மூன்றாம் இராசராச சோழன் மெய்க்கீர்த்தி

விக்கிமூலம் இலிருந்து
  1. எண்களுடன் கூடிய வரிசை உறுப்பினர்

மூன்றாம் இராசராச சோழன் மெய்க்கீர்த்தி[தொகு]

மெய்க்கீர்த்தி: 01[தொகு]

  1. சீர்மன்னி இருநான்கு திசைவிளங்கு திருமடந்தையும்
  2. போர்மன்னு சயமடந்தையும் புவிமடந்தையு மணம்புணர
  3. அருமறைகள் நெறிவாழ அருந்தமிழோர் கிளைவாழப்
  4. பொருவில்மனு நெறிவாழப் பொன்மகுடம் கவித்தருளி
  5. வெங்கோ பக்கருங் கலிப்பகை விடநாகம்
  6. செங்கோலுங் கொடிப்புலியுத் திகிரிவரை வரம்பளக்க
  7. எண்டிசைமுகத் தெண்கரிக்கு மெடுத்ததனிக் கூடமென
  8. அண்டகூட முறநிமிர்ந்து முழுமதிக் குடைநின் றழகெறிப்ப
  9. நடுவுநின்று குடிகாத்து நன்றாற்றுந் திறம்பொறாது
  10. கடிதிழைத்த உட்பகையும் புறப்பகையு மறக்கடிந்து
  11. பொலந்திகிரி பதினான்கு புவனங்களு மடிப்படுத்தி
  12. இலங்குகதிர் வடமேருவி லிருந்தவயப் புலியேறென்னச்
  13. செம்பொன்வீர சிங்காசனத்துப் புவனமுழுதுடை யாளொடும்
  14. வீற்றிருந் தருளிய கோவிராச கேசரி வர்மரான
  15. திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீஇராஜராஜ தேவர்க்கு யாண்டு...


மெய்க்கீர்த்தி 02[தொகு]

