மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்/21. இருபத்தோராவது மாடி

விக்கிமூலம் இலிருந்து
21

இருபத்தியோராவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் இந்திரா
சொன்ன

காணாமற் போன மனைவியின் கதை

“கேளாய், போஜனே! ஒரு நாள் காலை எங்கள் விக்கிரமாதித்தர் வெளியே புறப்பட்டுக்கொண்டிருந்தகாலை யாரோ ஒருவர் தலைவிரி கோலமாக வந்து அவருக்கு எதிர்த்தாற்போல் தயங்கித் தயங்கி நிற்க, ‘யார் நீங்கள், எங்கிருந்து வருகிறீர்கள்?’ என்று விக்கிரமாதித்தராகப் பட்டவர் அவரை விசாரிக்க, 'நான் சிந்தாதரிப்பேட்டையிலிருந்து வருகிறேன். என் பெயர் நேற்றுவரை வெறும் நாராயணன்; இன்று நடுத்தெரு நாராயணன்!' என்று வந்தவராகப்பட்டவர் மனம் நொந்தவர்போல் சொல்ல, ‘ச்சூச்சூச்சூ! அப்படியா, என்ன சமாசாரம்?’ என்று தம் ‘ச்சூச்சூச்சூ'வைக் கேட்டு விரைந்து வந்த நாயை விரட்டி விட்டு விக்கிரமாதித்தர் கேட்க, 'ஐயோ, அதை நான் எப்படிச் சொல்வேன்?' என்று அவர் தன் தலையில் தானே அடித்துக் கொள்ள, விக்கிரமாதித்தர் அதைத் தடுத்து, ‘சும்மா சொல்லுங்கள்?’ என்று அவரை உசுப்ப, அவர் சுற்றுமுற்றும் பார்த்துத் 'திருதிரு' வென்று விழித்துக் கொண்டே சொன்னதாவது:

‘விஷயம் உங்களோடு இருக்கட்டும்; வேறு யாருக்கும் தெரிய வேண்டாம். நானும் என் மனைவியும் சீர்மிகு சிந்தாதரிப்பேட்டையிலே ஒரு சின்னஞ்சிறு வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொண்டு மலரும் மணமும் போல, நகையும் நங்கையும்போல, அதுபோல இதுபோல, இன்னும் என்னென்னவோ போல வாழ்ந்து வந்தோம். அங்ஙனம் வாழ்ந்து வந்தகாலை எந்த விதமான தவமும் செய்யாமலே எங்களுக்கு ஓர் ஆண் மகவு பிறந்தது. அந்த மகவுக்கு இன்னும் எண்ணி ஆறு மாதங்கள்கூட ஆகவில்லை. அதற்குள் என் மனைவி காணாமற் போய்விட்டாள் ஐயா, காணாமற் போயே போய்விட்டாள்!'

இவ்விதமாகத்தானே அவர் மனைவி காணாமற் போன கதையைச் சொல்லிக்கொண்டு வந்தகாலை, துக்கம் வழக்கம்போல் வந்து அன்னார் தொண்டையை அடைக்க, அதைக் கண்ணிரால் கரைத்து வெளியேற்றுவதற்காகவோ என்னவோ, அவர் தன் கதையை நிறுத்திவிட்டு ‘ஓ'வென்று அழுது புலம்ப, 'அழாதீர்கள் ஐயா, அழாதீர்கள்!’ என்பதாகத் தானே விக்கிரமாதித்தர் அவரைத் தேற்றி, 'என்றிருந்து காணவில்லை, எப்பொழுதிருந்து காணவில்லை?' என்று அன்னார் முதுகைத் 'தடவு, தடவு' என்று தடவிக் கொடுத்துக் கொண்டே கேட்க, ‘என்னத்தைச் சொல்வேன், நான்? இன்றிலிருந்துதான் அவளைக் காணவில்லை ஐயா, இன்றிலிருந்துதான் அவளைக் காணவில்லை. காலை மணி ஒன்பது இருக்கும். வழக்கம்போல் எனக்குச் சமைத்துப் போட்டாள். சாப்பிட்டுவிட்டு நான் வேலைக்குப் போனேன். அங்கே சர்வ வல்லமையுள்ள யாரோ ஒரு தொழிலாளி, 'இந்த வருடம் முப்பது சதவிகிதம் போனஸ் கிடைக்குமா, நாற்பது சதவிகிதம் போனஸ் கிடைக்குமா?' என்று நினைத்துக் கொண்டிருந்தகாலை முதலாளி 'அச்’ என்று ஒரு தும்மல் தும்ம, 'நான் போனஸைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்த காலை நீங்கள் எப்படித் தும்மலாம்? வாபஸ் வாங்கினால் தான் ஆச்சு!' என்று தொழிலாளி தன் முஷ்டியை உயர்த்த, ‘இதென்ன வம்பு? நான்தான் தும்மிவிட்டேனே! அதை எப்படி வாபஸ் வாங்குவேன்? இன்னொரு முறை வேண்டுமானால் தும்மச் சொல்; யாரிடமிருந்தாவது ஒரு சிட்டிகை ஓசிப் பொடி வாங்கிப் போட்டுத் தும்மி வைக்கிறேன்!' என்று முதலாளி சொல்ல, 'அதெல்லாம் எனக்குத் தெரியாது. வாபஸ் வாங்காவிட்டால், இதோ, இப்போதே, இந்தக் கணமே வேலை நிறுத்தம்!' என்று அந்தத் தொழிலாளி தன் 'எவரெடி போர்க்கொடி'யை உயர்த்திப் பிடிக்க, அந்தக் கொடியின் கீழ் எல்லாத் தொழிலாளரும் உடனே திரண்டு, உண்ணாவிரதம், உண்டிக் குலுக்கல் ஆகிய போர் முறைகளைக் கையாள, ஏற்கெனவே பல நெருக்கடிகளுக்கு ஆளாகி, ‘எப்போது இப்படி ஒரு சந்தர்ப்பம் வாய்க்கும், கம்பெனியை இழுத்துப் பூட்டலாம்' என்று காத்திருந்த முதலாளி, இதுதான் சமயமென்று 'கதவடைப்பு' செய்ய, அதைப் பார்த்துவிட்டு, நான் வீட்டுக்குத் திரும்பி வருவேனாயினன். அங்ஙனம் திரும்பி வந்தகாலை வீடு பூட்டியிருக்க ‘எங்கேயாவது அரட்டையடிக்கப் போயிருக்கிறாளோ, என்னவோ?’ என்று நான் வாயிலிலேயே காத்திருப்பேனாயினன். மணி பத்தும் ஆயிற்று, பதினொன்றும் ஆயிற்று, பன்னிரண்டும் ஆயிற்று. அவள் வரவில்லை; வரவே இல்லை. அக்கம்பக்கத்தில் விசாரித்துப் பார்த்தேன்; 'அவள் எங்கே போனாளோ, நாங்கள் பார்க்கவில்லை என்று சொல்லிவிட்டார்கள். நல்ல வேளையாக என்னிடம் மாற்றுச் சாவி ஒன்று இருந்தது. அதைக் கொண்டு பூட்டைத் திறந்து உள்ளே போனேன். 'கடிதம் ஏதாவது எழுதி வைத்து விட்டுப் போயிருப்பாளோ?' என்று மேஜை, டிராயர் ஆகியவற்றைக் ‘குடை, குடை’ என்று குடைந்து பார்த்தேன்; ஒன்றும் கிடைக்கவில்லை. 'ஒருவேளை தூக்குப் போட்டுக்கொண்டிருப்பாளோ?' என்று ஏணைக் கயிற்றைப் பார்த்தேன்; அதில் ஏணைதான் தொங்கிக் கொண்டிருந்தது; அவள் தொங்கிக் கொண்டிருக்கவில்லை. ‘கிணற்றில் விழுந்து விட்டிருப்பாளோ?' என்று புழக்கடையில் இருந்த கிணற்றில் குதித்துப் பார்த்தேன். அதில் சேறுதான் இருந்தது; அவள் இல்லை. இப்படியாக எல்லாச் சோதனைகளையும் செய்து முடித்த பிறகு, 'உள்ளே தூக்குப் போட்டுக் கொண்டு, உள்ளே கிணற்றில் குதித்துவிட்டு, அவள் வெளியே போய் எப்படி வீட்டைப் பூட்ட முடியும்?’ என்று தோன்ற, 'அட, சீ! என்ன மூளை, நம் மூளை!' என்று என் மூளையை நானே ‘மெச்சிக்' கொண்டு அவள் சொந்தக்காரர் வீடுகளுக்கெல்லாம் சென்று ஜாடைமாடையாக விசாரித்துப் பார்த்தேன்; ‘வரவில்லை' என்று சொன்னார்கள். கடைசியாக எதற்கும் உங்களைப் பார்த்துவிட்டு, போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்யலாம் என்று இங்கே வந்தேன். என் மனைவியை மட்டுமல்ல; மானத்தையும் நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்’ என்று வந்தவர் சொல்ல, ஒரு கணம் யோசித்த விக்கிரமாதித்தர், மறுகணம் 'கவலைப்படாதீர்கள்!’ என்று சொல்லிக்கொண்டே காரிலிருந்து அன்றைய தினசரிப் பத்திரிகையை எடுத்து ஒரு புரட்டு புரட்டிப் பார்க்க, ‘என்ன பார்க்கிறீர்கள்?’ என்று வந்தவர் கேட்க, 'அதை இப்போது சொல்ல மாட்டேன்!' என்று சொல்லிக் கொண்டே அவர் தம் கைக்கடிகாரத்தைப் பார்த்துவிட்டு, ‘ஏறுங்கள், காரில்!' என்று வந்தவரைக் காரில் ஏற்றிக் கொண்டு, 'முதலில் சித்ரா டாக்சீசுக்குப் போ!’ என்று பாதாளத்துக்குக் கட்டளையிடுவாராயினர்.

சொன்னது சொன்னபடி பாதாளம் காரைக் கொண்டு போய் சித்ரா டாக்சீசுக்கு முன்னால் நிறுத்த, 'இறங்குங்கள், இங்கே!' என்று விக்கிரமாதித்தர் வந்தவரை இறக்கி, 'அதோ, கொளுத்தும் வெயிலில் வியர்க்க விறுவிறுக்க நிற்கிறதே ஒரு கியூ-அந்தக் கியூவில் உங்கள் மனைவி தன் குழந்தையுடன் நிற்கிறாளா, பாருங்கள்!’ என்று சற்றுத் தூரத்தில் நின்ற கியூவைச் சுட்டிக் காட்ட, வந்தவர் ஓடிப் போய்ப் பார்த்துவிட்டு வந்து, 'இருக்கிறாள்; அந்தக் கியூவில்தான் இருக்கிறாள்!' என்று வாயெல்லாம் பல்லாகச் சொல்ல, ‘இப்போது சொல்கிறேன்-நான் பத்திரிகையில் பார்த்தது இன்று இங்கே என்ன புதிய சினிமாப் படம் வந்திருக்கிறதென்பது. அதில் இங்கே, இன்ன படம் என்பது தெரிந்தது. இப்போதெல்லாம் கணவன்மாரை வேலைக்கு அனுப்பியதும், அவர்கள் வீட்டிற்கு வருவதற்குள் அவர்களுக்குத் தெரியாமல் 'மாட்டினி ஷோ'வுக்குச் சென்று வருவதுதானே மனைவியரின் ‘நித்திய கடமைக'ளில் ஒன்றாயிருக்கிறது? அந்தக் கடமையை நிறைவேற்ற உங்கள் மனைவியும் இங்கே வந்திருக்கலாம் என்று நான் நினைத்தேன்; நினைத்தது சரியாகிவிட்டது!’ என்று விக்கிரமாதித்தர் சொல்ல, 'அது தெரியாமல் போச்சே எனக்கு!' என்று வந்தவர் வியக்க, ‘எப்படித் தெரியும்? உங்களுக்கும் நாம் வேலைக்குப் போனதும் நம் மனைவி மாட்டினி ஷோவுக்குப் போவாள் என்று தெரியாது; உங்கள் மனைவிக்கும் உங்களுடைய கம்பெனியில் இப்படித் திடீர் வேலைநிறுத்தம் நடக்கும் என்று தெரியாது!’ என்று விக்கிரமாதித்தர் சிரிக்க, 'நன்றி, நான் வருகிறேன்!' என்று அதுவரை நடுத்தெரு நாராயணனாக இருந்தவர், வெறும் நாராயணனாகி வீடு திரும்புவாராயினர்.”

ருபத்தோராவது மாடி ரிஸப்ஷனிஸ்ட்டான இந்திரா இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, “நாளைக்கு வாருங்கள்; இருபத்திரண்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் பங்கஜா சொல்லும் கதையைக் கேளுங்கள்!’ என்று சொல்ல, "கேட்கிறோம், கேட்கிறோம், கேட்காமல் எங்கே போகப் போகிறோம்?" என்று போஜனும் நீதிதேவனும் வழக்கம் போல் கொட்டாவி விட்டுக்கொண்டே கீழே இறங்குவாராயினர் என்றவாறு... என்றவாறு... என்றவாறு.......
22

இருபத்திரண்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் பங்கஜா சொன்ன

ஒரு கூஜா கதை

"கேளாய், போஜனே! ஒரு நாள் இரவு மிஸ்டர் விக்கிரமாதித்தர் தம்முடைய நண்பர் ஒருவரை 'நீலகிரி எக்ஸ்பிர'ஸில் ஏற்றிவிட்டு வருவதற்காக ஸென்ட்ரல் ஸ்டேஷனுக்குச் செல்ல, அதுகாலை யாரோ ஒரு சிறுவன் அங்கிருந்த பிளாட்பாரத்தில் கையில் கூஜாவுடன் குழாயடியில் நின்று 'ஓ'வென்று அழுதுக்கொண்டிருக்க, ‘என்ன தம்பி, என்ன?' என்று விக்கிரமாதித்தராகப்பட்டவர் அவனை விசாரிக்க, 'அதோ போகிறார் பார், அவர் என்னை அடித்துவிட்டுப் போகிறார், ஸார்!' என்று சிறுவனாகப் பட்டவன் சற்றுத் தூரத்தில் சென்றுகொண்டிருந்த ஒரு டெரிலின் சட்டை ஆசாமியைச் சுட்டிக் காட்ட, 'அவர் எதற்காக அடித்தார் உன்னை?' என்று விக்கிரமாதித்தர் பின்னும் கேட்க, ‘கதையைக் கேளுங்கள், ஸார்!' என்று அவன் பின்னும் சொன்னதாவது:

‘நான் இந்தக் குழாயடிக்கு வந்து கூஜாவில் தண்ணிர் பிடித்துக் கொண்டிருந்தேன். அதுகாலை என்னைப்போல் இன்னொரு சிறுவன் இரண்டு கூஜாக்களுடன் இங்கே வந்தான். அவன் முதலில் ஒரு கூஜாவில் தண்ணீர் பிடித்துக் கீழே வைத்தான்; பிறகு இன்னொரு கூஜாவில் தண்ணீர் பிடித்தான். கடைசியில் கீழே வைத்த கூஜாவை மறந்து விட்டுக் கையிலிருந்த ஒரே கூஜாவுடன் அவன் தன்னைச் சேர்ந்தவர்கள் இருந்த பெட்டியை நோக்கி ஓட, அவனை நான் அவன் பெயர் தெரியாததால், 'டேய், கூஜா! கூஜா!’ என்று கத்தி அழைக்க, அதைக் கேட்டதும் அதோ போகிறவர் ஓடிவந்து என் கன்னத்தில் ‘பளார், பளார்' என்று அறைந்து விட்டார், ஸார்!’

