத்தில், “சிவகங்கை ஜமீந்தாராக” படைமாத்தூர் ஒய்யாத்தேவரை கும்பெனியார் விளம்பரப்படுத்த வேண்டிய காரணம் என்ன என்பதை அவர்கள் ஆழமாகச் சிந்திக்கத் தவறினர். சிவகங்கை மண்ணின் குடிகள் என்ற முறையில் புதிய ஜமீந்தாருக்கு தங்களது ராஜ விசுவாசத்தைத் தெரிவித்துக் கொள்ள அவர்கள் துடித்தனர்.
புதிய அணியின் பேராளர்களாக மாறினர். எத்தகைய சிறந்த இலட்சியத்திற்காகப் போர்க்கோலம் பூண்டு பரங்கியரை எதிர்க்கப் புறப்பட்டு இருக்கிறோம் என்ற பின்னணியைக் கூட அவர்கள் மறந்துவிட்டனர். அவர்கள் புரிந்து கொண்ட அரசியல் அவ்வளவுதான். ஆனால் அக்கினியூவின் திட்டம் அருமையாகச் செயல்பட்டது; நிறைவுபெற்றது. அந்நிய ஏகாதிபத்தியத்தை ஆவேசமாக எதிர்த்த மருதுசேர்வைக்காரர்களால் மிகப் பொறுப்பான பணியில் அமர்த்தப்பட்டிருந்த கோட்டைச் சேர்வைக்காரர் போன்ற நம்பிக்கைக்கு உரிய முக்கிய புள்ளிகள் கூட எதிர் அணியை நோக்கி விரைந்தனர்.[2] கிளர்ச்சிக்காரர்கள் அணி பலவீனமடைந்தது என இங்கு குறிப்பிட வேண்டியதில்லை. தென்னிந்திய வரலாற்றில், எந்தப்போரின் பொழுதும் தாக்குதல் தொடுக்கும் நேரத்தில் காலை வாரிவிடும் கயவர்கள் நிறைந்த அணி, இலட்சியத்திற்காக எப்படித் போராட முடியும் இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் மருது சேர்வைக்காரர்கள் சிறிதும் சங்கடப்படாமல் தெளிவான முடிவிற்கு வந்ததுதான் மிகவும் வியக்கத்தக்க செயலாகும். அவர்கள் முன்னர் இரண்டு வழிகள் துலக்கமாகத் தென்பட்டன. முதலாவது, மருது சேர்வைக்காரர்களும் பலவிதமான இடையூறுகளுக்கு மிடையிலும் அவர்களைச் சார்ந் துள்ள நாட்டுப்பற்றுள்ள நல்லவர்களும், இரண்டாவது புதிய ஜமீன்தாருக்கும் பரங்கிகளுக்கும் விசுவாசிகளாக, மனம் மாறிய வர்களாக, சரணடைதல், அல்லது தங்களது இலட்சியத்தில் நம் பிக்கை கொண்டவர்களாக முடிவைப்பற்றி சஞ்சலப்படாமல் தொடர்ந்து, இறுதிவரை போராடுவது, இந்த இரண்டாவது வழிதான் மருதுசேர்வைக்காரர்களுக்கு இணக்கமானதாக இருந்தது. இதே வழியைத்தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தன்னேரிலாத தியாகி மைசூர் திப்புச்சுல்தான் தேர்ந்தெடுத்து இருந்தது அவர்களது நினைவில் பசுமையாக இருந்தது. தமது பேரரசைச் சுற்றிப் பொறாமையுடன் காத்திருந்த தேசத்துரோகிகளான மராத்திய மன்னரையும். ஹைதராபாத் நிஜாமையும், திருவாங்கூர் அரசரையும் அவர்களது பேராதரவாளராக ஓடிவந்த கும்பெனியாரையும் தன்னந்தனியே எதிர்த்து நின்று இறுதி மூச்சு வரை போராடி, விழுப்புண்ணுடன் களத்தில் வீழ்ந்து மடிந்த, அந்த மாவீரனது மகத்தான வரலாற்றை அவர்கள் மறந்து விடவில்லை.
