மாவீரர் மருதுபாண்டியர்/கண்கள் திறந்தன

விக்கிமூலம் இலிருந்து

3

கண்கள் திறந்தன

கலிங்க நாட்டில் தொடுத்த கடுமையான போரின் வெறுக்கத்தக்க விளைவுகள் அசோகப் பேரரசரது சிந்தனையிலும் செயலிலும் மாற்றத்தைப் புகுத்தின. அவரது வாழ்க்கையிலும் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. அதனைப்போன்று சிவகங்கைச் சீமைப் பிரதானிகளது அரசியல் வாழ்க்கையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது இராமநாதபுரம் சீமையின் கமுதிப்போர். கி.பி.1799 மே மாத இறுதியில் கும்பெனிக் கலெக்டர் லூவிங்டனது வேண்டுகோளுக்கு இணங்கி, சிவகங்கையிலிருந்து மறப்படையொன்று கமுதிக் கோட்டைக்குப் புறப்பட்டுச் சென்றது.1 இந்தப் படையை சின்னமருது சேர்வைக்காரரது மகன் தலைமை தாங்கி நடத்திச் சென்றார். இராமநாதபுரம் சீமையின் சேதுபதி மன்னரைச் சிறையிலடைந்த கும்பெனியாரது கொடுமையை எதிர்த்துப் போரிட்ட கிளர்ச்சிக்காரர்கள், வெள்ளக்குளம் காட்டில் நடைபெற்ற போரில் படுதோல்வியடைந்ததற்கும் கும்பெனியாரது செல்வாக்கு தொடருவதற்கும் மருது சேர்வைக்காரர்களது இந்த ராணுவ உதவி துணையாக இருந்தது.

அப்பொழுது, மருது சகோதரர்கள் கும்பெனியாரை ஆதிக்க வெறிகொண்ட அந்நியராகக் கொள்ளவில்லை மாறாக அவர்களை அன்னியோன்னியம் கொண்ட அருமை நண்பர்களாகக் கருதினர். அதுவரை அவர்களிடம் மிகவும் நெருக்கமாகப் பழகி நட்புடன் திகழ்ந்த கர்னல் வெல்ஷ் போன்று அனைத்து வெள்ளைப் பரங்கிகளும் இருப்பார்கள் என அவர்கள் தவறான மதிப்பீடு செய்து இருந்தனர். ஆதலால் கலெக்டர் லூவிங்டன், உதவி கோரியவுடன், உடனே தமதுபடைகளை கமுதிக்கு அனுப்பி வைத்தனர். அதன் விளைவு என்ன என்பதை விவேகத்துடன் சிந்திக்க அவர்கள் தவறிவிட்டனர். அதன் பிரதிபலிப்பு முதுகுளத்துார் பகுதி மக்களது புரட்சி மண்ணோடு மண்ணாக நசுக்கப்பட்டது. வெற்றியினால் திளைத்து மகிழ்ந்த கலெக்டர் லூவிங்டன், மருது சகோதரர்களுக்குப் பாராட்டு தெரிவித்தார். சென்னைக் கோட்டையில் கும்பெனிக் கவர்னரது தலைமையில் கூடிய "கும்பெனியரது இயக்குநர்கள் குழு" மருது சேர்வைக்காரர்கள் தக்க சமயத்தில் உதவியதற்காகத் தங்களது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டதுடன் கலெக்டர் லூவிங்டன் பரிந்துரைத்தவாறு சேர்வைக்காரர் மக்களுக்கு 116.7.52 ஸ்டார் பக்கோடா பணமதிப்புள்ள அன்பளிப்புகளை வழங்க அனுமதித்தது. அத்துடன் போரில் உதவிய சிவகங்கைப் படையணியாளருக்கு உரிய "படி" வழங்கவும் முடிவு செய்தது.2 பின்னர் மருது சேர்வைக்காரர் மக்களும் சென்னை சென்று கும்பெனிக் கவர்னரைப் பேட்டி கண்டனர். ஆரவாரத்துடன் வரவேற்கப் பெற்றனர்.3 அன்பளிப்புகளை ஏற்று வந்தனர்.

இந்த விசுவாச நடவடிக்கைக்காகக் கும்பெனியாரது பாராட்டையும் பரிசினையும் பெற்றார், சின்ன மருது சேர்வைக்காரர். என்றாலும், அபிராமம், கீழக்குளம் ஆகிய ஊர்களில் கிளர்ச்சித் தலைவர்கள் - மயிலப்பன், சிங்கன்செட்டி, புட்டூர் ஆகிய சாதாரண மக்கள் தலைவர்களது சிறிய அணிகள், கும்பெனியாரது வலிமைமிக்க ஆயுதப்படைகளைக் கட்டுப்பாடாக எதிர்த்து, ஆயுதம் ஏந்திப் போரிட்ட பாங்கு, சின்னமருது சேர்வைக்காரர் உள்ளத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியது. அதுவரை சேதுபதி மன்னரது சேர்வைக்காரனான மயிலப்பன் தான் மக்களைத்திரட்டி வீணான கிளர்ச்சியில் கும்பெனியாருக்கு எதிராக ஈடுபட்டு இருப்பதாகக் கேள்விப்பட்டதைப் பொய்யாக்கி மறவர் சீமையின் அனைத்து மக்களும் அவர்களது மண்ணுக்குரிய நாட்டுப் பற்றுடனும், அன்னிய ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வுடனும், போராடி மடிந்த நிகழ்ச்சிகளை அவரால் மறக்க முடியவில்லை. மேலும், மறவர் சீமை மக்களது கிளர்ச்சியில் உள்ள உயரிய நோக்கத்தை உணர்ந்த சாயல்குடி, குளத்தூர், நாகலாபுரம், சாத்துார் ஆகிய பக்கத்துப் பாளையக்காரர்கள் (அனைவரும் வடுகர்கள்) முழு மூச்சுடன் இராமநாதபுரம் சீமை மறவர்களுக்கு இந்தக்கிளர்ச்சியின் பொழுது ஓடோடி வந்து உதவி புரிந்த பொழுது, அதே வட்டாரத்தில் பிறந்து, வளர்ந்த அவர் மட்டும், அந்த மக்களையும் அவர்களது மனநிலையையும் புரிந்து கொள் எாமல், அவர்களது அழிவிற்குக் காரணமாக இருந்ததை அவரது மனச்சாட்சி உறுத்திக் கொண்டு இருந்தது. அந்த மறக்குல மக்களது வீர மரணப் போராட்டம், அவர்கள் கொட்டிய குருதி பாறையில் பட்ட பனியாகப் பயனற்றுப் போக அவர் காரணமாக இருந்ததைப் பற்றிய குழப்பம் அவரை ஆழ்த்தியது. அத்துடன் கும்பெனியாருக்கு, அவர் செலுத்திய பேஷ்குஷ் தொகையான 18,500/- போர்ட்டோ நோவா பக்கோடா பணத்தை ஏப்பமிட்ட கலெக்டர் ஜாக்ஸனது துபாஷ் ரங்கபிள்ளை மீது சுமத்திய குற்றச்சாட்டைப்பற்றி சிறிதும் அக்கரை கொள்ளாது, கலெக்டர் லூவிங்டன் நடந்து கொண்டது கும்பெனியார் மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கையைச் சிதறடித்தது. இந்தத் தொகை வேறு காரணங்களுக்காக துபாஷ் ரெங்கபிள்ளை பெற்று இருக்க வேண்டும் என்பது கலெக்டர் லூவிங்டன் கருத்து. இது பற்றி விசாரிப்பதற்காக கிரீம்ஸ் என்பவரை இராமநாதபுரம் சிறைக் காவலில் உள்ள ரங்கப்பிள்ளையிடம் கும்பெனியார் அனுப்பினர். ரங்கப்பிள்ளையும் அந்த தொகையை - 7000 போர்ட்டோ நோவோ பக்கோடா பணத்தை மருதுசேர்வைக்காரர் கலெக்டர் ஜாக்ஸ்னிடம் நேரில் கொடுத்தார், என்றும் 11,500 போ.நோ. பணத்தைத் தாமே பெற்றுச் சென்று ஜாக்ஸ்னிடம் ஒப்படைத்தாக ஒப்புக் கொண்டார். 5 என்றாலும் சின்ன மருது சேர்வைக்காரரது குற்றச் சாட்டை ஏற்று பரிகாரம் காண கும்பெனியார் மறுத்தனர்.

