மாவீரர் மருதுபாண்டியர்/துரோகமும் தியாகமும்
14
துரோகமும் தியாகமும்
சிவகங்கைச் சீமை என்ற சொல், மருது சேர்வைக்காார்களது கடைசி மூச்சில் கலந்து மறைந்து விட்டது. அந்தப்பகுதி. சிவகங்கை ஜமீன் என்றும் படைமாத்துார் ஒய்யாத்தேவர் சிவகங்கைச் சீமையின் மன்னர் என்பதற்குப் பதிலாக சிவகங்கை ஜமீன்தார் என்றும் பரங்கிகளது ஆவணங்களில் குறிக்கப் பெற்றது, மருதுசேர்வைக்காரர்கள் தூக்கிலிடப்பட்டது பற்றி சிவகங்கை ஜமீன்தார் கூட மகிழ்ச்சியடைந்ததாகச் செய்தி இல்லை. ஆனால், அந்தச் செய்தியினால் அளவு கடந்த மகிழ்ச்சியும் ஆறுதலும் அடைந்தவர் பரங்கியரது இந்தப் பராக்கிரமச் செயலுக்கு பல்லவி பாடி, கட்டியங்கூறிய கயவன் ஒருவன் இருந்தான். சிவகங்கைச் சீமையிலோ அல்ல பெரிய மறவர் சீமையான இராமநாதபுரம் சீமையிலோ அல்ல கள்ளர் சீமையில் காலமெல்லாம் கும்பெனியாரது காலடியில் வாலை ஆட்டி வளைந்து வரும் ரெகுநாத தொண்டமான் பகதூர். அவன் அடைந்த அளவில்லா மகிழ்ச்சியை கும்பெனி கவர்னரான ராபர்ட் கிளைவிற்குக் கடிதம் மூலம் எழுதித் தெரிவித்தான்.
கும்பெனியாரது அதிர்ஷ்டவசமாக, காட்டுநாய் சின்ன மருதுவும் அவன் தமையனும், குடும்பத்தினரும், ஒருவகையாக கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ளனர். மேன்மை தங்கிய கும்பெனி அலுவலர்களது தீரமும் செயல் திறனும்தான் இதற்குக் காரணம். தங்களது நம்பிக்கைத் துரோகத்திற்கான பரிசையும் அவர்கள் பெற்றனர். இறப்பை எய்தினர்.
"மகாபிரபுவே! நீண்டகாலமாக உன்னிப்பாகக் கவனித்து வந்து இருக்கிறேன். பிரஞ்சுக்காரர்களும், சந்தாசாகிபும், திப்புவும், கும்பெனியாரது செல்வச்சிறப்பையும் வலிமையையும் சிந்திக்காமல், அவர்களது வீரமிக்க படையணிகளை எதிர்ப்பதற்கு முயன்னர். ஆனால், அவர்கள் முழுவதுமாக அழிக்கப்பட்டு விட்டனர். அதே நேரத்தில் கும்பெனியாரது கூட்டாளிகளும், நண்பர்களும் பரிசு பெற்றனர். பாராட்டப்பட்டனர்.
"மருதுவைப்போன்ற மிகவும் மோசமான பிறவி வேறு எதனை எதிர்பார்த்து இருக்க முடியும்? என்னைப் பொறுத்த வரையில் காலமெல்லாம், மேன்மை பொருந்திய கும்பெனியாரது துரைத்தனத்தைத் தொடர்ந்து சார்ந்து இருந்து வந்து இருக்கிறேன்.
"என்னுடைய நிலையையும் நடத்தையையும் எனது மேலான தாயார் கிளைவ் பெருமாட்டியார் முன்னிலையில் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். தளபதி பிளாக்பர்ன் அவர்களது கட்டளைக்கு இணக்கமாக இப்பொழுது முடிவடைந்துள்ள போராட்டம் முழுவதிலும், நான் மிகவும் கூடுதலாக சிரத்தை எடுத்துக் கொண்டு இருந்தேன், என்பது யாவரும் அறிந்த தொன்று.
"ஆதலால் எல்லா வகையிலும் எனக்கு தயவு காட்டப் படவேண்டும் என்பது தான் எனது நம்பிக்கை. தங்களது தாராளம் நீண்டு பெருக வேண்டும் என்று சொல்லிக் கொண்டுள்ளதைத் தவிர வேறு என்ன இருக்கிறது."1
மருதுசேர்வைக்காரர்களை அழித்து மகிழ்ந்த நிலையில் கும்பெனியார், எங்கே இந்த கொத்தடிமையின் சேவையை மறந்து விடுவார்களோ என்ற அச்சம் தொண்டைமானுக்கு! மேலும் அந்த நல்ல தருணத்தை நழுவவிடாமல் சொந்த ஆதாயங்களையும் சாதித்துக் கொள்வது தானே ராஜதந்திரம்! அது மட்டுமல்ல, கும்பெனியாருக்கு உதவக்கூடிய இத்தகைய தருணம் மீண்டும் வாய்க்குமா என்பது சந்தேகம்.