இந்த விதமாகத்தானே சிறுவன் தன் கதையைச் சொல்லி முடித்ததும் எங்கள் விக்கிரமாதித்தர் மீண்டும் ஒரு முறை அவன் காட்டிய ஆசாமியை உற்றுப் பார்க்க, அந்த ஆசாமியின் கையிலும் ஒரு வெள்ளிக்கூஜா இருந்ததைக் கண்ட அவர், 'சந்தேகமேயில்லை; அவர் ஒரு நட்சத்திரக் கணவராய்த்தான் இருக்கவேண்டும்' என்று தீர்மானித்து, ‘இது அழவேண்டிய விஷயமில்லை தம்பி, சிரிக்கவேண்டிய விஷயம்! 'கூஜா' என்பது வெறும் கூஜா மட்டுமல்ல; அப்படி ஒரு 'சிறப்புப் பெயர்' சினிமா நட்சத்திரங்களின் கணவன்மாருக்கும் உண்டு. ஆகவே, நீ அந்தப் பையனைக் 'கூஜா' என்று அழைத்ததும் அவர் தன்னைத்தான் அப்படி அழைத்ததாக நினைத்துக் கொண்டுவிட்டார். அதனால் வந்த ஆத்திரத்தில் அவர் தன்னை மறந்து ஓடி வந்து உன் கன்னத்தில் அறைந்திருக்கிறார்!’ என்று விளக்க, சிறுவன் சட்டென்று அழுவதை நிறுத்திவிட்டு, 'அப்படியென்றால் தன்னுடைய நட்சத்திர மனைவி இருக்கும் பெட்டிக்குத்தான் அவர் இப்போது போய்க்கொண்டிருக்க வேண்டும் இல்லையா?' என்று ஆவலோடு கேட்க, 'ஆமாம்' என்று விக்கிரமாதித்தர் சொல்ல, ‘டோய், நட்சத்திரம் டோய்!' என்று அந்தச் சிறுவன் தன்னையும், தான் பட்ட அடியையும் மறந்து கத்திக் கொண்டே நட்சத்திரத்தைப் பார்க்க 'ஓடு, ஓடு’ என்று ஓடுவானாயினன்."

ருபத்திரண்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட்டான பங்கஜா இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, "நாளைக்கு வாருங்கள்; இருபத்து மூன்றாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் அபரஞ்சி சொல்லும் கதையைக் கேளுங்கள்!' என்று சொல்ல, “கேட்கிறோம், கேட்கிறோம், கேட்காமல் எங்கே போகப் போகிறோம்?" என்று போஜனும் நீதி தேவனும் வழக்கம்போல் கொட்டாவி விட்டுக்கொண்டே கீழே இறங்கி வருவது காண்க... காண்க... காண்க.....
23

இருபத்து மூன்றாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் அபரஞ்சி
சொன்ன

பேயாண்டிச்சாமியார் கதை

"கேளாய், போஜனே! 'மாயாண்டிபுரம், மாயாண்டிபுரம்' என்று ஓர் ஊர் உண்டு. அந்த ஊரிலே ‘பேயாண்டிச் சாமி, பேயாண்டிச்சாமி' என்று ஒரு சாமியார் உண்டு. அந்தச் சாமியார் மக்களோடு மக்களாக வசிக்காமல் ஒரு மலையடிவாரத்திலே தம் சீடகோடிகளுடன் 'பீடாரோகணம்’ செய்திருந்தார். பக்தர்கள் பலர் ஆணும் பெண்ணுமாக அவரைத்தேடிச் செல்வார்கள். பலவிதமான காணிக்கைகளைக் கொண்டுபோய் அவருடைய காலடியிலே வைத்து அவரைச் சிரம் தாழ்த்தி, கரம் கூப்பி வணங்குவார்கள். அவர்கள்மேல் கொஞ்சம் விபூதியை எடுத்துப் போட்டு அவர் அவர்களை ஆசீர்வதிப்பார். அந்த விபூதி பட்ட மாத்திரத்தில் அவர்களில் சில பெண்கள் 'நான் போறேன், நான் போறேன்!' என்று தங்கள் தலைமுடியை விரித்துப் போட்டுக்கொண்டு ஆடுவார்கள். அங்ஙனம் ஆடும் பெண்களைப் பேய் பிடித்த பெண்கள் என்று சொல்லிச் சீட கோடிகள் தங்கள் கைகளில் உள்ள பிரம்புகளால் அந்தப் பெண்களின்மேல் இருக்கும் பேய்களை அடிப்பதுபோல் அவர்களையே அடித்து விரட்டிக்கொண்டு போய் ஊரின் எல்லைக்கு அப்பால் விட்டுவிட்டு வருவார்கள். இத்தனைக்கும் சாமியார் தம் வாயைத் திறந்து ஒரு வார்த்தை கூடச் சொல்ல மாட்டார். 'ஏன் அவர் வாயைத் திறக்கவே மாட்டேன் என்கிறார்?’ என்று கேட்டால், ‘மெளன விரதம் அனுஷ்டிக்கிறார்!’ என்று சீடகோடிகள் சொல்வார்கள்.

இப்படியாகத்தானே சாப்பிடுவதற்கு மட்டுமே வாயைத் திறந்துகொண்டிருந்த அந்தப் பேயாண்டிச் சாமியாரின் பெருமை மாயாண்டிபுரமெல்லாம் பரவ, அந்தப் பெருமையைக் கேட்டு மிஸ்டர் விக்கிரமாதித்தர் ஒரு நாள் போய் அவரைப் பார்க்க, அவர் இவரைக் கண்டதும், ‘நான் போறேன், நான் போறேன்!' என்று தம் சடா முடியை விரித்துப்போட்டு ஆடிக்கொண்டே ஓட, 'இது என்ன ஆச்சரியம்! இத்தனை நாளும் பேசாத சாமி இவரைக் கண்டதும் பேசுது; இத்தனை நாளும் ஆடாத சாமி இவரைக் கண்டதும் ஆடுது, ஓடுது!’ என்று பக்தகோடிகள் மூக்கின் மேல் விரலை வைக்க, அதைக் கண்டு விக்கிரமாதித்தர் விழுந்து விழுந்து சிரிக்க, ‘என்ன சங்கதி? உங்களைக் கண்டதும் அவர் ஏன் ஓடுகிறார்? நீங்கள் ஏன் சிரிக்கிறீர்கள்?' என்று அவர்களில் ஒருவர் இவரைக் கேட்க, இவர் சொன்னதாவது:

‘இந்தப் பேயாண்டிச் சாமியார் பூர்வாசிரமத்தில் ‘பெருமாள்' என்னும் பெயர் பூண்டு என்னிடம் டிரைவராக வேலை பார்த்து வந்தான். மாதம் பிறந்து சம்பளம் வாங்கினால் போதும்-இவன் வீட்டுக்கும் போகமாட்டான்; ஆபீசுக்கும் வரமாட்டான். மறுநாள் மனைவி என்று சொல்லிக் கொண்டு இவனைத் தேடி ஒருத்தி வருவாள். ‘ஏன், நேற்று வீட்டுக்கு வரவில்லையா?' என்று கேட்டால், ‘வந்து நாலு நாள் ஆச்சுங்க!’ என்பாள். 'சரி, நீ போ! அவன் வந்ததும் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன்!' என்பேன் நான். அவள் போனதும் இன்னொருத்தி வருவாள். 'நீ யாரம்மா? என்று கேட்டால், ‘பெண்சாதிங்க!’ என்று நெளிவாள். இங்ஙனம் 'மனைவி' என்ற பட்டத்துடனும், 'பெண்சாதி' என்ற பட்டத்துடனும் நாலு பெண்கள் இவனை மாதா மாதம் தேடிக்கொண்டு வருவார்கள். வாங்கிய சம்பளத்தைத் தீர்த்துக் கட்டும் வரை இவன் அவர்களிடம் சிக்க மாட்டான். பாவம், அவர்களில் ஒருத்தி வீட்டுவேலை செய்து பிழைப்பாள்; இன்னொருத்தி சோற்றுக்கூடை தூக்கிப் பிழைப்பாள்; மற்றொருத்தி இட்லி - மசால் வடை சுட்டு விற்றுப் பிழைப்பாள்; மற்றும் ஒருத்தி மாட்டின் துணை கொண்டு பிழைப்பாள். அவர்களில் யாருக்கும் இவனுக்கு ஒரு மனைவியும் மூன்று துணைகளும் உண்டு என்ற விஷயம் தெரியாது; ஒவ்வொருத்தியும் தான் மட்டுமே இவனுக்கு மனைவி, தான் மட்டுமே இவனுக்குத் துணைவி என்று நினைத்துக் கொண்டிருந்தாள். இந்தக் குட்டை உடைத்துப் பார்க்க வேண்டும் என்று நினைத்த நான், ஒரு முதல் தேதி அன்று அவர்கள் நால்வரையும் சேர்ந்தாற்போல் வரச் சொல்லி ஒளித்து வைத்துவிட்டு, இவன் சம்பளம் வாங்கியதும் அவர்களைக் கொண்டுபோய் இவனுக்கு முன்னால் நிறுத்தினேன். அவ்வளவுதான்-அவர்களில் ஒருத்தி இவனுடைய வலது கையைப் பிடித்துக் கொண்டாள்; இன்னொருத்தி இடது கையைப் பிடித்துக் கொண்டாள்; மற்றொருத்தி சட்டையைப் பிடித்துக் கொண்டாள்; மற்றும் ஒருத்தி வேட்டியைப் பிடித்துக் கொண்டாள். இரண்டு பெண்டாட்டிக்காரன் பாடே திண்டாட்டம் என்று அந்தக் காலத்திலேயே சொல்வார்கள்; இந்தக் காலத்தில் நாலு பெண்டாட்டிக்காரன் பாடு எப்படி இருந்திருக்கும் என்பதை நான் சொல்லியா நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்? பயல் 'விழி, விழி' என்று விழித்தான். ‘இதெல்லாம் உங்கள் வேலைதானா?' என்பதுபோல் என்னை வேறு பரிதாபமாகப் பார்த்தான். நான் சிரித்தேன். அதற்குள், 'இவருக்கென்று நான் ஒருத்தி இருக்கும்போது நீ எப்படி வரலாம்?’ என்று ஒருத்தி இன்னொருத்தியைக் கேட்க, ‘நான் ஒன்றும் வரவில்லை; இவராகத்தான் வந்தார்!' என்று அவள் சொல்ல, ‘இவருடைய சம்பாத்தியத்துக்கு நாங்கள் இரண்டு பேர் போதாதா? நீ ஏன் வரவேண்டும்?' என்று முன்னவள் மூன்றாமவளைக் கேட்க, ‘நான்தான் கதியில்லாமல் வந்தேனென்றால் இவள் ஏன் வந்தாள் என்று கேள்!' என்று அவள் நாலாமவளைச் சுட்டிக் காட்ட, 'இந்த மன்மதனுக்கு ஏற்கெனவே மூன்று ரதிகள் இருக்கிறார்கள் என்பதை நான் கண்டேனா?' என்று அவள் சொல்ல, ‘யாரையடி ரதி என்கிறாய்?' என்று முன்னவள் அவள் மேல் பாய, அவர்கள் இருவரையும் மற்ற இருவர் விலக்கிவிட முயல, அதுதான் சமயமென்று இவன் அவர்களிடமிருந்து தப்பி எடுத்தான் ஓட்டம்! அதற்குப் பின் இவனும் வேலைக்கு வரவில்லை; இவனைத் தேடிக்கொண்டு அவர்களும் கம்பெனிக்கு வரவில்லை!'

விக்கிரமாதித்தர் இந்தக் கதையைச் சொல்லி முடித்ததும், ‘அவர்கள் நால்வரும் வேறு எங்கேயும் போய்விடவில்லை; இங்கேயேதான் இருக்கிறார்கள்!' என்று பாதாளம் சொல்ல, 'எங்கே இருக்கிறார்கள்?’ என்று அவர் கேட்க, 'இங்கேதான் இருந்தார்கள்; இப்போது அவனுடன் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்!' என்று இவன் சொல்ல, ‘ஏன்?' என்று விக்கிரமாதித்தர் கேட்க, ‘அவன் போடும் விபூதிக்கு அவர்கள்தானே மாறி மாறி வந்து பேயாடித் தொலைக்க வேண்டியிருக்கிறது!’ என்று பாதாளம் குட்டை உடைக்க, ‘அடப் பாவி! இப்படி ஒரு பிழைப்பா உனக்கு?’ என்று அங்கே கூடியிருந்த பக்த கோடிகள் அனைவரும் கல்லடி பட்ட தேனீக்கள்போல் கலைந்து செல்வாராயினர்."

ருபத்து மூன்றாவது மாடி ரிஸ்ப்ஷனிஸ்ட்டான அபரஞ்சி இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, ‘'நாளைக்கு வாருங்கள்; இருபத்து நான்காவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் மனோரஞ்சிதம் சொல்லும் கதையைக் கேளுங்கள்!' என்று சொல்ல, "கேட்கிறோம், கேட்கிறோம், கேட்காமல் எங்கே போகப் போகிறோம்?" என்று போஜனும் நீதிதேவனும் வழக்கம்போல் கொட்டாவி விட்டுக் கொண்டே கீழே இறங்கி வருவாராயினர் என்றவாறு... என்றவாறு... என்றவாறு...
24

இருபத்து நான்காவது மாடி ரிஸப்ஷனிஸ்ட்

மனோரஞ்சிதம் சொன்ன
கடவுள் கல்லான கதை

"கேளாய், போஜனே! அல்லும் பகலும் அனவரதமும் ‘கடவுளே கதி’ என்று இருந்த ஓர் ஆத்மாவுக்குத் திடீரென்று ஒரு நாள் ஒரு சந்தேகம் பிறந்தது. அந்தச் சந்தேகம் என்ன வென்றால்:

‘மற்ற யுகங்களிலெல்லாம் என்னென்னவோ அவதாரங்கள் எடுத்துத் துஷ்ட நிக்கிர சிஷ்ட பரிபாலனம் செய்து வந்த கடவுள் இந்தக் கலியுகத்தில் மட்டும் ஏன் கல்லானார்?'

