மாவீரர் மருதுபாண்டியர்/பரங்கியரும் பாஞ்சாலங்குறிச்சியும்
5
பரங்கியரும் பாஞ்சாலங்குறிச்சியும்
தமிழ்நாட்டில் விஜயநகர நாயக்கர் ஆட்சியை நிலைநிறுத்திய விசுவநாதநாயக்கர், கோயம்புத்தூரில் இருந்து கன்னியாகுமரி வரையான பரந்த தமிழ் நிலப்பகுதியை இறுக்கமான நிருவாக அமைப்பிற்குள் கொண்டு வந்தார். மதுரை நாயக்கருக்கு எந்தவித அவசர ஆபத்தான, நிலையிலும் பாதுகாப்பு வழங்குவதற்கு ஏற்றதாக எழுபத்து இரண்டு பாளையக்காரர்களை நியமனம் செய்தார்.[1] இவர்களில் முப்பத்து இரண்டு பாளையக்காரர் தெற்கே திருநெல்வேலிப் பகுதியில் இருந்தனர். அவைகளில் ஒன்றுதான் பாஞ்சாலங்குறிச்சி என்பதாகும். மிகச்சிறிய பாளையம், போதுமான இயற்கை வளங்கள் இல்லாதது, இந்தப் பாளையத்தின் தலைவராக ஆந்திரமாநிலத்தில் இருந்து வந்து, நாயக்க மன்னரது பணியில் இருந்த கம்பளத்தார். [2]ஒருவர் நியமனம் செய்யப்பட்டார். அவரது இயற்பெயர் தெரியவில்லை “கெட்டி பொம்மு” என்ற (தெலுங்கு) சிறப்பு பெயரால் அவரும் அவரது வழியினரும் வழங்கப்பட்டனர். தமிழில் அந்தப்பெயர் “கட்ட பொம்மு” ”கட்டபொம்மன்” குலவழிப்பெயராக மாறியது. கட்ட பிரம்மய்யா என இந்தப் பாளையக்காரர்களை சில நூலாசிரியர்களும் குறிப்பிட்டு உள்ளனர்.
மதுரை நாயக்கமன்னர் மரபின் கடைசி வாரிசான ராணி மீனாட்சி கி.பி. 1736ல் இறந்தவுடன், தமிழகத்தின் ஏனைய பாளையக்காரர்களைப் போன்று பாஞ்சைப் பாளையக்காரரும் ஆர்க்காட்டு நவாப்பிற்கு கப்பத் தொகையைச் செலுத்தாமல் கி.பி. 1766 வரை வசதியாக இருந்து வந்தார். ஆனால் நவாப் பிற்காக கும்பெனிப்படைகள், மேஜர் பிலின்ட் தலைமையில் இந்தப் பாளையத்தை தாக்கிப்பிடித்தனர். மீண்டும் கி.பி. 1768ல் பாளையத்தைக் கைப்பற்றி கப்பத்தொகையை வசூலித்தார். இந்தப் பாளையத்தின் தலைவராக கி.பி. 1791ல் நியமிக்கப்பட்ட வர்தான் “வீரபாண்டிய” என்ற சிறப்புப் பெயருடன் அழைக்கப் பெற்ற “கட்டபொம்மன்”.
இவர் கும்பெனியாரால் சிறைப்பிடிக்கப்பட்டு 16-10-1799ம் தேதி தூக்கிலிடப்பட்டார். அப்பொழுது அவருடன் கைது செய்யப்பட்ட அவரது சகோதரன் ஊமை குமாரசுவாமியும் மற்றவர்களும் பாளையங்கோட்டையில் சிறைப்படுத்தப்பட்டனர்.
ஊமைத்துரையும் அவரது தோழர்களும் 2. 2. 1801ம்தேதி மாலையில் அங்கிருந்து தப்பித்து ஓடினர்.[3] அங்கிருந்து முப்பத்து ஐந்து கல் தொலைவில் உள்ள பாஞ்சாலங்குறிச்சி கோட்டைக்கு இரவோடு இரவாக ஓடி வந்து சேர்ந்தனர். அவர்களைத் தொடர்ந்து பரங்கிப்படை வந்து சேரும் வாய்ப்பு இருந்ததால் தற்காப்பு போருக்கான எல்லா ஏற்பாடுகளும் உடனே செய்யப்பட்டன. எதிர்பார்த்தபடி பாளையங்கோட்டையிலிருந்து பரங்கிப் படை 6-2-1801 ம்தேதி பாஞ்சாலங்குறிச்சிக்கு வந்து சேர்ந்தது.
அப்பொழுது அவர்கள் கண்ட காட்சியை அவர்களால் நம்ப இயலவில்லை. கடந்த ஓராண்டுக்கால இடைவெளியில் தரையோடு தரையாக அழித்து நாசம் செய்யப்பட்ட இடத்தில், மீண்டும் பலம் வாய்ந்த கோட்டை ஒன்று எழுப்பப்பட்டு கொத்தளங்களில் 1500க்கும் மேற்பட்ட வீரர்கள் காவலாக நின்றனர். அந்தக் கோட்டையின் தோற்றமே அவர்களை கதிகலங்கச் செய்தது. ஆதலால் பரங்கிப்படை வந்தவழியே பாளையங்கோட்டைக்கு 10. 2. 1801 அன்று திரும்பி ஓடியது. பாஞ்சாலங்குறிச்சிக் கிளர்ச்சிக்காரர்கள் அவர்களை துரத்திச் சென்று மிகுந்த சேதத்தை விளைவித்தனர். அத்துடன் பக்கத்தில் உள்ள ஶ்ரீவைகுண்டம் பகுதிகளையும் ஆக்கிரமித்து அவர்களது கைப்பற்றுதலில் வைத்துக் கொண்டனர்.
"ஆனால் அடுத்த ஒன்றரை மாத அவகாசத்திற்குள் பல இடங்களில் இருந்தும் உதவி பெற்று தங்களைத் தயார் செய்து கொண்ட பரங்கிகள் மீண்டும் 30-3-1801ம்தேதி பாஞ்சாலங்குறிச்சியின் மீது படை எடுத்தனர். இந்தப் படையெடுப்பிற்கு பக்கத்து பாளையமான எட்டையாபுரம் பாளையக்காரர் எல்லாவிதமான ஊழியங்களைச் செய்து வந்தார். ஆனால் பரங்கிகளால் பாஞ்சைக் கோட்டையை நெருங்க இயலவில்லை. ஒவ்வொரு நாள் போரிலும் எத்துணைவிதமான தாக்குதலைத் தொடர்ந்தும் உயிர்ச் சேதமும் பொருட்சேதமும் பரங்கிகள் பக்கம்தான் இருந்து வந்தது! இலங்கையில் இருந்த மலாய் நாட்டு அணியும், கர்நாடக, மலையாளப் படை அணிகளும் பரங்கிகள் உதவிக்கு வரவழைக்கப்பட்டன.[4] என்றாலும், இரண்டு மாதமாகத் தொடர்ந்த அந்த போரின் நிலைபற்றி கவலையடைந்த கும்பெனி மேலிடம் பாஞ்சாலக்குறிச்சியில் உள்ள கும்பெனி அணியின் தலைமையை மாற்றியது. சென்னைக்கோட்டையில் பணியாற்றிய கர்னல் அக்கினியூவை நியமித்தது. அதுவரை பாஞ்சைப்போரில் கும்பெனிப் படைகள் தோல்வியடைந்து நிலை குலைந்திருந்தது.
புதிய தளபதி அக்கினியூம் தமது போர் நடவடிக்கையை 21-5-1801-ல் துவக்கினான். பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை உடைத்து அழித்துவிட்டால், எதிரிகளை எளிதில் ஒழித்து விடலாம் என்பது அவனது முடிவு. அவனது திட்டப்பட்டி படபடவென வெடிக்கும் பீரங்கிக் குண்டுகள் தொடர்ந்து கோட்டை மதிலை துளைத்து நொறுக்கின. நான்கு நாட்களில், பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை பிய்த்து எறியப்பட்ட தூக்கணாங்குருவிக் கூடு போல துயரக்காட்சி அளித்தது. பொதுவாக பேசமுடியாத ஊமத்துரை பரங்கிகளை அழித்து விடுவேன் என சைகையால் சூளுரைத்து, சின்னஞ்சிறு குச்சிகளை எடுத்து தமது உள்ளங்கையில் வைத்து பொடியாக்கி, தலையைச் சுற்றி, வாயினால் ஊதிவிட்டு, அவைகள் பறந்து விழுவதைப்பார்த்து மகிழ்ச்சி கொள்ளும்[5] அவரது திட்டங்களும் அவர் தோழர்களது எதிர்ப்பு உத்திகளும் நிலை குலைந்தன. வேறு வழியில்லாமல் அதுவரை ஈடுபட்டு இருந்த தற்காப்புப்போர் உத்திகளை மாற்றிக்கொண்டு, பரங்கிகளுடன் நேருக்குநேர் பொருதினர்.