ஏனெனில் சிவகங்கைச்சீமைக் கிளர்ச்சிகளில் நேரடியாக சம்பந்தப்பட்ட அனைத்துப் போராளிகளையும் ஆங்காங்கு தூக்கிலிட்டு விட்டனர். அல்லது கசையடிகள் கொடுத்து, கடலுக்கு அப்பால் கொண்டு சென்றனர். அவர்கள் எங்கே அழைத்துச் செல்லப்பட்டார்கள் என்பதற்கான விவரங்கள் இல்லை. பெரும்பாலும், கரையும் ஆழமும் காண இயலாத நடுக்கடலில் அவர்களை ஆழ்த்தி கொன்று போட்டு இருக்க வேண்டும் என அஞ்சப்படுகிறது. இன்னும் இந்தப் போராட்டங்களில் நேரடியாக சம்பந்தப்படாது, கிளர்ச்சிக்காரர்களுக்கு ஆதரவாளர்களாக இருந்தவர்கள் என சந்தேகப்படும் படியான எழுபத்து இரண்டு பேர்களைக் கைது செய்து விலங்கிட்டு தூத்துக்குடி முகாமிற்கு அனுப்பி வைத்தனர். அவர்களில், சிவகங்கைச் சீமையின் கடைசி மன்னரான சக்கந்தி வேங்கன் பெரிய உடையாத்தேவரும், சின்னமருது சேர்வைக்காரரது இளைய மகனான துரைச்சாமியும் முக்கியமானவர்கள். பரங்கியர் தாங்கள் கைப்பற்றி ஆட்சி செலுத்தும் தமிழ் நாட்டில், அவர்களுக்கு எதிராக வல்லமை மிக்க வெள்ளைக்கும் பெனியாரை எதிர்த்துப்போராடிய மக்களும் இருந்தனர். என்ற நினைப்பு, தமிழக மக்களுக்கு இனியும் ஏற்படக்கூடாது என்ற இறுமாப்பில் மறவர் சீமையின் எழுபத்து இரண்டு மக்கள் தலைவர்களையும் நாடு கடத்தி உத்திரவிட்டனர். 2வங்கக் கடலின் கீழ்க் கோடியில் தமிழகத்தில் இருந்து இரண்டாயிரம் மைல் தொலைவில் உள்ள பெங்கோலான் என்ற தீவில் பாதுகாப்புக் கைதிகளாக வைத்து இருக்க முடிவு செய்தனர்.
இந்தத்திவின் உண்மையான பெயர் பூலோ பினாங் என்பதாகும். மலாய் மொழியில் பாக்குத் தீவு என்ற பொருளில் வழங்கப்பட்டது. இந்தத் தீவில் தோன்றி வளைந்து சென்று கடலில் மறையும் சிற்றாறு கூட பாக்குநதி (சுங்கை பினாங்) என்று வழங்கப்பட்டது. அந்த அளவிற்கு அந்தத்தீவில் அப்பொழுது பாக்கு மரங்கள் செழித்து வளர்ந்து இருந்தன. மனித இனத்தின் காலடிச் சுவடுகள் மிகுதியாக பதியாத அந்தக் கன்னிநிலத்தில், பாக்கு, லவங்கம், ஜாதிக்காய், மிளகு, அபின் ஆகிய தள்ளா விளையுள் தாழ்விலாச் செல்வமாக விளங்கின. அவைகளைக் கொள்வதற்கு ஒருபுறம் டச்சுக்கிழக்கு இந்தியக் கும்பெனியாரும் மறுபுறம் ஆங்கில கிழக்கிந்தியக் கும்பெனியாரும் கச்சை கட்டி நின்றனர். கி.பி. 1786ல் அந்தத் தீவை, கெடாநாட்டு சுல்தானிடமிருந்து வெள்ளைப் பரங்கிகள் ஆயிரம் ஸ்பானிய டாலர் தொகை ஆண்டுக் குத்தகைக் குப் பெற்றனர். உடனே அந்தத் தீவிற்கு பிரின்ஸ் ஆல் வேல்ஸ் தீவு” என்ற புதிய பெயர் சூட்டினர். ஆனால் ஐந்தாண்டு காலத்திற்குள், கெடா சுல்தானுக்கு பெரிய நாமம் சாத்தி அந்தத்தீவைத் தங்கள் தனியுடமை ஆக்கிக் கொண்டனர். இந்த தர்மகாரியத்தைச் சாதித்தவன் பிரான்சிஸ் டே என்ற பரங்கியாகும்.[1]
நமது நாட்டில் ஆட்சியாளராக, அந்தப் பரங்கிகளது நிலைமை உறுதிப்படுத்தப்பட்டு விட்டதால் தூரகிழக்கு நாடுகளான, சாவகம், புருனை, சீனம், ஜப்பான் ஆகியவைகளுடன் வியாபார தொடர்புகளை வலுப்படுத்துவதற்கு, இந்தத்தீவு பயனுள்ளதாக அமையும் என அவர்கள் அப்பொழுது கருதினர். ஆனால், நாட்டுப்பற்றும் நேர்மை உள்ளமுங் கொண்ட நல்லவர்களது நச்சுச் சிறையாகவும் அது மாறும் என யாரும் நினைக்கவில்லை. விரைவில் தங்களது ஆட்சியை வங்காளத்தில் துரோகத்திலும் துப்பாக்கி முனையிலும் தொடர்ந்ததை வன்மையாக எதிர்த்த தேச பக்தர்களை, சமுதாயக் குற்றவாளிகள் எனப்பெயர் சூட்டி, நாடு கடத்தி, தங்களது ஆட்சிக்குப் பங்கம் ஏற்படாமல் பாதுகாப்புக் கைதிகளாக வைப்பதற்கு இந்தத் தீவைப் பயன்படுத்தினர்[2].
