உள்ளடக்கத்துக்குச் செல்

ரோஜா இதழ்கள்/பகுதி 1

விக்கிமூலம் இலிருந்து

ரோஜா இதழ்கள்
1

ட்டில் இன்னும் நாலைந்து கவளம் இருக்கையில் வாயிற் கதவை யாரோ தட்டும் ஓசை கேட்கிறது. மைத்ரேயி முற்றத்துக் குறட்டில்தானே சாப்பிட உட்கார்ந்திருக்கிறாள்? வெயில் இன்னமும் சுவரேறிப் போகவில்லை. மணி இரண்டடித்திருக்காது. அவளை அந்நேரத்தில் தேடிவந்து கதவை இடிப்பவர் யாராக இருக்குமோ?

அவசரமாக அள்ளிப்போட்டுக் கொண்டாலும் விழுங்க முடியவில்லை. அடிவயிற்றில் ஒரு உள்நாக்கு ஒட்டி, அது பழுப்பிலையாய்த் துடிப்பதுபோல் ஒரு அச்சம்.

ஒருகால் தபால்காரனோ? இந்த முகவரி யாருக்குமே தெரியாதே? கதவு தட் தட்டென்று பொறுமை குலைய ஒசைப்படுகிறது. மீதியுள்ள சோற்றோடு தட்டைச் சுவர் மறைவில் வைத்துவிட்டு பரபரப்புடன் வாளி நீரை எடுத்துக் கையைக் கழுவிக்கொள்கிறாள். பிறகு கையைத் துடைத்துக் கொண்டு கதவுத்தாழை மெள்ள நீக்குகிறாள்.

சினிமாக் காட்சிகளில் அதிர்ச்சியைக் குறிக்க ‘பாங்!’ என்று பேரோசைப் பின்னணியைத் தோற்றுவிப்பார்கள். அத்தகைய பேரோசையில் செவிகள் மூழ்கி ஊமையாகின்றன. கண்கள் நிலைக்கின்றன.

மறுகணம் மைத்ரேயி தலைகுனிய, பின்னே நகர்ந்து கொள்கிறாள். மாமா அந்த வாயிலையே அடைத்துக் கொண்டாற்போல் நிற்கிறார்.

வாரி முடித்த குடுமி, பஸ்ஸில் வந்ததனால் பிரிந்து பள பளப்பை இழந்திருக்கிறது. செவியில் பழைய நாளைய சிவப்புக் கடுக்கன் தொங்குகிறது. உளி பிடித்துச் செதுக்கினாற் போன்ற மூக்கு. தட்டுச் சுற்று வேட்டிக்குமேல் அந்தப் பருத்த உடலுக்கும் தொள தொளப்பாகத் தொய்யும் ஒரு வெள்ளைச் சட்டை. அவளுடைய பார்வை சட்டென்று மறுபடியும் நிலத்துக்கு இறங்குகிறது. அவரும் அவளை அப்படித் தலையோடு கால் பார்த்திருப்பார்.

“வாங்கோ மாமா” என்று சொல்லக்கூட நாவெழாமல் நகர்ந்து வழிகாட்டும் அவளை மறுபேச்சே எழாமல் பார்ப்பதை அவள் அறியாதவள்போல் தலைகுனிய நிற்கிறாள். எங்கோ பனங்காட்டின் நடுவே, ஊரோடு ஒட்டாமல், இப்படிக் குடும்பத்தைவிட்டு ஓடி வந்தவளுக்கென்று முளைத்தாற்போல் இருக்கும் ஓர் பாழடைந்த ஓட்டுக் குடிசை. செங்கற்தளம் மண்பறியக் கால்களில் ஒட்டுகிறது. ஆறடி ஐந்தடி ரேழியைக் கடந்தால் ஒட்டுத் தாழ்வரை முற்றம். தாழ் வரையில் குறுஞ்சுவர். பகுதி சமையலறை. பின்புறம் விரிசல் விழுந்த கிழவியின் முகத்தைப் போன்று வெயிலுக்கும் மழைக்கும் ஈடுகொடுத்துக் கீறல் விழுந்து சிதிலமான கதவு. தாழ்வரையின் ஓரத்தில் இரண்டு பாய்ச் சுருட்டுக்கள் இருக்கின்றன. ஒரு தகரப்பெட்டி. கொடியில் ஒரு வாயில் புடவை, பாவாடை, ரவிக்கை உட்கச்சு எல்லாம் காய்ந்து கொண்டிருக்கின்றன. நரிக்குறத்தியின் தலையைப்போல் பிறந்ததற்குப் பிறகு வெள்ளைக் குளி காணாத சுவரில் ஒரு எட்டணாக் கண்ணாடி தொங்குகிறது. முக்கோணப் புரையில் ஒரு குடிகூராப் பவுடர். ஹாஸ்லைன் ஸ்னோ சீப்பு வகையறா தெரிகின்றன. அட்டையில்லாத தொடர்கதைப் பகுதிகள் போல் ஐந்தாறு புத்தக அடுக்கு பெட்டிக்குப் பக்கத்தில் அவளுடைய பொழுதுபோக்கை விளக்குகின்றன. முற்றத்து வாளி புதியது. தகரடப்பாக் குவளை.