இந்தச் சந்தேகம் பிறந்த நாளிலிருந்து அவர் தமக்கு எதிர்ப்பட்டவர்களையெல்லாம் ‘கடவுள் ஏன் கல்லானார், கடவுள் ஏன் கல்லானார்?’ என்று கேட்டுக்கொண்டே வர, அவர்கள் ஒவ்வொருவரும் 'அது என்னவோ எனக்குத் தெரியாது; நான் கடவுளைக் கல்லாக்கவில்லை!' என்று கையை விரிக்க, கடைசியாக அந்த ஆத்மா எங்கள் விக்கிரமாதித்தரிடம் வந்து அதே கேள்வியைக் கேட்க, அவர் சொன்னதாவது:

'ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஓர் ஊரில் ‘தனகோடி, தனகோடி' என்று ஒரு தன வணிகன் இருந்தானாம். அவன் இரவு பகல் என்று பாராமல் உழைத்து ஒரு லட்சம் பொன் வரை சேர்த்தானாம். அந்தப் பொன்னை ஓர் இரும்புப் பெட்டியில் வைத்துப் பூட்டிவிட்டு அவன் நேராகக் கடவுளிடம் வந்து, ‘கடவுளே! கடவுளே! நான் எவ்வளவோ கஷ்டப்பட்டு ஒரு லட்சம் பொன் சேர்த்து வைத்திருக்கிறேன். அதை என்னிடமிருந்து யாரும் அபகரித்துக் கொள்ளாமல் நீதான் பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டானாம். 'கவலைப்படாதே! நான் பார்த்துக் கொள்கிறேன், நீ போய் வா!’ என்றாராம் கடவுள். அவன் பரம திருப்தியுடன வீட்டுக்கு வந்து, அன்றிரவு நிம்மதியாகத் தூக்கமும் போட்டானாம். அடுத்தாற்போல் ஒரு திருடன் கடவுளைத் தேடி வந்து, ‘கடவுளே, கடவுளே! இன்றிரவு நான் தனகோடி வீட்டில் திருடப் போகிறேன். நீதான் யாரிடமும் என்னைச் சிக்க வைக்காமல் காப்பாற்ற வேண்டும்' என்று கேட்டுக் கொண்டானாம். கடவுள் என்ன செய்வார், பாவம்! 'கவலைப்படாதே, நான் கவனித்துக் கொள்கிறேன்!' என்று சொல்ல முடியுமா! இல்லை, ‘மாட்டேன்; நான் உனக்குத் துணையாக இருக்கமாட்டேன்!' என்றுதான் கையை விரிக்க முடியுமா? விரித்தால் அவரை எல்லோருக்கும் பொதுவானவர் என்று எப்படிச் சொல்ல முடியும்? எல்லோரையும் ரட்சிக்கக் கூடியவர் என்றுதான் எப்படிச் சொல்ல முடியும்? ஆகவே, 'இந்த மனித சகவாசமே இனி நமக்கு வேண்டாம்!' என்று அவர் உடனே கல்லாகிவிட்டாராம்!'

விக்கிரமாதித்தர் இந்தக் கதையைச் சொல்லி முடித்து விட்டு, ‘இப்பொழுதாவது உங்கள் சந்தேகம் தீர்ந்ததா?' என்று வந்தவரைக் கேட்க, 'தீர்ந்தது சுவாமி, தீர்ந்தது' என்று வந்தவர் தலையை ஆட்டிக்கொண்டே வந்த வழியைப் பார்த்து நடப்பாராயினர்.”

ருபத்து நான்காவது மாடி ரிஸப்ஷனிஸ்ட்டான மனோரஞ்சிதம் இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, ‘'நாளைக்கு வாருங்கள்; இருபத்தைந்தாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் காந்தா சொல்லும் கதையைக் கேளுங்கள்!' என்று சொல்ல, "கேட்கிறோம், கேட்கிறோம், கேட்காமல் எங்கே போகப் போகிறோம்?" என்று போஜனும் நீதி தேவனும் வழக்கம்போல் கொட்டாவி விட்டுக்கொண்டே கீழே இறங்கி வருவது காண்க... காண்க... காண்க......
25

இருபத்தைந்தாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் காந்தா சொன்ன

அழகுக் கதை

"கேளாய், போஜனே! ‘சிங்காரம்பட்டி, சிங்காரம்பட்டி' என்று ஓர் ஊர் உண்டு. அந்த ஊரிலே ‘சிற்சபேசன், சிற்சபேசன்' என்று ஒரு சீரணித் தொண்டர் உண்டு. அந்தத் தொண்டர் ஒரு நாள் மாலை கல்லாத முதியோர் சிலரைக் கூட்டிக் கல்வி புகட்டிக் கொண்டிருந்தகாலை, அவர்களில் சிலர் அந்த வழியே போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருந்த பெண்களை வெறித்துப் பார்க்க, அவர்களுடைய கவனத்தைத் திருப்புவதற்காக, 'பெரியோர்களே! பெண்களுக்கு அழகு எங்கே இருக்கிறதென்று தெரியுமா, உங்களுக்கு?' என்று அவர் ஒரு கேள்வியைப் போட்டு வைப்பாராயினர்.

கேள்வி பிறந்ததுதான் தாமதம், 'அதுவா தெரியாது எங்களுக்கு. பெண்களுக்கு அழகு அவர்களுடைய கூந்தலிலே இருக்கிறது!’ என்றார் ஒருவர்; 'இல்லை, கண்ணில்தான் இருக்கிறது!' என்றார் இன்னொருவர். ‘கண்ணில் அழகு இருக்கலாம்; ஆனாலும் கன்னத்தின் அழகுக்கு அது ஈடாகாது!’ என்றார் மற்றொருவர். ‘அதெல்லாம் ஒன்றுமில்லை; பெண்களுடைய அழகு அவர்களுடைய உதட்டிலேதான் இருக்கிறது!’ என்றார் மற்றும் ஒருவர். கடைசியாக ஒருவர் நாணிக்கோணி எழுந்து நின்று, 'அதைச் சொல்ல எனக்கு வெட்கமாயிருக்கிறது!’ என்று சற்றே நெளிய, 'நல்லவேளை, அதைச் சொல்லிவிட்டு வெட்கப்பட்டு வைக்காமல், சொல்லாமலே வெட்கப்பட்டு வைத்தீர்களே, அந்த மட்டும் க்ஷேமம், உட்காருங்கள்!' என்று சிற்சபேசன் அவரை உட்கார வைத்துவிட்டு, 'இன்றிலிருந்து உங்களுக்கு மூன்று நாட்கள் அவகாசம் தருகிறேன்; என்னுடைய கேள்விக்குச் சரியான விடையைக் கண்டுபிடித்துக்கொண்டு வாருங்கள்!’ என்று சொல்ல, ‘ரொம்ப நல்லது; அப்படியே செய்கிறோம்' என்று அனைவரும் எழுந்து, அவரவர்கள் வீடு நோக்கிச் செல்வாராயினர்.

வழி நெடுக, 'பெண்களுக்கு அழகு எங்கே இருக்கும், பெண்களுக்கு அழகு எங்கே இருக்கும்?’ என்று ஒருவரையொருவர் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டும், அதி அதி தீவிரமாக யோசித்துக் கொண்டும் வந்த பெரியோர்கள், கடைசியில், 'சரி, பெண்களையே கேட்டுவிட்டால் போகிறது!’ என்று தம் தம் மனைவிமாரைத் தேடி அவசர அவசரமாக வீட்டுக்கு வருவாராயினர்.

வீட்டுக்கு வந்ததும், ‘ஏண்டி, பெண்களுக்கு அழகு எங்கே இருக்கிறது?’ என்று தம் தர்மபத்தினியைக் கேட்டார் ஒருவர்; அவளோ, 'முதலில் உங்கள் தலையிலே என்ன இருக்கிறதென்று சொல்லுங்கள்; அதற்குப் பிறகு நான் பெண்களுக்கு அழகு எங்கே இருக்கிறதென்று சொல்கிறேன்!' என்றாள். இன்னொருவர், 'ஏண்டி, பெண்களுக்கு அழகு எங்கே இருக்கிறது?’ என்று தம் இல்லாளைக் கேட்டார்; அவளோ, ‘மூஞ்சைப் பார், மூஞ்சை! இப்படிக் கேட்க வெட்கமாயில்லை உங்களுக்கு?' என்று அவருடைய கன்னத்தில் ஓர் இடி இடித்துவிட்டுச் சென்றாள். மற்றொருவர் எடுத்த எடுப்பில் 'பெண்களுக்கு அழகு எங்கே இருக்கிறது?' என்று தம் மனையாளைக் கேட்டுவிடாமல், ‘ஏண்டி, உன்னை ஒன்று கேட்க வேண்டும்; கோபித்துக் கொள்ளமாட்டாயே?’ என்ற 'பிள்ளையார்சுழி'யுடன் ஆரம்பிக்க, ‘என்ன, கேளுங்கள்!' என்று அவள் அவருக்குத் தைரியம் கொடுக்க, அதுதான் சமயமென்று 'பெண்களுக்கு அழகு எங்கே இருக்கிறது?’ என்று அவர் அவளுடைய முகவாய்க் கட்டையைப் பிடிக்க, 'ஐயே! கேள்வியைப் பார், கேள்வியை?’ என்று அவள் அவருடைய கையைத் தட்டி விட்டுவிட்டுப் போவாளாயினள். மற்றும் ஒருவர் தம் மனையரசியைக் கண்டதும், 'பெண்களுக்கு அழகு எங்கே இருக்கிறது?’ என்ற கேள்விக் கணையை உடனே தொடுத்து விடாமல் மெளனமாக நின்று முன்னும் பின்னுமாக அவள் அழகைப் பார்க்க, ‘என்ன, அப்படிப் பார்க்கிறீர்கள்?’ என்று அவள் ஒன்றும் புரியாமல் கேட்க, ‘ஒன்றுமில்லை; ஒரு நிமிஷம் இப்படி வந்து நில்!' என்று அவர் அவளுடைய தோளைப் பற்றி இழுத்து நிறுத்தி உச்சந் தலையிலிருந்து உள்ளங்கால் வரை அவளை ஊடுருவிவிட்டு, ‘இப்படிப் பார்த்தால் தெரியாதுபோல் இருக்கிறது; அழகிப் போட்டிக்கு வந்து நிற்கும் பெண்களைப்போல நீயும் நீச்சல் உடையில் வந்து நின்றால்தான் தெரியும்போலிருக்கிறது!' என்று முணுமுணுக்க, ‘அப்படியா சமாசாரம்? என்ன தெரிய வேண்டும், உங்களுக்கு?' என்று அவள் கேட்க, 'பெண்களுக்கு அழகு எங்கே இருக்கிறதென்று தெரிய வேண்டும்!' என்று அவர் சொல்ல, 'அட கடவுளே! இப்பொழுது நீங்கள் எங்கே போய்விட்டு வருகிறீர்கள்? பெங்களுருக்கா, பாண்டிச்சேரிக்கா?' என்று அவள் அவருடைய வாயை முகர்ந்து பார்ப்பாளாயினள்.

இப்படி ஒரு நாள் அல்ல; இரண்டு நாட்கள் அல்ல; மூன்று நாட்கள் முயன்றும் பெண்களின் அழகு ரகசியத்தைத் தெரிந்து கொள்ள முடியாத முதியவர்கள் நான்காவது நாள் மாலை வாடிய முகங்களுடன் வந்து தங்கள் வாத்தியாருக்கு முன்னால் நிற்க, ‘என்ன, தெரிந்ததா?’ என்று வாத்தியார் கேட்க, ‘தெரியவில்லை; நீங்கள்தான் சொல்லவேண்டும்!' என்று அவர்கள் அனைவரும் சேர்ந்தாற்போல் கையை விரிக்க, வாத்தியார் சிரித்து, 'உண்மையில் அது எனக்கும் தெரியாது; பெண்கள் பக்கம் சென்ற உங்கள் கவனத்தை என் பக்கம் திருப்புவதற்காகவே அன்று நான் அப்படி ஒரு கேள்வியைப் போட்டேன்!' என்று விளக்க, ‘அட, விக்கிரமாதித்தா! இப்போது அந்தக் கேள்விக்கு விடை கிடைக்கா விட்டால் எங்கள் தலையே வெடித்து விடும்போலிருக்கிறதே, என்ன செய்வோம்?' என்று பெரியவர்கள் அத்தனை பேரும் தங்கள் தலையைப் பிடித்துக் கொண்டு தவிக்க, ‘வந்தேன், வந்தேன்!' என்று மிஸ்டர் விக்கிரமாதித்தர் அவ்விடம் வந்து, ‘பெண்களுக்கு அழகு வேறு எங்கும் இல்லை; அவர்களுடைய உள்ளத்தில்தான் இருக்கிறது!' என்று சொல்ல, 'இவ்வளவுதானா? இத்தனை நாட்களாக இது தெரியாமல் போச்சே எங்களுக்கு!' என்பதுபோல் எல்லோரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொள்வாராயினர்."

ருபத்தைந்தாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட்டான காந்தா இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, "நாளைக்கு வாருங்கள்; இருபத்தாறாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் கலா சொல்லும் கதையைக் கேளுங்கள்!’ என்று சொல்ல, "கேட்கிறோம், கேட்கிறோம், கேட்காமல் எங்கே போகப் போகிறோம்?" என்று போஜனும் நீதிதேவனும் வழக்கம் போல் கொட்டாவி விட்டுக்கொண்டே கீழே இறங்குவாராயினர் என்றவாறு... என்றவாறு... என்றவாறு......
26

இருபத்தாறாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் கலா சொன்ன

அவமரியாதைக் கதை

"கேளாய், போஜனே! அழகு மிகு சென்னையிலே ‘ஆபட்ஸ்பரி, ஆபட்ஸ்பரி' என்று ஒர் அழகு மாளிகை உண்டு. அந்த மாளிகையிலே நடைபெறவிருந்த விழா ஒன்றுக்கு எங்கள் விக்கிரமாதித்தர் வந்து கொண்டிருந்தகாலை அவருடைய கார் வழியிலே கொஞ்சம் 'மக்கர்' செய்ய, எதற்கும் குறித்த நேரத்தில் செல்ல வேண்டும் என்பதைத் தம்முடைய குறிக்கோளாகக் கொண்டிருந்த விக்கிரமாதித்தர் சட்டென்று காரை விட்டுக் கீழே இறங்கித் தம் கைக் கடிகாரத்தைப் பார்த்துவிட்டு, 'விழா ஆரம்பமாக இன்னும் ஐந்தே நிமிஷங்கள்தான் இருக்கின்றன. காரைச் சரி செய்துகொண்டு போவதாயிருந்தால் குறித்த நேரத்தில் நாம் அங்கே போய்ச் சேர முடியாது. நான் முன்னால் நடந்தே போய் விடுகிறேன். நீ பின்னால் காரைச் சரி செய்துகொண்டு வா!’ என்று பாதாளசாமியிடம் சொல்லிவிட்டு நடக்க, ஆபட்ஸ்பரி மாளிகை வாசலில் நின்று கொண்டிருந்த ஆடம்பரதாரிகள் சிலர் அவரை உள்ளே விடாமல் தடுக்க, ‘அப்படியா சமாசாரம்?’ என்று அவர் தம் காரை நோக்கி ‘விறுவிறு’ வென்று திரும்பி வருவாராயினர்.

