உள்ளடக்கத்துக்குச் செல்

வச்சணந்தி மாலை - II

விக்கிமூலம் இலிருந்து

வச்சணந்தி மாலை என்னும் வெண்பாப் பாட்டியலும் வரையறுத்தப் பாட்டியலும்

இரண்டாவது செய்யுளியல்

1.
கவிகமகன் வாதியே வாக்கியெனக் காசில்
புவியின்மேல் நால்வர் புலவர் - கவிகடாம்
ஆசு மதுரமே சித்திரம்வித் தாரமெனப்
பேசுவோர் நால்வர்க்கும் பேர்.

2. ஆசுகவி
பேரெழுத்திற் சொல்லிப் பொருளிற் பெருங்கவியிற்
சீரலங்கா ரத்திற் றெரிந்தொருவன் - நேர்கொடுத்த
உள்ளுரைக் கப்போ துரைப்பதனை யாசென்றார்
எள்ளாத நூலோ ரெடுத்து.

3. மதுரகவி
எடுத்த பொருளினோ டோசை யினிதாய்
அடுத்தவைசெஞ் சொல்லா யணியுந் - தொடுத்த
தொடையும் விளங்க வவைதுதிப்பச் சொல்லின்
இடமுடைய மாமதுர யாப்பு.

4. சித்திரகவி
யாப்புடைய மாலைமாற் றாதியா வேனையவும்
வாய்ப்புடைய சொல்லின் வகுத்தமைத்து - நீப்பிலா
வண்ணமுந் தொன்னூன் மரபு வழுவாமற்
பன்னுவது சித்திரத்தின் பா.

5. வித்தாரகவி
பாங்கார் தொடர்நிலைப்பாப் பல்பாதஞ் சேர்தனிப்பா
ஈங்கலப் பாக்க ளிரண்டாகும் - ஆங்குத்
தொடர்நிலைப்பா வின்விகற்பஞ் சூழ்வளையாய் சொல்லிற்
கடையிலவே யென்றுரைத்தார் கண்டு.

6. பிள்ளைக்கவி
கண்டுரைக்கிற் பிள்ளைக் கவிதெங்வங் காக்கவெனக்
கொண்டுரைக்குந் தேவர் கொலையகற்றி - ஒண்டொடியாய்
சுற்றத் தளவா வகுப்பொடு தொல்விருத்தம்
முற்றுவித்தல் நூலின் முறை.

7.
முறைதருமூன் றாதிமூ வேழீறாந் திங்கள்
அறைகநிலம் பத்துமாண் டைந்தேழ் - இறைவளையார்க்
கந்தஞ் சிறுபறையே யாரதியா மூன்றொழித்துத்
தந்தநில மோரேழுஞ் சாற்று.

8. 
சாற்றரிய காப்புத்தால் செங்கீரை சப்பாணி
மாற்றரிய முத்தமே வாரானை - போற்றரிய
அம்புலியே யாய்ந்த சிறுபறையே சிற்றிலே
பம்புசிறு தேரோடும் பத்து.

9. பல்சந்தமாலை, அந்தாதி
பத்தாதி நூறந்தம் பல்சந்த மாலையாம்
ஒத்தாய வெண்பா வொருநூறா - ஒத்தசீர்
அந்தாதி யாகுங் கலித்துறையு மவ்வகையே
வந்தா லதன்பே ரவை.

10. கலம்பகம்
வைக்கும் புயந்தவம்வண் டம்மனை பாண்மதங்கு
கைக்கிளைசித் தூசல் களிமடக்கூர் - மிக்கமறம்
காலந் தழையிரங்கல் சம்பிரதங் கார்தூது
கோலுங் கலம்பகத்தின் கூறு.

11. 
கூறு மொருபோகு வெண்பாக் கலித்துறைகள்
மாறின் முதலுறுப்பா மன்விருத்தம் - வேறகவல்
வஞ்சித் துறைவிருத்தம் வான்றுறைவெண் பாமருட்பா
எஞ்சாக் கலியினங்கொண் டீட்டு.

12. 
ஈசர்க்கு நூறிழிபைந் தையர்க் கிகலரசர்க்
காசற்ற தொண்ணூ றமைச்சருக்காம் - ஏசா
எழுபானைம் பான்வணிகர்க் கேனையோர்க் காறைந்
திழிபிற் கலம்பகப்பாட் டீண்டு.

