மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்/பாதாளம் விக்கிரமாதித்தனுக்குச் சொன்ன பத்மாவதி கதை

விக்கிமூலம் இலிருந்து

1

பாதாளம் விக்கிரமாதித்தனுக்குச் சொன்ன

பத்மாவதி கதை

கேளுமய்யா, விக்கிரமாதித்தரே! கேளும் சிட்டி, நீரும் கேளும்! இந்தப் பரங்கிமலைப் பதியிலே ‘பத்மாவதி, பத்மாவதி” என்று ஒரு பாவை உண்டு. அந்தப் பாவையாகப்பட்டவள் பட்டணத்திலே உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்ததால், தினந்தோறும் பஸ் ஸ்டாண்டிலே வந்து நிற்பதுண்டு. அவள் அவ்வாறு வந்து நிற்கும் போதெல்லாம் இரண்டு 'அரும்பு மீசைகள்’ அங்கே வந்து அவளை ‘டா'வடிப்பதுண்டு. அப்படி ஒரு நாள் ‘டா’ வடித்துக் கொண்டிருங் காலையில், அவள் 'தூ’ என்று கீழே துப்ப, ‘ஆஹா! அந்தக் கனி ரஸத்தைக் கீழே துப்புவதற்குப் பதிலாக என் மேலே துப்பியிருக்கக் கூடாதா? அந்த அளவுக்குக் கூடவா நான் பாக்கியம் செய்யவில்லை?” என்று எம். ஜி. ஆர். மீசை வருந்த, ‘வருந்தாதே தம்பி, வருந்தாதே! வருந்தி வருந்தி உள்ளம் உருகாதே! வருந்தாதே தம்பி, வருந்தாதே!’ என்று 'தூங்காதே தம்பி, தூங்காதே’ மெட்டில் சிவாஜி மீசை பாட, 'வேறு என்னடா வழி, தாங்க முடியவில்லையே என்னால்!' என்று அது துடியாய்த் துடிக்க, ‘இதோ வழி என்று இது சொல்லலுற்றது:

‘அந்த ஆரணங்கு பஸ்ஸில் ஏறியதும் நீயும் ஏறு: அவளுக்குப் பக்கத்தில் நில். கண்டக்டர் வந்து ‘டிக்கெட்' என்றதும் அவளுக்கும் சேர்த்து 'இரண்டு டிக்கெட்' என்று கேள்; அவள் முறைப்பாள். கலங்காதே; ‘வீட்டில் போட்ட சண்டை வீட்டோடு இருக்கட்டும்; வெளியே வேண்டாம்’ என்று அவளைப் பார்த்துச் சொல்லிவிட்டு, 'நீ கொடப்பா, இரண்டு டிக்கெட்’ என்று கண்டக்டரைப் பார்த்துச் சொல். அவன் ‘கணவன்-மனைவி சண்டையாக்கும்’ என்று நினைத்து டிக்கெட்டைக் கொடுத்துவிட்டுப் போய் விடுவான். அதற்கு மேல் அவள் ஏதாவது முணுமுணுத்தாலும் அதை நீ காதில் போட்டுக் கொள்ளாதே! 'ஒவ'ராகப் போனால் அங்கேயே ஐந்து பேரைக் கூட்டி, 'கேளுங்கள் ஸார், இந்த அக்கிரமத்தை?’ என்று அஞ்சாமல் பஞ்சாயத்து வை; அவள் அசந்து விடுவாள். பஸ்ஸை விட்டு இறங்கியதும் மெல்ல அவளை நெருங்கி, ‘எப்படி என் ஐடியா?’ என்று கேட்டு இளி; ‘பிரமாதம்’ என்று அவளும் இளிப்பாள். அதற்கு மேல் நான் சொல்ல என்ன இருக்கிறது, நீ கேட்கத்தான் என்ன இருக்கிறது? 'புகையிலை பிரித்தால் போச்சு, பெண் பிள்ளை சிரித்தால் போச்சு!” என்றுதான் ஒரு பழமொழியே இருக்கிறதே!’

