மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்/பாதாளம் சொன்ன பத்துப் புத்தகங்கள் கதை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
பாதாளம் சொன்ன
பத்துப் புத்தகங்கள் கதை

‘நெட்டையரான இந்தக் குட்டையன் செட்டியார் புத்தக வியாபாரம் மட்டும் செய்து வரவில்லை; வேறு எத்தனையோ வகையான வியாபாரங்கள் செய்து வந்தார். அவற்றில் சில வெளியே சொல்லக் கூடியவை; சில வெளியே சொல்லக் கூடாதவை. அந்த வியாபாரங்களில் ஒன்று, இவர் சில டாக்சிகளை வாங்கி ஓட்டியது. என்னுடைய போதாத காலம், இவருடைய டாக்ஸி டிரைவர்களில் ஒருவனாக நானும் அப்போது இருந்து வந்தேன்.

ஒரு நாள் பத்துப் புத்தகங்களுடன் ஓர் எழுத்தாளர் இவரைத் தேடி வர, அந்தப் புத்தகங்களை இவர் வாங்கிப் பார்த்துவிட்டு, 'எல்லாம் இந்தியிலிருந்து மொழி பெயர்த்த நாவல்களாக அல்லவா இருக்கின்றன? இவற்றுக்காக உமக்குப் பணம் கொடுப்பது போதாதென்று இந்தி ஆசிரியருக்குமல்லவா ஏதாவது கொடுத்துத் தொலைக்க வேண்டும்?’ என்று தன் கண்ணிலிருந்து வடிந்த ரத்தத்தைத் தன்னுடைய மேல் துண்டால் துடைத்துக் கொண்டே சொல்ல, 'வேண்டாம்; அந்த நூலாசிரியர் இறந்து ஐம்பது வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டதால், சட்டப்படி நீர் அவருக்கு ஒன்றும் கொடுக்க வேண்டாம்!' என்று வந்தவர் அபயம் அளிக்க, 'அதே மாதிரி நீரும் செத்து ஐம்பது வருடங்களுக்கு மேல் ஆகியிருக்கக் கூடாதா?’ என்று இவர் முணுமுணுத்துக் கொண்டே, 'சரி, இந்தப் பத்துப் புத்தகங்களுக்கும் நீர் என்ன எதிர்பார்க்கிறீர்?’ என்று கேட்க, ‘இவற்றை நானே வெளியிடலாமென்று இருந்தேன். அதற்குள் என் மனைவி உடல் நலம் கெட்டுப் படுத்த படுக்கையாகி விட்டாள். அவளுடைய வைத்தியச் செலவுக்கு இவற்றைத்தான் இப்போது நம்பியிருக்கிறேன்!' என்று அவர் சொல்ல, 'அப்படியானால் நான் சொல்வதைக் கேளும்; உமக்கு மொத்தமாக ஒரு தொகை கிடைக்கும்!’ என்று இவர் ஏதோ கணக்குப் போட, 'அந்தத் தொகை தம்மால் மட்டும் தூக்கிச் செல்லக் கூடிய தொகையாயிருக்குமா? அல்லது ஆட்டோ, டாக்ஸி-இப்படி ஏதாவது ஒன்றின் உதவியை நாடவேண்டிய தொகையாயிருக்குமா?' என்று அவர் சாலையைப் பார்க்க, இவர் ஒரு கனைப்புக் கனைத்துக் கொண்டு, ‘ஒரு பதிப்புக்கு மேல் இந்தப் புத்தகங்களை வெளியிட முடியாது. ஆகவே இந்தப் பத்துப் புத்தகங்களுக்கும் மொத்தமாக ரூபாய் இருநூறு கொடுத்து விடுகிறேன்; இவற்றின் உரிமை முழுவதையும் எனக்கே நீர் எழுதிக் கொடுத்துவிட வேண்டும். என்ன, சம்மதமா?’ என்று கேட்க, அவர் அப்போதிருந்த நிலையில், ‘ம்’ என்று வேண்டாவெறுப்பாகத் தலையை ஆட்ட, ‘ஜெயந்தி, பரிமளா, கோமளம், ராதா, கீதா, கறுப்புப் பெண், சிவப்புப் பெண், இந்திரன், சந்திரன் ஆக பத்துப் புத்தகங்களின் முழு முழு முழு உரிமையும் பதிப்பகத்தாருக்கே, பதிப்பகத்தாருக்கே, பதிப்பகத்தாருக்கே! இவற்றுக்கும் இவற்றை மொழி பெயர்த்தவருக்கும், ஏழேழு ஜன்மங்களுக்கும் (ஏழேழு என்பது நாற்பத்தொன்பது தலைமுறைகளையும், நாற்பத்தொன்பது ஜன்மங்களையும் (இருந்தால்) குறிக்கும்.) எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது, கிடையாது, கிடையவே கிடையாது!' என்று இவர் எழுதி வாங்கிக் கொண்டு பத்து ரூபாய் நோட்டொன்றை எடுத்து அவரிடம் நீட்ட, 'பாக்கி ரூபாய் நூற்றுத் தொண்ணுறு?’ என்று அவர் திடுக்கிட்டுக் கேட்க, 'பணந்தானே? யாரிடம் இருந்தால் என்ன? இப்போதைக்கு இதை எடுத்துக்கொண்டு போய் இன்றையச் செலவைப் பாரும்; நாளைக்கு வாரும்!' என்று சொல்லி, இவர் அவரை வழி அனுப்பி வைப்பாராயினர்.