புறநானூற்றுப் பாடல்களை நினைவுப்படுத்தும் வண்ணம் பாஞ்சை மறவர்கள் புறமுதுகு இடாது வீரத்துடன் போரிட்டு மடிந்தனர். ஏகாதிபத்திய வெறியர்களான பரங்கிகளது அழிவுப் படைகள், வெடிகுண்டுகள் தங்களது புனித மண்ணில் புதைந்து பழி சேர்க்கக்கூடாது என்பதற்காக அவைகளைத் தங்களது பரந்த நெஞ்சங்களில் தாங்கியவர்களாக மடிந்து சாய்ந்தனர். அவர்களது வீரமும் மானமும் விடுதலை இயக்க வரலாற்று பள்ளாக காலமெல்லாம் ஒலிக்கும் என்பது உறுதி.
பாஞ்சாலங்குறிச்சிப் போரில், பரங்கிகளது அணியில் பங்கு கொண்ட கர்னல் வெல்ஷ், அந்தப்போரின் காட்சிகளை, வேதனை யும், வியப்பும் விரவிய வார்த்தைகளால் தமது நாட்குறிப்புக்களில் பதிவு செய்துள்ளார். பதினெட்டு பக்கங்களில் அச்சிடப்பட்டிருக்கும் அவரது குறிப்புகள் வரலாற்று நோக்கில் சிறப்புடையனவாக விளங்குகின்றன. மாற்று அணியைச் சேர்ந்தவரானாலும் உண்மையான வீரத்தை உள்ளத்தின் ஆழத்திலிருந்து விருப்பு வெறுப்பு இல்லாமல், விவேகத்துடன் புகழ்ந்து, தொடுத்த அஞ்சலிபோல அமைந்துள்ளது அவரது சொற்கள். 24-5-1801ம் தேதி, உச்சி வேளைக்குப் பின்னர் உயர்ந்து நின்ற ஆதவன், மேற்கு நோக்கி தாழ்ந்ததுபோல போரின் எதிர்ப்பு வேகம் தணிந்தது. நான்கு மாதங்களாக நிமிர்ந்து நின்ற பாஞ்சாலங்குறிச்சி கோட்டை வீழ்ந்தது. வீரர்கள் சாய்ந்தனர். அந்த இறுதிப் போர்க்காட்சியை கர்னல் வெல்ஷின் ஆங்கிலச்சொற்கள் இவ்விதம் சித்திரிக்கின்றன.[6]
... ... ... ... வெற்றியைக் காணாத அந்த தாக்குதலில் அதுவரை மோசமாக பாதிக்கப்பட்டு இருந்த நமக்கு, நரிப்பள்ளம்[7] போன்று கோட்டையின் உட்பகுதியை முதன் முறையாகக் கண்ட பொழுது உள்ளத்திற்கு ஆறுதலாக இருந்தது. இதனைக் கைப்பற்றுவதற்காக ஏற்கனவே பல முறை முயற்சித்தது உண்டு. அந்த இடம் தரைமட்டத்திற்கு கீழே, மூவாயிரம் வீரர்கள் சில சமயங்களில் ஆபத்து மிகுந்த வேளையில் அவர்களது குடும்பத்தினரும், தற்காப்பாக தங்குவதற்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டு இருந்தது, வியப்பாகத் தோன்றியது. எதிரிகளது துப்பாக்கி, பீரங்கி குண்டுகளது தாக்குதலில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக அந்தக்கோட்டையின் பல பகுதிகளிலும், இத்தகைய பள்ளங்கள் தோண்டப்பட்டு இருந்தன ... ... ... ... இந்தப் பள்ளங்களில் உள்ளவர்கள் பயன்படுத்திய நீண்ட ஈட்டிகள், நல்ல பலனைத் தந்தன. அந்தப்பகுதியை அடைந்த எந்த எதிரியும் உடனே குத்திக் கொல்லப்பட்டதில் ஆச்சரியமில்லை. அங்கு அவர்கள் பதுங்கி இருக்கும் வரை எதிரிகள் யாரும் நெருங்கிச் செல்லமுடியாது. ஆனால் தாக்குதல் எங்கிருந்து வருகிறது என்பதனை உணரமுடியும். இத்தகைய காட்டுமிராண்டித்தனமான தற்காப்பு முறையை அங்கு அமைத்த பொறியாளரைப் போற்றாமல் இருக்க முடியாது. அந்தக் கோட்டை மதில் மட்டும் இன்னும் சற்று உறுதியாக இருந்து தற்காப்பிற்கு துப்பாக்கி யையும் சனியன்களையும் பயன்படுத்தி இருந்தால், நாம் இன்னும் இரண்டு மாதங்களுக்கு அந்தக்கோட்டை முன்னே காத்துக் கொண்டிருக்க வேண்டியதாகிவிடும் ... ... ... ... "[8]
பஞ்சாலங்குறிச்சி 24-5-1801 அன்று வீழ்ந்தது. அதனைக் குறிப்பிட்டுள்ள "திருநெல்வேலி சீமை சரித்திர" ஆசிரியர், " ... ... ... பிடிபட்ட கோட்டைக்குள் பிரவேசித்த கும்பெனியாரின் ராணுவ அலுவலர்கள் அதன் சிறுமையைக் கண்டு அலட்சியமடைந்தனர். ஆனால் அதன் வலுவையும், அதனைக் கட்டி முடித்த கண்ணிமைப் பொழுதினையொத்த இந்திரசால நொடியின் அளவையும், எதிரிகளின் மாயாவினோத திறமை, சாமர்த் தியத்தையும் அவர்கள் பிரயோகித்த ஆயுத முறைகளின் தேர்ச்சியையும் கண்டு பிரமித்துப் போய்விட்டனர்.’’ என வெற்றிப் படைத்தலைவர்களது மனப்பான்மையைத் தெளிவாகச் சுட்டியுள்ளார்.[9]இத்தகைய கோட்டைப் போரினைத் திறம்பட இயக்கிய புதுமை மனிதர் ஊமைக் குமாரசுவாமியைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது, கர்னல் வெல்வின் கருத்துத்தான் இங்கு பொருத்தமாக உள்ளது. “ஊமையை மக்கள் பெரிதும் பாராட்டி மதித்தனர். அவரது சிறு அசைவு கூட அற்புதமாகக் கருதப்பட்டது. அவரது ஆணையை நிறைவேற்ற அனைவரும் ஒடோடி வந்தனர். அவர் இல்லாமல் எந்த ஆலோசனையும் இல்லை. அவர் தலைமை இல்லாத போராட்டமும் கிடையாது”.[10]
போரில் இறந்துவிட்ட பாஞ்சைத் தலைவர்களை இனங்கண்டு கொள்வதற்காக மடிந்து கிடக்கும் பாஞ்சை மறவர்களது பினக்குவியல்களைச் சுற்றிப்பார்த்து வந்தனர் எட்டையாபுரத்து துரோகிகள். அதே சமயம் பாஞ்சாலங்குறிச்சியைச் சேர்ந்த தாய் ஒருத்தி, போரில் கலந்து கொண்ட தனது ஒரே மகனின் சடலத்தை போர்க்களத்தின் இன்னொரு பக்கத்தில் தேடிக் கொண்டு இருந்தாள். குற்றுயிராகக் கிடந்த அந்த வீரனை இனங்கண்டு அவள் அழுது தவித்தாள். அப்பொழுது அந்த வீரன் தனது தாய்க்கு ஆறுதல் சொல்லியதுடன் தனக்கு அண்மையிலேயே தன்னைப் போல மரண காயங்களுடன் தவித்துக் கொண்டிருக்கும் “ஊமைச் சாமி”யைக் காப்பாற்றச் சொல்லிவிட்டு இறந்துவிட்டான். தனது மகனைப் பிரிந்த துக்கச் சுமையுடன் அவனது இறுதி ஆசையை நிறைவேற்ற ஊமைத்துரையைத் தூக்கி தனது தோளிலே சுமந்து தனது இல்லத்திற்கு எடுத்துச் சென்றாள், அந்த வீரத்தாய். வழியில் அவளைத் தடுத்து விசாரித்த பரங்கிப்படையினரிடம் தனது மகன் அம்மையால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அதனால் சுமந்து செல்வதாக தந்திரமாகச் சொன்னவுடன் அவர்கள் பயந்து ஓடிவிட்டனர்.[11] அடுத்த மூன்று நாட்களும் ஊமைத்துரை காயங்களுக்கு மருந்திட்டு உதவி செய்தாள். அவரும் ஒரளவு உடல் தேறியவராக மேலும் அங்கிருப்பது ஆபத்து என உணர்ந்து எஞ்சிய தோழர் சிலருடன் இராமநாதபுரம் சீமைக்குப் புறப்பட்டார்.[12] கமுதி கோட்டைக்குப் போய்ச் சேர்ந்த பொழுது, அங்கு நடைபெற்று வந்த தாக்குதலில் ஈடுபட்டு இருந்த சின்னமருது சேர்வைக்காரர், பாஞ்சாலங்குறிச்சி கோட்டை விழுந்த தகவல் வந்தவுடன் சிவகங்கைக்குப் போய்விட்டதாக அவருக்கு அறிவிக்கப்பட்டது, என்றாலும் அங்கிருந்த கிளர்ச்சிக்காரர்கள் அவரை அன்புடனும், மரியாதையுடனும் வரவேற்று தக்க பாதுகாப்புடன் அவரை அரண்மனை சிறுவயலுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அரச மரியாதைகள் காத்திருப்பது அவருக்கு தெரியாதல்லவா?