முற்றத்துத் துணோடு சாய்ந்தாற்போல் அவள் நிற்கிறாள்.

“... ம் ... இப்படியாய்ப் போச்சா?” அவரை உட்காருங்கள் என்று சொல்ல அவளுக்கு நா எழவில்லை.

இவர் எப்படி இங்கே தேடிக்கொண்டு வந்தார்? எதற்கு வந்தார்? ஒரு பூ அடுக்கிலிருந்து ஓர் இதழ் விடுபட்டு வந்தபின் அங்கே போய் மறுபடி உறவு கொண்டாடிக்கொள்ள என்ன இருக்கிறது?

“அவன் எப்ப வருவான் ?”

இந்தக் கேள்வியில் அவளுக்குத் துயரம் துருத்திக் கொண்டு எழும்புகிறது. தலை நிமிராமலே நிலத்தில் கோலமிடுகிறாள்.

“ஏம்மா, என்ன வெட்கம் இப்ப? நடந்தது நடந்தாச்சு. எப்படியோ நீ சந்தோஷமா இருக்கேன்னா சரிதான்.”

தரையில் இரண்டு முத்துக்கள் சிந்திவிடுகின்றன. “ஏம்மா?

“அடாடா எதுக்கு அழறே?”

நன்றாகப் பார்க்க முடியாதபடி, ஆனால் பார்ப்பதைத் தவிர வேறு வழியில்லாதபடி அவ்வளவு அருகாமையில் அவர் வந்து நிற்கிறார். வைகாசி மாசத்து வெயில் திடீரென்று இருள, ஊமைப் புழுக்கமாய் உருக்குகிறது.

“நான் அழலியே ?”

“கோர்ட்டு காரியமா வந்தேன். இப்படீன்னு தஞ்சவூர்ல சுமதி கதை கதையாச் சொன்னாள். நான் மாம்பாக்கம் போகலே. நேரே இங்கேதான் வந்தேன். இப்ப என்ன குடி முழுகிப் போச்சு? என்ன குடி முழுகிப் போச்சுன்னு கேட்டேன். ஏம்மா, நான் கேட்டது சரிதானே ?”

அழுகைதான் அடக்கமுடியாமல் வருகிறது. என்ன சொல்வது?

“எனக்கு இதில் சந்தோஷம்தான். அவ உங்களுக்கெல்லாம் துரோகம் பண்ணிருக்கா. நீயே நினைச்சுப்பாரு? அந்த வீடு உங்கப்பா வெள்ளைக்காரன் கம்பெனியில் இருந்த நாளில் அந்தப்பாணியில் கட்டினது. தோப்பு, வயல், மிஷின் வச்ச துறவுக் கிணறு, எல்லாமா, எங்கக்காக்கு வாழக் குடுத்து வைக்கலே. ஆனால் அவள் வயித்துப் பெண்ணே மத்ததுகளுக்கு வஞ்சகம் பண்ணும்னு நான் நினைக்கலே, சுமதிய முந்தா நாள் கூடத் தஞ்சாவூரில் பாக்கறச்சே நினைச் சிண்டேன். கழுத்து மட்டு சம்சாரம். பிடுங்கல். முக்கிமுக்கி நாத்தம்பது ரூபாய் வராத ஒரு வாத்தியார் வேலை அவனுக்கு. அஞ்சு குழந்தைகள். சாப்பாட்டுக்கே வராத தரித்திரம். ரஞ்சிக்கு மட்டும் என்ன? இளையாளைப் போல வயசு வித்தியாசத்தில் கொண்டுக் கட்டியிருக்கா. மூணு குழந்தையாச்சு, அவனுக்கும் மட்டுச் சம்பளம். பெங்களூரில் ரேஸ், தண்ணி எல்லாம் இருக்கு. நீங்களெல்லாரும் அழகில் குறைச்சலா, புத்திசாலித்தனம்தான் குறைச்சலா?... எச்சுமு கூடச் சொல்லுவா. சிவப்புன்னா சிலது சந்தனக் குழம்பா இருக்கும். சிலது எலுமிச்சை மஞ்சளா இருக்கும். ரோஜா, சந்தனம், எலுமிச்சை எல்லாம் கலந்த ஒண்ணும் தூக்காத கலர் மைத்ரேயிக்குன்னு. உங்கப்பாவின் நிமிர்ந்த களை உனக்குத்தான் அப்படியே வந்திருக்கு. இப்ப என்ன குறைஞ்சு போச்சு?...” மாமா ஒரு மூச்சு பேசி முடித்து விட்டு ஒரு நிதானத்துக்கு வருகிறார்.