இப்படியாகத்தானே சிவாஜி மீசை ஒர் அபூர்வமான யோசனையைச் சொல்ல, அதை அப்படியே ஏற்று எம்.ஜி.ஆர். மீசை செய்ய, பத்மாவதியாகப்பட்டவள் வெகுண்டு, 'பிய்த்துவிடுவேன், பிய்த்து!’ என்பது போல் தன் கையிலிருந்த குடையைத் தூக்கிக் காட்டி விட்டுப் பள்ளிக்கூடத்துக்குப் போவாளாயினள்.

எம்.ஜி.ஆர். மீசை திரும்பி வந்து, நடந்ததை அப்படியே சிவாஜி மீசையிடம் சொல்ல, அது சிரித்து, 'பைத்தியக்காரா, ஒரு பெண் குடையைத் தூக்கிக் காட்டினால் என்ன அர்த்தம் என்று தெரியாதா, உனக்கு? இப்போது மழைக் காலம்; குளிருக்குப் போர்த்திக் கொண்டு தூங்கத்தான் தோன்றுமே தவிர, கலியாணம் பண்ணிக் கொண்டு சல்லாபமாக இருக்கத் தோன்றாது. ஆகவே, இந்த மழைக் காலம் போகட்டும்; வேனிற் காலத்தில் கலியாணம் பண்ணிக் கொள்ளலாம் என அர்த்தம்' என்று விளக்க, ‘காத்திருப்பேன், காத்திருப்பேன்; வேனிற்காலம் வரும்வரை என் வெண்ணிலா எனை மணக்கக் காத்திருப்பேன்!' என்று இது உற்சாகமாகச் சீட்டியடித்துப் பாடிக் கொண்டே சென்றது. வேனிற் காலம் வந்ததும், 'இப்போது என்ன செய்ய? அவளைப் பஸ் ஸ்டாண்டிலும் காணோம், பள்ளிக்கூடத்திலும் காணோமே? கோடை விடுமுறை போல் இருக்கிறதே!' என்று எம்.ஜி.ஆர். மீசை ஏங்க, ‘அஞ்சற்க, அவள் வீடு எனக்குத் தெரியும். அந்த வீட்டை நான் உனக்குக் காட்டுகிறேன். ஒரு நாள் காலை நீ அந்த வீட்டுக்குப் போ. அவள் தண்ணீர் தெளித்துக் கோலமிடுவதற்காக வெளியே வருவாள். அப்போது நீ மெல்ல அவளை நெருங்கு; 'மாரி போய்க் கோடை வந்துவிட்டது; என் மனத்தை நீ அறியாயோ?' என்று புலம்பு. உடனே அவள் நினைவுக்கு அந்தக் குடைச் சம்பவம் வந்துவிடும்; கலியாணத்துக்குச் சம்மதித்து விடுவாள். அப்புறம் என்ன? வேண்டியவை ஒரு கரிநாள்; நல்ல ராகுகாலம்; ஒலிபெருக்கி; ‘'டும் டும் டும் மாட்டுக்காரன் தெருவில் வாராண்டி!’ என்பது போன்ற ‘டம் டம் டம் பாட்டு ரிகார்டுகள்; இரண்டு ரோஜாப்பூ மாலைகள்; 'தான் மட்டுமே புத்திசாலி' என்று சாதிக்கக் கூடிய ஒரு சீர்திருத்தவாதி-இவ்வளவுதானே?' என்று சிவாஜி மீசை சொல்ல, இன்னொரு மாலை வேண்டாமா, பிரசங்கிக்கு?’ என்று அது கேட்க, 'மறந்துவிட்டேன், மொத்தம் மூன்றாக வாங்கிக் கொண்டால் போச்சு!' என்று இது சொல்லி, அதை அழைத்துக்கொண்டு போய் அவள் வீட்டைக் காட்ட, ‘ஒரு நாள் என்ன, நாளைக் காலையிலேயே நீ என்னை இங்கே பார்க்கலாம்!' என்று எம். ஜி. ஆர். மீசை ஒரு துள்ளுத் துள்ளிவிட்டுத் தன் வீட்டில் 'பெற்ற தோஷ'த்துக்காகப் போட்டு வந்த 'தண்ட சோற்'றை நாடிச் செல்லலாயிற்று.

