முத்தொள்ளாயிரம்

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
முத்தொள்ளாயிரம்
முத்தொள்ளாயிரம் என்பது தமிழ் இலக்கியத்தில் தொகை நூல் வகையைச் சேர்ந்தது. இந்நூலின் பாடல்களைப் பாடிய புலவர் யாரென்பது தெரியவில்லை. இவை சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மீது பாடப்பட்ட பாடல்கள் அடங்கிய நூல். ஒவ்வொரு மன்னரைப் பற்றியும் தொள்ளாயிரம் பாடல்கள் வீதம் இரண்டாயிரத்து எழுநூறு பாடல்கள் அடங்கிய தொகுப்பு எனக் கருதப்படுகின்றது. இந்நூல் முழுமையும் கிடைக்கவில்லை. பல்லாண்டுகளுக்கு முன்னர்ப் புறத்திரட்டு ஆசிரியர் நூற்றொன்பது பாக்களை மட்டும், தம் தொகை நூலில் திரட்டி வைத்துள்ளார். அவை கடவுள் வாழ்த்தாக ஒன்றும், சேரனைப் பற்றி இருபத்திரண்டும், சோழனைப் பற்றி இருபத்தொன்பதும், பாண்டியனைப் பற்றி ஐம்பத்தாறும் சிதைந்த நிலையில் ஒன்றுமாகக் காணப்படுகின்றன. இவை அனைத்தும் வெண்பாக்களாகும். மூவேந்தர்களின் நாடு, அரண், படைச் சிறப்பு, போர்த்திறம், வீரம், ஈகை முதலான அரிய செய்திகள் இந்நூலில் இடம்பெறுகின்றன. அருணோதயம் பதிப்பு நூலுக்கு மதிப்புரை வழங்கியுள்ள சென்னைப் புதுக்கல்லூரிப் பேராசிரியர் நா. பாண்டுரங்கன் முத்தொள்ளாயிரப் பாடல் ஒவ்வொன்றும் தகதகக்கும் தங்கநிலா என்று பாராட்டியுள்ளார். மேலும் கடைவாயில் அடக்கிக்கொண்டு சப்பிச் சுவைக்க வேண்டிய கற்கண்டு என்றும் குறிப்பிட்டுள்ளார். உலா வரும் அரசன்மீது காதல் கொண்டு தலைவி கூறும் ஒருதலைக் காமச் செய்திகளை, கைக்கிளைப் பொருண்மைச் செய்திகளைக் கொண்ட பாடல்கள் இதில் பெரும்பகுதியாக இடம்பெற்றுள்ளன.

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக


பாடல்கள்

கடவுள் வாழ்த்து[தொகு]

மன்னிய நாண்மீன் மதிகனலி என்றிவற்றை
முன்னம் படைத்த முதல்வனைப் – பின்னரும்
ஆதிரையான் ஆதிரையான் என்றென்(று) அயருமால்
ஊர்திரைநீர் வேலி உலகு – 1

மன்னிய = நிலையாக இருக்கின்ற; ஆதிரை = திருஆதிரை என்னும் நட்சத்திரம், ஆகின்ற திரை (அலை); அயரும்= கொண்டாடும்; ஆல் = அசைநிலை; ஊர் = உலாவு

என்றும் நிலைபெற்றிருக்கும் விண்மீன்கள், நிலா (மதியம்), கனலும் கதிரவன் என்று இவற்றையெல்லாம் முதன்முதலில் படைத்த முதல்வனைப் பின்னரும் ஆதிரையான் (திருவாதிரை நாளுக்கு உரிய சிவன்) என்றும், ஆதிரையான் (ஆ திரையான் ஆகி, வளரும் கடலின் அலைத்திரையில் பள்ளிகொண்டிருக்கும் திருமால்) என்றும் உலாவும் அலைகளைக்கொண்ட கடலை வேலியாக உடைய உலகில் வாழும் மக்கள் கொண்டாடுகின்றனர்.

நாண்மீன்[1] = நாள்மீன் அதாவது அசுவினி முதலான 27 நட்சத்திரங்கள்.

சேரன் 2-5[தொகு]

தாயர் அடைப்ப மகளிர் திறந்திடத்
தேயத் திரிந்த குடுமியவே – ஆய்மலர்
வண்டுலாஅங் கண்ணி வயமான்தேர்க் கோதையைக்
கண்டுலாஅம் வீதிக் கதவு – 2

[குடுமி = Corner pin of a door on which it swings, கதவு சுழலும் தண்டு; ஆய் = அழகு; உலா = திரி; கண்ணி = ஆடவர் தலைக்குச் சூடும் மாலை; வயமான் = குதிரை]
அழகிய மலர்களாற் கோத்த வண்டு மொய்த்துத் திரியும் தலைமாலையைச் சூடியவனும் குதிரை பூட்டிய தேரில் திரிபவனுமாகிய சேரனைக் கண்டு அவன் உலாவும் வீதிகளின் வீட்டுக் கதவுகளைத் தாய்மார்அடைப்ப மகளிர் மீண்டுந் திறப்ப என்று மாறிமாறி நிகழவும் தேய்ந்து உருமாறிய கொண்டிகளை (கதவு சுழலும் தண்டுகள்) உடையவாயின.
அதாவது, கோதை வண்டு மொய்க்கும் பூமாலை அணிந்துகொண்டு குதிரை பூட்டிய தேரில் உலா வந்தான். அவன் அழகைக் காண விரும்பி மகளிர் கதவைத் திறந்தனர். கண்டால் அவள் மயங்கிவிடுவாள் என்று அவர்களது தாய்மார் கதவை மூடினர். இப்படி ஒருவர் மூட, ஒருவர் திறக்க இருந்ததால் கதவு மாட்டியிருந்த கொண்டி தேய்ந்ததுதான் மிச்சம். யாருடைய எண்ணமும் நிறைவேறவில்லை.

வாமான்தேர்க் கோதையை மான்தேர்மேல் கண்டவர்
மாமையை அன்றோ இழப்பது – மாமையிற்
பன்னூறு கோடி பழுதோ,என் மேனியிற்
பொன்னூறி யன்ன பசப்பு - 3

சேரன் கோதை தாவும் போர்க்குதிரை பூட்டிய தேரில் செல்பவன். அவன் இப்போது மெதுவாகச் செல்லும் குதிரை பூட்டிய தேரில் உலா வருகிறான், அவனைக் கண்ட மகளிர் தன் மேனியிலிருந்த மாந்தளிர் போன்ற மாமை நிறத்தை இழந்துவிட்டனர். நானோ என் மேனியில் பொன்னிறம் ஊறிக்கிடப்பது போன்ற பசப்பு நிறத்தைப் பெற்றிருக்கிறேன். இது பழுதாகுமா? ஆகாது. மாமை நிறத்தைக் காட்டிலும் பொன்னிறம் பல நூறு மடங்கு எனக்கு மேன்மையானது. காரணம் அவனுக்காக ஏங்கிக் கிடைத்த பேறு ஆயிற்றே – என்கிறாள் ஒரு தலைவி.

 கடற்றானைக் கோதையைக் காண்கொடாள் வீணில்
அடைத்தாள் தனிக்கதவம் அன்னை – அடைக்குமேல்
ஆயிழையாய் என்னை அவன்மேல் எடுத்துரைப்பார்
வாயும் அடைக்குமோ தான் - 4

சேரமன்னன் கோதை கடல் போன்ற படைசூழ ஊர்வலம் வருகிறான். ஆயிழைத் தோழியே! அவனைக் கண்ணாரக் காணவொட்டாமல் தாய் கதவை அடைத்துத் தாளிட்டிருக்கிறாள். ஆயின், அவனோடு என்னைச் சேர்த்துப் பேசும் ஊரார் வாயை அவளால் அடைக்கமுடியுமா?

 
வரைபொரு நீள்மார்பின் வட்கார் வணக்கும்
நிரைபொரு வேல்,மாந்தைக் கோவே – நிரைவளையார்
தங்கோலம் வவ்வுதல் ஆமோ அவர்தாய்மார்
செங்கோலன் அல்லன் என. – 5

மன்னா! வணங்காதவரை வணங்கச் செய்து அவர்தம் மண்ணைக் கொள்ளலாம். உன் வலையில் விழுந்து கிடக்கும் பெண்ணின் அழகைக் கவரலாமா? பெண்ணின் தாய்மார் உன்னைச் செங்கோலன் அல்லன் என்று கூறுகிறார்களே! மாந்தை நகர மக்களின் கோ. மலை போல் அகன்ற மார்பினை உடையவன். நிரையாக நின்று வேலால் தாக்குபவர் மாந்தை நகர மக்கள். மகளிர் வரிசையாக வளையல் அணிந்தவர். கையின் வளையல் கோலத்தை வௌவலாமா?

சேரன் 6-10[தொகு]

 
புன்னாகச் சோலை புனல்தெங்கு சூழ்மாந்தை
நன்னாகம் நின்றலரும் நன்னாடன் – என்னாகம்
கங்குல் ஒருநாள் கனவினுள் தைவந்தான்
என்கொல் இவரறிந்த வாறு? – 6

மாந்தை நன்னாடனாகிய சேரன் ஒருநாள் இரவுக் கனாவில் என் மார்பகத்தைத் தடவிக்கொடுத்தான். இது இவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது? கண்டபடி பேசுகிறார்களே!
புன்னாகம், நன்னாகம், தென்னை ஆகியன மலரும் ஊர் மாந்தை நகரம்.

 
கடும்பனித் திங்கள்தன் கைப்போர்வை யாக
நெடுங்கடை நின்றதுகொல் தோழி – நெடுஞ்சினவேல்
ஆய்மணிப் பைம்பூண் அலங்குதார்க் கோதையைக்
காணிய சென்றவென் நெஞ்சு. – 7

பனி பொழியும் மாதம் இது. கையைப் போர்வையாக்கிக்கொண்டு நடுங்குகிறேன். கோதை அரசன் என் நடுக்கத்தைப் போக்குவான் என்று அவனைக் காண என் நெஞ்சு சென்றது. அவன் கோட்டை வாயிலில் அது நின்றுகொண்டிருக்கிறது போலும். என்னைப் போலவே கையைப் போர்வையாக்கிக்கொண்டு நிற்கிறது போலும்.
கோதை பெருஞ்சினம் கொண்ட வேல்வீரன். பச்சைக் கல் பதித்த பூணாரமும், பூ மாலையும் அணிந்திருப்பவன்.

 
ஆய்மணிப் பைம்பூண் அலங்குதார்க் கோதையைக்
காணிய சென்று கதவடைத்தேன் – நாணிப்
பெருஞ்செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார் போல
வருஞ்செல்லும் பேருமென் நெஞ்சு. – 8

கோதை உலா வந்தான். அவனைக் காணவேண்டும் என்று சென்றேன். நாணம் வந்துவிட்டது. உடனே நானே கதவை அடைத்துவிட்டேன். வறுமையில் வாடுபவர் பெருஞ் செல்வம் படைத்தவர் இல்லத்துக்குச் செல்வார்கள். பின் திரும்புவார்கள். மீண்டும் செல்வார்கள். இப்படித்தான் என் நெஞ்சும் கோதை அரசனை காணப் போய் வந்துகொண்டிருக்கிறது.

 
வருக குடநாடன் வஞ்சிக்கோ மான்என்(று)
அருகலர் எல்லாம் அறிய – வருகலாம்
உண்டா யிருக்கஅங்(கு) ஒண்தொடியாள் மற்(று)அவனைக்
கண்டாள் ஒழிந்தாள் கலாம் – 9

கலாம் என்பது கலகலப்பு.
வருக குடநாடன்
வருக வஞ்சிக் கோமான்
என்று இவள் அருகில் இல்லாதவர்கள் எல்லாம் கலகலப்பாக இருக்கின்றனர்.
ஆனால் இவள் மட்டும் அவனைக் கண்ட பின்பு கலகலப்பு ஒழிந்து காணப்படுகிறாளே! ஏங்கிக் கிடக்கிறாளே!

 
இவன்என் நலங்கவர்ந்த கள்வன் இவன்எனது
நெஞ்சம் நிறையழித்த கள்வனென்று – அஞ்சொலாய்
செல்லு நெறியெலாஞ் சேரலர்கோக் கோதைக்குச்
சொல்லும் பழியோ பெரிது. – 10

இவன் என் அழகைக் கவர்ந்துகொண்ட கள்வன்,
இவன் என் நிறை நெஞ்சைக் குறை நெஞ்சு ஆக்கிய கள்வன்
என்று சேரலர் கோக்கோதை செல்லுமிடமெல்லாம் அவனைப் பழி தூற்றுகிறார்களே!
“நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை” – கலித்தொகை 133 காதலை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அடக்கி வைத்திருந்தேன். என் காதலைப் பிறர் அறியும்படிக் காட்டச் செய்த கள்வன் இவன் – என்கிறாள்

சேரன் 11-15[தொகு]

காராட் டுதிரந்தூஉ யன்னை களனிழைத்து

நீராட்டி நீங்கென்றால் நீங்குமோ? - போராட்டு

வென்று களங்கொண்ட வெஞ்சினவேற் கோதைக்கென்

னெஞ்சங் களங்கொண்ட நோய். 11

இது தலைவி கூற்று.

மிக்க சினத்தையும் வேலையும் கொண்டு போராடிப் பகைவரை வென்று. அவர்தம் களத்தைக் கைப்பற்றிய சேரன்பால் என் நெஞ்சே இடமாய்க்கொண்டு எழுந்த வேட்கைநோய், என் அன்னை வீட்டின்பால் ஓரிடத்தில் தெய்வத்தை எழுந்தருளச் செய்து (தெய்வத்தை ஆவாஹனம் செய்தல்) வெள்ளாட்டைப் பலியிட்டு அதன் குருதியைத் தெளித்து நீராட்டி நீங்கு. ” என்று கூறினால் நீங்கிவிடுமோ?

‘நோய் நீங்குமோ’ என இயைக்க. காராடு - வெள்ளாடு; உதிரம் - குருதி, இரத்தம்; கோதை - சேரன்.

மல்லல்நீர் மாந்தையார் மாக்கடுங்கோக் காயினும்

சொல்லவே வேண்டும் நமகுறை - நல்ல

திலகங் கிடந்த திருநுதலாய்! அஃதால்

உலகங் கிடந்த இயல்பு. 12

இது தலைவி தோழிக்குக் கூறியது.

சிறந்த திலகம் அணிந்த அழகிய நெற்றியையுடைய தோழியே! நீர்வளம் மிக்க மாந்தை நகரத்தாரின் பெருமை மிக்க மன்னவனாகவே இருப்பினும் அச்சேர மன்னனிடம் அஞ்சாதே சென்று என் மனக்குறையை நீ அவனிடம் சொல்லத்தான் வேண்டும். அஃதல்லவா உலகில் உயர்ந்தோரிடம் அமைந்திருக்கும் நற்பண்பாகும்?

“ உடுக்கை யிழந்தவன் கைபோல ஆங்கே, இடுக்கண் களைவதாம் நட்பு” என்பதைத் தன் தோழிக்கு நினைவூட்டி, சேரனிடம் சென்று தன் குறையைக் கூறுமாறு தலைவி வேண்டுகிறாள். மல்லல் - வளப்பம்; மாந்தை - சேரனது நகரங்களில் ஒன்று; கடுங்கோ - சேரனது பெயர்களுள் ஒன்று, “செல்வக் கடுங்கோ வாழியாதன்” என வருதல் காண்க. நமகுறை - நம்+அ+குறை; ‘அ’ - ஆறாம் வேற்றுமை பன்மை உருபு; திலகம் - நெற்றியிலிடும் பொட்டு; திரு - அழகு; நுதல் - நெற்றி; உலகம் - உயர்ந்தோர், “உலகெனப் படுவது உயர்ந்தோர் மேற்றே” என்பது தொல்காப்பியம்.நீரும் நிழலும்போல் நீண்ட அருளுடைய

ஊரிரே என்னை உயக்கொண்மின் - போரிற்

புகலுங் களியானைப் பூழியர்கோக் கோதைக்

கழலுமென் னெஞ்சங் கிடந்து. 13

இதுவும் தலைவி கூற்று.

போரை விரும்பும் கள்ளுண்டு களித்த யானைப்படைகளை யுடையவனும் பூழி நாட்டின் தலைவனாய் விளங்குகின்றவனும் ஆன சேரனிடம் யான் கொண்ட வேட்கை நோயால் என் நெஞ்சம் செயலறியாது துன்புற்று வேகின்றது; நீரும் நிழலும் தம்மையடைந்தார்க்கு எல்லாம் , வெப்பத்தைப் போக்கிக் குளிர்ச்சி தருவதுபோலப் பிறர் துன்பம் நீக்கும் மிகுந்த அருளுடைய ஊர்மக்களே! என் துயர் நீக்கி என்னை உயிர்வாழச் செய்யுங்கள். (இவ்வாறு தலைவி வேண்டுகிறாள்)

புகலும் - விரும்பும், “ போரெனிற் புகலும் புனைகழல் மறவர்” எனச் சங்க இலக்கியத்துள்ளும் வந்துள்ளமை காண்க. பண்டைக்காலத்தில் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரை மாநகரும் அதன் சுற்றுப்புறங்களும் ‘செந்தமிழ்நாடு’ என்றும் தமிழ் வழங்கிய பிற நிலப்பகுதிகள் ‘கொடுந்தமிழ்நாடுகள்’ என்றும் வழங்கப்பட்டன. அவை தென்பாண்டி நாடு, குடநாடு, குட்டநாடு, கற்காநாடு, வேணாடு, பூழிநாடு, பன்றிநாடு, அருவாநாடு, அருவாவடதலை நாடு, சீதநாடு, மலையமான் நாடு, புனல்நாடு என்பனவாம். அவற்றுள் பூழிநாடு என்பது பாண்டியநாட்டிற்கும் சேரநாட்டிற்கும் இடைக்கண் அமைந்து ஒரு காலத்தில் பாண்டியர் ஆட்சியிலும் ஒரு காலத்தில் சேர மன்னர் ஆட்சியிலுமாக மாறி மாறி இருந்திருத்தல் வேண்டும். அதனால் இருவருமே “பூழியர்கோ” எனப் பாடப்பட்டுள்ளனர். “பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன்” என்பதில் பாண்டியனைக் குறித்தல் காண்க. கோதை - சேரன்; அழலும் - வேகும்.