இத்தகைய குழப்பமான சூழ்நிலையில், பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரரான கட்டபொம்மு நாயக்கர், தமது பரிவாரங்களுடன் சிவகங்கைச் சீமைக்கு வந்தார். சின்னமருது சேர்வைக் காரரை 5.6.1799ல் பழமானேரி கிராமத்தில் அவர் சந்தித்து உரையாடினார். சில மாதங்களுக்கு முன்னால் கலெக்டர் ஜாக்ஸன் தம்மைச்சந்திக்குமாறு ஓலை அனுப்பியதை மதித்து அவரைப்பேட்டி காண குற்றாலம் சென்றதையும் அவரது பேட்டி கிடைக்காததால் அங்கிருந்து அவரைத் தொடர்ந்து சொக்கம் பட்டி, சிவகிரி, சாத்துார், ஸ்ரீவில்லிப்புத்துார், பாவலி ஆகிய ஊர்களுக்குச் சென்றும், வேண்டுமென்றே அவருக்கு பேட்டி மறுத்து, நாற்பது நாட்கள் அலைக்கழிவு செய்த பின்னர் இராமநாதபுரம் இராமலிங்கம் விலாசம் அரண்மனையில் கலெக்டரைச் சந்தித்த பொழுது தமக்கு இருக்கைகூட அளிக்காமல் குற்றவாளியைப்போல மூன்று மணி நேரம் நிற்கவைத்து விசாரித்து அவ மரியாதை செய்ததையும், சிறிது ஓய்விற்குப் பின்னர் மீண்டும் சந்திப்பதாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து திரும்பிய அவரையும் அவரது பிரதானி சுப்பிரமணிய பிள்ளையையும் தடுத்து நிறுத்துமாறு உத்திரவிட்டதையும் விவரமாக எடுத்துச் சொன்னார். அவரும் அவரது குழுவினரும் இராமநாதபுரம் கோட்டையில் இருந்து தப்பி வந்ததையும், அவரது குழுவினரும் கோட்டையில் இருந்து தப்பி வந்ததையும், அவரது குதிரைகளையும்7 பொன், வெள்ளி ஆபரணங்களையும் கலெக்டர் ஜாக்ஸன் அபகரித்துக் கொண்டதுடன், அவரது பிரதானி சிவசுப்பிரமணியப்பிள்ளையை இராமநாதபுரம் கோட்டைக்குள் சிறை வைத்துள்ள கொடுமைகளை, கட்டபொம்மு நாயக்கர் தெரிவித்தார்.8 மேலும் புதிதாகப் பணியேற்றுள்ள கலெக்டர் பேஷ்குஷ் தொகையை வசூலிப்பதில் மட்டும் கண்ணுங்கருத்துமாக இருப்பதையும், தமது பாளையத்தில் வறட்சியினால் குடிகள் படுகின்ற சிரமங்களைச் சிறிதும் உணராதவராக இருப்பதையும் தெரிவித்தார்.

கட்டபொம்மு நாயக்கரது கண்ணீர்க்கதையைக் கவனமுடன் கேட்ட சின்ன மருது சேர்வைக்காரரது சிந்தனை குழம்பியது: மனம் நெகிழ்ந்தது; நைந்தது. சிற்றரசரைப்போன்ற பாஞ்சைப் பாளையக்காரரை, வியாபாரம் செய்து பணம் சம்பாதிக்க இங்கு வந்த கும்பெனியார், இங்கிதம் இல்லாமல் இழிவாக நடத்தியிருப்பது, தமக்கே ஏற்பட்ட துயரமும் தலைக்குனிவும் போல உணர்ச்சிவசப்பட்டு துடித்தார். பரங்கித் துரைகளைப்பற்றி அதுவரை அவர் கொண்டு இருந்த நல்ல எண்ணம். நேச மனப்பான்மை ஆகியவை அனைத்தும் ஒரு நொடி நேரத்தில் பறந்து மறைந்தன. ஆர்க்காட்டு நவாப்பின் அரச உடையின் பின்னே மறைந்து இருந்து கொண்டு, அவரது அடிவருடிகளாக, தமிழகத்திற்குள் நுழைந்த பரங்கிகளது ஆணவமும் அதிகார வெறியும் தொடர்ந்து வளர்ந்தால், தமிழகத்தின் மன்னர் பரம்பரையினருக்கும் அவர்களது பிரதிநிதிகளான பாளையக்காரர்களுக்கும் - என் குடிமக்களுக்கும் கூட, தீராத தொல்லைகள்தான் என்பதை சிவகங்கைப் பிரதானிகள் உணர்ந்தனர். ஆதலால் அவர்கள் பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மு நாயக்கருக்கு வழங்கிய அறிவுரை - துணிந்து நில் - என்பதாகும். சின்னமருது சேர்வைக்காரரது உறுதியான ஆறுதல் வார்த்தைகள் அவருக்கு உத்வேகத்தை ஊட்டின. அதுவரை கும்பெனியாருக்கு பயந்து நடுங்கிய கட்டபொம்மு நாயக்கருக்கு துணிச்சல் ஏற்பட்டது. தமது எதிர்காலம் பற்றிய தெளிவான முடிவுடன், அவர் பாஞ்சாலங்குறிச்சிக்குத் திரும்பினார். அன்று முதல் சிவகங்கைச் சீமைக்கும் பாஞ்சைப் பதிக்கும் நெருக்கமான தொடர்புகள் இரகசியமாகத் தொடர்ந்தன.

