உள்ளடக்கத்துக்குச் செல்

வனதேவியின் மைந்தர்கள்/முன்னுரை

விக்கிமூலம் இலிருந்து
முன்னுரை

இதற்கு முன் சத்திய வேள்வி என்ற புதினத்தை எழுதினேன். அது வாசகர், திறனாய்வாளரால் பெரிதும் வரவேற்கப்பட்டிருக்கிறது. வேதப் பாடல்கள், உபநிடத கதைகள், இராமாயண இதிகாசம் ஆகியவற்றில் காணப்பட்ட ஆதாரங்களைக் கொண்டு புனையைப் பெற்ற நவீனம் அது. சில வரலாறுகளின் ஆதாரங்களில் நெருப்புத்துண்டு போன்று உண்மை சுடும். வயிரம் பாய்ந்த மரம் இறுகிக் கரியாகி, ஒளியை வாரி வீசும் மணியை உள்ளடக்குவது போன்று, உண்மையும் மறுக்கமுடியாததாக ஒளிரும் மாமன்னர் சனகர், ஏரோட்டியபோது, உழுமுனையில் கண்டெடுத்த பெண் குழந்தை இராமாயண மகா காவியத்தின் நாயகியாகிறாள். இராமாயண காவியம், சக்கரவர்த்தித் திருமகன் இராமசந்திரனின் பெருமை மிகு வரலாற்றைச் சொல்வதாக ஏற்றி வைக்கப்பட்டாலும், காவியத்தின் ஆதார சுருதியாகத் திகழ்பவள் நாயகி சீதைதான். இவள் மண்ணிலே கிடைத்தவள். குலம் கோத்திரம் விளக்கும் பெற்றோர் அறியாதவள். பூமித்தாய், தினமும் குருதியுமாக ஒரு சிசுவைப் பிரசவிக்க முடியுமா? இது அறிவுக்குப் பொருந்தாத ஒரு கற்பனையே. அலங்காரமான இந்தக் கற்பனை, கசப்பான ஒர் உண்மையைப் பொதித்து வைக்கப் பயன்பட்டிருக்கிறது. இந்த எண்ண ஓட்டமே, பூமியில் கிடைத்த பெண் சிசுவுக்கு, பிறப்பென்ற ஒர் ஆதி கட்டம் உண்டென்று புனையத் துணிவளித்தது. அந்தக் கால சமுதாயத்தில் நால்வகை வருணம் அழுத்தமாகக் கூறு போடவில்லை என்றாலும் வருண தருமங்கள் மிக அழுத்தமாகத் தம் ஆதிக்கத்தைப் பெண் மக்களின் வாழ்க்கையிலும் உணர்வுகளிலும் பதிக்க, மன்னராதிக்கம் துணையாக இருந்தது எனலாம். நூற்றுக்கணக்கான, பணிப்பெண்டிரும், போக மகளிரான அந்தப்புர நாயகியரும், செவிலியரும் எவ்வாறு உருவாயினர்? இதே போல் ஆண் அடிமைகளும் இருந்தனர். என்றாலும், பெண் மக்கள் போல் எந்த உரிமையும் அற்ற பந்த எல்லைகளில் அவர்களின் சேவை இருந்ததில்லை. உடலால் அவர்கள் ஆணினம் முகர்ந்து பார்க்கவோ, கசக்கி எரியவோ ஆட்படும்போது, எந்த எதிரொலியும் எழுப்பஇயலாதவர்களாகவே உட்பட்டிருக்கிறார்கள். இவர்கள் எல்லோருமே குலம் கோத்திரம் அறியாதவர்கள். தந்தை வழி முத்திரைக்கு அப்பால் உதித்தவர்கள். பெண் குழந்தைகள் அரச மாளிகைகளில், பிரபுக்களின் மேல் வருணத்தாரின் மனைகளில், கணிகையர் விடுதிகளில், உல்லாசம் அநுபவிக்கக்கூடிய பொது இடங்களில் ஊழியம் செய்ய விலைப்படுத்தப்பட்டனர். அரசர்கள், மேல்வருண ருஷி முனிவர்களுக்கு இந்தப் பெண்களை, பசுக்களையும் பொன்னையும் வழங்குவதுபோல், தானமாக வழங்கினர். இத்தகைய அடிமைகளின் தொடர்பினால் உயர் வருண ருஷித் தந்தைக்கு மகன்கள் உண்டானால், அவர்கள் ஏற்றம் பெறுவதும் இருந்தது. ஆனால் இந்த ஆண்மக்களும் பெரும்பாலும் உபநயனம் பெறும் உரிமை இல்லாதவராகவே இருந்தனர் என்றே தெரிய வருகிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக பெண் பிறந்துவிட்டால், அவள் அடிமை என்றே விதிக்கப் பெற்றாள். அழகிய பெண்ணாக இருந்து விட்டால், மன்னர்களும், பிரபுக்களும் அந்தப்புரக் கிளிகளாகக் கொள்வர். அவர்களில் எவருக்கேனும் ஒரு வாரிசு உதயமாகும் என்ற நிலையை எய்தினால் போட்டி, பொறாமையில் அவள் சுருண்டு போவாள். சந்ததியைப் பெற்றுத் தர இயலாத பட்ட மகிஷிகளின் ஆணைகள் அந்தப் பேதைப் பெண்ணைக் காட்டுக்கு அனுப்பவும் செய்தன. அந்த வாரிசு உண்மையில் மன்னருடையதாக இல்லாமல் மன்னர் குடும்பத் தொடர்புடையவருடைய சந்ததியாக இருந்தாலும்கூட, அவள் மன்னருக்குரிய அந்தப்புரத்தில் இருந்த குற்றத்துக்காக நாடு கடத்தப்படுவாள்.

