உள்ளடக்கத்துக்குச் செல்

மௌனப் பிள்ளையார்/007-015

விக்கிமூலம் இலிருந்து

வைத்தியர்

கத்தியபுரம் ஸ்டேஷனில் தினமும் ஒரு ரூபாய் ஏழே காலணாவுக்கு டிக்கட் விற்று வந்தார்கள். ஓரோர் தினத்தில் இரண்டு ரூபாய்க்கு வியாபாரம் நடந்து விட்டதானால், ஸ்டேஷன் மாஸ்டர் மூர்ச்சை போட்டு விழுவது வழக்கம்.

அகத்தியபுரம் என்று ஓர் ஊர் இருப்பதாகவே வெகு நாள்வரை தமிழ் நாட்டு ஜனங்களுக்குத் தெரியாமலிருந்தது. ஆகவே, ஜனங்கள் போக்கு வரத்தும் அந்த ஸ்டேஷனில் குறைவு.

அந்த ஊரில் ஒரு கோயிலோ, குளமோ, அல்லது ஒரு குட்டையோ விசேஷமாக இருந்தால்தானே ஜனங்கள் வருவார்கள்? மெனக்கட்டு ஊர் என்று ஒன்று இருந்தால் அங்கே ஏதோ ஒரு தொழிலாவது பிரசித்தி அடைந்திருக்க வேண்டும். ஒன்றுமில்லாத ஊரைக் கண்ணெடுத்தும் பார்ப்பவர்கள் யார்? எனவே ரயில்வே ஸ்டேஷனில் போர்ட்டர் முதற்கொண்டு ஸ்டேஷன் மாஸ்டர் வரை சீட்டாடுவதைத் தவிர்த்து வேறு வேலையின்றித் தவியாய் தவித்தார்கள்.

இப்படிக் காசுக்கு உதவாத அந்த ஊர் மிகப்பிரசித்தி பெற்ற கிராமமாக மாறிவிடும் என்று அந்தச் சங்கரனுக்கே தெரியாது.

ங்கரன் ஒரு சாமான்ய மனிதன். அவனுக்கு ஆஸ்திக புத்தி அபாரமாயிருந்தது. "கடவுளை நம்பினோர் கைவிடப்படார்" என்ற முதுமொழியை நம்பி வாழ்ந்து வந்தான் அவன்: வேதாந்தி. உலக வாழ்க்கையே மாயம், அதில் தான் இருப்பது நியாயம் என்று அவன் எண்ணிக்கொண் டிருக்கவில்லை.

சங்கரனுக்கு ஸ்வப்பன சாஸ்திரத்தில் பரம நம்பிக்கை உண்டு. பிரதி தினமும் ராமாயணப் பாராயணத்திற்குப் பிறகு, திரிஜடையின் சொப்பன கட்டத்தை ஒருமுறை படித்து' முடிப்பான். அவனுக்கு அதில் அவ்வளவு நம்பிக்கை. 'ஸம்சயாத்மா விநச்யதி' என்று பகவான் ஏன் சொன்னார்? நம்பிக்கையற்றவன் நாசமடைவான் என்பதுதானே அதன் தாத்பர்யம்? ஆகையால் எதிலும் நம்பிக்கை வை, அது ஸ்வப்பனமாயிருந்தால் என்ன, பனங் கற்கண்டாய் இருந்தால் என்ன? நம்பினவன் மோசம் போகான் என்று இப்படி யெல்லாம் கனாக்கண்டு வந்தான் சங்கரன்.

ஒரு நாள் கனவில் ஒரு குள்ள உருவம் சங்கரன்முன் சான்னித்யமாயிற்று. அது யார்? அவர்தான் ஆயுர்வேதப் பிதா அகத்தியமா முனிவர். சங்கரன் ஸ்வப்பனத்தில் தோன்றி, "அப்பா, இந்தா; இந்த ஏனத்தை வைத்துக் கொள். நீ கடவுளை நம்புகிறாய்; அதற்குப் பதிலாகக் கடவுள் என்னை இந்த மருந்தை உன்னிடம்கொடுத்துவரச் சொன்னார். இதற்கு அகத்திய கல்பத்வஜம் என்று பெயர். நீ நாளை முதல் கடவுளின் கட்டளைப்படி வைத்தியனாகி இந்த உலகுக்கு உதவி புரிவாயாக. அவரவர்கள் சக்திக்குத் தக்கபடி கொடுக்கும் பணத்தை உன் வயிற்றுப் பிழைப்புக்கு உபயோகித்துக்கொள்" என்று சொல்லி மறைந்தார்.

கண் விழித்துப் பார்த்தான் சங்கரன். அங்கே அகஸ்தியரையும் காணோம். அவர் கொடுத்த ஏனத்தையும் காணோம்.

"ஸம்சயாத்மா விநச்யதி!" — சந்தேகப் படுகிறவன் நாசமடைவான். ஏன் அகஸ்தியர் கொடுத்த ஏனம் இல்லையென்று சந்தேகப்பட வேண்டும்? அவர் கொடுத்தால்தான் அது இருக்கவேண்டுமா? கொடுக்காமலேயே அது இருக்கக் கூடாதா?

'இதோ' என்று சங்கரன் திரும்பிப் பார்த்தான். சமையலறை அலமாரியில் அவன் மனைவி வைத்திருந்த மிளகு ஏனம் தென்பட்டது. "ஆ! அகத்தியர் இன்று காட்டியதும் இந்த அருமை ஏனம்தானென்று நம்பினான். இதோ வைத்தியனானேன்! இன்றே இதை உலகத்திற்கு அறிவிக்கிறேன் என்று ஒரு கரும் பலகையில், "அகத்திய கல்பத்வஜம்; தீராத வியாதிகளைத் தீர்த்து வைக்கும். அகத்தியர் கனவில் தோன்றி அருளிச் செய்த மருந்தைச் சாப்பிட்டு இன்றே உங்கள் வியாதிகளைப் போக்கிக் கொள்ளுங்கள்” என்று


எழுதித் தன் வீட்டு வாசலில் தொங்க விட்டான். அவ்வளவு தான் !