அள்ளற் பழனத் தரக்காம்பல்வாயவிழ

வெள்ளந்தீப் பட்டதென வெரீஇ - புள்ளினந்தங்

கைச்சிறகாற் பார்ப்பொடுக்குங் கவ்வை யுடைத்தரோ

நச்சிலைவேற் கோக்கோதை நாடு. 14

இது சேர நாட்டின் இயற்கைவளம் கூறுவது.

நுனிக்கண் நஞ்சு தடவப்பெற்ற வேலையுடைய சேரமன்னன் நாடு, சேறு நிறைந்த வயல்களில் அரக்கு நிறத்தில் மலர்ந்து கிடக்கும் ஆம்பல் மலர்களைக் கண்ட பறவைக் கூட்டங்கள், நீரில் தீப்பற்றிக் கொண்டது என்றஞ்சித் தம் கைகளைப்போல் விளங்கும் சிறகுகளால் தம்முடைய இளங்குஞ்சுகளை அணைத்துப் பாதுகாக்க முயலும் பேரொலியையுடையதாக விளங்குகிறது.

அள்ளல் - சேறு; பழனம் - வயல்; அரக்கு - செந்நிறம்; வெள்ளம் - தண்ணீர்; வெரீஇ - வெருவி, அஞ்சி; சொல்லிசையளபெடை ; புள் - பறவை; கைச்சிறகு - சிறிய சிறகு எனலுமாம்; பார்ப்பு - இளங்குஞ்சு; கவ்வை - ஆரவாரமான ஒலி. அரோ- அசை;


களிகள் களிகட்கு நீட்டத்தங் கையால்

களிகள் விதிர்த்திட்ட வெங்கள் - துளிகலந்

தோங்கெழில் யானை மிதிப்பச் சேறாகுமே

பூம்பொழில் வஞ்சி யகம். 15

இது சேர நாட்டின் தலைநகர் வஞ்சியின் வளம் கூறுவது.

பூஞ்சோலைகள் நிறைந்த வஞ்சிநகரத் தெருக்கள், அத்தெருக்களில் கள்ளுண்டு களிப்பவர்கள் தம்மைப் போன்ற கட்குடியர்களுக்குத் தாம் உண்ணும் கள்ளை நீட்ட, அதனை ஏற்றுக்கொள்ளும் குடியர்கள் தம் கைகளால் தொட்டுச் சிதறிய கொடுங்கள்ளின் துளிகள் நிறைந்து, அவ்வழியாகச் செல்லும் மலைபோன்ற அழகிய யானைகள் மிதித்தலால் சேறாகிக் கிடக்கின்றன.

களிகள் - கட்குடியர்கள்; விதிர்த்தல் - விரல்களை உதறுவதால் நீர்த்துளிகள் நிலத்தின்கண் சிதறச் செய்தல்;  வெங்கள் - கொடிய கள்; ஓங்கெழில் யானை - மலைபோல் உயர்ந்த அழகிய யானை, ஓங்கல் - மலை; “ஓங்கலிடைத் தோன்றி உயர்ந்தோர் தொழவிளங்கி” என வருதல் காண்க.

சேரன் 16-20[தொகு]

வானிற்கு வையகம் போன்றது வானத்து

மீனிற் கனையார் மறமன்னர் - வானத்து

மீன்சேர் மதியனையான் விண்ணுயர் கொல்லியர்

கோன்சேரன் கோதையென் பான். 16

இது சேரனின் சிறப்புக் கூறுவது.

இந்நிலவுலகம் வானத்தைப் போன்றது; இவ்வுலகையாளும் மன்னர்கள் வானத்தில் விளங்கும் விண்மீன்களைப் போன்றவர்கள்; விண்ணளவு உயர்ந்த கொல்லிமலையின் தலைவனான சேரமன்னன் விண்மீன்களுக்கிடையே வீறுடன் உலாவரும் வெண்ணிலாவைப் போன்றவன்.

வையகம் வானைப் போன்றது எனக் கூட்டுக. ‘வானிற்கு’ என்பது உருபுமயக்கம்; மீன் - விண்மீன்; கோன் - தலைவன்; சேரன்கோதை - இருபெயரொட்டுப் பண்புத்தொகை.

பல்யானை மன்னர் படுதிறை தந்துய்ம்மின்

மல்லல் நெடுமதில் வாங்குவில் பூட்டுமின்

வள்ளிதழ் வாடாத வானோரும் வானவன்

வில்லெழுதி வாழ்வார் விசும்பு. 17

இது சேரனின் வீரச்சிறப்பைக் கூறுவது. சேர மன்னவனின் தூதரின் கூற்று.

பல யானைகளையுடைய மன்னர்களாக இருப்பினும் உங்கள் நாட்டு வருவாயில் சேரனுக்குரிய பங்கினை உடனே கொடுத்து உங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். உங்கள் நகரின் வளம்மிக்க உயர்ந்த மதில்களில் சேரனது சின்னமாகிய வளைந்த வில் சின்னத்தைப் பொருத்தி வையுங்கள். வாடாத மலர்மாலைகளை அணிந்து வானில் வாழும் தேவர்களும் சேரனது வில் சின்னத்தை வானில் பொறித்து வைத்தே பாதுகாப்பாக வாழ்கின்றார்கள்.

திறை - சிற்றரசர்கள் பேரரசர்களுக்கு ஆண்டுதோறும் செலுத்தும் வருவாய்ப் பங்கு, இதனைக் கப்பம் என்பர். மல்லல் - வளம்; வானோர் - வானுலகில் வாழும் தேவர்கள்; வானவன் - சேர மன்னன்; விசும்பு - வானம்; விசும்பில் எழுதப்படும் வில் மழைக்காலத்தில் தோன்றும் வானவில். தற்குறிப்பேற்ற அணி.


அரும்பவிழ் தார்க்கோதை அரசெறிந்த ஒள்வேல்

பெரும்புலவும் செஞ்சாந்தும் நாறிச் - சுரும்பொடு

வண்டாடு பக்கமும் உண்டு குறுநரி

கொண்டாடு பக்கமும் உண்டு. 18

இதுவும் சேர மன்னனின் வீரச்சிறப்பும் வெற்றிச்சிறப்பும் கூறுவது.

அன்றலர்ந்த மலர்மாலையணிந்த சேரன் பகையரசரை வென்றுகொண்ட ஒளிபொருந்திய வேலாயுதம் ஒருபக்கம் புலால் நாற்றமும் ஒருபக்கம் குங்குமம் கலந்த சந்தனத்தின் நறுமணமும் கலந்து விளங்குகின்றது. எனவே, அவ்வேலின்கண் நறுமணத்தை நாடிச் சுரும்புகளும் வண்டுகளும் மொய்க்கின்ற பக்கமும் உண்டு; புலாலை விரும்பிச் சிறு நரிகள் கொண்டாடும் பக்கமும் உண்டு.

            சேரனது வேலின்கண் தோய்ந்துள்ள புலாலை நீக்குவதற்கும் நேரமின்றி வெற்றி கொண்டாடப்படுகின்றது; அக்கொண்டாட்டம் நடைபெறும்போதே மீண்டும் அவ்வேல் போர்முனைக்குக் கொண்டுசெல்லப்படுகிறது. இடைவிடாது சேரன் போருடற்றி வென்று வருகிறான் என அவனது வீரமிகுதி கூறப்பட்டுள்ளது.

ஒள்வேல் - ஒளிபடைத்த வேல்.

வீறுசால் மன்னர் விரிதாம வெண்குடையைப்

பாற எறிந்த பரிசயத்தால் - தேறாது

செங்கண்மாக் கோதை சினவெங் களியானை

திங்கள்மேல் நீட்டுந்தன் கை. 19

இது யானைமறம் கூறுவது.

சிவந்த கண்களையுடைய பெருமைமிக்க சேர மன்னனது, சினத்தையும் கொடிய கள்ளுண்டு களித்தலையும் உடைய யானை, ஆற்றல் பொருந்திய பகையரசர்களது விரிந்த, மாலை சூட்டிய, வெண்கொற்றக் குடைகளைப் பறித்து அவை அழிந்துபடுமாறு வீசி எறிந்த பழக்கத்தால் வெண்ணிறத்தையும் வட்ட வடிவத்தையும் கொண்டு வானில் வலம்வரும் முழுநிலவையும் - நிலவு வேறு, குடை வேறு என்று தெளியாது - பகையரசரின்வெண்கொற்றக்குடையென்று கருதி அதனைப் பறித்து எறியும்பொருட்டு அந்நிலவை நோக்கித் தன் கையை நீட்டுகிறது.

இது தற்குறிப்பேற்ற அணி. வீறு - பெருமை, ஆற்றல், வலிமை; சால் - சான்ற - பொருந்திய; உரிச்சொல் தொடர்; தாம்ம் - மலர்மாலை; பாற - அழியுமாறு, “பழவினைகள் பாறும்வண்ணம்” (திருவாசகம்); பரிசயம் - பரிச்சயம் - பழக்கம்; களியானை - கள்ளுண்டு களித்த யானை.


அயிற்கதவம் பாய்ந்துழக்கி ஆற்றல்சால் மன்னர்

எயிற்கதவம் கோத்தெடுத்த கோட்டால் பனிக்கடலுள்

பாய்தோய்ந்த நாவாய்போல் தோன்றுமே எங்கோமான்

காய்சினதேர்க் கோதை களிறு. 20

இதுவும் யானைமறம் கூறியது.

பகைவரை வருத்தும் சினத்தையும் தேரையும் உடைய எம் தயலைவனாகிய சேரமன்னனது ஆண்யானை, வலிமையுடைய பகையரசர்களது கோட்டைமதிலின் இரும்புக்கதவுகளின்மீது பாய்ந்து நொறுக்கி அக்கதவினைத் தன் தந்தங்களால் தூக்கி உயர்த்திக் கொண்டு நிற்கும் காட்சி, குளிர்ந்த கடலின் நடுவே பாய்விரித்து நிற்கும் மரக்கலம் போலத் தோன்றுகிறது .

அயில் - இரும்பு; எயில் - கோட்டைமதில்; கோடு - தந்தம்; பனி - குளிர்ச்சி; நாவாய் - மரக்கலம்.

== சேரன் 21-32 == மரகதப்பூண் மன்னவர் தோள்வளை கீழா

வயிரக் கடகக்கை வாங்கித் - துயருழந்து

புண்ணுற் றழைக்கும் குறுநரித்தே பூழியனைக்

கண்ணுற்று வீழ்ந்தார் களம். 21

இப்பாடல் போர்க்கள இயல்பு கூறுவது.

சேரனை எதிர்த்துப் போரிட்டு மாண்டுகிடக்கும் பகைவர்களது போர்க்களம், மரகத அணிகலன்களை அணிந்த மன்னர்களின் தோள்வளைகளுக்குக் கீழாக உள்ள உறுதியான கடகம் அணிந்த கைகளைக் கடித்து அதனால் புண்பட்ட வாயோடு ஊளையிடும் சிறுநரிக் கூட்டங்களையுடையதாய் விளங்குகிறது.

வயிரம் - உறுதி; நவரத்தினங்களுள் ஒன்று எனலுமாம். கடகம் - முன்கையில் அணியும் அணி; தோள்வளை - தோளில் (புயத்தில்) அணியும் வளை; வாங்குதல் - கடித்தல்.

கரிபரந் தெங்கும் கடுமுள்ளி பம்பி

நரிபரந்து நாற்றிசையுங் கூடி - எரிபரந்த

பைங்கண்மால் யானைப் பகையடுதோள் கோதையைச்

செங்கண் சிவப்பித்தார் நாடு. 22

இது சேரனது பகைவர் நாட்டின் அவலம் கூறியது.

பசிய கண்களையுடைய பெரிய யானைப்படைகளாகிய பகையை வென்ற தோள்களையுடைய சேரனின் சிவந்த கண்களை மேலும் சிவப்பித்த பகைவரது நாடு, நான்கு திசைகளிலும் நெருப்புப் பற்றி எரிந்து, புகையடர்ந்து, பொருள்களெல்லாம் கருகி, கூரிய முட்செடிகள் அடர்ந்து, நரிகள் நெருங்கி வாழும் பாழுங்காடாக விளங்குகிறது .

முள்ளி - முட்செடி; கண்சிவப்பித்தல் - சினத்தையுண்டாக்குதல், சினத்தினால் கண் சிவத்தல் இயல்பு.

வேரறுகை பம்பிச் சுரைபடர்ந்து வேளைபூத்து

ஊரறிய லாகா கிடந்தனவே - போரின்

முகையவிழ்தார்க் கோதை முசிறியார் கோமான்

நகையிலைவேல் காய்த்தினார் நாடு. 23

இதுவும் பகைவர்நாட்டின் அவலம் கூறியவாறு.

மொட்டவிழ்ந்த மலர்மாலையணிந்தவனும் முசிறிநகர மக்களின் தலைவனும் ஆன சேரனது ஒளிபடைத்த இலைவடிவ வேலால் போரின்கண் துன்புறுத்தப்பட்ட பகைவரின் நாடு, வேரோடிய அறுகம்புல் அடர்ந்து, எங்கும் சுரைக்கொடிகள் படர்ந்து, வேளைக்கீரைகள் பூத்து, ஊர்கள் இருந்த இடங்கள் இவை என்றறிய இயலாதவாறு பாழ்பட்டுக் கிடந்தன.

அறுகை - அறுகம்புல்; பம்பி - புதிராக அடர்ந்து; வேளை - காட்டுக்கீரை; முசிறி - சேர நாட்டுத் துறைமுக நகரம்.

. சோழன் 24 - 26

திறந்திடுமின் தீயவை பிற்காண்டும் மாதர்

இறந்துபடின் பெரிதாம் ஏதம் - உறந்தையர்கோன்

தண்ணார மார்பின் தமிழ்நர் பெருமானைக்

கண்ணாரக் காணக் கதவு. 24

உறையூரின் மன்னவன் சோழன்; அவன் குளிர்ந்த மாலையணிந்த மார்பின்ன்; தமிழ்மக்களின் இறைவன்; அவன் நகர்வலம் வருகிறான். அதனைத் தங்கள் பெண்மக்கள் பார்க்க நேரின், அவன்பால் வேட்கைகொண்டு துன்புறுவர் எனக் கருதிய தாய்மார்கள் தந்தம் வீடுகளின் வாயிற்கதவுகளை அடைத்து வைக்கின்றனர். “நகர்வலத்தைக் காணவியலாத நங்கையர் ஏக்கத்தால் இறந்துவிடவும் கூடும். அவ்வாறாயின், அதனால் ஏற்படும் துன்பம் மிகப் பெரிதாம். எனவே, மங்கையர் சோழனைக் கண்ணாரக் கண்டு களிக்குமாறு கதவுகளைத் திறந்துவிடுங்கள்; அவ்வாறு காண்பதால் ஏதேனும் தீமை நேருமாயின் அதைப்பற்றிப் பின்னர் சிந்திக்கலாம்”, என்று சிலர் கூறுகின்றனர். ( சோழனது நகர்வலத்தைக் காணவியலாமையால் உயிரை இழப்பதைக் காட்டிலும் அதனைக் கண்டு மையல் கொள்வதால் ஏற்படும் தீமை பெரிதன்று, என்பது கருத்து.)

ஏதம் - துன்பம்.

குதலைப் பருவத்தே கோழிக்கோ மானை

வதுவை பெறுகென்றாள் அன்னை - அதுபோய்

விளைந்தவா இன்று! வியன்கானல் வெண்தேர்த்

துளங்குநீர் மாமருட்டி யற்று. 25

இப்பாடல் கைக்கிளை.

என் அன்னை, நான் மழலை பேசும் சிறுமியாக இருந்த காலத்தில் சோழமன்னனை மணந்துகொள்ளும் பேற்றினை நான் பெறவேண்டும் என்று வாழ்த்தினாள். நான் மணப்பருவத்தையடைந்துள்ள இன்று, அக்கூற்றெல்லாம் மாறிப்போய் அவனைக் கண்ணால் காண்டலும் ஆகாது என்று வாயிற்கதவுகளை அடைத்து வைக்கிறாள். கடுங்கோடையில் தண்ணீர்போல் தோற்றமளித்து அருகில் சென்று பார்க்கும்போது மறைந்துவிடுவதாய் நீர்வேட்கை கொண்ட விலங்குகளை மயங்கச் செய்கின்ற பேய்த்தேர் போலாயிற்றே என் ஆசை!

இப்பாடல் உவமையணி. குதலைப் பருவம் - மழலைமொழி பேசும் அறியாப் பருவம்; கோழிக்கோமான் - உறையூரின் மன்னனாகிய சோழன், ‘கோழி’ என்பது சோழர் தலைநகரமாகிய உறையூர்க்கு வழங்கிய மற்றொரு பெயர் ; வதுவை - திருமணம்; வியன் - பெரிய; கானல் - கோடைக்காலம் , பாலைநிலம் ; வெண்தேர் - பேய்த்தேர், கானல்நீர்; மா - விலங்கு, கால்நடைகள்; மருட்டுதல் - மயங்கச் செய்தல்; அற்று - போன்றது; ஏ - அசைச்சொல்.


சுடரிலைவேற் சோழன்தன் பாடல மேறிப்

படர்தந்தான் பைந்தொடியார் காணத் - தொடர்புடைய

நீர்வலை யிற்கயல் போல்பிற ழும்மேதம்

சாலேக வாயில்தொறுங் கண். 26

ஒளிபடைத்த வேலையேந்திய சோழன் தன்பாடலம் என்னும் குதிரையின் மேலேறிப் பசிய வளையலணிந்த மகளிரும் காணுமாறு நகர்வலம் வந்தான் ; தத்தம் வீடுகள்தோறும். வலை பொருத்தப்பெற்ற சாளரங்களின்பின்னிருந்து அவனைக் காணும் மகளிரின் கண்கள், நீர்வலையில் மாட்டிக்கொண்டு பிறழ்கின்ற மீன்களைப் போலத் தோன்றுகின்றன.

இதுவும் உவமை. பாடலம் - சோழனது குதிரையின் பெயர்; (பாண்டியனது குதிரை ‘கனவட்டம்’ என்றும் சேரனது குதிரை ‘கோரம்’ என்றும் வழங்கப்பெற்றன.) தொடி - வளையல்; கயல் - மீன்; சாலேகம் - சாளரம் , காலதர்; ‘பிறழுமே’ என்பது ‘பிறழும்மே’ என விரிந்துவந்தது விரித்தல் விகாரம். (அறுவகைச்செய்யுள் விகாரங்களுள் ஒன்று.) ஈற்றடி இரண்டாம் சீர் “வாயிறொறும்” எனப்புணர்த்துப் படிக்க, சீரும் தளையும் சிதையா.


