யந்திரம்

விக்கிமூலம் இலிருந்து

முத்தாயியை உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.

ஏனென்றால் நீங்கள் எங்கள் காலனியில் வாழ்பவரல்ல; வாழ்ந்திருந்தாலும், அல்லது வாழ்ந்துகொண்டிருந்தாலும் உங்களுக்கு அவளைத் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கு ஐந்து வயதுக்குமேல் பத்து வயதுக்குள் ஒரு மகன் அல்லது மகளிருந்தால் அந்தப் பிஞ்சு மனம் அவளைத் தெரிந்து வைத்திருக்கும்.

நீ தெரிந்துவைத்திருக்கிறாயே என்கிறீர்களா? அது வேறு விஷயம். எனக்குக் கூடுவிட்டுக் கூடுபாயத் தெரியும். அதன்படி, நான்--குழந்தை, பெண், தாய், கிழவன், கிழவி, மிருகம், பறவை, அசுரன், தேவன்'...

அதுபோகட்டும்? அப்படி முத்தாயி என்ன தேவேந்திரப் பெண்ணா என்று கேட்காதீர்கள்.

அவளை என்னவென்று சொல்வேன்' பாசமும் கனிவும் அன்பும் ஆதரவும் மிக்க ஒரு பாட்டி என்று கூறலாமா?...

அல்ல; அவள் ஒரு யந்திரம். எங்கள் காலனியில் முப்பது வீடுகளுக்குக் குறைவில்லை. சராசரி கணக்கெடுத்தால் அவளது துணையுடன் பள்ளி செல்லவேண்டிய பருவத்தில் உள்ள பிள்ளைகள் வீட்டுக்கு ஒன்று தேறும்.

இது என் மானசிகக் கணிப்புத்தான். தவறாக இடமில்லை. ஏனென்றால் குழந்தைகளை என்னைப்போல் கவனிக்க யாராலும் முடியாது....--எனக்குத்தான் வேறு வேலை'... நாளெல்லாம் வீட்டு வராந்தாவில் நின்றுகொண்டு--அங்கு நின்று பார்த்தால் எங்கள் காலனியில் இருக்கும் எல்லா வீடுகளையும் கவனிக்க முடியும்...காய்கறிக்கரிகளை, பிச்சைக்காரர்களை, பள்ளி செல்லும் மாணவ மாணவிகளை, சமயா சமயங்களில் குறிப்பாகப் பெண்களைக் கவனித்தவாறு நிற்பது எனக்கு ஓர் அருமையான பொழுதுபோக்கு. சிலர் சில சமயங்களில் என்னைப் பார்ப்பார்கள்...நானும் பார்ப்பேன்.

பார்த்துப் பார்த்துப் பழகிய சிநேகிதிகள் எனக்கு ஏராளம்' பேசவோ பழகவோ நான் விரும்பியதில்லை. அவர்களில் சிலராவது விரும்பினார்களா என்று எனக்குத் தெரியாது.

ஆனால் நிச்சயமாக அந்த வட்டாரத்தில் நடமாடும் பெண்கள் அனைவருக்கும் என்னைத் தெரியும். எனக்கும் அவர்கள் எல்லோரையும் தெரியும்.

ஆனால்?... நான் பார்த்தும் என்னைப் பார்க்காத, நான் ஒருவன் அங்கு நின்று விழி வட்டம் போடுவதை அறியாத ஒரு பிறவி அங்கு உண்டு என்றால், அறுபதையும் கடந்த அந்த முதுகிழவி முத்தாயி ஒருத்திதான்'

நான் அந்தக் காலனிக்குக் குடிவந்த ஏழு ஆண்டுகளாய் முத்தாயியை அறிவேன்.

பஞ்சுபோல் நரைத்த சிகை; பழுத்து வதங்கிய சருமம்; குழி விழுந்த தொங்கிய கன்னங்கள்; இன்னும் பற்கள் இருக்கின்றன; நல்ல உயரமானவளாய் இருந்திருக்க வேண்டும்.

--இப்பொழுது, வாழ்ந்த வாழ்வின் சுமையால் வளைந்து போயிருக்கிறாள்.