அரண்மனைச் சிறுவயல் காட்டில் பிடிபட்ட போராளி ஒருவன் துரோகியாக மாறினான். குழைந்து, இழைந்து, பேசிய அக்கினியூவின் ஆசைவார்த்தைகளில் மயங்கி மனம்மாறிய அந்தக்கழிசடை, காளையார்கோவில் கோட்டைக்குச் செல்லும் இரகசியப்பாதையைக்காட்டிக் கொடுத்ததுடன், காளையார்கோவில் கோட்டைப் பாதுகாப்பு நிலைகள் பற்றிய அரிய தகவல்களையும் தெரிவித்துவிட்டான்.[3] முப்பத்து இரண்டு நாட்களாக அங்குலம் அங்குலமாக போரிட்டு முன்னேற முயன்றும் போராளிகளது எதிர்ப்பினால் பின்னடைந்து பரிதவித்த கும்பெனியாருக்கு, இதைவிடச் சிறந்த உதவியை வேறு யார் செய்ய முடியும்? அப்புறம் என்ன – காளையார்கோவில் போரின் முடிவு தெரிந்த ரகசியமாயிற்று அன்றைக்குச் சரியாக முப்பத்து ஏழு ஆண்டுகளுக்கு முன்னால் ஓராண்டுக்கு மேல் நீடித்த மதுரைகோட்டை முற்றுகையில் மாவீரன் கம்மந்தான் கான்சாகிபுவின் போர் ஆற்றலுக்கு முன்னால், செல்லாக் காசாகிவிட்ட கும்பெனி படைபலமும் ஆர்க்காட்டு நவாப்பின் ராஜதந்திரமும் மீண்டும் உயிர் பெறுவதற்கு அங்கு இப்படி ஒரு இழிந்த பிறவியை கும்பெனியார் தேர்ந்தெடுத்தனர். கான்சாகிபுவின் அந்தரங்க அலுவலராக இருந்த திவான் சீனிவாசராவ் என்ற அந்தப்பாவி பொன்னுக்கும் பொருளுக்கும் ஆசைப்பட்டு, இறைவழிபாட்டில் ஈடுபட்டு இருந்த கான்சாகிபை, கயிற்றால் பிணைத்து அந்தப்புர மகளிர் முட்டாக்கு போட்ட பல்லக்கில் ஏற்றிச் சென்று கும்பெனியாரிடம் ஒப்படைத்தான். அதே துரோகியினால் மதுரைக்கோட்டை விழுந்தது. மானத்திற்காகப் போராடிய கான்சாகிப் அழிக்கப்பட்டார்.[4] சங்க காலத்துச் சேரமன்னன் கணைக்கால் இரும்பொறை கழுமலம் போரில் தோற்று சோழனிடம் கைதியாக இருந்தபொழுது, சோழனது வீரர்கள் அலட்சியமாக அளித்த தண்ணீரைக்கூட குடிக்க மறுத்த கணைக்கால் இரும்பொறை போன்று கும்பெனியார் வழங்கிய உணவைக்கூட ஏற்றுக் கொள்ள மறுத்து இரண்டு நாட்கள் பட்டினியாக இருந்த கான்சாகிபுவை 16-10-1764 ல் தூக்கில் தொங்கவிட்ட பிறகுதான் கும்பெனியாருக்கு மதுரைக் கோட்டைக்குள் நுழைய தெம்பு ஏற்பட்டது. பெரும்பாலும் தாயகம் காக்கப் போராடிய மக்கள் தலைவர்களை நேரில் போராடி வெற்றிகொள்ள இயலாத பரங்கிகள் “பொற்காசுகளைக்” கொடுத்துத்தான் வெற்றியை விலைக்கு “வாங்கி இருக்கிறார்கள்” என்பது வரலாறு.