மெல்லிய புன்னகை இதழ்களில் விளையாடுகிறது.

“இப்ப எங்கே, எந்தப் படத்துக்குப் பாட்டெழுதறார்மா ?”

“இப்ப ஒண்ணும் எழுதலே. ஆனா சான்ஸ் உடனேயே வரும்னார்...” இப்போதும் அவளுக்குத் தலைநிமிர்ந்து சொல்லக் கூச்சம் தெளியவில்லை.

“இந்தக் காலத்தில் சினிமால லைட்பாய்னாக்கூட மதிப்பாத்தான் இருக்கு. கவிஞன். யாரு கண்டா? உன்னை அடுத்த தடவை பங்களா கார்னு பார்ப்பேனாக இருக்கும்.”

அவளுக்கு முகம் சிவக்கிறது. “நின்னுண்டே பேசறேளே மாமா, உக்காருங்கோ...”

சருகுகளெல்லாம் பஞ்சுப் பிசிறுகளாக எழும்பிச் செல்கின்றன. உணர்ச்சிகள் இலேசாகின்றன.

“நீங்க எப்ப புறப்பட்டு எப்படி இங்கே கண்டு பிடிச்சிண்டு வந்தேள் மாமா ?”

“சைதாப்பேட்டையில் போயி வக்கீலைப் பார்த்தேன். நேசமுடையாரை நெஞ்சில் நினைச்சாலே நேரில் பார்க்கலாம்னு சொல்லுவா. அப்படித்தான் ஆச்சு. வக்கீல் வீட்டில சோஷியல் வொர்க்கர் லோகநாயகி அம்மா வந்திருந்தா. அவ ஏதோ அநாதாசிரமத்துக் கேசு விஷயமாகத்தான் பேசினா. சினிமான்னு ஆசைப்பட்டு வெளியூர்லேந்து கபடு தெரியாத பெண்கள் ஓடிவந்து ஏமாந்து போறதுன்னெல்லாம் சொல்லிண்டிருக்கச்சே, வக்கீல் சொன்னார். இப்படி இந்தப் பக்கம் கூட சினிமாக்குப் பாட்டெழுதும் ஒருத்தன் ஒரு பிராமணப் பெண்ணைக் கலியாணம் பண்ணிண்டிருக்கிறான்னு. எனக்கு சுருக்குனு தச்சுது. விசாரிச்சுண்டு பஸ்ஸைப் பிடிச்சு வந்தேன். அவன் காலம்பரவே போயிடுவனா?”

“இல்லே, இன்னிக்கு புதுப்படம் விஷயமா யாரோ வரச்சொல்லியிருக்கார்னு காலமே போயிட்டார்.”

“கவியெல்லாம் ஒரு கிஃப்ட், நீ இப்படித் துணிஞ்சு கல்யாணம் செஞ்சிண்டிருக்காத போனா, அவ இன்னும் எங்கியானும் லேவடியாக் கொண்டு தள்ளிருப்ப. சாதி சனம் என்ன வேண்டியிருக்கு, ஒண்ணு வாழ்ந்தா ஒண்ணு பொறுக்கல. இவன், ஏம்மா முதலியாரோ, பிள்ளையோ?”

“அதெல்லாம் சொல்லிக்கிறதில்லே. இருங்கோ மாமா, இத வந்துட்டேன்....” என்று சமையலறை மறைவுக்கு வருகிறாள். மாமாவுக்குக் காபி போட்டுக் கொடுத்து உபசரிக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. பண்ணை வீட்டில் ‘காரியம்’ பார்க்கும் மாமாவின் வீட்டில் பசுவும் எருமையும் கலந்து புதிய பாலில் காபி போடுவார்கள். இந்தப் புதிய மணவாழ்வில் வெறும் அன்பையே காபி, டிபன் உல்லாசங்கள் என்று எண்ணி இருக்கவேண்டிய நிலையில் உபசரிப்பு ஆசையை எப்படி நிறைவேற்றப் போகிறாள்? பிறந்து வளர்ந்த குடும்பத்திலிருந்து கத்திரிக்கோலினால் வெட்டி எறிந்தாற் போன்று துண்டாடப்பட்டு அவள் வந்த பிறகு, சிறகெல்லாம் ஒடிந்த நிலையில் உறவின் இன்ப ஈரங்களெல்லாம் வற்றிக் கிடக்கும் நிலையில் அபூர்வமாக ஒரு ஈரம் பொசியும் ஊற்றுக் கண்ணாய், உறவுக்கு உயிர் கொடுக்க வந்திருக்கும் தாய் மாமன். அவருக்கு இனிப்பும் காரமும் காபியும் கொடுத்து

“சித்த இருங்கோ மாமா, பால் கறந்திருப்பா தோட்டத்தில், வாங்கிண்டு வந்துடறேன்.”