சின்னமருது சேர்வைக்காரரது குடும்பத்தினரும் அவரது மக்களது குடும்பங்களும் அரமண்மனை சிறுவயலில் வாழ்ந்து வந்தனர். அந்த ஊரின் எல்லையை அடைந்த ஊமைத்துரையை பல்லக்கில் அமரச் செய்து சின்னமருது சேர்வைக்காாது இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர். கூடியிருந்த தாய்க்குலத்தினர் குளவை இட்டு அந்த வீர விருந்தாளியை வரவேற்றனர். சிறிது நேரத்தில் ஐநூறு சக்கரம்[13] பணம்[14] வசூலித்து ஊமைத்துரையின் உடல்நலத்திற்காக ஏழை எளியவர்களுக்குதானமாக வழங்கினர்.[15]வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வீரப்போரிட்டு மரணப் பிடியில் இருந்து உயிர் தப்பிய விந்தை மனிதர் அல்லவா? அவர் சிவகங்கைச்சீமை மக்களது அன்பும் விருந்தோம்பலும் கண்டு மனம் நெகிழ்ந்து காணப்பட்டார். பாஞ்சாலங்குறிச்சிப் போரில் ஒரு உன்னதமான தாய் காப்பாற்றியதையும் தொடர்ந்து தம்மைக் கரிசனத்துடன் பேணிக் காப்பதற்கு பல தாய்மார்கள் சிவகங்கைச் சிமையில் இருப்பதையும் எண்ணி எண்ணி ஊமைத்துரை உள்ளம் நெகிழ்ந்தது. அவரது உடலில் இருந்த ஆறு மான காயங்களும் அப்பொழுதே ஆறிவிட்டது போன்ற பிரமை, தெம்பு, அவருக்கு. தமக்கு புகலிடம் கொடுத்து, தாளாத அன்பினைச் சொரிந்து ஆதரவு நல்கும் அந்தத் தாய்மார்களைப் பாராட்டிச் சொல்வதற்கு தமக்குப் பேச்சுத்திறன் இல்லையே என்ற கவலையை ஊமையான அவரது கண்களில் இருந்து வழிந்த கண்ணிரின் கனிவான பார்வை பிரதிபலித்தது.
பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை கும்பெனியாரது பீரங்கிகள் புடைத்து நொறுக்கிக் கொண்டு இருந்தபொழுது கிளர்ச்சிக்காரர்கள் இராமநாதபுரம் சீமையின் தென்பகுதியில் கமுதிக் கோட்டையில் நிலைகொண்டிருந்த கும்பெனியாரைத் தாக்கி நெருக்கிக் கொண்டு இருந்தனர். இந்தத் தாக்குதல் சிவகங்கைப் பிரதானியின் நேரிடையான ஆணைப்படி நடந்து வந்தது. மருதுசேர்வைக்காரர் மக்களும், காடல்குடி பாளையக்காரரரும் மும்முரமுமாக கோட்டை முற்றுகையில் ஈடுபட்டனர். ஓராயிரம் மறவர்கள் கும்பெனித் தளபதி மார்ட்டின்ஸ் அணிகள் மிகவும் கடுமையாக நெருக்கப்பட்டு அவர்கள் தங்கள் உயிர்களைப் பாதுகாத்துக் கொள்ளும் நிலைக்கு நிர்பந்திக்கப்பட்டனர்.[16] எந்த நிமிடத்திலும் கும்பெனியாரது தோல்வி எதிர்பார்க்கப்பட்டது. அந்தநிலையில் பாஞ்சாலங்குறிச்சிப்போரில் கும்பெனியாருக்கு ஏற்பட்டுள்ள சாதகமான போக்கும், பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை விரைவில் பரங்கிகள் கையில் விழுந்து விடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ள செய்தியைக் கொண்டுவந்த தூதுவர்களை சின்னமருது சேர்வைக்காரரிடம் சேர்ப்பித்தனர். பாஞ்சாலங்குறிச்சிப் போரின் தோல்விக்குப்பிறகு கமுதிக் கோட்டைப்போரினைத் தொடர்ந்து கொண்டிருப்பதில் மேலும் காலம் வீணாகலாமே தவிர, வெற்றி பெற்றுள்ள பரங்கியர் விரைவில் கமுதிக்கும் சிவகங்கைச் சீமைக்கும் வந்து விடுவது திண்ணம் என்பதை உடனே சின்னமருது சேர்வைக்காரர் உணர்ந் தார். பரங்கிகளுடன் பொருதும் அடுத்த இறுதிப்போர்க்களம் காளையார் கோவில் கோட்டைதான் என்பதையும் அவர் அப்பொழுது தீர்மானித்துவிட்டார். அதற்கான ஆயத்தங்களை உடனடியாகச் செய்வதற்காக சின்னமருது சேர்வைக்காரர் சிவகங்கைக்கு விரைந்தார்.
சிவகங்கைக் கிளர்ச்சிக்காரர்களின் ஒரு பிரிவினர் இராமநாதபுரம் அரசர் பட்டத்திற்கு மீனங்குடி முத்துக்கருப்பத்தேவரை நியமனம் செய்து ஆர்ப்பரித்தனர்.[17] அடுத்து அவர்கள் வடக்கு நோக்கிச் சென்று சிவகங்கைச் சீமையின் தற்காப்பு நிலையாக கும்பெனியாரது ஆக்கிரமிப்பில் இருந்த திருப்பத்தூர் கோட்டையைக் கைப்பற்றி அங்கிருந்த கும்பெனியாரின் கூலிப்பட்டாளத்தைத் தூரத்தி அடித்தனர். அதேபோல தொடர்ந்து சென்று, நத்தம், கிராமத்தையும் கைப்பற்றி அங்கிருந்த கும்பெனிப்பட்டாளம் மதுரைக்கு ஓட்டம்பிடிக்குமாறு செய்தனர்.[18] அவர்களைப் பின் தொடர்ந்து தெற்கே சென்று மேலுரையும் திருமோகூரையும் கைப்பற்றினர். இந்த இரு கோட்டைகளில் இருப்பில் இருந்த ஏராளமான ஆயுதங்களும் வெடிமருந்துகளும் அவர்களது கைகளில் சிக்கின.[19]
கிளர்ச்சிக்காரர்களின் பிற பிரிவுகளும் பரங்கிகளது வலுவான நிலைகளைப் பலவீனப்படுத்துவதில் முனைந்து இருந்ததால் இராமநாதபுரம் சீமையின் வடகிழக்குப் பகுதியான குத்தகை நாட்டில்[20] தங்கள் கைவரிசையைக் காட்டினர். இராமநாதபுரம் அமில்தாாது அறிக்கைப்படி சிவகங்கையில் இருந்து வந்த அணியொன்று குத்தகை நாட்டைக் கொள்ளையிட்டது என்றும் உஞ்சனையில் [21]இருந்த கும்பெனி அணியுடன் பொருதி அவர்களில் சிலரைக் கொன்றுவிட்டு, இருப்பில் இருந்த மிகவும் அதிகமான அளவு வெடிமருந்தினைக் கைப்பற்றி, தொண்டிக்கு எடுத்துச் சென்றனர். பீதியுற்ற மக்களது அச்சத்தை நீக்குவதற்கு கும்பெனியாரது இரு அணிகள் தேவை என்பதையும் அவரது கடிதங்கள் தெரிவித்தன.[22] அப்பொழுது கிளர்ச்சிக்காரர்கள், இலங்கையில் இருந்து ஆயுதங்களையும், வெடிமருந்துப் பொதிகளையும் படகுகள் மூலம் பெறுவதற்கு தொண்டி துறைமுகத்தை பயன்படுத்தி வந்தனர்.[23]
கிளர்ச்சிக்காரர்கள் எதிர்பார்த்தபடி பாஞ்சை கோட்டைப் போரை முடித்த பரங்கியர் கமுதிக்கு வரவில்லை. அவர்களில் ஒரு அணி கர்னல் அக்கினியூ தலைமையில் பள்ளிமடம் சென்றது. அப்பொழுது அவருக்கு இராமநாதபுரம் சீமையின் நடப்பு விவரம் தெரியாதவகையில் செய்திப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு இருந்தது.[24] ஆதலால் அவர் கிழக்கே கமுதிக்கு வராமல் திருச்சுழி வழியாக வடக்குத் திசையில் திருப்பூவணம் சென்றார். ஆனால் கமுதி கோட்டையில் உள்ள பரங்கிகள் உதவிக்கு இராம நாதபுரத்தில் இருந்து படையணிகள் வந்து சேர்ந்தன. கிளர்ச்சிக்காரர்கள் தாக்குதலில் மாற்றம் ஏற்பட்டது. கோட்டையில் ஏற்கனவே உள்ள பரங்கியர் தாக்குதலுக்கும் இப்பொழுது புதிதாக வந்துள்ள புதிய அணிகளுக்கும் இடையில் அகப்பட்ட கிளர்ச்சிக் காரர்கள் வேறுவழி இல்லாமல் தாக்குதலை நிறுத்தி வடகிழக்கில் பின்னடைந்தனர்.