கட்டபொம்மு நாயக்கரது பழமானேரிப் பயணத்தையும் சிவகங்கைச் சேர்வைக்காரரது சந்திப்பையும் உளவாளிகள் மூலம் அறிந்த கலெக்டர் லூவிங்டனுக்கு ஒன்றும் புரியவில்லை. மறவர் சீமைப்பகுதிக்கு கும்பெனிக் கலெக்டராகப் பணியேற்று ஆறு மாதங்கள் ஆகியும் மரியாதை நிமித்தம் கூட அவரைச் சந்திக்காத பாஞ்சைப்பாளையக்காரர் சிவகங்கைப் பிரதானிகளிடம் செல்வதற்கு காரணம் என்ன? கலெக்டாது சிந்தனை நீண்டது.முடிவிற்கும் வந்தார். அதுதான் பாஞ்சைப்பாளையக்காரர்கும் பெனியா பிடத்தில் கொண்டிருந்த விசுவாசத்தைக் கை கழுவி விட்ட கட்சி மாறிவிட்டார் என்பது, அத்துடன் கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளாக கும்பெனியார் கட்டளைகளை ஏற்று பணிவுடனும் பாசத்துடனும் நடந்து வந்த சிவகங்கைப் பிரதா விகளும், கும்பெனியாருக்கு எதிரான போரணியைத் துவக்க ஆயத்தமாகிவிட்டார் என்பது ஆகும். அதற்கான காரணங்கள்... ... ...அப்பொழுது, திண்டுக்கல், இராமநாதபுரம், நெல்லை, மதுரை, சீமைகளில் உள்ள பாளையங்களில் உள்ள மக்கள் பரங்கியரது அதிகார வெறிக்கும் ஆணவப் போக்கிற்கும் ஆளாகி சொல்லொணாத் துயரங்களைத் தாங்கி வந்தனர். முந்தைய ஆண்டுகளில் நிலவிய வறட்சிக்கொடுமை மாறாத நிலையில், கும்பெனிக் கலெக்டர் மக்களைக் கசக்கிப் பிழிந்து தங்கள் வரித் தீர்வைகளை வசூலித்து வந்தார். ஏற்கனவே இராமநாதபுரம் சேதுபதி மன்னரும், மைசூர் திப்பு சுல்தானும், அவர்களது பகுதிகளில் அக்கிரமமாக வரி வசூலை மேற்கொண்டு, குடிகளைக் கொடுமைப்படுத்தியதாக கூக்குரலிட்டு வந்த கும்பெனியார், இப்பொழுது, நவாப்பிடமிருந்து பெற்ற அதிகார மாற்றம் மூலம் சம்பந்தப்பட்ட பகுதிகளில் நடைமுறையில் இருந்த வரி வசூலைவிட மிகுதியான அளவு வசூல் செய்தனர். மதுரை, கூடலூர் பாளையங்களில் தொண்ணுாற்று ஆறு விழுக்காட்டிற்குக் கூடுதலாகவும், கம்பம் பகுதியில் பதினேழு விழுக்காடும், பழனிப்பகுதியில் பதினேழரை விழுக்காடும், திண்டுக்கல் பகுதியில் இருபத்து ஐந்து விழுக்காடும், கோயம்பத்துார் பகுதியில் நூற்றிப்பதினெட்டு விழுக்காடும், திருநெல்வேலிப் பகுதியில் நூற்றுப்பதினேழு விழுக்காடும், கூடுதலாக வசூல் செய்தனர்.9 இராமநாதபுரம் பகுதியில் புதிய உத்திகளைப் புகுத்தி, வசூல் முறையிலும் மாற்றங்களைப் புகுத்தினர். மகசூலில் குடியானவர்களுக்குரிய பங்கைக் குறைத்து கூடுதலான தொகையை வசூலிக்க ஏதுவாக தானிய விலையை உயர்த்தினர். பஞ்சத்திலும், பசியிலும், துடிதுடித்துக் கொண்டிருந்த விவசாயிகள், பக்கத்தில் உள்ள தஞ்சாவூர் சீமைக்கு உயிர்பிழைக்க ஓடினர். மறவர் சீமையின் கிராமங்கள்களை இழந்து, மக்கள் நடமாட்டயில்லாது காணப்பட்டன.10 ஆங்காங்கு தனிப்பட்ட ஒருசிலரும், அவர்களுக்கு வேறு எவ்வித நம்பிக்கையும் இல்லாத நிலையில், தங்களைக் காத்துக்கொள்ள வளர்ந்து வரும் அல்லல்களைக் களைய, ஆயுதமேந்திப் போராட ஆயத்தமாகிக் கொண்டு வந்தனர்.11

பாளையக்காரர்களது நிலையும் அன்றைய சாதாரண குடி மக்களது நிலையைவிட, மாறுபட்டதாக இல்லை. மதுரை நாயக்க மன்னர்களது முன்னூறு வருடகால ஆட்சியில் குறுநில மன்னர்களாக, மக்களிடம் மரியாதையுடனும் மதிப்புடனும், வாழ்ந்த அவர்களை, சமுதாயத்தின் கீழ்நிலைக்குக் கும்பெனியார் தாழ்த்தி வருத்தினர். அவர்களது அளவுகடந்த செல்வாக்கை அகற்றினர். ஆண்டுக்கொரு முறை அவர்கள் மக்களிடமிருந்து பெற்று வந்த "தேசகாவல்" காணிக்கையைக்கூட கும்பெனி துரைகள், வற்புறுத்திக் பெற்றுக் கொண்டனர்.12 கும்பெனியாரது பேராசையை, லஞ்ச லாவண்யத்தைத் திருப்திப்படுத்த முடியாத பாளையக்காரர்களது வரிவசூலிக்கும் உரிமையை,பொது ஏலத்தில் விட்டு, கூடுதல் தொகை பெறும் தந்திரத்தைக் கையாண்டனர். இந்த முறையிலும், லஞ்சமும், ஊழலும் ஒட்டிக் கொண்டு இருந்தன.13

மதுரைச்சீமையின் குழப்பம் தொடர்ந்தது. மறவர் சீமை நிலையை நன்கு புரிந்து இருந்த மதுரை கலெக்டர் மதுரைச் சீமைப்பாளையக்காரர்களையும் குடிமக்களையும் எச்சரித்து வந்தார்.14 கம்பம், கூடலூர் பகுதிகளுக்குக் குத்தகைதாரராக இராமநாதபுரம் முத்துஇருளப்ப பிள்ளையை நியமித்து, மக்களது குரோதத்தையும் வெறுப்பையும் குறைக்க முயன்றனர்.15 கும்பெனியாரது கைக்கூலியும் சிறந்த நிர்வாகியுமான பிள்ளைவாளின் மந்திர தந்திரங்களுக்கு அங்கு மகிமை இல்லாமல் போய்விட்டது, அங்கே ஏமாற்றமடைந்த கும்பெனியார் பிள்ளையை திருப்பி அழைத்துக் கொண்டனர்.16 என்றாலும் வெறுப்பும், எதிர்ப்பும் குறையவில்லை. குமாரப்பிள்ளை என்ற திண்டுக்கல் குத்தகைதாரரும் அவரது சகாக்களான தாஸ் செட்டி. பந்தனச் செட்டி ஆகியோரும்கும் பெனியாருக்கு எதிரான கிளர்ச்சிகளைத் தூண்டி விட்டனர்.17 தேவதானப்பட்டி பாளையக்காரர் கும்பெனியாரது கட்டளைகளைத் தொடர்ந்து புறக்கணித்து வந்தார். கும்பெனியாருக்கு 30-1-1795 முதல் செலுத்த வேண்டிய கிஸ்திப் பாக்கியைச் செலுத்த மறுத்தார். கும்பெனியாரது பாளையமான கள்ளர்பட்டியையும் கொள்ளையிட்டு தமது ஆத்திரத்தை வெளிப்படையாகக் காட்டினார். அதுவரை அக்கினிக் கொழுந்தாக இருந்த மக்களுடைய கொந்தளிப்பு, ஜுவாலையுடன் கூடிய காட்டுத்தீயாக மாறிப் பரவியது. அந்த வட்டாரத்தில் மிகுந்த செல்வாக்குடன் இருந்த கன்னிவாடி பாளையக்காரரைக் கும்னிெயார் அணுகி சந்தையூர் பாளையக்காரர் லோகையா நாயக்கருக்கு எந்தவகையிலும்,உதவியோ புகலிடமோ அளிக்காது இருக்குமாறு கேட்டுக்கொண்டனர்.18 அத்துடன் எப்படியாவது லோகையா நாயக்கரையும் அவரது கிளர்ச்சிக்காரர்கள் அணியையும் பிடித்துவிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.19 பின்னர் சிலரைத் துரத்திப்பிடித்துத் துாக்கில் ஏற்றினர்.20 அந்தப் பட்டியலில் தேவதானப்பட்டி பாளையக்காரர் பூஜாரி நாயக்கரையும் சேர்த்தனர்.21