பெற்ற நாட்டையும் பெண்டு பிள்ளைகளையும் பெற்றோருடன் சுற்றத்தையும் பிரிந்து வந்த அவர்களது கண்ணீர்க் கதையின் சிறுபகுதி அரசு ஆவணங்களில் இடம் பெற்றுள்ளன. அன்றைய நிலையில் தூத்துக்குடிக்கும் மலேயா நாட்டுக்கும் இடைப்பட்ட வங்கக்கடலைக் கடப்பதற்கு ஆறுவார காலம் கப்பல் பயணம் செய்ய வேண்டியிருந்தது. ஆதலால் இந்த எழுபத்து இாண்டு கைதிகள், பாதுகாப்பு வீரர்கள் இருபது பேர் மற்றும் கப்பல் பணியாளர்கள் ஆகியோருக்குத் தேவையான குடிநீர் உணவுப்பொருட்கள், அட்மிரல் நெல்சன் என்ற கப்பலில் கொண்டு போய் சேர்க்கப்பட்டன.[3] இந்தக் கப்பல் ரூபாய் பதினைந்து ஆயிரம் வாடகைக்கு பம்பாயில் இருந்து வரவழைக்கப்பட்டது. பின்னர் அந்த எழுபத்திரண்டு விடுதலை வீரர்களையும் இருவர் இருவராக இணைத்து அவர்கள் கைகளில் விலங்குகளைப் பூட்டிக் கப்பலுக்குள் அழைத்துச் செல்லப்பட்டனர்.[4] 11-12-1802 ம் தேதி கப்பல் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து பயணம் தொடங்கியது. கப்பலில் உணவு உண்ணும் போது மட்டும் விடுதலை வீரர்களது கை விலங்குகள் தளர்த்தப்பட்டன. மற்ற நேரங்கள் முழுவதும் கை விலங்குகள் அவர்களுக்கு மிகப்பெரும் இடர்ப்பாடாக இருந்தன. கரைகாணாத கடலுக்கு ஊடே பயணம் செய்யும்போது கூட அவர்கள் தப்பித்துத் தாயகம் திரும்பிவிடக் கூடாது என்ற பயம் கும்பெனியாருக்கு இருந்து வந்தது.
பயணம் தொடர்ந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஆழமான கடல், போராளிகளது கவலைகள் போன்று பரந்த வானம் முழுவதையும் கவிழ்ந்துள்ள மேகத்தின் பயமுறுத்தல். பேரலைகளது ஆவேசம், கப்பலின் பாய்களை அலைக்கழித்துச் செல்லும் காற்றின் சீற்றம் கப்பலைச் சுக்கு நூறாகச் சிதறடிக்க முற்படுவது போன்ற பெரு மழை. பகல் இரவு வந்து போயின. பயணம் தொடர்ந்தது. வழக்கமான ஆறுவார பயணத்திற்காக எடுத்துச் செல்லப்பட்ட அரிசி (5398 படி) பருப்பு (371 படி) நெய் (421 பலம்) உப்பு (210 பலம்) ரொட்டி (5 மூடை) புளி (3375 பலம்) கருப்புக்கட்டி (750 பலம்) கோழி (1,100) செம்மறியாடு (10) மற்றும் குடிநீர் அனைத்தும் காலியாகி விட்டன.[5] பசி, தாகம், பயணக் களைப்பு, விடுதலை வீரர்கள் புழுப்போல் துடித்தனர். என்று முடியும் இந்தப்பயணம் என்று விடியும் இந்த இன்னலின் தொடர்ச்சி, பயணத்தின் பொழுது, கைதிகளில் மூவர்-பாஞ்சாலங் குறிச்சி சின்னப்பிச்சைத்தேவர், ஆதனுார் சுப்பிரமணிய நாயக்கர், விருபாட்சி அப்பா நாயக்கர் ஆகிய மூவரும் கப்பல் தளத்தில் சுருண்டு விழுந்து மடிந்தனர்.[6] அவர்களது சாவு அந்தக்கப்பல் பயணத்தைவிட கொடுமையாக இருந்தது.