இப்படியாகத்தானே இவர் 'நாளை, நாளை' என்று அவரை இழுத்தடிக்க, அவர் 'நாளைப் போவார் நாயனா'ராகி வந்துபோக, ரூபாய் நூறு தீர்ந்து, பாக்கி ரூபாய் நூறு இருந்த காலை, அவர் ஒரு நாள் மாலை தலைவிரி கோலமாக 'இன்பசாகர'த்துக்கு ஓடிவந்து, 'போய்விட்டாள்; என் மனைவி போதிய வைத்திய வசதியில்லாமல் போயே போய்விட்டாள்!' என்று அலற. ‘இதென்னடா வம்பு?' என்று இவர் துணிந்து நூறு ரூபாய் நோட்டொன்றை எடுத்து அவரிடம் நீட்ட, ‘ஆ! ரூபாய் நூறா? எனக்கா! ஒரே தடவையிலா?’ என்று அவர் தம் வாயை நிஜமாகவே பிளந்து வைப்பாராயினர்.

அதைக் கண்டு பயந்துபோன இவர், ‘செத்தவன் வேறு எங்கேயாவது போய்ச் செத்திருக்கக் கூடாதா? இங்கே வந்துதானா செத்துத் தொலைய வேண்டும்?’ என்று மருண்டு, மிரண்டு, 'அப்பா, பாதாளம்! போலீசாரின் தொல்லையிலிருந்து நீதான் என்னைக் காப்பாற்ற வேண்டும்!' என்று என்னைக் கெஞ்ச, 'உங்களை என்னால் எப்படிக் காப்பாற்ற முடியும்?’ என்று நான் கேட்க, ‘இவனைத் தூக்கி நம் டாக்சியில் போட்டுக்கொண்டு போய் ஏதாவது ஒரு போலீஸ் ஸ்டேஷனில் நில். ‘என்ன?’ என்று போலீசார் கேட்டால், ‘யாரோ ஒரு பிரயாணி; வழியில், ‘மார்பை அடைக்கிறது; சோடா வாங்கி வருகிறாயா?' என்றார். ‘சரி' என்று நான் வண்டியை நிறுத்தி விட்டு ஓடினேன்; திரும்பி வந்து பார்த்தால் பிளந்த வாயோடு வண்டியில் கிடந்தார்!’ என்று சொல்லிவிடு. அதற்கு மேல் அவர்கள் பாடு, அவன் பாடு! நம்மைப் பிடித்த தலைவலி விட்டுப் போகும்!' என்று இவர் சொல்ல, நான் அன்றிருந்த நிலையில் அதைத் தட்ட முடியாமல் அப்படியே செய்ய, அது ‘இயற்கை மரணம்’ என்று தெரியும் வரை நான் போலீசார் இழுத்த இழுப்புக்கெல்லாம் ஈடு கொடுத்து விட்டு, அதற்குப் பின் இவருடைய வேலைக்கும் ஒரு முழுக்குப் போட்டுவிட்டு, ஊரிலிருந்த நிலத்தை விற்றுச் சொந்தமாக ஒரு டாக்சி வாங்கி ஓட்டலானேன். என் கதை இப்படியாக, அந்த எழுத்தாளருக்கோ ஒரே ஒரு பெண்; இந்தப் புண்ணியவானால் அவள் இப்போது அனாதையாகி, ஒளவை ஆசிரமத்தில் இருக்கிறாள். இவரோ அவளுடைய தகப்பனார் எலும் பொடிய மொழி பெயர்த்துக் கொடுத்த பத்துப் புத்தகங்களையும் இதுவரை பத்துப் பதிப்புக்களுக்கு மேல் வெளியிட்டுப் பணம் பண்ணியிருக்கிறார்; இனி மேலும் பண்ணுவார் - அதுதான் ஏழேழு நாற்பத்தொன்பது தலை முறைகளுக்கும் சேர்த்து, அன்றே இவர் அவரிடம் எழுதி வாங்கிவிட்டாரே! இதுதான் அந்தப் பரிதாபத்துக்குரிய எழுத்தாளரின் பத்துப் புத்தகங்களின் கதை!’