  1. சீர்மன்னு மலர்மகளும் சிறந்தனி நிலைச்செல்வியும்
  2. பார்மன்னு பசுந்துளவச்சயமடந்தையு மனங்களிப்ப
  3. புகழ்மடந்தை புகழ்பாடப் புலமகளும் பூசுரரு
  4. முகமலர்ந்து கண்களிப்ப முனிவர்கணந் துதியெடுப்பத்
  5. தனித்துலக முழுதாளத் தடங்கரைப்பாற் கடல்பிரிந்த
  6. பனித்துளவ நறுந்தாமப் பரந்தாம னெனவந்து
  7. கடிமுரச மொருமூன்றுங் கடனான்கு மெனமுழங்கப்
  8. படிமுழுது மிருணீங்கப் பருதிதனிக் குலம்விளங்கக்
  9. கொடியேந்து புலியிமையக் குலவரைமேல் வீற்றிருப்ப
  10. முடிவேந்த ரடிசூட முறைமையினால் முடிசூடி
  11. வடவரையின் படவரவின் மணிமுடியும் பொடியாகத்
  12. தடவரையின் நெடுந்தோளின் வாரணிகலன் தரித்தருளிப்
  13. பாரேழும் பொழிலேழும் படிபரிக்கும் கிரியேழும்
  14. நீரேழுந் தனிகவித்து நிறைமதிவெண் குடைநிழற்றப்
  15. புறவாழியும் வரையாழியும் பூதலமும் பொதுநீக்கி
  16. அறவாழியுஞ் செங்கோலு மனந்தகற்பகா லம்புரக்க
  17. ஒப்பரிய மறைநாலும் உரைதிறம்பா மனுநூலுஞ்
  18. செப்பரிய வடகலையும் தென்கலையுந் தலையெடுப்ப
  19. நீதிதரு குலநான்கும் நிலைநான்கு நிலைநிற்ப
  20. ஆதியுகங் குடிபுகுத அறுசமையந் தழைத்தோங்க
  21. பொருதுறையுஞ் சினவேங்கையு மடமானும் புகுந்துடனே
  22. யொருதுறைநீ ரினிதுண்டு பகையின்றி யுறவாடப்
  23. புயல்வாரி பொழிவிக்கும் பொற்றொடியவர் கற்புயர
  24. வயல்வாரி வளம்பெருகி மறையவர்முத் தமிழ்வளர்க்கும்
  25. நெறிமுறைமை யினிதீண்டித் தனதாணை திசைநடப்ப
  26. நிருபர்குலம் பெலம்படர நிலங்காவற் றொழில்பூண்டு
  27. செருவலியில் முருகனென்றுந் திருவடியில் மதனனென்றும்
  28. பெருகொளியில் பருதியென்றும் பெருந்தகைமையிற் றருமனென்றும்
  29. தண்ணளியில் மதியென்றுந் தனந்தருதலிற் றாயென்றும்
  30. மண்ணுலகத் திகல்வேந்தரு மறைவாணரும் போற்றெடுப்ப
  31. மீனவருஞ் சிங்களரும் விக்கலரும் கற்கடரும்
  32. வானவரும் குந்தளரும் வங்களரும் பார்மருங்கு
  33. பல்லவரும் மாகதரும் பாஞ்சாலரும் காம்போசரும்
  34. கொங்கணரும் திரிகத்தரும் கூபகருஞ் சாவகரும்
  35. பண்டையரும் திருவடிக்கீழ்ப் பரிந்துதிறை சொரிந்திறைஞ்ச
  36. எண்டிசையும் புரந்தளிக்கும் இராஜராஜதுங்கன் இராஜராஜன்
  37. மலைபேரிலும் வான்பேரிலும் மாதிரங்கால்
  38. நிலைபேரிலும் பேராத நெஞ்சுடைய செஞ்சேவகன்
  39. அலகில்பெரும் புகழாகரம் மங்கையருக் கரசாகி
  40. உலகுடைய பெருமாளுடன் ஒக்கமணி முடிகவித்தாள்
  41. உறந்தைவள நகரம்போல உலகமொரு பதினான்கும்
  42. பிறந்துடையாள் இராஜராஜன் பிரியா வேளைக்காரி
  43. இயல்வாழவும் இசைவாழவும் இமையமலை மகளறத்தின்
  44. செயல்வாழவும் ராஜராஜன் திருத்தாலி பெற்றுடையார்
  45. அரசிறைஞ் சழக னருணிறைந்த வுலகதனில்
  46. உரைசிறந்த தனியாணை உடனாணை பெற்றுடையாள்
  47. தவளவயப் பரிகண்டன் காத்தளிக்குங் கற்பகாலம்
  48. புவனியெழத் தனதாணையிற் புரக்குமந்தப் புரப்பெருமாள்
  49. பொய்யாநெடு நிலநான்கும் பொருகுடையி னிருநான்கு
  50. மாதிரமும் விளங்கவந்த வாணர்குல நிலைவிளக்கு
  51. குலகரியெட் டும்பரித்த குலவட்ட மலர்கவிகைச்
  52. சக்கரவர்த் திதனந்தப் புரச்சக்கர வர்த்தி
  53. காசெறியகோ டெயில்வானவர் சசிகுலதீ பதராபதி
  54. மாதேவியார் தொழுதிறைஞ்சும் மடந்தைமங் கையர்தம்பெருமாள்
  55. அவ்வுலகத் தருந்ததியும் அதிசயிக்கும் பெரும்கற்பால்
  56. இவ்வுலகத் தருந்ததியென விசைதந்த திசைவிளங்கத்
  57. திருந்தியவேல் இராஜராஜன் ராஜேந்திரன் திருவருளென்னும்
  58. பெருந்தனிப்பாற் கடல்படிந்து விளையாடும் பெடையன்னம்
  59. ஆணையெங்குந் தனதாக்கிய ஆதிராஜன் மாதேவி
  60. வளர்வங்க சூளாமணி மறையவர்தொழுஞ் சிந்தாமணி
  61. சோணாடன் இராஜராஜன் சுரிமலர்ப்பூந் துழாய்மார்பி்ல்
  62. பூணார மெனவிளங்கிய புவனமுழு துடையாளும்
  63. அனந்தகற்ப நாள்பிரியாது மனங்களித்து மணம்புணரச்
  64. செம்பொன் வீரஸிம்ஹா சனத்துப் புவனமுழுதுடை
  65. யாளொடும் வீற்றிருந் தருளியகோ ராஜகேசரி
  66. வந்மரான திரிபுவனச் சக்கர வர்த்திகள்
  67. ஸ்ரீராஜராஜ தேவற்கு யாண்டு நாலாவது...



மெய்க்கீர்த்திகள் :[[]] :[[]] :[[]]