ஒரு வகையாக எழுபத்தைந்து நாட்கள் பயணத்துக்குப் பிறகு தொலைவில் பினாங்கு தீவின் மத்தியில் உள்ள குன்றும் அதனை மூடி மறைத்துள்ள தென்னை, பாக்கு மரங்களது பசுமையான காட்சியும், கப்பலில் உள்ளவர் கண்களுக்கு ஆறுதல் அளிப் பதுபோல் தோன்றின. கப்பல் பினாங் தீவிற்கு சற்று வடக்கே நங்கூரமிடப்பட்டது. கப்பலில் உள்ள கைதிகளைக் கரை இறக்குவதற்கான அனுமதி கோரிய கப்பல் தளபதியின் கடிதத்தை தூதர்கள் தீவின் கவர்னருக்கு எடுத்துச்சென்றனர். அங்குள்ள கார்ன்வாலிஸ் கோட்டைக்குள் இத்துணை கைதிகளையும் பாதுகாப்பாக வைப்பதற்கு இடவசதி இல்லாததால் கோட்டைக்கு வெளியே ஒரு வீட்டை வாடகைக்கு அமர்த்திய பிறகு கைதிகளைக் கரையிறக்கினர்.[7]
இதோ அவர்களது பட்டியல்: [8]
1. வேங்கன் பெரிய உடையாத்தேவர் - சிவகங்கை
2. முத்துவடுகு என்ற துரைசாமி, த/பெ. சின்னமருது
3. சின்ன லக்கையா என்ற பொம்மை நாயக்கர் - வாராப்பூர்
4. ஜெகநாதஐயன் - இராமநாதபுரம்
5. பாண்டியப்பதேவன் - கருமாத்தூர்
6. சடைமாயன், கருமாத்தூர்
7. கோசிசாமித்தேவர், கருமாத்தூர்
8. தளவாய் மாடசாமி நாயக்கர் - பாஞ்சாலங்குறிச்சி
9. குமாரத்தேவன், முள்ளூர்
10. பாண்டியன் - பதியான்புத்தூர்
11. முத்துவீர மணியக்காரர் - ஆணைக்கொல்லம்
12. சாமி - மணக்காடு
13. ராமசாமி
14. எட்டப்பத் தேவர் - நான்குனேரி
15. பாண்டிய நாயக்கர் - கோம்பை
16. மண்டைத் தேவர்
17. மலையேழ்மந்தன்
18. வீரபாண்டிய தேவர்
19. | கருப்பத் தேவர் |
20. | சுப்பிரமணியம் |
21. | மாடசாமி |
22. | பெருமாள் |
23. | உடையத்தேவர், த/பெ. சின்னபிச்சை தேவர் |
24. | தேவிநாயக்கர் |
25. | முத்துக்கருப்பத்தேவர் |
26. | மண்டந்தேவர் த/பெ. சங்கரநாராயண தேவர் |
27. | பேயன் த/பெ. பால உடையாத்தேவர் |
28. | அழகிய நம்பி |
29. | ஒய்யக்கொண்ட தேவர் |
30. | சிவனுத் தேவர் |
31. | காணி ஆழ்வார் |
32. | மூப்பு உடையான் |
33. | கொண்டவன் |
34. | வீரபத்திரன் - நான்குனேரி |
35. | சிலம்பன் ” |
36. | பேயன்” |
37. | ராமசாமி ” |
38. | இருளப்பன் ” |
39. | மாடசாமி” |
40. | வீரபாண்டியன் |
41. | வெங்கட்டராயன் .” |
42. | உடையார் |
43. | முத்துராக்கு ” |
44. | முத்துராக்கு-ஆனைக்கொல்லம் |
45. | சொக்கதலைவர் - நான்குனேரி |
46. | இருளப்பதேவர்” |
47. | மல்லையா நாயக்கர் - இளவம்பட்டி |
48. | சுப்பிரமணி நாயக்கர் - கண்டநாயக்கன்பட்டி |
49. | காமாச்சி நாயக்கர் |
50. | ராமசாமி |
51. | பிச்சாண்டி நாயக்கர் |
52. | தளவாய் - கழுமந்தன் |
53. | சின்னவேடன் - பீசாம்பள்ளி |
54. | வேதமூர்த்தி - காந்தேஷ்வனம் |
55. | தளவாய் பிள்ளை, திசைகாவல் மணியக்காரர், பாஞ்சாலங்குறிச்சி |
56. | சுப்பிரமணியன் |
57. | பெத்த நாயக்கர் - அரசடி |
58. | கிருஷ்ணப்ப நாயக்கர் |
59. | வேலன் - குளத்துார் |
60. | மயிலேறி - அரசடி |
61. | வள்ளிமுத்து - கொங்கராயங்குறிச்சி |
62. | ராமன் - சிறுவயல் |
63. | பாலையா நாயக்கர் - சூரங்குடி |
64. | குமரன் |
65. | வெள்ளையக்கொண்டான் வெள்ளையன் |
66. | ராமன் விருபாட்சி |
67. | அழகு சொக்கு ” |
68. | ஷேக் உசைன்” |
69. | கிருஷ்ணப் பிள்ளை |
இவர்கள் அனைவரும் எண்பது நாட்கள் கையில் விலங்கிடப்பட்டவர்களாக கப்பலுக்குள்ளேயே அடைபட்டுக் கிடந்ததால் கப்பலை விட்டு வெளியே காலடி வைத்து இறங்கி வருவதே அவர்களுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அவர்களது உடல் நிலை மோசமாகவும், தெம்பு இல்லாதவர்களாகவும் காணப்பட்டனர். அதனால் அவர்களில் இருபது பேர் அடுத்தடுத்து-கி.பி.1802 மே திங்களில் நால்வரும், ஜூன் திங்களில் நால்வரும், ஜூலையில் இருவரும், ஆகஸ்டில் நால்வரும், செப்டம்பரில் அறுவரும்-இறந்து போனதில் வியப்பில்லை.
