ரமண மகரிஷி/011-017
11. இரமண மகரிஷி என்ற
பெயரைச் சூட்டியது யார்?
திருவண்ணாமலை நகரைச் சூழ்ந்துள்ள அருணாசலம் மலையில், சத்குரு சாமி குகை, விரூபாட்சி குகை, ஸ்காந்தா சிரமம் என்ற இடங்கள் உள்ளன. அவை யாவும் யோகிகள் அமைதியான சூழலில் தியானங்கள் செய்வதற்கு ஏற்ற இடங்களாகும்.
பாலயோகி வெங்கட்ராமன், தனது தாயார் ஊருக்குச் சென்ற பிறகு இந்த மூன்று மலைக் குகைகளிலும் கால தட்பவெப்பங்களுக்கு ஏற்றவாறு மாறி மாறித் தங்கிப் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்தார். இந்த இடங்களில் விரூபாட்சி என்ற குகை வெங்கட்ராம சுவாமிக்கு மிகவும் பிடித்த இடம். இங்கே அவரது தொண்டரான, பழனிசாமி சாமியாரோடு அவர் அடிக்கடி சென்று தங்குவார்.
அந்த இடத்துக்கு ஏராளமான ஆன்மிக அன்பர்கள் வருகை தந்து, அவருக்குரிய பால் பழ வகைகளை வழங்கி அருளாசி பெறுவார்கள். திருவண்ணாமலை பாதாளக் குகையில் இருந்த பழு பூச்சிகள், வண்டுகள், வௌவால்கள், பாம்பு, தேள்கள். துரிஞ்சல்களின் அசுத்த நாற்ற வகைகள் இங்கேயும் அதிகமாக இருந்தன. இருந்தாலும், அந்த இளம் துறவி அவற்றையெல்லாம் பொருட்படுத்துவதில்லை.
ஒருமுறை தேள் கடித்தது. அதைத் தடவிக் கொடுத்துக் கொண்டாரே தவிர, அதற்காக அவர் சிகிச்சையேதும் செய்து கொண்டவரல்லர். அவர் எதிரிலேயே பாம்புகள் ஓடும். அதை அவர் கவனிக்க மாட்டார். அதன் வேலையை அது செய்கிறது என்று இருந்து விடுவார்.
அணில்கள், எலிகள், துரிஞ்சல்கள் அவர் மேலே தொப்பு தொப்பென்று விழும். கவனிக்கமாட்டார். குரங்குகள் அவர் எதிரிலேயே உட்கார்ந்து கொண்டு அவருக்கு மக்கள் வழங்கிய பழ வகைகளை உரித்து உரித்துத் தின்று கொண்டிருக்கும். பழனிசாமி சாமியார் அவற்றை விரட்டிக் கொண்டேதான் இருப்பார். இருந்தும் அந்தக் குட்டி அனுமார்கள் அவரையும் ஏமாற்ற சமயம் பார்த்துக் கொண்டிருக்கும்!
வெங்கட்ராம சாமியாரைச் சுற்றி காகங்கள் அமர்ந்து விரைந்து வாழைப்பழங்களைக் கொத்திக் கொண்டிருக்கும். காகக் குஞ்சுகள் அவர் காலடியிலே தத்தித் தத்தி பறந்து விளையாடும். அந்தக் குஞ்சுகளுக்குப் பாலயோகி பழங்களை ஊட்டுவார்! அவை அச்சமின்றி அவருடன் கா கா என்று கரைந்து விளையாடும்.
சுவாமிகள் விரூபாட்சிக் குகையிலே தங்கியுள்ளபோது, தமிழ்நாட்டின் பெரும்புலவர்களும், கவிஞர்களும், செல்வந்தர்களும், அரசு அதிகாரிகளும், பொதுமக்கள் தொண்டர்களும், அரசியல்வாதிகளும் தரிசிக்க வருவார்கள். இவ்வாறு வந்த அறிஞர்களுள் ஒருவர் கணபதி முனீந்திரர் என்பவர்.
கணபதி முனீந்திரர் பெரும் புலவர் மட்டுமல்லர்; வேத, உபநிடத, ஆகம, தந்திர மந்திர சாஸ்திரக் கலைகளையும் நன்கு கற்றறிந்த வல்லவர். எல்லா நூல்களிலும் அவருக்கு ஈடுபாடு அதிகம். குறிப்பாக, சமஸ்கிருத மொழியில் மகாபண்டிதர். திருவண்ணாமலையிலுள்ள விரூபாட்சிக் குகையில் ஓர் இளந்துறவி இருக்கிறார். மக்களுக்கு அருளாசி வழங்கி வரும் பாலயோகி அவர் என்று கேள்விப்பட்டு திருவண்ணாமலை வந்தார்.
விரூபாட்சிக் குகையிலே தியானத்தில் இருந்த வெங்கட்ராம சுவாமியைக் கணபதி முனீந்திரர் சென்று சந்தித்தார். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே சிறிது நேரம் இருந்தபோது, புலமையால் உருவாகி இருந்த அவரது ‘நான்’ என்ற ஆணவம் தணல்பட்ட வெண்ணெய் போல் உருகி நீரானது போன்ற ஒரு நினைப்பு அவரிடையே காணப்பட்டது. அதைக் கணபதி முனீந்திரர் மிக எளிதாக உணர்ந்து கொண்டார். அதனால் ஏதோ ஒரு சக்தியை முனீந்திரர் இழந்தது போன்ற உணர்வடைந்தார்.