அவர் முகத்தையே பார்க்காமல் கூறிவிட்டு அவள் பின் கதவைத் திறந்துகொண்டு வெளியே வருகிறாள்.

பசுமையே அற்றுப் போனாற்போன்ற நெட்டைப் பனை மரங்கள்; குட்டிச்சுவர்கள்; குற்றிச் செடிகளுக்கு இடையே பாம்பு இருக்குமோ, கரையான்கள்தாமோ என்று விளங்காத புற்றுகள்.

‘ஓ’வென்று நெஞ்சு துயரத்தைப் பிழிகிறது.

உடனே “சீ என்ன அசட்டுத்தனம்?” என்று கண்களைத் துடைத்துக் கொள்கிறாள்.

கிந்த வீட்டைவிட்டு மாலை நேரங்களில் சினிமாவுக்கோ, கடைவீதிக்கோ என்றேனும் சென்றபோதும்கூட அவனுடன் தான் சென்றிருக்கிறாள். மாம்பாக்கத்தையும், இந்தச் சாவடிக்குப்பத்தையும் பட்டணத்திலிருந்துவரும் நேர்ச் சாலை இணைக்காது போனாலும், இரண்டும் கண்டம்விட்டு கண்டம் அல்லவே? அவளுக்கு வெளியே இறங்கவே கூச்சம் போகவில்லை. அருகில் உள்ள மொட்டைக் கிணற்றிலிருந்து அதிகாலையிலே நீர் கொண்டு வந்துவிடுவாள். எத்தனையோ நாட்களில் அவன் காலையில் வெளியே சென்று, இரவு எட்டுக்கும் எட்டரைக்கும் வந்திருக்கிறான். பகல் முழுவதும் சடேரென்று ஒரு தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்டுத் திருப்பம் கண்ட வாழ்வின் புரியாத எதிர்காலத்தை எண்ணிக் கோலங்களை இட்டு இட்டுக் கலைப்பதும், படித்த குப்பைகளையே படிப்பதுமாக ஓர் இருண்ட சிறைக்குள் காலம் கழித்திருக்கிறாளே ஒழிய, கதவைத் திறந்து பார்த்ததில்லை. சற்று அப்பாலுள்ள பள்ளிக்கூடத்துப் பையன்களின் கலகலப்புக் கேட்கும். சில போக்கிரிப் பையன்கள் முற்றத்தில் ஓட்டில் வந்து விழக் கல்லெறிந்ததுகூட உண்டு.

வெளியே நின்று சுற்றுமுற்றும் பார்த்து விழிக்கிறாள் மைத்ரேயி, மாமா உள்ளே உட்கார்ந்திருக்கிறாரே? ஐயோ!

கையிலே நாலணாக்காசு கிடையாது, ரவை இல்லை. சர்க்கரை இல்லை. நெய், முந்திரிப்பருப்பு ஒன்றுமில்லை; சொஜ்ஜி கிளறும் ஆசைதான் அவலமாய் நிற்கிறது.

இந்திரா கபேயில் ஒரு ஸ்வீட், காரம் காப்பி கிடைக்கும். வாங்கிவந்து மாமாவை உபசரிக்கலாம்.

ஆனால் அந்தக் கடையில் ஏற்கெனவே அவர்கள் கணக்கில் பதிநான்கு ரூபாய் கடன் நிற்கிறது. வீட்டில் இருப்பதைக் கொண்டு என்ன செய்யலாம்? அரைப்படி அரிசி, கடுகு, வெந்தயம், ஒரு புளிக்குழம்பு செய்யும் அற்பப் பொருள்கள். காயும் பருப்பும் சேர்ந்து நல்ல சமையல் செய்து நான்கு நாட்களாகின்றன.

இடை இடையே மாமா உள்ளே உட்கார்ந்திருக்கும் உணர்வு பளீர்பளீரென்று மின் அதிர்ச்சி கொடுப்பதுபோல் உறைக்க, அவள் பெரியசாலையை நோக்கி நடக்கிறாள்.

பெரிய சாலையில் பச்சைக்கண்ணாடிகளும் படாடோபமான திரைகளுமாக விளங்கும் ஓட்டல் இந்திராகபே தான், ஒரு பெரிய நகரை அடுத்த இரண்டுங்கெட்டான் ஊர்க் கடைவீதிக்கே உரித்தான மூன்றாந்தர ஓட்டல். அந்தப் பச்சையும் நீலமுமான திரைகள் தொங்கும் மாடியறையில் தான் அவர்கள் முதலிரவையும் பின்னும் சில இரவுகளையும் அனுபவித்தார்கள். பொழுது விடியாத, உறக்கம் தெளியாத, கனவு கலையாத மயக்கத்துக்கு அது சுவர்க்கத்து அனுபவமாக இருந்தது; பெரிய சாதனையைச் சாதித்த பெருமிதமாக இருந்தது; குன்றேறி நின்ற கர்வத்தை முகத்திலும் உடலிலும் பூசியது. இப்போது.