தூத்துக்குடித் துறைமுகம் வழியே அனுப்பப்பட்ட இந்த விடுதலை வீரர்களைத் தொடர்ந்து சென்னையிலிருந்தும், வேறு சில போராட்ட வீரர்களும் பினாங்கு தீவுக்கு பாதுகாப்புக் கைதிகளாகக் கொண்டு வரப்பட்டனர். அவர்களில் வடநாட்டில் வெள்ளையனுக்கெதிராக போராட்டம் நடத்தி தியாகியான ஹெகடாவின் சுற்றத்தாரரான கிருஷ்ணா, சின்னையா என்பவர்களும் மராட்டிய மாநில ஆனந்தரங்கம், நெங்கா பண்டா, கரப்புவரிணி சுந்தரலிங்கம், சின்னவீட்டு சதாபரமன் ஆகியோரும் அவர்களில் முக்கியமானவர்கள். இந்தக்கைதிகள் தப்பித்துத் தாயகம் திரும்பி விடாமல் கண்காணிக்கப்பட வேண்டும் எனக் கும்பெனித் தலைமை பினாங் ஆளுநர் ஜார்ஜ் லீத்துக்கு எச்சரிக்கை செய்து இருந்தது. இவர்கள் அனைவரது எஞ்சிய வாழ்க்கை முழுவதும் பினாங்கு தீவிலேயே கழிந்தது. அந்தத் தீவினைச் சூழ்ந்துள்ள ஆழ்கடலைப் போன்று, நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்ட அந்த நல்லவர்களது இதயங்களிலும் கரை காண இயலாத கவலையும் வருத்தமும் விஞ்சி நின்றன.
“தொண்டுபட்டு வாழும் எந்தன்
தூய பெருநாட்டில்
கொண்டுவிட்டு அங்கு என்னை உடனே
கொன்றாலும் இன்புறுவோம்... ... ... ... ... ...”
... ... ... என்றுதான் அவர்கள் ஏங்கி ஏங்கி அழுது மடிந்திருக்க வேண்டும்.
என்றாலும், கும்பெனியார் தரப்பில் மனநிறைவு காணப்படவில்லை. இராமநாதபுரம் சிவகங்கைச்சீமை மக்களைப்பற்றிய அச்சமும் குழப்பமும் அவர்களிடம் இருந்து கொண்டே இருந்தன. அதனுடைய வெளிப்பாடுதான் அக்கினியூவின் கோரிக்கை. இந்த நாட்டின் புதிய ஆளவந்தார்களான அவர்களை, எந்தச் சூழ்நிலையிலும் - என்றென்றும் எதிர்த்து மக்கள் மீண்டும் ஆயுதம் தாங்கிப் போராட முடியாத பலவீனமான, கோழைகளை குடிமக்களாகக் கொண்டு சமுதாய அமைப்பைத் தோற்றுவிக்க வேண்டும். பயந்து பரங்கிகளுக்கு கட்டுப்பட்ட அந்த மக்களைத் தங்களது கூரான துப்பாக்கி முனையைக் காட்டி பயத்தால் குனிய வைத்து நிரந்தரமாக அடக்கி ஆள முடியும் என்பது அவர்களது கணிப்பு.
அக்கினியூவின் அந்த ஆலோசனையை கும்பெனித் தலைமை அப்படியே ஏற்றுக் கொண்டது. திருநெல்வேலி, மதுரை இராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் சீமைகளில் உள்ள அமில்தார்கள், குடிகளிடம் எஞ்சி இருந்த ஆயுதங்களைப் பறித்துக் கைப் பற்றும் பணியில் ஈடுபட்டனர். சிவகங்கைச் சீமையில் இந்தப் பணிக்கு வைகுந்தம் பிள்ளை என்பவரை புதிய சிவகங்கை ஜமீன்தார் நியமனம் செய்து இருந்தார்.[9] பரங்கிகளது திட்டத்தின் வெற்றியைக் குறிப்பதுடன் அந்தச் சீமை மக்கள் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்திற்கு ஆயத்தமான நிலையில் இருந்தனர் என்பதையும் புலப்படுத்துகின்றனர். கீழே கொடுக்கப்பட்டுள்ள புள்ளி விபரங்கள் பரங்கிகளது திட்டத்தின் வெற்றியைக் குறிப்பதுடன் அந்தச் சீமை மக்கள் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்திற்கு ஆயத்தமான நிலையில் இருந்தனர் என்பதையும் புலப் படுத்துகின்றன.