அப்பொழுது கர்னல் அக்கினியூ தமது தலைமை இடமான சென்னைக்கு அனுப்பிய கடிதத்தில், “... ... ... கடந்த சில நாட்களாக, கிளர்ச்சித் தலைவர்களைப் பின்பற்றி வரும் பலர், அவர்களது அணியில் இருந்து பிரிந்து வந்து விட்டனர். அங்கு நல்ல பதவிகளில் இருந்து நன்கு அனுபவம் பெற்றுள்ள சிலர், என்னிடம் வந்துள்ளனர். அவர்களில் ஒருவன் விசாரணையின் பொழுது எனது வினாக்களுக்குப் பொருத்தமான பதில் கொடுத்து இருக்கிறான். அதன் அடிப்படையில், காளையார்கோவில் போரில், திடீரென்று தாக்குவதற்கு திட்டம், அத்துடன் ஏற்கனவே அரண்மனை சிறுவயலில் இருந்து காட்டை அழித்து ஏற்படுத்தி வந்த பாதையை ஒட்டி ஆள் நடமாட்டமில்லாத ரகசிய வழியில், எங்களுக்கு வழி காட்டிச் செல்வதற்கும், அவன் உடன்பட்டு இருக்கிறான். ஆதலால் கிளர்ச்சிக்காரர்கள் சந்தேகம் கொள்ளாத வகையில் எதிரிகள், பலமாக அமைத்துள்ள தற்காப்பு நிலைகளுக்கு முன்னேறிச் செல்வது என முடிவு செய்து இருக்கிறேன்”. எனக் குறிப்பிட்டு இருந்தார்.[5]
காளையார் கோவிலுக்கான போர் உத்திகளை மாற்றிக் கொண்டு வழியில் உள்ள போராளிகளை ஏமாற்றி, அவர்களுடன் போராடாமல் திடீரென காளையார் கோட்டையில் போய் நிற்பது என்பது அக்கினியூ வகுத்த திட்டம். அதற்குத் துணை புரிந்தன அந்த துரோகி வழங்கிய துப்புகள். அவர்களது புதிய திட்டப்படி, போராளிகளுக்கு எவ்வித சந்தேகமும் ஏற்படாத வகையில், சோழபுரம் பாசறையில் இருந்து கர்னல் இன்னிங்ஸ் தலைமையில் இருந்த அணி காளையார் கோவில் வழியில் உள்ள கீரனூரை அடைதல் வேண்டும். மேஜர் அக்கினியூ தலைமையில் இன்னொரு அணி ஒக்கூரில் இருந்து புறப்பட்டு வாணியங்குடி முத்துார் போய்ச் சேரும். இந்த இரு அணிகளும் தென்கிழக்கு திசைநோக்கி தாக்குதல் நடத்தி வரும் பொழுது, போராளிகளது கவனம் முழுவதும் அந்த அணி மீது மையங்கொண்டு இருக்கும். அப்பொழுது கர்னல் ஸ்பிரேயின் இரகசிய அணி, கர்னல் வெடிப்பர்டின் உதவியுடன் வடக்கே அரண்மனை சிறுவயலில் இருந்து புறப்பட்டு, ஏற்கனவே, துரோகி காலித் காண்பித்துள்ள இரகசியப் பாதை வழியாக எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் காளையார் கோவில் கோட்டையை நெருங்குதல் வேண்டும்.
அரண்மனை சிறுவயல் காட்டுப்பகுதியில் இருந்து காளையார் கோவில் நோக்கி முன்னேற கர்னல் ஸ்பிரேக்கு அக்கினியூ வழங்கிய இந்த அறிவுரையில் இருந்து இந்தப் போர் பற்றி அவனது தெளிவான ஆற்றலும் அக்கரையும் வியக்கத்தக்கதாக இருந்தது.
“... .... ...இந்த சிறிய அணியினது இயக்கம், காளையார் கோவிலில் நிலை கொண்டுள்ள எதிரியை பிரமிக்கச் செய்து அந்த நிலையைக் கைப்பற்றுவதுதான். எதிரி தாக்குதலுக்குத் தயாராக இருக்கிறான். முன்னேறிச் செல்லும் காட்டுப்பாதையை முகாமில் இருந்து வெட்டுர் வரையும், பின்னர் வெட்டூரில் இருந்து காளையார் கோவில் வரையும் நன்கு பாதுகாப்புக்குள்ளதாக ஆக்கி கொள்ள வேண்டும். பாதையைக் காண்பிக்க நம்பிக்கையான வழிகாட்டி ஒருவன் உண்டு. 