அவர்கள் அபிராமம் சென்றனர். பரங்கியரது கச்சேரியும் கிட்டங்கிகளும் அந்த ஊரில் இருந்தன. நெசவாளர்களும், விவசாயிகளும் நிறைந்த அந்த ஊர் குடிமக்கள் கிளர்ச்சிக்கு ஆரம்ப முதலே தகுந்த ஆதரவு அளிக்கத் தயங்கி வந்தனர். கோபமுற்ற கிளர்ச்சிக்காரர்கள் கும்பெனியாரது சொத்துக்களுக்கு நெருப்பு வைத்து அழித்தனர். பல்லாயிரக்கணக்கான பக்கோடா பன மதிப்புள்ள கைத்தறித்துணிகளும், தானியங்களும் அழிந்ததுடன் குடிகளது சில வீடுகளும் அந்தப் பேரழிவிற்குத் தப்பவில்லை.
இரண்டு நாட்கள் கழித்து அதே ஊருக்கு வந்து அழிமானத்தை பார்வையிட்ட இராமநாதபுரம் கலெக்டர் லூஷிங்டன், சென்னையில் உள்ள கும்பெனி கவர்னருக்கு அனுப்பிய அறிக்கையில், இன்று காலையில் பயங்கரமான அழிமானத்தில் சிக்கியுள்ள அபிராமத்தைப் பார்வையிட்டேன். முன்னூற்று ஐம்பது வீடுகள் அழிந்து மொட்டையாக நின்று கொண்டு இருக்கின்றன. இரண்டு குழந்தைகளும், கால்நடைகளும், விவசாய வித்துக்களும், நூல் சிப்பங்களும் நெருப்பில் வெந்து போய்விட்டன. எஞ்சியுள்ள இருப்புத் தானியங்களையும் கிளர்ச்சிக்காரர்கள் கொள்ளை கொண்டு போய்விட்டனர். இத்தகைய கொடுமைகளை அவர்கள் நேற்று முன்தினம் காமன்கோட்டையிலும், இராமநாதபுரத்திற்கு அண்மையில் உள்ள இன்னொரு கிராமத்திலும் மேற்கொண்டுள்ளனர்.” எனக்குறிப்பிட்டு இருந்தார்.[25] மேலும், கிளர்ச்சிக்காரர்கள் கும்பெனியாரது தானியங்களுக்கு சேதம் உண்டாக்கி இருப்பதையும், கும்பெனியார் பெற வேண்டிய ஜூன் மாத கிஸ்தியையும் அவர்களே வசூலித்துக் கொண்டு போய் விட்டனர் என்றும், பக்கத்தில் உள்ள ஐந்து ஊர்களையும் கொளுத்தி சாம்பல் ஆக்கிவிட்டனர் என்றும், இதற்கு முதன்மையான காரணம் அபிராமம் குடிகள் கும்பெனியாரது கால்நடை, குதிரைகளுக்கு வைக்கோலும், இதர தீனியும் அளித்து உதவியிருப்பது என்றும் கர்னல் அக்னியூவுக்கு அனுப்பியுள்ள இன்னொரு கடிதத்தில் கலெக்டர் தெரிவித்து இருந்தார்.[26]
கிளர்ச்சிக்காரர்களது வெறுப்பு அபிராமம் அழிமானத்துடன் அமைதி பெறவில்லை. அவர்கள் மீண்டும் கமுதிக்கு சென்றனர். அங்குள்ள கும்பெனியாரது கச்சேரிக்கும் தீ வைத்து அழித்தனர். கோயிலை ஒட்டிய குடியிருப்பு ஒன்றுக்கும் தீ பரவியது. இந்த நெருப்பில் சிக்கி இரு குழந்தைகள் மாண்டது பரிதாபமாக இருந்தது. அத்துடன் கும்பெனியாரது தானியக்கிடங்கில் இருந்த ஆறாயிரம் கலம் நெல்லும் அழிந்து நாசமாகியது. இந்தத் தாக்குதலில் மருதுசேர்வைக்காரர் மக்களுடன் பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரர் சிவத்தையாவும் கலந்து கொண்டார்.[27]கிளர்ச்சிக் காரர்கள் பள்ளிமடம் சென்று தங்கினர்.
கிளர்ச்சிக்காரர்களது இத்தகைய அழிமானங்கள் மேலும் ஏற்படாது இருக்க கர்னல் அக்கினியூ திருச்சுழியல் கோவிலைச் சுற்றி மணல் மூட்டைகளைக் கொண்டு அரண் அமைக்க உத்திரவிட்டான்.[28] ஏனெனில் அப்பொழுது பள்ளிக்குடி, பள்ளிமடம் ஆகிய ஊர்களில் திரண்டுள்ள கிளர்ச்சிக்காரர்கள் அடுத்து திருச் சுழியலுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்பட்டது.[29]
கிளர்ச்சிக்காரர்கள் தங்கள் கைவரிசையை இராமநாதபுரம் சிவகங்கைச் சீமைகளில் காட்டியதுடன் அமையாமல் தங்களது சீமையை அடுத்துள்ள மதுரைச்சீமையிலும் உள்ள மக்களைக் கும்பெனியாருக்கு எதிராகத் துாண்டிவிட்டனர். குறிப்பாக, மேலுரை அடுத்துள்ள நத்தம் பாளையம் முழுவதும் கிளர்ச்சிக்காரர்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. நத்தம்,மேலுர், திருமோகூர் ஆகிய ஊர்களில் அமைந்து இருந்த கும்பெனியாரது ஆயுதக் கிடங்குகளைக் கைப்பற்றியதையும் ஏற்கெனவே பார்த்தோம். இந்த மோதல்களில் பலர் உயிர் இழந்தனர். குறிப்பாக, நத்தம் மணியக்காரராக, சின்னமருது சேர்வைக்காரரால் நியமனம் செய்யப்பட்ட வெங்கடாசலம் என்பவர் நத்தம் தாசில்தாரைக் கொன்றார்.[30] இந்த அலுவலர் 6-5-1801 விருபாட்சி கிளர்ச்சிக்காரர் கோபாலநாயக்கரைப் பிடித்து கும்பெனியாரிடம் ஒப்படைத்தவர்.[31] இதற்கு கைக்கூலியாக கும்பெனியார், தாசில்தாரது துரோகப்பணியைப் பாராட்டி, அவருக்குப் பிடித்தமான சிறந்த குதிரை ஒன்றை வாங்கிக் கொள்வதற்கு ஏற்பாடு செய்தனர்.
சின்னமருது சேர்வைக்காரது மகன் தலைமையில் ஒரு அணி இராமநாதபுரம் கோட்டையை நோக்கிச் சென்றது. மற்றொரு அணி, ஊமைக்குமாரசுவாமி தலைமையில் மதுரைக்கு விரைந்தது. இந்தக்கால கட்ட அரசியல் நிலைமை பற்றி புதுக்கோட்டை தொண்டமான் வரைந்த கடிதத்தில் "எங்கு பார்த்தாலும் மக்கள் கிளர்ச்சியின் ஜயவாலை கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருப்பதாக” வர்ணித்து இருந்தார்.[32] நாலாபுறமும் காட்டுத்தி போல பரந்து நின்ற மக்களது அன்னிய ஆதிக்க எதிர்ப்பு உணர்வை, ஆயுதம் கொண்டு எல்லாப் பகுதிகளிலும், எதிர்த்து சமாளித்து வெல்லுவது அவ்வளவு எளிதான செயல் அல்ல என்பதை கர்னல் அக்கினியூ உணர்ந்தான்.
கிளர்ச்சிக்காரர்களது அரக்கத்தனமான கொடிய எதிர்ப்பை பாஞ்சாலங்குறிச்சிப் போரில் நேரடியாக சந்தித்த அனுபவம் அவனுக்கு இருந்தது. ஆதலால், இந்தப்பிரச்சினையை பல கோணங்களில் இருந்தும் ஆய்வு செய்து முடிவுகாண முயன்றான்.கிளர்ச்சிக்காரர்களுடன் போரில் ஈடுபடும் மக்களது மனநிலை, உயிர் உடமைகள் அழிவு, போர் தொடரும் காலஅளவு, சூழ்நிலை, அப்பொழுது கிளர்ச்சியினை நசுக்க கும்பெனித்தரப்பில் தேவைப்படும் ஆட்கள், வெடிமருந்து, தளவாடங்கள்: வாகனங்கள், உணவுப்பொருள், பணம் என்ற பல வேறு தொடர்புடையவைகளைப் பற்றி ஆழமாகச் சிந்தித்தான். போரில் பொருதி வெற்றி பெறுவது, அதற்குத் தகுதியான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வது என்பன போரில் சம்பந்தப்பட்ட இருதரப்பினரும் கைக்கொள்ளும் இயல்பான நடவடிக்கைகள், ஆனால் அந்த முயற்சியில் ஒருவரைவிட மற்றவர் மட்டும், எவ்விதம் விரைவாக எளிதாக வெற்றியைப் பெறுவது என்பது போர்த் தந்திரமாகும்.