16-1-1802ம் தேதிய அறிக்கையில் கண்டுள்ளபடி[10]
ஆயுத வகை | நெல்லைச் சீமை | சிவகங்கைச் சீமை | இராமநாதபுரம் சீமை | மொத்தம் | |||||||
1. | மஸ்கட் | 1602 | 1050 | 457 | 3109 | ||||||
2. | மஸ்ஸில்லோடிங் துப்பாக்கி | 686 | – | 570 | 1256 | ||||||
3. | கைத்துப்பாக்கிகள் | 815 | – | 19 | 834 | ||||||
4. | வால்பீஸ் | 152 | – | 40 | 192 | ||||||
5. | ஜிஞ்சாலி (பீரங்கி) | 3 | – | 6 | 9 | ||||||
6. | நீண்ட ஈட்டிகள் | 2300 | – | 1900 | 4200 | ||||||
5558 | 1050 | 2992 | 9600 | ||||||||
21-2-1802ம் தேதிய அறிக்கைப்படி | |||||||||||
1. | மஸ்கட் | 2438 | 1639 | 1037 | 5114 | ||||||
2. | பீரங்கிகள் | 16 | – | – | 16 | ||||||
3. | மாட்ச்லாக் | 979 | 944 | 1584 | 3507 | ||||||
4. | கைத்துப்பாக்கி | 126 | 19 | 67 | 8 | மஸ்கட் (மாட்ச்லாக்குடன்) | 221 | 8 | 234 | 463 | |
9. | சருகார் | 235 | 78 | 147 | 460 | ||||||
10. | ஜிஞ்சாலி | 15 | 14 | 13 | 43 | ||||||
11. | ஈட்டிகள் | 3183 | 3275 | 4117 | 10375 | ||||||
12. | ஈட்டி முனைகள் | 703 | 108 | 425 | 1236 | ||||||
13. | ஈட்டித்தடி | 112 | - | - | 112 | ||||||
14. | துப்பாக்கி சனியன் | 426 | 94 | 281 | 801 | ||||||
15. | கைத்துப்பாக்கி (குழாய்கள்) | 27 | 1 | - | 28 | ||||||
31-3-1802ம் தேதிய அறிக்கைப்படி[11] (4-11-1801 முதல் 31-3-1802 வரை) | |||||||||||
1. | துப்பாக்கியும், துப்பாக்கி குழாய்களும் | 4149 | 2096 | 1848 | 8094 | ||||||
2. | மாட்ச்லாக் | 1281 | 1229 | 2517 | 5027 | ||||||
3. | வேல், ஈட்டிகள் | 4730 | 3640 | 5409 | 13779 | ||||||
4. | கைத்துப்பாக்கிகள் | 450 | 42 | 101 | 593 | ||||||
5. | வாள் | 2090 | 652 | 856 | 3598 | ||||||
6. | குத்துவாள் | 1304 | 441 | 630 | 2375 | ||||||
7. | ஜிங்கால் | 17 | 17 | 11 | 45 | ||||||
8. | ஸ்ரோசர் | 268 | 90 | 227 | 585 | ||||||
9. | துப்பாக்கிச்சனியன் | 645 | 91 | 180 | 916 | ||||||
மொத்தம் | 14,934 | 8,298 | 11,780 | 35,012 |
இந்த ஆயுதங்களைப் பறித்ததற்கும், சில இடங்களில் கோட் டைகளை இடித்துத் தரைமட்டமாக்கியதற்கும் கும்பெனியார் செலவு செய்த விவரங்களும் கிடைத்துள்ளது.[12]
1. | நெல்லைச்சீமையில் (ஆர்க்காடு வெள்ளிப்பணம்) | ரூ. 27,342. 4. 40 |
2. | சிவகங்கைச் சீமையில் " " " | ரூ. 10,426, 7.41 |
3. | இராமநாதபுரம் சிமையில் " " " | ரூ. 32,398. 10. 40 |
ரூ. 70,168. 2.27 |
தமிழக மக்கள் தலை கவிழ்ந்து நடக்கக்கூடிய இத்தகைய இழிசெயல்களை முன் எச்சரிக்கை, பாதுகாப்பு என்ற பெயரில் அவர்கள் மேற்கொண்டாலும், அவர்களை உள்ளுர பயமும் பீதியும் ஆட்டி அலைத்துக் கொண்டிருந்தது என்பதைச் சுட்டும் நிகழ்ச்சியொன்று திருநெல்வேலியில் நடந்தது.[20] நெல்லையப்பருக்கு ஆண்டாண்டாக நடக்கும் ஆனித்திருமஞ்சன விழா. கோயில் திருவிழா என்றால் மக்கள் கூட்டம் இல்லாமலா இருக்கும் ? கலைக்டர் லூஷிங்டனுக்கு உச்சித்தலை முதல் உள்ளங்கால் வரை நடுக்கம் கண்டது. ஆயிரக்கணக்கில் கோயிலில் கூடுகின்ற மக்கள் வெள்ளையர் எதிர்ப்பு உணர்வுடன் நடந்து கொண்டால் ...? கும்பெனியாரது சொத்துக்களைக் கொள்ளையிட்டு கச்சேரியில் அடைக்கப்பட்டிருக்கும் சிறைக் கைதிகளைத் தப்புவிக்கும் முயற்சியில் ஈடுபட்டால் ... அவனது சிந்தனை அவ்விதம் பீதியினால் நடுங்கியது. உடனே பாளையங்கோட்டையில் உள்ள மேஜர் ஷெப்பர்டுக்கு ஓலை அனுப்பினான். திருநெல்வேலியில் திருவிழா நடைபெறும் இரண்டு நாட்களிலும் கும்பெனிச் சிப்பாய்களை நகரின் பல இடங்களில் நிறுத்தி வைத்து பக்தர், பொதுமக்கள் நடமாட்டங்களைக் கண்ணும் கருத்துமாக கவனித்து வருமாறும், சுவாமியின் பவனிமுடிந்தவுடனேயே மக்களைக் கலைந்து செல்லுமாறு செய்யும்படியும், நடவடிக்கை எடுக்க. இப்படி எத்தனை திருவிழாக் கூட்டத்தைக் கண்டு பரங்கிகள் நடுங்கினார்களோ தெரியவில்லை.
