வனதேவியின் மைந்தர்கள்/16

விக்கிமூலம் இலிருந்து

16

சங்கொலி தீர்க்கமாகக் கேட்கிறது. டமடமடம வென்று பறை கொட்டும் இணைந்து கேட்கிறது.

“என்ன சமாசாரம்? ஏதேனும் புலியைக் கொன்றார்களா? காட்டுப் பன்றி வீழ்ந்ததா? விருந்துக் கொட்டா? வெற்றி விழாவா? எதற்கு இப்படிக் கொட்டுகிறார்கள்?.”

பெரியன்னையில் முகத்தில் ஒருபுறம் மகிழ்ச்சியொலி: ஒருபுறம் வெறுப்பு நிழலாடுகிறது. காதுகளைப் பொத்திக் கொள்கிறாள்.

“இவர்கள் சந்தோசம் தலைகால் புரியவில்லை என்றால் பறை கொட்டித் தீர்த்து விடும்.”

அருகே ஆரவாரங்கள் வருகையில், கார்காலம் முடிந்தபின், பசுமையில் பூரித்துத் தாய்மைக் கோலம் காட்டும் இயற்கை யன்னையின் மாட்சி கோலோச்சும் சூழல் வரவேற்பளிக்கிறது.

“வாழ்க சத்திய முனிவர் வாழ்க! நந்தபிரும்மசாரி வாழ்க!” தலைமேல் வாழைக்குலைகள் தெரிகின்றன. கருப்பந்தடிகள்: கனிகள், தானிய கூடைகள்.

ஒ. நந்தசுவாமியின் ரீம். ரீம் சுருதி ஒலிக்கிறது. பூமகள் விரைந்து அவர்களை எதிர்கொள்ளச் செல்கிறாள்.

நந்தமுனி - உயர்ந்து உலர்ந்த மேனியுடன் . அருகே குட்டையாகக் கறுத்து குறுகிய சத்திய முனி... முடிமழித்த கோலம் இடையில் வெறும் கச்சை முடியில் நார்ப்பாகை சுற்றியிருக்கிறார்.

பூமகள் குடுவையில் நீர் கொணர்ந்து வந்து அவர்களுடைய பாதங்களைக் கழுவி, ஆசி பெறுகிறாள். அவர்கள் உள்ளே பெரிய கொட்டகைக்கு வருகிறார்கள். பெரியன்னையினால் எழுந்திருக்க முடியவில்லை. சத்தியமுனியும், நந்தமுனியும் அவள் பாதங்களில் பணிந்து வணங்குகின்றனர்.

“தாயே, நிலமாக இருக்கிறீர்களா?”

“இருக்கிறேன் சாமி, இது எனக்கு இன்னொரு பிறவி, மூன்றாவது பிறவி. இன்னும் எத்தனை பிறவிகள் சேர்ந்து இதே உடலில் வாழப் போகிறேனோ?”

“அன்னையே, ஒவ்வொரு பிறப்புக்கும். ஏதோ ஒரு காரணகாரியம் இருக்கிறது. வாழ்க்கையில் நேரும் துன்பங்கள், முட்டல்கள், முடிச்சுகள், எல்லாவற்றையும் கடந்து, பிறவியின் பயனை விளங்கிக் கொள்வதுதான் வாழ்க்கையே. முன்னறியாத இடத்தில் அடி வைக்கும்போது, புதுமையின் கிளர்ச்சி ஒரு புறம் துன்பமும் உண்டு; இன்பமும் உண்டு. துன்பங்களைத் தாங்கிக் கடக்கும் சக்தியும் எழுச்சியும் உள்ளத்தின் உள்ளே ஓர் இனிய அநுபவத்தைத் தரும் மேலெழுந்த வாரியான புலனின்பங்களில், சுயநலங்கள் பேராசைகள், அகங்காரங்கள் பிறக்கக்கூடும். அதுவே, அறியாமையாகிய திரையைப் போட்டு, உள்ளார்ந்த இன்பங்கள் எவை என்ற தெளிவில்லாமல் மறைத்துவிடும்...”

சத்தியர் சொல்லிக் கொண்டே போகிறார்.