அதற்குள் காரைச் சரி செய்துவிட்ட பாதாளசாமி மிஸ்டர் விக்கிரமாதித்தரை எதிர்கொண்டு வந்து அழைக்க, அவர் தம் காரில் ஏறிக்கொண்டு மறுபடியும் ஆபட்ஸ்பரி மாளிகைக்கு அவசர அவசரமாகச் செல்வாராயினர். சிறிது நேரத்திற்கு முன்னால் கால் நடையாக வந்த விக்கிரமாதித்தரை உள்ளே விட மறுத்த ஆடம்பரதாரிகள், இப்போது அவரை 'வருக, வருக!’ என்று வாயெல்லாம் பல்லாக வரவேற்று மாலையிட, அந்த மாலையைக் கழட்டி அவர் தம் காருக்குப் போட்டுவிட்டு, 'மரியாதை எனக்கல்ல, இந்தக் காருக்குத்தான் என்பதை எனக்கு உணர்த்தாமல் உணர்த்திய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி; நான் வருகிறேன்!' என்று திரும்ப, அந்த ஆடம்பரதாரிகள் அனைவரும் வெட்கித் தலை குனிவாராயினர்."

ருபத்தாறாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட்டான கலா இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, "நாளைக்கு வாருங்கள்; இருபத்தேழாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் மாலா சொல்லும் கதையைக் கேளுங்கள்!’ என்று சொல்ல, "கேட்கிறோம், கேட்கிறோம், கேட்காமல் எங்கே போகப் போகிறோம்?" என்று போஜனும் நீதிதேவனும் வழக்கம் போல் கொட்டாவி விட்டுக்கொண்டே கீழே இறங்கி வருவது காண்க... காண்க... காண்க......
27

இருபத்தேழாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் மாலா சொன்ன

கல்லால் அடித்த கதை

"கேளாய், போஜனே! 'வம்பனூர், வம்பனூர்' என்று ஓர் ஊர் உண்டு. அந்த ஊரிலே ‘மாரி, மாரி' என்று ஒரு வள்ளல் உண்டு. அந்த வள்ளல் தம்மிடம் உதவி கோரி வருபவர்களுக்கெல்லாம் தம்மால் முடிந்த உதவியைத் தட்டாமல் செய்வதுண்டு. அங்ஙனம் செய்துவந்த அவரை அந்த ஊர் வம்பர்கள் போற்றாவிட்டாலும் தூற்றாமலாவது இருந்திருக்கலாம்; அதுதான் இல்லை. 'சும்மாவா செய்கிறான்? சுயநலத்துக்காகச் செய்கிறான்!' என்றனர் சிலர்; ‘ஒரு பக்கம் செய்கிற பாவத்துக்கு இன்னொரு பக்கம் புண்ணியத்தைத் தேடவேண்டுமோ இல்லையோ, அதற்காகச் செய்கிறான்!' என்றனர் இன்னும் சிலர்; 'புகழாசை யாரை விட்டது? வேறு வகையில் அடைய முடியாத அதை அவன் விலை கொடுத்து வாங்குகிறான்!' என்றனர் மற்றும் சிலர். இவற்றையெல்லாம் கேட்கக் கேட்க வள்ளலுக்கு ‘அழுவதா, சிரிப்பதா?' என்று தெரியவில்லை. ‘கொடுத்தால் நல்லவன்; கொடுக்காவிட்டால் கெட்டவன் என்பதல்லவா இந்த உலக நீதி? அந்த நீதிக்கு விரோதமாக அல்லவா இருக்கிறது இது!’ என்று அவர் வருந்தினார். அந்த வருத்தத்திலும் அவர் தம்மால் இயன்ற உதவியைப் பிறருக்குச் செய்யாமல் இருந்தார் இல்லை. யார் என்ன சொன்னபோதிலும், 'என் கடன் பணி செய்து கிடப்பதே!’ என்று மேலும் மேலும் செய்தே வருவாராயினர்.

இங்ஙனம் செய்துவந்தகாலை அந்த ஊரிலிருந்த குடிசைகளில் சில திடீர், திடீரென்று தீப்பற்றி எரிய, அங்ஙனம் எரிந்த குடிசைகளுக்குப் பதிலாக வள்ளல் மாரி புதிய குடிசைகள் கட்டிக் கொடுக்க, அதையும அங்கிருந்த வம்பர்களில் சிலர் திரித்து, ‘இதெல்லாம் யாருடைய சூழ்ச்சி என்கிறீர்கள்? எல்லாம் அந்த வள்ளல் மாரியின் சூழ்ச்சிதான்! தருமம் செய்யத் தனக்கு அடிக்கடி சந்தர்ப்பம் வாய்க்க வேண்டும் என்பதற்காக அவன் தன் ஆளை விட்டுக் குடிசைகளுக்குத் தீ வைக்கச் சொல்லியிருக்கிறான்!' என்று வாய் கூசாமல் சொல்ல, 'அட, கடவுளே! இந்த அபவாதத்துக்கு ஒரு முடிவே இல்லையா?' என்று வாய்விட்டு அலறிய வள்ளல், 'தாங்காது அப்பனே, இனி தாங்காது!’ என்று உடனே ஓடிப் போய் ஓர் ஆறுதலுக்காக மிஸ்டர் விக்கிரமாதித்தரைப் பார்ப்பாராயினர்.

அவர் குறை கேட்டார் விக்கிரமாதித்தர்; சிரித்தார். ‘என்ன சிரிக்கிறீர்கள்?’ என்றார் வள்ளல் மாரி, ‘ஒன்றுமில்லை; சும்மாத்தான்!' என்றார் விக்கிரமாதித்தர். 'காரணமில்லாமல் நீங்கள் சிரிக்கமாட்டீர்களே?' என்றார் அவர்; ‘காரணத்தோடுதான் சிரித்தேன்!' என்றார் இவர். 'என்ன காரணம்?' என்றார் மாரி, 'சொல்கிறேன்!' என்று விக்கிரமாதித்தர் சொன்னதாவது:

‘கொடுத்தால் நல்லவன்; கொடுக்காவிட்டால் கெட்டவன் என்பது மட்டும் இந்த உலக நீதி அன்று; இன்னொரு நீதியும் உண்டு!'

விக்கிரமாதித்தர் இங்ஙனம் சொல்லி நிறுத்தியதும், 'அது என்ன நீதி?' என்று மாரி ஆவலோடு கேட்க, 'அதோ பாருங்கள்!' என்று அவர் தமக்கு எதிர்த்தாற்போலிருந்த மாந்தோப்பைச் சுட்டிக் காட்ட, 'அந்த மாந்தோப்புக்கும் நீங்கள் சொல்ல வந்த நீதிக்கும் என்ன சம்பந்தம்?’ என்று இவர் கேட்க, 'இருக்கிறது' என்று விக்கிரமாதித்தர் அவரைப் பின்னும் தொடர்ந்து கேட்டதாவது:

‘அந்தத் தோப்புக்கு வெளியே நிற்கிறார்களே சில சிறுவர்கள், அவர்கள் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்?'

‘கல்லால் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்!'

‘எதைக் கல்லால் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்?'

‘காய்த்த மரத்தைக் கல்லால் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்!'

‘காய்க்காத மரத்தை ஏன் அடிக்கவில்லை?'

‘காய்க்கவில்லை; அதனால் அடிக்கவில்லை!'

‘அதுதான் நான் சொல்ல வந்த இன்னும் ஓர் உலக நீதி ஐயா, இன்னும் ஓர் உலக நீதி! இப்போதாவது அந்த நீதி என்னவென்பது புரிந்ததா உங்களுக்கு?' என்று விக்கிரமாதித்தர் வினவ, 'புரிந்தது, புரிந்தது' என்று வள்ளல் மாரி தம் தலையை 'ஆட்டு, ஆட்டு’ என்று ஆட்ட, 'அங்கே காய்த்த மரத்துக்குக் கல்லடி; இங்கே கொடுக்கிற மனிதனுக்குச் சொல்லடி! அதுதான் வித்தியாசம்; மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு போய்வாருங்கள்!’ என்று விக்கிரமாதித்தர் அவருக்கு விடை கொடுத்து அனுப்புவாராயினர்.”

ருபத்தேழாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட்டான மாலா இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, "நாளைக்கு வாருங்கள்; இருபத்தெட்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் ஷீலா சொல்லும் கதையைக் கேளுங்கள்!' என்று சொல்ல, "கேட்கிறோம், கேட்கிறோம், கேட்காமல் எங்கே போகப் போகிறோம்?" என்று போஜனும் நீதிதேவனும் வழக்கம் போல் கொட்டாவி விட்டுக்கொண்டே கீழே இறங்கிவருவாராயினர் என்றவாறு... என்றவாறு... என்றவாறு.......
28

இருபத்தெட்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட்

ஷீலா சொன்ன கால் கடுக்க நின்ற கதை

"கேளாய், போஜனே! எங்கள் விக்கிரமாதித்தருக்குப் பத்து வயதுப் பாலகன் ஒருவன் உண்டு. ஆபீசுக்குச் செல்லுங்காலை அவனைத் தினந்தோறும் தம்முடைய காரிலே ஏற்றிக்கொண்டு போய் அவர் பள்ளியிலே விட்டுவிட்டுப் போவதுண்டு. அங்ஙனம் விட்டுக் கொண்டிருந்தகாலை அவன் ஒரு நாள், ‘எனக்கு நேரமாச்சு, நேரமாச்சு!’ என்று குதியாய் குதிக்க, ‘என்னடா நேரமாச்சு, மணி ஒன்பதே முக்கால்தானே ஆச்சு?' என்று அவர் அவசர அவசரமாக 'டிரஸ்' செய்து கொண்டே சொல்ல, 'உங்களுக்கு என்ன அப்பா, சொல்லாமல்? நேற்று அரை மணி நேரம் வெயிலில் நின்ற வேதனை எனக்கல்லவா தெரியும்?' என்று பையன் சிணுங்க, ‘ஏன் நின்றாய், வீட்டுக் கணக்குப் போட்டுக்கொண்டு போகவில்லையா?' என்று அப்பா கேட்க, 'அதெல்லாம் ஒன்றுமில்லை, அப்பா! ஐந்து நிமிஷம் 'லேட்'டாகப் போனேன்; அதற்காக நின்றேன்!' என்று அவன் அழாக்குறையாகச் சொல்ல, 'அதற்கா உன்னை அரை மணி நேரம் வெயிலில் நிற்க வைத்தார்கள்? 'நான் சாட்சாத் விக்கிரமாதித்தரின் பிள்ளை' என்று சொல்லிப் பார்த்திருக்கக் கூடாதோ?' என்று அவர் சிரித்துக்கொண்டே சொல்ல, ‘எல்லாம் சொன்னேன்; 'அப்படியானால் ஒரு மணி நேரம் நில்' என்று சொல்லிவிட்டார் வாத்தியார்!' என்று பையன் அப்பா எதிர்பார்க்காத ஒரு 'வெடி குண்'டைத் தூக்கிப் போட, அவர் திடுக்கிட்டு, ‘ஏனாம்?’ என்று கேட்க, 'எதிலும் ஓர் ஒழுங்கைக் கடைப்பிடிக்கும் உன் அப்பாவைப் போன்றவர்களின் பிள்ளைகளே இப்படி வந்தால் மற்றவர்கள் எப்படி வருவார்கள்? அதற்காகத்தான் உனக்கு அதிகப்படியான தண்டனை என்று சொல்லி விட்டார் வாத்தியார்!' என்று அவன் விளக்க, அதற்குள் தயாராகிவிட்ட அவர், ‘சரி சரி, வாவா!' என்று அவனை அழைத்துக்கொண்டு பள்ளிக்குச் செல்வாராயினர்.

வழியில் ஒரு ரேஷன் கடையையும், அந்தக் கடையை ஒட்டி வெயிலில் வியர்க்க விறுவிறுவிக்க நின்று கொண்டிருந்த 'கியூ'வையும் கண்ட பையன், 'நான்தான் பள்ளிக்கூடத்துக்கு லேட்டாகப் போன குற்றத்துக்காக நேற்று வெயிலில் நிற்கும் தண்டனையை அனுபவித்தேன்; இவர்கள் அந்தத் தண்டனையை அனுபவிக்க என்ன குற்றம் அப்பா, செய்தார்கள்?’ என்றான்; 'இவர்கள் இன்னும் குற்றம் செய்யவில்லை; இனிமேல்தான் செய்யப்போகிறார்கள்!' என்றார் தகப்பனார். ‘என்ன குற்றம் செய்யப் போகிறார்கள்?' என்றான் அவன்; ‘அரிசி வாங்கப் போகும் குற்றத்தை!’ என்றார் அவர்.

அடுத்தாற்போல் 'இந்தியா காப்பி ஹெள'ஸை ஒட்டி ஒரு நீண்ட 'கியூ' நின்றுகொண்டிருந்தது. அந்தக் 'கியூ'வைக் கண்ட பையன், 'இவர்கள் என்ன குற்றம் அப்பா, செய்யப்போகிறார்கள்?’ என்றான்; 'காப்பிக் கொட்டை வாங்கப் போகும் குற்றத்தை!' என்றார் தகப்பனார்.

அதற்கும் அடுத்தாற்போல் பஸ் ஸ்டாண்டை ஒட்டி ஒரு 'கியூ' நின்றுகொண்டிருந்தது. அந்தக் 'கியூ'வைக் கண்ட பையன், 'இவர்கள் என்ன குற்றம் அப்பா, செய்யப் போகிறார்கள்?’ என்றான்; ‘பஸ்ஸில் ஏறப்போகும் குற்றத்தை!' என்றார் தகப்பனார்.