சோழன் 27-35==

அன்னையுங் கோல்கொண் டலைக்கு மயலாரு

மென்னை யழியுஞ்சொல் சொல்லுவர் - நுண்ணிலைய

தெங்குண்ட தேரை படுவழிப் பட்டேன்யான்

திண்டேர் வளவன் திறத்து.. 27

என் தாயும் என்னைக் கோலால் அடித்துத் துன்புறுத்துகிறாள்; அக்கம்பக்கத்தில் வாழ்வோரும் என் மானம் அழியுமாறு பழித்துப் பேசுகின்றனர்; வலிய தேரையுடைய சோழனிடம் மையல் கொண்டதால் நான், தெங்குண்ட தேரைபோலப் பழிப்பட்டேன்.

இது தலைவி கூற்று. அலைத்தல் - துன்புறுத்தல்; “தெங்குண்டதேரை” என்பது பழமொழி; தேங்காயில் நோய் ஏற்பட தேரை காரணமன்று, எனக்கு மையல்நோய் ஏற்பட நான் காரணம் ஆகேன், ( சோழனே காரணம்) ஆனால் உலகினர் தேரையைப் பழிப்பதுபோல என்னையும் பழிக்கின்றனர் எனத் தலைவி வருந்திக் கூறுகிறாள். தெங்கு - தேங்காய் .அலங்குதார்ச் செம்பியன் ஆடெழில்தோள் நோக்கி

விலங்கியான் வேண்டா வெனினும் - நலந்தொலைந்து

பீர்மேற் கொளலுற்ற பேதையர்க் கென்வாய்ச்சொல்

நீர்மே லெழுந்த நெருப்பு. 28

இப்பாடல் செவிலித்தாய் கூற்று.

தோளில் ஆடும் மாலையணிந்து செம்பியன் நகர்வலம் வந்தான்; அவனைச் சென்று காணவேண்டாம் என்று இளமங்கையரைச் செவிலித்தாய் தடுத்தாள்; அதனை மீறிச் சென்று, செம்பியனது வெற்றியும் அழகும் பொருந்திய தோள்களை நோக்கிய மகளிர் தம் நாணும் நிறையும் முதலிய நலங்களையும் தொலைத்து மேனியில் பசலை நோயையும் பெற்றுத் துன்புற்றனர். இப்பேதைப் பெண்களுக்கு என் வாய்ச்சொற்கள் நீர்மேல் பற்றிய நெருப்புப் போலப் பயன்படாது வீணாயிற்றே என்று செவிலித்தாய் வருந்திக் கூறுகிறாள்.

தார் - மலர்மாலை; செம்பியன் - சோழன்; ஆடு - வெற்றி; எழில் - அழகு; விலங்கி - வேறுபட்டு; பீர் - பசலை, மையல்நோயால் மகளிர் மேனியில் தோன்றும் நிறமாற்றம்; ‘ நீர்மேல் எழுந்த நெருப்பு ‘ என்பது பழமொழி. உவமையணி.


நாணொருபால் வாங்க நலனொருபா லுள்நெகிழ்ப்பக்

காமருதோள் கிள்ளிக்கென் கண்கவற்ற - யாமத்

திருதலைக் கொள்ளியி னுள்ளெறும்பு போல

திரிதரும் பேருமென் நெஞ்சு. 29

இது தலைவி கூற்று.

கண்டார்க்கு விருப்பம் உண்டாக்கும் தோளையுடைய சோழனைக் காணவேண்டும்என என்கண்கள் கவலை கொள்ள, மகளிர்க்கேயுரிய நாணம் அவனைக் காணவிடாமல் என்னைத் தடுக்க, பெண்மைநலம் என்னுள்ளத்தை நெகிழச்செய்ய, இருதலைக் கொள்ளியின் இடையே சிக்கிக்கொண்டு தவிக்கும் சிற்றெறும்புபோல இந்த இரவுப்பொழுதில் என்னெஞ்சம் அவனைக் காணச் செல்வதும் காணாமல் திரும்புவதுமாகத் துன்புறுகிறது.

‘இருதலைக் கொள்ளி எறும்பு’ என்பது பழமொழி. கிள்ளியைக் காணவேண்டும் எனும் ஆசையாகிய எறும்பு, நாணம் ஒருபக்கமும் பெண்மைநலம் ஒருபக்கமும் தீப்பிழம்பாக நின்று தடுப்பதால் அவற்றினிடையே சிக்கிக்கொண்டு தவிக்கிறது; உவமையணி . கிள்ளி - சோழன்.


ஊட லெனவொன்று தோன்றி அவருறூஉங்

கூட லிழந்தேன் கொடியன்னாய்! - நீடெங்கின்

பாளையிற் றேன்தொடுக்கும் பாய்புனல் நீர்நாட்டுக்

காளையைக் கண்படையுட் பெற்று. 30

இதுவும் தலைவி கூற்று.

பூங்கொடிபோன்ற என் தோழியே! உயரமான தென்னையின் பாளைகளில் தேனடைகள் உருவாகும் நீர்வளமிக்க சோழநாட்டின் தலைவனை நான் கனவின்கண் காணப்பெற்றேன்; அப்போது தோன்றிய ஊடலால் அவன்தோளையணைத்து மகிழும் கூடலையிழந்து விட்டேனே!

கண்படை - கனவு; காளை - சோழன், உவமையாகுபெயர்; கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல்போனதுபோலக் கனவில்கண்ட காளையை அக்கனவில்கூடக் கூட இயலாமல் உடல் பிரித்துவிட்டதே என்று தலைவி வருந்திக் கூறியுள்ளாள்.புலவி புறக்கொடுப்பன் புல்லிடின் நாண்நிற்பன்

கலவி களிமயங்கிக் காணேன் - நிலவியசீர்

மண்ணாளுஞ் செங்கோல் வளவனை யானிதன்றோ

கண்ணாரக் கண்டறியா வாறு. 31

இதுவும் தலைவி கூற்று.

சோழநாட்டைச் சிறப்போடு செங்கோலாட்சி செய்யும் சோழனை, நான் இன்றுவரை ஒருபொழுதும் கண்ணாரக் கண்டதில்லை ; ஏனெனில் , அவனோடு புலவி கொள்ளும்போது அவனுக்கு என்முதுகைக் காட்டித் திரும்பி நிற்பேன்; அவன் என் புலவியை நீக்க என்னைத் தழுவும்போது நாணத்தால் கண்களை மூடிக்கொள்வேன்; அவன் என்னோடு கலந்து உறவு கொள்ளும்போதோ மகிழ்ச்சியில் மயங்கிக் கிடப்பேன்.

புலவி - ஊடல்; புறம் - முதுகு; புல்லுதல் - கட்டியணைத்தல்; கலவி - கூடுதல் ; களி - மகிழ்ச்சி வளவன் - சோழன்.


கனவினுள் காண்கொடாக் கண்ணுங் கலந்த

நனவினுள் விலக்கு நாணும் - இனவங்கம்

பொங்கோதம் போழும் புகார்ப் பெருமானார்

செங்கோல் வடுப்படுப்பச் சென்று. 32

இதுவும் தலைவி கூற்று.

பொங்கிவரும் கடல்நீரைக் கிழித்துக்கொண்டு பலவகையான கப்பல்கள் வந்துசெல்லும் துறைமுகம் புகார் நகரம்; அதன் தலைவனாய்ச் செங்கோலாட்சி செய்பவன் சோழன்; அவனைக் கனவிலும் காணவிடாமல் உறங்காதிருக்கும் என் கண்களும் அவனோடு கலந்திருக்கும் நினைவுப்பொழுதில் முழுமையாய்க் கலந்திருக்கும் வாய்ப்பைக் கெடுக்கும் என் நாணமும் சென்று அவன் செங்கோலாட்சிக்குக் கறை (களங்கம்) ஏற்படுத்துகின்றன.

வங்கம் -மரக்கலம் / கப்பல் ; ஓதம் - வெள்ளம் /கடல்அலை; போழும் - பிளந்துகொண்டு செல்லும்; புகார் - காவிரிப்பூம்பட்டினம், சோழர் துறைமுகம் ; வடுகர் - குற்றம், களங்கம்.

சோழன் 36-40[தொகு]

36[தொகு]

கண்டன உண்கண் கலந்தன நல்நெஞ்சம்
தண்டப் படுவ தடமென்தோள் – கண்டாய்
உலாஅ மறுகில் உறையூர் வளவற்
கெலாஅ முறைகிடந்த வாறு. – 36

கண்டன உண்கண் கலந்தன நல்நெஞ்சம் தண்டப் படுவ தடமென்தோள் கண்டாய் உலாஅ மறுகில் உறையூர் வளவற்கு எலாஅம் முறை கிடந்தவாறு.
உறையூர் அரசன் வளவன். அவனைப் பார்த்தது என் மையுண்ட கண். அவனோடு கலந்தது என் நெஞ்சம். தண்டனை பெற்றதோ என் தோள் (தோள் வாடி என் வளையல்கள் கழன்றோடுகின்றன) வளவன் முறை செய்து நீதி வழங்குவது இப்படித்தான் முறைமாறிக் கிடக்கிறது.

37[தொகு]

என்னெஞ்சு நாணு நலனும் இவையெல்லாம்
மன்னன் புனனாடன் வௌவினான் – என்னே
அரவகல் அல்குலாய் ஆறில் ஒன் றன்றோ
புரவலர் கொள்ளும் பொருள். – 37

என் நெஞ்சு நாணும் நலனும் இவையெல்லாம் மன்னன் புனல் நாடன் வௌவினான் \ என்னே அரவு அகல் அல்குலாய் ஆறில் ஒன்று அன்றோ புரவலர் கொள்ளும் பொருள்.
என்னுடைய எண்ணம், நாணம், நலம் ஆகிய இவை எல்லாவற்றையும் காவிரி பாயும் புனல் நாட்டை ஆளும் சோழன் பிடுங்கிக்கொண்டான். பாம்புப்படம் போல விரிந்திருக்கும் அல்குல் கொண்ட என் தோழியே! வருவாயில் ஆறில் ஒரு பங்கைத்தானே காப்பாற்றும் மன்னவன் வரியாக வாங்கிக்கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் பிடுங்கிக்கொள்ளலாமா?

38[தொகு]

தெண்ணீர் நறுமலர்த்தார்ச் சென்னி யிளவளவன்
மண்ணகங் காவலனே யென்பரால் - மண்ணகங்
காவலனே யானக்காற் காவானோ மாலைவாய்க்
கோவலர்வாய் வைத்த குழல். – 38

தெள் நீர் நறு மலர்த் தார்ச் சென்னி இள வளவன் மண்ணகம் காவலனே என்பரால் \ மண்ணகம் காவலனே ஆனக்கால் காவானோ மாலைவாய்க் கோவலர் வாய் வைத்த குழல்.
சென்னி இளவளவன் கழுத்திலே மாலை அணிந்தவன். அது தெளிந்த நீரிலே பூக்கும் மணம் மிக்க பூவாலானது. இந்த வளவனை மண்ணுலகைக் காக்கும் காவலன் என்கின்றனர். உண்மையில் அவன் மண்ணுலகைக் காக்கும் காவலன் ஆனால், மாலைக்காலத்தில் ஆனிரைகளுடன் இல்லம் திரும்பும் கோவலர் ஊதும் குழல் என் தனிமையைத் துன்புறுத்துகிறதே அதைத் தடுத்திருக்க வேண்டாமா?

39[தொகு]

அறைபறை யானை அலங்குதார்க் கிள்ளி
முறைசெயும் என்பரால் தோழி – இறையிறந்த
அங்கோல் அணிவளையே சொல்லாதோ மற்றவன்
செங்கோன்மை செந்நின்ற வாறு. – 39

அறை பறை யானை அலங்கு தார்க் கிள்ளி முறைசெயும் என்பரால் தோழி \ இறை இறந்த அம் கோல் அணி வளையே சொல்லாதோ மற்று அவன் செங்கோன்மை செம்மை நின்றவாறு.
கழுத்தில் மாலை அணிந்துகொண்டு கிள்ளி பறை முழக்கத்துடன் யானைமேல் வருகிறான். அவனைப் பார்த்ததும் என் தோளிலிருந்த வளையல்கள் நழுவிக் கீழே இறங்குகின்றன. தோழி! கிள்ளி நீதி தவறாமல் முறை செய்பவன் என்கின்றர். என் தோளிலிருந்து நழுவும் வளையல் அவன் எத்த அளவில் செங்கோல் செலுத்துகிறான் என்பதைச் சொல்கிறதே!

40[தொகு]

நீள்நீலத் தார்வளவன் நின்மேலான் ஆகவும்
நாணிமை யின்றி நடத்தியால் – நீள்நிலம்
கண்தன்மை கொண்டலரும் காவிரி நீர்நாட்டுப்
பெண்தன்மை இல்லை பிடி. – 40

நீள் நீலத் தார் வளவன் நின்மேலான் ஆகவும் நாணிமை இன்றி நடத்தியால் நீள் நிலம் கண் தன்மை கொண்டு அலரும் காவிரி நீர்நாட்டுப் பெண்தன்மை இல்லை பிடி.
அடி! பெண்யானையே! வளவன் ஒரு ஆண். அவன் உன்மேல் இருக்கிறான். அவனைச் சுமந்துகொண்டு, வெட்கம் இல்லாமல் வருகிறாயே! காவிரி நாட்டுப் பெண்-தண்மை உனக்கு இல்லை. நீல மலரால் தொடுக்கப்பட்ட நீண்ட மாலையை வளவன் அணிந்துகொண்டு வருகிறான். கண்ணோட்டம் கொண்டு உலகைக் காத்து மலரும் நாடு காவிரியாறு பாயும் நாடு.

சோழன் 41-45[தொகு]

41[தொகு]

செங்கால் மடநாராய் தென்னுறந்தை சேறியேல்
நின்கால்மேல் வைப்பன்என் கையிரண்டும் – நன்பால்
கரைஉரிஞ்சி மீன்பிறழும் காவிரிநீர் நாடற்
குரையாயோ யானுற்ற நோய். – 41

[மடம் = சேறி = செல்லுதி, செல்கிறாய், செல்வாய்; சேறியேல் = செல்வாயேல், செல்வாயானால்; வைப்பந் = வைப்பேன், வைக்கிறேன்; பால் = இடம்; உரிஞ்சு = தேய்]

பொருள்கோள்: செங்கால் மடநாராய் தென் உறந்தை சேறியேல், நின் கால்மேல் வைப்பன் என் கை இரண்டும் நன்பால் கரை உரிஞ்சி மீன் பிறழும் காவிரிநீர் நாடற்கு யான் உற்ற நோய் உரையாயோ?
சிவந்த கால்களையும், கள்ளம் கபடமற்ற தன்மையையும் உடைய நாரையே! நீ பறந்து செல்லும்போது தென்பால் உள்ள உறையூருக்குச் செல்வாயேயானால், உன் கால்மேல் என் கைகள் இரண்டையும் வைக்கிறேன். நல்ல இடங்களையுடைய ஆற்றங்கரைகளையே தேய்த்து மீன்கள் துள்ளும் காவிரிநீர் கொண்ட சோழனாகிய காவிரி நாடனுக்கு, அவன்மேற்கொண்ட காதலால் நானுற்ற துயரைச் சொல்லமாட்டாயா?.

42[தொகு]

வரக்கண்டு நாணாதே வல்லையா னெஞ்சே
மரக்கண்ணோ மண்ஆள்வார் கண்ணென் – றிரக்கண்டாய்
வாள்உழுவை வெல்கொடியான் வண்புனல்நீர் நாடற்கென்
தோள்அழுவம் தோன்றத் தொழுது. – 42

வரக்கண்டு நாணாதே வல்லையால் நெஞ்சே மரக்கண்ணோ மண்ஆள்வார் கண் என்று இரக்கண்டாய் வாள் உழுவை வெல்கொடியான் வண் புனல்நீர் நாடற்கு என் தோள் அழுவம் தோன்றத் தொழுது.
வெல்லும் புலிக்கொடியான், வளமையான ஆற்றுப்புனல் பாயும் நாடன், சோழன் உலா வரக் கண்டு, பெண்மை உணர்வோடு நாணியிருக்க உன்னால் முடியுமா? முடியாதே. அதனால், நெஞ்சே! நாணாமல் அவனைக் கண்டு இர. உன் கண் என்ன மரத்தாலான கண்ணா (இரக்கம் இல்லாத கண்ணா) என்று கேட்டு இர (கண்ணோட்டத்துடன் இரக்கம் காட்டும்படிப் பிச்சை கேள்) | வாள் உழுவை = கண்ணைக் கவரும் ஒளி மிக்க புலி.

43[தொகு]

பேயோ பெருந்தண் பனிவாடாய் பெண்பிறந்தா
ரேயோ உனக்கிங் கிறைக்குடிகள் – நீயோ
களிபடுமால் யானைக் கடுமான்தேர்க் கிள்ளி
அளியிடை அற்றம்பார்ப் பாய். – 43

பேயோ பெருந்தண் பனிவாடாய் பெண் பிறந்தாரேயோ உனக்கு இங்கு இறைக் குடிகள் நீயோ களி படு மால் யானைக் கடுமான் தேர்க் கிள்ளி அளி இடை அற்றம் பார்ப்பாய்.
பனிக் காலத்தில் பெருங் குளிருடன் வீசும் வாடைக் காற்றே! நீ என்ன பேயோ? கிள்ளி எனக்கு அளி செய்கிறான். அவன் எப்போது அரவணைப்பிலிருந்து விலகுவான் என்று பார்த்து வீசி என்னை ஆட்டிவைக்கிறாய். சோழனை இறைவனாகக் கொண்ட குடிமக்கள் மீது வீசுகிறாய். | கிள்ளி களிப்பூட்டும் யானை மீதும் வருகிறான். குதிரை பூட்டிய தேரிலும் வருகிறான்.