ஆனால், கும்பெனியாரது இந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. மாறாக. அவர்கள் மீது, இன்னும் மிகுதியான வெறுப்பும் விரோதமும் வளர்ந்து வந்தன, என்பதை கி.பி. 1799ம் வருடத்திய கும்பெனியாரது ஆவணங்கள் புலப்படுத்துகின்றன. கன்னிவாடி பாளையக்காரர் கிளர்ச்சிக்காரர்களுக்கு ஆதரவு கொடுத்துவந்தார். கும்பெனியாருக்கு செலுத்த வேண்டிய கிஸ்தியை தொடர்ச்சியாக செலுத்தவில்லை. கும்பெனிக் கலைக்டரது உத்திரவுகளுக்கும் அவர் தம்மை கட்டுப்படுத்திக் கொள்ளவில்லை. இந்த நிலையில் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள கும்பெனிக் கலெக்டர் திட்டமிட்டார். ஆயுதபாணிகளாக இருந்த அனைத்து சேவகர்களையும் ஒன்று திரட்டி வைப்பதிலும், கிளர்ச்சிக்காரர்கள் திடீர் தாக்குதல் தொடுத்தால் அதனைச் சமாளிப்பதற்குமான திட்டத்தைத் தயாரித்தார். இவ்விதம் மேலிடத்தில் இருந்து தக்க உதவிகளைப் பெறுவதற்குள்ளான இடைக்காலத்திற்கான ஏற்பாடு இது.22

வளர்ந்து வரும் பொதுமக்களது வெறுப்பிற்கு அன்றைய நாணயச் செலாவணி முறையில் இருந்த சிக்கல்களும் காரணமாக இருந்தன. மதுரைச் சீமையை பொறுத்தவரையில், மதுரை சுல்தான்கள், (கி.பி. 1334-78) மதுரை நாயக்க மன்னர்கள் (கி.பி. 1521-1736) ஆட்சிக்குப் பின்னர் முறையான பணம், காசுகள், வணிகத் துறையில் செலாவணியில் பயன்படுத்தப்படவில்லை. ஆர்க்காடு நவாப்பின் ஆட்சி அலங்கோலத்திலும் ஆர்க்காட்டு வெள்ளி ரூபாய் பணம் பொதுமக்களது புழக்கத்திற்குப் போதுமான அளவில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படவில்லை. அப்பொழுது செலாவணியில் இருந்த டச்சு கிழக்கிந்திய கம்பெனியாரது போர்ட்டோ நோவோ பக்கோடாக்கள்.23 ஆர்க்காடு நவாப்பின் நிர்வாகத்தில் செல்லும் பணமாக மதிக்கப்பட்டன. வேறு வழி இல்லாத காரணத்தினால் ஆனால் கும்பெனி அலுவலர்கள், தங்களது ஒப்பந்தாரர் (Renters) களிடமிருந்து வசூலிக்க வேண்டிய தொகையை போர்ட்டோ நோவோ பக்கோடா நாணயமாகக் கணக்கிட்டு வசூலிப்பது சிரமமாக இருந்தது. இராமநாதபுரம், திருநெல்வேலிப் பகுதிகளில் டச்சு வியாபாரிகள், தானியங்கள், கைத்தறி துணி, வணிகத்தில் ஈடுபட்ட பகுதிகளில்தான் இந்த நாணயங்கள் கிடைத்தன. ஆதலால், ஒப்பந்தக்காரர்களிடம் அங்காடி விலைகளில், சேரவேண்டிய தொகையைக் கணக்கிட்டு வசூலிப்பது கும்பெனியாருக்கு சாதகமாக இருந்தது. இந்த இருதரப்பு நிலைகளையும் சீர் செய்து, பாக்கி கணக்குகளை நேர் செய்வது கடினமான காரியமாக இருந்தது.

இதனால் கும்பெனியாரே, பொதுமக்களது செலாவணிக்கு வேண்டிய நாணயங்களைத் தயாரித்து வெளியிட வேண்டுமென கோரிக்கைகள் எழுந்தன.24 ஆனால் பலன் இல்லை. என்றாலும் ஆர்க்காடு நவாப்பின் மானேஜர், செலாவணியில் இருந்த பிற நாட்டு நாணயங்களை அவர்களது ஆர்க்காட்டு வெள்ளிப் பணத்திற்கு ஈடாக அதாவது ஒரு பணத்திற்கு வெள்ளிப்பணம் தொன்னுற்று ஆறு என்று வாங்கி உருக்கி நவாப்பின் நாணயமாக மாற்றி வெளியிட்டார். இந்த நாணயப் புழக்கத்திற்கு மதிப்பு அதாவது நாற்பத்து ஆறு (இந்தப்)புது நாணயங்கள் ஆர்க்காட்டு வெள்ளி ரூபாய் ஒன்றிற்கு சமம் என மதிப்பிடப்பட்டது இதனால் பொதுமக்கள் தான் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.25இன்னொரு வகையிலும் பொதுமக்கள் - குறிப்பாக விவசாயிகள் வீணான துன்பத்திற்கு ஆளாயினர். அறுவடையில், விவசாயிகளிடமிருந்து அரசுத் தீர்வையாகப் பெறுகிற நெல், மொத்தத்தில் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மிகுதியாகச் சேர்ந்துவிட்டால், இந்த கூடுதலான அளவு நெல்லை, அந்தக் கிராமத்து குடிமக்களிடம் பிரித்துக் கொடுத்து, அதற்குரிய கிரையத் தொகையைக் கட்டாயமாக வசூலித்துப் பெறும் முறை ஒன்றும் நடைமுறையில் இருந்தது. இதற்கு "குடியம்" (Guddiyam) எனப் பெயர்.26இதன்மூலம் மிகுதியான தானியத்தை சேகரித்துப் பாதுகாக்கும் பொறுப்பு கும்பெனியாரால் தவிர்க்கப்பட்டது. இவ்வளவு இன்னல்களையும் குடிமக்களுக்கு ஏற்படுத்திவிட்டு, அவர்களது குறைகளைக் களைவதற்கான ஆலோசனை பெற தனி குழுவொன்றையும் கி.பி. 1796ல் கும்பெனியார் நியமனம் செய்தனர். அதன் பரிந்துரைகளை நடை முறைப்படுத்துவதாகச் சொல்லி மக்களது ஆதரவைத் தேட முயன்றனர். இதனால் மக்களது மனநிலையிலும், நிர்வாக இயக்கத்திலும் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. இதற்கு மாறாக அண்மையில் உள்ள இராமநாதபுரம் சீமையில் கி. பி. 1797ல் எழுந்த பரங்கியர் எதிர்ப்புக் கிளர்ச்சிகள், மதுரைச் சீமை மக்களது மன நிலை மாற்றத்திற்கு, தெம்பு ஊட்டி, தீனிபோடுவதாக அமைந்தது.27