அவள் கண்கள்...

அவற்றைத்தான் நான் பார்த்ததில்லையே...

எங்கள் காலனியின் நடுவே இருக்கும் மணிக்கூண்டு காலை ஒன்பது மணிக்கு ஒலிக்க ஆரம்பிக்கும்போது அவள் வருவாள். அவள் நடையில் சதா ஒரு வேகம்; அவசரம்.

--வாழ்வைக் கடக்கப் பறந்தோடும் அவதியா, என்ன?...அவளது இயல்பே அப்படித்தான்'

--வாழ்வு நடக்க நடக்க மாளாதது. ஏனென்றால் தனிப்பட்ட ஒருவருடையதா வாழ்க்கை? அது மனித சமூகத்தின் ஆதி அந்தமற்ற சரிதை'

அதைப்பற்றியெல்லாம் அவள் சிந்திப்பதில்லை...ஏன், நேரமில்லையா? நேரம் உள்ளவர்களெல்லாம் சிந்திக்க முடியுமா? சிந்தனை' அதன் முழு அர்த்தத்தோடும் சொல்கிறேன்...அது விளக்க முடியாதது...சிந்தனை ஒரு வரப் பிரசாதம்' சிந்தனையின் ஆதியும் அந்தமும்...சிந்திக்கச் சிந்திக்க வியப்பாகத்தான் இருக்கிறது'

அவளைப் பார்த்தால் எதைப்பற்றியும் சிந்திப்பவளாகத் தெரியவில்லை.

என்ன சொன்னேன்'...ஆமாம்; முத்தாயியைப்பற்றி...அவள் தினசரி காலை ஒன்பது மணிக்கு வருவாள். அவசரம் அவசரமாக வருவாள். வரும்போதே...

"பாலா...பாலா...நாழியாச்சே....பொறப்படலியா..." என்ற குரல் நாலு வீடுகளுக்குக் கேட்கும். பாலா என்ற இளஞ் சிறுவன் அந்த வீட்டிலிருந்து தோளில் தொங்கும் பையுடன் அவசரம் அவசரமாக ஒரு காலில் மேஜோடும் மற்றொரு காலில் ஷ்ஊஸ்உமாக நிற்பான்...அதையெல்லாம் அவள் கவனிக்கமாட்டாள்.

ஒரு காலில் மேஜோடும் ஒரு கையில் ஷ்ஊஸ்உமாக அவனைத் தூக்கிக்கொண்டு, அதை சரியாகவோ சரியில்லாமலோ அவன் காலில் மாட்டியவாறே, அடுத்த வீட்டு வாசலில் நின்று, "சங்கர்...சங்கர்" என்று அவள் கூவுவாள்.

சங்கர் அப்பொழுதுதான் சாப்பிட்டுக்கொண்டிருப்பான்.

"சீக்கிரம்...சீக்கிரம்" என்று முத்தாயி குரல் கொடுப்பாள். சாப்பிட்ட வாயைக் கழுவாமல்கூட அவன் ஓடி வருவான். அவனையும் அழைத்துக்கொண்டு அடுத்த வீட்டுக்குச் சென்று, "கௌரி...ராமு..." என்று அவள் கூச்சலிடுவாள்.

இப்படியாக இருபது முப்பது பிள்ளைகள் புடைசூழ அரைமணி நேரத்தில் காலனியைக் காலி செய்துவிட்டுப் போய்விடுவாள் முத்தாயி.

அந்தச் சில நிமிஷங்களில், அந்தத் தெருவில் வானத்து மோகினியே கீழிறங்கி வந்தாலும் என் பார்வை அவள் பக்கம் திரும்பாது.

குழந்தைகள்--ஆம்; அந்தக் கொத்துமலர்ப் பூங்கொடிகள்--கும்பல் கும்பலாகப் பவனி செல்வதைப் பார்த்துக்கொண்டே நிற்கும்போது துன்பத்திலும் விரக்தியிலும் காய்ப்பேறிய எனது நெஞ்சத்தில் வாழ்வின்மீது நம்பிக்கை சுரக்கும். நெஞ்சத்தில் காய்த்துப்போன திரடுகள் இளகிக் கனிவு பெறும்.