இத்தகைய நிலையில், சரியான முடிவு ஒன்றிற்கு வருவதற்கு முன்னர், இராமநாதபுரம் சீமையின் நிலையை நேரில் அறிந்து கொள்வது அவசியமானது என அக்கினியூ விரும்பினான். பாஞ்சாலங்குறிச்சியில் இருந்து கமுதி வழியாக இராமநாதபுரம் அடைவதுதான் சரியான வழி என்றாலும் கமுதி, பாப்பாங்குளம், மண்டலமாணிக்கம் பகுதிகளில் கிளர்ச்சிக் காரர்களது நிலை வலுவாக இருந்ததால், அக்கினியூ பள்ளி மடம் வழியாக 1-6-1801ம் தேதி திருப்பூவனம் போய்ச் சேர்ந் தான். அங்கும் கிளர்ச்சிக்காரர்கள் குழுமி இருந்தனர். இராமநாதபுரம் நோக்கிச் செல்லும் அவனது பயணத்திற்கு இடையூறாக அவர்கள் இருந்தனர். இதனால் கும்பெனி அணிக்கும் கிளர்ச்சிக்காரர்களுக்கும் இடையில் கடுமையான கலகலப்பு ஏற்பட்டது. மதுரைக் கோட்டையில் இருந்து மேஜர் கிரகாம் என்பவன் தலைமையில் அணி யொன்றும் திருப்பூவனம் வந்து சேர்ந்தது. கிளர்ச்சிக்காரர்களது கடுமையான தாக்குதலுக்கு இலக்காகிய இந்த அணித்தலைவன் கிரகாம், மேஜர் ஷெப்பர்டு என்பவனது அரிய முயற்சியால் உயிர் தப்பினான். [33]கிளர்ச்சிக்காரர்கள் தரப்பில் பலத்த உயிர்ச்சேதம் இருந்தது. தொடர்ந்து பயணம் மேற்கொண்ட அக்கினியூவின் அணியை, திருப்பாச்சேத்தி அருகிலும் கிளர்ச்சிக்காரர்கள் பொருத்தினர். 8-6-1801ம் தேதி அன்று நடைபெற்ற போரில் எழுபது கிளர்ச்சிக்காரர்கள் தியாகிகளாயினர்.[34] தொடர்ந்து வழி நெடுகி நெடுகிலும், பல இடங்களில் பரங்கிகளை கிளர்ச்சிக்காரர்களை வழி மறித்தனர். இருதரப்பினருக்கும் மிகுதியான உயிர் இழப்பு ஏற்பட்டது. என்றாலும், அக்கினியூவும் அவனது குழுவினரும் கிளர்ச்சிக்காரர் கண்களில் மண்ணைத் துவிவிட்டு, தந்திரமாக இராம நாதபுரம் கோட்டை போய்ச் சேர்ந்தனர். அங்கிருந்து கொண்டு கர்னல் அக்கினியூ, சென்னையில் உள்ள கும்பெனி கவர்னருக்கு அறிக்கையொன்றை அனுப்பிவைத்தான்.[35] அதில் தமக்கு சாதகமான இராமநாதபுரம் சீமைப்பகுதியில் இருந்து சிவகங்கைச்சீமை மீது போர் தொடுத்தால், தேவையான உணவுப் பொருட்களையும் ராணுவ சாதனங்களையும் எளிதில் பெற்றுக் கொள்வதற்கு ஏற்றதாக இருக்குமென்று எண்ணியதாகவும், ஆனால் இராமநாதபுரம் சீமைக்கு நேரில் சென்று நிலமையை நேரில் ஆய்வு செய்தபிறகு தமது கருத்தை மாற்றிக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தான். காரணம், இராமநாதபுரம் சீமை வடக்குப்பகுதி முழுவதும் கும்பெனியாரை எதிர்த்துப் போராடும் கிளர்ச்சிக்காரர்கள் கையில் இருந்து வந்தது. அதனால் அப்பொழுது காளையார்கோவில் எல்லையில், ஒரிடத்தில் தமக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் சேமித்து வைப்பது மிகவும் அவசரமாகி உள்ளது என்றும் வலியுறுத்தி இருந்தான். கி.பி. 1789ல் மருதுசேர்வைக் காரர்களை அடக்குவதற்கு அனுப்பப்பட்ட கர்னல் ஸ்டுவர்டிற்கு ஏற்பட்ட அவதிகளையும் அவர் சந்தித்த கடுமையான அனுபவங்களில் இருந்து இந்தக்கருத்தை வலியுறுத்துவதாக, பழைய முந்தைய நிகழ்ச்சிகளை நினைவுபடுத்தி இருந்தான்.
அத்துடன் அன்றைய நிலை மிகவும் அபாயகரமாக இருப்பதாகவும், சிவகங்கைச் சேர்வைக்காரர்கள் மன்னிப்பு பெற முடியாத அளவிற்கு கும்பெனித்துரைத்தனத்தை இக்கட்டான நிலையொன்றில் இருத்தி வைத்துள்ளனர் என்றும், அதிருப்தி அடைந்துள்ள அனைத்துப் பகுதியினரையும், தமது அணியில் சேர்த்து வைத்து இருப்பதுடன், பாளையக்காரர்களையும், குடி களையும் கொடுமைப்படுத்தி தங்களுக்கு இணக்கமானவர்களாக மாற்றி வைத்துக் கொண்டு இருப்பதாகவும் புதுக்கோட்டைத் தொண்டமான் கூட அவர்களுடன் சேர்ந்து கொள்ளுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் விளக்கி இருந்தான். நமது கோட்டைக்கு அப்பாலுள்ள அனைத்து குடிகளும் ஆயுதம் ஏந்தியவர்களாக நமக்கு எதிரியாக உள்ளனர். ஆதலால் இந்தக் கடினமான சூழ்நிலையில், சுதேசி வீரர்களைச் சார்ந்து இருக்காமல் கும்பெனியாரது பரங்கி வீரர்களது அணிகளையும் குதிரைப் படையணிகளையும் மட்டும் நம்பி, நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டியதாக இருக்கிறது, என்பதையும் துலக்கமாகக் குறிப்பிட்டு இருந்தான்.[36]
இருபது நாட்கள் இராமநாதபுரம் கோட்டையில் தங்கி இருந்து அரிய துப்புகளைச் சேகரித்து திரும்பிய பின்னர், மதுரையில் இருந்து மற்றொரு அறிக்கையினையும் கர்னல் அக்கினியூ சென்னைக்கு அனுப்பி வைத்தான்.[37] இராமநாதபுரம், சிவகங்கைச் சீமைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருப்பதாகவும், மருது சேர்வைக்காரர்களை தண்டிக்க வேண்டிய அவசியம், கலெக்டர் லூவிங்டன் அளித்த சிவகங்கையின் சுருக்கமான வரலாறு. சிவகங்கை அரசவழியினரான படை மாத்தூர் ஒய்யாத்தேவன் தொண்டமான் சீமையில், மருது சேர்வைக்காரர்களுக்கு அஞ்சி வாழ்ந்து வருவது, சிவகங்கைச்சீமையின் இன்னொரு வாரிசான வேங்கன் உடையாத்தேவர் ராணி வேலுநாச்சியரது மகள் வெள்ளச்சியை மணந்து அவர் இறந்த பிறகு, பெரியமருதுவின் மகளை மணந்து அவர்களுடன் வாழ்ந்து வருவது ஆகிய விவரங்களை விரிவாக வரைந்து அனுப்பியதுடன், சிவகங்கைச்சீமையின் அதிகார பூர்வமான ஜமீந்தாராக படை மாத்துார் ஒய்யாத்தேவரைக் கும்பெனியார் அங்கீகரிப்பது பற்றியும் பரிந்துரைத்து இருந்தான்.[38]
ஒய்யாத்தேவர், ஏற்கனவே சிவகங்கை மக்களுக்கு சிவகங்கையின் வாரிசு என அறிமுகப்படுத்தப்பட்டார். மக்களது மரியாதைக்குரியவராகவும், இளவரசி வெள்ளச்சியை மணந்து கொள்வதற்கு தெரிவு செய்யப்பட்டவரும் ஆவார். சிவகங்கை சேர்வைக் சாரர்களது சூழ்ச்சியினால் தான் அவர் சிவகங்கைச் சீயையை விட்டு உயிர் தப்புவதற்காகத் தொண்டமானின் அறந்தாங்கிச் சீமைக்கு ஓடினார்[39] . ஆதலால், பழைய பாரம்பரிய முறைகளைத் தொடர்ந்து சிவகங்கை மன்னராக படைமாத்துார் ஒய்யாத்தேவரைப் பிரகடனம் செய்தால் சம்பிரதாயம், பழமை, ஜாதி ஆகியவைகளில் பிடிப்புள்ள நாட்டுத்தலைவர்களும், மக்களும் கிளர்ச்சிச் காரர்களது அணியில் இருந்து கணிசமான அளவு பிரிந்து வந்து புதிய அரசின் ஆதரவாளர்களாக மாறுவதற்கும், மருது சகோதரர்களது செல்வாக்கைப் பலவீனப் படுத்தி பரங்கி எதிர்ப்பு அணியை உடைப்பதற்குப் பயன்படும் என்பதும் அக்கினியூவின் உறுதியான நம்பிக்கையாக இருந்தது. அவரது எதிர்பார்ப்பு உண்மை என்பதைப் பிந்தைய நிகழ்ச்சிகள் நிரூபித்தன.
