உள்ளடக்கத்துக்குச் செல்

ரோஜா இதழ்கள்/பகுதி 13

விக்கிமூலம் இலிருந்து
13

ழை பெய்து ஒய்ந்துவிட்டதை நினைப்பூட்டுவதுபோல் ஈசலாக மொய்க்கின்றன. குழல்விளக்கின் அடியில் குடி யிருக்கும் இரு பல்லிகள் ஓடி ஓடி வேட்டையாடுகின்றன. எத்தனை பெரிய பல்லிகள் ! கள்ளச் சந்தைக்காரனை நினைப்பூட்டும் பல்லிகள். மக்களும் ஒருவகையில் ஈசல்களைப் போலவே குழல் விளக்குக் கவர்ச்சிகளில் வீழ்கிறார்கள் என்றால் பொருந்தும்.

விளக்கடியில் அவள் விரித்துவைத்திருக்கும் காகிதங்களில் ஈசல்கள். தட்டெழுத்துப் பொறியிலும் கைகளிலும் கூடச் சிறகுகளை இழந்த ஈசல் பூச்சிகள் ஊர்கின்றன.

பட்டென்று விளக்கை அணைத்து விடுகிறாள் ஞானம். ரேடியம் பூச்சு கடியாரம் மணி எட்டரை என்று காட்டுகிறது.

மைத்ரேயி கல்லூரியில் ஏதோ கூட்டம் என்று காலையில் மொழிந்தது, நினைவுக்கு வருகிறது. ரூபாய் மதிப்புக் குறைவைப் பற்றிக் கருத்தரங்கு என்று கூறினாள்.

வாயிலில் வந்து வராந்தா விளக்கையும் அணைத்து விட்டு ஞானம் தோட்டத்தில் நிற்கிறாள். தெருவிளக்கின் பிழம்பை சுற்றி ஈசல்கள் பறக்கின்றன. ஈரமண்ணில் படிந்து வரும் காற்று தலைப்பை இழுத்து மூடிக்கொள்ளச் செய்கிறது. கார்த்திகை மாசத்துப் பொறிகளைப்போல் நெடுகத் தெரியும் சாலை விளக்குகளும் கண்களுக்குக் குளிர்ச்சியாக இருக்கின்றன. எதிர்ச்சாரியில் டாக்டர் ராமசேஷனின் மனைவி வராந்தாவில் உள்ளே தள்ளி வைத்திருக்கும் அகல் ஒளி முத்துச்சுடராய் விளங்குகிறது. ராமசேஷனும் அவர் மனைவியும் அவளோடு நெருங்கிப்பழகும் தம்பதி. ஒராண்டுக்காலம் அமெரிக்காவில் இருந்து வந்ததை அடிக்கொரு முறை நினைப்பூட்டும் வண்ணம் செயற்கையாகத்தோளைக் குலுக்கிக் கொள்வதும், சில சொற்களை நாவைச் சுழற்றிக் கொண்டு உச்சரிப்பதும் தன் தனித் தன்மையைப் பறை சாற்றக் கூடியவை என்று எண்ணும் மனிதர். ராமசேஷன் மட்டுமல்ல. அங்கு அவள் பழகும் முக்கால்வாசி ‘ஃபாரின் ரிடர்ன்டு'களும் அப்படித்தான் எண்ணிக் கொள்கிறார்கள். வெளி நாட்டு விருந்தினர் கலந்து கொள்ளும் விருந்துகள் என்றால் அவர்களுக்குத் தலைகால் புரியாது. விடாமல் புகை குடிப்பதைச் சிலர் பெருமைக்குரிய பழக்கமாகக் கருதுகிறார்கள். ஆனால் அவர்களுடைய மனைவியரோ, வெளிக்கு ஆங்கிலம் பேசி, விருந்து நாகரிகங்களில் கலந்து கொண்டாலும் அடிப்படையிலிருந்து முற்றிலும் மாறாதவர்கள் என்று பல சமயங்களிலும் உறுதிப்படுத்துகிறார்கள்.

ராமசேஷனின் மனைவி ஜானகி, மெட்டியும் உச்சிப் பொட்டுமாக விளங்குகிறாள். தாய்மொழியில்தான் பேசுகிறாள். அவள் கல்லூரியில் பட்டம் பெற்று, சில மாதங்கள் ஒரு கல்லூரியில் விரிவுரையாளராகவும் வேலை செய்தவள் தான். ‘கல்யாணமாகாம இருக்கும்போது ஒரு வேலை வேண்டுமே என்றுதான் படித்தேன். டாக்டர் சைனிஸ் அக்ரேஷன்போது எமர்ஜன்ஸி கமிஷனில் சேர்ந்துவிட்டு, பிறகு தானே இங்கு வந்தார்! வரதட்சிணை ரொம்பக் கேட்கல. அதனால் எங்கம்மாவால் சமாளிக்க முடிந்தது. எனக்கும் அவருக்கும் பன்னிரண்டு வயசு வித்யாசம். அதனால் என்ன? நாங்கள் சந்தோஷமாகத்தானிருக்கிறோம்.” என்று சொல்கிறாள். “லிஸ்டர்! எங்க சிவு பூணுரல் போட்டிருக்கிறான் பாருங்கோ?” என்று வடை பாயசத்தோடு மூன்று வயசுப்பையனையும் கையில் பிடித்துக் கொண்டுவந்து வியப்பில் ஆழ்த்துகிறாள். மைத்ரேயி அந்தக் குழந்தையைக் கண்டால் விடமாட்டாள். “அக்கா, ஜானகி ஆவணி அவிட்டம் கொண்டாடியிருக்கிறாள் பார்த்தீர்களா? அந்த மனிதர் புகைபிடித்துக் கொண்டு சாலையில் ஜீப்பில் போகிறார்” என்று சிரித்தாள். “ஏன், எதற்கு’ என்று கேட்கக் கூடிய அறிவு மலர்ச்சி இருந்தும், அப்படிக் கேட்காமல் கண்களை மூடிக்கொண்டு சில வழக்கங்களைப் பின்பற்றுவதில் அவர்கள் அமைதி காண்கிறார்கள். தென்னிந்திய அந்தணர் மரபில் வந்த ஜானகி மட்டும் தான் இத்தகையவள் என்பதில்லை. ஞானம், காமத்கள், ஹெக்டெக்கள் என்று பல கலவை மொழி மக்களையும் பார்க்கிறாள். சங்கர்காமத், ராமசேஷனைப் போன்றவன் தான். ஆனால் அவன் காதலித்துக் கல்யாணம் செய்து கொண்ட மனைவி குஸ்-மாவோ, அவனுடைய தந்தையின் சிரார்த்தத்துக்கு எங்கெல்லாமோ அலைந்து புரோகிதரையும் பிராமணரையும் தருவித்துச் சாமான்கள் சேகரித்து, ஏற்பாடு செய்தாள். புரோகிதரே. எல்லாவற்றையும் அவனுக்காகச் செய்தாலும், பித்ருக்களுக்கு வழிபாடு செய்யும் நேரத்துக்கு அந்த (ப்பிரமாத) அலுவலகத்திலிருந்து அவன் சுங்கானும் வாயுமாக வந்தான். பிறகு நீராடி வேட்டியைக் கச்சமிட்டு அணிந்து கொண்டு அங்கே சாட்சிக்கு நின்றான். ஞானம் இது குறித்து அவனிடம் விசாரிக்காமலில்லை. “நம்பிக்கை இல்லை, இருக்கு அதெல்லாம் இல்லை பஹன்ஜி, இப்போது எங்களுக்குத் தனித்தன்மையே கிடையாது. அவள் சொல்கிறாள். நடக்கறேன்” என்று சிரித்தான். குஸ-மாவோ சிரித்துக்கொண்டு, “நாங்கள் க்ருஷணிகள் பஹான்ஜி. அவர்களுக்கு என்று இல்லற தர்மத்தின் பொறுப்பு தனியாகக் கிடையாது. நாங்கள் புண்ணியம் செய்தால் அவர்களுக்குப் போதும். நாம்தான் தர்மத்தை விடக்கூடாது” என்று கூறுகிறாள்.

