உள்ளடக்கத்துக்குச் செல்

ரோஜாச் செடி/ரோஜாச் செடி

விக்கிமூலம் இலிருந்து

ரோஜாச் செடி

பூம்புதூர் பெரிய பட்டணமும் அல்ல; சிறிய கிராமமும் அல்ல. நடுத்தரமான ஒர் ஊர். அந்த ஊரில் பாரதி சிறுவர் சங்கம் ஒரு சங்கம் இருக்கிறது. அந்தச் சங்கம் சில சங்கங்களைப் போல் தூங்குமூஞ்சிச் சங்கமாக இருப்பதில்லை. எப்போதும் சுறுசுறுப்பாக வேலை செய்துகொண்டேயிருக்கும்.

அந்தச் சங்கத்தார் வருஷத்துக்கு ஒரு முறை புஷ்பக் காட்சி நடத்துவார்கள். அந்தக் காட்சியில் ஏராளமான சிறுவர்களும், சிறுமிகளும் கலந்து கொள்வார்கள். கலந்து கொள்வதென்றால், சும்மா வந்து காட்சியைப் பார்த்துவிட்டுப் போவதில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு தொட்டியில் அவரவர் வளர்த்த புஷ்பச் செடிகளைக் கொண்டுவந்து, காட்சியில் வைப்பார்கள். பதினாறு வயதுக்கு உட்பட்டவர்கள்தான் அதில் கலந்து கொள்ளலாம்.

காட்சி நடக்கும் தினத்தன்று காலை 6 மணிக்குள் செடிகளைக் கொண்டு வந்து வைத்துவிடவேண்டும். ஒவ்வொரு செடியிலும் அதை வளர்த்த பையன் அல்லது பெண்ணின் பெயர், வயது, வீட்டு விலாசம் முதலியவற்றை அட்டையில் எழுதிக் கட்டி வைக்க வேண்டும். மிகவும் நன்றாக இருக்கும் செடிக்குப் பரிசு கொடுப்பார்கள். பரிசு ஐம்பது ரூபாய்.

இந்தக் காட்சியைப் பார்த்துப் பரிசு கொடுப்பதற்குக் கல்வி அதிகாரிகளும் பெரிய தலைவர்களும் வருவார்கள். அந்த வருஷம் கல்வி மந்திரியே வர ஒப்புக்கொண்டுவிட்டாராம். ஆகையால், மிகவும் பிரமாதமாக ஏற்பாடு செய்திருந்தார்கள் பாரதி சிறுவர் சங்கத்தார்.

மிராசுதார் முருகேச பிள்ளை என்றால் பூம்புதூரில் எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். அவர் பெரிய பணக்காரர். அவருடைய மகள் மீரா ஏழாவது வகுப்பில் படித்துக்கொண்டிருந்தாள்.

புஷ்பக் காட்சி நடப்பதற்கு முதல் நாள் முழுவதும் அவளுக்கு ஒரே கவலை. வசந்தா கனகாம்பரச் செடி வளர்த்திருக்கிறாள். மல்லிகா சூரியகாந்தி வளர்த்திருக்கிறாள். ரேவதி ரோஜா வளர்த்திருக்கிறாள். ஆனால், நான் மட்டும் எதுவுமே வளர்க்கவில்லை, கல்வி மந்திரியே இந்த வருஷம் வரப்போகிறாராம் உம் என்ன செய்வது? நாளை விடிந்தால் புஷ்பக்காட்சி! என்று ஏங்கிக்கொண்டிருந்தாள்.

அப்போது, அங்கே வந்தாள் மீராவின் சிநேகிதி கமலா. அவள் மீராவிடம், “ஏன் மீரா ஒரு மாதிரியாக இருக்கிறாய்?” என்று கேட்டாள்.

“இந்த வருஷம் புஷ்பக் காட்சிக்குக் கல்வி மந்திரி வருகிறாராம். அவர் கையாலே ஐம்பது ருபாய் பரிசு வாங்க எனக்குக் கொடுத்துவைக்கவில்லை. உம், யாருக்கு இருக்கிறதோ அதிர்ஷ்டம்!” என்றாள் மீரா.

