உள்ளடக்கத்துக்குச் செல்

முல்லைக்கலி 106 முதல் 110 முடிய

விக்கிமூலம் இலிருந்து

106 கழுவொடு சுடு படை சுருக்கிய தோல் கண். இமிழ் இசை மண்டை உறியொடு தூக்கி, ஒழுகிய கொன்றைத் தீம் குழல் முரற்சியர், வழூஉ சொல் கோவலர், தம் தம் இன நிரை பொழுதொடு தோன்றிய கார் நனை வியன் புலத்தார். அவ் வழி நீறு எடுப்பவை, நிலம் சாடுபவை, மாறு ஏற்றுச் சிலைப்பவை, மண்டிப் பாய்பவையாய்த் துளங்கு இமில் நல் ஏற்று இனம் பல - களம் புகும் மள்ளர் வனப்பு ஒத்தன. தாக்குபு தம் உள் பெயர்த்து ஒற்றி, எவ் வாயும், வை வாய் மருப்பினால் மாறாது குத்தலின், மெய் வார் குருதிய ஏறு எல்லாம் - பெய் காலைக் கொண்டல் நிரை ஒத்தன. அவ் ஏற்றை பிரிவு கொண்டு, இடைப் போக்கி, இனத்தோடு புனத்து ஏற்றி, இரு திறனா நீக்கும் பொதுவர் - உரு கெழு மா நிலம் இயற்றுவான், விரி திரை நீக்குவான், வியன் குறிப்பு - ஒத்தனர். அவரைக் கழல உழக்கி, எதிர் சென்று சாடி, அழல் வாய் மருப்பினால் குத்தி, உழலை மரத்தைப் போல் தொட்டன - ஏறு. தொட்ட தம், புண் வார் குருதியால் கை பிசைந்து, மெய் திமிரித் தங்கார் - பொதுவர் - கடலுள் பரதவர் அம்பி ஊர்ந்தாங்கு, ஊர்ந்தார், ஏறு. ஏறு தம் கோலம் செய் மருப்பினால் தோண்டிய வரிக் குடர் ஞாலம் கொண்டு எழூஉம் பருந்தின் வாய் வழீஇ, ஆலும் கடம்பும் அணிமார் விலங்கிட்ட மாலை போல், தூங்கும் சினை. ஆங்கு, தம் புல ஏறு பரத்தர உய்த்த தம் அன்பு உறு காதலர் கை பிணைந்து, ஆய்ச்சியர் இன்புற்று அயர்வர், தழூஉ. முயங்கிப் பொதிவேம்; முயங்கிப் பொதிவேம்; முலை வேதின் ஒற்றி முயங்கிப் பொதிவேம் - கொலை ஏறு சாடிய புண்ணை - எம் கேளே! பல் ஊழ் தயிர் கடையத் தாஅய புள்ளி மேல் கொல் ஏறு கொண்டான் குருதி மயக்குறப் புல்லல் எம் தோளிற்கு அணியோ! எம் கேளே! ஆங்கு, போர் ஏற்று அரும் தலை அஞ்சலும் ஆய்ச்சியர் காரிகை தோள் காமுறுதலும் இவ் இரண்டும் ஓராங்குச் சேறல் இலவோ? - எம் கேளே! 'கொல் ஏறு கொண்டான் இவள் கேள்வன்' என்று ஊரார் சொல்லும் சொல் கேளா, அளை மாறி யாம் வரும் செல்வம் எம் கேள்வன் தருமோ? - எம் கேளே! ஆங்க, அரும் தலை ஏற்றொடு காதலர்ப் பேணிச், சுரும்பு இமிர் கானம் நாம் பாடினம் பரவுதும்; ஏற்றவர் புலம் கெடத் திறை கொண்டு, மாற்றாரைக் கடக்க, எம் மறம் கெழு கோவே!

107 எல்லா! இ·து ஒன்று - கூறு குறும்பு இவர் புல் இனத்தார்க்கும், குடம் சுட்டவர்க்கும், எம் கொல் ஏறு கோடல் குறை எனக், கோவினத்தார் பல் ஏறு பெய்தார் தொழூஉ. தொழுவத்து சில்லைச் செவி மறைக் கொண்டவன் சென்னிக் குவி முல்லை கோட்டம் காழ் கோட்டின் எடுத்துக்கொண்டு, ஆட்டிய ஏழை இரும் புகர் பொங்க, அப் பூ வந்து என் கூழையுள் வீழ்ந்தன்று மன்; அதனைக், கெடுத்தது பெற்றார் போல், கொண்டு யான் முடித்தது கேட்டனள், என்பவோ, யாய்?