“சாமி, இங்கே தத்துவங்களுக்கு இடமில்லை; பொழுதுமில்லை. இந்த மக்கள், உடல் வருந்த உழைத்தாலே உணவு கொள்ளலாம். அந்த நிலையில் ஆடியும் பாடியும் மகிழ்வதே இன்பம். இந்தப் பூச்சிக்காட்டு நச்சுக் கொட்டை மக்களை, இந்நாள் எப்படி நல்வழிக்குக் கொண்டுவந்து விட்டீர்கள்? சுவாமி, இவள். இவள், இந்தப் பிறந்த மண்ணுக்கே வந்து சேருவாள் என்று நான். எதிர்பார்த்தேனா?”

முதியவள் பூப்பிரிவது போன்று துயரத்தை வெளிப்படுத்தும்போது, பூமகள் வெலவெலத்துப் போகிறாள்.

சத்தியமுனி சற்றும் எதிர்பாரா வகையில் குனிந்து அவள் முதுகைத் தொட்டு,

“வருந்தாதீர் தாயே, எல்லாமே நன்மைக்குத்தான் நடக்கிறது. நீங்கள் பேறு பெற்றவர்கள். துன்பங்கள் மனங்களைப் புடம் போட்டுப் பரிசுத்தமாக்குகின்றன. அதன் முடிவில் எய்தும் மகிழ்ச்சியில் களங்கமில்லை. மனித தருமம் என்பது, எல்லா உயிர்களும் நம்மைப் போன்றவையே என்ற ஒருமைப்பாட்டில் தழைக்கக் கூடியது. மனித சமுதாயத்தைக் கூறுபோடும் எந்த தருமமும் எப்போதும் நிலைத்திருக்க முடியாது. மேலோட்டமாக எல்லாம் நன்மைபோல் தெரிந்தாலும் உள் மட்டத்தில் கொந்தளிப்பும் அமைதியின்மையும் இருந்து கொண்டே இருக்கும். இந்தக் கானக சமுதாயத்தில், எல்லா உயிர்களும் நம் போல் என்ற இசைவை, இணக்கத்தைத் தோற்றுவிப்பதில் நீங்கள் ஈடுபட்டிருக்கிறீர்கள்.”

அவர்களெல்லாரும் அமர, பாய்களை விரிக்கிறாள் லூயாவாலி ஆசிரமத்தைச் சேர்ந்த பிள்ளைகளும், பெண்களும் கொண்டு வந்த வரிசைகளை வைத்துவிட்டு, இரண்டு பிள்ளைகளையும் சூழ்ந்து கொள்கின்றனர்.

அப்போது, மாதுலனின் குழலோசை கேட்கிறது.

சம்பூகன் மூங்கில்களைத் தேர்ந்து, தீக்கங்கு கொண்டு சுட்டுத் துவாரங்களை உருவாக்குகிறான்.

ஒவ்வொன்றாக மாதுலன் ஊதிப் பார்க்கிறான்.

பூமகள் குழலூதும் இசைஞர்களைப் பார்த்திருக்கிறாள்; கேட்டிருக்கிறாள். ஆனால் அந்தக் குழலில் இசையை நாதமாக்க ஒரு கலைப் பொருளாக்கும் அரிய செய் நுட்பத்தை இப்போதுதான் பார்க்கிறாள். நூல் பிரிசலை முறுக்கேற்றுவது; அதை ஆடையாக நெய்யும் நேர்த்தி, இயற்கை இந்த உலகில் எத்தனை இன்பங்களை இசைத்திருக்கிறதென்று எண்ணியவாறு, அவள் நிற்கையில் சத்திய முனி கேட்கிறார்.

“இந்த அமுத இசையை இங்கே யார் இசைக்கிறார்கள்? நான் இந்தக் கானகம் விட்டுச் சென்று ஐந்து கோடைகளும் மாரிக்காலங்களும் கழிந்துவிட்டன. எனக்குத் தெரிந்து குரலெடுத்து நந்தன் பாடுவது அமுதகானமாக இருக்கும். சம்பூகன். சம்பூகனோ?”

“இப்போது ஊதுபவன் சம்பூகனில்லை சுவாமி. ஆனால் அவன்தான் இதை ஊதும் மாதுலனுக்குக் குழலை வாயில் வைத்து இசைக்கப் பயிற்றியவன்...”