திருமதி கோகலே, இவர்களெல்லாரையும்விட ஒருபடி மேலானவள். கணவனுக்கு மாமிசம் உண்டு பழக்கமாகி விட்டது. அவளே நல்ல மாமிசமாக வாங்கி வந்து சமைத்துப் போடுகிறாள். ஆனால் அவளோ, கடும் நியமக்காரி. ஆவணி சோமவாரம் என்றால் எந்தத் தானிய உணவும் அருந்தாமல் விரதம் இருக்கிறாள். அவளுடைய தோட்டத்திற்கு வந்து அருகம்புல்லும் மந்தார இலையும் கொண்டுபோய் கண நாதனை வழிபடுகிறாள். பெண்கள் வேரைக் கெல்லி ஏறிவது சமுதாயத்தின் ஆணிவேரையே கெல்லி எறிவதற்கொப்பாகும் என்று இந்தப் பெண்கள் கருதிச் செயல்படுகிறார்கள் என்பது கூடச் சரியில்லை. அது இயற்கையாகவே இருக்கிறது. “என்ன ஸிஸ்டர், இருட்டில் உட்கார்ந்திருக்கிறீர்களே?” ஜானகிதான் வாசலில் வந்து நிற்கிறாள். “ஜானகியா? வாம்மா, ரிபோர்ட் தயாரிக்கலாம்னு உட்கார்ந்தேன். ஒரே ஈசல், விளக்கை அணைச்சிட்டு வெளியே வந்தேன். ராமசேஷன் இல்லை ?”

“அவருக்கு ஒரு ஃபரண்டு, வந்திருக்கிறார். சர்வீஸ் டாக்டர். பாகிஸ்தான் வார் முடிஞ்சப்புறம் இப்பத்தான் இங்கே பெங்களூருக்கு மாற்றல்னு வந்திருக்கிறாராம். இரண்டு பேருமாக ஸிடிக்குப் போயிருக்கிறார்கள். சிவு தூங்கிப் போயிட்டான். மைத்ரேயி இல்லே? இன்னும் காலேஜ்லேந்து வரலே ?”

“இன்னிக்கு ஏதோ மீட்டிங்னு சொன்னா. வரத்துக்கு நேரமாயிடுத்து...”

“எம்.ஏ. முடிச்சிட்டு என்ன பண்ணப்போறா ஸிஸ்டர், அவ ?”

“கிளாஸெடுக்கணும்னு விழுந்து விழுந்து படிக்கிறாள். ரிஸர்ச் பண்ணப் போறேன்னு சொல்லிண்டிருக்கா. இப்ப எதுவும் சொல்வதற்கில்லை. ரிஸர்ச் அது இதுன்னு பண்ணி என்ன பலன் குதிக்கப் போகிறது? இப்போது நான் என்ன பண்ணிண்டிருக்கிறேன் ? ஈசல் வந்து ரிபோர்ட்டில் அப்புகிறதுனு வெளியே வந்து உட்கார்ந்திருக்கிறேன். பெண், படித்துவிட்டால் எல்லாச் சிறுமைகளும் போய்விடும், பொருளாதார சமத்துவம் வந்துவிடும் என்று நினைத்தோம். ஆனால் எவ்வளவு படித்தும் அந்தப் படிப்பெல்லாம் கொஞ்சமும் தேவைப்படாத இன்னொரு புறம்தான் நாம் வாழ வேண்டியிருக்கிறது. அந்த வாழ்க்கையையும் பணம் கொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது...”