ஆமாம்: குழந்தைகள்' அவற்றின் அங்கங்களை, பவள அதரங்களை, பிரபஞ்ச சிருஷ்டியின் ரகசியங்களையெல்லாம், கவிஞனின் கற்பனைகளையெல்லாம் தோற்றோடச் செய்யும் மானிடச் சாதியின் பிஞ்சுப் பருவக் கனவுகள் மின்னும் அந்தக் குழந்தைக் கண்களை நீங்கள் கூர்ந்து பார்த்திருக்கிறீர்களா?

நீங்கள் பேசும் அறிவாற்றலும் பிரதாபங்களும் அந்தக் கண்ணொளியின் முன்னே மண்டியிடத்தான் வேண்டும்.

இல்லையா?... இல்லாவிட்டால்...அட சீ' நீ என்ன மனிதன்'...

--எனக்கு அந்த முத்தாயியின்மீது அளவு கடந்த வெறுப்பு' ஆம்; வெறுப்புத்தான்' அவள் என்ன மனுஷியா?...பெண்ணா?...தாயா?...சே' யந்திரம்'

அந்தக் குழந்தைகளின் முகத்தை ஒருமுறை அவள் பார்த்திருப்பாளா? கனிவு ததும்ப ஒருமுறை பேசி இருப்பாளா' சற்றே கனிவுடன் நயமாக அழைத்துச் செல்கிறாளா? அந்தக் குழந்தைகளை, ஆட்டு மந்தைபோல் ஓட்டிச் செல்கிறாள். அதே மாதிரி கொண்டுவந்து வீடு சேர்க்கிறாள். அவர்களை அலங்கோலமாக, அவர்களின் அழகுத் தோற்றங்களை எல்லாம் கெடுத்து இழுத்துக்கொண்டு போகிறாளே...

இவளை நம்பி, இவள் குரல் கேட்டவுடன் தங்களது குலக் கொழுந்துகளை அலங்க மலங்கக் கூட்டியனுப்புகிறார்களே, என்ன பெற்றோர்கள்'

ஆமாம்; முத்தாயி ஒரு யந்திரம். அந்த யந்திரம் காலை ஒன்பது மணிக்குப் பிள்ளைகளை அள்ளிக்கொண்டு போகும்; மாலை நாலரை மணிக்கு அத்தனை குழந்தைகளையும் கொண்டு வந்து கொட்டும்'

எங்கள் காலனிக்கு அடுத்த தெருவில் இருக்கும் 'கான்வென்'டில் அதற்காக அந்த யந்திரத்திற்குப் பதினைந்து ரூபாய் மாதச் சம்பளம் கொடுக்கிறார்கள்.

ஆயாள் என்ற பட்டம் பெற்ற அந்த யந்திரம்தான் முத்தாயி.

அன்று வழக்கம்போல் நான் வராந்தாவில் நின்றிருந்தேன். அதோ, ஒரு வானவில் வருகிறது. அது ஒன்பதாம் நம்பர் வீட்டிலிருந்து வருகிறது...

(நான் அந்தக் காலனியில் உள்ள குமரிகளுக்கெல்லாம் மானசிகமாகப் பெயர்கள் வைத்திருக்கிறேன். இவள் எப்பொழுதும் வர்ண பேதங்கள் நிறைந்த ஆடைகளையே அணிவாள்.)

என்னைக் கடந்து செல்லும்போது அவள் நடையில் செயற்கையாக வருவித்துக்கொண்ட ஒரு வேகமும் 'படபட'ப்பும்'

என்னை நெருங்க நெருங்க அவள் தலை தாழ்ந்து தாழ்ந்து குனிந்து போகும்.

அவளை எட்டிப் பிடிக்க வருவதுபோல் வருகிறாளே, இவள் தான் 'லைட் ஐஸ்'.