13. ஒலியந்தாதி, மும்மணிக்கோவை
ஈண்டிய முப்பதா யீரெண் கலைவண்ணம்
மூண்டதொலி யந்தாதி முப்பதாம் - ஆண்டகவல்
முன்முறையே வெண்பா கலித்துறைய வந்தாதி
மும்மணிக்கோ வைக்கு முதல்.

14. ஊர் நேரிசை வெண்பா, ஊர் இன்னிசை வெண்பா
முதல்வனூ ரின்பேரான் மொழிவன வெண்பா
அதனைத்தொண் ணூறெழுபா னைம்பான் - மதர்விழியாய்
இன்னிசைவெண் பாவிற்கு மொக்கு மியற்பெயர்
அன்னவற்றாற் கட்டுரைத்தா ராய்ந்து.

15. கோவை, கைக்கிளை
ஆய்ந்த கலித்துறைதான் நானூறா கப்பொருண்மேல்
வாய்ந்தநற் கோவையா மற்றுரைப்பின் - ஏய்ந்த
ஒருதலைக் காம முரைப்பவையை யைந்தாய்
வருவிருத்தங் கைக்கிளையா மன்.

16. மும்மணிமாலை, நான்மணிமாலை
மன்னிய வெண்பா கலித்துறை மன்னர்பா
முன்னியமுப் பான்மும் மணிமாலை - மன்விருத்தம்
நாட்டிய நாற்பது நான்மணி மாலையாம்
ஈட்டியவந் தாதியா யேய்ந்து.

17. இருபாவிருபஃது, இரட்டைமணிமாலை, இணைமணிமாலை
ஏய்ந்த விருபா விருபதுவெண் பாவகவல்
ஆய்ந்த விரட்ரட மணியிருபான் - ஏய்ந்தசீர்
வெண்பா கலித்துறையா மேவிய நான்கானூ
றொண்பா விணைமணியா மோர்.

18. ஒருபாவொருபஃது, பன்மணிமாலை
ஓர்ந்தகவல் வெண்பா கலித்துறையென் றொன்றினால்
ஆர்ந்தவொரு பாவெருப தம்மானை - கூர்ந்தொருபோகு
ஊச லொழித்தாற் கலம்பகப்பா வெண்மாலை
பேசிய பன்மணியாம் பின்பு.

19. தசாங்கம்
புல்லு மலையாறு நாடூர் புனைதார்மா
கொல்லுங் களிறு கொடிமுரசம் - வல்லகோல்
என்றிவை நஞ்செழுத்தோ டேலா வகையுரைப்ப
நின்ற தசாங்கமென நேர்.

20. சின்னப்பூ, தசாங்கப்பத்து
நேருந் தசாங்கத்தை நேரிசை வெண்பாவால்
ஈரைம் பதுதொண்ணூ றீண்டெழுபான் - ஓரைம்பான்
தேர்ந்துரைக்கிற் சின்னப்பூ வீரைந்தாற் செப்பினார்
நேர்ந்த தசாங்க நிலை.

21. விருத்த வகை
நிலையார் குடைசெங்கோ லூர்நாடு நீள்வேல்
கொலையார் களிறு குதிரை - சிலைவாள்
இவற்றின்மேன் மன்விருத்த மீரைந்தாய் வந்தால்
அவற்றின்பேர் நாட்ட லறிவு.

22. ஊர் வெண்பா, அலங்கார பஞ்சகம்
அறிந்திடி லூர்வெண்பா வையிரண்டாம் வெள்ளை
செறிந்த கலித்துறைசீர் மன்பா - அறைந்த
கலங்காத மன்விருத்தங் காண்டகைய வண்ணம்
அலங்கார பஞ்சகமென் றார்.

23. ஊசல், நாழிகை வெண்பா
ஆங்கவிருத் தத்தா லறைந்தகலித் தாழிசையால்
ஓங்கியசுற் றத்தளவா யூசலாம் - போங்கடிகை
தேவர்க்குங் காவலர்க்குந் தேர்ந்துரைக்க வெண்பாவை
மேவியநா லெட்டாக வேய்ந்து.

24. அட்டமங்கலம், நவமணிமாலை, தசப்பிராதுற்பவம்
வேய்ந்த விருத்தங்க ளெட்டட்ட மங்கலமாம்
வாய்ந்தன வொன்பான் மணிமாலை - ஆய்ந்தங்
கிசைத்திடுவர் மால்பிறப்பா லீரைந்து வாழ்த்துத்
தசப்பிரா துற்பவமாந் தந்து.