'அரிசி வாங்குவது குற்றம், காப்பிக்கொட்டை வாங்குவது குற்றம், பஸ்ஸில் ஏறுவது குற்றம்!' என்று தனக்குத் தானே முணுமுணுத்துக் கொண்ட பையன், 'அப்படியே குற்றமாயிருந்தாலும் அதைச் செய்த பிறகல்லவா தண்டனை அனுபவிக்க வேண்டும்? இவர்கள் அதைச் செய்வதற்கு முன்னாலேயே தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்களே?’ என்று வியக்க, ‘அந்த அதிசயத்தைத்தான் என்னாலும் புரிந்துகொள்ள முடியவில்லையடா மகனே, என்னாலும் புரிந்து கொள்ள முடியவில்லை!' என்று கையை அகல விரித்துக் கொண்டே மிஸ்டர் விக்கிரமாதித்தர் தம் மகனைக் கொண்டு போய்ப் பள்ளியில் இறக்கி விட்டுவிட்டு மேலே செல்வாராயினர்.”

ருபத்தெட்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட்டான ஷீலா இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, "நாளைக்கு வாருங்கள்; இருபத்தொன்பதாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் நர்மதா சொல்லும் கதையைக் கேளுங்கள்!’ என்று சொல்ல, "கேட்கிறோம், கேட்கிறோம், கேட்காமல் எங்கே போகப் போகிறோம்?" என்று போஜனும் நீதிதேவனும் வழக்கம் போல் கொட்டாவி விட்டுக்கொண்டே கீழே இறங்கி வருவது காண்க... காண்க... காண்க......
29

இருபத்தொன்பதாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட்

நர்மதா சொன்ன போலீஸ்காரனைத்
திருடன் பிடித்த கதை

"கேளாய், போஜனே! 'இட்லி நகர், சட்னி நகர்' என்று ஏதாவது ஒரு நகர் நிமிஷத்துக்கு நிமிஷம் உருவாகி வரும் இச் சென்னை மாநகரிலே 'இளிச்சவாயன் நகர், இளிச்ச வாயன் நகர்' என்று ஒரு நகர் உண்டு. அந்த நகரிலே 'பொன்னி, பொன்னி' என்று ஒரு கன்னி உண்டு. அழகென்றால் அழகு, கொள்ளை அழகாயிருந்த அந்தக் கன்னியை மணம் புரிய எத்தனையோ காளைகள் 'நான், நீ' என்று போட்டி போட்டுக் கொண்டு முன் வர, அத்தனை காளைகளையும் அவள் 'வேண்டாம், வேண்டாம்' என்று மறுத்து வர, 'யாரைத்தான் அம்மா, நீ கலியாணம் செய்து கொள்ளப் போகிறாய்?' என்று ஒரு நாள் அவளைக் கேட்டார் அவள் தகப்பனார். 'போங்கப்பா, நான் சொல்ல மாட்டேன்!' என்று அவள் தன் முகத்தை இரு கைகளாலும் பொத்திக் கொள்ள, அவர் அவளுடைய கைகளைச் சிரித்துக் கொண்டே விலக்கி, ‘சும்மா சொல்லம்மா?' என்று ஒரு தடவைக்கு நாலு தடவையாக வற்புறுத்த, ‘நான் ஒரு போலீஸ்காரரைக் கலியாணம் செய்துகொள்ளப் போகிறேன், அப்பா!' என்று சொல்லிவிட்டு அவள் வெட்கம் தாங்காமல் புழக்கடைக்கு ஓடுவாளாயினள்.

'இதென்ன வம்பு! எல்லாப் பெண்களும் போலீஸ்காரனைக் கண்டால் பயப்பட அல்லவா செய்வார்கள்? இந்தப் பெண் அவனைக் கலியாணமே செய்துகொள்கிறேன் என்கிறாளே? என்ன துணிச்சல்!' என்று வியந்த தகப்பனார், 'எங்கே தேடுவேன், போலீஸ்காரனை நான் எங்கே தேடுவேன்?' என்று தவிப்பாராயினர்.

இங்ஙனம் தவித்துக் கொண்டிருந்தகாலை ஒரு நாள் இந்த விஷயம் தெரிந்த அந்த ஊர்த் தடியன் ஒருவன் போலீஸ்காரர் வேடத்தில் திடீரென்று அவருடைய வீட்டுக்குள் நுழைந்து, ‘இப்படி ஒரு திருடன் வந்தானே, பார்த்தீர்களா?’ என்று அவரைக் கேட்க, ‘நான் யாரைப் பார்த்தேன்? உங்களைத்தான் பார்க்கிறேன்!' என்று அவர் சொல்ல, ‘என்னைத்தான் பார்க்கிறேன் என்றால் என்னையே நீங்கள் திருடன் என்கிறீர்களா, என்ன?' என்று அந்தப் போலீஸ்காரர் அவரைத் திருப்பிக் கேட்க, ‘ஏன் இருக்கக் கூடாது? இந்தக் காலத்தில்தான் போலீஸ்காரனே திருடன் வேடத்தில் வந்து திருடுகிறானே!' என்று அவர் சொல்ல, ‘யாரைப் பார்த்து அப்படிச் சொல்கிறீர்? நான் அசல் போலீஸ்காரனாக்கும்! இப்போது நினைத்தால்கூட உம்மைச் சந்தேகத்தின் பேரில் கைது செய்துகொண்டு போய் என்னால் லாக்-அப்பில் அடைத்துவிட முடியும், ஜாக்கிரதை!’ என்று போலீஸ்காரராக வந்த அந்தக் கீலீஸ்காரர் ஒரு துள்ளுத் துள்ள, அடுக்களையில் இருந்தபடி அதைக் கேட்டுக் கொண்டிருந்த பொன்னி அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்து, 'ஐயோ, அப்படியெல்லாம் செய்துவிடாதீர்கள்!' என்று துடியாய்த் துடிக்க, அவளைக் கண்ட மாத்திரத்தில் ‘ஆ!' என்று வாயைப் பிளந்த கீலீஸ்காரர் அப்படியே மூர்ச்சை போட்டுக் கீழே விழுவாராயினர்.

‘என்ன வந்துவிட்டது இந்தப் போலீஸ்காரருக்கு? இப்படி விழுந்து விட்டாரே!' என்று பொன்னியின் தகப்பனார் அவரைக் குனிந்து பார்க்க, ‘ஒருவேளை காக்கா வலிப்பா யிருக்குமோ? எதற்கும் சாவிக் கொத்தை அவருடைய கையிலே திணித்துப் பாருங்கள், அப்பா!’ என்று பொன்னி சொல்ல, ‘காக்கா வலிப்பாயிருந்தால் இப்படி ஆடாமல் அசையாமல் இருக்க மாட்டாரே? இழுத்துப் பறித்துக் கொண்டிருப்பாரே!' என்று அவர் சொல்ல, அதற்குள் கீழே விழுந்த கீலீஸ்காரர், 'அதெல்லாம் ஒன்றுமில்லை; அந்தப் பெண்ணின் அழகு...அந்தப் பெண்ணின் அழகு...’ என்று திக்கிக்கொண்டே தட்டுத் தடுமாறி எழுந்து உட்கார எந்தப் பெண்ணின் அழகு?' என்று ஒன்றும் புரியாமல் பொன்னியின் தகப்பனார் கேட்க, ‘உங்கள் பெண்ணின் அழகுதான்!' என்று கீலீஸ்காரர் சொல்ல, 'ஆமாம், என் பெண்ணின் அழகுக்கு என்ன?’ என்று அவர் மேலும் குழம்பிக் கேட்க, ‘அதுதான் என்னை அப்படியே மூர்ச்சையடையச் செய்துவிட்டது!’ என்று ஒரு கண்ணால் பொன்னியையும், இன்னொரு கண்ணால் அவளுடைய தகப்பனாரையும் பார்த்துக் கொண்டே சொன்னபடி கீலீஸ்காரர் எழுந்து நிற்க, 'ஆளைப் பார், ஆளை!' என்று அந்தக் கீலீஸ்காரரைத் தன் கண்ணால் ஒரு வெட்டு வெட்டிக்கொண்டே பொன்னி அடுப்பங்கரைக்குள் ஓடி ஒளிவாளாயினள்.

அவள் ஓட்டத்தைக் கண்ட தகப்பனார், ‘ஹஹ் ஹஹ்ஹா!' என்று சிரிக்க, கீலீஸ்காரர், ‘ஹிஹ்ஹிஹ்ஹி!’ என்று சிரிக்க, 'இவன் அவளுடைய அழகைப் பார், அழகை’ என்கிறான்; அவள் இவனை 'ஆளைப் பார், ஆளை!’ என்கிறாள். 'இதற்கு என்ன அர்த்தம்?’ என்று ஒரு கணம் யோசித்த தகப்பனார், மறுகணம், 'காதல், கீதல் என்று சொல்கிறார்களே, அதற்கு ஒரு வேளை இது ஆரம்பமாயிருக்குமோ?’ என்று நினைக்க, அதற்குள், ‘உங்கள் பெண்ணை நீங்கள் வெளியே அனுப்புவதுண்டா?' என்று கீலீஸ்காரர் அவரை மெல்ல விசாரிக்க, ‘ஏன்?' என்று அவர் ஒன்றும் புரியாமல் கேட்க, ‘இதுவரை அனுப்பியிருந்தாலும் இனிமேல் அனுப்பாதீர்கள்! அனுப்பினால் என்னைப்போல் பலர் மூர்ச்சையாகிக் கீழே விழலாம்; அதனால் பல விபத்துக்கள் நேரலாம். அந்த விபத்துக்களின் காரணமாக நானே உங்கள் பெண்ணைக் கைது செய்தாலும் செய்யலாம்!' என்று கீலீஸ்காரர் அளக்க, ‘இதென்ன வம்பு, அதற்குள் இவள் விரும்புவதுபோல் இவளை எந்தப் போலீஸ்காரன் தலையிலாவது கட்டி வைத்து விடுவதுதான் நமக்கு நிம்மதிபோலிருக்கிறதே!' என்று நினைத்த தகப்பனார், 'அதெல்லாம் இருக்கட்டும்; உங்கள் பெயர் என்ன?’ என்று கீலீஸ்காரரைக் கேட்க, ‘செவன், நாட், திரீ!' என்று கீலீஸ்காரர் ஏக மிடுக்குடன் சொல்ல, 'அட, நான் அதைக் கேட்கவில்லை ஐயா! உங்களுக்கு உங்கள் அப்பாவும் அம்மாவும் வைத்த பெயர் என்ன என்று கேட்கிறேன்!' என்று அவர் அலுப்புடன் சொல்ல, 'ஓ, அதுவா? பொன்னுச்சாமி!’ என்று கீலிஸ்காரர் தன் பெயருக்கு நடுவே வரும் ‘ச்'சன்னாவுக்கு ஒரு தனி அழுத்தம் கொடுத்துச் சொல்ல, ‘பொன்னுச்சாமியா, உங்களுக்கு எந்த ஊர்?’ என்று அவர் கேட்க, ‘இதே ஊர்தான்!' என்று பொன்னுச்சாமியும் சொல்ல, அதற்கு மேல் அவருடைய குலம், கோத்திரம் எல்லாவற்றையும் பற்றிக் கேட்டுத் தெரிந்துகொண்ட பொன்னியின் தகப்பனார், 'இனிமேல் நீங்கள் போய்த் திருடனைப் பிடிக்கலாம்!' என்று சொல்ல, 'ஆமாம்! ஆமாம்! அதை நான் மறந்தே போய்விட்டேன்!' என்று கீலீஸ்காரர் அப்படியும் இப்படியுமாகப் பாய்ந்து பாய்ந்து சென்று பார்த்தபடி, 'ஓடு, ஓடு’ என்று ஓடுவாராயினர்.

பொன்னுச்சாமியின் தலை மறைந்ததும் பொன்னியின் தகப்பனார் தம் மகளைக் கூப்பிட்டு, 'போலீஸ்காரரைத்தான் கலியாணம் செய்துகொள்வேன் என்று சொல்லிக் கொண்டிருந்தாயே, அம்மா! இப்போது இங்கே வந்து போனவரை உனக்குப் பிடித்திருக்கிறதா?’ என்று கேட்க, ‘போங்கப்பா!’ என்று அவள் முகம் சிவக்கச் சொல்ல, ‘அப்போ சரிதான்!' என்று அவர் அக்கணமே துண்டை உதறித் தோளின்மேல் போட்டுக்கொண்டு பொன்னுச்சாமியின் வீட்டைத் தேடிச் செல்வாராயினர்.

அவர் சென்ற சிறிது நேரத்துக்கெல்லாம், 'ஐயோ, போலீஸ்காரனைத் திருடன் பிடித்துக்கொண்டு போகிறானே!' என்று அந்தத் தெருவில் இருந்தவர்கள் அது ஒரு சினிமாக் கதையில் வரும் 'வெளிப்புறக் காட்சி' என்பது தெரியாமல் கூச்சலிட, அதைக் கேட்ட பொன்னி, 'இது என்ன கூத்து!' என்று எண்ணியவளாய் வெளியே வந்து பார்க்க, சற்றுத் தூரத்தில் உண்மையிலேயே அங்கு வந்த போலீஸ்காரரை ஒரு திருடன் பிடித்துக்கொண்டு போவதை அவள் கண்டு, ‘திகை, திகை' என்று திகைப்பாளாயினள்.