44[தொகு]

நாம நெடுவேல் நலங்கிள்ளி சோணாட்டுத்
தாமரையும் நீலமுந் தைவந் – தியாமத்து
வண்டொன்று வந்தது வாரல் பனிவாடாய்
பண்டன்று பட்டினங் காப்பு. – 44

நாம நெடு வேல் நலங்கிள்ளி சோணாட்டுத் தாமரையும் நீலமும் தைவந்து யாமத்து வண்டு ஒன்று வந்தது வாரல் பனி வாடாய் பண்டு அன்று பட்டினம் காப்பு.
நலங்கிள்ளி அச்சம் தரும் வேலை உடையவன். அவனது சோழநாட்டில் வண்டு ஒன்று நள்ளிரவில் தாமரையிலும், நீல மலரிலும் தேனை உண்டு தடவிக்கொடுத்துவிட்டு வருகிறது. குளிரும் வாடைக்காற்றே! நலங்கிள்ளி காவிரிப்பூம் பட்டினத்தைக் காப்பாற்றும் செயல் பண்டுபோல் எல்லாருக்கும் பாதுகாப்புத் தருவதாக இல்லை. எனவே நீ இங்கு வரவேண்டாம். | வாடைக்காற்று வீசாமல் இருக்கவேண்டும் என்று நயமாக வேண்டுகிறாள்.

45[தொகு]

தானைகொண் டோடுவ தாயதன் செங்கோன்மை
சேனை யறியக் கிளவேனோ – யானை
பிடிவீசும் வண்தடக்கைப் பெய்தண்தார்க் கிள்ளி
நெடுவீதி நேர்பட்ட போது. – 45

தானை கொண்டு ஓடுவதாய தன் செங்கோன்மை சேனை அறியக் கிளவேனோ யானை பிடி வீசும் வண் தடக்கைப் பெய் தண்தார்க் கிள்ளி நெடு வீதி நேர்பட்ட போது.
ஆண் பெண் யானைகளை வளமாகத் தரும் கொடையாளி கிள்ளி. மாலை சூடிய அந்தக் கிள்ளி உலா வரும்வோது அவனை நீண்ட வீதியில் கண்டதும் என் சேலை நழுவியது. இப்படி நழுவச் செய்துவிட்டு அவன் ஓடும் செங்கோன்மையை அவன் படைகளெல்லாம் அறியுமாறு எடுத்துச் சொல்லாமல் இருப்போனா?

சோழன் 46-50[தொகு]

46[தொகு]

காவல் உழவர் களத்தகத்துப் போர்ஏறி
நாவலோஓ என்றிசைக்கும் நாளோதை – காவலன்தன்
கொல்யானை மேலிருந்து கூற்றிசைத்தாற் போலுமே
நல்யானைக் கோக்கிள்ளி நாடு. – 46

காவல் உழவர் களத்தகத்துப் போர் ஏறி நாவலோஓ என்று இசைக்கும் நாள் ஓதை காவலன் தன் கொல் யானை மேல் இருந்து கூற்று இசைத்தால் போலுமே நல் யானைக் கோக்கிள்ளி நாடு.
உலகைக் காப்பாற்றும் உழவர்கள் தம் நெற்களத்தில் உள்ள போரின்மீது ஏறி “நாவலோ” என்று காலை நேரத்தில் ஓசை எழுப்பினால் எப்படியோ அப்படித்தான் இருக்கிறது, நாட்டைக் காப்பாற்றும் மன்னவன் கொல்லும் போர்யானைமேல் (எருமைக் கடா) இருந்துகொண்டு கூற்றுவன் “வாருங்கள்” என்று இசைமுழக்கம் செய்வது. இதுதான் இன்றைய கிள்ளிநாட்டு ஆட்சி நிலைமை. \ தன்னிடம் நெல் இருக்கிறது என்று கூவவேண்டிய உழவன் நாவல்பழம் பறிக்க வாருங்கள் என்று கூவும் கொடுமை கிள்ளியின் நாட்டில் இருக்கிறது. \ காப்பாற்ற வேண்டிய கிள்ளி, கொல்கிறேன் வாருங்கள் என்பவன் போல் உலா வருகிறான்.

47[தொகு]

மாலை விலைபகர்வார் கிள்ளி களைந்தபூச்
சால மருவியதோர் தன்மைத்தால் – காலையே
வில்பயில் வானகம் போலுமே வெல்வளவன்
பொற்பார் உறந்தை அகம். – 47

மாலை விலைபகர்வார் கிள்ளி களைந்த பூச் சால மருவியது ஓர் தன்மைத்தால் காலையே வில் பயில் வானகம் போலுமே வெல் வளவன் பொன் பார் உறந்தை அகம்.
கிள்ளி காலையில் பூமாலை சூடிக்கொண்டு உலா வருகிறான். காலையிலேயே வானவில் போட்டுக்கொண்டிருக்கும் வானம் போல் அவன் தோன்றுகிறான். மாலையில் அவன் கழற்றி எறிந்த பூவை விலைக்கு விற்கின்றனர். அவன் மலையை அதிகம் பேர் விரும்பினார்கள் என்பதற்காக விற்கின்றனர். மாலையில் விற்கும் வெற்று மாலையால் என்ன பயன்? – அவள் கேட்கிறாள். \ பொற்பார் உறந்தை = பொன் விளையும் மண் கொண்ட உறையூர்

48[தொகு]

மந்தரங் காம்பாய் மணிவிசும் போலையாத்
திங்கள் அதற்கோர் திலதமா எங்கணும்
முற்றுநீர் வைய முழுதும் நிழற்றுமே
கொற்றப்போர்க் கிள்ளி குடை. 48

மந்தரம் காம்பாய் மணி விசும்பு ஓலையாத் திங்கள் அதற்கு ஓர் திலதமா எங்கணும் முற்று நீர் வையம் முழுதும் நிழற்றுமே கொற்றப்போர்க் கிள்ளி குடை.
கிள்ளியின் வெண்கொற்றக் குடைக்கு மந்தர-மலை காம்பு. நீலநிற வானம் குடையில் விரிந்திருக்கும் ஓலை. வானத்து நிலா அந்தக் குடையின் உள்முகட்டில் இருக்கும் நெற்றிப்பொட்டு. இப்படி இருந்துகொண்டு உலகம் முழுவதற்கும் நிழல் தந்து அந்தக் குடை காப்பாற்றுகிறது. அது சரி. என்னை மட்டும் ஏங்கவைக்கிறது. இது கொடுமை.

49[தொகு]

அந்தணர் ஆவொடு பொன்பெற்றார் நாவலர்
மந்தரம்போல் மாண்ட களிறூர்ந்தார் – எந்தை
இலங்கிலைவேற் கிள்ளி இரேவதிநாள் என்னோ
சிலம்பிதன் கூடிழந்த வாறு. – 49

அந்தணர் ஆவொடு பொன்பெற்றார் நாவலர் மந்தரம் போல் மாண்ட களிறு ஊர்ந்தார் எந்தை இலங்கு இலை வேல் கிள்ளி இரேவதி நாள் என்னோ சிலம்பி தன் கூடு இழந்தவாறு.
கிள்ளி இரேவதி நாளில் பிறந்தான். அவனுக்குப் பிறந்தநாள் விழாக் கொண்டாட்டம். அன்று அந்தணர்கள் பசு, பொன் ஆகியவற்றைத் தானமாகப் பெற்றனர். நாவண்மை உடைய பாவலர் மலை போல் உயர்ந்த களிறு வழங்கப்பபட்டு அதில் ஊர்ந்தனர். ஆனால் சிலந்திப் பூச்சி மட்டும் தன் கூட்டை இழந்தது. அது ஏன்? இது முறை ஆகுமா? | (பொங்கல் நாள் அன்று பழம்பொருள்களைத் துடைத்துத் தூய்மை செய்வது போல் மன்னன் பிறந்த நாளிலும் அரண்மனை ஒட்டடை துடைத்துத் தூய்மை செய்யப்பட்டது. அப்போது சிலந்திப் பூச்சி தன் கூட்டை இழந்தது) | பிறந்த நாளில் கிள்ளி உலா வந்தான். அவனைக் கண்ட சிலம்பி என்னும் பெண் மட்டும் தன் கூடாகிய உடல் நலத்தை இழந்தாள். இதுவா அவன் தரும் பிறந்தநாள் கொடை? – அவள் வினா.

50[தொகு]

நின்றீமின் மன்னீர் நெருநல் திறைகொணர்ந்து
முன்றந்த மன்னர் முடிதாக்க – இன்றுந்
திருந்தடி புண்ணாகிச் செவ்வி இலனே
பெருந்தண் உறந்தையார் கோ. – 50

நின்றீமின் மன்னீர் நெருநல் திறை கொணர்ந்து முன் தந்த மன்னர் முடி தாக்க இன்றும் திருந்து அடி புண்ணாகிச் செவ்வி இலனே பெரும் தண் உறந்தையார் கோ.
மன்னர்களே! சற்றே நில்லுங்கள். நேற்று, திறை தந்த மன்னர்கள் வணங்கியபோது அவர்களின் முடி தாக்கி உறையூர் மன்னன் காலடி புண்ணாகிக் கிடக்கிறது. அதனால் இன்று அவன் காட்சி தரவில்லை. அவன் பெருமையும் ஈரமும் கொண்டவன்.

சோழன் 51-56[தொகு]

51[தொகு]

கொடிமதில் பாய்ந்திற்ற கோடும் அரசர்
முடியிடறித் தேய்ந்த நகமும் – பிடிமுன்பு
பொல்லாமை நாணிப் புறங்கடை நின்றதே
கல்லார்தோட் கிள்ளி களிறு. – 51

கொடி மதில் பாய்ந்து இற்ற கோடும் அரசர் முடி இடறித் தேய்ந்த நகமும் பிடி முன்பு பொல்லாமை நாணிப் புறங்கடை நின்றதே கல் ஆர் தோள் கிள்ளி களிறு.
கல்மலை போன்ற தோள் கொண்டவன் கிள்ளி. அவனது ஊர்தி ஆண்யானை. அது அவனது பறைவரின் கோட்டை மதில்களைப் பாய்ந்து இடித்தது. அதனால் அதன் தந்தங்களின் நுனி முறிந்து போயிற்று. போரில் விழுந்த மன்னர்களின் தலைமுடியை (கிரீடத்தை) இடறி அதன் கால்நகங்கள் தேய்ந்து போயின. இவற்றைத் தன் பெண்யானைக்குக் காட்டுவதற்கு நாணிக் கட்டுத்தறியின் புறக்கடையிலேயை அந்த ஆண்யானை தயங்கிக்கொண்டு நின்றது.

52[தொகு]

கச்சி ஒருகால் மிதியா ஒருகாலால்
தத்துநீர்த் தண்ணுஞ்சை தான்மிதியாப் – பிற்றையும்
ஈழம் ஒருகால் மிதியா வருமேநங்
கோழியர்கோக் கிள்ளி களிறு. – 52

கச்சி ஒருகால் மிதியா ஒரு காலால் தத்து நீர்த் தண் உஞ்சை தான் மிதியாப் பிற்றையும் ஈழம் ஒருகால் மிதியா வருமே நம் கோழியர் கோக் கிள்ளி களிறு.
கிள்ளி அரசன், கோழி என்னும் உறையூர் மக்களின் தலைவன். அவன் போரிட்டபோது அதன் நான்கு கால்களும் நான்கு இடங்களை மிதித்துக்கொண்டிருந்தது. உறையூர், காஞ்சிபுரம், உஞ்சை (உஜ்ஜயினி), ஈழம் (இலங்கை) ஆகியவை அந்த ஊர்கள்.

53[தொகு]

பாற்றினம் ஆர்ப்பப் பருந்து வழிப்படர
நாற்றிசையும் ஓடி நரிகதிப்ப – ஆற்ற
அலங்கலம் பேய்மகளிர் ஆட வருமே
இலங்கிலைவேற் கிள்ளி களிறு. – 53

பாறு இனம் ஆர்ப்பப் பருந்து வழிப் படர நால் திசையும் ஓடி நரி கதிப்ப ஆற்ற அலங்கல் அம் பேய் மகளிர் ஆட வருமே இலங்கு இலை வேல் கிள்ளி களிறு.
இலை உருவில் ஒளிறும் வேலேந்திய கிள்ளியின் களிறு போர்க்களத்தில் பெருமித நடை போட்டுக்கொண்டு வரும். அப்போது புலால் உண்ணும் பறவைகள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்யும். பருந்துகள் அந்த ஆண்யானையைப் பின்தொடரும். நரிகள் நாலாப்பக்கமும் ஓடித் திரியும். அணிகலன்களைப் பெருமையாக ஆட்டிக்கொண்டு பேய்மகளிர் ஆடுவர். காரணம் எங்கும் பிணம். பிணங்களுக்கு இடையே அந்தக் களிறு வரும்.

54[தொகு]

முடித்தலை வெள்ளோட்டு மூளைநெய் யாகத்
தடித்த குடர்திரியா மாட்டி – எடுத்தெடுத்துப்
பேஎய் விளக்கயரும் பெற்றித்தே செம்பியன்
சேஎய் பொருத களம். - 54

முடித்தலை வெள்ளோட்டு மூளை நெய்யாகத் தடித்த குடர் திரியா மாட்டி எடுத்து எடுத்துப் பேஎய் விளக்கு அயரும் பெற்றித்தே செம்பியன் சேஎய் பொருத களம்.
செம்பியன் போரிட்ட களத்தில் பேய் விளக்கு வைத்திருந்தது. மன்னரின் தலைமண்டை விளக்கின் ஓடு. அவர்களின் மூளை நெய். அவர்களின் குடல் திரி. இப்படிப் பேய்கள் விளக்கு வைத்து (கார்த்திகை) விழாக் கொண்டாடின.

55[தொகு]

இரியல் மகளிர் இலைஞெமலுள் ஈன்ற
வரியிளஞ் செங்காற் குழவி – அரையிரவில்
ஊமந்தா ராட்ட உறங்கிற்றே செம்பியன் தன்
நாமம்பா ராட்டாதார் நாடு. – 55

இரியல் மகளிர் இலை ஞெமலுள் ஈன்ற வரி இளம் செங்கால் குழவி அரை இரவில் ஊமம் தாராட்ட உறங்கிற்றே செம்பியன் தன் நாமம் பாராட்டாதார் நாடு. – 55
செம்பியனின் பெயரைப் பாராட்டாவர் நாட்டில் உறக்கம். வீட்டை விட்டு ஓடிப் பிழைத்திருக்கும் மகளிர் உதிர்ந்து கிடக்கும் இலைச் சறுகுகளில் குழந்தைகளைப் பெற்றனர். நள்ளிரவில் கோட்டான் அந்தக் குழந்தைகளுக்குத் தாலாட்டுப் பாடியது. இப்படி அவலநிலை.

56[தொகு]

அயிற்கதவம் பாய்ந்துழக்கி ஆற்றல்சால் மன்னர்
எயிற்கதவம் கோத்தெடுத்த கோட்டால் – பனிக்கடலுள்
பாய்ந்தோய்ந்த நாவாய்போல் தோன்றுமே எங்கோமான்
காய்சினவேல் கிள்ளி களிறு. 56

அயில் கதவம் பாய்ந்து உழக்கி ஆற்றல் சால் மன்னர் எயில் கதவம் கோத்து எடுத்த கோட்டால் பனிக் கடலுள் பாய்ந்து ஓய்ந்த நாவாய் போல் தோன்றுமே எங்கோமான் காய் சின வேல் கிள்ளி களிறு.
கிள்ளியின் யானை கடலில் செல்லும் நாவாய்க் கப்பல் போலத் தோன்றுகிறது. எப்படி? நாவாய் கடலில் பாயும். களிறு வேல் தாங்கிய கோட்டைக் கதவுகளின் மீது பாய்ந்து அழிக்கிறது. நாவாய் பாய்மரம் கொண்டிருக்கும். களிறு கோட்டைக் கதவைப் பெயர்த்துத் தூக்கிக் கொம்பில் வைத்துக்கொண்டு வருகிறது. அதனால் களிறு கப்பல் போல் தோன்றுகிறது.

(குறிப்பு: இதே பாடல் சேரனைப் பற்றிய பாடல்களுள் 20ஆம்எண் பாடலாகவும் அமைந்துள்ளது. அதில் ஈற்றடி “காய்சினத்தேர்க் கோதை களிறு” எனவும் இதில் “காய்சினவேற் கிள்ளி களிறு” எனவும் உள்ளன. இஃது ஆயவுக்குரியது. இப்பாடலின் அடி 3இன் முதற்சீர் “பாய்தோய்ந்த” என்றிருத்தல் சிறப்பு; இப்பாடலைப் பதிவு செய்து உரையெழுதியவர் “பாய்ந்தோய்ந்து” என்று பாடங்கொண்டுள்ளார் .)-சேரன்.

பாண்டியன் 57-60[தொகு]

57[தொகு]

காப்படங்கென் றன்னை கடிமனை யிற்செறித்து
யாப்படங்க ஓடி அடைத்தபின் மாக்கடுங்கோன்
நன்னலம் காணக் கதவம் துளைதொட்டார்க்
கென்னைகொல் கைம்மா றினி. – 57

காப்பு அடங்கு என்று அன்னை கடி மனையில் செறித்து யாப்பு அடங்க ஓடி அடைத்தபின் மாக்கடுங்கோன் நல் நலம் காணக் கதவம் துளை தொட்டார்க்கு என்னைகொல் கைம்மாறு இனி.
கடுங்கோன் உலா வந்தான். அவனை நான் காணக்கூடாது என்று, “உன்னைக் காப்பாற்றிக்கொண்டு அடங்கு” என்று சொல்லி அன்னை என்னை இல்லத்தில் செறிவாக அடைத்துவைத்தாள். உள்ளேயும் ஓடியாட முடியாமல் கட்டியும் போட்டாள். ஆனால் கதவிலே முன்பே துளை ஒன்று போட்டுவைத்திருந்தார்கள். (அது வெளியே இருப்பவர் யார் என்று பார்க்க உதவும் கதவுக்கண்.) அது அவன் நல்லழகையெல்லாம் காணும் வகையில் அமைந்திருந்தது. இப்படிக் கதவுக்கண் ஓட்டை போட்டு வைத்திருக்கிறார்களே, அவர்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன். – அவள் கூறுகிறாள். | கடுங்கோ = சேரன் | கடுங்கோன் = பாண்டியன்.