தசரத மன்னர், நூற்றுக்கணக்கான அந்தப்புரப் பெண்களை ‘ஆண்டு’ வந்தார். அவர் இறந்தபோது, அத்தனை மனைவியரும் கதறித் துடித்தனர் என்ற செய்தி வருகிறது. ‘பட்ட மகிஷி’களான தேவியருக்கும் சந்ததி உருவாகவில்லை. எனினும் மன்னனின் ‘ஆண்மை’ குறித்த கரும்புள்ளி எந்த இடததிலும் வரவில்லை. மாறாக, ‘யாகம்’ என்ற சடங்கும், ‘யாக புருடன்’ வேள்வித் தீயில் தோன்றி, பாயசம் கொணர்ந்து தேவியர் பருகச் செய்தான் என்ற மாயப்புதிரும் புனையப் பெறுகிறது. மிதிலாபுரி மன்னருக்குப் பெண் சந்ததி இருந்தது. அந்த மன்னரின் அந்தப்புரக் கிளி ஒருத்தி கருவுற்றதும், அவள் சந்ததியைத் தந்துவிடக்கூடுமோ என்ற அச்சத்தில் மற்றவர்களால் கானகத்துக்கு அனுப்பப் பெறுகிறாள். அந்தத் தாயின் மகன் வழித் தோன்றலாக வந்த பெண் குழந்தையை அந்த அன்னையே, அரசன் ஏரோட்டும் பூமியில் பொதித்து வைத்தாள் என்று நான் கற்பனை செய்தேன். சத்திய வேள்வி இச்செய்திகளைக் கொண்ட நவீனம்.

அதே பூமகள், இராமசந்திரனின் கரம் பற்றிய நாயகியானபின், தொடரும் வரலாறே, இந்தப் புனைவு. இவள் இராம கதையின் நாயகியாகும் வகையில், இராமசந்திரனின் கல்யாண குணங்களை மிகச்சிறப்பாக ஒளிரச் செய்யும் வகையில், பொற்கூட்டுப் பின்புலமாக உருவாக்கப் பெற்றிருக்கிறாள். இந்தப் பின்புலம், கரும்புள்ளிகள் உள்ள வயிரத்தையும், தன்னுள் அப்புள்ளிகளை ஏற்று விழுங்கி, அந்த வயிர மணிக்கு மேலும் கண்பறிக்கும் வண்ண ஒளிக் கதிர்களைக் கூட்டும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த வகையில் இந்தக் காவியம், சீதையின் கதையாகவே விரிந்தாலும், இது இராமாயணம் என்றே சிறப்பிக்கப்படுகிறது.

‘குலம் கோத்திரம்’ அறியாத இந்தப் பெண்ணுக்கு, எந்த வகையில் உரிய மணவாளனைத் தேட முடியும் என்று சனகமன்னன் கவலைப்பட்டிருக்கிறான். வில் இங்கே ஒரு காரணமாக அமைகிறது. வில் உடைந்தது. நாயகன் கிடைத்தான். குலம் கோத்திரம் கேட்காமல், மன்னனின் வளர்ப்பு மகளை, பேரழகும் பொறுமையுமே வடிவாகத் திகழ்ந்த கன்னியைக் கைபிடித்தான். அவள் நாயகனுடன் செல்லும்போது, வழியனுப்பி வைக்கும் தந்தை, தான் கவலைப்பட்டதையும், அது ஆதவனைக் கண்ட பனியாகக் கரைந்து ஒர் ஒப்பற்ற அரசகுமாரனை மருகராகக் கிடைக்கப் பெற்றதையும் எடுத்துரைத்து, “மகளே, உன்னை ஒர் உயரிய நாயகருக்கு உரித்தாக்கி விட்டேன். இனி இந்த நாயகரே உனக்கு எல்லாமும் ‘அன்னை, தந்தை, குரு, தெய்வம்’ எல்லாமுமாக ஆகிறார். இவர் இருக்குமிடமே உனக்கு உரிய இடம்” என்று உரைத்து ஆசி வழங்குகிறார்.