பிற்பகல், கெடுபிடியில்லாத நேரம். சருகு இலைகளில் சாப்பிடும் இரண்டு கிராமத்தார்களைத் தவிரக் கூட்டம் இல்லை. முன்சீப் கோர்ட்டுக்கு வந்த கும்பல் ஒன்று உரத்துப் பேசிக்கொண்டு தோசைக்காகக் காத்திருக்கிறது.

முதலாளி சிவந்த நிறமுடைய இளைஞன்தான். ஆனாலும் உட்கார்ந்து ஊட்டம் பெற்ற தொந்தியும் சிலும்பிக் கொண்டு நிற்கும் கிராப்பும், வெண்பட்டையில் பளிச்சிடும் குங்குமமும் பட்டாகச் சிவந்த வெற்றிலை உதடுகளும் வயசை நடுத்தரத்துக்குக் கொண்டு போயிருக்கின்றன. அவளும் அவனுமாக எதிர்ப்பட்டால் சிரித்து உபசாரம் செய்வான். இந்த ஓட்டல்காரன், தான் பிறந்த குலத்தில் பிறந்திருக்கிறான் என்ற உணர்வு அவளுள் உறுத்த, நாணமும் குற்ற உணர்வும் அவனை நிமிர்ந்து பார்க்க இயலாமல் தடுத்திருக்கின்றன.

முதன்முதலாக அந்த ஓட்டல் படியேறி வந்தது அவளுக்கு நன்றாக நினைவிருக்கிறது. எதிரே இருந்த கண்ணாடியில் இருவர் உருவங்களும் தெரிந்தன. அவன் கறுப்பு. ஆனால் முடி அழகாகச் சுருண்டு சுருண்டு முன் நெற்றியில் விழும். ராட்சஸ வாளிப்பு இல்லை. அவளுடைய உயரம் தான். ஆனால் அவன் சிரித்தபோது, முதன் முதலாக அவளை விழுங்கிவிடும் நோக்கில் பார்த்தபோது.

“அடாடா... என்னம்மா, தனியா...? யாரிட்டானும் சொல்லி அனுப்பினால் பையங்கிட்டக் குடுத்து அனுப்ப மாட்டேனா ?”

“இல்லீங்க. (அவள் இப்போதெல்லாம் பேச்சுப் பழக்கத்தில்கூட சாதி தெரியக்கூடாது என்று மறைக்கிறாள்) யாருமில்ல. திடீர்னு ஒரு சிநேகிதி பார்க்க வந்திருக்கா. ரெண்டு ஸ்வீட், மிக்ஸ்சர் பொட்டலம், காப்பி...”

“ஓ, அதுக்கென்ன, நான் பையன்கிட்ட அனுப்பி வைக்கிறேன். பையா...?” என்று மணியை அடிக்கிறான்.

ஓர் அழுக்குச் சராய்ப்பையன் வந்து நிற்கிறான்.

“ஸ்வீட் என்ன வேணும்? ஜாங்கிரி இருக்கு; ரவா லாடு இருக்கு...”

“ஜாங்கிரியே இருக்கட்டுமே? கணக்கில் எழுதிக்குங்க..”

மென்மையான உணர்வில் ஆயிரம் ஊசிகள் தைக்கின்றன.

“ரெண்டு ஜாங்கிரி, மிக்ஸ்சர் பொட்டலம், ரெண்டு ஸ்பெஷல் காப்பி எடுத்திட்டுபோ...”

அவனை ஏறிட்டுப் பார்க்க இயலாமல், நன்றி என்றுகூடச் சொல்லக் கூனிக் குறுகி, அவள் திரும்புகிறாள். “இந்த பொண்ணு, பிராமணப் பொண்ணு. இப்படி ஒரு சேர்க்கையுடன் வந்து...” என்று நினைப்பானோ என்று இன்று தான் தோன்றுகிறது. பின்னே நெடுஞ்சாலையில் ஒட்டல் பையன் காப்பித் தம்ளர் பொட்டலங்களுடன் புள்ளி போல் தொடருகிறான். வீடு திரும்புமுன் பொட்டலங்களையும் காப்பிக் கிளாசுகளையும் தன் கையில் வாங்கிக் கொண்டு பின் புறமாகவே கதவைத் தள்ளிக்கொண்டு நுழைகிறாள். மாமா அடுக்குத் தொடர் கதையில் ஒன்றைப் பிரித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவள் விருவிரென்று குறுஞ் சுவருக்குப் பின் புகுந்து காப்பியைத் தன் டம்ளர்களில் கொட்டிக் கொண்டு, ஒட்டல் பையனிடம் அந்த டம்ளர் களைக் கொடுத்து அனுப்புகிறாள். ஜாங்கிரி புதிதல்ல. ஒன்றில் கொஞ்சம் கிள்ளி வாயில் போட்டுக்கொள்கிறாள். மிக்ஸ்சருக்குப் பதிலாகப் பகோடா வாங்கியிருக்கலாமோ? ஆனால் ஏகாதசி அமாவாசை ஏதேனுமாக இருந்தால் மாமா வெங்காயம் சாப்பிடமாட்டார். கொண்டு வைக்கத் தட்டு இல்லை. சோற்று வட்டையில் மூடும் அலுமினியத் தட்டில் அவற்றை வைத்துக் கொண்டு வருகிறாள்.