உடனே கமலாவுக்கு ஒரு யோசனை தோன்றியது. “மீரா, நீ கவலைப்படாதே நான் சொல்லுகிறபடி செய். நிச்சயம் உனக்குத் தான் பரிசு” என்றாள்.

“என்ன ! பரிசு எனக்கா அது எப்படி ?” என்று கேட்டாள் மீரா,

“நாலாவது தெருவிலே ஒரு பிள்ளையார் கோயில் இருக்கிறதே, அதற்குப் பக்கத்திலே ஒரு குடிசை இருக்கிறது. அந்தக் குடிசையிலே பார்வதி என்று ஒருத்தி இருக்கிறாள். அவளும் காந்தி இலவசப் பள்ளிக்கூடத்தில்தான் படிக்கிறாள். ஏழாவதிலே படிக்கிறாள். அவளை எனக்குத் தெரியும். நேற்று அவளுடைய வீட்டுக்குப் போயிருந்தேன். அவள் ஒரு ரோஜாச் செடி வளர்த்திருக்கிறாள். அடடா ! எவ்வளவு அழகான செடி! எவ்வளவு ரோஜாப் பூக்கள்! அவள் வீட்டுக்கு நாம் இப்போதே போவோம். ஏதேனும் துட்டுக் கொடுத்தால் அவள் அந்தச் செடியைத் தந்து விடுவாள்....”

“உண்மையாகவா ! எவ்வளவு ரூபாய் கேட்பாள் ? பத்துருபாய் கேட்பாளா ?”

“பத்து ரூபாயா? அம்மாடியோ! அவ்வளவு எதற்கு? ஒரு ரூபாய், இரண்டு ருபாய் கொடுத்தாலே போதும்.” 

“சரி, எதற்கும் நான் சேர்த்து வைத்திருக்கிற பணத்திலே ஐந்து ரூபாய் எடுத்து வருகிறேன்” என்று கூறிவிட்டுத் தன்னுடைய மேஜை அறையைத் திறந்தாள் மீரா ஐந்து ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்துக்கொண்டு, கமலாவுடன் புறப்பட்டாள்.

இருவரும் அந்தக் குடிசையை நோக்கிச் சென்றனர். குடி சையைச் சுற்றி வேலி போடப்பட்டிருந்தது. கமலாவும் மீராவும் வேலி ஒரமாக நின்று உள்ளே பார்த்தார்கள். அங்கே ஒரு மண் தொட்டியில் மிகவும் அழகான ஒரு ரோஜாச்செடி இருந்தது.

“அதோ அந்தச் செடிதான். எப்படி இருக்கிறது. பார்த்தாயா !” என்று கேட்டாள் கமலா.

“ஆஹா! அந்தச் செடி எவ்வளவு அழகாயிருக்கிறது! எத்தனை பூக்கள்! அது எனக்குக் கிடைத்தால் நிச்சயம் பரிசு எனக்குத்தான்” என்றாள் மீரா.

உடனே வேலிக் கதவைத் திறந்தாள், கமலா.

“யாரது?” என்று கேட்டுக்கொண்டே பார்வதியின் அம்மா குடிசையிலிருந்து வெளியே வந்தாள்.

“ஏனம்மா, நாங்கள்தான். பார்வதி இல்லையா?” என்று கேட்டாள் கமலா.

"கடைவீதிக்கு மண்ணெண்ணெய் வாங்கப் போயிருக்கிறாள். என்ன விஷயம்?” என்று கேட்டாள், அந்த அம்மா.

“ஒன்றுமில்லை. இவள் யார் தெரியுமா? மிராசுதார் முருகேச பிள்ளை மகள் இவள்தான். பெயர் மீரா” என்று மீராவை அறிமுகப்படுத்தி வைத்தாள் கமலா.