நந்தபிரும் மசாரி இசை எங்கிருந்து வருகிறது என்று தேடுபவர்போல் பார்க்கிறார்.

“மாதுலன்... நெய்கியின் நான்காவது பிள்ளை. இதன் அப்பன் வேதவதியை வெள்ளத்தில் கடக்கும்போது, போய்விட்டான். முதல் மூன்று பெண்களில் ஒன்று மரித்துவிட்டது! இது, வனதேவியின் வரமாக வந்திருக்கிறது. யாரேனும் அந்நியர் வருகிறார் என்றால் வெட்கப்பட்டு மறைவான்... அடி, சோமா, வாருணி! அவன் இங்கேதான் இருப்பான், அழைத்து வாருங்கள்!” என்று பெரியன்னை விவரிக்கிறாள்.

“அற்புதம் பூச்சிக்காட்டில் உருக்கும் அமுத இசை பொழியும் சிறுவன்...” என்று அவர் வியந்து கொள்கிறார்.

பூமகளுக்கு வானிலே ஏதோ பறவைகள் பறப்பதுபோலும், வண்ண மலர்க் கலவைகள் வான்வெளியெங்கும் நிறைவது போலும், அமுதத்துளிகளை உடலின் ஒவ்வோர் அணுவும் நுகருவது போலும் தோன்றுகிறது. இந்தப் பண்... எப்படிப் பிறக்கிறது?... என்னென்னவோ கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால், சொற்கள் உருவாகவில்லை. இங்கே பெண் விருப்பப்படி மகவைப் பெற்றுக் கொள்கிறாளே! யாரும் யாரையும் ஆக்கரமிக்கும் இயல்பே இல்லை. மரங்கள் பருவத்தில் பொல்லென்று பூப்பதுபோல் அது இதழ் உதிர்த்துப் பிஞ்சுக்கு இடமளிப்பது போல் எல்லாவற்றையும் இயல்பாக எடுத்துக் கொள்கிறார்கள். போட்டியும் பொறாமையுமாக நஞ்சை வளர்த்துக் கொள்ளும் பெண்- ஆண் உறவுகள் இல்லை என்று காண்கிறாள். ‘நச்சுக் கொட்டை'கள் இருந்தன. அதை அவர்கள் தங்கள் சமுதாயத்தை அடிமையாக்காமல் காத்துக்கொள்ளவே பயன்படுத்தினார்கள். சத்தியமுனியின் வெளிச்சத்தில், அந்த அச்சமும் கரைந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். மாதுலனை வாருணி அழைத்து வருகிறாள். அவள் அவன் தமக்கை சிறுவனை அழைத்து முனிவர் அருகில் இருத்திக் கொள்கிறார். பிறகு அவன் கைக் குழலை வாங்கித் தம் இதழ்களில் வைத்து ஊதி ஒலி எழுப்புகிறார். நாதஒலி, ஓம் என்ற ஓசை போல் சுருள் அவிழ மெல்ல ஒலிக்கிறது! அப்போது, வனதேவியின் இரு பிள்ளைகளும் ஓடி வந்து முனிவரிடம், எனக்கு, எனக்கு என்று அந்தக் குழலைக் கேட்கிறார்கள்.

மாதுலனின் கச்சையில் இன்னமும் இரண்டு குழல்கள் இருக்கின்றன. முனிவர் அவர்கள் இருவரையும் தம் இரு மருங்கிலும் அமர்த்திக் கொண்டு குழல்களைக் கொடுக்கிறார்.

அவர்கள் இதழ்களில் வைத்து ஊதத் தெரியாமல் உண்ணும் பண்டம் போல் ரசிக்கிறார்கள்.

எல்லோருக்கும் சிரிப்பு வருகிறது.

சத்தியமுனிவர் அதை வாங்கி ஊதிக் காட்டுகிறார்.

உடனே பிடித்துக் கொண்டு இருவரும் வினோதமான ஓசைகளை எழுப்பி முயற்சி செய்கிறார்கள்.

பூமகள் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறாள்.

