மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்/7. ஏழாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் எழிலரசி
ஏழாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் எழிலரசி சொன்ன
'ஜிம்கானா ஜில்' கதை"கேளாய், போஜனே! எப்போதும் கலகலப்பாயிருக்கும் பாதாளசாமி ஒரு நாள் வாடிய முகத்துடன் ‘உம்'மென்று உட்கார்ந்திருக்க, ‘ஏன் ஒரு மாதிரியாயிருக்கிறாய்? ஊரிலிருக்கும் உன் மனைவியை நினைத்துக் கொண்டு விட்டாயா, என்ன?’ என்று விக்கிரமாதித்தர் சிரித்துக்கொண்டே கேட்க, 'அதெல்லாம் ஒன்றுமில்லை; பஞ்சபாண்டவர்களுக்கு இருந்ததுபோல் எனக்கும் ஒரு சகுனி மாமா உண்டு. அவருடைய வாயாடிப் பெண்ணை நான் கலியாணம் செய்து கொள்ளவில்லை என்பதற்காக அவருக்கு என்மேல் கோபம். அவர் இப்போது சென்னைக்கு வந்திருக்கிறாராம்; என் மனைவி எழுதியிருக்கிறாள். அந்தக் குடிகெடுத்த மனுஷன் நான் அங்கே போவதற்குள் என் குடியை என்ன செய்வாரோ, என்னவோ என்று எனக்கு ஒரே கவலையாயிருக்கிறது! என்று அவன் சொல்ல, 'கவலைப் படாதே, நாளைக்கே நாம் சென்னைக்குப் போய்விடுவோம்!' என்று விக்கிரமாதித்தர் அவனுக்குச் சமாதானம் சொல்ல, அது காலை, 'நல்ல வேளை! எங்கள் நாடகத்தை இன்றே அரங்கேற்றினோமே, அதைச் சொல்லுங்கள்!’ என்று செப்பிக்கொண்டே சாட்சாத் சகுனி மாமவைப்போல் காட்சியளித்த ஒருவர் அங்கே வர, அவரைப் பார்த்த பாதாளசாமி அப்படியே அசந்து போய் நிற்க, வந்தவர் மிஸ்டர் விக்கிரமாதித்தரை வணங்கி, 'உங்களை எனக்குத் தெரியும்; என்னைத்தான் உங்களுக்குத் தெரியாது!’ என்று ஏதோ சொல்ல ஆரம்பிக்க, ‘ஏன் தெரியாது, நன்றாய்த் தெரிகிறதே! நீங்கள்தானே சாட்சாத் சகுனி மாமா?' என்று விக்கிரமாதித்தர் பின்னும் சிரித்துக் கொண்டே கேட்க, 'ஆமாம்; ஆனால் இதுவரை நான் யாருடைய குடியையும் கெடுத்தது கிடையாது!’ என்று வந்தவரும் சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு, 'இந்த அநியாயத்தைக் கேளுங்கள்; இவ்வூர் நாடக சபையொன்றின் காரியதரிசி நான். எங்களுடைய முதல் நாடகமாகப் 'பாஞ்சாலி சபத'த்தை இன்று நாங்கள் அரங்கேற்றியிருக்கிறோம். அதில் எனக்குச் சகுனி வேடம். கதைப்படி நான் துரியோதனனுக்குப் பக்கத்தில்தான் இருக்கிறேன். இருந்து என்ன செய்ய? தருமர் வேடம் தாங்கியிருக்கும் சபைத் தலைவர் எங்களோடு சூதாடித் திரெளபதியைத் தோற்க மாட்டேன் என்கிறார்; அப்படியே ஆடினாலும் அவர் எங்களை வென்று விடுகிறார். இதனால் அங்கே ஏகப்பட்ட சிக்கல்! ஒரு பக்கம் துச்சாதனன் வேடம் தரித்த துணைத் தலைவர் வெறி பிடித்தவர் போல் மீசையை உருவி விட்டுக்கொண்டு நின்று, 'தருமர் சூதாட்டத்தில் திரெளபதியைப் பந்தயமாக வைத்துத் தோற்கத்தான் வேண்டும்; அவள் துகிலை நான் உரியத்தான் வேண்டும்!' என்று துடியாய்த் துடிக்கிறார்; இன்னொரு பக்கம் கிருஷ்ணன் வேடம் தரித்த துணைக் காரியதரிசி மந்தகாசச் சிரிப்புடன் நின்று, 'உரிந்தால் உரிந்து கொள்; அவள் மானத்தை நான் காக்கப் போவதில்லை!' என்று அமுத்தலாகச் சொல்கிறார். திரெளபதி வேடம் தாங்கிய நடிகையோ, அவர்கள் மூவரையும் வேடிக்கை பார்த்தபடி முகவாய்க்கட்டையில் கை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறாள். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை; ‘இடைவேளைத் திரை'யை இழுத்து விட்டு விட்டு, இங்கே ஓடோடி வந்தேன்!' என்று தம் அவல நிலையை அழமாட்டாக் குறையாகச் சொல்லி அழ, 'அப்படியானால் நீங்கள் நிஜச் சகுனி இல்லையா?' என்று பாதாளசாமி வாயெல்லாம் பல்லாய்க் கேட்க, 'நிஜச் சகுனியாயிருந்தால் தான் அவர்கள் எல்லோருடைய குடிகளையும் நான் எப்பொழுதோ கெடுத்திருப்பேனே!' என்று 'பொய்ச்சகுனி' கையைச் பிசைய, 'சரி, வாரும் போவோம்!' என்று விக்கிரமாதித்தர் 'சகுனி'யை முன்னால் நடக்க விட்டுவிட்டு, அவருக்குப் பின்னால் தாம் நடப்பாராயினர்.