“அடடே அப்படியா . . . . . ஆமாம். பார்வதியை எதற்காகத் தேடி வந்தீர்கள் ?” என்று கேட்டாள் அந்த அம்மாள்.

உடனே கமலா ஒரு சின்ன உதவி வேணும். இவள் அருமையாக ஒரு ரோஜாச் செடி வளர்த்து வந்தாள். அதைப் புஷ்பக் காட்சியிலே வைக்கவேண்டுமென்பது இவளுடைய அப்பாவின் ஆசை. ஆனல் எதிர் பாராமல் ஒன்று நடந்து விட்டது. இவளுடைய தம்பி படுசுட்டி. அவன் இன்றைக்குக் காலையிலே விளையாட்டாக அந்தச் செடியைப் பிடுங்கி, ஒடித்துப் போட்டுவிட்டான். இவள் அப்பாவுக்கு இந்த விஷயம் இதுவரை தெரியாது. தெரிந்தால், பாவம், அந்தச் சின்னப் பையனைப் போட்டு அடிஅடி யென்று அடித்து விடுவார் ! அப்பா பார்ப்பதற்கு முன்னாலே, வேறு ஒரு ரோஜாச் செடியை வாங்கி, அந்தத் தொட்டியிலே வைத்துவிட வேண்டும். உங்கள் வீட்டில் ரோஜாச் செடி இருப்பது இவளுடைய அம்மாவுக்கு எப்படியோ தெரிந்திருக்கிறது. அதனால்தான் எங்களை இங்கே அனுப்பி வைத்தார்கள்” என்று சாமர்த்தியமாகப் புளுகினாள்.

இதைக் கேட்டதும் அந்த அம்மாள், “என்ன! ரோஜாச் செடியையா கேட்கிறீர்கள்? வேண்டாம் வேண்டாம். வேறே எதைக் கேட்டாலும் தரலாம். பார்வதி கண்ணைப் போல ரோஜாச் செடியை வளர்த்து வருகிறாள். அதைமட்டும் கேட்காதீர்கள்... ஐயோ, பார்வதி வந்தால் என்னைச் சும்மா விடுவாளா?” என்றாள். 

“என்னம்மா, நீங்கள் இப்படிச் சொல்லலாமா? நாங்கள் சும்மாவா கேட்கிறோம்? பணம் தருகிறோம் அம்மா!” என்றாள் மீரா.

“பணம் இருக்கட்டும். பார்வதியின் மனம் நோகுமே...!” என்றாள் அந்த அம்மாள்.

உடனே கமலா, “பணமென்றால் நாலணா எட்டணா இல்லை அம்மா. எவ்வளவு வேணுமோ கேளுங்கள். இரண்டு ரூபாய் வேனுமா? இல்லே, மூன்று ரூபாய். அதுவும் இல்லை. நாலு ரூபாய்...சரி. உங்களுக்குத் திருப்தியாக இருக்கட்டும். ஐந்து ரூபாய் தருகிறோம்” என்று கூறிவிட்டு, மீரா இந்த அம்மாள் மிகவும் நல்லவர்கள். அந்த ஐந்து ரூபாயை எடு. கொடுத்து விட்டு, உடனே ரோஜாச் செடியை வாங்கிக்கொண்டு போகலாம். நேரமாகிறது” என்றாள். மீரா தன்னிடமிருந்த ஐந்து ரூபாய் நோட்டைக் கமலாவிடம் கொடுத்தாள். கமலா அதை வாங்கி அந்த அம்மாளிடம் நீட்டினாள்.