“சுவாமி! இந்தப் பிள்ளைகளைத் தாங்கள் ஏற்று, பூமியின் மைந்தர்கள் ஆக்க வேண்டும். வில்-அம்பு என்ற உயிர்வதைக் கருவிகளை இவர்கள் ஏந்துவதைவிட, இவ்வாறு இசைபாடும் பாணராக சுதந்தர மனிதர்களாக உலவ வேண்டும். அன்றாட நியமங்களில் ஆதிக்கங்களும், கொலைச் செயலும் தலைதுாக்கும் சூழல் இவர்களுக்கு அந்நியமாகவே இருக்கட்டும்... இங்கே, பச்சை மரங்களை யாரும் வெட்டுவதில்லை. வனவிலங்குகள் கூட இங்கே சத்திய நெறிக்கு உட்பட்டு இயங்குகின்றன. இப் பிள்ளைகளின் இயல்புக் குணங்கள். தலைநீட்டாத வகையில், இவர்களைத் தாங்களே ஏற்க வேண்டும். தளிர்களைக் கசக்குவதும், சிற்றுயிர்களைத் துன்புறுத்துவதும், ஈனக்குரலில் மகிழ்ச்சி கொள்வதும் என்னை மிகவும் சஞ்சலப்படச் செய்கின்றன. இவர்களுக்கு அறிவுக் கண்ணோடு, மனிதக் கண்களையும் திறந்துவிட வேண்டும் சுவாமி! நந்தமுனியும் பெரியன்னையும், குலம் கோத்திரம் அறியாத என்னை, அரச மாளிகைக்கு வந்து பேணினார்கள். அந்த நியமங்களுக்குள் நான் தொலைந்து விடாமல் மீட்டார்கள். இன்றும் இந்தக் கானகமே என் தாயகம்; இவர்களே என் மக்கள் உறவினர், எல்லாம், எல்லாம். எனவே என் பிள்ளைகளையும் இப்படியே தாங்கள் காத்தருள வேண்டும்!”

என்று உணர்ச்சிவசப்பட்டு அவர் பாதங்களில் பணிகிறாள்.

அவர் அவளை மெல்ல எழுப்புகிறார்.

“மகளே, கவலைப்படாதே. நந்தன் உன்னை இங்கே கொண்டு வந்து சேர்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன். இங்கே அக்கரைக்கும் இக்கரைக்கும் முன்பு பகைமை இருந்தது. ஆனால் இவர்கள் சுயச்சார்பு பெற்றுவிட்டார்கள். தங்கள் தேவைகளைத் தாங்களே நிறைவேற்றிக் கொண்டு கலந்து வாழவும் தெரிந்து கொண்டுவிட்டார்கள். மிதுனபுரிச் சாலியர், வேதபுரிச் சாலிய வணிகர், எல்லோரும் இங்கு வருகிறார்கள். இவர்களும், வனதேவியைப் பாலித்து அவள் கொடைகளை ஏற்று முரண்பாடில்லாமல் வாழ்கிறார்கள். பிறரை வருத்தாமல் இருப்பதுதான் இங்கு முதல் பாடமாக இருந்து வருகிறது. மகளே, நீ தைரியமாக இங்கு இருக்கலாம்...”

பிள்ளைகளைத் தழுவி உச்சிமோந்து, அவர்களிடம் ஆளுக்கொரு வாழைக்கனியைச் சீப்பிலிருந்து பிய்த்துக் கொடுக்கிறார்.

அப்போது, எங்கோ மந்தையில் ஏதோ ஒரு தாய்ப் பசு “அம்மா..” என்று துன்பக் குரல் கொடுக்கும் ஒலி செவிகளில் விழுகின்றது.

பூமகள் வில்லிலிருந்து விடுபடும் அம்பு போல் முற்றம் கடந்து, புதர்களுக்குள் புகுந்து குரல் வந்த திசை நோக்கி ஓடுகிறாள்.

புற்றரையில் ஐந்தாறு பசுக்கள் மலங்க மலங்க நிற்கின்றன. குரல் கொடுக்கும் பசுவின் கண்களில் ஈரம் தெரிகிறது.

ஆங்காங்கு மேயும் கன்றுகள், காளைகள் அஞ்சினாற்போல் மருண்டு வருகின்றன. அப்போதுதான் அவள் பார்க்கிறாள். கன்றொன்றைக் கவர்ந்து, ஒருவன் செல்வதும், சம்பூகன் துரத்திக் கொண்டு ஒடுவதும் தெரிகிறது.