பாதாளம் இந்தக் கதையைச் சொல்லி முடித்ததும், ‘சரிதான்; இவருடைய இன்ப சாகரம் எழுத்தாளர்களுக்கெல்லாம் ஒரே துன்பசாகரமாயிருக்கும் போலிருக்கிறது!' என்று சொல்லிக்கொண்டே விக்கிரமாதித்தர் திரும்ப, 'அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை; அந்தப் பெண்ணை ஒளவை ஆசிரமத்தில் சேர்ந்தவன்கூட நான்தான்!' என்று சர்வகட்சி சாரநாதன் சர்வ பவ்யத்துடன் சொல்ல, அதுதான் சமயமென்று, 'அப்படியா சமாசாரம்? இப்போது என்ன சொல்கிறீர்? அந்தப் பெண்ணுக்காவது உம்முடைய செலவில் ஒரு கலியாணத்தைப் பண்ணி வைக்கிறீரா, இல்லையா? இல்லையென்றால் சொல்லும்; ஓர் எழுத்தாளரின் திடீர் மரணத்துக்குக் காரணமான உம்மை நான் இப்போதே போலீசாரிடம் ஒப்படைத்துவிடுகிறேன்!' என்று விக்கிரமாதித்தர் மிரட்ட, 'ஐயோ, வேண்டாம்! அப்படியே பண்ணி வைக்கிறேன்! என்று அவர் அலற, 'சரி, இலக்கியத்துக்கும் எனக்கும் ஏதோ சம்பந்தப்படுத்தி வைக்கப் போகிறேன் என்றீரே, அது என்ன சம்பந்தம்?’ என்று விக்கிரமாதித்தர் கேட்க, 'தன்னலக் கழகத் தலைவருக்குப் பெருமையையும் புகழையும் தேடி வைத்ததுபோல் உங்களுக்கும் தேடி வைக்க வேண்டுமென்று எனக்கு ரொம்ப நாட்களாக ஆசை. அதற்காக உங்கள் பேரால் பலரை நெருங்கி, உங்களுடைய அருமை பெருமைகளைப் பற்றிச் சிறப்புக் கட்டுரைகள் எழுதச் சொல்லி, அவற்றைத் தொகுத்துப் புத்தகமாக வெளியிட வேண்டுமென்று நினைக்கிறேன். அதற்கு உங்களிடம் அனுமதி பெறவே வந்தேன்!’ என்று சொல்ல, ‘பலர் என்றால் யார், யார்? அன்பளிப்பாக ஒரு பிரதி பெறுவதோடு ஆத்ம திருப்தி அடைபவர்களா?' என்று விக்கிரமாதித்தர் கேட்க, 'அதைப் பற்றி நமக்கென்ன? நமக்கு வேண்டியது புகழும் பெருமையும்தானே?' என்று சர்வகட்சி சாரநாதன் சற்றே மறந்திருந்த சிரிப்பை உதிர்க்க, ‘புகழும் பெருமையும் நம்மைத் தேடி வர வேண்டும். அவற்றைத் தேடி நாம் போகக்கூடாது. அவ்வாறு தேடும் புகழும் பெருமையும் நிலைக்கவும் நிலைக்காது. போய் வாரும் ஐயா, போய் வாரும்!' என்று விக்கிரமாதித்தர் அவர் கை கூப்புவதற்கு முன்னால் தாமே தம் கையை ஓர் அடி அடித்துக் கூப்ப, ‘குட்மார்னிங், ஜெய்ஹிந்த், வணக்கம்!' என்று உளறிக் கொண்டே, 'தப்பினோம், பிழைத்தோம்!' என்பதாகத்தானே சர்வ கட்சி நேசன் 'ஓடு, ஓடு’ என்று ஓடுவாராயினர்."

ன்னிரண்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட்டான சாந்தா இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, “நாளைக்கு வாருங்கள்; பதின்மூன்றாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் சூரியா சொல்லும் கதையைக் கேளுங்கள்!' என்று சொல்ல, "கேட்கிறோம், கேட்கிறோம், கேட்காமல் எங்கே போகப் போகிறோம்?" என்று போஜனும் நீதிதேவனும் வழக்கம் போல் கொட்டாவி விட்டுக்கொண்டே கீழே இறங்குவாராயினர் என்றவாறு... என்றவாறு... என்றவாறு...