மௌனப் பிள்ளையார்/009-015
இலவசப் பிரயாணம்
அன்று நான் பங்களூருக்குப் போவதற்காக ஸ்டேஷனுக்குப் போய் ரயில் ஏறப் போனேன். கூட்டம் சொல்ல முடியாமலிருந்தது. எள்ளுப்போட்டால் அது கீழே விழாது. யார் தோளிலாவது தொத்திக்கொண்டுதான் நிற்கும். அப்படித் தொத்திக்கொண்டு நிற்கிறதா என்று பார்க்க நான் அன்று கையோடு எள் எடுத்துக்கொண்டு போகவில்லை. எனவே அதற்குப் பதிலாக நானே ஒருவருடைய தோளில் தொத்திக்கொண்டு நின்றேன்.
பங்களூர் பாஸஞ்சர் ஸெண்ட்ரல் ஸ்டேஷனை விட்டுச் சாவதானமாகக் கிளம்பியது. ரயில் சிறிது நேரத்துக்கெல்லாம் அதிவேகமாகப் போக ஆரம்பித்தது.
நான் நின்றுகொண்டிருந்த வண்டியில் ஒரு முரட்டு ஆசாமி காலை நீட்டிக்கொண்டு ஒரு பெரிய படுக்கையைப் பக்கத்தில் பரப்பிவிட்டு உட்கார்ந்திருந்தான். கொஞ்சம் கூட மட்டு மரியாதையில்லாத மனுஷன்! படுக்கையோடு விட்டானா? அதற்குப் பக்கத்தில் ஒரு பெரிய பெட்டி, அதன் பக்கத்தில் கூஜா, விசிறி இவைகளையெல்லாம் வைத்திருந்தான். கிட்டத்தட்ட நாலு பேர் உட்காரக்கூடிய இடத்தில் இதெல்லாம் போட்டு அடைத்து வைத்திருந்தான் என்றால் வண்டியில் இருப்பவர்களுக்குக் கோபம் வருமா வராதா?
பெட்டியிலிருந்தவர்களுக்குக் கோபம் மூக்குக்குமேல் வந்தது. ஆனால் வெளிக்குக் காட்டிக்கொள்ளவில்லை. பயங்காளிகள்! அந்த முரட்டு ஆசாமி மீசையை வைத்துக்கொண்டு பார்வைக்கு மிகவும் பயங்கரமா யிருந்ததுதான் அவர்களெல்லாம் பயந்ததற்குக் காரணம். இவர்கள் ஆண் பிள்ளைகளாம்!
யாராவது துணிச்சலாக அந்த ஆசாமியிடம் போய், "ஓய்! இந்தப் பெட்டி படுக்கையெல்லாம் எடுக்கப் போகிறீரா இல்லையா?" என்று கேட்க வேண்டுமே? உஹூம்; கிடையவே கிடையாது! நான் மாத்திரம் கேட்டுவிடலாமா என்று சிறிது ஆத்திரப்பட்டேன். ஆனால் நமக்கு ஏன் இந்தக் கிரகசாரங்களெல்லாம்? எப்படியாவது இப்படித்தான்