“உண்மைதான் ஸிஸ்டர், என் தங்கைக்குப் போன வருஷம் கல்யாணமாச்சு. என்னைவிட அவள் ஒன்னரை வயசுதான் சிறியவள். அவள் எம்.எஸ்ஸி(ஹோம்சயன்ஸ்). அவன் இன்ஜினியரிங் டிப்ளமா வாங்கி ஜூனியர் இன்ஜினியராகத்தானிருக்கிறான். வரதட்சிணை அஞ்சாயிரம். கல்யாணம் இருபதாயிரத்துக்கு மேலே ஒடிவிட்டது. இப்போது போன மாசம் இவர் டில்லிக்குப் போயிருந்தப்ப, எங்கம்மா வளையல் அடுக்கக் கூட்டிவரச் சொல்லி அனுப்பியிருந்தாள். இவரைக் கண்டதும் அந்தம்மா, அந்தச் சீர்செய்யலே, இந்தச் சீர் செய்யலே, வருஷாந்தரச் சீருக்கு காட்ரெஜ் பீரோ வாங்கி அனுப்பறேன்னு சொல்லி ஏமாத்திட்டா. வளைகாப்புன்னு இப்படி அனுப்ப முடியுமா, வந்து எல்லாம் செய்து வகையாகக் கூப்பிடவந்தால்தான் அனுப்புவோம் என்றெல்லாம் சொன்னாளாம். தீபாவளிக்கு மாப்பிள்ளைக்கு வயிர மாதிரம் போடவேண்டும் என்றாளாம். இதற்கெல்லாம் எங்க வீட்டில் இவரைக் கோயிலில் வச்சுக் கும்பிடணும், இந்த பிராமண சாதியே இப்ப ரொம்ப மோசமாயிட்டது, விஸ்டர் !”

ஞானம் உள்ளுறச் சிரித்துக் கொள்கிறாள் . பிராமண சாதி இப்படி இழிந்து போனதால்தான் இந்த ஸிஸ்டர் முடி நரைத்துப் போய்க் கல்யாணமாகாமல் வறட்டுக் காலட் சேபம் செய்து கொண்டிருப்பதாக நினைக்கிறாள்.

“இந்த மாதிரியெல்லாம் கேட்பதனால்தான் நம் பெண்கள் தங்கள் மேன்மையை எல்லாம் மறந்து, வேற்று சாதியில் சம்பந்தம் செய்துகொள்ளத் தயங்குவதில்லை. இப்போது ரொம்ப நடக்கிறது. ஸிஸ்டர்! கொஞ்ச நாளைக்கு பெரியவர்கள் முறுக்கிக் கொள்வார்கள். பிறகு, சகஜமாகப் போகிறது.” என்று விவரிக்கிறாள் ஜானகி.

“ஒரளவு படித்து மறுமலர்ச்சி பெற்று, நன்றாக வாழ வேண்டும் என்று முன்னுக்கு வந்தவர்கள் வெறும் உயர்குலப் பெயரை மட்டும் வைத்துக்கொண்டு கீழ்முகமாகப் போகிறவர்களைவிட மேல்தான்.”

“நீங்கள் எதைச் சொல்கிறீர்கள் ஸிஸ்டர்? கீழ்முகமாகப் போகிறதென்றால் எதைச் சொல்கிறீர்கள் ?”

ஞானம் புன்னகை செய்கிறாள். “இதெல்லாந்தான். ஒரு பெண்ணின் வாழ்க்கைக்கு அகாத விலை கேட்பது. அவளுடைய கல்வியையோ திறமையையோ மதிக்காமல் வெறும் சீர் செய் நேர்த்திகளில் எடைபோடுவது, எல்லாந்தான். நான் மது மாமிசம் கொள்பவர்களைப் பற்றிப் பேசவில்லை. உண்மைக்குப் புறம்பாகத் துரோகம் செய்து கொண்டே பாசாங்கு செய்தல், சுயநலத்துக்காக எதை வேண்டுமானாலும் இழத்தல், எல்லாம் தான்.”

ஜானகி ஞானத்தின் பெருந்தன்மையைப் புரிந்து கொண்டு முகமலருகிறாள்.

“நாலு வர்ணம் என்பது தோற்றத்தையோ, வாழ்க்கை முறையையோ குறிப்பதல்ல. அது அக இயல்பையும் சார்ந்து தானிருக்கிறது. அதன்படி பிரும்ம குலத்தில் பிறந்தும் தன் சிறுசிறு ஆதாயங்களுக்காக ஒரு மேலதிகாரியின் எந்த ஈனமான தேவையையும் நிறைவேற்ற முயன்றால் அவன் கடையவன்தான். தாழ்ந்த படியில் தோன்றியும் பெருந் தன்மையுடன் நடந்து கொண்டால் அவன் அந்தணனுக்குரிய படிக்கு உரியவனாகிறான் இல்லையா?” என்று கேட்கிறாள் அவள.

ஒரு சராசரி அறிவு வாய்ந்த குடும்பப் பெண் என்று நினைத்துப் பார்க்கையில் அவளுடைய அறிவு முதிர்ச்சி பெருமைக்குரியதாகவே இருப்பதாக ஞானம் வியந்து கொள்கிறாள். அப்போது ஒசைப்படாமல் ஒரு பெரிய கார் ஞானத்தின் வீட்டுக்கு முன்பாக வந்து நிற்கிறது. ஜானகி மெள்ள நழுவிச் செல்கிறாள்.

கார்க் கதவை ஒட்டி திறந்து ராஜா இறங்கு முன் மைத்ரேயி மறு பக்கமாக இறங்கிவிடுகிறாள்.

ஞானம் சட்டென்று விளக்குகளைப் போட்டுவிட்டு, “வாருங்கள், வாருங்கள்!” என்று வரவேற்கிறாள்.

மேசையின்மீது இரண்டொரு இறக்கையற்ற ஈசல்கள் ஊர்ந்துகொண்டு இருக்கின்றன. ஞானம் காகிதங்களைத் தட்டி வைத்து, தட்டெழுத்துப் பொறியை ஒரமாக வைத்து மூடுகிறாள்.

“உட்காருங்கள்!” என்று பிரம்பு நாற்காலியைக் காட்டி உபசரிக்கிறாள். ராஜாவின் முகத்தில் முதுமையைக் காட்டும் சுருக்கங்கள் தெரிகின்றன. பாதித்தலை வழுக்கை. இரு காதோரங்களில் மட்டும் நரைத்து மேலே செல்லச் செல்ல அடர்த்தியில்லாத கருமை எஞ்சியிருக்கிறது. கூர்ந்து நோக்கினால் ஓர் அயர்வு தெரியும் முகம்; தங்கப் பிரேம் மூக்குக்கண்ணாடி, தடித்த ‘ஷெல்பிரேம்’ கண்ணாடியாக மாறியிருக்கிறது.

“ரொம்ப நாளாச்சு பார்த்து, எப்படி இருக்கு பிராஜக் டெல்லாம் ?”