இராமநாதபுரம் சீமையின் கதையே வேறாக அமைந்து இருந்தது; கும்பெனியார் ஊழலின் ஒருமித்த உருவமாக வடக்கே விளங்கிய வாரன் ஹேஸ்டிங்ஸ் என்ற பரங்கிப் பெருமான், இந்தியாவில் உள்ள ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனியின் தனிப் பெருந்தலைவர். தெற்கே அவரது திருவுருவாக நடமாடியவர் இராமநாதபுரம் சீமை கலெக்டர் காலின்ஸ் ஜாக்லன் துரை. இந்த துரை மகனாரின் முழு நம்பிக்கைக்குரிய அந்தரங்கப் பணியாளர் துபாஷ் ரங்கப்பிள்ளை. துபாஷ் என்பது ஒன்றுக்கு மேற்பட்ட மொழி வல்லவர் என்ற பொருள் தரும் பாரசீகச் சொல். இந்தியாவில் வாணிபத்திற்காக வந்த இந்தப்பரங்கிகள் கர்நாடக அரசியல் சூழ்நிலையில் நவாப் வாலாஜா முகம்மது அலியினை ஆதரித்து போர் உதவி புரிந்ததற்கு வெகுமதியாகவும், கி.பி. 1792ல் நவாப்புடன் செய்து கொண்ட கர்நாடக உடன்பாடு காரணமாகவும் தெற்குச் சீமைகளில் வரி வசூலையும் பாளையக்காரர்களது கோட்டைகளது பராமரிப்பையும் மேற்கொண்ட பொழுது அவர்களுக்கு இந்த "துபாஷ்"கள் தேவைப்பட்டனர். அந்தந்தப் பகுதி மக்களுடன் அவர்களது மொழியில் பேசி தொடர்பு கொள்ளுவதற்கும், கடிதப் போக்குவரத்துக்களை மேற்கொள்வதற்கும் ஆங்கிலமும், பாரசீகமும் பயின்ற இந்த துபாஷ்கள் இடைத்தரகர்களாக விளங்கினர்.ஆதலால் 18வது நூற்றாண்டில் இவர்களுக்கு கிராக்கி இருந்ததுடன், பரங்கிகளுடன் அவர்களது தொடர்பு காரணமாக அவர்களுக்கு மக்களிடம் மிகுந்த செல்வாக்கும் இருந்தது. ஏராளமான வருவாயும் அவர்களுக்குக் கிடைத்தது. அதன் காரணமாக அவர்கள் பல அறச் செயல்களையும் மேற்கொண்டு வந்தனர். புதுச்சேரி ஆனந்தரங்கப் பிள்ளை, பூண்டி, பச்சையப்ப முதலியார், அபிராமம் அப்துல்காதிர் ராவுத்தர் ஆகிய "துபாஷ்கள்" மக்கள் மனத்தில் நிலைத்து நிற்கத் தக்கப் பொதுப்பணிகளை நிறைவேற்றி வைத்தனர். ஆனால் இராமநாதபுரம் கலெக்டரின் துபாஷான ரங்கப்பிள்ளையின் முறையே வேறு. தொண்டை மண்டல கருணிகர் குலத்தைச் சேர்ந்த அவருக்கும், காலின்ஸ் ஜாக்ஸன், சென்னைக் கோட்டையில் கும்பெனிச் செயலராகப் பணியாற்றிய காலத்தில் இருந்து நெருக்கமான தொடர்புகள் இருந்தன. இந்தக் காரணத்தினால் ஜாக்ஸன் இராமநாதபுரத்திற்கு பதவி மாற்றம் பெற்று வரும் பொழுது துபாஷ் ரங்கபிள்ளையையும் கையோடு அழைத்து வந்தார். ரங்கபிள்ளையும் அவரது உதவிக்காக வேறு இரு உறவினர்களையும் உடன் அழைத்து வந்தார்.

இந்த நால்வரும், இராமநாதபுரம் சீமையில் புதிய அரசியல் வரலாறு படைத்தன. அவர்களது நடவடிக்கைகள் அவர்களது பணிக்கு அழியாத களங்கத்தை ஏற்படுத்தியதுடன் நியாயத்திற்கும் நேர்மைக்கும் நிலைக்களனாக விளங்குவதாகப் பறைசாற்றி வந்த பரங்கிகளது முகமூடிக்குப் பின்னால் அமைந்துள்ள அவர்களது கோர வடிவையும் கோடிட்டுக் காட்டின.

அலுவலகப்பணியில் மட்டும் அல்லாமல் கலெக்டர் காலின்ஸ் ஜாக்ஸனுக்கு தனிப்பட்ட முறையிலும் பெரும் பொருளும் சம்பாதித்துக் கொடுத்தார் துபாஷ்.28 கும்பெனியாருக்கு வரவேண்டிய தீர்வை வரிவசூலில் ரங்கப்பிள்ளை மோசடிசெய்து, தனக்கும் தம்முடைய கலெக்டர் எஜமானருக்குமாக ஆதாயம் சேர்த்தார். தீர்வையாக வசூலிக்கப்பட்ட நெல் அம்பாரங்களுக்குக் குறைவான மதிப்பீடு செய்து, அதனை வாங்கிய தானிய வியாபாரிகளிடம் கையூட்டுப்பெற்று வந்தார். இத்தகைய வியாபார ஊழலினால் பாதிக்கப்பட்ட டச்சு நாட்டு வியாபாரி மெய்ஜியர் என்பவரது புகார்களும் இதனை உறுதிப்படுத்துகின்றன.29 இத்தகைய பகல் கொள்ளையினால் பாதிக்கப்பட்ட நெல்லைச்சீமைப்பாளயக்காரரில் சிலரும், சென்னையிலுள்ள கும்பெனியாரது கவர்னருக்கு முறையீடு ஒன்றில்" எங்களது காணிகள் அனைத்தையும் விற்றுக் காசாக்கினால் கூட கலைக்டரது (காலின்ஸ் ஜாக்ஸன்) தேவையில் நாலில் ஒரு பங்கினை நிறை வேற்ற இயலாதவர்களாக" இருப்பதாகக் குறிப்பிட்டு இருந் தனர்.30

துபாஷ் ரங்கபிள்ளையின் பேச்சிலே, பேரத்திலே சிக்கி தங்கள் பணத்தைப் பறி கொடுத்தவர்கள் பலர். சிவகங்கைப் பிரதானி சின்னமருது சேர்வைக்காரர், 18500 போ. நோ.பக்கோடா பணத்தை ரெங்கப்பிள்ளையிடம் "பேஷ்குஷ் இனத்தில் செலுத்தி இருப்பதாக கும்பெனியாருக்கு அறிக்கை செய்தும் பலன் இல்லை.31 கும்பெனியார் துபாஷ் ரங்கபிள்ளையினால் இழப்பிற்குள்ளான சிவகங்கை சேர்வைக்காரர்களுக்கு எவ்வித பரிகாரமும் செய்யவில்லை.32 ஆனால், கலெக்டர் ஆதரவுடன் துபாஷ் ரங்கபிள்ளை கையாடல் செய்து இருந்த கும்பெனியாரது வருமானமாகிய 22,285 போ. நோ. பக்கோடா பணத்தை உடனடியாக வசூலிப்பது என கும்பெனித் தலைமை முடிவு செய்தது.33 அதற்கான நடவடிக்கைகளையும் துரிதப்படுத்தியது. துபாஷ் பிள்ளையின் கைகளில் விலங்கு பூட்டி இராமநாதபுரம் கோட்டை விதிகளில் கொண்டுசென்றதுடன் வசதி இல்லாத சிறு அறையொன்றிலே அடைத்து சிறை வைத்தனர்.34அவரது மனைவி மக்களைக் கொடுமைப்படுத்தி, கையாடல் தொகையை அவர்களிடமிருந்து பறிப்பதற்கு ஆவன அனைத்தையும் செய்தனர். ஒருவாறு அவர்களிடமிருந்து 14.852.போ. நோ. பக்கோடா பணத்தைப் பெற்ற பிறகு பரங்கியர் ஆறுதல் அடைந்தனர். ஆனால் சிவகங்கை சேர்வைக்காரர்கள், எட்டையாபுரம் பாளையக்காரர். சென்னை வணிகர் ஷாமல்ஜி, கீழக்கரை வணிகர் அப்துல் காதிரு மரைக்காயர் ஆகியோர்களிடம் கும்பெனியார் சார்பாக துபாஷ் ரங்கப் பிள்ளை மூட்டை போட்ட பணத்தைப் பற்றி கும்பெனியார் மூச்சுவிடவில்லை.