பெற்றோர், பிறந்த இடத்து உறவுகள் எல்லாமே ஒரு பெண்ணுக்கு மேலே போர்த்துக் கொண்ட பாதுகாப்புகள் போன்றவை; ‘மணாளர் என்று ஒருவர் உறவான பின், அந்தப் பாசங்கள் கழற்றி விடப்பட வேண்டும்’ என்பதே இன்று வரையிலும் இந்தியப் பெண்ணின் ‘தருமமா’கப் பாலிக்கப்பட்டு வருகிறது. திருமணம்தான் அவள் வாழ்வை உறுதி செய்கிறது.

பூமகள் ஒரு நாயகரைச் சேர்ந்துவிட்டாள். நாயகன் மாதாபிதாவின் வாக்கிய பரிபாலனம் செய்ய, வனம் ஏகும்போது, இவள் தங்குவாளா? இவளுக்கு ஏது பிறந்த இடம்? ‘இராமன் இருக்குமிடமே அயோத்தி’ என்ற மரபு வழக்குக்கு ஆதாரமாக வனம் ஏகினாள்.

வனத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள், இவள் கற்புக்கு நெருப்புக் கண்டம் வைத்தது.

இராமன், அரக்க வேந்தனைக் கொன்று, இவளை மீட்க வந்தபோது என்ன சொன்னான்?

“அரக்கர் மாளிகையில் அறுசுவை உணவுண்டு உயிர் வாழ்ந்தாய். உடனே உயிர் துறந்தாயில்லை. கடல் கடந்து வந்து அரக்கரைக் கொன்றது, உன்னை மீட்டு அழைத்துச் செல்வதற்காக இல்லை. வீரனின் மீது விழுந்து விட்ட பழியைப் போக்கிக் கொள்வதற்காகவே இலங்கையை வென்றேன்!”

‘வீரம்’ என்பது பழி தீர்க்கும் வன்மத்தில் விளைவதா? யாருக்கு யார் மீது பழி?

இத்தகைய சொற்களால் அந்த அருந்தவக் கொழுந்தைச் சுட்டதுடன் அவன் நிற்கவில்லை.

அவளை எரிபுகச் செய்கிறான். இத்துடன் முடிந்ததா, பழியும் சந்தேகமும்?

ஊர் திரும்பி, முடிசூட்டிக் கொண்டபின், தன்னால் கருவுற்ற நாயகியின் மீது எங்கோ ஒலித்த தீச்சொல்லின் கருநிழல் விழுந்ததென்று... கானகத்துக்கு விரட்டினான். இது வெறும் நாடு கடத்தலா? எரிபுகுந்து புடம் போட்ட சொக்கத்தங்கமாக வெளியே வந்த நாயகியை கருவுற்ற செல்வியை, மீண்டும் உயிருடன் கொளுத்தும் துரோகச் செயல் அல்லவோ? இந்தச் செயலின் பின்னே கற்பிக்கப்படும் தொத்தல் நியாயத்தை யாரால் ஏற்க முடியும்?

இப்படி ஒரு நிகழ்வு, ஆதிகவியின் இதிகாசத்தில் இடம்பெற வேண்டுமா? ஆதிகவியின் நோக்கம் யாதாக இருக்க முடியும்?

தமிழ்க் காவியத்தைக் கம்பன் ஆதிகவியை ஒட்டியே புனைந்தாலும், மகுடாபிஷேகத்துடன் கதையை முடித்துக் கொண்டது அரிய சிறப்பாகும்.

இராமனுடைய அரசில் ஒர் ஆண் சலவைத் தொழிலாளியின் பேச்சுக்குக் கூட இத்துணை கனம் உண்டு; அந்தப் பளு நிறைசூலியை நிராதரவாக வனத்துக்கு அனுப்புமளவுக்கு நாயகனின் மனச்சான்றை அழித்துவிடும் வலிமை வாய்ந்தது என்பது விளக்கமாகிறது. இந்த நீதிதருமம், சாதாரணமான மக்கள் எவரும் புரிந்து கொள்ளக்கூடியதாக இல்லை.