“அடேடே, என்னத்துக்கம்மா இதெல்லாம், நீயே ஓட்டல்ல வாங்கிண்டு.”

“பரவாயில்ல மாமா, பாலுக்குப் போனேன். கறக்கிறவ னில்லையாம். அப்படியே நாலெட்டு போய் வாங்கி வந்திட்டேன். முத முதல்ல நீங்க வந்திருக்கேள் மாமா.”

“அசடு, இப்ப எதுக்கு, கண்கலங்கறே? முதல்ல அப்படித் தான் இருக்கும். பின்னே தானே வந்து சொந்தம் கொண்டாடறாளா இல்லையா, பாரு! இவாளைவிட, அக்னி ஹோத்ரம் பண்ணினவா குடும்பங்களிலெல்லாம் பிள்ளைகள் சீமையில் போய் எந்தக் கழிசடையையேனும் சம்பந்தம் பண்ணிண்டு வந்து, சொத்துக் கிடையாது, பத்துக் கிடையா துன்னு குதிச்சவாள்ளாம் இப்ப கொஞ்சிக் குலாவறா. அந்தக் கருமம், பொண்ணாப் பிறந்தது, சமையலுள்ள வந்து சிகரெட்டை ஊதறது. இவா விழுந்து விழுந்து உபசாரம் பண்றா...!”

“உங்க பண்ணை வீட்டிலா, மாமா ?”

“எல்லாம் இந்தக் கண்ணால எத்தனையோ பார்த்தாச்சு. பிராமண ஜாதியிலே பிராமணத்துவம் எங்கே இருக்கு? பணத்துக்காக எல்லா ஆசாரத்தையும் விட்டவாதான் அதிகம். நீ எதுக்கு அழறே, அசடு?”

“அழலே மாமா, நீங்க வந்தது எனக்கு ரொம்பச் சந்தோஷமா இருக்கு. நெஞ்சம் தழுதழுத்துக் குழம்புகிறாள். “மாமா, உங்களை நமஸ்காரம் பண்ண மறந்துட்டேனே ? அப்படியே நில்லுங்கோ...” என்று விழுந்து பணிகிறாள்.

“தீர்க்க சுமங்கலியா, அமோகமா வாழ்ந்திண்டிரம்மா. ரெண்டு பேரான்னா பண்ணனும் ?”

தடைபட்ட நீர் கரகரவென்று கன்னங்களை நனைக்கிறது.

“காப்பி ஆறிப்போறது. சாப்பிடுங்கோ மாமா.”

“இந்தா, நீ சாப்பிடு.”

“எனக்கு இருக்கு மாமா, இப்பத்தான் நான் சாதமே சாப்பிட்டேன். இங்கே இருப்பு நிலையில்லே. கோயமுத்துரர் ஸ்டுடியோவில் புதுப் படத்துக்குப் பாட்டு எழுதப் போறதா இருக்கார். அதனால, இப்படி சாமான் சட்டெல்லாம் இல்லாம இருக்கோம்.”

“அதுக்கென்னம்மா? ஓட்டல்ல வாங்கிச் சாப்பிட்டுட்டு ஹாயா இருக்கற காலம்தானே இப்ப?...” என்று சிரிக்கிறார். ஜாங்கிரியையும் மிக்ஸ்சரையும் மாறி மாறி ரசித்துச் சாப்பிடுகிறார்.

“மாமி செளக்கியமா, மாமா ? சுந்து எப்படி இருக்கிறான்? பிரேமா இந்த வருஷம் எஸ்.எஸ்.எல்.ஸியா?”

“எங்கே? போன வருஷம் பரிட்சை சமயத்திலே டைபாயிடாப் படுத்துண்டு தங்கிட்டாளே? உன் மாமிக்குத் தான் ப்ளட்பிரஷர். மட்றாஸ்-க்கு வந்து வைத்தியம் பண்ணிக்கணும்னு சொல்லிண்டிருக்கா. அடுத்த மாசம் மறுபடியும் கோர்ட்டுக் காரியமா வரச்சே அவளையும் கூட்டிண்டு வந்து ஸ்பெஷலிஸ்ட் கிட்ட காட்டணும்.”

அந்தக் கணத்தில் மாமியை அழைத்துவந்து விடுவாரோ என்ற திகில் கவ்வுகிறது. “அதான். இன்னிக்கே ஒரு கால் கிளம்பவேண்டி இருந்தாலும் இருக்கும்னு சொல்லிட்டுத்தான் போனார்..” என்று முன்னணை போட்டு வைக்கிறாள்.