மதுரைச் சீமையின் வடக்குப்பகுதி, திண்டுக்கல் சீமை என வழங்கப்பட்டது. திண்டுக்கல் மலைமீது வலிமை மிக்க அரணை அமைத்து இராணுவச்சிறப்பு மிக்கதாகச் செய்தனர் மதுரை நாயக்க மன்னர்கள். அவர்களது ஆட்சிக்குப் பின்னர் கி பி. 1745 முதல் இந்தப் பகுதி முழுவதும் அரீரங்கப்பட்டினத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த மைசூர் மன்னருக்கு கட்டுப்பட்டு இருந்தது.35 குறிப்பாக மைசூர் மன்னரான ஹைதர் அலியும் அவரை அடுத்து அரியணை ஏறிய திப்புசுல்தானும் திண்டுக்கல் சீமையின் நிர்வாகத்தில் மிகுந்த அக்கரை கொண்டு திண்டுக்கல் கோட்டையைச் சிறந்த ராணுவ தளமாக மாற்றினர். இதே கோட்டையில் பிரெஞ்சுக்காரர் உதவியுடன் ஆயுதக்கிடங்கு ஒன்றை அமைத்தனர். (கி.பி. 1756) இந்தப்பகுதிக்கு ஆளுநராக ஹைதர் அலிகான் தமது மைத்துனர் சையது சாயபுவை நியமனம் செய்து இருந்தார். மத்துார், வடகரை, அம்மைநாயக்கனூர், இடையன் கோட்டை, கோம்பை, நிலக்கோட்டை, மாம்பாறை, பழனி, சந்தையூர், எரியோடு ஆகியவை. இந்தப் பகுதியைச் சேர்ந்த முக்கியமான பாளையங்களாகும்.36

மைசூர் மன்னர் திப்புசுல்தான் கி.பி. 1792ல் ஆங்கிலேய ருடன் ஏற்படுத்திக் கொண்ட மங்களுர் உடன்படிக்கையின்படி, இந்தச்சீமை ஆங்கிலேயர்களது சொத்தாக மாறியது. இந்தப் பகுதியை அடுத்துள்ள கம்பம் பள்ளத்தாக்கில் ஏற்கனவே கி.பி. 1787 ல் ஆற்காட்டு நவாப்பினால் ஆங்கிலேயருக்கு வரிவசூல் உரிமை கொடுக்கப்பட்டு இருந்தது. அதனால் முதன்முறையாக ஆங்கிலக் கலெக்டர்கள் நியமனம் செய்யப்பட்டனர். ஆனால் அவர்களால் அந்தப்பகுதி நிர்வாகத்தை இயக்க முடியவில்லை. முதலில் ஜியார்ஜ் பிராக்டர் என்பவரும், பின்னர் இர்வின் என்ப வரும், கலெக்டர் பதவி ஏற்றுப் பயன் இல்லாததால், கர்னல் புல்லர்டர்ன் பொறுப்பில், இராணுவ அணியொன்று சென்னையில் இருந்து திண்டுக்கல்லுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 37அந்த தளபதியின் அறிக்கை அப்பொழுது அங்கு நிலவிய குழப்பமான சூழ்நிலையைச் சித்தரிப்பதாக உள்ளது.

"... ... ஒரு நூறாயிரம் பாளையக்காரர்களும், கள்ளர்களும், தெற்குப்பிராந்தியம் முழுவதும் ஆயுதம் தாங்கியவர்களாக உள்ளனர். அரசுக்கு எதிராகவும், தங்களை தண்டனையில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காகவும் அவர்கள் குழப்பத்தை எதிர்நோக்கிக் காத்து இருக்கின்றனர். இவர்களது கிளர்ச்சிகளை அடக்கி ஒடுக்குவதற்குள், நமது கருவூலப் பணம் முழுவதும் காலியாகி விடும். சீமையில் மக்களது நடமாட்டம் இல்லை. நமக்கு வர வேண்டிய வருமானத்தை எதிரிகள் வசூலித்து வருகின்றனர். நமது அணிகளில் கட்டுப்பாடு இல்லை. அவர்களுக்கு சரியான முறையில் ஊதியம் வழங்கப்படவில்லை. அவர்களை இயக்கு கின்ற தலைமையும் சரியாக இல்லை. ... ... எங்கும் குழப்பம்... ..."38

இந்தப் பகுதிக்கு புதிய எஜமானர்களாக வந்த கும்பெனிக் கலெக்டர்களை இந்தப் பாளையக்காரர்கள் மதிக்கவில்லை. அவர்களைக் கும்பெனி நிர்வாகம் அங்கீகரித்து வழங்கிய சன்னதுகளைப் (சான்றிதழ்களை) பெற்றுக் கொள்வதற்கும் அவர்கள் மறுத்துவிட்டனர்.38 இந்தச் சூழ்நிலையில் அவர்களிடம் கிஸ்திப்பணத்தை வசூலிக்க இயலாமல் தவித்த கும்பெனி கலெக்டர்களும் அவர்களது முகவர்களான குத்தகைதாரர்களும் குடிமக்களைக் கசக்கிப் பிழிந்தனர். இவர்களுக்கு எல்லாம் மேலாக, அவர்களது எடுபிடிகளான கணக்குப்பிள்ளைகளும், வில்லைச் சேவகர்களும் மக்களை அல்லல்படுத்துவதையே தங்களது அன்றாடப் பணியாகக் கொண்டு இருந்தனர். இவ்வளவு கொடுமைகளுக்குப் பின்னரும், கும்பெனியார் நிர்ணயித்த கிஸ்திப் பணம் அவர்களுக்குப் போய்ச் சேரவில்லை. இடையிலே பல ஊழல்கள். குடிமக்களும், பாளையக்காரர்களும் இந்த கோர நாடகத்தில் பாதிக்கப்பட்டவர்களாக காட்சியளித்ததைத் தளபதி புல்லர்ட்டனின் அந்த அறிக்கை தெளிவாகச் சுட்டுகிறது.

இவைகளை அறிந்த கும்பெனி தலைமை, கலெக்டர்களை மாற்றினர். ஓரளவு குடிமக்களுக்கு இனந்தெரிந்தவர்களைத் தங்களது குத்தகைதாரர்களாக நியமனம் செய்தனர். இவைகளினால் நிலைமையில் மாற்றத்தை ஏற்படுத்த இயலவில்லை. இத்தகைய குழம்பிய நிலையைப் பொதுவாகக் கள்ளர்களும், குறிப்பாக சில பாளையக்காரர்களும் தங்களது சுயநலத்திற்காகப் பயன்படுத்தினர். "இனாம்" "சுவந்திரம்" ஆகியவை சம்பந்தப்பட்ட வசூல் தொகை கணக்கிற்குக் கொண்டு வரப்படாமல் கையாடல் செய்யப்பட்டது. கும்பெனியாரது பணியாளர்களான அமில்தார்களும், கணக்கப்பிள்ளைகளும், ஒன்று சேர்ந்து கொண்டு பொய்க்கணக்கு தயாரித்துப் பெரும்பாலான நிலத்தை வரிவிதிப்பில் இருந்து விலக்கு செய்து அவைகளின் வருமானத்தைக் கையாடல் செய்தனர்.[1]