58[தொகு]

வளையவாய் நீண்டதோள் வாட்கணாய் அன்னை
இளையளாய் மூத்திலள் கொல்லோ – தளையவிழ்தார்
மண்கொண்ட தானை மறங்கனல்வேல் மாறனைக்
கண்கொண்டு நோக்கல்என் பாள். – 58

வளையவாய் நீண்ட தோள் வாள் கணாய் அன்னை இளையளாய் மூத்திலள் கொல்லோ தளையவிழ் தார் மண் கொண்ட தானை மறம் கனல் வேல் மாறனைக் கண்கொண்டு நோக்கல் என்பாள்.
வளையல் அணிந்த நீண்ட தோளும், வாள் போன்ற கண்ணும் கொண்ட தோழியே! அன்னை இளையவளா? மூத்தவளா? மூத்தவளாக இருந்தும் இளையவளாக இருக்கிறாளே! சிறுபிள்ளைத் தனமாய் நடந்துகொள்கிறாளே! மாறன் உலா வருவதைக் கண்கொண்டு பார்க்கக்கூடாது என்கிறாளே. பூக்கும் மலர்மாலை அணிந்துகொண்டு, பகைவரைக் கைப்பற்றிய படையோடு, வீரம் வெளிப்படும் வேல் ஏந்திய கோலத்துடன் வருகிறானே. அவன் மாலையையாவது, படையையாவது, வேலையாவது நான் பார்க்கக்கூடாதா?

59[தொகு]

கோட்டெங்கு சூழ்கூடற் கோமானைக் கூடவென
வேட்டங்குச் சென்றெவன் நெஞ்சறியாள் - கூட்டே
குறும்பூழ் பறப்பித்த வேட்டுவன்போல் அன்னை
வெறுங்கூடு காவல்கொண் டாள். – 59

கோள் தெங்கு சூழ் கூடல் கோமானைக் கூட என வேட்டு அங்குச் சென்ற எவன் நெஞ்சு அறியாள் கூட்டே குறும்பூழ் பறப்பித்த வேட்டுவன் போல் அன்னை வெறுங்கூடு காவல் கொண்டாள்.
கொழுத்த தென்னைமரம் சூழ்ந்திருக்கும் ஊர் கூடல் நகரம். அவன் இந்தக் கூடல் அரசன். அவனை விரும்பி என் நெஞ்சு சென்றுவிட்டது. இது அன்னைக்குத் தெரியவில்லை. வெறும் உடம்புக் கூட்டுக்குக் காவல் போட்டிருக்கிறாள். | குறும்பூழ் = காடை என்னும் பறவை. | காடை பிடிக்கும் வேடன் வலையை விரித்து வைப்பான். அதன் அருகில் தான் பழக்கி வைத்திருக்கும் பெண்-காடையைப் பறக்க விடுவான். அது ஆண்-காடையை அழைத்துவந்து கூட்டில் விழச்செய்யும். அன்னை அப்படிச் செய்கிறாளே!

60[தொகு]

களியானைத் தென்னன் இளங்கோவென் றெள்ளிப்
பணியாரே தம்பார் இழக்க – அணியாகங்
கைதொழு தேனும் இழக்கோ நறுமாவின்
கொய்தளிர் அன்ன நிறம். – 60

களி யானைத் தென்னன் இளங்கோ என்று எள்ளிப் பணியாரே தம் பார் இழக்க அணி ஆகம் கை தொழுதேனும் இழக்கோ நறு மாவின் கொய் தளிர் அன்ன நிறம்.
களிப்புக் கொண்ட யானைமேல் வருபவன் தென்னன். அவன் இளையவன், எளிதாக வென்றுவிடலாம் என்று ஏளனமாகப் பேசிக்கொண்டு அவனுக்குக் கீழ்ப்படியாதவர்கள் தன் நாட்டை இழந்தனர். அது சரி. நான் தென்னனைத் தொழுதேன். ஆனால் என் மாந்தளிர் போன்ற மேனி அழகை இழந்துவிட்டேனே! இது சரியா?

பாண்டியன் 61-65[தொகு]

61[தொகு]

வழுவில்எம் வீதியுள் மாறன் வருங்கால்
தொழுதேனைத் தோள்நலமுங் கொண்டான் – இமிழ்திரைக்
கார்க்கடற் கொற்கையார் காவலனுந் தானேயால்
யார்க்கிடுகோ பூசல் இனி. – 61

வழு இல் எம் வீதியுள் மாறன் வருங்கால் தொழுதேனைத் தோள் நலமும் கொண்டான் இமிழ் திரைக் கார்க் கடல் கொற்கையார் காவலனுந் தானேயால் யார்க்கு இடுகோ பூசல் இனி.
மாறன் குறையில்லாத என் வீதியில் உலா வந்தான். அப்போது நான் அவனைத் தொழுதேன். அவன் என் தோள்-அழகை வாங்கிக்கொண்டான். திறையாக வாங்கிக்கொண்டான். நான் அவன் கொற்கை நகரில் வாழும் அவனது குடிமகள். எனக்குக் காவலன் அவன்தான். அவனே இந்தக் கொடுமையைச் செய்தால் நான் யாரிடம் சென்று முறையிட்டுக்கொள்வேன்?

62[தொகு]

தானேல் தனிக்குடைக் காவலனால் காப்பதுவும்
வானேற்ற வையகம் எல்லாமால் – யானோ
எளியேன் ஓர் பெண்பாலேன் ஈர்ந்தண்தார் மாறன்
அளியானேல் அன்றென்பார் ஆர். – 62

தானேல் தனிக்குடைக் காவலனால் காப்பதுவும் வான் ஏற்ற வையகம் எல்லாமால் யானோ எளியேன் ஓர் பெண் பாலேன் ஈர்ம் தண் தார் மாறன் அளியானேல் அன்று என்பார் ஆர்.
மாறன் தான், தன் ஒப்புயர்வற்ற வெண்கொற்றக் குடையால் குடிமக்களுக்கு நிழல் தருபவன். வானுலகைத் தாங்கும் வையகத்தைக் காப்பவன். அவன் அப்படி. யானோ எளியவள். அதிலும் ஒரு பெண். அளி தந்து காப்பாற்றப்பட வேண்டியவள். இந்த உண்மையை அன்று என்று சொல்பவர் ஆர்? அப்படி இருக்க அவன் எனக்கு அளி செய்து காப்பாறவில்லையே!.

63[தொகு]

மன்னுயிர் காதல் தனதான அவ்வுயிருள்
என்னுயிரும் எண்ணப் படுமாயின் – என்னுயிர்க்கே
சீரொழுகு செங்கோற் செழியற்கே தக்கதோ
நீரொழுகப் பாலொழுகா வாறு. – 63

மன் உயிர் காதல் தனது ஆன அவ் உயிருள் என் உயிரும் எண்ணப்படும் ஆயின் என் உயிர்க்கே சீர் ஒழுகு செங்கோல் செழியற்கே தக்கதோ நீர் ஒழுகப் பால் ஒழுகாவாறு.
செழியன் நிலைபெற்ற உயிரினம் எல்லாவற்றின் மீதும் காதலன்பு கொண்டவன். அந்த உயிரினங்களில் என் உயிரும் ஒன்றாக எண்ணப்படுமாயின், என்மேல் செங்கோல் ஆட்சி செய்யவில்லையே! எதுவா அவன் சீர்மை? * பச்சைமண் பாண்டத்தில் பாலை ஊற்றிவைத்தால் அதில் உள்ள நீர் கசிந்து ஒழுகுகிறது. பால் கசிந்து ஒழுகவில்லை. இது என்ன விந்தை! * அவன் நீர்மை எல்லா உயிரினங்கள் மாட்டும் பாய்கிறது. அவன் பாலுணர்வு அப்படிப் பாயவில்லையே.

64[தொகு]

புகுவார்க் கிடங்கொடா போதுவார்க் கொல்கா
நகுவாரை நாணி மறையா – இகுகரையின்
ஏமான் பிணைபோல நின்றதே கூடலார்
கோமான்பின் சென்றவென் நெஞ்சு. - 64

புகுவார்க்கு இடம் கொடா போதுவார்க்கு ஒல்கா நகுவாரை நாணி மறையா இகு கரையின் ஏ மான் பிணை போல நின்றதே கூடலார் கோமான் பின் சென்ற என் நெஞ்சு.
அவன் கூடலார் கோமான். அவன் பின் என் நெஞ்சு சென்றது. என் நெஞ்சுக்குள்ளே புகுவார் யாருக்கும் அது இடம் கொடுக்கவில்லை. வழியில் யார் சென்றாலும் நெஞ்சம் தளரவில்லை. என் நெஞ்சைப் பார்த்து எள்ளி நகையாடுபவர்களைக் கண்டால் நாணி மறைந்துகொள்கிறது. இடிந்து விழுந்துகொண்டிருக்கும் ஆற்றங்கரையில் அம்பு பட்ட மான் நிற்பது போல என் நெஞ்சு அவனிடம் நிற்கிறது.

65[தொகு]

களியானைத் தென்னன் கனவின்வந் தென்னை
அளியான் அளிப்பானே போன்றான் - தெளியாதே
செங்காந்தள் மென்விரலாற் சேக்கை தடவந்தேன்
என்காண்பேன் என் அலால் யான். – 65

களி யானைத் தென்னன் கனவின் வந்து என்னை அளியான் அளிப்பானே போன்றான் தெளியாதே செங்காந்தள் மென் விரலால் சேக்கை தடவந்தேன் என் காண்பேன் என் அலால் யான்.
களிக்கும் யானைமேல் உலா வருபவன் தென்னன். அவன் என் கனவில் வந்தான். அவன் எனக்கு இன்பம் எதுவும் தரவில்லை. இன்பம் தருபவன் போல இருந்தான். உடனே செங்காந்தள் பூப் போன்ற என் விரல்களால் அவனைத் தடவினேன். உண்மையில் படுக்கையைத் தடவிக்கொண்டிருந்தேன். என்னைத் தவிர என் படுக்கையில் வேறு யாரும் இல்லை.

பாண்டியன் 66-70[தொகு]

66[தொகு]

கனவை நனவென் றெதிர்விழிக்கும் காணூம்
நனவில் எதிர்விழிக்க நாணும் – புனையிழாய்
என்கண் இவையானால் எவ்வாறே மாமாறன்
தன்கண் அருள்பெறுமோ தான். – 66

கனவை நனவு என்று எதிர் விழிக்கும் காணூம் நனவில் எதிர் விழிக்க நாணும் புனையிழாய் என் கண் இவை ஆனால் எவ்வாறே மா மாறன் தன் கண் அருள் பெறுமோ தான்.
கனவை நனவு என்று எண்ணிக்கொண்டு அவனைக் கொட்டைக் கண்ணோடு விழித்துக்கொண்டு பார்க்கிறேன். அப்போது உறங்கிக்கொண்டிருக்கும் என் கண்கள் அவனைப் பார்க்கவில்லை. நனவில் அவன் உலா வருகிறான். அப்போது என் நாணத்தால் அவனைப் பார்க்க முடியவில்லை. என் கண்ணுக்கே இந்த நிலைமை ஆனால் அவனது அருளைப் பெறுவது எப்போது?

67[தொகு]

தளையவிழும் பூங்கோதைத் தாயரே ஆவி
களையினும்என் கண்திறந்து காட்டேன் – வளைகொடுப்போம்
வன்கண்ணன் வாண்மாறன் மால்யானை தன்னுடன்வந்
தென்கண் புகுந்தான் இரா. – 67

தளை அவிழும் பூங்கோதைத் தாயரே ஆவி களையினும் என் கண் திறந்து காட்டேன் வளை கொடுப்போம் வன் கண்ணன் வாள் மாறன் மால் யானை தன்னுடன் வந்து என் கண் புகுந்தான் இரா.
மலரும் பூமாலையைக் கையில் எடுத்துக்கொண்டு வந்து நிற்கும் தாய்மார்களே! “விடிந்துவிட்டது, கண்ணைத் திற” என்கிறீர்கள். என் உயிரே போனாலும் கண்ணைத் திறக்கமாட்டேன். மாறன் என் வளையல்களைக் கழன்று விழும்படிச் செய்து எடுத்துக்கொண்டு போய்விட்டான். அவன் கொடுமைக்காரன். வாளைக் கையில் உடையவன். கருநிற யானைமேல் வந்தான். வந்தவன் இரவில் என் கண்ணுக்குள் அகப்பட்டுக்கொண்டான். கண்ணுக்குள்ளே இருக்கிறான். திறந்தால் ஓடிவிடுவான். மால் = கருமை

68[தொகு]

ஓராற்றல் என்கண் இமைபொருந்த அந்நிலையே
கூரார்வேல் மாறன் என் கைப்பற்ற – வாரா
நனவென் றெழுந்திருந்தேன் நல்வினையொன் றில்லேன்
கனவும் இழந்திருந்த வாறு. – 68

ஓராற்றல் என்கண் இமை பொருந்த அந் நிலையே கூர் ஆர் வேல் மாறன் என் கைப் பற்ற வாரா நனவு என்று எழுந்திருந்தேன் நல்வினை ஒன்று இல்லேன் கனவும் இழந்து இருந்த ஆறு.
அவனை எண்ணிக்கொண்டே இருந்தேன். தூக்கம் வரவில்லை. ஏதோ ஒரு வகையில் என் இமைகள் மூடிக்கொண்டன. அப்போதே கூரிய வேலை உடைய மாறன் அருகில் வந்து என் கைகளைப் பற்றினான். கனவை நனவு என்று எண்ணி எழுந்திருந்தேன். அவன் இல்லை. கைப்பற்றிய கனவு இன்பமும் இல்லாமல் போய்விட்டது. எனக்கு நலவினைப்பேறு ஒன்றுகூட இல்லை.

69[தொகு]

கார்நறு நீலங் கடிக்கயத்து வைகலும்
நீர்நிலை நின்ற தவங்கொலோ கூர்நுனைவேலி
வண்டிருக்க நக்கதார் வாமான் வழுதியாற்
கொண்டிருக்கப் பெற்ற குணம். – 69

கார் நறு நீலம் கடிக் கயத்து வைகலும் நீர்நிலை நின்ற தவங்கொலோ கூர் நுனை வேலி வண்டு இருக்க நக்க தார் வா மான் வழுதியால் கொண்டிருக்கப் பெற்ற குணம்.
கரிய நல்ல நீலமலர் மணக்கும் குளத்தில் நாள்தோறும் பூத்துநின்று தவம் செய்தது. அந்தத் தவத்தின் பயனால் போலும் வழுதி கழுத்தில் மாலை ஆகும் பேறு பெற்றுள்ளது. கூர்மையான நுனியை உடைய வேல் போன்ற வாயைக் கொண்டிருக்கும் வண்டு சிரிப்பொலி கேட்க மொய்க்கும் பூமாலை, வழுதி மாலை.

70[தொகு]

அறிவரார் யாமொருநாட் பெண்டிரே மாகச்
செறிவார் தலைமே னடந்து – மறிதிரை
மாட முரிஞ்சும் மதுரையார் கோமானைக்
கூட வொருநாட் பெற. – 70

அறிவர் ஆர் யாம் ஒரு நாள் பெண்டிரேம் ஆகச் செறிவார் தலைமேல் நடந்து மறி திரை மாடம் உரிஞ்சும் மதுரையார் கோமானைக் கூட வொரு நாள் பெற.
மோதித் திரும்பும் வைகை ஆற்று நீர்த்திரையை மாடி வீடுகள் உரிஞ்சும் ஊர் மதுரை. அவன் அந்த மதுரை மக்களின் கோமான். என்றேனும் ஒருநாள் நான் அவனோடு சேர்ந்து கூடி இருப்போன். இப்போது ஊரார் என் வாயை அடைத்து வைக்கின்றனர். நான் அவனோடு கூடியிருப்பதை அன்று அவர்கள் அறிந்துகொள்வார்கள். இப்போது என்னை வீட்டுக்குள்ளே அடைத்துச் செறித்து வைப்பவர்கள் அப்போது தெரிந்துகொள்வர். அப்போது அவர்கள் தலைமேல் நான் நடப்பேன். பெண்களே! இதனைத் தெரிந்துகொள்ளுங்கள்.

பாண்டியன் 71-75[தொகு]

71[தொகு]

கைய தவன்கடலுள் சங்கமால் பூண்டதுவும்
செய்யசங் கீன்ற செழுமுத்தால் மெய்யதுவும்
மன்பொரு வேல்மாறன் வார்பொதியிற் சந்தனமால்
என்பெறா வாடும் என் தோள். – 71

கையது அவன் கடலுள் சங்கமால் பூண்டதுவும் செய்ய சங்கு ஈன்ற செழு முத்தால் மெய்யதுவும் மன் பொரு வேல் மாறன் வார் பொதியில் சந்தனமால் என் பெறா வாடும் என் தோள்.
கடல் கைக்கும்படிக் கடலில் படுத்துத் தவம் செய்துகொண்டிருப்பதால் திருமால்தான் மாறன் என்கிறேன். திருமால் கடல் சங்கைக் கையில் வைத்துக்கொண்டிருக்கிறான். நான் மாறன் கடலில் விளைந்த சங்கில் அறுத்த வளையல்கைக் கையில் அணிந்துகொண்டிருக்கிஅறேன். மாறன் கடல் முத்தை ஆரமாக அணிந்துகொண்டிருக்கிறேன். மாறனின் பெதியமலைச் சந்தனத்தைப் பூசிக்கொண்டிருக்குறேன். சங்கம், முத்து, சந்தனம் எல்லாமே அவனுடையவை. அப்படி இருக்கும்போது என் தோள் எதனைப் பெறாமல் வாடுகிறது? வியப்பாக உள்ளது.

72[தொகு]

இப்பியீன்று இட்ட எறிகதிர் நித்திலம்
கொற்கையே யல்ல படுவது – கொற்கைக்
குருதிவேல் மாறன் குளிர்சாந் தகலம்
கருதியார் கண்ணும் படும். – 72

இப்பி ஈன்று இட்ட எறி கதிர் நித்திலம் கொற்கையே அல்ல படுவது கொற்கைக் குருதி வேல் மாறன் குளிர்சாந் தகலம் கருதியார் கண்ணும் படும்.
சங்குச் சிப்பிகள் பெற்றெடுத்த முத்துகள் கொற்கையில் மட்டுமா உதிர்கின்றன? கொற்கையை ஆளும் மாறனின், குருதி தோய்ந்த வேலை உடைய மாறனின், குளிர்ந்த சந்தனம் பூசிய மார்பினை அடையக் கருதிய பெண்கள் கண்களிலிருந்தும் உதிர்கின்றன.