கர்னல் அக்கினியூவின் கடிதங்கள், பரங்கிகளை எதிர்த்து சிவகங்கை சேர்வைக்காரர்களது நிலை, அவர்களது தலைமையில் அணி திரண்ட நாட்டுப்பற்று மிக்க மக்களது இயக்கம், மறவர் சீமையின் அரசியல்நிலை ஆகியவைகளைத் தெளிவாக சித்திரிப் பவையாக இருந்தன. இந்நிலையில், தலைமறைவாக இருந்த படைமாத்துார் ஒய்யாத்தேவர் கும்பெனி கவர்னருக்ரு ஒரு விண்ணப்பம் ஒன்றையும் அனுப்பி வைத்தார்.[40] அதில், மறைந்த சிவகங்கை மன்னர் முத்துவடுகனாதத்தேவர், அவரது வாரிசாக அவரை நியமனம் செய்து, அவரது மகள் வெள்ளச்சியையும் அவருக்குத் திருமணம் செய்ய முடிவு செய்திருந்தார் என்றும் மருது சேர்வைக்காரர்கள் சிவகங்கைச்சீமையைக் கைப்பற்றிய பின்னரும் தமக்கு மரியாதை செலுத்திவந்து பின்னர் அவர்களுக் கிடையில் எழுந்த கருத்துவேற்றுமை காரணமாக அவரையும் அவரது நண்பர்களையும் திடீரென சிறையில் அடைத்து வைத்து பல அக்கிரமங்களைச் செய்து வந்ததாகவும் அவர்களிடம் இருந்து தப்பி வந்து கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக அறந்தாங்கிச் சீமையில் வாழ்ந்து வருவதாகவும், அந்த விண்ணப்பத்தில் குறிப்பிட்டு இருந்தார். தஞ்சாவூரில் கும்பெனியாரின் ரெஸிடெண்டாக இருந்த கேப்டன் பிளாக்பர்ன் ஒய்யாத்தேவரைத் சந்தித்து இந்த விண்ணப்பத்தைப் பெற்று சென்னை கவர்னருக்கு அனுப்பி வைத்தார். இதில் கூறப்பட்டிருந்த மருதுசேர்வைக்காரர்கள் பற்றிய புகார்கள் அனைத்தும் கும்பெனியாருடைய கவனத்திற்கு ஏற்கனவே கொண்டுவரப்பட்டவைதான். இராமநாதபுரம் சீமையின் முத்துராமலிங்க சேதுபதி மன்னர்கூட சிவகங்கை அரசபீடத்திற்கு ஒய்யாத் தேவருக்கு உள்ள தகுதி பற்றி கவர்னருக்கு ஒருமுறை அறிக்கை அனுப்பிவைத்தார்.[41] ஆனால் அப்பொழுது சிவகங்கைச் சேர்வைக்காரர்கள் கும்பெனியரது மதிப்பிற்குரிய நண்பர்களாக இருந்ததால், அதனைப்பற்றி எவ்வித அக்கரையும் காட்டவில்லை. ஆனால் இப்பொழுது சிவகங்கைச்சீமை அரசியல் சூதாட்டத்திற்குத் தேவையான பகடைக் காயாக ஒய்யாத்தேவரைப் பயன்படுத்த முடிவு செய்தனர், இறந்து போன சிவகங்கை மன்னர் முத்துவடுகநாத பெரிய உடையாத் தேவருக்கோ அல்லது அவரது மனைவியான மறைந்துபோன வேலுநாச்சியாருக்கோ, படைமாத்துர் தேவர் நேரடியான வாரிசு அல்ல. அத்துடன் வேலுநாச்சியாரது ஒரே மகளான வெள்ளச்சியை மணந்து அதன்மூலம் சிவகங்கை அரசக் கட்டிலுக்கு உரியவரான சக்கந்தி வேங்கன் பெரிய உடையாத் தேவர் அப்பொழுது உயிரோடுதான் இருந்தார். அவரையே ஆர்க்காட்டு நவாப்பும் கும்பெனியாரும் சிவகங்கை அரசரது வாரிசாக ஏற்கனவே அங்கீகரித்து இருந்தனர். [42]இதுவரையிலும் அவர் அதிகாரபூர்வமான சிவகங்கை அரசராகத்தான் இருந்து வந்தார்.
ஆனால் சிவகங்கைச் சீமையை, தங்களது உடமையாக மாற்றுவதற்குத் திட்டமிட்ட கும்பெனியார், தங்களுடைய திடீர் பகைவர்களான மருது சேர்வைக்காரர்களையும் அவர்கள் அமைத்துள்ள ஆங்கில ஏகாதிபத்திய எதிர்ப்பு அணியையும். விடுதலை இயக்கத்தையும், அழித்து ஒழிக்க முடிவு செய்தனர். அதற்கு முதல்நடவடிக்கையாக சிவகங்கை சீமையில் தங்களது கைக் கூலியொருவரை மன்னரது வாரிசு என்றும் சிவகங்கையின் அதிகாரபூர்வமான “ஜமீன்தார்” என்றும் அறிவிப்பு செய்வதற்கு ஏற்ற தகுதி உள்ளவராக படைமாத்தூர் தேவர் அகப்பட்டார். ஆதலால் அவரை சிவகங்கைச் சீமைக்கு அரசர் அல்ல ஜமீன்தார் என கும்பெனி கவர்னர் நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.[43] அதுவரை சிவகங்கைச் சேர்வைக்காரர்கள் தமக்கு ஏற்படுத்திய இன்னல்களை அடிபட்ட பாம்பு போல் சகித்துக் கொண்டு அறந்தாங்கியில் வாழ்ந்த படைமாத்துார் தேவருக்கு சிவகங்கை ஆட்சியாளர்களைப் பழிவாங்குவதற்கும் வாய்ப்புக் கிடைத்ததற்குப் பெரு மகிழ்ச்சி ஏற்பட்டது.
இத்துடன் தங்களது நடவடிக்கையை நியாயப்படுத்த சிவ கங்கைச் சீமை எங்கும் பிரசித்தம் செய்வதற்காக கும்பெனியார், பொது அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டனர். அந்த அறிவிப்பில்[44]
ஆர்க்காட்டு நவாப் வாலாஜா முகம்மது அலியுடன் கையெழுத்து இட்டுள்ள 12-7-1792ந்தேதிய உடன்பாட்டின் மூலம் தென்னகத்தின் பாளையக்காரர் (சிவகங்கை ஜமீன்தார் உட்பட்ட) அனைவரது கப்பத்தொகையை நிர்ணயித்து வசூலித்து வகைப்படுத்தும் உரிமையைக் கும்பெனியார் பெற்று இருப்பதையும், அதனால் சிவகங்கைப் பாளையத்திலிருந்தும் கப்பத்தொகையைப் பெற தகுதி பெற்று இருப்பதையும் தெரியப்படுத்துகின்றனர். ஆனால் நாலுகோட்டை பாளையத்தின் பணியாளர்களான வெள்ளை மருதுவும் சின்னமருதுவும், தங்கள் சூழ்ச்சியினால் இந்த உரிமைகளும் அதிகாரங்களும் தடைப்படுத்தப்பட்டு உள்ளன. இந்தச் சீமையின் அரசியல் தலைவர் ஒரு பெண்ணாக இருந்த தால், அவர்கள் அந்த அரசின் அமைச்சர்களாகத் தங்களை நியமித்துக் கொண்டு அந்த அரசியார் மீதும் குடிமக்கள் அனைவர் மீதும் தங்களது பிடிப்பையும் சர்வாதிகாரத்தையும் நிலைநிறுத்தி வந்தனர்.
"நாலுகோட்டை பரம்பரையின் கடைசி வாரிசு இறந்த பிறகு வெள்ளைமருதுவும், சின்னமருதுவும் அடக்குமுறையினால் அரசியலை நடத்தி வந்தனர். இப்பொழுது கும்பெனியார் படைகளுடன் நேரடியான மோதல்களை ஏற்படுத்தி, சிவகங்கைச் சீமையைத் தவறான வழியில் அழிவிலும் நாசத்திலும் இட்டுச் சென்று கொண்டு இருக்கின்றனர். இளவரசியை மணம் செய்து கொண்டதன் மூலம் சிவகங்கை அரசராகிய வேங்கன் பெரிய உடையாத்தேவரும் தம்முடைய நலன்களை இவர்களுடன் இணைத்துக் கொண்டுள்ளார்.