--இவள் என்னைப் பார்க்காத மாதிரியே மார்பில் அடுக்கிய புத்தகக் குவியலைப் பார்த்தமாதிரி வருவாள். அருகே வந்தவுடன் நேருக்கு நேராய் ஒருமுறை விழிகளை உயர்த்திப் 'பளிச்' சென்ற பார்வையால் தாக்கி மீண்டும் விழிகளைத் தாழ்த்திக் கொண்டு போவாள்...

--இருளில், சாலையில் வரும் ஒரு கார்...'திடும்' என ஒரு சிறு பள்ளத்தில் இறங்கி ஏறினால் எப்படி நம்மீது காரின் வௌிச்சம் விழுந்து தாழும்--அது போன்ற பார்வை--அத்தனை பெரிய கண்கள்'

அதோ, அந்த எதிர்வீட்டுச் சன்னலில் கையிலொரு பத்திரிகையுடன் படிக்கும் பாவனையில் அமர்ந்து, என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறதே--ஓர் அகலக்கண்--அதுதான் 'போக்கஸ் லைட்' '

நடன அரங்கில் ஆடுபவளைச் சுற்றி விழுந்துகொண்டு இருக்குமே ஓர் ஔி வட்டம், அதுபோல இவளுடைய கண்கள் என்னையே துரத்திக் கொண்டிருக்கும்.

"பாலா...பாலா...நாழியாச்சு. பொறப்படலியா?..." என்ற முத்தாயியின் வறண்ட குரல் கேட்கிறது'

இனிமேல் நான் ஏன் இந்தப் பெண்களைப் பார்க்கப் போகிறேன்?

இதோ, இப்பொழுது ஓடி வரப்போகிறான் அந்த இளம் மதலை'

எனது பார்வை முத்தாயி நின்றிருக்கும் வீட்டு வாசலையே நோக்கி நிற்கிறது'

"பாலா, பாலா..."

--உள்ளிருந்து பாலனின் தாய் வருகிறாள்.

"ஆயா, அவனுக்கு உடம்பு சரியில்லை; இன்னிக்கு வர மாட்டான்..."

அவள் சொல்லி முடிக்கவில்லை; "சங்கர்...சங்கர்..."என்று கூப்பிட்டவாறு அடுத்த வீட்டுக்குப் போய்விட்டாள்.

--சீ, இவள் என்ன ஜன்மமோ' 'குழந்தைக்கு என்ன' என்று உள்ளே போய்ப் பார்க்கமாட்டாளோ?...பார்க்க வேண்டாம், 'உடம்புக்கு என்ன?' என்று கேட்கவாவது வேண்டாமோ'

'ஐயோ பாவம்' பாலனுக்கு உடம்புக்கு என்னவோ' என்று என் மனம் பதைத்தது.

முத்தாயி வழக்கம்போல் மற்றப் பிள்ளைகளை இழுத்துக் கொண்டு போனாள்.

மறுநாள்...

முத்தாயி வந்தாள்.

"பாலா..பாலா..."

"இன்னிக்கு வரமாட்டான்..."

முத்தாயியின் குரல் அடுத்த வீட்டில் ஒலிக்கிறது.

"சங்கர்...நாழியாச்சு..."

"மணி' "

"கௌரி...ராமு..."

முத்தாயி போய்விட்டாள்.

மூன்றாம் நாள்.

முத்தாயி வந்தாள்...

"பாலா...பாலா..."

"இன்னிக்கும் ஒடம்பு ரொம்ப மோசமாக இருக்கு ஆயா'..."

--பெற்றவளின் குரல் அடைத்தது.

"சங்கர்...பொறப்படலியா?..."

"மணி..."

"கௌரி, ராமு..உம், சீக்கிரம்..."

--அந்த யந்திரம் நகர்ந்தது'

இப்படியே, நான்கு, ஐந்து, ஆறு நாட்களும் ஓடின...

ஆறாம் நாள் இரவு. நான் ஒரு கனவு கண்டே. பொழுதெல்லாம் மழை பெய்துகொண்டே இருக்கிறது...

மழையென்றால்...பிரளய கால வருண வர்ஷம்'...