77வது ரெஜிமெண்டின் 11வது அணியும், 6வது ரெஜிமெண்டின் சுதேசி வீரர்களுடன் ஐம்பது பயனீர்களும் வருவார்கள். காடு அழிக்கப்பட்டுள்ள பகுதிவரையான பாதை கேப்டன் பேஷ்ஷாவுக்குத் தெரியும். இந்தத் திட்டத்திற்கு தூக்கு கூலிகளையும் பொதி மாடுகளையும் பயன்படுத்தக் கூடாது. வெடிமருந்தை லஸ்கார் கூலிகள் மூலம் சுமந்து செல்லவும், நமது படை முகாமில் இருந்து காடுகள் அப்புறப்படுத்தப்பட்ட பகுதி வரை நிலம் சரிந்து தாழ்வாக உள்ளது. மழை காரணமாக ஈரமாகவும் இருக்கலாம். பத்தாவது மைலில் மற்றொரு பாதை உள்ளது. வழியில் கிளர்ச்சிக்காரர்களை சந்திக்க நேரிட்டால் அவர்கள் மீது துப்பாக்கி கொண்டு சுடாமல் சமாளிக்கவும். சிறு வயல் பகுதியில் பாதையை இரண்டரை மைல் வரை கவனித்து முன்னேற வேண்டும். விரைவாகவும் முன்னேற வேண்டும். நமது அணியைப் பார்த்து, தங்களது கூட்டாளிகளுக்கு எதிரிகள் எச்சரிக்கை செய்வதற்கு முன்னர், அவர்களைத் தாக்கி சமாளிக்க வேண்டும். மிகுந்த முயற்சியுடன் முனைதல் வேண்டும். எதிரிகள் சுட்டால் நின்று விடவும், வெட்டூர் ரோட்டின் இடதுபுறம் முக்கால் மைல் தொலைவில் சுள்ளி ஊரணி இருக்கிறது. அங்கு அணிகளை நிறுத்தி ஆயத்தம் செய்து கொண்டு உடனே தாக்குதலில் ஈடுபடவும். கோயிலைக் கைப்பற்றவும். அதன் நுழைவாசலை வெடி வைத்துத் தகர்த்தோ,கோடாரியினால் வெட்டி உடைத்தோ, அல்லது தீயிட்டுக் கொளுத்தியோ முன்னேற வேண்டும். அதற்கு எதிர்ப்பு இருந்தால், குழப்பத்தையும் கூச்சலையும் அதிகப்படுத்தவும்.
“முகாமில் இருந்து இரவு 10.00 மணிக்கு புறப்படவும். கிழக்கே உள்ள சாலைக்கு காலை இரண்டு மணிக்குள் வந்து விடவும். பெரும்பாலும் நிலா வெளிச்சம் மூன்று மணி முதல் இருக்கும். விடியலுக்கு முன்னர் இலக்கை அடைந்து விட வேண்டும்.
“இந்த முயற்சி இயலாததாகிவிட்டால், ரோடு வழியாக நான்கு கல் தொலைவில் உள்ள முத்துப்பட்டிக்கு வந்துவிடவும். நான் பெரும்பாலும் இரவு 10.00 மணிக்கு முத்தூர் வந்து விடுவேன். வந்து சேர்ந்ததை, அங்கிருந்து ஒரு நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து வெடிக்கும் மூன்று பீரங்கி குண்டு முழக்கத்தில் இருந்தும், தொடர்ந்து ஐந்து நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து வெடிக்கும் கூடுதலான மூன்று குண்டுகள் முழக்கத்தில் இருந்தும் புரிந்து கொள்ளவும்.[6]
இந்த திட்டம், அப்படியே நிறைவேற்றப்பட்டது. ஒக்கூர், சோழபுரம், முத்தூர், கொல்லங்குடி ஆகிய வழியில் உள்ள பாதுகாப்பு நிலைகளில் இருந்து பரங்கியர் அணிகளைத் தாக்கிய கிளர்ச்சிக்காரர்கள் அனைவரும் முறியடிக்கப்பட்டனர்.[7] ஆனால் வழியெங்கும் மிகவும் வெறித்தனமாக தாக்குதலையும் துப்பாக்கிச் சூட்டையும் போராளிகளிடமிருந்து சந்தித்ததாகவும், ஆங்காங்கு பாதைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்ததாகவும் அவைகளைக் கடந்து முன்னேறுவது மிகவும் சிரமமாக இருந்ததாக கர்னல் இன்னிங்ஸின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.[8] ஒரு கண்மாய்க்கரையில் நடந்த மோதலில் மட்டும், வீரத்துடன் பேராடிய போராளிகள் நூறு பேர்கள் தியாகிகள் ஆனார்கள். அவர்களை வெற்றி கொண்ட அந்தப்பரங்கி அணி இரவு 10.00 மணிக்கு முத்துார் வழியாக கீரனூரை அடைந்தது. பிறகு கொல்லங்குடிக்கு முன்னேறியது.