வெங்கட்ராமன் திருவண்ணாமலையிலே உள்ள அருணாசலத்தின் மலையை 1896ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் முதன் முதலில் மிதித்தாரோ, அன்று முதல் 1907ஆம் ஆண்டுவரை, அவர் யாரிடமும் எதுவும் பேசாமல் அனைவரிடமும் மௌனமாகவே காட்சி தந்து கொண்டிருந்தார். அந்த மௌன விரதம் கணபதி முனீந்தரரின் சந்திப்பால் கலைந்து விட்டது.
மௌனத்திலிருந்த பாலயோகிதான் பெற்றிருந்த சத்திய தரிசனத்தைச் சுவாமி, கணபதிக்கு முதன் முதவில் உபதேசமாக அருள் பாலித்தார். கணபதி அன்று யோகி இடத்திலேயே தங்கிவிட்டார். பழனிசாமி சாமியிடம், வெங்கட்ராம சாமியின் முழு விவரங்களையும் கேட்டறிந்தார். இந்தக் கணபதி முனீந்திரர்தான், வெங்கட்ராம சாமியின் முழு விவரங்களையும் கேட்டறிந்தார். இந்தக் கணபதி மூனீந்திரர்தான், வெங்கட்ராம சுவாமியின் திருப்பெயரை ‘ரமண மகரிஷி’ என்று மாற்றியமைத்தார். இந்தப் பெயர் தான் உலகமெங்கும் பரவியது. உலகம் அவரை ரமண மகரிஷி என்றே அழைத்து பெருமைப்பட்டது.
கணபதி முனீந்திரர் சிறிது காலம் ரமண மகரிஷியோடு தங்கியிருந்தார். அப்போது மகரிஷி அவரிடம் சமஸ்கிருத மொழி, தெலுங்கு மொழி ஆகியவற்றைக் கற்றுப் புலமை பெற்றார். அவை மட்டுமன்றி வேறு சில மொழிகளையும் புரியுமளவுக்குப் படித்தார். குறிப்பாக, அவர் தமிழ் மொழியில் கவிதை எழுதும் ஆற்றலைப் பெற்று, முதன் முதலாக ‘உள்ளத்து நாற்பது’ என்ற நூலைக் கவிதை வடிவிலே எழுதினார்.
அந்தக் கவிதை நூலை கணபதி முனீந்திரர் சமஸ்கிருத மொழியில் ‘சத்தரிசன்’ என்று பெயரிட்டு மொழியாக்கம் செய்தார். அதற்கு உரை எழுதியவர் கபாலி சாஸ்திரி என்ற சீடராவார். இந்த நூலுக்குப் பிறகு ரமண மகரிஷி பல நூல்களை எழுதினார். அவை பல உலக மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டன.
கணபதி முனீந்திரர் தனக்கு எழுந்த சந்தேகங்களுக்கெல்லாம் ரமணரிடம் விடை தெரிந்து கொண்டார். அவற்றுள் ஒன்று ‘அஹம்’ பற்றியதாகும்.
‘அஹம்’ பற்றி விசாரணை செய்வதால், விருப்பங்கள் நிறைவேறுமா? அல்லது மந்திரங்களும் தவமும் தேவையா? என்பதைப் பற்றி முனீந்திரர் ரிஷியைக் கேட்டார். அதற்கு அவர் ‘அஹம்’ பற்றிய ஆராய்ச்சியால் எல்லாவித சித்துகளும் கைகூடும். ஆண்டவன் மீது பாரத்தைப் போட்டு விட்டால், அந்த சுமையிலிருந்து விடுதலை கிடைக்கும்” என்றார்.
விரூபாட்சிக் குகையில் ரமணர் தங்கியருந்தபோது, நாட்டின் நானா பக்கங்களிலிருந்தும் மக்கள் ரமணரைக் கண்டு ஆசி பெற்றிட வருவார்கள். இந்த பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வந்தது.
இதைக்கண்ட குகையின் சொந்தக்காரர்கள் பக்தர்களிடம் பணம் வசூல் செய்தார்கள்.
தன்னைக் காணவரும் பக்தர் பெருமக்களிடம் பணம் வசூல் செய்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்ட பகவான் ரமணரிஷி அந்த இடத்தை உடனே மாற்றிக் கொண்டு சத்குரு என்ற குகைக்குப் போய் விட்டார். அங்கேயும் மக்கட் கூட்டம் திரண்டு வந்து கொண்டே இருந்தது.
இந்துக்கள் பண்டிகைகள், திருவண்ணாமலை கோயில் விழாக்கள் அல்லது நகரில் நடைபெறும் வேறு, விழாக்கள், பொங்கல், தீபாவளி போன்ற நாட்களில், திருவண்ணாமலை நகருக்கு வருகை தரும் பொதுமக்கள், ரமண மகரிஷி ஆசிரமத்துக்கும் வந்து போவதை ஒரு வழக்கமாக உருவாக்கிக் கொண்டார்கள். அதனாலும் மக்கள் கூட்டம் பெருகி வந்தது.