வீதியெல்லாம் வெள்ளத்தின் நீர் அலைகள் சுருண்டு மடிந்து புரள்கின்றன.

அந்த வெள்ளத்தில் தலைவிரிகோலமாய் முத்தாயி வருகிறாள். முத்தாயியின் கோலம் முதுமைக் கோலமாக இல்லை. நடுத்தர வயதுள்ள ஸ்தீரியாக முத்தாயி வருகிறாள்...

"ராசா...ராசா..." என்று திக்குகளையெல்லாம் நோக்கிக் கதறுகிறாள். வெற்றிடங்களை யெல்லாம் நோக்கிப் புலம்புகிறாள்...

"ராசா...ராசா..." என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு நீரில் விழுந்து புரண்டு எங்கோ ஓடுகிறாள்.

வெள்ளம் சுருண்டு புரண்டு அலைகொழித்து மேலேறிச் சீறிப் பெருகுகிறது'

அதோ. முத்தாயி ஓடுகிறாள்...இடுப்பளவு நீர் மார்பளவு உயர்கிறது...கைகளை அகட்டி வீசிப் போட்டுப் பாய்ந்து பாய்ந்து செல்கிறாள்...வெள்ளப் பெருக்கில் மூழ்கி மூழ்கிப் போகிறாள்...

சற்று நேரம் ஒரே நிசப்தம்...பெருகி வந்த வெள்ளம், மாயம் போல், இந்திரமாசாலம்போல் வடிந்து மறைகின்றது...

நீரோடி ஈரம் பரந்து வரிவரியாய், அலை அலையாய் வெள்ளத்தின் சுவடு படிந்த மணல் வௌியில், ஓர் இளம் சிறுவனை மார்புற அணைத்தவாறு பிலாக்கணம் வைத்து அழுதுகொண்டிருக்கிறாள் முத்தாயி...

அவள் மடியில் கிடக்கும் சிறுவன் அடுத்த வீட்டுப் பாலனைப்போலவே இருக்கிறான்...நீரில் விறைத்த அச்சிறுவனின் கையில் ஒரு தூண்டில்' ஆமாம்; அவன் மீன் பிடிக்கச் சென்றானாம்.

"தண்ணியிலே போவாதே என்

தங்கத்தொரெ ராசாவே

பன்னிப் பன்னிச் சொன்னேனே இந்தப்

பாவி சொல்லக் கேட்டாயோ...ஓ...ஓ..."

என்ற முத்தாயியின் ஓலம் வயிற்றைக் கலக்கியது...

திடுக்கிட்டு விழித்தேன்' கனவு கலைந்தது...எழுந்தேன்; உடல் நடுங்கியது. சன்னலைத் திறந்தேன்...

இருள் விலகாத விடிவு நேரம்...

பாலன் வீட்டு வாசலில் முகமறியாத மனிதர் பலர் வீற்றிருக்கக் கண்டேன்...தெருவெல்லாம் ஏதோ ஒரு சோக இருள் கப்பிக் கவிந்து அழுதுகொண்டிருந்தது.

"பல் விளக்கப் போனாயோ

பல் விளக்கப் போகயிலே--என் பாலாவே

பழவப்படி சறுக்கிச்சோ

பழவப்படி சறுக்கையிலே

பாவி எமன் வந்தானோ?...

மொகம் கழுவப் போனாயோ

மொகம் கழுவப் போகயிலே--என் பாலாவே

முத்துப்படி சறுக்கிச்சோ

முத்துப்படி சறுக்கையிலே

மூர்க்க எமன் வந்தானோ?"

என்ற பாலனின் தாயின் குரல் என் நெஞ்சை அறைந்து உலுக்கியது...

எனக்கு ஒன்றும் புரியவில்லை...இதுவும் கனவாக இருக்கக்கூடாதா என்று மனம் தவித்தது.

மண்டையைச் சன்னலில் மோதினேன்...வலித்தது--ஆம்; இது கனவல்ல'

"ஐயோ' பாலா'..."

எங்கள் காலனியின் நடுவே உள்ள மணிக்கூண்டு ஒன்பது முறை அடித்து ஓய்ந்தது.