‘இப்படியும் ஒரு போலீஸ்காரர் உண்டா?' என்று அவள் மூக்கின்மேல் விரலை வைக்க, அதுகாலை அங்கு வந்த அவள் தகப்பனார், ‘எல்லாம் பேசி முடித்தாச்சு அம்மா, அடுத்த வெள்ளிக்கிழமை கலியாணம்!' என்று சொல்ல, ‘அதற்குள்ளாகவா?’ என்று அவள் ஆச்சச்சச்சரியத்துடன் கேட்க, ‘எனக்கே அது ஆச்சச்சரியமாய்த்தான் இருந்தது, அம்மா! அந்தப் பொன்னுச்சாமிக்குத் தாயும் இல்லை, தகப்பனும் இல்லை; சித்தப்பாவும் சித்தியும்தான் இருக்கிறார்கள். அவர்களைக் கேட்டால், 'அவனுக்கு நீங்கள் கலியாணம் செய்வீர்களோ, காஷாயம் வாங்கிக் கொடுத்துக் காசிக்கு அனுப்புவீர்களோ-அதைப்பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியாது!’ என்று சொல்லிவிட்டார்கள். 'இது என்ன, எடுக்கும்போதே அபசகுனமாயிருக்கிறதே!' என்று எண்ணிக் கொண்டே வெளியே வந்தேன். திண்ணையில் உட்கார்ந்திருந்த பொன்னுச்சாமியின் தாத்தா என்னைக் கூப்பிட்டு எல்லாவற்றையும் விசாரித்துத் தெரிந்துகொண்டு, ‘பாகப் பிரிவினையின்போது பையன் கொஞ்சம் கண்டிப்பாக நடந்து கொண்டு விட்டான்; அதனால் சித்தப்பாவுக்கும் சித்திக்கும் அவனைப் பிடிக்காமல் போய்விட்டது. அதற்காக நீங்கள் கவலைப்படாதீர்கள்! பையனுக்கும் பெண்ணுக்கும் மனப்பொருத்தம் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்ட பிறகு, மற்ற பொருத்தங்களை நாம் பார்க்க வேண்டாம். அடுத்த வெள்ளிக்கிழமை ஒரு முகூர்த்தம் இருக்கிறது; அந்த முகூர்த்தத்திலேயே இருவருக்கும் ஒரு முடிச்சைப் போட்டு விட்டுவிடலாம். எல்லாவற்றையும் நான் முன்னால் நின்று நடத்தி வைக்கிறேன்; நீங்கள் போய் மேலே நடக்க வேண்டியதைக் கவனியுங்கள்!' என்றார். 'சரி' என்று வந்து விட்டேன். உனக்குச் சந்தோஷந்தானே?' என்று அவர் கேட்க, ‘சந்தோஷந்தான்!' என்று அவள் கொஞ்சம் இழுத்தாற்போல் சொல்லிவிட்டு உள்ளே செல்வாளாயினள்.

வெள்ளிக்கிழமை வந்தது; கலியாணமும் நடந்தது. முதல் நாள் இரவு பொன்னுச்சாமியைச் சந்தித்த பொன்னி, ‘திருடனைப் போலீஸ்காரர் பிடித்துக்கொண்டு போவது தானே உலக வழக்கம்? உங்களை ஏன் திருடன் பிடித்துக் கொண்டு போனான்? அவ்வளவு கோழையா நீங்கள்?’ என்று அது ஒரு புரட்சிகரமான, புதுமையான சினிமாக் கதையில் வரும் சம்பவம் என்பது தெரியாமல் கேட்க, ‘யார் சொன்னது? வேறு எந்தப் போலீஸ்காரனாவாவது இருந்திருந்தால் அந்தத் திருடன் அவனைக் கொன்றே போட்டிருப்பானே!’ என்று அவன் அப்போதும் குட்டை உடைக்காமல் ஒரு பக்கத்து மீசையை 'முறுக்கு, முறுக்கு' என்று முறுக்க, ‘அட, என் வீர ராசா!' என்று அவள் இன்னொரு பக்கத்து மீசையை 'முறுக்கு, முறுக்கு' என்று முறுக்கி அழகு பார்ப்பாளாயினள்.

இங்ஙனம் ரதியும் மதனும்போல, ராசாவும் ராணியும் போல, அது போல, இது போலப் பொன்னியும் பொன்னுச்சாமியும் வாழ்ந்து வந்தகாலையில், ஒரு நாள் பொன்னியின் தகப்பனாருக்கும் பக்கத்து வீட்டுக்காரருக்கும் சண்டை வர, அந்தச் சண்டையில் பக்கத்து வீட்டுக்காரர் பொன்னியின் தகப்பனாரை ஓர் அறை அறைந்துவிட, அவரைத் திருப்பி அறைய முடியாத பொன்னியின் தகப்பனார், ‘என்னை யார் என்று நினைத்துக் கொண்டாய்? போலீஸ்காரரின் மாமனாராக்கும்! அவரிடம் சொல்லி உன்னை நான் என்ன செய்கிறேன், பார்!’ என்று சூள் கொட்டிவிட்டு வந்து மருமகப் பிள்ளையிடம் நடந்ததைச் சொல்ல, 'இதற்குப் போய் அவரைப் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்ல வேண்டுமா, என்ன? என்னுடன் வந்து ஆளைக் காட்டுங்கள்; நானே அவரைப் பதிலுக்குப் பதில் அறைந்துவிடுகிறேன்!' என்று மருமகப்பிள்ளையாகப்பட்ட கீலீஸ்காரர் மீசையை முறுக்கி விட்டுக்கொண்டே கிளம்ப, 'அது போதாது அவனுக்கு! அன்றொரு நாள் 'நான் நினைத்தால் உம்மைக் கூடச் சந்தேகத்தின் பேரில் கைது செய்துகொண்டு போய் லாக்-அப்பில் அடைத்துவிடுவேன், ஜாக்கிரதை!’ என்று என்னை மிரட்டினீர்களே, அந்த மாதிரி அவனைக் கொண்டு போய் ஒரே ஒரு நாளாவது லாக்-அப்பில் அடைக்க வேண்டும்; அதை இந்தக் கண்கள் பார்த்துக் களிக்க வேண்டும்!' என்று மாமனாராகப்பட்டவர் தம் கண்களைக் காட்டிச் சொல்ல, ‘இதென்ன தொல்லை! இந்தச் சோதனையிலிருந்து எப்படித் தப்புவது என்று தெரியவில்லையே?’ என்று மருமகப்பிள்ளை விழிக்க, 'நீங்கள் எதற்கும் யோசிக்காதீர்கள்; அதற்காக மற்றவர்களைப் போல நானும் ஏதாவது 'சம்திங்' கொடுக்க வேண்டுமென்றாலும் கொடுத்து விடுகிறேன்!' என்று மாமனார் 'டக்' கென்று மணிபர்ஸை எடுத்துத் திறக்க, 'வேண்டாம், வேண்டாம். கொஞ்சம் பொறுங்கள்; இதோ வந்துவிட்டேன்!' என்று கீலீஸ்காரர் வெளியே வந்து, 'ஏ. விக்கிரமாதித்தா, இனி நீயே கதி!’ என்று வாய் விட்டுக் கதறிக் கொண்டே மிஸ்டர் விக்கிரமாதித் தரைத் தேடி 'ஓடு, ஓடு’ என்று ஓடுவாராயினர்.

அவர் கதை கேட்டார் விக்கிரமாதித்தர்; அவர் தன் மாமனாரிடம் சொல்லிவிட்டு வந்தது போலவே 'கொஞ்சம் பொறுங்கள், இதோ வந்து விட்டேன்!’ என்று சொல்லிக் கொண்டே எழுந்து வெளியே சென்றார். அடுத்த நிமிஷம் மிஸ்டர் விக்கிரமாதித்தருடன் வந்த அசல் போலீஸ்காரர்கள் இருவர் போலி போலீஸ்காரரைக் கைது செய்ய, 'ஐயோ, இதற்குத்தானா உம்மைத் தேடி வந்தேன்?' என்று கீலீஸ்காரர் அலற, 'இன்னொரு முறை நீங்கள் ஆள் மாறாட்டம் செய்து யாரையும் ஏமாற்றக் கூடாது பாருங்கள்; அதற்குத்தான் இந்தத் தண்டனை!’ என்று விக்கிரமாதித்தர் சொல்ல, அதற்குள் ‘மருமகப்பிள்ளை அத்தனை அவசரமாக எங்கே போகிறார்?’ என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆவலுடன் அவரைத் தொடர்ந்து அங்கே வந்த அவருடைய மாமனாரும், மாமனாரைத் தொடர்ந்து வந்த அவருடைய மனைவியும், ‘ஐயோ, இது என்ன அநியாயம்? போலீஸ்காரரைப் போலீஸ்காரரே கைது செய்வதா?’ என்று பதற, 'அவர் அசல் போலீஸ்காரர் இல்லை அம்மா, சினிமா போலீஸ்காரர்!’ என்று விக்கிரமாதித்தர் விளக்க, ‘அப்படியா சமாசாரம்? இருந்தாலும் அதற்காக இனி அவரைப் பிரிந்து வாடும் தண்டனையை எனக்கு நீங்கள் அளிக்கலாமா?' என்று அதற்குள் தன்னை ஒருவாறு சமாளித்துக்கொண்டு விட்ட பொன்னி புலம்ப, ‘ஏமாற்றுபவர்கள் மட்டும் தண்டனை அடைந்தால் போதாது; ஏமாறுபவர்களும் தண்டனை அடைய வேண்டும் என்பதற்காகவே அதை நான் பொருட்படுத்தவில்லை, அம்மா!' என்று சொல்லி விக்கிரமாதித்தர் அவளைச் சமாதானம் செய்து அனுப்பியதோடு, 'கவலைப் படாதீர், பெரியவரே! உம்மை அறைந்த உம் பக்கத்து வீட்டுக்காரரும் அடுத்தாற்போல் கைது செய்யப்படுவார்!’ என்று சொல்லி அவள் அப்பாவையும் சமாதானம் செய்து அனுப்பி வைப்பாராயினர்."

ருபத்தொன்பதாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட்டான நர்மதா இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, "நாளைக்கு வாருங்கள்; முப்பதாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் முல்லை சொல்லும் கதையைக் கேளுங்கள்!' என்று சொல்ல, "கேட்கிறோம், கேட்கிறோம், கேட்காமல் எங்கே போகப் போகிறோம்?" என்று போஜனும் நீதிதேவனும் வழக்கம் போல் கொட்டாவி விட்டுக்கொண்டே கீழே இறங்கிவருவாராயினர் என்றவாறு... என்றவாறு... என்றவாறு.......
30

முப்பதாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் முல்லை சொன்ன

நட்சத்திர வீட்டு நாயின் கதை

"கேளாய், போஜனே! நாய் என்றால் எல்லா நாயும் ஒன்றாகிவிடாது. அதிலும் நட்சத்திர வீட்டு நாய் இருக்கிறதே, அதற்கென்று ஒரு தனி நடை, தனிப் பார்வை, தனிக் குணம் எல்லாம் உண்டு. அது பொதுவாக யாரைக் கண்டாலும் குரைத்துவிடுவதில்லை; ‘யாரைக் கண்டால் குரைக்க வேண்டும். யாரைக் கண்டால் குரைக்கக் கூடாது’ என்பதெல்லாம் அதற்குத் தெரியும். அது மட்டுமல்ல; அது தன் எஜமானியைத் தேடி யார் வந்தாலும் சரி-முதலில் வாலை ஆட்டும்; அதற்குப் பின் அவர்களை ஓர் உரசு உரசி நிற்கும். இவை யிரண்டும் பிடிக்காமல் யாராவது எழுந்து செல்ல முயன்றால்தான் அது குரைக்கும்!

இத்தனை அருங் குணங்களும் ஒருங்கே அமைந்திருந்த அபூர்வ நாய் ஒன்று நடிகை நவஸ்ரீயின் வீட்டில் இருந்தது. அதன் பராமரிப்புக்கென்றே நியமிக்கப்பட்டிருந்த பரமசிவன் நாயர் ஒரு நாள் அதை வழக்கம்போல் ‘மாலை உலா'வுக்கு அழைத்துச் செல்ல, அது அந்த நாயரைக் கண்டதும் வழக்கத்துக்கு விரோதமாக 'வள், வள்’ என்று குரைக்க, ‘இன்று என்ன கேடு உனக்கு?’ என்று நாயர் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டே அதன் தலையில் ஒரு போடு போட, 'அம்மா ஷூட்டிங்குக்குப் போயிருக்கிறார்கள்; இன்னொன்று வேண்டுமானலும் போடு!' என்று சமையற்காரன் 'அதற்குள்ள மதிப்புக்கூட இந்த வீட்டில் நமக்கு இல்லையே!’ என்ற ஆத்திரத்தில் அவனை மேலும் கொஞ்சம் உற்சாகப்படுத்த, ‘அம்மா வீட்டில் இல்லையா? அப்படியானால் ஒன்றென்ன இரண்டாகவே போடுகிறேன்!' என்று அவன் மேலும் இரண்டு போட்டு அதை இழுத்துக் கொண்டு வெளியே செல்வானாயினன்.

வழியிலும் நாயர் சொன்னதை அந்த நாய் கேட்கவில்லை; அவன் அதை ஒரு பக்கம் இழுத்துக்கொண்டு சென்றால் அது அவனை இன்னொரு பக்கம் இழுத்துக் கொண்டு சென்றது. மீறி அவன் அதைத் தன் வழிக்கு இழுத்தால் அது 'வள், வள்’ என்று குரைத்தது. 'இது என்ன தொல்லை! இன்று என்ன வந்துவிட்டது இந்த நாய்க்கு?' என்று அவன் விழித்துக் கொண்டு நின்ற காலை, கேட்ட நேரத்தில் ‘ஆப்பிள் ஜூஸ்' கொண்டு வந்து கொடுக்கவில்லை என்பதற்காக கோபித்துக் கொண்டு அன்றைய ஷூஅட்டிங்கைக் 'கான்சல்' செய்துவிட்டு வந்த நவஸ்ரீ, அவனையும் அவனுடன் ஒத்துழைக்க மறுத்துக் கொண்டிருந்த தன் அருமை நாயையும் பார்த்துவிட்டு, ‘என்ன நாயர், என்ன நாய்க்கு?' என்று விசாரிக்க, ‘என்னவோ தெரியவில்லை அம்மா, இன்று என்னைக் கண்டதிலிருந்து அது குரைத்துக்கொண்டே இருக்கிறது!’ என்று அவன் கையைப் பிசைய, ‘ஏன், என்ன உடம்புக்கு?’ என்று பதறிய நவஸ்ரீ, தன்னை மறந்து சட்டென்று காரை விட்டுக் கீழே இறங்கி, 'எங்கே, அந்தச் சங்கிலியை இப்படிக் கொடு, பார்ப்போம்?’ என்று அவன் கையிலிருந்த சங்கிலியைத் தானே வாங்கிப் பிடித்துக்கொண்டு, ‘என்ன டார்லிங், என்ன?' என்று அதைத் தடவிக் கொடுத்துக்கொண்டே கொஞ்ச முயல, அதற்கும் இடம் கொடாமல் அது அவளைப் பார்த்தும் 'வள், வள்’ என்று குரைக்க, அதற்குள் தங்கள் அபிமான நட்சத்திரத்தை அபிமான நாயுடன் அங்கே பார்த்துவிட்ட ரசிக மகாஜனங்கள் 'வொய்ங், வொய்ங்’ என்று விசில் அடித்தும், அவள் சினிமாவில் பாடிய பாடல்களையும் ஆடிய ஆடல்களையும் அவளுக்கு எதிர்த்தாற்போல் பாடிக் காட்டியும், ஆடிக் காட்டியும் தங்களுடைய உற்சாகத்தை வெளிப்படுத்த, 'இது வேறே தொல்லை எனக்கு! ஏ நாயர்! நீ ஓடிப்போய் டாக்டரைக் கூட்டிக் கொண்டு வா; நான் டார்லிங்கைக் காரிலேயே வீட்டிற்கு அழைத்துக் கொண்டு போய்விடுகிறேன்!' என்று தன் ஆசை நாயுடன் அவசர அவசரமாகக் காரில் ஏறிக்கொண்டு, ‘ரசிக மகா ஜனங்களே, வணக்கம்!' என்று அவள் அவர்களை நோக்கிக் 'கடனே’ என்று கை கூப்பிவிட்டுச் செல்வாளாயினள்.