இத்தகைய நடவடிக்கைகள், மதுரை, திண்டுக்கல். திருச்சி சீமைகளிலும் மேற்கொள்ளப்பட்டன. வத்தலக்குண்டு, நத்தம் பெரியகுளம், வேடசந்துார், பழநி, தாராபுரம், கரூர், காங்கயம் தாசில்தார்கள் ஏராளமான ஆயுதங்களை குடிகளிடமிருந்து கைப்பற்றியதை அவர்களது அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மேலும் அவர்கள், போடி, கம்பம், அம்மையநாயக்கனூர், தேவதானப் பட்டி, கன்னிவாடி, பழநி, மருங்காபுரி, வீரமலை, பொள்ளாச்சி ஆயக்குடி, பல்லடம் பாளையக்காரர்கள் வைத்திருந்த, ஆயுதங்களையும் பறித்து மதுரைக் கோட்டைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் தேவானப்பட்டி, கங்குவார்பட்டி, போடி, பழநி ஆகிய ஊர்களில் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை அடித்து விரட்டக்கூட ஆயுதம் இல்லாமல் அங்குள்ள மக்கள் அவதிப்பட்ட செய்திகளும் உள்ளன.[21]
கும்பெனியாரது பயங்கொள்ளித் தனமான இந்த வெறிச் செயல்கள் கி. பி. 1804 வரை நீடித்தன.[22] அத்துடன் இப்பகுதிகளில் உள்ள இருபத்தைந்து பாளையக்காரர்களிடம், ஆயுதம் தாங்கிப் போரிடக் கூடிய வீரர்கள் எத்தனை பேர் இருந்து வருகின்றனர் (10-300) என்ற புள்ளி விவரங்களையும் சேகரித்தனர்.[23] மேலும் கிளர்ச்சிக்காரர்களது தாக்குதல் ஏற்பட்டால் அதனைச் சமாளிப்பதற்கு என்ன செய்யலாம் என யோசித்தனர். கோவில்களிலும் மடங்களிலும் பணியாற்றும் பிராம்மண சமூகத்தினரையும் திரட்டி, அவர்களுக்கும் போர்ப்பயிற்சி கொடுக்கவேண்டும் எனக் கும்பெனியார் தளபதிக்கு மதுரைச்சீமைத். துணைக் கலெக்டர் காரோ உத்திரவிட்டான்.[24]
சிவகங்கைச் சீமை விடுதலைப் போராட்டத்தை நசுக்கிவிட்ட பொழுதிலும், பரங்கிகள் எந்த அளவிற்கு பயத்தினால் நடுங்கிக் கொண்டு இருந்தனர் என்பதை இந்த உத்திரவுகள் தெரிவிக்கிறது.[25] அவர்களது பீதியை உறுதிப்படுத்தும் வகையில், திண்டுக்கல் சீமை மக்களது ஆவேசம் குறையாமல் இருந்தது. பக்கத்து சீமையான சிவகங்கைச் சீமையும் அதனைப் போராட்டக்களத்தில் நிறுத்திய சிவகங்கை சேர்வைக்காரர்களைப் பரங்கியர் அழித்தபிறகும், அவர்களது எழுச்சி மிக்க உணர்வுகளால் உந்தப்பட்ட கிளர்ச்சிகள், ஓயவில்லை. என்றாலும் அவர்களுக்குள் ஒற்றுமை இல்லை. போராட்டத்தைத் திட்டமிட்டு நடத்தும் உறுதி யான தலைமை இல்லை. பரங்கியருக்கு ஈடான வெடிமருந்து ஆயுதங்களும் அவர்களிடம் இல்லை. அவர்களது போராட்டமும் கடலில் பெய்த மழையாகப் பயனற்றுப் போயிற்று.
கிளர்ச்சிகளில் தீவிரமாக ஈடுபட்டவர்களை சத்திரப்பட்டியிலும், பழனியிலும் தூக்கில்போட்டு கொன்றனர். விருபாட்சி பாளையக்காரர் லெட்சுமண நாயக்கர், தாசரிப்பட்டி, பொம்மகவுண்டர், பெரியகோட்டை வெள்ளைக்கவுண்டர், பூசாரிப்பட்டி- சந்திரன் சேர்வைக்காரர். பழனி சேர்வைக்காரர் மைத்துனர் வெள்ளையன் சேர்வைக்காரர், சின்னவலையப்பட்டி கட்டையன் சேர்வைக்காரர், காமாட்சிப்பட்டி வயிரவன் சேர்வைக்காரர் ஆகியோர் அந்தத் தியாகிகள்.[26] இவர்களில் லட்சுமண நாயக்கரைத் தவிர்த்து, ஏனைய கிளர்ச்சிக்காரர்கள் அனைவரும் கி.பி. 1801ம் ஆண்டு கிளர்ச்சிக்காகக் கைதுசெய்யப்பட்டு நன்னடத்தை பொறுப்பில் விடுவிக்கப்பட்டனர். என்றாலும், கிளர்ச்சியின் முடிவு உயிர்க் கொல்லியாக இருக்கும் என்று நன்கு உணர்ந்தவர்களாக இருந்தும், ஏகாதிபத்திய எதிர்ப்பு வெறியினால் கும்பெனியாரை அடித்துத் துரத்த வேண்டும் என்ற துணிச்சலான முடிவில் இருந்தார்கள் அவர்கள்.