அடுத்த நாள் காலை பத்மாவதியாகப்பட்டவள் வழக்கம் போல் தண்ணீர் தெளித்துக் கோலமிடுவதற்காகத் தெருவுக்கு வர, எம். ஜி. ஆர். மீசை 'நான் ஆணையிட்டால், அது நடந்துவிட்டால்' என்ற பாட்டை அதற்கேற்ற நடையுடன் சீட்டியடித்துப் பாடிக்கொண்டே அவளுக்கு எதிரே போய் நின்று, ‘மாரி போய்க் கோடை வந்துவிட்டது; என் மனத்தை நீ அறியாயோ?' என, 'அறிந்தேன், அறிந்தேன்!’ என்று அவள் தன் கையிலிருந்த ஒரு வாளி நீரையும் அதன் தலையிலே கொட்ட, 'இதற்கு என்ன அர்த்தம்? என்று அதை உடனே தெரிந்து கொள்ளும் துடிப்பில் அது அவளையே கேட்க, ‘போய் உம்முடைய நண்பரைக் கேளும்!' என்று அவள் சொல்லி அனுப்புவாளாயினள்.

தலையிலிருந்து தண்ணிர் சொட்டச் சொட்ட வந்து நின்ற எம். ஜி. ஆர். மீசையை நோக்கி, ‘என்ன விஷயம், என்ன நடந்தது.' என்று சிவாஜி மீசை கேட்க, அது நடந்ததைச் சொல்ல, இது வழக்கம்போல் சிரித்து, 'நடப்பது கோடைக் காலம்; இந்தக் காலத்தில் அடிக்கடி குளிர்ந்த நீரில் குளிக்கவும், காற்றோட்டமாக வெளியே செல்லவுந்தானே தோன்றும்? கலியாணம் பண்ணிக்கொண்டு 'புழுக்கமாவது, புழுக்கம்!’ என்று உள்ளே தவித்துக் கொண்டிருக்கத் தோன்றுமா என்பதல்லவா இதற்கு அர்த்தம்?’ என்று விளக்க, 'போடா, போ! வேறு எந்தக் காலத்தில்தான் அவளை நான் கலியாணம் செய்து கொள்வது?” என்று எம். ஜி. ஆர். மீசை ஏமாற்றத்துடன் கேட்க, ‘ஒன்று வேண்டுமானால் செய்; நீ துணிந்து அவள் வீட்டுக்கு ஒரு மடல் தீட்டு!' என்றது சிவாஜி மீசை.

‘எப்படித் தீட்டுவது?”

