ரமண மகரிஷி/003-017
3. இளமையில் ரமணர்!
இரமணர் இளமைப் பருவத்தில் அறிவு நுட்பத்துடனும், புத்திக் கூர்மையுடனும் இருந்தார். வீட்டில் புத்தகத்தோடு காணப்படமாட்டாரே தவிர, வகுப்பில் குருவுக்கும் விஞ்சிய மாணவனாகவே காட்சியளிப்பார். அவருடன் இணைந்து வகுப்பில் கல்வி பயிலும் மாணவ நண்பர்கள் யார் எதைக் கூறினாலும், அதைக் கவனமாகக் கேட்டு மனத்திலிருத்திக் கொள்வார். அது போலவே ஆசிரியர் வகுப்பில் எந்தச் செய்யுளை அல்லது பாடத்தைக் கொடுத்தாலும், அவர் பின்னாலேயே அந்தச் செய்யுளுக்கான பிற அடிகளையும் பாடல்களின் கருத்துக்களையும் அடி பிறழாமலும், வாக்கியங்கள் மாறாமலும் ஒப்புவிக்கும் மனத் திறமை பெற்றவராக விளங்கினார்.
வீட்டிற்கு வந்தால் அவர் எங்கேயோ விளையாடிக் கொண்டிருப்பார். புத்தகம் எங்கோ ஒரு மூலையில் வீழ்ந்து கிடக்கும். எனவே, ரமணர் என்ன படித்தார். எப்படிப் படித்தார்? எவ்வாறு படிக்காமலேயே பாடலின் கருத்துக்களைத் திருப்பிக் கூறிடும் சக்தி பெறுகிறார் என்பதே வகுப்பு ஆசிரியருக்கும் புரியவில்லை. வீட்டாருக்கும் தெரியவில்லை. ஏதோ ‘சித்தம் போக்கு சிவம்போக்கு’ என்பார்களே அதைப்போல, ரமணருடைய கல்விப் போக்கே ஒரு தனியான வழியாக இருந்தது.
ரமணர் போக்கு இப்படி என்றால், அவரது அண்ணன் தம்பிகள் போக்கு எவ்வாறு இருக்கும் என்ற கேள்வி எழுவது இயற்கைதானே! அவருடைய தந்தையாரும், புகழ்பெற்ற வழக்கறிஞரும், அன்னதாதா எனப்படுபவருமான சுந்தரமய்யரின் மூன்று மக்களும் மூன்று விதமான போக்காகவே வளர்ந்து வந்தார்கள். அதாவது, எப்போதும் விளையாட்டாகவும், துஷ்டர்களாகவும் காட்சி தந்தார்கள் எனலாமே தவிர, அவர்களுடைய அறிவாற்றலுக்கு அடையாளமாக எதையும் குறிப்பிட்டுக் கூறக் கூடியவர்களாகவே இருக்கவில்லை.
இரமணருடைய தம்பியான நாக சந்தரம் அப்போது மிகவும் சிறுவன், அவளைப் பற்றிக் கூறிட என்ன இருக்கிறது? ஆனால், அவருடைய தமையனாரான நாகசாமி, கல்வியில் திறமையாளர். வீட்டிலும் புத்தகத்தோடே உறவாடிப் பேசுவார். வகுப்பிலும் சரி, தேர்வு எழுதுவதிலும் சரி, ஆசிரியரிடம் பாட விவரங்களுக்காக வாதாடும் போதும் சரி, அவர்தான் வகுப்புப் பிள்ளைகளை மீறி முதல் மாணவனாக இருப்பார். அவ்வளவு அக்கறையுடன் படித்து, தனது தந்தையின் புகழுக்கும் பெயருக்கும் அந்த இளம் வயதிலேயே மேலும் பெருமை தேடிக் கொடுத்து மகிழ்வார்.
சுந்தரமய்யர் நண்டர்களும், அவரது உதவி பெறும் ஊர் மக்களும், வழக்குகளுக்காக வரும் கட்சிக்காரர்களும், அன்னசத்திரத்துக்கு வாடிக்கையாக வந்து போபவர்களும் நாகசாமியைப் பற்றி, அவரது தந்தையிடம் ஏதாவது பாராட்டுதல்களைக் கூறாமல் போகமாட்டார்கள்.
ஆனால், நடுமகன் இருக்கிறாரே வெங்கட்ராமன், அவரைப் பற்றி ஏதாவது சிறப்புக்கள் தெரிந்தாலும், அதைச் சுந்தரமய்யரிடம் கூறமாட்டார்கள். அவரைப் பற்றி எந்த முடிவையும் எவரும் துணிந்து அய்யரிடம் தாரளமாகக் கூறிட மனம் வராது. ஏன் தெரியுமோ?
இரமணர் எப்போதும், எந்நேரமும் எதையோ பறிகொடுத்து விட்டு ஏமாந்தவனை போன்ற சிந்தனையிலேயே மூழ்கிக் கிடப்பார். இந்த இளம் பிராயத்தில் அப்படி என்ன சிந்தனையோ என்று சிலர் எண்ணியவாறே அவரிடம் பேசாமல் போய்க் கொண்டே இருப்பார்கள். சில நண்பர்கள் வெங்கட்ராமனோடு விளையாடுவோம் என்று ஆர்வத்துடன் வருவார்கள். வந்தவர்களிடம் ஏதும் பேசாமல் ஊமை போல அவர் உட்கார்ந்து கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டுப் பரிதாபம் சூழ்ந்தவராகப் போய்விடுவார்கள்.