கேட்டால் எவன் செய்ய வேண்டுமோ? மற்று இகா? அவன் கண்ணி அன்றோ, அது? 'பெய் போது அறியாத் தன் கூழையுள் ஏதிலான் கை புனை கண்ணி முடித்தாள்' என்று, யாய் கேட்பின் செய்வது இல் ஆகுமோ மற்று? எல்லாத் தவறும் அறும். ஓஒ! அ·து அறும் ஆறு? ஆயர் மகன் ஆயின், ஆய மகள் நீ ஆயின், நின் வெய்யன் ஆயின், அவன் வெய்யை நீ ஆயின், அன்னை நோதக்கதோ இல்லை மன்; - நின் நெஞ்சம், அன்னை நெஞ்சு ஆகப் பெறின். அன்னையோ? ஆயர் மகனையும் காதலை; கைம்மிக ஞாயையும் அஞ்சுதி; ஆயின், அரிது அரோ நீ உற்ற நோய்க்கு மருந்து. மருந்து இன்று, யான் உற்ற துயர் ஆயின், - எல்லா! வருந்துவேன் அல்லனோ, யான்? வருந்தாதி - மண்ணி மாசு அற்ற நின் கூழையுள் ஏறு அவன் கண்ணி தந்திட்டது எனக் கேட்டுத், 'திண்ணிதாத் தெய்வ மால், காட்டிற்று இவட்கு' என, நின்னை அப் பொய் இல் பொதுவற்கு அடை சூழ்ந்தார் - தந்தையோடு ஐயன்மார் எல்லாம் ஒருங்கு.

108 இகல் வேந்தன் சேனை இறுத்த வாய் போல - அகல் அல்குல் தோள் கண் என மூ வழிப் பெருகி, நுதல், அடி, நுசுப்பு என மூ வழி சிறுகிக், கவலையால் காமனும் படை விடு வனப்பினோடு, அகல் ஆங்கண் அளை மாறி, அலமந்து பெயரும்கால், 'நகை வல்லேன் யான்' என்று என் உயிரோடு படை தொட்ட இகலாட்டி! நின்னை எவன் பிழைத்தேன், எல்லா! யான்?

அ·து அவலம் அன்று மன;

ஆயர் எமர் ஆனால் ஆய்த்தியேம் யாம் மிகக்; காயாம் பூம் கண்ணிக் கரும் துவர் ஆடையை, மேயும் நிரை முன்னர்க் கோல் ஊன்றி நின்றாய், ஓர் ஆயனை அல்லை; பிறவோ அமரர் உள் ஞாயிற்றுப் புத்தேள் மகன்? அதனால் வாய்வாளேன்;

முல்லை முகையும் முருந்தும் நிரைத்தன்ன பல்லும் பணைத் தோளும் பேர் அமர் உண் கண்ணும், 'நல்லேன், யான்,' என்று, நலம் தகை நம்பிய சொல்லாட்டி! நின்னொடு சொல் ஆற்றுகிற்பார் யார்?

சொல்லாதி;

'நின்னை தகைத்தனென்,' அல்லல் காண்மன். மண்டாத கூறி, மழ குழக்கு ஆகின்றே, கண்ட பொழுதே கடவரைப் போல, நீ பண்டம் வினாய படிற்றால் தொடீஇய, நின் கொண்டது எவன் - எல்லா! - யான்?

கொண்டது;

அளை மாறிப் பெயர் தருவாய்! - அறிதியோ? - அஞ்ஞான்று தளவ மலர் ததைந்தது ஓர் கானச் சிற்றாற்று அயல், இள மாங்காய் போழ்ந்தன்ன கண்ணினா, என் நெஞ்சம் களமாக் கொண்டு ஆண்டாய், ஓர் கள்வியை அல்லையோ?

நின் நெஞ்சம் களமாக் கொண்டு யாம் ஆளல் எமக்கு எவன் எளிது ஆகும் புனத்து உளான் என்னைக்குப் புகா உய்த்துக் கொடுப்பதோ? இனத்து உளான் எந்தைக்குக் கலத்தொடு செல்வதோ? தினைக் காலுள் யாய் விட்ட கன்று மேய்க்கிற்பதோ?

அனைத்து ஆக

வெண்ணெய்த் தெழி கேட்கும் அண்மையால், சேய்த்து அன்றி, அண்ண அணித்து ஊர் ஆயின், நன்பகல் போழ்து ஆயின், கண் நோக்கு ஒழிக்கும் கவின் பெறு பெண் நீர்மை மயில் எருத்து வண்ணத்து மாயோய்! மற்று இன்ன வெயிலொடு, எவன், விரைந்து சேறி? உது காண்.

பிடி துஞ்சு அன்ன அறை மேல, நுங்கின் தடி கண் புரையும் குறும் சுனை ஆடிப், பனிப் பூம் தளவொடு முல்லை பறித்துத், தனிக் காயாம் தண் பொழில், எம்மொடு வைகிப், பனிப் படச் செல்வாய், நும் ஊர்க்கு.

இனிச் செல்வேம் யாம்;

மா மருண்டன்ன மழைக் கண் சி(ற்)று ஆய்த்தியர் நீ மருட்டும் சொல்க் கண் மருள்வார்க்கு உரை, அவை; ஆ முனியா ஏறு போல் வைகல், பதின்மரைக் காமுற்றுச் செல்வாய்; ஓர் கண் குத்தி கள்வனை; நீ எவன் செய்தி, பிறர்க்கு?