அங்கே போனதும் திரெளபதி வேடம் தரித்திருந்த நடிகையைச் சந்தித்து, ‘உங்கள் பெயர் என்ன, அம்மா?' என்று அவர் விசாரிக்க, 'ஜிம்கானா ஜில்லு’ என்று அவள் சற்றே நெளிந்து சொல்ல, 'பெயரைக் கேட்கும்போதே என் உடம்பெல்லாம் குளிருகிறதே!' என்று தம்மையறியாமல் குலுங்கிய தம் உடம்பை அவர் தாமே 'ஒரு பிடி' பிடித்து விட்டுக் கொள்ள, அவள் ஓர் 'ஐஸ் கிரீம்' சிரிப்புச் சிரித்து, ‘என் பெயர் லலிதகலாதான், ஸார்! நான் ஒரு சினிமாவிலே ‘ஜிம்கானா ஜில்லு, நான் ரெளண்டானா லல்லு!' என்று ‘காமெடி ஸாங்க்' ஒன்று 'ஸாங்கி'னேன்; அது ஒரே ‘பாப்புரல’ராப் போச்சு. அதிலிருந்து என் பெயர் 'ஜிம்கானா ஜில்' என்று ஆகிவிட்டது, ஸார்!' என்று சொல்ல, 'ஓஹோ, அப்படியா? தருமர் வேடம் தாங்கியிருக்கும் தலைவர் ஏன் அம்மா, உங்களைச் சூதாட்டத்தில் பந்தயமாக வைத்துத் தோற்கமாட்டேன் என்கிறார்?’ என்று விக்கிரமாதித்தர் பின்னும் கேட்க, 'அவருக்கு என்மேலே லவ் ஸார்!’ என்று அவள் பின்னும் கொஞ்சம் வெட்கத்துடன் சொல்லி, 'நெளி, நெளி' என்று நெளிய, 'என்னது, என்னது?' என்று விக்கிரமாதித்தர் திகைக்க, 'அதைத் தமிழிலே சொன்னா எனக்கு இன்னும் வெட்கமாயிருக்கும், ஸார்! அவருக்கு என்மேலே லவ்வு!' என்று அவள் மீண்டும் ஒருமுறை அதை இங்கிலீஷிலேயே சொல்லிவிட்டு, வாய்க்குள் சட்டென்று ஆள்காட்டி விரலை எடுத்து வைத்துக்கொண்டு அப்படியும் இப்படியுமாக 'ஆடு, ஆடு’ என்று ஆடுவாளாயினள்.
‘சரி, தருமருக்குத்தான் உங்கள் மேலே லவ்; துச்சாதனனுக்கு?'
‘அவருக்கும் என்மேலே லவ்தான், ஸார்! ஆனால் அவரை நான் லவ் பண்ணவில்லை!'
‘ஏன்?'
‘அவரைப் பார்த்தாலே எனக்குப் பயமாயிருக்கிறது, ஸார்!'
'ஓஹோ! கிருஷ்ணன்?'
‘அவர் என்னவோ பார்ப்பதற்கு நன்றாய்த்தான் இருக்கிறார். ஆனால் ஒரு பெண் எத்தனை பேரை லவ் பண்ண முடியும், ஸார்?'