73[தொகு]

கொடிபாடித் தேர்பாடிக் கொய்தண்தார் மாறன்
முடிபாடி முத்தாரம் பாடித் – தொடியுலக்கை
கைம்மனையில் ஓச்சப் பெறுவெனோ யானும்ஓர்
அம்மனைக் காவல் உளேன். – 73

கொடி பாடித் தேர் பாடிக் கொய் தண் தார் மாறன் முடி பாடி முத்தாரம் பாடித் தொடி உலக்கை கைம் மனையில் ஓச்சப் பெறுவெனோ யானும் ஓர் அம் மனைக் காவல் உளேன்.
மாறன் கொடி, மாறன் தேர், மாறன் பூ மாலை, மாறன் முத்தாரம், மாறன் சூடிய முடி ஆகியவற்றைப் பாடிக்கொண்டு நான் உலக்கையால் நெல் குற்றவேண்டும். இதுதான் என் ஆசை. இப்போது வீட்டுக் காவலில் கிடக்கிறேன். \ தொடி உலக்கை – பூண் போட்ட உலக்கை \ கொய் தண் தார் – கொய்த குளிர்ந்த பூக்களால் கட்டப்பட்ட மால் \ கைம்மனை – சிறிய இல்லம் \ அம்மனை – அழகிய இல்லம்

74[தொகு]

என்னை உரையல் என் பேருரையல் ஊருரையல்
அன்னையும் இன்னள் எனவுரையல் பின்னையுந்
தண்படா யானைத் தமிழ்நர் பெருமாற்கென்
கண்படாவாறே யுரை. 74

என்னை உரையல் என் பேருரையல் ஊருரையல் அன்னையும் இன்னள் என உரையல் பின்னையும் தண் படா யானைத் தமிழ்நர் பெருமாற்கு என் கண் படாவாறே உரை.
என்னைப் பற்றிப் பேசவேண்டா. என் பேரையும் சொல்லவேண்டா. என் தாய் என்னை அடைத்து வைத்திருக்கும் கொடியவள் என்றும் சொல்லவேண்டா. பின் என்னதான் சொல்லவேண்டும் என்கிறாயா? தமிழர் பெருமானை எண்ணி என் கண் உறங்காமல் இருக்கிறது என்று மட்டும் சொல்லுங்கள். (தண் படா யானை = குளுமை இல்லாமல் எப்பொதும் சினம் கொண்டிருக்கும் யானை – யானையை உடைய தமிழர் பெருமான்.)

75[தொகு]

மாறடுபோர் மன்னர் மதிக்குடையும் செங்கோலும்
கூறிடுவாய் நீயோ குளிர்வாடாய் சோறடுவார்
ஆரத்தால் தீமூட்டும் அம்பொதியிற் கோமாற்கென்
வாரத்தால் தோற்றேன் வளை. 75

மாறு அடு போர் மன்னர் மதிக் குடையும் செம் கோலும் கூறிடுவாய் நீயோ குளிர் வாடாய் சோறு அடுவார் ஆரத்தால் தீ மூட்டும் அம் பொதியின் கோமாற்கு என் வாரத்தால் தோற்றேன் வளை.
சோறாக்குவோர் சந்தனக்கட்டையில் அடுப்புத் தீ மூட்டும் பொதியமலை நாட்டுக் கோமான் அவன். குளிரும் வாடைக்காற்றே! நீ அவனிடம் தூது செல். மாற்றாரைப் போரில் வெல்லும் அவனது குடை, மதியம் போன்ற வெண்கொற்றக் குடை, செங்கோல் ஆகியவற்றை முதலில் சொல். பின் அவனை நெஞ்சில் பங்குபோட்டுக் கொண்டிருப்பதால் என் வளையல்களைத் தோற்றுப் போயிருக்கிறேன் என்பதையும் சொல். (வாரம் = சரிபாதி பங்கு)

பாண்டியன் 76-80[தொகு]

76[தொகு]

துடியடித் தோற்செவித் தூங்குகைந் நால்வாய்ப்
பிடியேயான் நின்னை யிரப்பல் – கடிகமழ்தார்ச்
சேலேக வண்ணனொடு சேரி புகுதலுமெஞ்
சாலேகம் சார நட. – 76

துடி அடித் தோல் செவித் தூங்கு கைம் நால் வாய்ப் பிடியே யான் நின்னை இரப்பல் கடி கமழ் தார்ச் சேல் ஏக வண்ணனொடு சேரி புகுதலும் எம் சாலேகம் சார நட.
அவன் சேல் ஏக வண்ணன். மீன் கொடி கொண்ட மாறன். (மீன் கொடி கொண்ட காம வேள் மாரன்). அவனைச் சுமந்துகொண்டு வரும் பிடியே! (பெண்யானையே) உடுக்கை-மேளம் போன்ற காலடியும், தோல்-பறை போன்ற காதும், தொங்கும் கையில் துளை இருக்கும் வாயும் கொண்டிருக்கிறாய். சரி. உன்னிடம் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். மாலை அணிந்துகொண்டு அவன் உன்மேல் வரும்போது என் தெருச்சேரிக்கு வந்ததும் என் வீட்டுச் சன்னல் (சாலேகம்) ஓரமாக நடந்து செல். நான் அவனைக் கண்ணாரக் காணவேண்டும்.

77[தொகு]

எலாஅ மடப்பிடியே யெங்கூடற் கோமான்
புலாஅல் நெடுநல்வேல் மாறன் – உலாஅங்கால்
பைய நடக்கவுந் தேற்றாயால் நின்பெண்மை
ஐயப் படுவ துடைத்து. – 77

எலாஅ மடப் பிடியே எம் கூடல் கோமான் புலாஅல் நெடு நல் வேல் மாறன் உலாஅங்கால் பைய நடக்கவும் தேற்றாயால் நின் பெண்மை ஐயப்படுவது உடைத்து.
ஏ, மடத்தனம் கொண்ட பிடியே! புலால் நாற்றம் அடிக்கும் வேலையுடைய என் கூடல்-கோமான் மாறன் உலா வரும்போது மெதுவாக நடக்க உனக்குத் தெரியவில்லையே. பெண்ணின் விருப்பத்தைப் புரிந்துகொள்ளாத நீயும் ஒரு பெண்ணா? உன் பிறவி ஐயப்படத் தக்கதாக உள்ளது.

78[தொகு]

போரகத்துப் பாயுமா பாயாது பாயமா
ஊரகத்து மெல்ல நடவாயோ – கூர்வேல்
மதிவெங் களியானை மாறன் தன் மார்பங்
கதவங்கொண் டியாமுந் தொழ. – 78

போர் அகத்துப் பாயும் மா பாயாது பாயமா ஊர் அகத்து மெல்ல நடவாயோ கூர் வேல் மதி வெம் களி யானை மாறன் தன் மார்பம் கதவம் கொண்டு யாமும் தொழ.
மாறன் மார்புக் கதவை நான் திறந்து தொழவேண்டும். அவனைச் சுமந்துவரும் களிப்பு மிக்க யானையே! போரில் பாய்வது போல நீ பாயாதே. பாயாசம் போல ஊருக்குள்ளே மெல்ல நடந்துசெல்.

79[தொகு]

ஆடுகோ சூடுகோ ஐதாக் கலந்துகொண்டு
ஏடுகோ டாக எழுதுகோ – நீடு
புனவட்டப் பூந்தெரியல் பொற்றேர் வழுதி
கனவட்டங் கால்குடைந்த நீறு. – 79

ஆடுகோ சூடுகோ ஐதாக் கலந்துகொண்டு ஏடு கோடாக எழுதுகோ நீடு புனவட்டப் பூ தெரியல் பொன் தேர் வழுதி கனவட்டம் கால் குடைந்த நீறு.
வழுதியின் குதிரை ஊர்தியின் பெயர் ‘கனவட்டம்’. வழுதியைச் சுமந்துகொண்டு கனவட்டம் தெருவில் சென்றது. அதன் காலடி பட்ட புழுதியை நீரில் கலந்து மையாக்கிக்கொண்டு, பூவிதழ் நுனியை எழுத்தாணி ஆக்கிக்கொண்டு, என் கண்ணில் மை எழுதிக்கொள்ளட்டுமா, என் தோளில் தொய்யில் எழுதிக்கொள்ளட்டுமா – அவள் கேட்கிறாள்.

80[தொகு]

பிணிகிடந் தார்க்குப் பிறந்தநாட் போல
அணியிழை அஞ்ச வருமால் – மணியானை
மாறன் வழுதி மணவா மருண்மாலைச்
சீறியோர் வாடை சினந்து. – 80

பிணி கிடந்தார்க்குப் பிறந்த நாள் போல அணியிழை அஞ்ச வருமால் மணி யானை மாறன் வழுதி மணவா மருண்மாலைச் சீறி ஓர் வாடை சினந்து.
நோய்வாய்ப் பட்டுக் கிடப்பவர்களுக்குப் பிறந்தநாள் வருவது போல வாடைக்காற்று சினம் கொண்டு பாய்கிறது. பெண்ணே! பார். மாறன் வழுதியோடு கூடி இருக்காமல் தனியே இருப்பவரிடம்தான் வாடை இப்படி வருகிறது.

பாண்டியன் 81-85[தொகு]

81[தொகு]

வாரிய பெண்ணை வருகுரும்பை வாய்த்தனபோல்
ஏரிய ஆயினும் என்செய்யும் –கூரிய
கோட்டானைத் தென்னன் குளிர்சாந் தணியகலங்
கோட்டுமண் கொள்ளா முலை. – 81

வாரிய பெண்ணை வரு குரும்பை வாய்த்தன போல் ஏரிய ஆயினும் என் செய்யும் கூரிய கோட்டு ஆனைத் தென்னன் குளிர் சாந்து அணி அகலம் கோட்டு மண் கொள்ளா முலை.
என் முலை தென்னங்குரும்பை போல் பருத்துக்கொண்டிருக்கிறது. சரி. அதனால் என்ன பயன். தென்னன் மார்பில் உள்ள சந்தனக் குழம்பை அப்பிக்கொள்ளவில்லையே!

82[தொகு]

நாணாக்காற் பெண்மை நலன் அழியும் முன்னின்று
காணாக்காற் கைவளையுஞ் சோருமால் – காணேன்நான்
வண்டு எவ்வந் தீர்தார் வயமான் வழுதியைக்
கண்டுஎவ்வந் தீர்தார் ஆறு. – 82

நாணாக்கால் பெண்மை நலன் அழியும் முன் நின்று காணாக்கால் கை வளையும் சோருமால் காணேன் நான் வண்டு எவ்வம் தீர் தார் வய மான் வழுதியைக் கண்டு எவ்வம் தீர் தார் ஆறு.
வழுதி உலா வரும்போது கண்டு நாணாமல் நின்றால் என் பெண்மை அழியும். அவனைக் கண்ணாரக் காணவில்லை என்றால் என் கைவளையல் கழன்று ஓடும். எப்படித்தான் என் எவ்வத் துன்பத்தைப் போக்கிக்கொள்வேன்? பூமாலை மட்டும் வண்டின் துன்பத்தைப் போக்கிக்கொண்டு அவன் கழுத்தில் இருக்கிறதே!

83[தொகு]

மாணார்க் கடந்த மறவெம்போர் மாறனைக்
காணாக்கால் ஆயிரமும் சொல்லுவேன் – கண்டக்காற்
பூணாகந் தாவென்று புல்லப் பெறுவேனோ
நாணோ டுடன்பிறந்த நான். – 83

மாணார்க் கடந்த மற வெம் போர் மாறனைக் காணாக்கால் ஆயிரமும் சொல்லுவேன் கண்டக்கால் பூண் ஆகம் தா என்று புல்லப் பெறுவேனோ நாணோடு உடன்பிறந்த நான்.
மாட்சிமை இல்லாதவர்களை வென்றவன் மாறன். அவனைக் காணாதபோது ஆயிரம் ஆயிரமாகப் பேசுவேன். கண்டால், “உன் பூண் அணிந்த மார்பை எனக்குக் கொடு” என்று கேட்டுத் தழுவமுடியுமா? நாணத்தோடு பிறந்தவள் ஆயிற்றே!

84[தொகு]

செய்யார் எனினுந் தமர்செய்வ ரென்னுஞ்சொல்
மெய்யாதல் கண்டேன் விளங்கிழாய் – கையார்
வரிவளை நின்றன வையையார் கோமான்
புரிவளை போந்தியம்பக் கேட்டு. – 84

செய்யார் எனினும் தமர் செய்வர் என்னும் சொல் மெய்யாதல் கண்டேன் விளங்கிழாய் கை ஆர் வரி வளை நின்றன வையையார் கோமான் புரி வளை போந்து இயம்பக் கேட்டு.
மற்றவர்கள் உதவவில்லை என்றாலும், உற்றார் உறவினர் உதவுவர் என்பது உண்மை என்பது இப்போது தெரிந்துவிட்டது. வையை நாட்டாரின் அரசன் உலா வரும்போது ஊதிய சங்கின் ஓசையைக் கேட்டதும், சங்கால் செய்யப்பட்டதாய் என் கையில் இருக்கும் வளையல்கள் என் தோள்களை இறுக்கிப் பிடித்துக்கொண்டன. காணப்போகும் மகிழ்ச்சி. \ வரிவளை – கையில் வரிவரியாக உள்ள வளையல் \ புரிவளை – வளைந்து விரியும் சங்கு

85[தொகு]

உகுவாய் நிலத்த துயர்மணல்மேல் ஏறி
நகுவாய்முத் தீன்றசைந்த சங்கம் – புகுவான்
திரைவரவு பார்த்திருக்குந் தென்கொற்கைக் கோமான்
உரைவரவு பார்த்திருக்கும் நெஞ்சு. – 85

உகு வாய் நிலத்தது உயர் மணல் மேல் ஏறி நகு வாய் முத்து ஈன்று அசைந்த சங்கம் புகுவான் திரை வரவு பார்த்திருக்கும் தென் கொற்கைக் கோமான் உரை வரவு பார்த்திருக்கும் நெஞ்சு.
சங்குப் பூச்சி மணலின் மேல் ஏறி பல்லைக் காட்டும் முத்துக்களைப் பெற்று வைத்துவிட்டு மீளும். அந்த முத்துக்கள் அலைகள் வந்து கொண்டுசெல்லாவா என்று காத்துக்கொண்டிருக்கும். அதுபோல நான் அந்த முத்து விளையும் கொற்கை அரசனிடமிருந்து அழைப்பு வராதா எனக் காத்திருக்கிறேன்.

பாண்டியன் 86-90[தொகு]

86[தொகு]

கூடற் பெருமானைக் கூடலார் கோமானைக்
கூடப் பெறுவனேல் கூடு என்று – கூடல்
இழைப்பாள்போற் காட்டி இழையா திருக்கும்
பிழைப்பில் பிழைபாக் கறிந்து. – 86

கூடல் பெருமானைக் கூடலார் கோமானைக் கூடப் பெறுவனேல் கூடு என்று கூடல் இழைப்பாள் போல் காட்டி இழையாது இருக்கும் பிழைப்பில் பிழைபாக்கு அறிந்து. – 86
கூடல் இழைத்தல் என்பது ஒருவகை விளையாட்டு. அது குறி பார்க்கும் விளையாட்டு. நடுவில் நின்றுகொண்டு, கண்களை மூடிக்கொண்டு, சுழன்று, கைவிரலால் மணலில் வட்டமிட்டுக் கோடு கிழிப்பர். வட்டம் கோணல் மாணலாக இருந்தாலும், கோடு தொடங்கிய புள்ளியில் ஒன்றுகூட வேண்டும், கூடினால் தான் விரும்பிய எண்ணம் நிறைவேறும் என்றும், கூடாமல் கோடு வேறிடம் சென்றால் விரும்பிய செயல் கைகூடாது என்றும் நம்புவர்.
இப்படி அவள் கூடல் இழைக்க முற்பட்டாள். கூடல் பெருமான் பாண்டியனை நான் கூடப்பெறுவேன் என்றால் கூடல் கோடே நீ கூடுக என்று சொல்லிக்கொண்டு கூடல் இழைக்க முற்பட்டுக் கூடல் இழைப்பது போலப் பாசாங்கு காட்டினாள். உண்மையில் அவள் கூடல் இழைக்கவில்லை. காரணம் ஒருவேளை கூடல்-கோடு கூடாமல் போய்விட்டால் அவனைக் கூடமுடியாமல் போய்விடுமே என்னும் அச்சம் அவளுக்கு.

87[தொகு]

குடத்து விளக்கேபோல் கொம்பன்னார் காமம்
புறப்படா பூந்தார் வழுதி – புறப்படின்
ஆபுகு மாலை அணிமலையில் தீயேபோல்
நாடறி கௌவை தரும். – 87

குடத்து விளக்கே போல் கொம்பன்னார் காமம் புறப்படா. பூந்தார் வழுதி புறப்படின் ஆ புகு மாலை அணி மலையில் தீயே போல் நாடறி கௌவை தரும்.
கொடிக்கொம்பு (கொம்பில் ஏறும் கொடி) போன்றவர் மகளிர். மகளிர் காமம் குடத்துக்குள் வைத்த விளக்குப்போல் வெளி-உலகுக்குத் தெரியாது. ஆனால் வழுதி மாலையும் கழுத்துமாக உலா வரும்போது, ஆனிரைகள் இல்லம் புகும் மாலை வேளையில் மலையில் பற்றி எரியும் தீயைப் போல ஊருக்கெல்லாம் தெரியும்படி வெளிப்பட்டுவிடும்.

88[தொகு]

ஏற்பக் குடைந்தாடில் ஏசுவர் அல்லாக்கால்
மாற்றி யிருந்தாள் ஏனவுரைப்பர் – வேற்கண்ணாய்
கொல்யானை மாறன் குளிர்புனல் வையைநீர்
எல்லாம் எனக்கோர் இடர். – 88

ஏற்பக் குடைந்து ஆடில் ஏசுவர் அல்லாக்கால் மாற்றி இருந்தாள் ஏன உரைப்பர் வேல் கண்ணாய் கொல் யானை மாறன் குளிர் புனல் வையை நீர் எல்லாம் எனக்கு ஓர் இடர்.
அவன் கொல்யானை மேல் செல்லும் மாறன். அவன் நாட்டு வையையில் குளிர்ந்த ஊற்றுநீர் வருகிறது. அதில் மூழ்கிக் குளித்து விளையாடினால் மாறன் நாட்டு நீர் என்று மூழ்கி விளையாடுகிறாள் என்று சொல்லி ஏசுவார்கள். நீராடாமல் கரையில் நின்று பார்த்துக்கொண்டிருந்தால் தன் ஆசையை மறைத்துப் பார்த்துக்கொண்டிருக்கிறாள் என்று முணுமுணுப்பர். வேல் போன்ற கண்ணை உடைய என் தோழியே! எது செய்தாலும் எனக்குத் துன்பமே.