டாக்டர் வந்தார்; நாயைப் பார்த்தார்; 'இன்ஜக்‌ஷன்’ போட்டார். அப்போதும் அது குரைப்பதை நிறுத்தாமற் போகவே, 'இனி இதை ஆஸ்பத்திரிக்குத்தான் கொண்டு போகவேண்டும்' என்று டாக்டர் சொல்லிவிட்டுச் செல்ல, அப்படியே அந்த நாயை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போய்க் காட்ட, அதை அவர்கள் பரிசோதித்துப் பார்த்துவிட்டு, ‘இங்கேயே இரண்டு நாட்கள் இதை விட்டுவிட்டுப் போங்கள்!’ என்று சொல்ல, 'ஆ! என் டார்லிங்கைப் பிரிந்து நான் எப்படி இரண்டு நாட்கள் உயிர் வாழ்வேன்?' என்று நவஸ்ரீ 'கிளிசரைன்' இல்லாமலேயே கண்ணீர் விடுவாளாயினள்.

பார்த்தார் நாயர்; 'இனி ஒரே வழிதான் இருக்கிறது!’ என்று நாயையும் நடிகையையும் அழைத்துக் கொண்டு மிஸ்டர் விக்கிரமாதித்தர் வீட்டுக்கு வந்தார்.

விஷயத்தை கேட்ட விக்கிரமாதித்தர் விழுந்து விழுந்து சிரிக்க, ‘என்ன சிரிக்கிறீர்கள்?’ என்று நாயர் ஒன்றும் புரியாமல் கேட்க, 'கோளாறு எதுவும் நாயிடம் இல்லை; உங்களிடம்தான் இருக்கிறது' என்று விக்கிரமாதித்தர் சொல்ல, 'என்னக் கோளாறு?' என்று நாயர் கேட்க, 'ஐயப்பன் விரதத்துக்காக நீங்கள் அணிந்திருக்கும் கறுப்புச் சட்டையும் கறுப்பு வேட்டியும் இந்த நாய்க்குப் பிடிக்கவில்லை; அதனால்தான் இது உங்களைக் கண்டதும் குரைக்கிறது!’ என்று விக்கிரமாதித்தர் விளக்க, ‘அப்படியா? நான்தான் கறுப்பாடை அணிந்திருக்கிறேன்; அம்மா கறுப்பாடை எதுவும் அணியவில்லையே? அவர்களைப் பார்த்து இந்த நாய் ஏன் குரைக்கிறது?’ என்று நாயர் கேட்க, ‘அவர்கள் கறுப்பாடை அணியாவிட்டாலும், கறுப்புக் கண்ணாடி அணிந்திருக்கிறார்கள். அதனால்தான் அவர்களைப் பார்த்தும் இந்த நாய் குரைக்கிறது!’ என்று விக்கிரமாதித்தர் சொல்ல, ‘அப்படியா?' என்று நவஸ்ரீ உடனே தான் அணிந்திருந்த கறுப்புக் கண்ணாடியைக் கழட்டிக் காரில் எறிந்துவிட்டு ‘டார்லிங்!' என்று தன் அருமை நாயை அழைக்க, அது குரைப்பதை நிறுத்தி வாலைக் 'குழை, குழை' என்று குழைத்துக்கொண்டே சென்று அவளை ஓர் உரசு உரசிக் கொண்டு நிற்க, 'ஏ, நாயர்! இனி நீ உன் விரதம் முடியும்வரை இந்தப் பக்கம் எட்டிக்கூடப் பார்க்காதே!' என்று சொல்லிப் பரமசிவன் நாயரை அனுப்பி விட்டுத் தன்னுடைய டார்லிங்கைத் தூக்கி ஆசை தீர முத்தமிட்டுக்கொண்டே காரில் ஏறி, 'நன்றி’ என்று சொல்லி மிஸ்டர் விக்கிரமாதித்தரிடம் விடை பெறுவாளாயினள்."

முப்பதாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட்டான முல்லை இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, "நாளைக்கு வாருங்கள்; முப்பத்தோராவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் நிர்மலா சொல்லும் கதையைக் கேளுங்கள்!’ என்று சொல்ல, "கேட்கிறோம், கேட்கிறோம், கேட்காமல் எங்கே போகப் போகிறோம்?" என்று போஜனும் நீதிதேவனும் வழக்கம் போல் கொட்டாவி விட்டுக்கொண்டே கீழே இறங்கி வருவது காண்க... காண்க... காண்க........
31

முப்பத்தோராவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் நிர்மலா சொன்ன

கைகுவித்த கனவான் கதை

"கேளாய், போஜனே! 'தேசூர், தேசூர்' என்று ஓர் ஊர் உண்டு. அந்த ஊரிலே 'தெய்வசிகாமணி, தெய்வசிகாமணி’ என்று ஒரு கிரகஸ்தர் உண்டு. 'தான் உண்டு, தன் குடும்பம் உண்டு' என்று வாழ்ந்து வந்த அவர் ஒரு நாள் காலை வழக்கம்போல் வெளியே செல்ல, வழியில் அவரைப் பார்த்த கனவான் ஒருவர் சிரம் தாழ்த்திக் கரங் குவித்துக் காலே அரைக்கால் சிரிப்புடன் அவரை வணங்க, ‘யார் இவர்? இதற்கு முன் எங்கே பார்த்திருக்கிறோம் இவரை? எப்படி அறிமுகமானார் இவர்?’ என்று ஒன்றும் புரியாமல் ‘பதிலுக்கு இவரை வணங்குவதா, வேண்டாமா?’ என்று ஒரு கணம் யோசித்து, மறுகணம், 'எதற்கும் வணங்கித்தான் வைப்போமே!' என்று வணங்கிவிட்டு அவர் மேலே செல்வாராயினர்.

ஆனாலும் அவர் மனம் அவரைச் சும்மா விடவில்லை; ‘யார் அந்தக் கனவான், அவரை எங்கே பார்த்தோம்?’ என்று வழி முழுவதும் அவரைச் சதா அரித்து எடுத்துக்கொண்டே இருந்தது. அது மட்டுமல்ல; அவருடைய ஞாபகசக்தியின் மீதே அவருக்கு கோபம் கோபமாக வந்தது. ‘அப்படி என்ன வயதாகிவிட்டது தனக்கு? அதற்குள் இத்தனை ஞாபக மறதியா?' என்று அவர் தன்னைத் தானே கடிந்து கொண்டார். திரும்பிப் போய், ‘யார் நீங்கள்? என்னை இதற்கு முன் எங்கே பார்த்தீர்கள்?’ என்று அந்தக் கனவானையே கேட்டுவிடலாமா, என்றுகூட அவர் நினைத்தார். 'அப்படிக் கேட்டால் அது மரியாதைக் குறைவாக அல்லவா இருக்கும்? ‘என்னய்யா, இதற்குள் என்னை மறந்துவிட்டீரே!' என்று அவர் சமீபத்தில் நிகழ்ந்த ஏதாவது ஒரு சம்பவத்தை நினைவூட்டிச் சிரித்தால் தன் முகத்தில் அசடு அல்லவா வழியும்? வேண்டாம்; இன்று முழுவதும் யோசித்துப் பார்ப்போம்!' என்று அரிக்கும் மனத்தை அழுத்திப் பிடித்துக் கொண்டே அவர் பின்னும் மேலே செல்வாராயினர்.

அன்று முழுவதும் மட்டுமல்ல; அதற்கு அடுத்த நாளும், அதற்கு அடுத்த நாளும்கூட அவர் யோசித்துப் பார்த்தார், யோசித்துப் பார்த்தார், அப்படி யோசித்துப் பார்த்தார். ‘அந்தக் கனவான் யார், அவரை எங்கே பார்த்தோம், எப்படி அறிமுகமானோம்?’ என்பது அவருடைய நினைவுக்கு வரவேயில்லை. இதற்கிடையில் அந்தக் கனவானும் அவரைக் கண்டதும் கை குவித்துக் காலே அரைக்கால் சிரிப்புச் சிரிப்பதை நிறுத்தவேயில்லை. 'இது என்ன குழப்பம்? இந்தக் குழப்பத்தைத் தெளியவைக்க இவ்வளவு பெரிய உலகத்தில் யாருமே இல்லையா?' என்று அவர் ஒரு நாள் அதிஅதிஅதி தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தகாலை அவரைப் பார்க்க வந்த நண்பர் ஒருவர், ‘என்ன அப்படி யோசிக்கிறீர்கள்?’ என்று கேட்க, அவர் விஷயத்தை சொல்ல, 'இருக்கவே இருக்கிறார் மிஸ்டர் விக்கிரமாதித்தர்; அவரைப் போய்ப் பார்த்தால் உங்கள் குழப்பத்தை ஒரு நொடியில் தெளிய வைத்துவிடுவாரே!' என்று நண்பர் சொல்ல, 'அதுதான் சரி; ஏற்கெனவே இருக்கிற குழப்பங்களோடு இந்தக் குழப்பத்தையும் சேர்த்துக் குழப்பிக் கொண்டிருக்க இனி என்னால் முடியாது!’ என்று அவர் அன்றே போய் விக்கிரமாதித்தரைப் பார்ப்பாராயினர்.

அவருடைய குழப்பத்தைக் கேட்டார் மிஸ்டர் விக்கிரமாதித்தர்; சிரித்தார். 'என்ன, சிரிக்கிறீர்கள்?’ என்றார் இவர்; ‘ஒன்றுமில்லை' என்று சொல்லிக்கொண்டே அவர் தமக்கு அருகிலிருந்த காலண்டரை ஒரு பார்வை பார்த்து விட்டு, ‘இன்னும் ஒரு வாரம் கழித்து வந்து என்னைப் பாருங்கள்!’ என்றார். இவர் விழித்தார்; 'என்ன விழிக்கிறீர்கள்?’ என்றார் அவர். 'இந்த விஷயத்தில் தெளிவு காண உங்களுக்கே ஒரு வார கால அவகாசம் தேவை யென்றால் என்னுடைய குழப்பம் பெரிய குழப்பமாய்த்தான் இருக்கும் போலிருக்கிறதே!' என்றார் இவர்: 'ஆமாம், கொஞ்சம் பெரிய குழப்பம்தான்; நீங்கள் போய் வாருங்கள்!' என்றார் அவர்.

ஒரு வாரம் ஓடி மறைந்தது; மறுபடியும் வந்து விக்கிரமாதித்தரைப் பார்த்தார் தெய்வசிகாமணி. அவரைப் பார்த்ததும், ‘இப்போது அந்தக் கனவான் உங்களைக் கண்டதும் கை குவிக்கிறாரா? காலே அரைக்கால் சிரிப்புச் சிரிக்கிறாரா?’ என்ற விக்கிரமாதித்தர் கேட்க, 'அதெல்லாம் ஒன்றுமில்லை; அவர் இப்போதெல்லாம் என்னைப் பார்த்தாலும் பார்க்காதவர்போல் போய்விடுகிறார். ஏன், எனக்காக நீங்கள் அவரைப் பார்த்து ஏதாவது சொன்னீர்களா?' என்று தெய்வசிகாமணி உசாவ, 'நல்ல ஆளய்யா, நீர்! அவரை நான்தான் எதற்காகப் போய்ப் பார்க்கவேண்டும், நீர்தான் எதற்காகப் போய்ப் பார்க்க வேண்டும்? அவர் உம்மைப் போன்றவர்களைக் கண்டால் எப்போது கரங் குவிப்பார், எப்போது கரங் குவிக்க மாட்டார் என்பது எனக்குத் தெரியாதா?’ என்பதாகத்தானே அவர் இவரைப் பார்க்க, ‘அது உங்களுக்கு மட்டும் தெரிந்தால் போதுமா? எனக்கும் தெரிய வேண்டாமா?’ என்பதாகத்தானே இவர் அவரைப் பார்க்க, ‘நம் இருவருக்கும் மட்டும் தெரிந்தால் போதாது, இந்த உலகத்துக்கே தெரியவேண்டிய விஷயம் அது. சொல்கிறேன், கேளும்: சென்ற வாரம் நடந்து முடிந்த முனிசிபல் தேர்தலில் அந்தக் கனவான் ஒரு வேட்பாளர். அவரைப் போன்ற வேட்பாளர்கள் தேர்தலுக்கு முன்னால் தெரிந்தவர்களைக் கண்டாலும் சரி, தெரியாதவர்களைக் கண்டாலும் சரி; சிரம் தாழ்த்திக் கரங் குவித்துக் காலே அரைக்கால் சிரிப்பு, அரைச் சிரிப்பு, முக்கால் சிரிப்பு, முழுச் சிரிப்பெல்லாம்கூடச் சிரிப்பார்கள். தேர்தல் முடிந்ததும் தெரியாதவர்களை என்ன, தெரிந்தவர்களைக் கண்டாலும் தெரியாதவர்கள்போல் போய்விடுவார்கள். இந்த உண்மையை நீரே தெரிந்துகொண்டு விடுவீர் என்று நினைத்துத்தான் ஒரு வாரம் கழித்து உம்மை நான் வரச் சொன்னேன். இப்போதாவது தெரிந்துகொண்டு விட்டீரா, இல்லையா?’ என்று மிஸ்டர் விக்கிரமாதித்தர் கடாவ, ‘தெரிந்துகொண்டு விட்டேன், தெரிந்துகொண்டு விட்டேன்!' என்று தன் தலையைப் பலமாக ஆட்டிக்கொண்டே தெய்வசிகாமணி அவரிடமிருந்து விடை பெற்றுக் கொள்வாராயினர்.”