25. நயனப்பத்து, பயோதரப்பத்து
தந்துரைத்த மன்விருத்தஞ் சார்ந்த கலித்துறைதான்
அந்தமுறுங் கண்முலைமே லையிரண்டாய் - வந்தால்
நயன பயோதரப்பத் தாமென்று நன்னூற்
பயனுணர்ந்தார் முன்பு பகர்.

26. பெண்கள் பருவம்
பகருங்கா லைந்தேழ் பதினொன்று பன்மூன்
றகலாத பத்தொன்பா னையைந் - திகலாத
முப்பத்தொன் றீரிருபான் பேதைமுத லோர்க்குச்
செப்புவராண் டெல்லைத் திறம்.

27. உலா, குழமகன்
திறந்தெரிந்த பேதை முதலெழுவர் செய்கை
மறந்தயர வந்தான் மறுகென் - றறைந்தகலி
வெண்பா வுலாவாங் குழமகன்மேன் மேவிலவ்
வொண்பாக் குழமகனா முற்று.

28. வளமடல்
உற்ற அறம்பொருள்வீ டெள்ளி யுயர்த்தின்பம்
பொற்றொடி காதற் பொருட்டாகப் - பெற்றி
உரைத்தகலி வெண்பா மடலிறைவ னொண்பேர்
நிரைத்த வெதுகை நிறுத்து.

29. அங்கமாலை, பாதாதிகேசம், கேசாதிபாதம்
நிறுத்த வெளிவிருத்த நீடுறுப்பில் வந்தால்
குறித்தங்க மாலையாக் கொள்க - உறுப்பமைந்த 
பாதாதி கேசமுங் கேசாதி பாதமுமா
ஓதுங் கலிவெண்பா வொன்று.

30. ஆற்றுப்படை
ஒன்றா மகவலா லொண்புலவர் யாழ்ப்பாணர்
குன்றாத சீர்பொருநர் கூத்தரே - என்றிவரை
ஆங்கொருவ னாற்றுப் படுத்த பரிசறைந்தால்
பாங்காய ஆற்றுப் படை.

31. தானைமாலை, வஞ்சிமாலை, வாகைமாலை
படைத்திறஞ் சொல்லின் பகர்தானை வஞ்சி
எடுத்துமேற் சேறல் இயம்பின் - அடுத்தமைந்த
வெற்றியுரை வாகையாம் வேந்தன்பா வொன்றினால்
உற்றுரைத்து மாலைப்பே ரோது.

32. தாரகைமாலை, மங்கலவள்ளை
ஓதுசந்தத் தாலுரைத்தல் ஒண்தா ரகைமாலை
கோதிலாக் கற்பிற் குலமகளை - நீதிசேர்
மங்கல வள்ளை வகுப்பொடு வெண்பாவால்
இங்காமொன் பானென் றிசை.

33. யானைவஞ்சி
இசைந்த நிலங்குலம் ஒத்த வெழிலோ
டசைந்த பிராயத் தளவும் - இசைந்தமதம்
துன்னவஞ்சி வீடுயிர்கோன் மன்னன் தொடர்ந்தணைத்தல்
சொன்னவஞ்சி யானைத் தொழில்.

34. மெய்க்கீர்த்தி, கையறமோதாப்பா
தொழிலார்ந்த மெய்க்கீர்த்தி சொற்சீ ரடியால்
எழிலரசர் செய்தி யிசைப்பார் - மொழியுங்கால்
கையற மோதார் கலிவஞ்சி யென்றிவற்றால்
பொய்தீர்ந்த நூலோர் புரிந்து.

35. புகழ்ச்சிமாலை, நாமமாலை
புரிந்த மயக்கவடி வஞ்சியால் பொய்தீர்
திருந்திழையார் சீர்பேர் சிறக்கத் - தெரிந்துரைத்தான்
மன்னும் புகழ்ச்சிநன் மாலையா மைந்தர்க்காம்
பின்னாம மாலைப்பேர் பெற்று.

36. இரட்டைமணிமாலை, வருக்கமாலை
பெற்றசீர் மன்விருத்தம் வெண்பாப் பெயர்ந்திருபான்
மற்றை யிரட்டைமணி மாலையாம் - பொற்றொடியாய்
மன்னகவ லெட்டாய் வருக்கவெழுத் தான்வருமேல்
முன்வருக்க மாலை மொழி.