பழனி பாளையக்காரர், தமது பாதுகாப்புக்கென ஆயிரம் பேர் கொண்ட படையணி ஒன்றைத் துவக்கினார். தேவதானப்பட்டி பாளையக்காரர் கும்பெனியாருக்குக் கிஸ்தி செலுத்துவதற்கான உடன்பாட்டில் கைச்சாத்திட மறுத்தார். விருபாட்சி பாளையக்காரர் கலெக்டர் வழங்கிய சன்னதைப் பெற்றுக் கொள்ளவில்லை. போடி பாளையக்காரரது பணியாட்கள், அந்தப் பாளையத்தில் கலெக்டரது முகாமில் இருந்த வில்லைச் சேவர்களைச் சுட்டனர். இந்த நிகழ்ச்சிக்கு வடகரை பாளையக்காரரும் உடந்தையாக இருந்தார். கோம்பை பாளையக்காரர் கம்பம் பள்ளத்தாக்கில் குழப்பத்தை உருவாக்கி வந்தார். இது கி.பி. 1794ல் மதுரை, திண்டுக்கல் சீமைகளின் நிலை.41 இவைகளைக் கண்டு பீதி கொண்ட கும்பெனி நிர்வாகம், பாளையக்காரர்களை ஆயுதம் சேகரிக்கக்கூடாது என பயமுறுத்தியது. கேப்டன் ஆலிவர் தலைமையில் ஒரு சிறு பட்டாளத்தை பழனிக்கும் திண்டுக்கல்லுக்கும் அனுப்பிவைத்து பாளையக்காரர்களை பயமுறுத்திப் பார்த்தது.42

திண்டுக்கல் பாளையக்காரர்களின் கிளர்ச்சித் திட்டம் தீவிர மடைந்தது. கிளர்ச்சிக்காரர்களின் தலைவர் லோகையா நாயக்கர் பழனி பாளையக்காரராக வையாபுரி நாயக்கரை நியமனம் செய்ய ஏற்பாடு செய்தார். ஏனெனில் பழனி பாளையக்காரராக இருந்த வரைப் பிடித்து பரங்கிகள் பாலசமுத்திரம் சிறையில் அடைத்துவிட்டனர். இங்ஙனம் பரங்கிகளுக்கு எதிராக பகிரங்கமாக செயல்படுவதன் மூலம் ஏனைய பாளையக்காரர்களிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்தி கும்பெனியாருக்கு எதிரான அணியைப் பலப்படுத்துவது என்பது அவரது குறிக்கோள்.43 பழனி பாளையக் காரரது முன்னாள் பிரதானி முத்து சேர்வைக்காரர் லோகையா நாயக்கருக்கு பக்கபலமாக விளங்கினார். விருபாட்சி பாளையக்காரரும் இந்த அணியில் சேர்ந்து இருந்தார். இடையக்கோட்டை போன்ற கும்பெனியாரின் ஆதரவு பாளையங்களைத்தாக்கி அழிக்க அவர்கள் திட்டம் திட்டினர்.44 திண்டுக்கல் சீமையின் வடகோடியை ஒட்டி அமைந்து இருந்த மணப்பாறை, அரவக்குறிச்சி பாளையக்காரர்களும் கிளர்ச்சிக்கு ஆதரவாக இருந்தனர்.45இவர்கள் அனைவருக்கும் முழு ஆதரவு வழங்கி வந்தவர் கன்னிவாடி பாளையக்காரர்.46 மணப்பாறை, கன்னிவாடி பாளையக்காரர்கள் கும்பெனிக்கலெக்டர் உத்திரவை புறக்கணித்தனர். விசாரணைக்கு ஆஜராகுமாறு அனுப்பிய "சம்மன்" அழைப்பையும் நிராகரித்தனர்.47 மணப்பாறை பாளையக்காரரது நடவடிக்கைகளை இரகசியமாகக் கண்காணித்து வருமாறு இராமநாதபுரம் கலெக்டருக்கு கும்பெனியார் உத்திரவு அனுப்பினர்'48 மற்றும் குளத்துர், கோல்வார் பட்டி, பாளையக்காரர்களைக் கைது செய்து இராமநாதபுரம் கோட்டைக்குள் சிறைவைத்தனர். 48முதுகுளத்துர் பகுதி கிளர்ச்சிகளை ஊக்குவித்து வந்த முத்தையாபிள்ளை, பாண்டியன் பிள்ளை ஆகிய பெருந்தலைவர்களைக் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் பூட்டி வைத்தனர். தளபதி மயிலப்பன் சேர்வைக்காரரைப் பிடிக்க இயலாத காரணத்தினால் அவரது குடும்பத்தினரை பிணையாளிகளாகக் கைப்பற்றி, இராமநாதபுரம் கோட்டையில் அடைத்து பாதுகாத்து வந்தனர்.50

கும்பெனியாரது மக்கள் விரோத காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளை அப்போதைக்கப்போது அறிந்து வந்த சிவகங்கைச் சேர்வைக்காரர்களது உள்ளத்தில், கும்பெனியாரது, உண்மைக்கு மாற்றமான, பிரமையான தோற்றத்தை உணர்ந்த பிறகும் அவர்களது அகக்கண்கள் எப்படி திறக்காமல் இருக்க முடியும்? “கடுமையான நடவடிக்கைகள் மூலம் பாளையங்களைப் பறிமுதல் செய்தல், தூக்குத்தண்டனை, நாடுகடத்தல், பாளையக் காரர்களது கோட்டைகளை இடித்து அழிமானம் செய்தல், அவர்களது பாரம்பரிய மரபுகளை அனுபவிக்க இயலாது செய்தல், இராணுவ, அரசுப்பணியாளர்களை அவர்களது பதவிகளின்றும் நீக்குதல், வரி வசூல் கொடுமைகள் - ஆகிய அனைத்து நடவடிக்கைகளும் எதிர்பார்த்த இணக்கமான சூழ்நிலைக்கு எதிரான விளைவுகளை உருவாக்கின. ஏற்கனவே சமுதாயத்தின் ஏனைய முக்கியமான பிரிவினரான விவசாயிகளும் தொழிலாளிகளும் பரங்கிகளது சுயநலம், தலையீடு ஆகிய காரணங்களினால் அருவருப்படைந்து இருந்த அணியினருடன் இந்த அணியினரும் இணைந்து ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தைப் பெரிது படுத்தினர். அன்றைய நிலையில் இத்தகைய பரங்கிகள் மீதான எதிர்ப்பு உணர்வு தமிழகத்தின் தென்கோடியில் மட்டுமல்லாமல் இந்தியநாட்டின் தென்பகுதி முழுவதும் நிலவி வந்ததைப் பல ஆவணங்களில் இருந்து தெரியவருகிறது.

கும்பெனியாரது ஆதிக்கப் பேராசைக்கு இலக்கான மகராஷ்டிரம், கர்னாடகம், வயநாடு, கேரளம், தமிழகம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கிளர்ச்சித் தலைவர்கள், திண்டுக்கல் கோட்டையில் சந்தித்து தங்கள் பகுதிகளில் அன்னிய எதிர்ப்பு கிளர்ச்சிகளை மேலும் எவ்விதம் தீவிரப்படுத்துவது என்பதைப்பற்றி ஆய்வு செய்தனர். இறுதியில் தங்கள் முதல் நடவடிக்கையாக கோயம்புத்துார் நகரில் 3-6-1800ஆம் தேதியன்று ஆயுதப் போராட்டத்தைத் தொடங்குவது எனத் தீர்மானித்தனர். இந்த ரகசிய கூட்டத்தில் விருபாட்சி கோபால நாயக்கர், கோயம்புத்துர் கெளஸ்கான், மலபார் கேரளவர்மா, மைசூர் கிருஷ்ணப்பா, மகாராஷ்டிரத்து துந்தியாவாக் ஆகிய முக்கிய கிளர்ச்சித் தலைவர்கள் பங்கு கொண்டனர்.[2] இந்த இரகசியக்கூட்டம் பற்றிய துப்புகளைப் பின்னர் விசாரித்து அறிந்த கும்பெனியார் இந்தக் கூட்டத்தில் சிவகங்கைப் பிரதானி சின்னமருதுவும் பங்கு கொண்டார் என்ற விபரத்தை அறிந்து ஆச்சரியப்பட்டனர்.