தெருவில் ஜனங்கள் நடமாடிக்கொண்டிருந்தனர். மயானச் சங்கின் ஓலமும், சேகண்டியின் கால நாடியும் சங்கமித்துக் குழம்பி அடங்கின.

பாலன் வீட்டில் மனிதர்கள் நிறைந்திருந்தனர்.

ஆம்; சாவு விரித்த வலையிலே நடந்தவாறே, வாழ்கிறோம் என்று நினைத்துக்கொண்டிருக்கும் ஜனங்கள்'

முத்தாயி வந்தாள்'...பாலன் வீட்டு வாசலில் வந்து நின்றாள்.

--'பாலா' என்று கூப்பிடவில்லை.

--அசையாமல் வெறித்த பார்வையுடன் நின்றிருந்தாள்'

முத்தாயியைக் கண்டவுடன் "ஐயோ...ஆயா'...பாலா போயிட்டானே'...நம்ம பாலா போயிட்டாண்டி'..."...அலறியவாறு பூமியில் விழுந்து புரண்டு கதறினாள் பாலனின் தாய்'

முத்தாயி நின்றுகொண்டே இருந்தாள்'

சித்த வௌியில் எத்தனை மேகங்கள் கவிந்தனவோ?... கண்களில் கண்ணீர் மழை பெருகிக்கொண்டே இருந்தது.

அவள் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் மரமாய் நின்றாள்;

..நின்று கொண்டே இருந்தாள்'

மழை பெய்து கொண்டிருந்தது...கொட்டுகின்ற மழையில் முத்தாயி நின்றுகொண்டிருந்தாள்...

நேரம் ஓடிக்கொண்டே இருந்தது. நான் குமுறும் இதயத்துடன் உள்ளே போய்ப் படுக்கையில் வீழ்ந்தேன். பாலாவுக்காக, அவன் மரணத்திற்காக வருந்தினேன். எனக்கு அன்று முழுவதும் ஒன்றும் ஓடவில்லை.

ஒரு சமயம் அழுகை பலமாக ஒலித்ததை உள்ளிருந்தவாறே கேட்டேன்...

ஆம்; அவனைத் தூக்கிக்கொண்டு போகிறார்கள்...நான் அதைக் காண விரும்பவில்லை...

வெகுநேரம் கழித்துச் சன்னல் வழியாக வௌியே எட்டிப் பார்த்தேன். முத்தாயி நின்றுகொண்டிருந்தாள்.

அவளை யாருமே கவனிக்கவில்லை; நான்தான் கவனித்தேன். அது அவளுக்கு எப்படித் தெரிந்ததோ' 'சடக்'கென்று அவள் தலை நிமிர்ந்து என்னைப் பார்த்தாள்.

அவள் கண்களை நான் அன்றுதான் பார்த்தேன்.

குழந்தையின் கண்கள், கண்ணீர் நிரம்பித் தளும்பிற்று.

"பாலா..." என்று என் உதடுகள் முணு முணுத்ததை அவள் எப்படித் தெரிந்து கொண்டாளோ?

"பாலா மீன் பிடிக்கப் போயிருக்கான்" என்று என்னைப் பார்த்துக் கூறினாள்; நான் திடுக்கிட்டேன். அந்த வார்த்தையைக் கூறிவிட்டு அவள் அடுத்த வீட்டை நோக்கி நடந்தாள்.

"சங்கர்...சங்கர்...நாழியாயிடுச்சி; பொறப்படலியா?" என்ற அவளது குரலோசை கேட்கும்போது காலனி மணிக்கூண்டு நான்கு முறை ஒலித்தது...

ஆம்? மாலை மணி நான்கு'

எனக்கு ஒன்றுமே புரியவில்லை...அந்த மணிக் கூண்டின் மணியோசை மட்டும் நன்றாகப் புரிந்தது:

"அவள் யந்திரமல்ல; யந்திரமல்ல, யந்திரமல்ல, யந்திரமல்ல' "

முற்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=யந்திரம்&oldid=1537688" இலிருந்து மீள்விக்கப்பட்டது