37. செருக்கள வஞ்சி, வரலாற்று வஞ்சி முதலியன
மொய்யின் திறம்வஞ்சிப் பாவின் முடித்துரைத்தல்
செய்யின் செருக்கள வஞ்சியாம் - தையால்
வழியுரைத்தல் வஞ்சி வரலாறாம் மற்று
மொழியுரைத்தல் தன்பெயரா மூண்டு.

38. பரணி
மூண்ட அமர்க்களத்து மூரிக் களிறட்ட
ஆணடகை யைப்பரணி யாய்ந்துரைக்க - ஈண்டிய 
நேரடியே யாதியா நீண்டகலித் தாழிசை
ஈரடிகொண் டாதியுட னீறு.

39. 
ஈறில் வணக்கங் கடைநிலம்பேய் என்பனவும்
வீறுசா லையைக்கு மெய்ப்பேய்கள் - கூறித்
திறப்படச் சொல்லினவுஞ் செப்பின் பிறவும்
புறப்பொருள்நூல் கொண்டு புகல்.

40. பெருங்காப்பியம்
புகரில் வணக்கம் பொருப்பறமே யாதி
பகர்தல் கடல்கோள் பருவம் - நிகரில்
தலைவனைக் கூறல் தபனனிந்து தோற்றம்
சிலைமணந்தோர் போரின் செயல்.

41. 
செயலார் முடிசூடல் சீர்ப்புதல்வர்ப் பேறோ
டயலார் பொழில்புனல்புக் காடல் - இயலுமூண்
மந்திரத்தூ தாடல் வருமிகல் விக்கிரமம்
சந்துசெல வும்பிறவுஞ் சார்ந்து.

42. 
சார்சுவையே பாவம் விளக்கி யினத்தொடுபாக்
கூருரையே பாடையே கொண்டிலம்பம் - நேர்சருக்கம்
நீப்பில் பரிச்சேதம் நேர்ந்துவரு மேற்பெருங்
காப்பியமா மென்று கருது.

43. காப்பியம், புராணம்
கருதுசில குன்றினுமக் காப்பியமா மென்பர்
பெரிதறமே யாதி பிழைத்து - வருவதுதான்
காப்பிய மாகுங் குலவரவு காரிகை
யாப்பிற் புராணமே யாம்.

44. அகலக்கவிகளில் சிலவற்றிற்குச் சிறப்பு
ஆய வகப்பொருண்மே லாசிரியப் பாவினுள்
மேயசீர் வஞ்சியடி மேவாது - தூய
அகப்பொருண்மே லன்றி யருங்கலிகள் வாரா
தொகப்பெறா வஞ்சி தொடர்ந்து.

45. அகலக்கவியின் பெயர்கள்
தொடர்ந்த பெயர்கள் தொழிலளவு காலம்
இடம்பொருள் பாவுறுப்போ டெல்லை - நுடங்கிடையாய்
பாடினான் பாடுவித்தான் பாடப் படுபொருளான்
நீடும் பிறவு நிறைந்து.

46. கமகன், வாதி
நிறைமதியால் கல்வியால் நீள்கலைகள் கல்லா
தறையு மவன்கமக னாகும் - முறைமேற்கோள்
புல்லு மெடுத்துக்காட் டேது புகலுமவன்
நல்வாதி யென்றே நவில்.

47. வாக்கி
நவிலு மறமுதல் நான்குமயங் காமல்
புவியதனிற் கேட்டோர் புகழக் - கவிப்பனுவல்
குன்றாத சொல்லால் தெளிவுபெறக் கூறுவோன்
நன்றாய வாக்கியென் றார்.

48. புன்கவிஞர்
ஆரொருவன் பாக்களை யாங்கொருவ னுக்களிப்போன்
சோரகவி சார்த்தொலியிற் சொல்லுமவன் - சீரிலாப்
பிள்ளைக் கவிசிறந்த பின்மொழிக்காம் புன்மொழிக்காம்
வெள்ளைக் கவியவனின் வேறு.
"https://ta.wikisource.org/w/index.php?title=வச்சணந்தி_மாலை_-_II&oldid=726" இலிருந்து மீள்விக்கப்பட்டது