இதை வாங்கிக்கொள்ளுங்கள். ஒரு சின்னப் பையனைக் காப்பாற்றிய புண்ணியம் உங்களுக்கும் கிடைக்கும். இன்னென்றையும் சொல்லிவிடவேண்டும். இந்தச் செடிக்குப் பரிசு கிடைக்குமென்று தாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. கல்வி மந்திரி வருகிற போது காட்டாயம் இவளும் கலந்து கொள்ள வேணுமாம். இப்படி இவள் அப்பா ஆசைப்படுகிறார். இந்த ஐந்து ரூபாயிருந்தால் உங்களுக்கு எவ்வளவு உதவியாயிருக்கும் ! பார்வதிக்கு வேண்டியதை வாங்கிக் கொடுக்கலாம். சும்மா வாங்கிக்கொள்ளுங்கள் அம்மா” என்று கூறி அந்த அம்மாளின் கையிலே நோட்டைத் திணித்தாள், கமலா.

அந்த அம்மாள் கொஞ்ச நேரம் யோசித்தாள். பார்வதி வந்தால் நிச்சயம் வருத்தப்படுவாள்...ஆனாலும், அவளுக்குப் பரிசு  கிடைக்கிறது என்ன நிச்சயம்? ஒன்றுமே கிடைக்காமல் போனாலும் போகலாம். ஆனால், இந்த ஐந்து ரூபாயோ நிச்சயம் நமக்குக் கிடைக்கிறது. பார்வதியின் பாவாடை சட்டையெல்லாம் கிழிந்து போயிருக்கின்றன. இந்த ஐந்து ரூபாயிலே ஒரு பாவாடையும் சட்டையும் வாங்கிக் கொடுக்கலா மல்லவா? என்று தனக்குத் தானே சமாதானம் கூறிக்கொண்டாள். பிறகு “சரி, மிகவும் கட்டாயப் படுத்துகிறீர்கள். பார்வதிதான் வருத்தப்படுவாளே என்று பார்த்தேன். உம், நடக்கிறபடி நடக்கட்டும்” என்று கூறி ரோஜாச் செடியை அந்த ஐந்து ரூபாய்க்குக் கொடுக்க ஒப்புக்கொண்டு விட்டாள்.

மீராவும் கமலாவும் ஆனந்தமாக அந்த ரோஜாச் செடியுடன் வீடு நோக்கிக் கிளம்பினர்கள். போகும் போதே, மீரா, ஐந்து ரூபாய்க்கு ஐம்பது ரூபாய் கிடைக்கப் போகிறது! அப்போது என்னே மறந்து விடாதே!" என்று சிரித்துக்கொண்டே கூறினாள் கமலா.

பார்வதி மண்ணெண்ணெய் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தாள். வேலிக் கதவைத் திறந்ததும், ரோஜாச் செடி இருந்த இடத்தைப் பார்த்தாள். உடனே, அவளுக்குத் ‘திக்’கென்றது. பார்வதி அந்த ரோஜாச் செடி மீது உயிரையே வைத்திருந்தாள். கண்ணும் கருத்துமாக இத்தனை நாளாக வளர்த்து வந்தாள். போட்டியில் எப்படியும் அதற்குப் பரிசு கிடைக்கும் என்று நம்பியிருந்தாள். போகும் போதும் வரும் போதும் அதைப் பார்க்காமல் போக மாட்டாள். பள்ளிக்கூடம் போகும் போதெல்லாம், “அம்மா, வேலிக் கதவைத் திறந்து போட்டுவிடாதே அம்மா. ஆடு மாடு வந்து ரோஜாச் செடியைத் தின்றுவிடும்!” என்று எச்சரிக்கை செய்துவிட்டுத்தான் போவாள். இப்படியிருக்கும்போது 

அந்த ரோஜாச் செடியைத் தொட்டி யோடு காணோம் என்றால் அவளுக்கு எப்படி இருக்கும் !

“அம்மா, அம்மா என் ரோஜாச் செடி எங்கே அம்மா ?” என்று பதறிக்கொண்டே கேட்டாள் பார்வதி.