அதுவரை எவ்வித சந்தேகத்திற்கும் இடமில்லாமல் அவர்களது விசுவாசமான நண்பர் எனக்கருதி, சின்னமருது சேர்வைக் காரரைப் பாராட்டிப் புகழ்ந்து வந்த கும்பெனியாருக்கு, அவர் மீது ஐயம் ஏற்பட்டது. அதனை உடனடியாக வெளிப்படுத்திக் காட்டிக் கொள்ளாமல் ராஜதந்திரத்துடன் அவரது நடவடிக்கை அனைத்தையும் இரகசியமாக கண்காணித்துவர ஏற்பாடு செய்தனர். சிவகங்கைச் சீமையை அடுத்துள்ள இராமநாதபுரம் சீமையில் உள்ள கும்பெனியாரது கைக்கூலிகளான அமில்தார்கள், சிவகங்கைச் சீமையில் இருந்து வரும் ஆட்களது நடமாட்டத்தை நோட்டமிட்டு அப்பொழுதைக்கப்பொழுது அவர்களது எஜமானரான இராமநாதபுரம் கலெக்டருக்கு அறிக்கைகள் அனுப்பி வந்தனர்.

“... ... மயிலப்பன், ஒரு இஸ்லாமியருடனும் நூறு வீரர்கள், இரண்டு குதிரைகளுடனும் இரண்டு வண்டி வெடிமருந்துப் பொதி களுடனும் சிவகங்கையில் இருந்து இன்று காலை நான்குமணிக்கு கட்டிக்குளம் வந்தனர். அங்கு துணிமணிகள், தானியங்கள். பணம் ஆகியவைகளைப் பறித்துக் கொண்டு போய்விட்டனர்.

-இராமநாதபுரம் பேஷ்காரரின் 18-2.1801ம் தேதி அறிக்கை.

“... ... ... சிவகங்கை ஆட்கள் காடல்குடிக்கு வந்தனர். அவர்களுடன் அய்யாத்தலைவனும், நாகராஜமணியக்காரர், இபுராகிம் சாயபு, மயிலப்பனும், குதிரைகளும் நூறு வீரர்களும் வந்துள்ளனர். நாகலாபுரம் தாலுகாவை கொள்ளையிடுவதற்காக”

- நாகலாபுரம் அமில்தாரது 7-3-1801 தேதிய அறிக்கை

”... ... ... ...சிவகங்கைச் சேர்வைக்காரரது பணியில் உள்ள பிராம்மணர் ஒருவர் ஆறு சிப்பந்திகளுடன் எட்டையாபுர பாளையத்தைச் சேர்ந்த மாவிலோடைக்கு வந்துள்ளார்.

"... ... ... ... மயிலப்பன் முந்நூறு வீரர்களுடன் மாவிலோடையில் இருந்து வருகிறார். காடல்குடி, குளத்துார் பாளையக்காரர்களுக்கு உதவுவதற்காக அவர் மருதுசேர்வைக்காரரது தூண்டுதல் பேரில் அங்கு அனுப்பப்பட்டு இருக்கவேண்டும். இது வரை சிவகங்கைச் சீமையில்தான் மயிலப்பன் பாதுகாக்கப்பட்டு வந்தார். இல்லையென்றால் மயிலப்பனுக்கு நூறு ஆயுதம் தாங்கிய போர் வீரர்கள் எப்படிக் கிடைத்தனர். சின்ன மருதுச்சேர்வைக்காரரது அலுவலரான சுப்பையரும் இன்னும் சிலரும் மண்டலமாணிக்கத்தில் தங்கி இருப்பதற்கு என்ன காரணம்? பாஞ்சைக்கும் சிவகங்கைக்கும் ஒலைகளை பரிமாறிக் கொள்வதற்குத் தானே!

-இராமநாதபுரம் பேஷ்காரது 7-3-1801 தேதிய கடிதம்

“. . . . 23-2-1801 தேதி மயிலப்பனும் அவரது குழுவினரும் போதிய ஆயுதம் தாங்கிய நூறுவீரர்களும், இருபது பொதி வெடிமருந்து, துப்பாக்கி தோட்டாக்களுடன் பெருநாளி மாகாணத்து திம்மநாதபுரத்திற்குச் சென்றனர்.

- கமுதி பாப்பாங்குளம் பேஷ்காரது 2-3-1801 தேதிய கடிதம்

சென்னையில் உள்ள பிரமுகர் ஒருவருக்கு மருதுசேர்வைக்காரர். இவ்வாறு கடிதம் எழுதியுள்ளார். எங்களது கப்பத்தொகையை முறையாக கலெக்டரது உத்தரவின்படி செலுத்தி வருகிறோம். ஆனால் இதற்கு மாற்றமாக கலெக்டர் எங்களது பாளையத்தைப் பறிக்கத் திட்டமிட்டுள்ளார். இந்தநோக்கத்தை நிறைவேற்ற அவர் எங்களைப் பற்றி தவறான அறிக்கைகள் அனுப்பி வருகிறார். நாங்கள் அவ்விதம் தவறாக நடந்து இருந்தால் திருச்சியில் உள்ள துரையிடத்தில் அல்லது தஞ்சாவூர் கலெக்டரிடத்தில் நிரூபிக்கட்டும். அவர்கள் சரியான புலன் விசாரணையின் மூலம் எங்களைக் குற்றவாளியாக முடிவு செய்தால் அதற்குரிய தண்டனையை ஏற்றுக்கொள்ளச் சித்தமாக இருக்கிறோம். மேலும் இந்தக் கலெக்டர், பொறுப்பு ஏற்றுக்கொண்டதில் இருந்து பாளையங்களைப் பறிமுதல் செய்வதில்தான் நாட்டமாக உள்ளார். அவர் இங்கு இருக்கும் வரை சந்தேகத்திற்கு இடமில்லாமல் எங்களது பாளைதையும் மேற்கொள்ள முனைவர். அதற்காக ராணுவம் எங்களை நோக்கி அனுப்பப்பட்டால் நாங்கள் எங்களது உயிரைத் தியாகம் செய்யவும் தயாராக இருக்கிறோம். [3]

— கோட்டைப்பட்டினம் தாலுகா ஓரூர் அமில்தார் 18.3.1801
தேதிய கடிதம்

இந்த அறிக்கைகள் அனைத்தும் சின்னமருது சேர்வைக்காரர், பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரருக்கு பக்கத்துணையாக தங்களுக்கு எதிரான ஆயுதப்போராட்டத்திற்கு உதவி வருகிறார் என்பதையும், ஏற்கெனவே தேடப்பட்டு வரும் மயிலப்பன் தலைமையில் இராமநாதபுரம் சீமை முழுவதும் மோதல்களை நிகழ்த்து வதற்கு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. என்பதையும் கும்பெனியாருக்கு உணர்த்தினர். அத்துடன் சிவகங்கைச் சீமையிலும் போருக்கான ஆயத்தங்கள் துவக்கப்பட்டு இருப்பதையும் உறுதியான தகவல்கள் மூலம் கும்பெனியார் புரிந்து கொண்டனர்.

  1. 40 Ibid p. 186
  2. 52. Rajayyan Dr. K: Selections from the History of TamilNadu 1978) p. 228.
  3. Papers Relating Selections (1944). Polegar wars (Tinnevely District)