ஞானம் அலட்சியமாகச் சிரித்தவண்ணம் கூறுகிறாள். “எப்படி இருக்கும்? எத்தனையோ பொதுத் திட்டங்கள் எப்படி இருக்கின்றனவோ அப்படி...”

“பொடி வைக்கிறீர்கள். எத்தனையோ பொதுத் திட்டங்களென்றால், எதைக் குறிப்பிடுகிறீர்கள்னு தெரியலியே ?”

“எதைக் குறிப்பிடுவேனென்று எதிர்பார்க்கிறீர்கள்? சுய நலம் என்ற ஒன்றை வெல்லும் அளவுக்கு நம் மக்களுக்கு இன்னமும் நாட்டுப்பற்று என்பது இருக்கிறதா என்பதைத் தான் அப்படிக் குறிப்பிடுகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்களேன்!...”

“நாம் நூற்றைம்பது ஆண்டு காலம் அடிமையாகக் கிடந்தவர்கள், மிஸ் ஞானம். அந்தவடு ஆண்டாண்டாக மனப்பாங்கில் பதிந்திருக்கிறது. ரயில் வண்டியிலிருந்து விசிறியையும் விசையையும் திருடுபவனுக்கு இன்னமும் நம் சொத்தைக் கொள்ளையிடுகிறோம் என்று தெரியவில்லை. ஆத்திரப்பட்டுப் பஸ்ஸைக் கொளுத்தும் இளைஞரும் அதை உணருவதில்லை.” என்று நியாயம் பேசுகிறார் ராஜா.

“அதுசரி; இந்தப் பத்துப் பதினைந்து வருஷத்தில் கண் விழித்தவர்களுக்கும் அது ஏன் வரவில்லை ? அவர்கள் சுதந்திர நாட்டில் இருப்பவர்களாயிற்றே? ஏனெனில் தங்கள் தலைவர்களின் சொற்களுக்கும் உண்மைக்கும் வேற்றுமை இருப்பதை இளம் தலைமுறையினர் உணர்ந்து விட்டார்கள். காந்தி ஜயந்தியன்று கைராட்டையுடன் பத்திரிகைக்குப் படம் எடுக்கப் போஸ் கொடுத்துவிட்டு, மாலையில் பார்ட்டியில் பங்கெடுத்துக் கொண்டு நேர்மாறாக நடக்கும் ஒரு தலைவனால் எந்த நல்ல சமுதாயத்துக்கும் வழிகாட்ட முடியாது. ஒவ்வொரு வியாபாரியும் அரசியல்வாதியும் அறிவாளியும், தொழில்காரனும் பணத்தினாலேயே உருவாகின்றனர்; பிழைக்கின்றனர். இதை அதிகம் விரிப்பதற்கில்லை. ஏனெனில் பேசும் நானும் மனசாட்சிக்குப் புறம்பாகச் சம்பளம் வாங்கிக் கொண்டு இங்கே உட்கார்ந்திருக்கிறேன். அது கிடக்கட்டும், வெகுநாட்கள் கழித்துச் சந்திக்கிறோம். உங்களுக்கு. என்ன சாப்பிடுகிறீர்கள்?” என்று கனிவாகவும் மரியாதையாகவும் வினவுகிறாள் ஞானம்.

“எனக்கு ஒன்றும் வேண்டாம்...தாங்க்ஸ்... இப்போது எதுவும் சாப்பிடுவதற்கில்லை.”

“அது தெரியும். என்றாலும் இந்த குளிருக்கு பழ ஜூஸ் ஒன்றும் சரியாக இருக்காது. மைத்ரேயி நன்றாகக் காப்பி போடுவாள்...” என்று மைத்ரேயியைப் பார்க்கிறாள் அவள். மைத்ரேயி நாற்காலியைப் பிடித்துக்கொண்டு உத்தரவுக்காகக் காத்து நிற்பவளைப்போல் நிற்கிறாள். “சரி, உங்கள் விருப்பம். இரவு எனக்குச் சாப்பாடு கிடையாது. காப்பிக்கு மட்டும் எந்த நேரத்திலும் தடையில்லை...”

ராஜாவின் அரும்பான பல் வரிசை தெரிகிறது, தங்கப்பல் பளிச்சிட மைத்ரேயி உள்ளே செல்கிறாள்.

“நான் மைத்ரேயியை முதன் முதலாக லோகாவின் வீட்டில் பார்த்ததும் அவளை அந்த ஹோமில் விடக்கூடாது என்று சொன்னேன். என் கருத்து அன்றே அவளுடைய எதிர்காலத்தை உருவாக்கிவிட்டது. என் புள்ளி தவறவில்லை. இன்று மாணவர் பங்கெடுக்கும் கருத்தரங்காகவே அது இல்லை. மைத்ரேயியின் பேப்பர் பொருளாதார நிபுணர்களையே கவருவதாக அமைந்திருந்தது. இளைஞர்மன்ற காந்தி ஜயந்தியின் போதும் நன்றாகப் பேசினாள். ஒரு நல்ல பேச்சாளி நமக்குக் கிடைக்கிறாள் என்று லோகா சொன்னாள். நான் அன்று சொல்லவில்லை. இந்தக் கருத்தரங்குக்குத் தலைமை தாங்க அவள் கூப்பிட்டதும் உடனே ஒப்புக்கொண்டேன். நம் நாட்டில் இப்போது ஒரு சாபக்கேடு என்னவென்றால் அறிவாளிகள் அரசியலை விட்டு ஒதுங்கிப் போக, அரசியலில் மூன்றாந்தரங்கள் வந்து தலையெடுத்துக் குழப்புகிறார்கள்:”

ஞானம் விடுவிடென்று, “இன்னொருமுறை சொல்லுங்கள் நான் திருத்துகிறேன். அறிவாளிகளுக்கு அது மேசை கழுவிய அழுக்கு நீராக இருக்கிறது. எத்தனை தடவை வடிகட்டினாலும் அது தெளிந்த நீராக மாறுவதில்லை. மாறாக, அந்த அழுக்கில் அவர்களும் முழுக்காடுவதுதான் நடக்கிறது.”