“பார்வதி, ஒன்றும் ஆபத்து வந்துவிடவில்லை. பதறாதே! நான் சொல்லுவதைக் கேள்” என்று கூறிக் கொண்டே பார்வதியின் அருகிலே வந்தாள், அவளுடைய அம்மா. நடந்ததை அப்படியே எடுத்துச் சொன்னாள்

அதைக் கேட்டதும்! “என்ன அம்மா, இப்படிச் செய்து விட்டாயே! நான் எவ்வளவு பாடுபட்டு வளர்த்தேன் ! உனக்குத் தெரியாதா அம்மா ? பணம்தானா பெரிது! அப்படிப் பார்த்தால்கூட நாளைக்கு நமக்குப் பரிசு கிடைத்தாலும் கிடைக்குமே அம்மா!”

“பரிசு நிச்சயமாய்க் கிடைக்கும் என்று எப்படியம்மா சொல்லுவது ? பரிசு கிடைக்காதபோனால், இந்த ஐந்து ரூபாயும் போய்விடுமே ! இப்போது, இதில் உனக்கு அழகான ஒரு சட்டை, ஒரு பாவாடை....”

“போம்மா. நான் அருமையாக வளர்த்த செடியே போய் விட்டது. இதெல்லாம் எதற்கு அம்மா ?” என்று கூறிவிட்டு விம்மி விம்மி அழ ஆரம்பித்தாள் பார்வதி.

மறுநாள் அதிகாலை நேரம். சிறுவர் சிறுமியர் அவரவருடைய பூச்செடிகளைக் கொண்டுபோய்க் காட்சியில் வைத்துக் கொண்டிருந்தார்கள். மீராவும் அவளுடைய ரோஜாச் செடியை ஒரு வேலையாளின் தலையில் ஏற்றிக்கொண்டு வந்தாள். ஆணால், எல்லோரையும் போல மண் தொட்டியில் அந்த ரோஜாச் செடியை அவள் வைத்திருக்கவில்லை. பணக்காரியல்லவா? அதனால் எவர்-சில்வர் தொட்டியில் வைத்திருந்தாள். முன்பு பார்வதி வைத்திருந்த பழைய மண் தொட்டியிலிருந்து இதற்கு மாற்றியிருந்தாள்.

மாலையில் கல்வி மந்திரி வந்தார். காட்சியைச் சுற்றிப் பார்த்தார். எல்லாச் செடிகளையும் விட மீராவின் ரோஜாச் செடிதான் நன்றாகவும் அழகாகவும் இருப்பதாக அவருடைய அபிப்பிராயம். மற்றவர்களின் அபிப்பிராயமும் அதுதான். அதனால் அந்தச் செடிக்கே பரிசு கொடுப்பது என்று முடிவு செய்தார்கள். உடனே மீராவுக்கே முதல் பரிசு என்றார்கள். மீரா மிகவும் குதுகலமாக மந்திரியின் அருகே ஒடி வந்தாள்.

அப்போது மந்திரிக்கு எப்படியோ சந்தேகம் வந்து விட்டது. “ஏனம்மா எவர்-சில்வர் தொட்டியில் செடியை வளர்த்திருக்கிறாயே தொட்டியை உங்கள் வீட்டுத் தோட்டத்தில் வைத்தால், யாராவது தூக்கிக்கொண்டு போய்விட மாட்டார்களா?” என்று கேட்டார்.

தோட்டத்திலே நான் இதை வைக்கவே மாட்டேன். என் அறைக்குள்ளேயே பத்திரமாக வைத்திருப்பேன்” என்றாள் மீரா.

மந்திரி புன்சிரிப்புடன், “சரி. ஒரு நாளைக்கு எத்தனை தடவை இதற்குத் தண்ணிர் ஊற்றுவாய் ?” என்று கேட்டார்.

மீராவுக்கு செடி வளர்ப்பதைப் பற்றி என்ன தெரியும்? “பத்துப் பதினைந்து தடவைக்குக் குறையாமல் ஊற்றுவேன். இல்லாதபோனால் இப்படி ஜோராக வளர்ந்திருக்குமா?” என்றாள்.

“ஒஹோ, அப்படியா! சரி. இந்த எவர் - சில்வர் தொட்டியிலே ஓட்டை ஏதாவது இருக்குமோ?” என்று கேட்டார் மந்திரி.