89[தொகு]

யானூடத் தானுணர்த்த யானுணரா விட்டதற்பின்
தானூட யானுணர்த்தத் தானுணரான் – தேனூறு
கொய்தார் வழுதி குளிர்சாந் தணியகலம்
எய்தா திராக்கழிந்த வாறு. – 89

யான் ஊடத் தான் உணர்த்த யான் உணரா விட்டதன் பின் தான் ஊட யான் உணர்த்தத் தான் உணரான் தேன் ஊறு கொய் தார் வழுதி குளிர் சாந்து அணி அகலம் எய்தாது இராக் கழிந்தவாறு.
நான் ஊடினேன். அவன் உணர்த்தினான். நான் என் ஊடலை விட்டு உணர்ந்துகொண்டு கூடச் சென்றேன். அப்போது வழுதி நான் முன்பு ஊடினேன் என்று ஊடினான். நான் உணர்த்தினேன். அவன் உணரவில்லை. இப்படியே இரவெல்லாம் கழிந்துவிட்டது. குளிர்ந்த சந்தனம் பூசிய அவன் மார்பு எனக்குக் கிடைக்கவே இல்லை.

90[தொகு]

புல்லாதார் வல்லே புலர்கென்பர் புல்லினார்
நில்லா யிரவே நெடிதென்பர் – நல்ல
விராமலர்த் தார்மாறன் வெண்சாந் தகலம்
இராவளிப் பட்ட திது. – 90

புல்லாதார் வல்லே புலர்(கு) என்பர் புல்லினார் நில்லாய் இரவே நெடிது என்பர் நல்ல விராம் மலர்த் தார் மாறன் வெண் சாந்து அகலம் இரா அளிப் பட்டது இது.
இரவே! உடனே விடிந்துவிடு (புலர்க) என்று மாறனின் வெண்ணிறச் சந்தனம் பூசிய மார்பைத் தழுவப்பெறாதவர்கள் வேண்டுவர். தழுவப்பெற்றவர்கள் இரவே விடியாமல் நீண்டுகொண்டே இரு என்று வேண்டுவர். இப்படி இரங்கத்தக்க (அளி) இரவு என்னிடம் வந்திருக்கிறதே!

பாண்டியன் 91-95[தொகு]

91[தொகு]

பார்படுப செம்பொன் பதிபடுப முத்தமிழ்நூல்
நீர்படுப வெண்சங்கும் நித்திலமும் – சாரல்
மலைபடுப யானை வயமாறன் கூர்வேல்
தலைபடுப தார்வேந்தர் மார்பு.- 91

பார் படுப செம் பொன் பதி படுப முத்தமிழ் நூல் நீர் படுப வெண் சங்கும் நித்திலமும் சாரல் மலை படுப யானை வய மாறன் கூர் வேல் தலை படுப தார் வேந்தர் மார்பு.
மாறன் நிலமெல்லாம் செம்பொன்.
ஊரெல்லாம் முத்தமிழ் முழங்கும் நூல்கள்.
நீரெல்லாம் சங்கும், முத்தும்.
மலையெல்லாம் யானை.
பகைவேந்தர் மார்பெல்லாம் அவன் வேல்.
எனக்கு மட்டும் எதுவுமே இல்லையா

92[தொகு]

நந்தின இளஞ்சினையும் புன்னைக் குவிமொட்டும்
பந்தர் இளங்கமுகின் பாளையும் – சிந்தித்
திகழ்முத்தம் போற்றோன்றும் செம்மற்றே தென்னன்
நகைமுத்த வெண்குடையான் நாடு. – 92

நந்தின இளம் சினையும் புன்னைக் குவி மொட்டும் பந்தர் இளம் கமுகின் பாளையும் சிந்தித் திகழ் முத்தம் போல் தோன்றும் செம்மற்றே தென்னன் நகை முத்த வெண் குடையான் நாடு.
நந்துச் சங்குகளின் இள முட்டைகளும், புன்னைப்பூ மொட்டுகளும், பந்தர்த் துறைமுகத்தில் உள்ள பாக்குப் பாளைகளும் சிந்திக் கிடப்பதால் தென்னன் நாடெங்கிலும் முத்துக்கள் சிரிப்பது போல் தோற்றமளிக்கிறது. தென்னன் குடையிலும் முத்துக்கள் தொங்குகின்றன. இது இவன் நாட்டுக்குக் கிடைத்திருக்கும் செம்மாப்பு. எனக்குத்தான் அவன் பல்நகை முத்தம் கிடைக்கவில்லை.

93[தொகு]

மைந்தரோ டூடி மகளிர் திமிர்ந்திட்ட
குங்கும ஈர்ஞ்சாந்தின சேறுழக்கி – எங்கும்
தடுமாறல் ஆகிய தன்மைத்தே தென்னன்
நெடுமாடக் கூடல் அகம். – 93

மைந்தரோடு ஊடி மகளிர் திமிர்ந்து இட்ட குங்கும ஈர்ம் சாந்தின சேறு உழக்கி எங்கும் தடுமாறல் ஆகிய தன்மைத்தே தென்னன் நெடு மாடக் கூடல் அகம்.
மைந்தரோடு மகளிர் ஊடுவர். அப்போது மகளிர் அணிந்திருக்கும் ஈரக் குங்குமமும், மைந்தர் அணிந்திருக்கும் ஈரச் சந்தனமும் நிலத்தில் பட்டுச் சேறாகிப், போவார் வருவாரெல்லாம் வழுக்கித் தடுமாறும் தன்மை கொண்டது தென்னன் ஆளும் கூடல் நகரம்.

94[தொகு]

மடங்கா மயில்ஊர்தி மைந்தனை நாளும்
கடம்பம்பூக் கொண்டேத்தி அற்றால் – தொடங்கமருள்
நின்றிலங்கு வென்றி நிரைகதிர்வேல் மாறனை
இன் தமிழால் யாம்பாடும் பாட்டு. – 94

மடங்கா மயில் ஊர்தி மைந்தனை நாளும் கடம்பம்பூக் கொண்டு ஏத்தி அற்றால் தொடங்கு அமருள் நின்று இலங்கு வென்றி நிரை கதிர் வேல் மாறனை இன் தமிழால் யாம் பாடும் பாட்டு.
மடங்காத தோகையை உடைய மயிலை ஊர்தியாகக் கொண்ட முருகனைக் கடம்புப் பூப் போட்டுப் பூசை செய்வது எப்படியோ அப்படிப்பட்டதுதான் மாறனை இனிய தமிழால் நான் பாடும் பாடல் எனக் கொள்க. மாறன் தொடங்கிய போரிலெல்லாம் முருகனைப் போல வெற்றி கண்டு ஒளிரும் வேலை உடையவன்.

95[தொகு]

செங்கண் நெடியான்மேல் தேர்விசையன் ஏற்றியபூப்
பைங்கண்வெள் ஏற்றான்பால் கண்டற்றால் – எங்கும்
முடிமன்னர் சூடியபூ மொய்ம்மலர்த்தார் மாறன்
அடிமிசையே காணப் படும். – 95

செங்கண் நெடியான் மேல் தேர் விசையன் ஏற்றிய பூப் பைங் கண் வெள் ஏற்றான் பால் கண்டு அற்றால் எங்கும் முடி மன்னர் சூடிய பூ மொய்ம் மலர்த் தார் மாறன் அடி மிசையே காணப்படும்.
அருச்சுணன் திருமாலுக்குச் சாத்திய பூ அத்தனையும் காளைமாட்டு ஊர்திக் கடவுளிடம் (சிவன் திருவடிகளில்) கிடப்பதைக் கண்டனர். அப்படித்தான் மன்னர் முடியில் சூடிய பூக்கள் எல்லாம் மாறன் காலடியில் கிடந்தன. மாறனைத் தொழும்போது உதிர்ந்த பூக்கள் அவை.

பாண்டியன் 96-100[தொகு]

96[தொகு]

கூந்தன்மா கொன்று குடமாடிக் கோவலானாய்ப்
பூந்தொடியைப் புல்கிய ஞான்றுண்டால் – யாங்கொளித்தாய்
தென்னவனே தேர்வேந்தே தேறுநீர்க் கூடலார்
மன்னவனே மார்பின் மறு. – 96

கூந்தல் மா கொன்று குடம் ஆடிக் கோவலானாய்ப் பூந்தொடியைப் புல்கிய ஞான்று உண்டால் யாங்கு ஒளித்தாய் தென்னவனே தேர் வேந்தே தேறு நீர்க் கூடலார் மன்னவனே மார்பின் மறு.
தென்னவனே! தேர் வேந்தே! தெளிந்த நீர் ஓடும் கூடல் நகரக் கோமானே! நீதான் திருமால். (நெடியோன் என்பவன் பாண்டிய மன்னர்களில் ஒருவன்) நீ கண்ணனாகத் தோன்றிய காலத்தில் கூந்தல் என்னும் குதிரையைக் கொன்றாய். குடம் தலையில் வைத்துக்கொண்டு நடனம் ஆடினாய். அழகிய வளையல்காரி நப்பின்னையை (இராதையை)த் தழுவினாய். அப்போது உன் மார்பில் மறு இருந்ததே! (திருமகளை மார்பில் கொண்டிருக்கும் மறு) அதனை இப்போது எங்கே ஒளித்து வைத்து வைத்திருக்கிறாய்?

97[தொகு]

கண்ணார் கதவந் திறமின் களிறொடுதேர்
பண்ணார் நடைப்புரவி பண்விடுமின் – நண்ணார்தம்
தேர்வேந்தன் தென்னன் திருவுத் திராடநாள்
போர்வேந்தன் பூசல் இலன். – 97

கண்ணார் கதவம் திறமின் களிறொடு தேர் பண் ஆர் நடைப் புரவி பண் விடுமின் நண்ணார் தம் தேர் வேந்தன் தென்னன் திருவும் திராட நாள் போர் வேந்தன் பூசல் இலன்.
தென்னனை நினைக்காத பகைவர்களே! உங்கள் கதவினைத் திறந்துகொள்ளுங்கள். களிறும், தேரும், குதிரையும் போருக்காகப் பூட்டுவதை விட்டுவிடுங்கள். இன்று தென்னன் பிறந்த திருநாள். உத்திரட்டாதி நாள். தேரில் வருவான். ஆனால் போர் செய்யமாட்டான். அஞ்சவேண்டா.

98[தொகு]

நிறைமதிபோல் யானைமேல் நீலத்தார் மாறன்
குடைதோன்ற ஞாலத் தரசர் – திறைகொள்
இறையோ எனவந் திடம்பெறுதல் இன்றி
முறையோ எனநின்றார் மொய்த்து. – 98

நிறை மதி போல் யானை மேல் நீலத் தார் மாறன் குடை தோன்ற ஞாலத்து அரசர் திறை கொள் இறையோ என வந்து இடம் பெறுதல் இன்றி முறையோ என நின்றார் மொய்த்து.
நீலநிற வேம்புமாலை அணிந்துகொண்டு மாறன் உலா வருகிறான். அவனது வெண்கொற்றக் குடை நிறைந்த மதியம் போலக் காணப்படுகிறது. உலகத்து அரசர்களெல்லாம் திறை கொடுப்பதற்காக மொய்த்துக்கொண்டு வந்தனர். வரிசையில் காத்துக்கொண்டு நிற்கும்போது “இறைவா! இது முறையோ?” என முணுமுணுத்துக்கொண்டனர்.

99[தொகு]

நிரைகதிர்வேல் மாறனை நேர்நின்றார் யானைப்
புரைசை யைநிமிர்ந்து பொங்கா – அரசர்தம்
முன்முன்னா வீழ்ந்தார் முடிகள் உதைத்தமாப்
பொன்னுரைகல் போன்ற குளம்பு. – 99

நிரை கதிர் வேல் மாறனை நேர் நின்றார் யானைப் புரைசையை நிமிர்ந்து பொங்கா அரசர் தம் முன் முன்னா வீழ்ந்தார் முடிகள் உதைத்த மாப் பொன்னுரை கல் போன்ற குளம்பு. – 99
வேல் தாங்கி மாறன் போருக்கு எழுந்தான். சிலர் அவனை எதிர்த்தனர். மாறன் யானை அவர்களின் கோட்டையை நிமிர்ந்து பார்த்துப் பொங்கிப் பாய்ந்தது. மன்னர் பலர் போரிட்டு வீழ்ந்தனர். அவர்கள் தலையில் சூடியிருந்த முடி சிதறிக் கிடந்தது. மாறன் குதிரை அந்தப் பொன்முடிகளைக் காலால் இடறியது. அதனால் அதன் குளம்புகள் பொன்னை உரைத்துப் பார்க்கும் கட்டளைக்கல் போலக் காணப்பட்டது.

100[தொகு]

அருமணி அந்தலை யாடரவம் வானத்து
உருமேற்றை அஞ்சி ஒளிக்கும் – செருமிகுதோட்
செங்கண்மா மாறன் சினவேற் கனவுமே
அங்கண்மா ஞாலத் தரசு. – 100

அரு மணி அம் தலை ஆடு அரவம் வானத்து உரும் ஏற்றை அஞ்சி ஒளிக்கும் செரு மிகு தோள் செம் கண் மா மாறன் சின வேல் கனவுமே அம் கண் மா ஞாலத்து அரசு.
நஞ்சாகிய அரிய நீலமணியைக் கொண்ட நல்லபாம்பு வானத்தில் இடி முழக்கம் கேட்டால் அஞ்சி ஒடுங்கிக்கொள்ளும். அதுபோல சிவந்த கண்ணுடன் தோன்றும் மாறனின் சினங்கொண்ட வேலைக் கனவிலே கண்டு உலகிலுள்ள அரசர்கள் ஒடுங்கிக்கொள்வர்.
பாம்பு மணி உமிழுமா?
உமிழாது
தொண்டையில் நஞ்சு கொண்ட சிவனை மணிகண்டன் என்கிறோம்.
அதுபோல நாகத்தின் நஞ்சினை மணி என்கிறோம்.

பாண்டியன் 101-105[தொகு]

101[தொகு]

நேமி நிமிர்தோள் நிலவுதார்த் தென்னவன்
காமர் நெடுங்குடைக் காவலன் ஆணையால்
ஏம மணிப்பூண் இமையார் திருந்தடி
பூமி மிதியாப் பொருள். – 101

நேமி நிமிர் தோள் நிலவு தார்த் தென்னவன் காமர் நெடும் குடைக் காவலன் ஆணையால் ஏம மணிப் பூண் இமையார் திருந்து அடி பூமி மிதியாப் பொருள்.
ஆணைச் சக்கரத்தை உருட்டி நிமிர்ந்த தோளைக் கொண்டு விளங்குபவன் தென்னவன். எல்லோரும் விரும்பும் அகன்ற வெண்கொற்றக்குடையை உடையவன். கண் இமைக்காத தேவர் தமக்குப் பாதுகாவலாக மணிப்பூண் அணிந்தவர்கள். அவர்களின் காலடி மண்ணில் படுவதில்லை. காரணம் தென்னவன் ஆணைக்குக் கட்டுப்பட வேண்டி வருமே என்னும் அச்சம்.

102[தொகு]

செருவெங் கதிர்வேற் சினவெம்போர் மாறன்
உருமின் இடிமுரசு ஆர்ப்ப – அரவுறழ்ந்து
ஆமா உகளும் அணிவரையின் அப்புறம்போய்
வேமால் வயிறெரிய வேந்து. – 102

செரு வெம் கதிர் வேல் சின வெம் போர் மாறன் உருமின் இடி முரசு ஆர்ப்ப அரவு உறழ்ந்து ஆமா உகளும் அணி வரையின் அப்புறம் போய் வேமால் வயிறெரிய வேந்து.
வேலேந்தி மாறன் போருக்கு எழுவான். அப்போது அவன் போர்முரசம் இடி போல் முழங்கும். அந்த முழக்கத்தைக் கேட்ட ஆமா பாம்பைப் போல் மலையெங்கும் தாவும். பின்னர் அந்த மலைக்கு அப்பால் சென்ற பின்னரும் வயற்றெரிச்சலோடு நெஞ்சம் வெந்துகொண்டிருக்கும்.

103[தொகு]

மருப்பூசி யாக மறங்கனல்வேல் மன்னர்
உருத்தகு மார்போலை யாகத் திருத்தக்க
வையக மெல்லாம் எமதென் றெழுதுமே
மொய்யிலைவேல் மாறன் களிறு. - 103

மருப்பு ஊசியாக மறம் கனல் வேல் மன்னர் உருத் தகு மார்பு ஓலையாகத் திருத் தக்க வையகம் எல்லாம் எமது என்று எழுதுமே மொய் இலை வேல் மாறன் களிறு.
எழுதும் ஊசி கொண்டு ஓலை எழுதுவர். அதுபோல மாறனின் போர்யானை தன் கொம்பை எழுத்தாணி ஆக்கிக்கொண்டு உலகில் எதிர்த்த அனைத்து மன்னர் மார்புகளிலும் எழுதும். (குத்தும்)

104[தொகு]

உருவத்தார்த் தென்னன் ஓங்குஎழில் வேழத்
திருகோடுஞ் செய்தொழில் வேறால் – ஒருகோடு
வேற்றார் அகலம் உழுமே யொருகோடு
மாற்றார் மதில்திறக்கு மால். – 104

உருவத் தார்த் தென்னன் ஓங்கு எழில் வேழத்து இரு கோடும் செய் தொழில் வேறால் ஒரு கோடு வேற்றார் அகலம் உழுமே ஒரு கோடு மாற்றார் மதில் திறக்கும் ஆல்.
எல்லா யானைகளின் கொம்புகள் இரண்டும் ஒரே தொழிலைத்தான் செய்யும். ஆனால் தென்னவனின் போர்யானையின் இரண்டு கொம்புகளும் இருவேறு பணிகளைச் செய்யும். ஒரு கொம்பு பகையரசர் நெஞ்சில் உழும். மற்றொன்று பகையரசர் கோட்டை மதிலைத் திறக்கும்

105[தொகு]

தோற்ற மலைகடல் ஓசை புயல்கடாஅங்
காற்றின் நிமிர்ந்த செலவிற்றாய்க் – கூற்றுங்
குறியெதிர்ப்பைக் கொள்ளும் தகைமைத்தே யெங்கோன்
எறிகதிர்வேல் மாறன் களிறு. - 105

தோற்றம் மலை கடல் ஓசை புயல் கடாஅம் காற்றின் நிமிர்ந்த செலவிற்று ஆய்க் கூற்றும் குறியெதிர்ப்பைக் கொள்ளும் தகைமைத்தே எங்கோன் எறி கதிர் வேல் மாறன் களிறு.
எம் தலைவன் ஒளி வீசும் வேலை உடைய மாறன், அவன் களிறு தோற்றத்தில் மலை போன்றது. ஓசை புயல்மழையின் இடி முழக்கம் போன்றது. ஒழுகும் மதமும் புயல்மழை ஒழுகுவது போன்றது. அது காற்றைப்போல நிமிர்ந்து செல்லும். கொல்லும் திறத்தைக் கூற்றுவனும் கடன் வாங்கிக்கொள்ளும் திறம் படைத்தது.