“ஏதோ இருக்கட்டும். நீதான் அமோகமாக இருக்கப் போறே...” என்று சொல்லிக் கொண்டே மாமா எழுந்து சென்று வாளி நீரில் கை கழுவிக்கொண்டு காப்பி குடிக்கிறார். பிறகு மடியிலிருந்து வெற்றிலை பாக்கு சீவல் டப்பாவை எடுத்து வெற்றிலை போட்டுக் கொள்கிறார்.

அவளுக்கு, அவர் எழுந்து போகவேண்டுமே என்று இருக்கிறது. தான் உட்காராமலேயே நிற்கிறாள்.

“அப்ப உங்கக்கா, உனக்கு ஒண்ணுமே கொடுக்கலியா?”

கொடுப்பதா? அக்கா என்ன கொடுத்தாள் அவளுக்கு? புடவைத் தலைப்பைக் கைவிரலில் முறுக்கிக்கொண்டு குற்றவாளியாக நின்ற அவளுக்கு என்ன கொடுத்தாள் அக்கா? அவள் காலடியில் அவளுடைய இரண்டு பாவாடை தாவணி, புடவை ஒன்றும் கொண்ட துணி மூட்டை வந்து விழுந்தது.

வாயிற்படியில் கனலை உமிழும் துர்க்கையாக அக்கா கனகம் நின்றாள்.

“எங்கே வேணாப் போய்ச் சந்தி சிரி. வீட்டுப்படி ஏறக் கூடாது இனிமே!”

துணிமூட்டையை எடுத்துச் சென்று மரத்தடியில் நின்று பிரித்துப் பார்த்தாள். அவளுடைய பழைய பாவாடைகள். புதிய ‘பிங்க்’சோலியும் ஜார்ஜெட் புடவையும் எங்கே?

திரும்பி வந்து அவள் அதைக் கேட்டாள்.

“ஜார்ஜெட் புடவையா? போய்க் கட்டிக்கப் போறியே, அந்த நல்லாம்டயானை வாங்கித்தரச் சொல்லு!” என்று சீறினாள். அந்த மூட்டையை அப்படியே கொண்டு நடக்க அவளுக்கு வெட்கமாக இருந்தது. மிகப் பழைய பாவாடை தாவணியைப் போட்டுவிட்டு சேலையையும் உள்பாவாடை ரவிக்கைகளையும் மட்டும் மடித்துச் சுருட்டிக்கொண்டு அந்த வாயிலைக் கடந்து வந்தாள்.

“ஒண்ணுமே தரலே? உங்கம்மாவின் சங்கிலியில் உனக்கு ஒத்தவரியும் ஒரு ஜோடி வளையலும் இருக்குமே? பட்டுப் புடவையில் இரண்டுகூட உன் பங்குக்கு வரணுமேடி? அப்புறம் வயிரத்தோட்டில் பிரிச்ச கல்லு? காது மூக்கு மூளியா, கையில் கழுத்தில், ஒண்ணுமில்லாம, வெறும் கருமணி மாலையும் கண்ணாடி வளையலுமா நிக்கிறியே?”

“அதெல்லாம் எதுக்கு மாமா இப்ப? நீங்க சித்தமுன்ன சொன்னாப்போல, எனக்கு நல்ல காலம் வரச்சே, நானே எல்லாம் வாங்கிப் போட்டுக்கறேன்.”

“அதுக்காக? கல்யாணம்னு பண்ணிக் குடுத்தா உன் பங்குக்குப் பத்தாயிரம் செலவழிக்க வேண்டாமா?”

“...”

“அதை நீ கேக்கலியா?”

“அதைக் கேட்க எனக்கு வாயில்லையே மாமா ?”

“அடி அசடு ? உங்கப்பா, கட்டின பெண்டாட்டியையும் பெண் குழந்தைகளையும் விட்டுட்டுக் கடைசி காலத்திலே எவளையோ புடிச்சிண்டு ரெண்டு லட்சம் ஆஸ்தியையும் அவளுக்குத் தாரை வார்த்துட்டுப் போனப்ப, கம்பெனி டைரக்டரெல்லாம் சேர்ந்து இரக்கப்பட்டு அஞ்சும் பத்துமா அறியாமல் நின்ன உங்க மூணுபேருக்கு மட்டும் ஆளுக்குப் பத்தாயிரம் ரூபாய் கல்யாணத்துக்குன்னு கொடுத்தாளே, அதை நீ கேட்க வேண்டாமா?”

மைத்ரேயிக்கு இது கேட்காத புதுமையாக இருக்கிறது. அவளுக்குத் தாயாகும் வயசுக்கு மூத்த அக்கா, அம்மையையும் அப்பனையும் துடைத்து வாயில் போட்டுக் கொண்டதற்காக அவளைத் திட்டிக் கொட்டித்தான் அறிந்திருக்கிறாள்.