“ஓட்டையா! ஓட்டைச் சாமான்களை நாங்கள் உபயோகப்படுத்தவே மாட்டோம். ஒரு சின்ன ஓட்டைகூட இருக்காது. நல்ல தொட்டி!” 

மீரா சொன்னதைக் கேட்டதும் சிரித்துக் கொண்டே “அப்படியானால் இந்தப் பரிசு உனக்கு இல்லை” என்று சொன்னார் மந்திரி.

மீராவுக்குத் தூக்கிவாரிப் போட்டது.

காரணம் என்ன தெரியுமா ? நீ சொன்ன மாதிரி அறைக்குள்ளேயே இந்தச் செடி இருந்திருந்தால், சூரிய வெளிச்சம் இல்லாமல் கெட்டுப் போயிருக்கும். அத்துடன் நீ தினமும் பத்துப் பதினைந்து தடவை தண்ணிர் ஊற்றினதாகச் சொன்னாயே, அப்படி ஊற்றியிருந்தால் அழுகிப் போயிருக்கும் நீ மண் தொட்டியைப் பார்த்திருக்கிறாயா? அதிலே இரண்டு மூன்று துவாரம் போட்டுவைப்பார்கள். துவாரங்கள் இருந்தால் தொட்டியிலே அதிகமாகத் தண்ணிர் தங்காது. அதனாலே செடி கெடாது. மண் தொட்டிக்கே துவாரம் தேவையாயிருக்கிற போது, இந்த எவர் - சில்வர் தொட்டிக்குத் தேவையில்லையா? ஆகையால் நீ சொன்னது எல்லாமே சுத்தப் பொய். உள்ளதைச் சொல்; உனக்கு இதை யார் வளர்த்துக் கொடுத்தது ?” என்று மந்திரி கேட்டார்.

மந்திரி சொன்னதைக் கேட்க கேட்கக் மீராவின் தலை குனிந்தது. கண்ணிர் வழிந்தது. உடனே அவள் நடந்ததை நடந்தபடி கூறி, “தெரியாமல் செய்து விட்டேன். மன்னிக்க வேண்டும்” என்றாள்.

உடனே மந்திரி, “நான் சந்தேகப்பட்டது சரிதான். போகட்டும். இப்போதாவது உண்மையைச் சொன்னாயே! வருத்தப்படாதே” என்று கூறிவிட்டு, “பார்வதி என்ற பெண் இங்கே இருக்கிறாளா?” என்று கேட்டார்.

பார்வதி அங்கே இல்லை. உடனே ஆள் அனுப்பி, அவளை அழைத்துவரச் செய்தார்கள்.

வீட்டில் அழுதுகொண்டிருந்த பார்வதி, தனக்குப் பரிசு கிடைக்கப் போவதை அறிந்தாள். உடனே சொல்ல முடியாத மகிழ்ச்சியுடன் ஓடோடி வந்தாள். மந்திரியின் அருகே சென்றாள். அவர் அவளைத் தட்டிக் கொடுத்துப் பரிசு ரூபாய் ஐம்பதையும் அவள் கையிலே கொடுத்தார். 

பரிசைக் கையிலே வாங்கியதும் நேராக மீராவிடம் ஒடினாள் பார்வதி. “இந்தா, நீ என் அம்மாவிடம் கொடுத்த ஐந்து ரூபாய்” என்று கூறி அவள் கையிலே ஐந்து ரூபாயைத் திணித்து விட்டு, வேக வேகமாக வீட்டுக்கு ஓடினாள்.

மீதம் உள்ள நாற்பத்தைந்து ரூபாயையும் அம்மாவிடம் சேர்க்கத்தான் அவள் அப்படி அவசரம் அவசரமாக ஒடினாள்.


"https://ta.wikisource.org/w/index.php?title=ரோஜாச்_செடி/ரோஜாச்_செடி&oldid=482547" இலிருந்து மீள்விக்கப்பட்டது