பாண்டியன் 106-110[தொகு]

106[தொகு]

அடுமதில் பாய அழிந்ததன் கோட்டைப்
பிடிமுன் பழகழிதல் நாணி – முடியுடை
மன்னர் குடரால் மறைக்குமே செங்கனல்வேல்
தென்னவர் கோமான் களிறு. – 106

அடு மதில் பாய அழிந்த தன் கோட்டைப் பிடி முன்பு அழகு அழிதல் நாணி முடியுடை மன்னர் குடரால் மறைக்குமே செம் கனல் வேல் தென்னவர் கோமான் களிறு.
பகைவர் கோட்டையை அழித்துப் பாய்ச்சிய தன் கொம்பின் அழகு அழிந்து கிடப்பதைத் தன் பெண்யானைக்குக் காட்ட நாணி மன்னரைக் குத்திய குடரால் தன் கொம்பை மறைத்துக்கொண்டு தென்னவர் கோமான் களிறு வந்து நிற்கும்.

107[தொகு]

வெருவரு வெஞ்சமத்து வேலிலங்க வீழ்ந்தார்
புருவ முரிவுகண் டஞ்சி – நரிவெரீஇச்
சேட்கணித்தாய் நின்றிழைக்குஞ் செம்மற்றே தென்னவன்
வாட்கணித்தாய் வீழ்ந்தார் களம். – 107

வெரு வரு வெம் சமத்து வேல் இலங்க வீழ்ந்தார் புருவ முரிவு கண்டு அஞ்சி நரி வெரீஇச் சேட்கு அணித்தாய் நின்று இழைக்கும் செம்மற்றே தென்னவன் வாட்கு அணித்தாய் வீழ்ந்தார் களம்.
தென்னவன் வாளுக்கு இரையாகி வேலைத் தாங்கிய கையோடு போர்க்களத்தில் வீழ்ந்து கிடப்பவரின் புருவம் வளந்திருக்கும் சினத்தைக் கண்டு அஞ்சிப் பிணம் தின்னும் நரி வெருண்டு ஓடி அண்மைய தொலைவில் நின்று பார்த்துக்கொண்டே இருக்கும். இது போர்க்களக் காட்சியின் பயங்கரத் தோற்றம்.

108[தொகு]

ஏனைய பெண்டிர் எரிமூழ்கக் கண்டுதன்
தானையாற் கண்புதைத்தான் தார்வழுதி – யானையும்
புல்லார் பிடிபுலம்பத் தன்கண் புதைத்தே
பல்யானை அட்ட களத்து. – 108

ஏனைய பெண்டிர் எரி மூழ்கக் கண்டு தன் தானையால் கண் புதைத்தான் தார் வழுதி யானையும் புல்லார் பிடி புலம்பத் தன் கண் புதைத்தே பல் யானை அட்ட களத்து.
வழுதி போர்க்களத்தில் பகைவரை அழித்தான். கணவன் மாண்டது கண்டு அவன் பெண்டிர் தீயில் விழுந்து உயிர் விட்டனர். வழுதி அதனைப் பார்க்க முடியாதவனாய் இரக்கம் கொண்டு தன் மேலாடையால் தன் கண்களை மூடிக்கொண்டான். பகைவரின் களிறுகள் மாண்டுபோகவே அவற்றின் பெண்யானைகளும் புலம்பின. அதனைக் கண்ட வழுதியின் களிறும் தன் கண்களைத் தன் கைகளால் மூடிக்கொண்டது.

109[தொகு]

வாகை வனமாலை சூடி அரசுறையும்
ஓகை உயர்மாடத் துள்ளிருந்து – கூகை
படுபேய்க்குப் பாட்டயரும் பண்பிற்றே தென்னன்
விடுமாற்றங் கொள்ளாதார் நாடு. – 109

வாகை வன மாலை சூடி அரசு உறையும் ஓகை உயர் மாடத்து உள் இருந்து கூகை படு பேய்க்குப் பாட்டு அயரும் பண்பிற்றே தென்னன் விடு மாற்றம் கொள்ளாதார் நாடு.
தென்னன் ஆணையை ஏற்றுக்கொள்ளாத பகைவர் பிறரை வென்ற மாலையை அழகுடன் சூடிக்கொண்டு உவகையுடன் (ஓகை) இருப்பர். எனினும் கூகை அவர்களது மாடத்துக்குள்ளே இருந்துகொண்டு அவர்கள் சாவப்போவதைப் பாட்டாகப் பாடும். பேய்களை அழைத்துப் பாட்டுப் பாடும். இது தென்னன் அழிக்கப்போகும் அறிகுறிப் பாட்டு.

110[தொகு]

பறைநிறை கொல்யானைப் பஞ்சவர்க்குப் பாங்காய்த்
திறைமுறையின் உய்யாதார் தேயம் – முறைமுறையின்
ஆன்போய் அரிவையர் போய் ஆடவர்போய் ஆயிற்றே
ஈன்பேய் உறையும் இடம். – 110

பறை நிறை கொல் யானைப் பஞ்சவர்க்குப் பாங்காய்த் திறை முறையின் உய்யாதார் தேயம் முறை முறையின் ஆன் போய் அரிவையர் போய் ஆடவர் போய் ஆயிற்றே ஈன் பேய் உறையும் இடம்.
பஞ்சவர் என்னும் பாண்டியர்க்குத் தோழனாகித் திறை தந்து பிழைத்துக்கொள்ளாதவர் தேசமானது ஆனிரைகள், மகளிர், ஆடவர் ஆகியோர் விட்டுவிட்டுச் சென்றதால் பிணம் தின்னும் பேய் பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டு வாழும் இடமாக மாறிவிட்டது.

பாண்டியன் 111-115[தொகு]

111[தொகு]

கொடித்தலைத்தார்த் தென்னவன் தோற்றான்போல் நின்றான்
மடித்தவாய் சுட்டிய கையாற் – பிடித்தவேற்
கண்ணேரா ஓச்சிக் களிறணையாக் கண்படுத்த
மண்ணேரா மன்னரைக் கண்டு. – 111

தொடித் தலைத் தார்த் தென்னவன் தோற்றான் போல் நின்றான் மடித்த வாய் சுட்டிய கையால் பிடித்த வேல் கண் நேரா ஓச்சிக் களிறு அணையாக் கண் படுத்த மண் நேரா மன்னரைக் கண்டு.
தன் தாயக மண்ணை நினைத்து வேலைக் கையிலே தாங்கி வந்து கண்ணோட்டம் இல்லாமல் பாய்ச்சினான் அந்த வீரன். அவன் தன் களிறு மாண்டுகிடக்கும் மெத்தையில் கண்ணுறக்கம் கொண்டிருக்கிறான். சினம் கொண்டு மடித்த வாயோடு கிடக்கிறான். தன் கையால் தென்னவனைச் சுட்டிக்கொண்டு கிடக்கிறான். அதனைப் பார்த்துத் தென்னவன் தோற்றவன் போல் நின்றான். இப்படிப்பட்ட வீரனைக் கண்டு இரக்கப்பட்டு நின்றான்.

112[தொகு]

பாடல் 112

தொழில்தேற்றாப் பாலகனை முன்னேறீஇப் பின்னின்
அழலிலைவேல் காய்த்தினார் பெண்டிர் – கழலடைந்து
மண்ணீத்த லென்ப வயங்குதார் மாமாறன்
கண்ணீத்தந் தீர்க்கு மருந்து. – 112

தொழில் தேற்றாப் பாலகனை முன்னேறீஇப் பின்னின் அழல் இலை வேல் காய்த்தினார் பெண்டிர் கழல் அடைந்து மண் ஈத்தல் என்ப வயங்கு தார் மா மாறன் கண் நீத்தம் தீர்க்கும் மருந்து.
பெண்டிர் தம் போர்த்தொழில் பயிலாத பாலகனை முன்னே நிறுத்தி, மின்னும் வேலைக் கையிலே கொடுத்து, தாம் பின்னே நின்றுகொண்டு, அவனுக்கு தெம்புச்சூடு ஏற்றிப் போருக்கு அனுப்புவர். மாறன் இத்தகைய தாய்மாரின் காலைத் தொட்டு வணங்கி, தான் வென்ற நாட்டை அவளுக்குத் தருவான். இது மகனை இழந்த அந்தத் தாயின் கண்ணீர் வெள்ளத்தைத் தீர்க்கும் மருந்து.

113[தொகு]

சென்றதுகொல் போந்ததுகொல் செவ்வி பெறுந்துணையும்
நின்றதுகொல் நேர்மருங்கில் கையூன்றி – முன்றில்
முழங்கும் கடாயானை மொய்ம்மலர்த்தார் மாறற்(கு)
உழந்துபின் சென்றவென் நெஞ்சு. 113

சென்றதுகொல் போந்ததுகொல் செவ்வி பெறும் துணையும் நின்றதுகொல் நேர் மருங்கில் கையூன்றி முன்றில் முழங்கும் கடா யானை மொய்ம் மலர்த்தார் மாறற்(கு) உழந்து பின் சென்ற என் நெஞ்சு.
மாறன், முழங்கும் யானைக்கடாவின்மீது வருபவன். மலர்மாலையை அணிந்திருப்பவன். அவன் பின்னே என் நெஞ்சு சென்றது. அது இப்போது அவனிடம் சென்றுவிட்டதா? அவன் நெஞ்சில் புகுந்துவிட்டதா? அவனைப் பார்ப்பதற்கு அனுமதி வெறுவதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறதா? அவனுக்கு நேராகப் பக்கத்தில் தன் கையை ஊன்றி நின்றுகொண்டிருக்கிறதா? இல்லை முற்றத்திலேயே இருக்கிறதா? ஒன்றும் தெரியவில்லையே!

114[தொகு]

உழுத உழுத்தஞ்செய் ஊர்க்கன்று மேயக்
கழுதை செவிஅரிந்து அற்றால் – வழுதியைக்
கண்டநம் கண்கள் இருப்பப் பெரும்பணைத்தோள்
கொண்டன மன்னோ பசப்பு. 114

உழுத உழுத்தம் செய் ஊர்க் கன்று மேயக் கழுதை செவி அரிந்து அற்றால் வழுதியைக் கண்ட நம் கண்கள் இருப்பப் பெரும் பணைத் தோள் கொண்டன மன்னோ பசப்பு.
உழுது விதைத்து விளைந்த உழுந்து வயலில் புகுந்து ஊராரின் கன்றுக்குட்டி மேய்ந்துவிட்டது. அதற்குத் தண்டனை வழங்கியவர்கள் கழுதையின் காதை அறுத்துவிட்டனர். இது எப்படி நீதி ஆகும்? அது போலத்தான் இங்கும் நடக்கிறது. வழுதியைக் கண்டதோ என் கண். அதற்குத் தண்டனையாக என் தோளில் அல்லவா பசப்பு-நோய் ஏறுகிறது. இது அடுக்குமா?

115[தொகு]

நறுவேந்து கோதை நலங்கவர்ந்து நல்கா
மறவேந்தன் வஞ்சியான் அல்லன் – துறையின்
விலங்காமை நின்று வியன்தமிழ்நா டைந்தின்
குலங்காவல் கொண்டொழுகும் கோ. - 115

நறு வேந்து கோதை நலம் கவர்ந்து நல்கா மறவேந்தன் வஞ்சியான் அல்லன் துறையின் விலங்காமை நின்று வியன் தமிழ்நாடு ஐந்தின் குலம் காவல் கொண்டு ஒழுகும் கோ.
தமிழ்நாடு ஐந்து பிரிவுகளாகப் பிரிந்திருந்தது. அவற்றை வெவ்வேறு குலத்தவர் ஆண்டுவந்தனர். இந்த ஐந்து குலத்தவரையும் காக்கும் பொறுப்பினை மேற்கொண்டிருந்த கோமகன் பாண்டியன். அவன் தமிழ்நாடன். அவன் நல்ல வேந்தன். கோதைமாலை அணிந்தவன். என் நலத்தையெல்லாம் கவர்ந்துகொண்டவன். கவர்ந்துகொண்டு திரும்பத் தராதவன். மறம் நிறைந்த கொடுங்கோலன். அவன் வஞ்சியரசன் சேரன் அல்லன். எனக்கு வஞ்சனை செய்யாமல் இருப்பவனும் அல்லன். என்ன செய்வது? அவன்தான் என் கோமகன்.
5 பிரிவு – சேரர், சோழர், பாண்டியர், கொங்கர், தொண்டையர்

முன் தொகுப்பு (உரைக்காக)[தொகு]

பாடல் 1


செங்கால் மடநாராய்! தென்உறந்தை சேறியேல்,
நின்கால்மேல் வைப்பன்என் கையிரண்டும் - வன்பால்
கரைஉரிஞ்சி மீன்பிறழும் காவிரிநீர் நாடற்(கு),
உரையாயோ யான்உற்ற நோய்.

(அழகிய நாரையே, தெற்கேயுள்ள உறையூருக்குச் செல்வாயானால், உன் காலைப் பிடித்துக் கும்பிடத் தயார். தேகத்தின் வலிமை காரணமாகக் கரையின் மேல் உராய்ந்து, உராய்ந்து ஏறிய மீனானது மறுபடியும் நீரில் விழுந்து விடுகிற மீனின் தேகக்கொழுப்பு சோழனுக்கு யான் உற்ற காதல் கூறுவாயாக!) (சேரன் குறிப்பு: ‘மீன்கள் கரையின் மீது துள்ளிவிழுந்து விளையாடுகின்ற காவிரிநாடனுக்கு- சோழனுக்கு - மையலால் யானடைந்துள்ள துன்பத்தைக் கூறுவாயாக.) (‘கரையேறி மீன் விளையாடும் காவிரிநாடு’ என்பது இவ்வடியின் மீளாக்கமே.)


பாடல் 2


துடியடி, தோல்செவி தூங்குகை, நால்வாய்ப்
பிடியே! யான் நின்னை இரப்பல், கடிகமழ்தார்ச்
சேலேக வண்ணனொடு சேரி புகுதலும்எம்்
சாலேகம் சார நட.

(கெஞ்சி கேட்டுக்கொள்ளுகிறேன். வாசனை கமழும் மாலை சூடிய,சந்தனம் பூசிய பாண்டியனோடு, ஊருக்குள் பிரவேசிக்கவும் அதாவது,நீராடிவிட்டு உன்மேல் ஏறி ஊருக்குள் மன்னன் புகும் போது, எங்கள் வீட்டு ஜன்னலை ஒட்டி நடந்து வரவேண்டும்.)


பாடல் 3


குடத்து விளக்கே போல் கொம்பன்னார் காமம்
புறப்படா; பூந்தார் வழுதி - புறப்படில்,
ஆபுகு மாலை அணிமலையில் தீயே போல்
நாடறி கெளவை தரும்.

(பாண்டியன் மேல் பெண்கள் வைத்த காதல் வெளியே தெரியாது. மாலை சூடிய பாண்டியன் பவனி வருவதற்காகப் புறப்பட்டு விட்டாலோ பசுக்கள் மேய்ச்சல் புலங்களிலிருந்து ஊரு்க்குள் புகும் மாலை நேரத்தில் ஊருக்குப் பக்கத்தில் உள்ள மலைச்சரிவில், நாட்டார் எல்லோரும் அந்த பெண்களது காதல் நோயைத் தெரிந்து, வம்பளப்பதற்கு வாய்விடும்)


பாடல் 5


நீரும் நிழலும் போல் நீண்ட அருளுடைய
ஊரிரே ! என்னை உயக்கொண்மின் ! - போரிற்(கு)
உழலுங் களியானைப் பூழியர்கோக் கோதைக்(கு)
அழலும்என் நெஞ்சம் கிடந்து.


(காதல் நோயால் என் நெஞ்சு சதா கொதித்த வண்ணமாக இருக்கிறது. ஊரிரே என்னை உயக்கொண்மின்!)


பாடல் 6


போரகத்துப் பாயுமா ! பாயா(து) ஒருபடியா,
ஊரகத்து மெல்ல நடவாயோ ! - பார
மதவெங் களியானை மாறன் தன் மார்பம், -
கதவங்கொண்(டு) யாமும் தொழ

(இந்தக் கவி பெண்ணின் கூற்று என்பது மறைவாய் கிடக்கிறது. மார்பம் தொழ, கதவங்கொண்டு, என்னும் சொற்களை வைத்துத்தான் காதலுற்ற பெண் பேசுகிறாள். இப்படி காதலை மறைவில் வைத்துச் சொல்வதிலிருந்து ஒரு நாண பாவம் இருப்பதைத் தெளிவாக்குகிறது)


பாடல் 7


தெண்ணீர் நறுமலர்த்தார்ச் சென்னி இளவளவன்
மண்ணகம் காவலனே என்பரால் - மண்ணகம்
காவலனே ஆனக்கால் காவானே மாலைக்கண்
கோவலர்வாய் வைத்த குழல்

(தெளிந்த நீர்நிலைகளில் பூத்த செங்கழுநீர் மலர்களை மாலையாய்த் தொடுத்து அணிந்த சென்னி என்றும் இளவளவன் என்றும் பாராட்டப்படுகிற சோழன் உலகத்தைக் காக்கிறான் என்று சொல்லுகிறார்கள். கட்டளை இட்டுத் தடுக்க மாட்டானா இந்த மாலைப்பொழுது வந்துவிட்டதை அறிவிக்கும் வாய்வைத்து ஊதுகின்ற புல்லாங்குழலை)

  1. https://dsal.uchicago.edu/cgi-bin/app/tamil-lex_query.py?qs=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D&searchhws=yes
"https://ta.wikisource.org/w/index.php?title=முத்தொள்ளாயிரம்&oldid=1526126" இலிருந்து மீள்விக்கப்பட்டது