“இவர்களை அடக்கி, ஒடுக்கி, கும்பெனியாரது ஆதிக் கத்தை நிலைநாட்ட சகல அதிகாரங்களையும் பெற்றவராக கர்னல் அக்கினியூ நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். சிவ கங்கைச்சீமையில் உள்ள குடிமக்கள் எவரும் பிரிட்டிஷ் அரசின் மானத்தையும் மதிப்பையும் குறைக்கும் வகையில், ஆயுதம் தாங்கினால், அவர்கள் மரண தண்டனை பெறுவார்கள் என எச்சரிக்கை செய்யப்படுகின்றனர். சிவகங்கைச் சீமை மக்கள் அனைவரும், இந்த மருது சகோதரர்களை விடுத்து, தங்களது முறையான ஜமீன்தாருக்கு விசுவாசங்கொண்டவர்களாக, தங்கள் தொழில் முறைகளைக் கவனித்து வர வேண்டியது. அதற்கு பிரிட்டிஷ் அரசு தகுந்த பாதுகாப்பு வழங்கும்,”என்ற வாசகங்கள் அதில் கண்டிருந்தது. அப்பொழுது அவர்களது ஆதிக்க வெறியையும் நட்பைப் பிரித்து பகையாக்கும் நரித்தந்திரத்தையும் ஆயுதவலிமையையும் எதிர்த்துப் போராடக்கூடிய வேறு தலைவர்கள் கர்நாடக்கத்தில் யாரும் இல்லாததால் பரங்கிகள் தங்களது ஆயுத வலிமை அனைத்தையும் சிவகங்கைச்சீமை மீது திணிப்பது எளிதாகிவிட்டது.
அதே சமயத்தில் பொதுமக்களுடைய தகவலுக்காக சிவகங்கைச் சேர்வைக்காரர்களும் ஒரு வேண்டுகோளை"[45] வெளியிட்டனர்.
யார் இந்த அறிவிப்பைப் பார்த்தாலும் அக்கரையுடன் படியுங்கள்
“மாட்சிமை மிக்க நவாப் முகமது அலிகான் முட்டாள் தனமாகப் பரங்கிகளுக்கு இடங்கொடுத்துவிட்டு மூளி போலாகிவிட்டார். பரங்கிகளும் தாங்கள் செலுத்திவந்த விசுவாசத்திற்கு மாற்றமாக, மோசடியாக இந்த நாட்டு அரசைத் தங்களதாக்கிக் கொண்டனர். இங்குள்ள மக்களை நாயினுங் கேடாக மதித்து, தங்களது அதிகாரத்தை நிலைநாட்டி வருகின்றனர். உங்களிடையே ஒற்றுமை இல்லை. நேயமனப்பான்மை இல்லை. பரங்கிகளது அந்தரங்கத்தை அறியாத நீங்கள், உங்களுக்குள் ஒத்துப்போகாமல், இந்த நாட்டை அவர்களிடத்தில் ஒப்படைத்துவிட்டீர்கள். அவர்கள் அதிகாரம் செலுத்தும் சீமைகளில் குடிமக்கள் ஆண்டிகளாகி விட்டனர். அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அரிசி, வெல்லம் போல அருமையாகிவிட்டது. இந்த அவல நிலையை நேரடியாக அனுபவித்தாலும், இதனைப்புரிந்து கொள்ளும் மனப்பக்குவமும் நம்மிடம் இல்லை.
“மனிதன் ஆயிரம் ஆண்டுகளுக்கு வாழ்ந்தாலும் அவன் ஒருநாள் மரணமடைவது திண்ணம். அதைப்போன்றே அவனது புகழும், சூரியனும், சந்திரனும் இருக்கும்வரை நிலைத்து நிற்பது நிச்சயம்.
“ஆதலால், எதிர்காலத்தில் ஒவ்வொருவரும் தங்களது பாரம்பரிய உரிமைகளை அனுபவித்தல் வேண்டும். குறிப்பாக ஆர்க்காட்டு ஸூபாவை மாட்சிமை தங்கிய நவாப்பும், கர்நாடகத்தை வேதய்யா, ராமண்ணாவும், வடுகநாத நாயக்கர் மைந்தன் திருமலைநாயக்கரும், தஞ்சாவூராரும் தங்களுக்குரிய தன்னாட்சியை, நமது நாட்டுக்கே உரிய மரபுகளுக்குக் குந்தகம் ஏற்படாமல் உடனே பெறுதல் வேண்டும். அப்பொழுது தான் எல்லா ஏழை எளியவர்களும் நிம்மதி அடைவார்கள்.
"ஆனால் உங்களில் யாராவது தாழ்ந்த பிறவிகளான நாய்களைப் போன்றவர்கள், பரங்கிகளது கட்டளைகளுக்குப் பணிந்து நடந்து வந்தால் அவர்களது ... ... ... ... வெட்டப்படும். இத்தகைய இழிகுலத்தவர், பரங்கிகளுடன் இணைந்து இந்த நாட்டை அடிமைப்படுத்தியுள்ளது நாம் அனைவரும் அறிந்த விஷயம். "ஆகையால் நீங்கள் பிராம்மணர்கள், வைசியர், செட்டியார், சூத்திரர், இசுலாமியர் - ஆகிய அனைவரும் - மீசை வைத்துள்ள அனைத்து ஆண் மக்களும் - பொதுப் பணியிலோ, ராணுவசேவையிலோ அல்லது சுபேதா ராகவோ, ஜமேதாராகவோ, நாயக்கு, சிராங்கு ஆகிய பரங்கியர் பணியில் இருப்பவர்களும் - ஆயுதம் தாங்கிப் போராடும் வல்லமை பெற்ற அனைவரும், தங்கள் ஆண்மையை, திறமையை முதன்முறையாக நிரூபித்துக் காட்டுங்கள்.
"நீங்கள் பரங்கிகளை எங்கு கண்டாலும், அவர்களை அழித்து ஒழியுங்கள். மாறாக, தொடர்ந்து அதே இழி பிறப்புக்களிடம் பணியாற்றினால், உங்கள் சாவிற்குப் பின்னர் மறுமை இன்பங் கிடைக்காது. இந்த உண்மையை அறிந்தவன் நான். ஆதலால் இதில் நான் தீவிரமாக இருக்கிறேன். இதனை ஏற்றுக் கொள்ளாதவர்கள் கழி சடைகள்! அவர்களுக்கு அறுசுவை உணவு கிடைக்காமல் போகட்டும். அவர்களது மனைவிகள் மாற்றானது மனைவியாகட்டும். அவர்களது மக்கள் இழிபிறப்புக்களாகப் போகட்டும். பரங்கிகள் இரத்தக் கலப்பில்லாத அனைவரும் உடனே ஒற்றுமைப்படுங்கள்.
"இந்த அறிவிப்பை படிக்கின்றவர்கள், கேள்விப்படுகின்றவர்கள், இதற்கு நகல் எடுத்து, தங்களது நண்பர்களுக்கு அனுப்பி வையுங்கள். பொது இடங்களில் இங்குள்ளதைப் போன்று இந்த அறிவிப்பை ஒட்டி அவசியம் பிரசித்தம் செய்யுங்கள்.
"இவ்விதம் செய்யாதவர்கள்-பஞ்சமா பாதகங்களைச் செய்ததோஷத்திற்கும், கங்கைக்கரையில் பசுவதை செய்த பாவத்திற்கும் உரிய தண்டனையைப் பெறுவார்களாக!
"இந்த வேண்டுகோளை மதிக்காத இசுலாமியர், விலக்கப்பட்ட பன்றியின் இரத்தத்தைப் பருகிய பாதகர்களாகப் போகட்டும்!இந்த அறிவிப்பை இந்தச் சுவற்றில் இருந்து அகற்றியவர்கள், பஞ்சமாபாதகங்களுக்கும் கூடுதலான பாவத்தைப் புரிந்தவர்களாகப் போகட்டும்!
இதனைப்படிப்பவர்கள் இந்த வேண்டுகோள் நகலை வரைந்து வைத்துக் கொள்ளுங்கள்!
இவண். பேரரசர்களுக்குப் பணியாளரும் இழிபிறப்பான பரங்கிகளுக்குப் பரம எதிரியுமான மருதுபாண்டியன்
சிவகங்கைச் சேர்வைக்காரரது இந்தச் சிறப்பான வேண்டுகோள், திருச்சிராப்பள்ளி கோட்டையில் ஜான் மாதத் துவக்கத்தில் நவாப்பின் மாளிகையை அடுத்துள்ள பெரிய நுழைவாயிலிலும் ஶ்ரீரங்கத்தில் பாளையக்காரரது மாளிகைச் சுவற்றிலும் ஒட்டப் பட்டு இருந்தன. திருச்சியில், ஒட்டப்பட்டிருந்த [46]வேண்டு கோள்களில் காணப்பட்ட வாசகங்களைவிட, கூடுதலாகக் கீழ்க்கண்ட வாசகமும் ஶ்ரீரங்கத்தில் காணப்பட்டது.