‘கண்ணே, மணியே, என் கற்பூரப் பெட்டகமே என ஆரம்பித்து, ‘பாழும் விடுமுறை ஏன்தான் வந்ததோ, அது நம்மைப் பிரித்து வைத்து ஏன்தான் இப்படிப் பாடாய்ப் படுத்துகிறதோ?’ என்று ஒரு பாரா ஒப்பாரி வைத்து, அடுத்த பாராவில், ‘ஆஹா! ஒட்டலில் அறை எடுத்துக் கொண்டு நாம் இன்பமாகக் கழித்த அந்த நாட்கள்!-பள்ளிக்கூடத்துக்குப் போகிறேன் என்று நீ அந்த ஒட்டலுக்கு வந்து விடுவாய்; வேலைக்குப் போகிறேன் என்று நானும் அந்த ஒட்டலுக்கு வந்துவிடுவேன்?-ஜாலி, ஒரே ஜாலி! ஆஹாஹா! அந்த மாதிரி இந்த விடுமுறையில் ஒரு நாளாவது நாம் இருக்க முடியாதா? இன்பம் துய்க்க முடியாதா? அதற்கு ஏதாவது ஒரு வழி கண்டுபிடிக்க உன்னால் முடியாதா? கோயில், குளம் என்று ஏதாவது, டைப்ரைட்டிங், தையல் கிளாஸ் என்று ஏதாவது-கொஞ்சம் யோசித்துப் பாரேன்?' என்று பரவசப்பட்டு, கடைசிப் பாராவில், ‘எழுது கண்ணே, எழுது! உன் பிரிவால் என் உயிர் உடலை விட்டுப் போவதற்கு முன்னால் எழுது!' என்று தீட்டி, அந்தக் கடிதத்தின் மேலேயே ஒரு சொட்டுக் கண்ணீரை விட்டு, கண்ணீர் வராவிட்டால் தண்ணீரையாவது விட்டு மசியைக் கலங்கவை. உனக்கு நல்ல காலம் இருந்து, அந்தக் கடிதம் அவள் கைக்குப் போய்ச் சேராமல், அவளை வீட்டை விட்டுத் துரத்த ஏதாவது ஒரு காரணம் கிடைக்காதா என்று காத்துக் கொண்டிருக்கும் அவளுடைய சித்தியின் கைக்குப் போய்ச் சேர்ந்தால் போதும்; அந்தப் புண்ணியவதி, ‘பள்ளிக் கூடத்துக்குப் போகிறேன், போகிறேன் என்று ஒட்டலுக்குப் போய் யாரோ ஒரு தடியனுடன் கூத்தடித்துவிட்டா வருகிறாய்?' என்று அவளை உடனே வீட்டை விட்டுத் துரத்திவிடுவாள். அதற்குப் பின் உன்னைத் தேடி வந்து சரண் அடைவதைத் தவிர அவளுக்கு வேறு வழியே இல்லை!'

இப்படியாகத்தானே சிவாஜி மீசை தன் கடைசி யோசனையைச் சொல்ல, அதை அப்படியே ஏற்று எம். ஜி. ஆர். மீசை செய்ய, அதனால் வீட்டை விட்டு வெளியே விரட்டப்பட்ட பத்மாவதியாகப்பட்டவள் கண்ணீரும் கம்பலையுமாகத் தெருவிலே வந்து நிற்க, அதற்காகவே காத்திருந்ததுபோல் சிவாஜி மீசை அவளை நெருங்கி, ‘எனக்கு அப்போதே தெரியும், அந்தப் பயல் இப்படிச் செய்வானென்று! கவலைப்படாதே, நான் இருக்கிறேன் உன் கண்ணீரை என் செந்நீரால் துடைக்க!' என்று ‘சினிமா வசனம்' பேச, அதை அவள் வேறு வழியின்றி நம்பி, கொட்டு மேளத்துக்குப் பதிலாகக் கூட்டத்தினரின் கையொலி முழங்க, அந்த அரும்பு மீசைக்கு மாலை சூட்டி ஒருவாறு மனம் தேறுவாளாயினள்.'

ந்த விதமாகத்தானே பாதாளம் தன் முதல் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, ‘இப்போது சொல்லும்? இதில் எம். ஜி. ஆர். மீசை செய்தது சரியா, சிவாஜி மீசை செய்தது சரியா? என்று விக்கிரமாதித்தரைக் கேட்க, ‘இரண்டு மீசைகள் செய்ததும் சரியல்ல!' என்று அவர் பதில் சொல்ல, அதுதான் சமயமென்று பாதாளம் அவரிடமிருந்து தப்பி, மீண்டும் போய் முருங்கை மரத்தின்மேல் ஏறிக்கொண்டு விட்டது காண்க...காண்க...காண்க....