“அதெல்லாம் எனக்குத் தெரியாது, மாமா...”

“தெரியாதா? அவா ரெண்டுபேருக்கும்தான் அந்தப் பணத்தைச் செலவழிச்சு நல்ல இடமாகப் பார்க்காமல் வஞ்சகம் செய்தாள். உன்பங்கு முழுசுமே விட்டுவிடுவதா? அடி அசடு! உன்னோட அவன் கிட்டச்சொல்லி கேஸ் போடச் சொல்லு!...”

“சரி, மாமா...”

“கூடப் பிறந்த பிறப்புக்கே துரோகம் செய்யத் தோணுமா? நான் அன்னிக்கே உங்களை எல்லாம் இவகிட்ட காட்டிக் குடுக்காம கூட்டிண்டு போயிருப்பேன். எங்கிட்ட வந்திருந்தா இப்படி எல்லாமா நேரும்? ஒருத்தொருத்தியையும் டாக்டர்னும் இன்ஜினியர்னும் கட்டிக் குடுத்திருக்க மாட்டேனா அம்மாவும் அப்பாவும் போனாலும், இப்படி ஒரு துரதிர்ஷ்டம் அக்கா ரூபத்திலே வருமா? அந்தக் காலத்தில் முதல்ல இவளை அத்தை பிள்ளைக்கே குடுத்து, கொஞ்சச் சீராகவா செஞ்சா? உன் அத்தை பெரிய லங்கிணி. உன் அப்பா கைநிறைய தங்கமாச் சம்பாதிச்ச காலம் எனக்குத் தெரியும். அத்தனையும் அவதான் அமுக்கிண்டா...” இதெல்லாம் மைத்ரேயிக்கு இப்போது கேட்கப் பிடிக்கவில்லை.

“போனால் போகட்டுமே, மாமா. அக்காதானே ? அவளுக்கு எங்களை விட்டால் வேறு யாரிருக்கா? குழந்தை கூட இல்லையே?”

“இவளுக்கு இல்லாட்டா என்ன? அந்த டில்லிக்காரன் வாரிசெல்லாம் கொண்டுபோகும். அவா வந்து குலாவலியா ?”

“போயிட்டுப் போறா மாமா, எனக்கு அவாளாக் கொடுக்காதது வேண்டாமே?”

அவர் அங்கிருந்து எழுந்துபோனால் போதும் என்றிருக்கிறது.

“இப்படி எதுக்கு விடணும்? நீ கடைசி. எதோ வயதுக் கோளாறு. நடந்திடுத்துன்னு பார்க்காமல் அடிச்சு விரட்டியிருக்கா. உன் பங்கை ஏன் விடணும்? கேஸ் போடச் சொல்லு!”

“சரி, சொல்றேன் மாமா...”

“நானே, வந்தான்னா இருந்து சொல்லிட்டுப் போவேன்.”

“நானே சொல்லிடறேன் மாமா...”

காற்றுக்குச் சறுகிலைகள் விர்ரென்று சுழலுவதுபோல் மனசுக்குள் தோன்றுகிறது. பொடிப்பொடியாக நொறுங்க, தென்னந் துடைப்பத்தின் சந்துகளிடையே சேர்ந்து குப்பை ஷயாய் குவிந்து ஒதுங்கும் தோற்றம்.

ஏணிப்படிச் சருகிலேயே காட்சிகளில் தெரிகின்றன?

அவன் புதிய படக் கம்பெனியில் பாட்டெழுதி, நூறும் ஆயிரமுமாகச் செக்குகளாகவே கொண்டுவர, காரில் ஊட்டிக்கும் கொடைக்கானலுக்கும் பறக்க, பட்டும் வயிரமும் பச்சையும் மேனியில் மினுமினுக்க, அறுசுவை உண்டியுடன் பாலும் பழமும் உண்டு குளுமையாகச் சிரிக்க... ஏன் அத்தகைய கற்பனைகள் தோன்றவில்லை?

“அப்ப. நான் வரட்டுமாம்மா ? நாலு மணிக்குப் பஸ்ன்னான்...” எங்கே என்றுகூட அவள் கேட்காமல் “சரி மாமா..” என்று விடை கொடுக்கிறாள்.

“மாம்பாக்கம் போகலாமா, நேரே ராத்திரி போட்மெயிலுக்குப் போயிடலாமான்னு பார்க்கறேன். அப்ப, கோயமுத்துார் போனதும் கடிதாசி போடறியா?”

“சரி, மாமா..”

“அட்ரஸ் தெரியுமோல்லியோ?”

மாமா சிரித்துக்கொண்டு கேட்கிறார். “தெரியும் தெரியும்..” என்று தலையை ஆட்டிவிட்டு அவருக்கு விடை கொடுக்கிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=ரோஜா_இதழ்கள்/பகுதி_1&oldid=1115328" இலிருந்து மீள்விக்கப்பட்டது