'அது எனக்குத் தெரியாது, அம்மா! சாட்சாத் திரெளபதி ஐந்து பேரை லவ் பண்ணதாகச் சொல்கிறார்கள்!' என்ற விக்கிரமாதித்தர், ‘அந்தக் கஷ்டம் உனக்கு வேண்டாம்' என்று அவள் காதோடு காதாக ஏதோ சொல்லி விட்டு, 'எங்கே சகுனி?’ என்று திரும்ப, 'இதோ இருக்கிறேன்!' என்று சகுனி அவருக்கு முன்னால் வந்து நிற்பாராயினர்.
‘கொண்டு வாருங்கள், அந்த மூன்று காதலர்களை!’ என்றார் விக்கிரமாதித்தர்; 'இதோ கொண்டு வந்து விட்டேன்!' என்று அவர்கள் மூவரையும் அக்கணமே கொண்டு வந்து அங்கே நிறுத்தினார் சகுனி.
‘அந்த நாளில் எப்படியோ, இந்த நாளில் ஒரு பெண் ஒருவரைத்தான் காதலிக்க முடியும்; ஒருவரைத்தான் கலியாணமும் செய்துகொள்ள முடியும். ஆகவே, நீங்கள் ஒன்று செய்யுங்கள். முதலில் இந்த நாடகத்தை எந்தவிதமான சிக்கலும் இன்றி அரங்கேற்றி முடிக்க உதவுங்கள். அதற்குப் பின் உங்கள் மூவரின் பெயர்களையும் மூன்று சீட்டுக்களில் குறித்துக் குலுக்கிப் போட்டு, அவற்றில் ஒன்றை எடுத்துப் பார்ப்போம். அதில் யார் பெயர் வருகிறதோ, அந்தப் பெயரை உடையவருக்கு ஜிம்கானா ஜில் மாலை சூட்டட்டும். என்ன சொல்கிறீர்கள்?’ என்று அந்த மூவரையும் நோக்கி விக்கிரமாதித்தர் கேட்க, ‘அதுதான் சரி, அதுதான் சரி!' என்று அவர்கள் அதை ஆமோதிக்க, அதன்படியே நாடகம் அன்று எந்தவிதமான விக்கினமும் இல்லாமல் அரங்கேறி முடிந்தது காண்க..... காண்க...... காண்க.....
அதற்குப்பின் சொன்னது சொன்னபடி விக்கிரமாதித்தர் சீட்டு குலுக்கிப் போட்டுப் பார்க்க, அதில் தருமர் பெயர் வர, ஜிம்கானா ஜில் அவருக்கு ஜில்லென்று மாலை சூட்டி மகிழ, மற்ற இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து விழித்துக்கொண்டே அந்த இடத்தை விட்டு வெளியேறுவாராயினர்.
அவர்கள் தலை மறைந்ததும், ‘நல்ல வேளை, தருமர் பெயர் வந்ததால் இவள் பிழைத்தாள்; வேறு யாருடைய பெயராவது வந்திருந்தால் இவள் என்ன செய்திருப்பாள்?' என்று சகுனி ஒரு 'டெகாமீட்டர்' அளவுக்குப் பெருமூச்சு விட, 'அது எப்படி வரும்? மூன்று சீட்டுக்களிலும் நான் தருமரின் பெயரைத்தானே எழுதிவைத்திருந்தேன்?' என்று விக்கிரமாதித்தர் சிரித்துக்கொண்டே சொல்ல, 'அப்படியா சேதி? அதை முன்கூட்டியே இவளுக்கு ரகசியமாகச் சொல்லி வைத்துத்தான் இவளை நீங்கள் அதற்கு இணங்க வைத்தீர்களா?’ என்று சகுனி கேட்க, 'வேறு வழி? இல்லாவிட்டால் உங்கள் நாடகம் அரங்கேறி யிருக்காதே!' என்று சொல்லிவிட்டு, விக்கிரமாதித்தர் அவரிடமிருந்து விடை பெற்றுக்கொள்வாராயினர்."
ஏழாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட்டான எழிலரசி இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, "நாளைக்கு வாருங்கள்; எட்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் செளந்தரா சொல்லும் கதையைக் கேளுங்கள்!" என்று சொல்ல, "கேட்கிறோம் கேட்கிறோம், கேட்காமல் எங்கே போகப் போகிறோம்?” என்று போஜனும் நீதிதேவனும் வழக்கம்போல் கொட்டாவி விட்டுக்கொண்டே கீழே இறங்குவாராயினர் என்றவாறு... என்றவாறு... என்றவாறு.....