‘அழுக்கு நீர் அழுக்கு நீரென்று ஒதுக்கிவிட்டால் அழுக்கு நீரை மேலும் அழுக்காக்கும் மனிதர்கள் அல்லவோ வந்து பற்றிக் கொள்கிறார்கள்? அழுக்கு மேலே ஒட்டிக் கொள்ளுமே என்று அஞ்சி ஒதுங்குவது சமுதாயத்துக்கு அவர்கள் நல்லது செய்வதாகாது. இப்போது காங்கிரஸ் பழைய மாதிரி இல்லை என்பதை நீங்கள் அறிவீர்கள்.”

ஞானம் பேசவில்லை. தரையைப் பார்த்துக்கொண்டு கைக்குள் எதையோ நெருடிக்கொண்டிருக்கிறாள்.

“இப்போது காங்கிரஸ் உங்களுடைய சோஷியலிசக் கொள்கைகளுக்கு விரோதமல்ல. சற்றுமுன் மனசாட்சிக்கு உறுத்தும்படிச் சம்பளம் வாங்குவதாகச் சொன்னிர்கள். உதறி எறிந்து விட்டு வாருங்கள். நீங்கள் பொருட் செலவு குறித்து யோசனை செய்யவேண்டாம். உங்கள் தேச பக்தியை நானறிந்தவன். கட்சிக்கு உங்களைப் போன்றவர்களை ஒதுக்கி வைப்பது பெரிய இழப்பு. நீங்கள் வந்து ஒத்துழையுங்கள்...” என்று வலையை வீசுகிறார் ராஜா.

ஞானம் அமைதியாக நிமிர்ந்து பார்க்கிறாள்.

“நீங்கள் வரும்போதே தேர்தல் விரைவில்வருவதைப் பற்றித்தானே நினைத்தேன்!” என்று அறிவிக்கும் பார்வை அது.

“உங்களுடைய கொள்கை மாற்றத்துக்கு நான் நிச்சயமாக ஆதரவு கொடுக்கிறேன். என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனால் அகற்காக கான் மீண்டும் அரசியல் மேடைக்கு வரப்போவதில்லை. ஆம், நிச்சயமாக நான் வரப் போவதில்லை.”

“நீங்கள் ஒரு முறை ஏற்பட்ட கசப்பான அநுபவத்தில் பேசுகிறீர்கள். இம்முறை உங்கள் வெற்றி நிச்சயம். நீங்கள் பார்லிமெண்டுக்கு நிற்கவேண்டும் என்பது என் கோரிக்கை. உங்கள் விருப்பம் மாநிலமானால் மந்திரிப் பதவி நிச்சயம்...”

“எனக்கு அப்பத்துண்டு காட்டி வலையில் இழுக்கலாம் என்று பார்க்கிறீர்களா..?” என்று ஞானம் கேலியாகச் சிரிக்கையில் மைத்ரேயி காப்பியைக்கொண்டு வருகிறாள்.

ராஜா பச்சைக்கல் மோதிரம் மின்னும் விரல்களை நீட்டிக் காப்பிக் கிண்ணத்தை எடுத்துக் கொள்கிறார்.

“மைத்ரேயி எம்.ஏ.முடிச்சிட்டு என்ன செய்யப் போகுது?”

மைத்ரேயி நாணம் கவிய ஒதுங்கி நிற்கிறாள்.

ஒர்கணம் சென்றதும், “ரிஸர்ச் பண்ணுவதாக இருக்கிறேன். ஸார்” என்று கூறுகிறாள்.

“என்ன ரிஸர்ச் ?”

ஞானம் உடனே, “அதைக் கேளுங்கள், பைத்தியக்காரி. ஆரியர்- திராவிடர் வரலாறு பற்றிய ரிஸர்ச்சாம். திராவிடர்களை ஒரு காலத்து ஆரியர்கள் துரத்தியதால்தான் இன்று திராவிடர் ஆரியர்களைத் துரத்துகிறார்களாம். இவள் ரிஸர்ச் செய்து ஆரியர்கள் மேலுள்ள கறையை நீக்கப் போகிறாளாம். இதைச் சொன்னாலே உன்னை யுனிவர்ஸிடியில் நுழைய முடியாமல் துரத்திவிடுவார்கள். இந்த அசட்டு ஆராய்ச்சிகளினால் கூனலை நிமிர்த்த முடியுமா? யாருக்கு என்ன இலாபம்? நான் பொறுப்பில் இருந்தால் இந்த மாதிரியான கவைக்குதவாத ஆராய்ச்சிகளில் பொருளே செலவிட வேண்டாம் என்று மூடிவிடச் சொல்வேன்” என்று காரமாக முடிக்கிறாள்.

“நீங்கள் சொல்வது ஒரு வகையில் உண்மைதான். ஆராய்ச்சி உண்மை எல்லாம் செயல்முறைக்கு உதவும் இருக்க வேண்டும்..” என்று ஒப்புக்கொள்கிறார் .

“வறட்டுத் தத்துவங்களால் என்ன பயன்? ஏழு வருஷங்களாக இங்கே இந்த'ஓரியன்டேஷன் சென்டர்’ நடக்கிறது. முப்பத்தெட்டு கிராமங்களுக்குக் கோடி கோடியாகத் திட்டச் செலவு ஏறியிருக்கிறது. என்ன வகையில் முன்னேற்றம் கண்டிருக்கிறது? அதனால் என்ன தீமை குறைந்திருக்கிறது? அதுவும் குடும்ப நலத்திட்டம் கீழ்ப்படிகளில் படுதோல்வி. சில வருஷங்களுக்கப்பால் கீழ்ப்படி வர்க்கம் பெருகும்; மேற்படி அருகும். அறிவு மட்டத்தில் வேனுமானால் சோஷியலிசம் சாத்தியமாகும். எல்லாரும் மந்தைமாடாகலாம். பொருளாதார மட்டத்தில் அல்ல.

ராஜா திட்டப் பிரச்னையை ரசிக்கவில்லை.

“மைத்ரேயிக்கு அப்படி என்ன அந்த ஆரியர்திராவிட வரலாற்றில் ஈடுபாடு ?”

மைத்ரேயிக்கு ஞானம், காரணத்தைக் கூறிய பின்னரும் அவர் ஏன் திரும்பக் கேட்கிறார் என்று புரியவில்லை. அவள் மெளனமாகவே நிற்கிறாள்.