வால்மீகி மகரிஷி இந்த மகா காவியத்தை இயற்றியதன் நோக்கம் யாதாக இருக்கும் என்பதைக்கூடத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. கிரௌஞ்ச பட்சிகளில் ஆணை வேடன் கொன்றான்; பெண் சோகம் தாங்காமல் கதறியது. இந்தச் சோகத்தைக் கண்டதும் மனம் தாளாமல் அவர் வேடனைச் சுடு சொற்கள் கொண்டு சபித்தார். அப்போது வெளி வந்த அந்த சுலோகமே இவருடைய கவித்துவத்திற்கான தோற்றுவாய் என்று சொல்லப்படுகிறது.

பெண் பட்சியின் துயரம் சீதையின் துயராக மாற்றப் படுகிறதா? ஆனால், அது இயல்பாக இல்லையே?

பெண் துயரப்படுவதற்கே பிறக்கிறாள். ஆனால் ஆண் மகிமைப்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்தை அல்லவோ இந்தக் காவியம் எதிரொலிக்கிறது? இன்னும் நுட்பமாக நோக்கினால், ஆண் நாயகன், ஒர் இலட்சிய மாதிரியாக உருவாக்கப்பட்டிருப்பதாகவும் புலப்படுகிறது. பாரதத்தில் வரும் கண்ணனைப் போல் இவன் மூன்றாம் வருணத்தவன் அல்ல; அதருமத்தை அதருமவழியைக் கையாண்டு வெல்லலாம் என்று துணிந்தவன்; பல பெண்டிருக்கு லோலனாகச் சித்தரிக்கப் பட்டவன் அவன்.

ஆனால் இந்த நாயகன் இலட்சிய புருடன் க்ஷத்திரிய வித்து: சக்கரவர்த்தித் திருமகன், ருஷி முனிவர்களின் கண்ணுக்குக் கண்ணாக ஒழுகுபவன். மேல் வருண வருக்கமே இவனுடைய சமுதாயம். அந்தணப் பிள்ளை பிழைக்க, அந்தணனல்லாத சம்பூகன் கொலை செய்யப் படுகிறான். அவன் முற்பிறவியில் பாவம் செய்துவிட்டு, பாவம் தீரத் தவம் செய்கிறான் என்று கொலைக்குக் காரணம் சொல்லப்படுகிறது. இந்தத் தரும நியாயங்கள் க்ஷத்திரிய குலத்தை மேன்மைப்படுத்தக்கூடியவை. உத்தர இராமாயணத்தில், சீதையை நாடு கடத்திய நிகழ்ச்சியைத் தொடர்ந்து, க்ஷத்திரிய மன்னரின் தர்ம நியாயங்கள் ஒவ்வொன்றாக விளக்கப்படுகின்றன. அசுவமேதம் ஏகாதிபத்திய நியாயத்தைத் தெளிவாக்குகிறது. அசுரன் என்ற காரணமே, ‘லவணாசுரன்’ போன்ற மன்னர்களின் பராக்கிரமம் வீழ்த்தப்படுவதற்குரிய நியாயமாகிறது.

மேலும் இத்தரும நியாயங்கள் வன்முறையாலேயே நிலை நாட்டப்படுகின்றன.

நிறை சூலியான மனைவியை, குரூரமாக வனத்துக்கு அனுப்பும் முறையிலேயே அது தெளிவாகிறது. இந்தச் செயல், அவதார புருடன் என்று கொண்டாடப்படுவதற்குரிய மன்னனுக் குரியதல்ல. இதற்கெல்லாம் ஒரே காரணம், சீதையின் குலம் கோத்திரம் தெரியாத பிறப்பே என்று கொள்ளலாம். வருண தர்மமும், ஆண் ஆதிக்கமும், பெண்ணை ஓர் அடிமை நிலையிலும் இழிந்து தருமம் என்ற விலங்கால் பிணித்து வைத்த நிலை துலங்குகிறது. வால்மீகி முனிவர், இராமரிடம் அவர் மைந்தர்களைக் காட்டி, “இராமா, இவர்கள் உன் மைந்தர்களே... சீதை அப்பழுக்கற்ற செல்வி. இவர்களை ஏற்றுக் கொள்” என்று ஒப்படைக்க முனைந்த போதும் இராமன் தயங்குகிறான்.

அந்த நிலையிலும் இராமன் சீதையிடம் சான்று கோருவது, க்ஷத்திரிய அரக்கத் தனத்தின் உச்சநிலையை விள்ளுகிறது.