இந்தத் தண்டனைகளை தாமே நேரில் இருந்து நிறைவேற்றியதாக கலெக்டர் பாரிஷ் மேலிடத்திற்கு அறிக்கை செய்தான்.[27] இன்னும் லெட்சுமண நாயக்கர் மகன் ராம்ராஜ், சிந்தலப்பட்டி நல்லப்ப கவுண்டர், தமச்சான்பட்டி, தண்டு கதிருநாயக்கன், முண்டவண்டி நஞ்சையன் சேர்வைக்காரர் ஆகியவர்களை கும்பெனியார் “கருணையுடன்” ஜென்ம தண்டனை வழங்கி நாடு கடத்தினர். அதில் இந்தக் குற்றவாளிகள் அனைவரும் கிளர்ச்சிக்காரர் லெட்சுமண நாயக்கரது “தீய செயல்களுக்கு”த் துணையாக இருந்திராவிட்டால், தாங்கள் பிறந்த மண்ணில் அவர்கள் அமைதியாக வாழ்ந்து இருக்க முடியும் என்று தமது பச்சாத்தாபத்தையும் தெரிவித்து இருந்தான் பாரிஷ். ஆனால் இத்தகைய கொடுமையாள கோரமான இழிவான சிந்தையினால், செயல்களினால், குமைந்து கொப்பளித்துக் கொண்டிருந்த மக்களின் மனோபாவத்தை, வரலாற்றின் காலகதியை, இந்தப்புதிய அரசியல்வாதிகள் அணைபோட்டுத் தடுக்க இயலவில்லை. அளர்களது நயவஞ்சகத்தன்மை, அரசியல் அநாகரிகம், மனிதாபிமானமற்ற ஈன செய்கைக்ளினால் அடிமை உணர்வும், சிறுமைப்புத்தியும் கொண்டு இருந்த பாமரர்கள் கூட ஏற்றமிகு சிந்தனையும் எழுச்சியும் பெற்று இரும்பு அரணாக எழுந்து நின்றனர். அவர்களது தியாகம் இமய வரம்பையும் விஞ்சி நின்றது. அப்பொழுது தீயவர்களது துரோகம் அவர்களைத் தொட முடியவில்லை. அரக்கர்களது அடக்குமுறை தானே அடங்கிவிட்டது. புதிய வரலாறு படைத்தனர். அதுவரை, மன்னர்கள் மாற்றுநாட்டு மன்னரை எதிர்த்துப் போரிட்டு வந்ததுதான் வரலாறு. ஆனால் இப்பொழுது மக்கள், அன்னிய நாட்டு ஆதிக்கவாதிகளுக்கு எதிராகப் போராடினர்.
அவர்களது போராட்டமும் தியாகமும் இன்னும் முடிவடையாத ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரின் ஏற்றமிகு போர்க்கொடியாக விளங்கி வருகின்றன.
"மனித சமுதாயத்தின் நலனுக்கான இந்தப்போர் இன்னும் தொடருகிறது. அதிகார ஆணவத்திற்கும் அரிய பண்புகளுக்கும் இடையில் நடைபெறும் இந்தப்போரினது குருதிபடிந்த வரலாறு வளர்ந்து கொண்டே போகிறது". ஏகாதிபத்திய வாதிகளின் விதவிதமான கொடுமைகளைத் தாங்கி வீறு கொண்டு எழுந்து வீரமரணத்தைத் தழுவிய சிவகங்கைச்சீமை செம்மல்களை நினைக்கும் நெஞ்சங்களுக்கு தங்களது காணிக்கையைச் செலுத்த கண்கள். எப்பொழுது கண்ணீரை நிறைத்து காத்துக் கொண்டிருக்கின்றன.
- ↑ பக்கீர் முகம்மது - கெடா வரலாறு (பினாங். 1959) பக்கம் 25-26.
- ↑ Northcotre Perkinson - Trade with Eastern Seas (1937) p.52
- ↑ Military Consultations vol. 288 (A) (1 1-2-1802) p. 887-89
- ↑ Ibid vol. 304, (9-11-1802) p. 7867-68
- ↑ Ibid vol. 288 (A) (1 1-2-1802) p. 887-89
- ↑ Military Consultations, vol. 307, (19-1 -1803), p. 1249.
- ↑ Ibid, vol. 304, (4-11-1802), p. 7869–70.
- ↑ Ibid vol. 307, (19-1-1801), (B) p. 1250,
Ibid vol. 304, [1-10-1802) p. 7867-68. - ↑ Madurai District Records vol. 1178(A) (17-5-1802), p 354
- ↑ Madurai District Records vol 1139,(16-1-1802) p. 27.
- ↑ Madurai District Records vol. 1140. (31-3-1802), p. 199.
- ↑ Ibid 1141 (31-3-1802). pp.25-58
- ↑ .Ibid 1140 (31-3-1802), p. 196
- ↑ Idid 1140 (31-3-1802). p. 199
- ↑ Ibid 1142 (8-1-1803). p. 2
- ↑ Madurai District Records vol. 1221 p 27-50
- ↑ Madurai District Records vol. 1146 (1–9-1803) p. 34
- ↑ Madurai District Records vol. 1140 (28-5-1802) р. 36 & р. 96.
- ↑ Madurai District Records vol. 1178 (A) 10-5-1802
- ↑ Ibid (11-7-1802) p. 56.
- ↑ Madurai District Records vol. 128, pages 39, 42, 61, 66
- ↑ Ibid. 1147, 30-10-1804
- ↑ Ibid. 1146, (27-9-1803,) p. 59
- ↑ Ibid 26-3-1805, 27-3, 1805
- ↑ Madurai District Records, vol. 1222, (9–5–1802)
- ↑ Ibid 1 148 (26-3-1805, (27-3-1805)
- ↑ Madurai District Records vol. 1148 (3–5-1805) р. З8