“அது இருக்கட்டும். இப்போது அந்த ஆராய்ச்சிக்கு அவசியமில்லை. அவங்கதான் அரசியலுக்கு நோன்னு சொல்லிட்டாங்க. நீ அரசியலுக்கு வரணும். இந்தத் தடவை தேர்தல் காங்கிரஸின் பலத்துக்கு ஒரு சோதனையாக இருக்கு மென்று நினைக்கிறோம். எதிர்ப்பு பல முனையாக இருக்கிறது. இந்தியைத் துருப்புச் சீட்டாக வச்சிட்டு ஆடுறாங்க. இந்த ஆட்டத்தில் நாமும் முழு மூச்சாக வச்சிட்டுத்தான் ஜெயிக்கப் பார்க்கவேணும். இது அறுபத்தாறு நவம்பர்; அறுபத்தேழு பிப்ரவரிக்கு அதிக நாளில்லை. உன் குரல், பேச்சுத்திறன் எடுப்பான தோற்றம் எல்லாமே இந்தக் கட்சிக்குப் பயன்பட வேண்டும். என்னைக் கேட்டால் நீ கல்லூரியைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். அந்தக் காலத்தில் விடுதலைப் போராட்டத்துக்கு மாணவர் அரசியலில் குதிக்கவில்லையா? இது அதைவிட முக்கியமான கட்டம். அவர்களும் மாணவர்களைக் கொண்டே

ரோஇ - 15 போராட்நடத்தச் செய்கிறார்கள். அவர்கள் கட்சியில் அடுக்கு மொழிப் பந்தலைத் தவிர வேறொன்றும் உருப்படியான கொள்கை கிடையாது. அறிவாளிகளை மூலையில் முடக்கும் அந்தக் கட்சி இந்தக் கோட்டைக்கு ஊறுசெய்ய விடக் கூடாது...”

வேகமாகப் பேசுவதால் ராஜாவுக்கு முகம் சிவக்கிறது. மைத்ரேயி தருமசங்கடமடைந்தாற்போல அவரைப் பார்க்கிறாள். ஞானம் எந்த வகையான இறுக்கத்தையும் உணரவில்லை. அவளுடைய புன்னகையே அதை வெளியிடுகிறது.

ராஜா மீண்டும் ஞானத்தை நோக்கிப் பேசுகிறார். “நான் மைத்ரேயியைக் காங்கிரஸ் கட்சியின் புதிய துளிராக முதலிலேயே நினைத்துவிட்டேன். இம்மாதிரிப் புதிய இரத்தம் பாய இடம் கொடுக்காததனால்தான் இன்று இவ் வளவு பெரிய எதிர்ப்பை எதிர்நோக்க வேண்டி இருக்கிறது.” “மிகப் பெரிய எதிர்ப்பா? உண்மையிலேயே கவலை கொடுக்கக் கூடியதுதானா?”

ராஜா ஒரு பக்கமாக முகத்தைச் சுளித்துக்கொண்டு, “சந்தேகமில்லாமல், ஆளும் கட்சி என்ற துணிவு நம்மிடம் இருக்கிறது. ஆனால் சென்னை, சுற்றுப்புறத்தை விட்டால் உள்ளே பட்டி தொட்டிகள் கிராமங்களெல்லாம் அவர்கள் பவர்ஃபுல் மீடியத்தினால் மக்களைக் கவர்ந்து இழுக்கிறார் கள். சிறுசிறு ஊர்களெல்லாம் நரம்பு இழைகள் போல் அவர் களுடைய அமைப்பு பரவி இருக்கிறது. எல்லாவற்றையும் விடக் கவலைக்கு இடம் தருவது இந்த மேற்குலத்தார் சாய்புதான். அந்தக் கிழவர் இவ்வளவுக்குப் போய் நச்சுப் பாம்புகளைத் தோளில் போட்டுக் கொண்டு தடவிப் பால் வார்க்கலாமா?” என்று கேட்கிறார்.

“உங்களைத்தான் அதற்காக இந்தக் கிழவர் தட்டிக் கொடுக்கிறாரே! இந்த ஆட்சியின் சாதனையில் நிர்வாகத் துறையிலும் வேறு பல பிரிவுகளிலும் தலைமைப் பொறுப்பைப் பூணுால் இல்லாதவரே அலங்கரிக்கின்றனர்; குலக் கல்வித் திட்டத்தை முறியடித்து எல்லோருக்கும் ஒரு கல்வி கொண்டு வந்தீர்கள். கலைக் கல்லூரிகளில், தொழிற் கல்லூரிகளில் அந்த மேற்குலத்தார்வருவதற்கு என்னென்ன முட்டுக்கட்டைகள் உண்டோ அத்தனையும் போட்டீர்கள் என்றெல்லாம் மகிழ்ந்து ஆதரவு தேடிக் கொடுக்கிறாரே? அவருடைய ஆதரவு உங்களுக்கு இருக்கும் வரையிலும் ஓட்டுக்குப் பஞ்சமில்லை; இந்த நீங்கள் அஞ்சும் மேற்குலம் என்ன சதவிகிதம் இருப்பார்கள்? மிகக் குறைவு. உங்கள் கோடடைக்கு ஒரு நாளும் ஆபத்து வர முடியாது. பெரும்பான்மை கொஞ்சம் குறையக்கூடும் வேண்டுமானால்....”