“இன்னும் எவ்வாறு நான் சான்று காட்டுவேன்?” என்று சிதை முறையிடுகையில் பூமி பிளக்கிறது. உள்ளிருந்து ஒரு நேர்த்தியான ஆசனம் வந்து அவளை ஏந்திக் கொள்ள, பூமிக் கடியில் அவள் செல்கிறாள். பூமிப் பிளவு மூடிக் கொள்கிறது என்று நாடகப் பாணியில் சீதையின் முடிவு விவரிக்கப்படுகிறது.

பின்னர் இராமர் அந்த இரு மைந்தர்களையும் தயக்கமின்றி ஏற்றுக் கொண்டு நாடு திரும்புவதாக இராமாயண வரலாறு இயம்புகிறது.

அரக்கன் மாளிகையில் பத்து மாதங்கள் இருந்த காரணத்தால் அவள் மாசுபடிந்தவளானாள். எந்த அக்கினியாலும் அவள் மாசை அழிக்க முடியவில்லை. ஆனால் அவள் பெற்ற குழந்தைகள், ஆண்மக்கள் அரசுக்கு உரிய சந்ததியினராக ஏற்றுக் கொள்ளப்படுகின்றனர்.

பவபூதி - எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த வடமொழி நாடகாசிரியர். வால்மீகியின் முடிவை இவர் ஏற்றிருக்கவில்லை. ‘உத்தர ராம சரிதம்’ என்ற நாடகத்தின் வாயிலாக, அந்த முடிவை மாற்றியமைத்தது மட்டுமின்றி, தம்மை உறுத்தும் வேறு சில செய்திகளையும் வெளியிட்டிருக்கிறார். சம்பூகனைக் கொலை செய்யுமுன் இராமர், “வலதுகரமே, நீவேதியன் மகனை வாழ்விக்க, சூத்திர முனிவர் மீது உடைவாளை வீசுவாய்? நிறை சூலி சீதையை வனமனுப்பியவன் அங்கமல்லவா? உனக்குக் கருணை ஏது?” என்று நெஞ்சோடு கடிந்து கொண்டதாக எழுதியுள்ளார். அது மட்டுமன்று வால்மீகி ஆசிரமத்துச் சீடர்கள் நகைச்சுவை மேலிட ருஷி - தாடிகள் வரும்போது, பசுங்கன்றுகள் விழுங்கப்படுகின்றன என்று பேசிக் கொள்வதாகச் சித்திரிகிக்கிறார்.

அவருடைய நாடகத்தில் அந்தண முனி ஆதிக்கங்களுக்கு எதிரான குரல் இழையோடுகிறது.

இவருடைய நாடக முடிவில் சீதையைப் பூமி விழுங்க வில்லை. மன்னருடன் தாயும் மைந்தர்களும் சேர்ந்து விடுகின்றனர். சீதை உயிர்க்குலத்தை வாழ வைக்கும் செல்வி அஹிம்சை வடிவானவள். இராமன் வனமேகும்போது வில்லும் அம்பும் கொண்டு வருவது எதற்கு என்று வினவிய பெருமாட்டி எனது இந்தப் பார்வையே சீதையை ஒரு புதிய வடிவில் இசைக்கிறது. இவள் தன் மவுனத்தால் இராமனைத் தலைகுனியச் செய்கிறாள். அஹிம்சையின் ஆற்றல் சொல்லற்கரியதாகும். கடப்பாரைக்கு நெக்குவிடாத பாறையும் பசுமரத்து வேருக்குப் பிளவுபடும் அன்றோ? சீதையின் ஆற்றல் ஆரவாரமற்றது. அது ஆழத்தில் பாய்ந்து தீமையைச் சுட்டெரிக்கவல்லது என் சீதை இத்தகைய ஆற்றலை அகத்தே கொண்டு வனத்தையே அன்புமயமாக ஆளுகை செய்யும் தாய். அவள் பூமிக்குள் செல்லவில்லை. அவள் மைந்தர்களும் அரசன் பின் செல்லவில்லை.

இந்தப் புனைவு ஏற்கெனவே நிலை நிறுத்தப்பட்ட பிம்பங்களைத் தகர்க்கலாம். அப்படியானால் நான் என் நோக்கில் வெற்றி பெற்றதாகக் கருதுவேன்.

எப்போதும் போல் இந்த “வனதேவியின் மைந்தர்கள்” நூலையும், தாகம் பதிப்பகத்தார் வெளியிடுகிறார்கள். இடை விடாமல் எனது நூல்களை வெளியிட்டுவரும் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டு இந்தப் புதிய முயற்சியை வாசகர் முன் வைக்கிறேன்.


5-5-2001 வணக்கம்

ராஜம் கிருஷ்ணன்