"ஶ்ரீரங்கத்தில் உள்ள பெரியோர்களையும், ஆச்சாரியர்களையும் இந்த மருதுபாண்டியனாகிய நான் அவர்களது காலில் விழுந்து வணங்குகிறேன். தென்னகத்தில் உள்ள தன்னரசு மன்னர்கள் - கோட்டைக் கொத்தளங்களையும் அமைத்து கொடி கட்டி வாழ்ந்தவர்களும், அவர்களது குடிமக்களும், இழிபிறப்பாளர்களான பரங்கிகளால், எளிய நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். அதனை எதிர்த்துப் போராடும் எனக்கு உங்களது மேலான ஆசீர்வாதங்களை வழங்கி அருளுங்கள்”.
தமிழக அரசியல் வரலாற்றில், அந்நிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக, போராளிகள் அணியில் இருந்து வெளியிடப்பட்ட, முதல் பொது வேண்டுகோளாகும். இது, வரலாற்றுச் சிறப்புமிக்கதும் அன்றைய காலகட்டத்து சமுதாய அமைப்பு.சமய நம்பிக்கை ஆகியவைகளை ஆதாரமாகக் கொண்டு, அரசியல் நோக்குடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேண்டு கோளில் அன்னிய எதிர்ப்பு - வெறுப்பு கொப்பளிக்கிறது. வெள்ளைப்பரங்கிகள் பற்றிய வெறுப்பை விஷம்போல ஆவேசத்துடன் உணர்த்துகிறது. சாதாரண மக்களையும் சான்றோர்களையும் போற்றிப் பணிந்து புலப்படுத்துகிற மருதுபாண்டியரது இந்தப் பணிவான கோரிக்கையின் பாங்கை யாரும் பாராட்டாமல் இருக்க முடியாது. இத்தகைய பொது அறிவிப்புக்களை போராளிகள் அப்பொழுது இராமநாதபுரம், சிவகங்கைச் சீமைகளைத் தவிர அவைகளை அடுத்துள்ள தொண்டைமான் சீமையிலும் திருச்சி, தஞ்சைப்பகுதிகளிலும் ஆங்காங்கு வெளியிட்டிருக்க வேண்டும் என ஊகிக்கப்படுகிறது.
காரணம் மருதுபாண்டியர்கள் தொடங்கிய விடுதலைப் போராட்டம், மறவர் சீமையில் மட்டும் அல்லாமல், திருச்சிராப்பள்ளிக்கும், திருநெல்வேலிக்கும் இடைப்பட்ட தமிழகம் எங்குந் தழுவிப்பரவ வேண்டும் என்பதே சிவகங்கைச் சேர்வைக்காரர்களது நோக்கமாக இருக்க வேண்டும். அமெரிக்க நாட்டு விடுதலைப் போராட்டத்தின் பொழுது அந்த நாட்டுப் போராளிகள், கையாண்ட இந்த விளம்பர வேண்டுகோள் முறையை ஆறாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள நமது தமிழகத்திலும் அப்பொழுதைய அந்நிய எதிர்ப்பு போராட்டத்தின் பொழுது மருது சேர்வைக்காரர்கள் கையாண்டு இருப்பது வியப்பை அளிப்பதாக இருக்கிறது.
கும்பெனியாரின் கெடுபிடிகள் இந்த "விடுதலை இயக்க” அறிவிப்புகளின் மீது பாய்ந்து பிய்த்து அழித்து விட்டனர். என்றாலும் சென்னையில் உள்ள கும்பெனியாரின் கவர்னருக்கு, தகவலுக்காக திருச்சியில் இருந்து அனுப்பப்பட்ட நகல் அறிவிப்பு அரசு ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டு, விடுதலைப் போரைப்பற்றி ஆய்வு செய்பவர்களுக்கு ஆர்வம் விளைவிக்கும் சிறந்த வரலாற்றுச் சுவடியாக விளங்கி வருகிறது. நாட்டுப்பற்றை நெருடி விடும் சாதனமாக என்றென்றும் இந்த அறிவிப்பு விளங்கும் என்பதில் ஐயமில்லை.
- ↑ 1 Sathianathaier S; History of Madura Nayaks (1924)p.p. 58-60
- ↑ 2 ஆந்திர நாட்டில் இருந்து தமிழகத்தில் குடியிருந்த ஒன்பது பிரிவினரான வடுகளில் ஒரு பிரிவு. இவர்கள் தொட்டியர் எனவும் வழங்கப்பட்டனர். Edgar Thurstion; Castes and Tribes of South India vol. III. p 92
- ↑ 3 குருகுகதாசப் பிள்ளை-திருநெல்வேலி சீமைச் சரித்திரம் (1931) பக்கம் 263
- ↑ 4 குருகுகதாசப்பிள்ளை திருநெல்வேலி சீமை சரித்திரம் (1931) பக் - 27.8.19
- ↑ 5 Col. Welish : Military Reminiscences vol. II (1868)
- ↑ 6. Ibid vo1. II
- ↑ *நரிப்பள்ளம் - பரந்த ஆற்று மணல்படுகையில் வரிகள் இரவு நேரத்தில் தங்குவதற்கு மணலைக் கால்களினால் வாரி அமைக்கும் பள்ளங்கள்.
- ↑ 7 Col. Welsh: Military Reminiscences (1830) vol. I p.p. 132-33.,
- ↑ 8 குருகுகதாஸப்பிள்ளை - திருநெல்வேலி சீமை சரித்திரம் (1931) பக். 289
- ↑ 9 Ibid vol. I p.p. 131-33.
- ↑ 10 Military Reminiscences 1930 vol. I, p. 132-33
- ↑ 11 Military Consultations, vol. 284, (9-6-1801) p. 4280
- ↑ 12 Military Consultations, voI. 285 (A) 11 -6-1801 p. 505-52
- ↑ * மறவர் சமையில் அப்பொழுது செலாவணியில் இருந்த வெள்ளிபணம்
- ↑ 13 Ibid vol. 284, 26-5-1801 p. 4040-41
- ↑ 14 Military Consultations vol. 289 (1-12-1801) p. 7680
- ↑ 1 5 Ibid vol. 284, (1-6-1801) p. 3870
- ↑ 16 Ibid vol. 285, (7-7-1801) pp. 547-48
- ↑ 17 Madurai District Records, vol. 1182. (9-5-1801)p.p. 149-51.
- ↑ *இராமநாதபுரம் மன்னரது பதினேழு மாகாணங்களில் ஒன்று இன்றைய திருவாடனை தேவகோட்டை வட்டங்களைக் கொண்டது.
- ↑ காரைக்குடி-தேவகோட்டை சாலையில் அமராவதி புதுருக்கு கிழக்கே 5 கி.மீ.தொலைவில் உள்ள ஊர்.
- ↑ 18 Military Consultations vol. 288, (20-10-1801), pp. 1657
- ↑ 19 Ibid, vol 284, 30-5-1801. pp. 420-30
- ↑ 20 Madurai District Records, vol. 1 133, 26-6-1801. pp. 22-24
- ↑ 21 Tinnevery District Records, vol. 3579, 23-6-1801, pp.14-20
- ↑ 22 Madurai District Records, vol. 1182,23-6-1801 p p. 209-210,
- ↑ 23 Ibid (30-6-1801) p. 218.
- ↑ 24 льid (19-5—1801) (25-5-1801) p, 155-58
- ↑ 25 Madurai District Records, vol. 1134, (29-5-1801.)
- ↑ 26 Ibid (24-5-1801).
- ↑ 27 Military Consultations-vol. 285(A) (27-5-1801), pp. 5047-48
- ↑ 28 Military Consultations, vol. 284, (9-6-1801) pp. 4280-81
- ↑ 29 Ibid vol. 285, (21-6-1801) pp. 4550-55
- ↑ 30 bid. vol.,285 (A) (18-6-1801) pp. 4965-80
- ↑ 31 Ibid vol. 285 (A), (18-6-1801), pp. 4965-80
- ↑ 32 Revenue Sundries vol. 26 (18-6-1801) p. 598 Military Consultations, 285 (A) 18-6-1801 pp. 4965-79
- ↑ 33 Ibid 25-6-1801
- ↑ 34 Ibid, 25-6-1801. pp. 4333-37
- ↑ 35 Ibid 28-6-1801, pp. 5039–40
- ↑ 36 Ibid 28-6-1801, pp 5038:44
- ↑ 37 Military Consultations, vol. 285 (A) (28-6-1801), pp. 5043-44
- ↑ 38 Ibid vol. 155, (24-1-1792) p. 474
- ↑ 39 Ibid vol. 285 (A) (6-7-1801), pp. 4977-74
- ↑ 40 Revenue Sundries, vol. 26, (6-7-1801), pp. 432-48 Revenue Consultations vol. 110 (6-7-1801), pp. 1299–1365
- ↑ 41 Revenue Sundries, vol. 26, (16-6-1801). p.p. 441-70.
- ↑ 42 Revenue Sundries, vol. 26 (16-6-1801) p. 1457