“நீங்கள் சொல்கிறீர்கள் அம்மா. எனக்கு வெளியே பாக்கும் போது, இம்முறை சென்னை எதிர்ப்புக்களைச் சமாளிப்பது சிரமம் என்றே தோன்றுகிறது. பருவமழை வறுவதும் பஞ்சம் வருவதும் ஆட்சியில் எல்லா இடங்களிலும் நடப்பதுதான். ஆனால் இங்கே அரசின் முயற்சிளை விட மக்கள் எதிர்க்கட்சியின் கூச்சலையே பெரிது படுத்துவதாகத் தோன்றுகிறது. காங்கிரஸ் ஆட்சி சென்னையில் மிகப் பெரிய சாதனைகளைச் செய்திருப்பதை யாருமே மறுக்க முடியாது. நீங்கள் வேறு எந்த ராஜ்யத்துக்குச் சென்றாலும் இது கண்களில்படும். போக்குவரத்து, சாலை, மின்சாரம். கல்வி, நிர்வாகம் என்று முன்னணியில் நிற்கும் ராஜ்யம் சென்னை. வெளியே நின்று அடுக்கு மொழியில் குறை கூறுவது எளிது. கையில் பொறுப்பை வைத்திருப்பவர்கள் அடுக்கு மொழியை வைத்துக் கொண்டு மட்டும் ஒன்றும் செய்து விட முடியாது. மக்களை ஏமாற்றலாம். நான் பெரிதும் மதிப்பு வைத்திருந்தேன் அந்தப் பெரியவரிடத்தில். அத்தகைய ‘ஸ்டேட்ஸ்மன்’ இவ்வளவு கீழ்த்தரமாகக் காங்கிரஸைப் பலவீனப்படுத்த அவர்களுடன் சேர்ந்து ‘இன்டலக்சுவல்’ என்ற பிரிவைக் காங்கிரசிலிருந்து இழுக்கிறாரே? அது சரியில்லை. நேருஜி கூறினாற் போல் வயசான பிறகு ஏற்பட்ட கோளாறு இது...நான் இன்று கூறுகிறேன், பிராமண சாதி, தற்கொலைக்கொப்பான செயலைச் செய்வதாக ஆகும். இன்று அவர் பேச்சைச் செவிமடுத்து அவர்களுடன் சேருவது... "காங்கிரஸ் கட்சி தோல்வியடையுமாயின் அதற்காக நான் மிகவும் வருந்துவேன். ஆனால் அவர்கள் பதினைந்து வருட ஆட்சிக் காலத்தில் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறை வேற்றுவதற்கில்லாமல் தவறிவிட்டார்கள். திட்டங்கள் வெற்றி என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் எந்த அளவில் பணக்காரன் பணத்தைக் குவித்துக் கொண்டே போகிறான்; விலைவாசிகள் எட்டிப் பிடிக்க இயலாமல் ஏறுகின்றன. ஏழைகள் இன்னும் பெருகிக் கொண்டிருக்கின்றனர்” என்று கூறுகிறாள் ஞானம்.

“ஒப்புக்கொள்கிறேன். என்றாலும் காங்கிரஸ் கட்சி நாட்டுக்கு நன்மை நினைக்கும் ஒரே கட்சி. அது தியாகத்திலும் கண்ணிரிலும் உருவானது. துவேஷப் பிரசாரத்தில் உருவானதல்ல. இதற்கு ஒரு நல்ல வரலாறு உண்டு. நீங்கள் என்ன அடுக்குமொழிப் பந்தல் போட்டாலும் சுதந்திரம், நேரு, காந்தி, காங்கிரஸ் என்ற தொடர்தான் எழுமே ஒழிய சுதந்திரம் அண்ணா என்று எழுத முடியுமா ?”

“சுதந்திரத்தைப்பற்றி இப்போது யார் நினைக்கிறார்கள்? அரிசி விலை என்னாச்சி? பருப்பு விலைஎன்னாச்சி? கட்டை விலை என்னாச்சி ? என்று மந்திரி அண்ணாச்சிகளைக் கூப்பிட்டுக் கேட்டுக் கோஷம் போட்டால் மக்கள் மனமிரங்கி நிற்கின்றனர். அரசியல் அந்த லெவலில்தான் இருக்கிறது.”

“சுலோகம், சினிமா, பாட்டு இது தொற்றுநோய் போலப் பிடித்திருக்கிறது.”

மைத்ரேயி இந்நேரம்வரை வாய் திறக்கவில்லை. பளீரென்று அவளுடைய குரல் எழும்புகிறது. “அப்படி ஒன்றும் நீங்கள் எளிதாக நினைத்துவிட வேண்டாம். ஆணிவேரிலிருந்து திட்டமிட்டு அவர்கள் தங்கள் கருத்துக்களை ஏற்கச் செய்கின்றனர். எனக்குத் தெரிந்து, தமிழ் படித்த வித்வான்களெல்லாரும் அவர்களுடைய ஆதரவாளர்தாம். நான் ஆறாவது படிக்கும் நாளில் கட்டுரை நோட்டில் உபாத்தியாயர் என்று எழுதினால் அந்தப் பதத்தை அடித்துத் தப்பாகக் கணக்கிட்டு மார்க்கைக் குறைப்பார்கள். ஏன்? அது சமஸ்கிருதம், ஆரியர்களின் மொழி. ஆசிரியர் என்று திருத்தி எழுதுவார்கள். இப்போது எனக்கு இதற்கும் கிண்டலாக கொடுக்கத் தெரியும். ஆசிரியரும் தனித்தமிழல்ல; ‘ஆசார்ய’ என்ற வட மொழிப்பதம் என்று சொல்வேன். வாழ்க்கை முறையிலிருந்து அடியோடு கலாசாரங்களிலேயே பிளவு காணும் வகையில் அவர்கள் செயல்பட்டிருக்கின்றனர். ஸ்லோரும் ஓர் குலம் என்று முழக்கிய காங்கிரஸ் இதைக் கவனிக்கவில்லை. எப்போதோ இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் ஆரியர்கள் அநீதி இழைத்தார்கள் என்று சொல்லிக் கொண்டு, இப்போது ஒரு சாராருக்கு இந்தத் தமிழ் நாட்டில் பிறந்திருப்பதன் உரிமையையே மறுக்கும் வகையில் விரும்பிய கல்வி கற்பதற்கும் தொழில் புரிவதற்கும் நியாயமான வகையில் பதவிகளைப் பெறுவதற்கும் இடமில்லாமல் போயிருக்கிறது. அதனால் வேற்று நாடுகளிலே, எங்கோ, எப்படியோ தங்கள் ஆற்றலைக் கொண்டு இந்த வகுப்பார் பிழைக்கப் போகவேண்டியிருக்கிறது. வட இந்தியாவில் பல ஆண்டுகளாக இந்த வகுப்பினர் வயிறு பிழைக்கச் சென்று அலுவலகங்களில் பணி புரிந்திருக்கின்றனர். எந்த வகையான மோதலும் கிடையாது. ஆனால் இந்நாட்களில் அதற்கும் ஆபத்து வந்திருக்கிறது. என்னுடன் சுதாராணி என்று ஒரு மராட்டிப் பெண் சோஷியல் சயன்ஸ் படிக்கிறாள். பம்பாயிலும் டில்லியிலும் இன்னும் எல்லா வட இந்திய நகரங்களிலும் தென்னிந்தியாவிலிருந்து சென்ற அடிநிலை மக்களின் சேரிகளைப் பற்றிக் கூறுவாள். பம்பாயிலுள்ள சேரிகளில் முழுசுமாகக் கள்ளக் கடத்தல், திருடு, சோரம் என்ற தொழில்களில் ஈடுபட்டவரே தென்னிந்திய மக்கள் என்பாள். சிவசேனை போன்ற கட்சிகள் இத்தகைய இழிவான நிலையினால் இன்னமும் வலுவடைகின்றன என்பாள்.