அங்கு ஊரைச்சுற்றி முள்ளினால் தடுப்புகள் அமைத்து இருந்தனர். பாங்கிகள் இரண்டு அணிகளாகப் பிரிந்து ஊரைச் சூழ்ந்தார்கள். எல்லாத் திக்குகளில் இருந்தும் போராளிகளது பயங்கரமான துப்பாக்கிச் சூடு தொடர்ந்தது. அவர்கள் சுட்டுக் கொண்டே இருந்தனர். அவர்கள் ஏற்படுத்தி இருந்த முள்வேலிகள் அவர்களுக்கு மிகுந்த பாதுகாப்பைக் கொடுத்ததுடன் மிகுதியான சேதம் ஏற்படாமலும் அவர்களுக்கு உதவியது.[9] என்றாலும், பரங்கிகள் சும்மா இருந்து விடவில்லை. நடுநிசி என்று கூட நினைக்காமல் கொள்ளிவாய்ப் பேய் பிசாசுகளைப்போல, போராளிகளை வளைத்து கொடூரமாகத் தாக்கினர். கிளர்ச்சிக்காரர்கள் அவர்களை இனங்கண்டு தாக்க முடியாமல் தவித்தனர். இந்தக் காரணத்தினால் அவர்களுக்கு தோல்விதான் ஏற்பட்டது. கும்பெனியார் தரப்பில் இங்க்லிஸ் என்ற ராணுவ மருத்துவர் படுகாயமடைந்தார்.[10]
கொல்லங்குடிக்கு வடக்கே உள்ள முத்தூரை இன்னொரு அணி இரவு எட்டு மணிக்கு அடைந்தது. அங்குள்ள ஏந்தல் கண்மாயில் வெள்ளம் போய்க் கொண்டு இருந்தது, இருட்டையும் வெள்ளத்தையும் இரு தரப்பினரும் பொருட்படுத்த வில்லை. சின்ன மருது சேர்வைக்காரரும் அங்கு நடந்த போரில் கலந்து கொண்டார். என்றாலும் ஒரே குழப்பம் நிலவியது. கிளர்ச்சிக்காரர்களது தாக்குதல் பலனுள்ளதாக இல்லை. அவர்கள் சிதறி ஆங்காங்கு இருட்டில் நின்று தாக்கியதால் அவர்களது இலக்குகள் சரியாக இல்லை. தாக்குதலில் வேகமும் இல்லை. அப்பொழுது சின்ன மருது சேர்வைக்காரருக்கு கிடைத்த தகவல் கூடுதலான குழப்பத்தை ஏற்படுத்தியது. அரண்மனை சிறுவயல் திக்கில் இருந்து பரங்கிப்படையணி ஒன்று காளையார் கோவில் நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கிறது என்பது தான் அந்த தகவல். எந்த அணி மீது கவனம் செலுத்துவது என்பது அப்பொழுது சின்ன மருது சேர்வைக்காரது சிந்தனையாக இருந்தது. நொடி நேரத்தில் ஒரு முடிவிற்கு வந்தார். பரங்கியருடனான அந்த தாக்குதலை நிறுத்தி விட்டு, முழுவதும் ஆயத்த நிலையில் உள்ள காளையார் கோவில் எதிரியைச் சந்திப்பது என்ற முடிவுடன் இருட்டை ஊடுருவிக் கொண்டு காளையார் கோவில் கோட்டை நோக்கி குதிரையில் பாய்ந்து மறைந்தார்.[11]
- ↑ Correspondence on the Permanent Settlement of the Southern Pollams p. 28
- ↑ Military Consultations vol. 288(A) (16-0-1801) - p. 6883.
- ↑ Military Consultations vol. 288 (A) (2-10-1801) p. 6866-67
- ↑ Hills S. C: Yousuff Khan, The Rebel commandant (1914).
- ↑ Military Consultations, vol. 288 (A)(2-10-1801)p.p. 6865-66
- ↑ Secret Consultations, vol. 26 (1801 AD). pp. 379-81
- ↑ Military Consultations, vol. 288 (A) (1-10-1801) p p 6864-66.
- ↑ Ibid p p. 6868
- ↑ Ibid. 6864-64
- ↑ Ibid p. 6869.
- ↑ Military Consultations vol. 288 (A)-(1-10-1801) p. 6869