எனவே, வெங்கட்ராமன் மணிக் கணக்கில் அப்படியே கற்சிலை போல உட்கார்ந்தபடியே இருப்பார். ஆனால், என்னமோ யோசித்துக் கொண்டிருப்பது போலவே தென்படுவார் காட்சிக்கு! அவரையொத்த சிறுவர்களால் வெங்கட்ராமனை ஒதுக்கிவிட்டு விளையாடவும் முடியாது.
வெங்கட்ராமன் துணிச்சலுடைய சிறுவன்; தைரியசாலி; தவறாமல் உடற் பயிற்சி செய்யும் குணம் உடையவன்; சில ஊர்களில் தாதாக்களும் உண்டல்லவா? அவர்களிடம் குஸ்தி, மல்யுத்தம், சிலம்பம் போன்ற ஆட்டங்களைக் கற்றுத் தனது உடலைக் கட்டு மஸ்தான ஒரு பயில்வானைப் போல் அவர் வைத்துக் கொள்வார். பந்தாட்டத்தில் மிக வல்லவனாக இருந்தார். கிராமத்துக்கு அருகிலேயே கௌண்டின்ய ஆறு ஓடுகிறது அல்லவா?
அந்த ஆற்றை நீந்தி நீந்தி இக்கரை அக்கரையாகக் கடப்பார். மரக்கிளையின் உச்சியிலே இருந்து ஆற்று நீரின் ஆழப் பகுதி பார்த்துக் குதிப்பார். மணிக் கணக்கில் நீந்திக் கொண்டே மற்ற பிள்ளைகளையும் சேர்த்துக் கொண்டு நீராடி மகிழ்வார். நேரம் போவதே அவருக்குத் தெரியாது. மரமேறி ஏறி, மற்ற சிறுவர்களையும் ஏறச் சொல்லித் தாண்டிக் குதிக்க வைப்பார்.
அதே போலவே, திருச்சுழி கிராமத்து வம்பர்களிடம், தாதாக்களிடம் சண்டை, சச்சரவுக்கு வலிய சென்று அவர்களை வம்புக்கு இழுத்து மல்லடிப்பார். அவர்கள் அய்யர் பிள்ளையாயிற்றே என்று மரியாதை கொடுத்து விலகிச் செல்வதை இவர் கோழைத்தனமாய்க் கருதிக் கிண்டலடிப்பார்! சண்டை சச்சவுகள் வராத நாட்களே இல்லையென்று கூடக் கூறலாம்! அவ்வளவு வம்படிப்பார் ஊர்ப் போக்கிரிகளிடம்.
இரமணருடைய இவ்வளவு பயிற்சிகளும் எப்போதும் வீண் போவது கிடையாது. தனது உடலை அந்த வீர விளையாட்டுக்களின் வாயிலாக, ஒரு கட்டு மஸ்தான தேகமாக்கிக் கொண்டார். அதனால் இளம் வயது வெங்கட்ராமனைக் கண்டு பேசவும், பழகவும், நட்பு கொள்ளவும் ஊரார் பயப்படுவார்கள். இந்தக் காட்சிப் போக்குகள் சுந்தரமய்யருக்கே மாளா வேதனைகளைத் தந்தன.
திருமூலர் போன்ற மகான்களும், நமது நாட்டின் சித்தர் பெருமக்களும் உடலை ஓர் ஆலயமாக, கருத்தியது மரபல்லவா? ஏனென்றால் இல்லறம் நடத்துவோருக்கு உடல் வலிமையிருந்தால் தானே நோயை எதிர்த்துப் போராடிடும் சத்தி இருக்கும்? இல்லறத்துக்கு மட்டுமாதிட உடல் தேவை? துறவறத்துக்கும் தானே!
உடல்தான் ஒவ்வொரு மனிதனுக்கும் ஆலயம்; அவனுடைய உயிர்தான் இறைவன். இந்த உண்மையை வெங்கட்ராமன் உணர்ந்தானோ? அல்லது இயற்கையாகப் பிறப்புடன் வந்ததோ நமக்குத் தெரியாது. என்றாலும், வெங்கட்ராமன் தனது உடலைத் திடவலிவோடு பேணி வளர்த்து வந்தார்.
வெங்கட்ராமனிடம் உள்ள மற்றொரு சிறப்பு அம்சம் என்ன தெரியுமா? தூக்கம். படுத்துத் தூங்கி விட்டால் அவரை யானையே ஏறி மிதித்தாலும் எழுப்ப முடியாத அளவுக்குக் கும்பகர்ண தூக்கம் தூங்கும் இயல்புடையவராக இருந்தார். கதவைத் தாளிட்டு விட்டு அவர் தூங்கி விட்டாரானால், கதவை உடைத்து தான் அவரை எழுப்ப வேண்டும்.