இந்த விஷயம் அக்கம் பக்கம் உலவி பிறகு நாடெங்கும் காட்டுத்தீ போல் கன சீக்கிரத்தில் பரவியது.

காயகல்ப சிகிச்சை செய்து கொள்ளலாமா என்று யோசித்துக்கொண்டிருந்த கிழங்களெல்லாம் சங்கரனை நாடிப் போனார்கள்.

நாட்டின் நாலா பக்கத்திலிருந்தும் ஜனங்கள் சங்கரனைத் தேடி வந்து புடைசூழ நின்றுகொண்டு, “கொண்டா அந்த மருந்தை” என்று கூக்குரலிட்டனர்.

நற்சாட்சிப் பத்திரங்களெல்லாம் சங்கரன் மேஜையில் வந்து குவிந்த வண்ணம் இருந்தன. கடிதத்தை மட்டும் இங்குத் தருகிறோம்:

“ஐயா.

எழுந்து நடக்கக்கூடச் சக்தியின்றித் தடியைப் பிடித்துத் தள்ளாடித் தள்ளாடி நடந்து கொண்டிருந்த எங்கள் வீட்டுக் கிழத்திற்கு உங்கள் அகஸ்தியர் லேகியத்தை ஒரு தடவை கொடுத்துப் பார்த்தோம். அவ்வளவுதான்; சாப்பிட்ட இரண்டு நிமிஷத்திற்கெல்லாம் அந்தக் கிழவர், யௌவனத்தை அடைந்து விட்டார். இன்னும் கொஞ்சம் உங்கள் லேகியத்தைக் கொடுத்துவிட்டேன். இப்போது “அப்பா ! நான் பள்ளிக்கூடம் போகவேண்டும். ‘ஐஸ்கிரீம்’ வாங்கிச் சாப்பிடவேண்டும். காலணாக் கொடு” என்று பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்து விட்டார். எனக்கு வெளியே சொல்லிக் கொள்ள வெட்கமா யிருக்கிறது ; வீட்டுக்குள்ளேயே இந்தப் புதுப் பையனை வைத்திருக்க விரும்புகிறேன். அவருக்கு விளையாட ஒரு பம்பரமும் நாய்க்குட்டியும் வாங்கத் தீர்மானித்திருக்கிறேன். இதெல்லாம் உங்களுடைய மருந்தினால் வந்த ரகளை அல்லவா?

இப்படிக்கு,

ஒரு கிரகஸ்தன்.”

டாக்டர் ஷங்கருக்கு நாடி பிடித்து பார்க்கக்கூடத் தெரியாது. என்றாலும் ஊரார்· 'டாக்டர், டாக்டர்' என்று அவரைக் கொண்டாடுகிறார்கள்.

எப்படி அந்தப் புகழ் வந்தது? அகத்தியர் அருளிச் செய்த மருந்தைச் சகல விதமான ரோகங்களுக்கும் சங்கரன் கொடுத்து வருகிறான். ஆனால் அவன் சொல்லும் முறை மிக மிக விசித்திரமானது! அதன்படி செய்தால் உடனே எந்த வியாதிகளும் குணமாகிறது.

தலைவலி வந்தால் 'யூகலிப்டஸ்' ஆயிலில் இந்தப் பௌடரைக் கலந்து பத்துப் போட்டுக் கொள்ளவேண்டும்.

ஜுரம் வந்தால் சுக்குக் கஷாயத்தில் இந்த மருந்தைக் கலக்கிச் சாப்பிட வேண்டும்.

இப்படிச் சங்கரன் கொடுத்த அகஸ்திய மருந்தைச் சாப்பிடப் பல ஊர்களிலிருந்தும் ஜனங்கள் திரண்டு வந்து கொண்டே இருந்தனர். ஈ ஒட்டிக் கொண்டிருந்த ஸ்டேஷனில் இப்பொழுது ஒரு கொசு நுழையக்கூட இடம் கிடையாது. டாக்டர் சங்கரன் ஒரு பெரிய லக்ஷாதிபதியாக மாறினான்.

கொச்சியில் மிளகு எஸ்டேட்கூட ஒன்று வாங்கி விட்டானாம். இவ்வளவும் வைத்தியத்திற்கு வருகிறவர்கள் அவரவர்கள் இஷ்டப்படி காலணா அரையணா என்று கொடுத்த காசு தான்.

"யார் அது? உங்களைத்தானே! உடம்பு சரியாயில்லை என்று சொன்னீர்களே? மிளகுக் கஷாயம் போட்டுவைத்திருக்கிறேன். மணி எட்டடித்து விட்டது. இன்னும் தூங்குகிறீர்களே! எழுந்து கஷாயத்தைச் சாப்பிடுங்கோ! மிளகுக் கஷாயத்தின் மகிமை உங்களுக்குத் தெரியவில்லையே? சகல வியாதிக்கும் நல்லதாயிற்றே!" என்ற கம்பீரமான அவன் மனைவியின் குரல் சங்கரனுக்குக் கேட்டது!

"https://ta.wikisource.org/w/index.php?title=மௌனப்_பிள்ளையார்/007-015&oldid=1681416" இலிருந்து மீள்விக்கப்பட்டது