“டில்லி போன்ற நகரங்களில் பெரிய மனிதர்வீடுகளில் திருட்டுப் போனால் வேலைசெய்து அண்டிப் பிழைக்கும் இந்த மக்கள் சேரியில்தான் போலீசு சோதனை போடுமாம். கடத்தல் தொழிலில் ஈடுபட்ட தமிழர் தொகை மிக அதிகம் என்று அவள் வாதாடுவாள். இதன் விளைவு, அமைதியுடன் வாழும் மேற்படி மக்களையும் பாதிக்கிறது. ராமன், கிருஷ்ணன் என்று பெயர் முடிந்தாலே தமிழன் என்று மற்றவர் கேலிக்குரிய வகையில் பார்க்குமளவுக்குப் பாதித்திருக்கிறது. இங்கே ‘ஐயர்’ என்று போட்டுக் கொள்ளவும் கூசவேண்டியிருக்கிறது. “அர் யூ எ பிராமின் ?” என்ற கேள்வியும் “ஆம்” என்று சொல்லிக் கொள்ளவே கூசும் நிலையும் இன்று தமிழ்நாட்டில் இருக்கிறது. இந்த அளவுக்குச் சராசரி அறிவுக் கூர்மை உள்ள ஓர் வகுப்பு அழுத்துவதைத் தவிர்க்க, அரசு இந்நாள் என்ன செய்திருக்கிறது ?”

மைத்ரேயி இவ்வளவு ஆவேசத்துடன் பேசி ஞானம் கேட்டதில்லை. மூலையிலிருந்த வெறும் காகிதத்துண்டு திடீரென்று வெடி மருந்து சுற்றிய காகிதத்துண்டு என்று தன்னை வெளியிட்டுக் கொள்ளப் பொறிகள் பறக்க வெடித் தாற்போலிருக்கிறது. ராஜா அவளைப் பாராட்டும் வகையில் புன்னகை செய்கிறார். “சபாஷ் மைத்ரேயி, நீ இந்த உணர்வுடன் பேசுவதிலிருந்தே வெற்றியைத் தேடிக் கொடுப்பாய் என்று நிரூபிக்கிறாய். நீ கேட்டதெல்லாம் நியாயம். ஆனால் இன்று அந்த வகுப்பார் எரிகிற சட்டியிலிருந்து அடுப்புக்குள் குதிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்கும் உன்பேச்சும் திறமையும் செயல்பட வேண்டும்...”

“மன்னிக்கவேண்டும், ஸார். நீங்கள் அவர்களைவிட என்ன நலம் செய்திருக்கிறீர்கள் என்பது கேள்வி. இப்போது அந்த உயர் வகுப்புக்காரர் ஒருவர் ஒரு தலைவர், அவர்களுடைய வெறுப்பை மாற்றுவதாகத் தெரிகிறது. அவர்களும் துவேஷத்தை மறந்து ஒற்றுமைக்கு அடிகோலிவிட்டதாகச் சொல்கிறார்கள். இங்கோ வெளிப்படையாகப் பேசுபவர்களை, அந்தப் பாரபட்சச் செயல்களை ஆதரித்து உங்களைப் பாராட்டுபவர்களை, நீங்கள் மறுத்துக்கூட ஒரு அறிக்கை விடவில்லை. ஒரு கட்சிக்கு ஆதரவைத் தருவதால், ஒரு சாராரைப்பற்றி அவதூறாகப் பேசுவதையும் பொருட் படுத்தாமலிருக்கலாம் என்பது உங்கள் கொள்கையாக இருக்கும் பட்சத்தில் அந்த பாதிக்கபட்ட வகுப்பாரின் ஆதரவை நீங்கள் இழக்கவேண்டித்தான் வரும்.”

“மைத்ரேயி, யானை தன்மேல் எறும்பு ஊர்வதைப் பொருட்படுத்தாது. இந்தப் பெரிய கட்சி என்றுமே அப்படி யாரோ சிலர் பேசுவதைப் பொருட்படுத்தப் போவதில்லை. இது மக்களாட்சி. அவரவருக்குக் கருத்தைச் சொல்ல, கண்டிக்க உரிமை உண்டு. அப்படிப் பெரியார் சொல்கிறார். அதனால் அவர் உங்களுக்கு இன்று ஆகாதவராகவும் அவர் கட்டிக் கொடுத்துக் கருத்ததூட்டி வளர்த்த தம்பிகள் நல்லவர்களாகியும் விடுவார்களா? இது அபத்தம். அப்படி ஆதரவை அவர்கள் மாற்றுக் கட்சிக்கு அளிக்கும் பட்சத்தில் எந்த நன்மையையும் பெறப்போவதில்லை. இருந்தாலும் நீ துணிந்து என்னிடம் கருத்தைக் கூறியதற்குப் பாராட்டுகிறேன். நீ நன்றாக யோசனை செய்துபார். மிஸ் ஞானம்...எனக்கு நேரமாகிறது. வரட்டுமா!...”

அவர் எழுந்து விடை பெறுகிறார். ஞானம் வாயில்வரை சென்று வழியனுப்புகிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=ரோஜா_இதழ்கள்/பகுதி_13&oldid=1115380" இலிருந்து மீள்விக்கப்பட்டது