முப்பத்தோராவது மாடி ரிஸப்ஷனிஸ்ட்டான நிர்மலா இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, “நாளைக்கு வாருங்கள்; முப்பத்திரண்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் நித்தியகல்யாணி சொல்லும் கதையைக் கேளுங்கள்!' என்று சொல்ல, "கேட்கிறோம், கேட்கிறோம், கேட்காமல் எங்கே போகப் போகிறோம்?" என்று போஜனும் நீதிதேவனும் வழக்கம் போல் கொட்டாவி விட்டுக்கொண்டே கீழே இறங்குவாராயினர் என்றவாறு... என்றவாறு... என்றவாறு...
32

முப்பத்திரண்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட்
நித்தியகல்யாணி சொன்ன

விக்கிரமாதித்தனைக் கண்ட
சாலிவாகனன் கதை

"கேளாய், போஜனே! நகரே 'நவராத்திரி விழா'க் கோலம் பூண்டிருந்த சமயம் அது. மிஸ்டர் விக்கிரமாதித்தர் குடும்ப சமேதராகக் கடை வீதிக்குச் சென்று, அந்த வருடம் கொலு வைப்பதற்காகப் புதிய புதிய பொம்மைகளைத் தேடித் தேடி வாங்கிக்கொண்டிருந்தார். அதுகாலை அவரைக் கண்ட அவருடைய நண்பர் ஒருவர், ‘ஹெல்லோ, மிஸ்டர் விக்கிரமாதித்தன்! ஹெள ஆர் யூ?’ என்று விசாரிக்க, 'விசாரிப்பதைத் தமிழில் விசாரிக்கக் கூடாதா, ஐயா?' என்று விக்கிரமாதித்தர் கொஞ்சம் தமிழ்ப் பற்றோடு கேட்க, 'இது கலப்பட யுகம் சுவாமி! இந்த யுகத்தில் அரசியல்வாதிகளைத் தவிர வேறு யார் எதில் அசலைத் தேடிக்கொண்டிருக்க முடியும்?’ என்று அவர் சிரித்துக்கொண்டே வந்து மிஸ்டர் விக்கிரமாதித்தரின் கையைப் பிடித்துக் 'குலுக்கு, குலுக்கு' என்று குலுக்க, இந்தக் காட்சியைக் கவனித்துக்கொண்டிருந்த பாதையோரத்துப் பொம்மைக் கடைக்காரர் ஒருவர் சட்டென்று எழுந்து தன் மேல் துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டு நின்று, ‘வாருங்கள், வாருங்கள்!' என்று விக்கிரமாதித்தரை அகமும் முகமும் ஒருங்கே மலர வரவேற்க, ‘யார் நீங்கள், ஏற்கெனவே என்னை உங்களுக்குத் தெரியுமா?’ என்று விக்கிரமாதித்தர் ஒன்றும் புரியாமல் அவரை விசாரிக்க, ‘இதற்கு முன் தெரியாது, இப்போதுதான் தெரியும். இவர் ‘ஹெல்லோ, மிஸ்டர் விக்கிரமாதித்தன்’ என்று சொன்னதும் நான் உங்களை இனம் கண்டுகொண்டுவிட்டேன்!' என்ற அவர், ‘என் பெயர் சாலிவாகனன்!' என்று சற்றே கூச்சத்துடன் தன் பெயரைக் கடைசியாகச் சொல்லி நிறுத்த, மிஸ்டர் விக்கிரமாதித்தர் திடுக்கிட்டுத் தம்முடைய கழுத்தைத் தொட்டுப் பார்த்துக்கொள்ள, சாலிவாகனன் சிரித்து, ‘என் பெயர் சாலிவாகனன் என்று சொன்னதும் உங்களுக்கு அந்தப் பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதை ஞாபகத்துக்கு வந்து விட்டதுபோல் இருக்கிறது! பயப்படாதீர்கள், நானும் அந்தச் சாலிவாகனன் அல்ல; நீங்களும் அந்த விக்கிரமாதித்தன் அல்ல. என்னால் உங்கள் கழுத்து ஏன் துண்டாகப்போகிறது?’ என்று சிரிக்க, ‘யார் கண்டது? அந்த சாலிவாகனனைப் போலவே நீங்களும், 'சூ, மந்திரக்காளி!’ என்றதும் உங்களுடைய யானைப் பொம்மை, குதிரைப் பொம்மை, போர்வீரன் பொம்மைகளெல்லாம் உயிர் பெற்று எழுந்து வந்து என்னை எதிர்க்கலாம்; அவற்றையும் எதிர்க்க முடியாமல், உங்கள் கையாலும் சாக விரும்பாமல் நான் தற்கொலை செய்துகொள்ள ஓடலாம்; அப்போதும் நீங்கள் என்னை விடாமல் துரத்தி, உங்களுடைய சக்கராயுதத்தை மந்திரித்து ஏவி என் கழுத்தை அறுக்கலாம். எதற்கும் நான் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், பாருங்கள்!' என்று விக்கிரமாதித்தர் மீண்டும் தம் கழுத்தைத் தொட்டுப் பார்த்துக்கொள்ள, 'அது சாலிவாகனன் சகாப்தம்; இது நேரு சகாப்தம். அப்போது ஊருக்கு ஒரு ராசா இருந்தான். .ஒரு ராசா இன்னொரு ராசாவை ஒழித்துக் கட்டி, அவனுடைய ராஜ்யத்தைப் பிடுங்கிக் கொள்வதிலேயே எப்போதும் கண்ணும் கருத்துமாயிருந்தான். இப்போதுதான் நாம் எல்லோருமே ராசாக்களாகிவிட்டோமே! ஒருவரை ஒருவர் ஏன் ஒழிக்க வேண்டும்? உங்களைப்போல் ‘ஒருவருக்கொருவர் உதவி வாழ்தல்’ என்ற முறையைப் பின்பற்றி வாழ்ந்தால் போதாதா?’ என்று சாலிவாகனன் சொல்ல, 'அப்படியானால் உம்மைக் கண்டு நான் பயப்பட வேண்டியதில்லை என்கிறீர்; அப்படித்தானே? சரி, அந்தப் பொம்மையை எடும், இந்தப் பொம்மையை எடும்’ என்று தமக்குப் பிடித்த பொம்மைகளை யெல்லாம் பொறுக்கி எடுத்து விக்கிரமாதித்தர் பாதாளசாமியிடம் கொடுக்க, அவன் அவற்றை வாங்கிக் கொண்டு போய்க் காரில் வைத்துவிட்டு வர, மிஸ்டர் விக்கிரமாதித்தர் ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்துச் சாலிவாகனனிடம் நீட்டுவாராயினர்.

நோட்டைப் பார்த்தார் சாலிவாகனர்; சிரித்தார். ‘ஏன் சிரிக்கிறீர்கள்?’ என்றார் விக்கிரமாதித்தர்; ‘ஒன்றுமில்லை. எத்தனையோ பேர் என் கடைக்கு வருகிறார்கள்; அவர்களெல்லாம் விலை பேசி முடிந்த பிறகே என்னிடமிருந்து எந்தப் பொம்மையையும் எடுத்துச் செல்கிறார்கள். நீங்களோ எந்த விலையும் பேசாமலே என்னிடமிருந்து எல்லாப் பொம்மைகளையும் எடுத்துச் சென்றீர்கள். அதிலிருந்து ‘நீங்கள் என்னை வியாபாரியாக மதிக்கவில்லை; கலைஞனாக மதிக்கிறீர்கள்' என்று நான் நினைத்தேன். இப்போது நோட்டை நீட்டுகிறீர்கள்; இதிலிருந்து நான் என்ன நினைப்பது? நீங்கள் என்னைக் கலைஞனாக மதிக்கிறீர்கள் என்று நினைப்பதா, வியாபாரியாக மதிக்கிறீர்கள் என்று நினைப்பதா?' என்று சாலிவாகனன் கேட்க, ‘கலைஞனாகத்தான் மதிக்கிறேன்' என்று விக்கிரமாதித்தர் சொல்ல, 'அது போதும் எனக்கு; இந்தப் பணம் வேண்டாம். ஏனெனில் மற்றவர்களுக்கு வியாபாரியாகக் காட்சி அளித்தாலும் உங்களைப் பொறுத்தவரை நான் கலைஞனாகவே காட்சி அளிக்க விரும்புகிறேன்' என்று சொல்லி அவன் அவரை வணங்கி விடை கொடுக்க, 'கலைஞனுக்கு மட்டும் வாயும் வயிறும் இல்லையா, என்ன? மற்றவர்களுக்கு எண்ணிக் கொடுத்தால் கலைஞனுக்கு எண்ணாமல் கொடுக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். அதனால் தான் எந்த விதமான விலையும் பேசாமல், எந்த விதமான கணக்கும் பார்க்காமல் என்னால் முடிந்த இச் சிறு தொகையை உங்களுக்குக் காணிக்கையாக அளிக்கிறேன். தயவு செய்து ஏற்றுக்கொள்ள வேணும்' என்று மிஸ்டர் விக்கிரமாதித்தர் அந்த நோட்டை அவருடைய கையில் திணித்துவிட்டு மேலே செல்வாராயினர்."

முப்பத்திரண்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட்டான நித்திய கல்யாணி இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, "இனிமேல் நீங்கள் போகலாம்; போய் மிஸ்டர் விக்கிரமாதித்தரைப் பார்க்கலாம்!' என்று அவர் இருந்த அறைக்கு வழி காட்ட, போஜனும் நீதிதேவனும் அப்போதும் தங்கள் கொட்டாவியை மறக்காமல் விட்டுக்கொண்டே போய் அவரைப் பார்க்க, "இரண்டு மாதங்களுக்கு முன்னால் அல்லவா நீங்கள் வந்து என்னைப் பார்ப்பதாக எழுதியிருந்தீர்கள்? இவ்வளவு தாமதமாக வந்து நிற்கிறீர்களே, என்ன காரணம்?" என்று விக்கிரமாதித்தர் கேட்க, "நாங்கள் என்னவோ இரண்டு மாதங்களுக்கு முன்னாலேயே உங்களைப் பார்க்க வரத்தான் வந்தோம்; உங்கள் ரிஸப்ஷனிஸ்ட்டுகள்தான் தினம் ஒரு கதையாகச் சொல்லி, உங்களை அப்பொழுதே பார்க்க விடாமல் எங்களைத் தடுத்து விட்டார்கள்!" என்று போஜனும் நீதிதேவனும் சொல்ல, “எங்கே, கூப்பிடு அவர்களை!" என்று விக்கிரமாதித்தர் தம் ஆபீஸ் பையனை விட்டு அவர்களை அழைத்து வரச் செய்து, "நீங்களா இவர்களுக்குத் தினம் ஒரு கதையாகச் சொல்லிக் கொண்டிருந்தீர்கள்?" என்று கேட்க, "நாங்களாவது, இவர்களுக்குக் கதை சொல்வதாவது! இவர்கள் தினந்தோறும் வருவார்கள்; எங்களைப் பார்த்ததும் அப்படியே ஒரு கணம் அசந்து போய் நிற்பார்கள். மறுகணம் இவர்களில் ஒருவர் கதை சொல்ல ஆரம்பிப்பார்; இன்னொருவர் கேட்பார். கடைசியில் இருவரும் சேர்ந்தாற்போல் கொட்டாவி விட்டுக்கொண்டே கீழே இறங்கிப் போய் விடுவார்கள்!” என்று அவர்கள் சொல்ல, "உண்மையைச் சொல்லுங்கள்; உங்களில் யார் கதை சொன்னது?” என்று விக்கிரமாதித்தர் போஜனையும் நீதிதேவனையும் கேட்க, ‘'நான்தான் சொன்னேன்!" என்று நீதிதேவன் மென்று விழுங்க, "இதற்குத்தான் உம்மை நான் அந்தப் பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதையைப் படிக்க வேண்டாம், படிக்கவேண்டாம் என்று படித்துப் படித்துச் சொன்னேன்; நீர் கேட்கவில்லை. தினம் ஒரு கதையாகப் படித்துவிட்டு இங்கே வந்தீர்; இவர்களைப் பார்த்துப் பதுமைகள் என்று நினைத்து அப்படியே மயங்கிநின்றீர். அந்த மயக்கத்தில் நீர் உம்மை மறந்து சொன்ன கதைகளை நானும் என்னை மறந்து இத்தனை நாட்களாகக் கேட்டுத் தொலைத்திருக்கிறேன்!” என்று போஜன் சொல்ல, ‘அசடுகள், அசடுகள்! பெண்கள் என்னத்தைச் சொன்னாலும் அதை அப்படியே நம்பிவிடும் அசடுகள்!’ என்று தங்களுக்குள் எண்ணிச் சிரித்துக்கொண்டே ரிஸப்ஷனிஸ்ட்டுகள் அவரவர்கள் இடத்துக்குச் செல்ல, “சரி, இப்போது நீங்கள் என் சிம்மாசனத்துக்காக வந்திருக்கிறீர்களா? இல்லை, வேறு எதற்காகவாவது வந்து இருக்கிறீர்களா?" என்று விக்கிரமாதித்தர் போஜனையும் நீதிதேவனையும் கேட்க, "இப்போதுதான் ராசாக்களே இல்லையே, சிம்மாசனம் எங்கே இருக்கும்? நாங்கள் அதற்காக வரவில்லை; கர்ப்பத் தடைக்குப் புதிய மருந்து ஒன்றை நாங்கள் தயார் செய்திருக்கிறோம். அதை உங்கள் கம்பெனியின் மூலம் விற்றுத் தர வேண்டும் என்று உங்களைக் கேட்டுக் கொள்ளவே நாங்கள் வந்திருக்கிறோம்" என்று அவர்கள் சொல்ல, "மன்னிக்க வேண்டும்; ஏற்கெனவே இந்த உலகத்தில் பிறந்த குற்றத்தைச் செய்திருக்கும் நான், இனி பிறக்கப் போகிறவர்களைத் தடுக்கும் குற்றத்தையும் செய்ய விரும்பவில்லை. நீங்கள் வேண்டுமானால் உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்கு வேண்டிய முயற்சிகளில் இறங்கி, புதிய விதை, புதிய உரம் போன்றவற்றைக் கண்டு பிடியுங்கள். அதற்கு வேண்டிய ஊக்கமும் ஆக்கமும் அளிக்க நான் எப்பொழுதும் தயார்’ என்று சொல்லி, மிஸ்டர் விக்கிரமாதித்தர் அவர்களை அனுப்பி வைப்பாராயினர்.

இத்துடன் மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள் முற்றியது

காண்க... காண்க... காண்க..... .

               வாழி வாழி,
                      மிஸ்டர் விக்கிரமாதித்தன்
                            ஏடு இஸட் வாழி!
               வாழி வாழி,
                      மிஸ்டர் விக்கிரமாதித்தனைப்
                             படித்தார் வாழி!
               வாழி, வாழி,
                       மிஸ்டர் விக்கிரமாதித்தனைப்
                             படிக்கக் கேட்டார் வாழி!
               வாழி, வாழி,
                        மிஸ்டர் விக்கிரமாதித்தனைப்
                                படிக்காதாரும் வாழி!