யாம் எவன் செய்தும், நினக்கு?

கொலை உண் கண் கூர் எயிற்றுக் கொய் தளிர் மேனி, இனை வனப்பின், மாயோய்! நின்னின் சிறந்தார் நில உலகத்து இன்மை தெளி; நீ வருதி; மலையொடு மார்பு அமைந்த செல்வன் அடியைத் தலையினால் தொட்டு உற்றேன், சூள். ஆங்கு உணரார் நேர்ப; அது பொய்ப்பாய் நீ; ஆயின் - தேம் கொள் பொருப்பன் சிறுகுடி எம் ஆயர் வேந்து ஊட்டு அரவத்து, நின் பெண்டிர் காணாமை, காஞ்சித் தாது உக்கன்ன தாது எரு மன்றத்துத் தூங்கும் குரவையுஉள் நின் பெண்டிர் கேளாமை, ஆம்பல் குழலால் பயிர் பயிர் - எம் படப்பைக் காஞ்சிக் கீழ் செய்தேம் குறி.

109 கார் ஆரப் பெய்த கடி கொள் வியன் புலத்துப் பேராது சென்று, பெரும் பதவப் புல் மாந்தி, நீர் ஆர் நிழல குடம் சுட்டு இனத்து உள்ளும் போர் ஆரா ஏற்றின், பொரு நாகு, இள பாண்டில் தேர் ஊரச் செம்மாந்தது போல், மதைஇனள் - பேர் ஊரும் சி(ற்)று ஊரும் கௌவை எடுப்பவள் போல், மோரோடு வந்தாள் - தகை கண்டை; யாரோடும் சொல்லியாள் அன்றே வனப்பு!

பண்ணித் தமர் தந்து ஒரு புறம் தைஇய கண்ணி எடுக்கல்லாக் கோடு ஏந்து அகல் அல்குல் - புண் இல்லார் புண் ஆக நோக்கும்; முழு மெய்யும் கண்ணளோ? - ஆய மகள்! இவள் தான் திருத்தாச் சுமட்டினள், ஏனைத் தோள் வீசி வரிக் கூழ வட்டி தழீஇ, அரிக் குழை ஆடல் தகையள்; கழுத்தினும் வாலிது நுண்ணிதாத் தோன்றும், நுசுப்பு. இடை தெரியா ஏஎர் இருவரும் தம் தம் உடை வனப்பு எல்லாம் இவட்கு ஈத்தார் கொலோ? படை இடுவான் மன் கண்டீர், காமன் - மடை அடும் பாலொடு கோட்டம் புகின், இவள் தான், வருந்த நோய் செய்து இறப்பின் அல்லால், மருந்து அல்லள் - 'யார்க்கும் அணங்கு ஆதல் சான்றாள்' என்று ஊர்ப் பெண்டிர், 'மாங்காய் நறும் காடி கூட்டுவேம், யாங்கும் எழு நின் கிளையொடு போக' என்று, தம் தம் கொழுநரைப் போகாமல் காத்து, முழு நாளும், வாயில் அடைப்ப, வரும்.

110 கடி கொள் இரும் காப்பில் புல் இனத்து ஆயர் குடி தொறும் நல்லாரை வேண்டுதி - எல்லா! - இடு தேள் மருந்தோ, நின் வேட்கை? தொடுதரத் துன்னித் தந்தாங்கே நகை குறித்து, எம்மைத் திளைத்தற்கு எளியமாக் கண்டை. 'அளைக்கு எளியாள் வெண்ணெய்க்கும் அன்னள்' எனக் கொண்டாய் - ஒள் நுதால் ஆங்கு நீ கூறின், அனைத்து ஆக; நீங்குக; அச்சத்தான் மாறி, அசைவினான் போத்தந்து நிச்சம் தடுமாறும் - மெல் இயல் ஆய் மகள்! மத்தம் பிணித்த கயிறு போல் நின் நலம் சுற்றிச் சுழலும் என் நெஞ்சு.

விடிந்த பொழுதினும் இல் வயின் போகாது, கொடும் தொழுவினுள் பட்ட கன்றிற்குச் சூழும் கடும் சூல் ஆ நாகு போல், நின் கண்டு நாளும் நடுங்கு அஞர் உற்றது - என் நெஞ்சு.

எவ்வம் மிகுதர, எம் திறத்து, எஞ்ஞான்றும், நெய் கடை பாலின் பயன் யாதும் இன்று ஆகிக், கை தோயல் மாத்திரை அல்லது, செய்தி அறியாது - அளித்து என் உயிர். அன்னையோ? - மன்றத்துக் கண்டாங்கே, 'சான்றார் மகளிரை இன்றி அமையேன்' என்று, இன்னவும் சொல்லுவாய்; நின்றாய்; நீ சென்றீ; எமர் காண்பர்; நாளையும் கன்றொடு சேறும், புலத்து.