“ஓ, இப்போதுதானே முனிவர், பகையும் வன்முறையும் இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார்?”

அப்போது, சம்பூகன், கன்றைத் திரும்பத் தூக்கிக் கொண்டு திரும்புகிறான்.

அவன் எய்த அம்பு கன்றின் மேல் தைத்து இரத்தம் பெருகுகிறது.

“சம்பூகா? யார் செய்த வேலை இது?”

“ஒன்றுமில்லை தாயே! எதிர்க்கரையில் யாரோ பெரியவர்கள் வந்திருக்கிறார்கள். சீடப்பையன் ஒருவன் இங்கு வந்து, விருந்துக்கு இதைக் கவர்ந்து செல்லத் துணிந்து அம்பெய் திருக்கிறான். அதே சாக்காகத் துக்கிச் சொன்றான். நான் நல்ல நேரமாகப் பார்த்தேன். அதே அம்பைப் பிடுங்கி எறிந்துவிட்டு, மீட்டு வருகிறேன்.”

அதன் தாயிடம் விட்டுவிட்டு அது காயத்தை நக்குவதைப் பார்க்காமல், ஓடுகிறான். மூலிகைகள் எவற்றையோ தேடிக் கசக்கி வந்து அப்புகிறான்.

சற்றைக்கெல்லாம் கன்று தாயின் மடியை முட்டிப் பால் குடிக்கிறது. பூமகளுக்கு உடலே துடிக்கிறது.

அவள் இருந்திருக்கும் இத்தனை நாட்களில் இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்ததில்லை. இப்போது சத்தியமுனிவர் வந்து அடி வைத்ததும் இது நிகழ வேண்டுமா?

பசுவும் கன்றும் முற்றத்தில் வந்து நிற்கின்றன.

சம்பூகன் முனிவரைப் பணிந்து வணங்குகிறான்.

“மகனே, மறுபடியும் தொந்தரவா?...”

“இல்லை சுவாமி. தாய்ப்பசு குரல் கொடுத்ததும் நான் பார்த்துவிட்டேன். காயத்துக்கு மருந்து போட்டேன்...”

“அது சரி, வேம்பு வனஊரணிக் கரைக்குப் போயிருக்கிறாயா?”

“இல்லை சுவாமி!”

“அது குன்றின் மேலிருக்கிறது. அங்கு அபூர்வ மூலிகைகள் உண்டு. நச்சரவங்களும் மிகுதி. அங்கு நாம் சென்று சில மூலிகைகள் கொண்டு வருவோம். மாதுலனின் பார்வை வருமா என்று பார்ப்போம்.”

நந்தசுவாமி ஒற்றை நரம்பு யாழை மீட்டுகிறார்.

பாட்டுப் பிறக்கிறது.


          “வானரங்கின் திரைவில குதாம்!
          வானும் மண்ணும் துயில் நீங்குதாம்
          வனதேவி கண் விழிக்கிறாள்...
          வானும் மண்ணும் கண்விழிக்குதாம்.
          வனதேவி அசைந்து மகிழ்கிறாள்
          வானும் மண்ணும் இசைந்தியங்குதாம்
          வனதேவி சாரல்பொழிகிறாள்...
          வானும் மண்ணும் புதுமை பொலியுதாம்.
          வனதேவி சுருதி கூட்டுறாள்...
          வானும் மண்ணும் குழலிசைக்குதாம்...



          வனதேவி யாழிசைக்கிறாள்.
          வானும் மண்ணும் எழில்துலங்குதாம்.”

நந்தமுனி கையில் ஒற்றைநாண் யாழுடன் எழுந்தாடுகிறார். பிள்ளைகள் கைகொட்டி ஆடிப்பர்டுகின்றனர்.


          ‘வனதேவி எங்கள் வனதேவி.
          அவள் சுவாசம் - எங்கள் பசுமை
          அவள் மகிமை - எங்கள் மகிமை.
          ஓம் ஓம் ஒமென்று புகழ்ந்தாடுவோம்.
          ஆம் ஆம் ஆமென்று குதித்தாடுவோம்.
          துன்பமில்லை - துயரமில்லை.
          அன்பு செய்வோம் - இன்பமுண்டு.
          வனதேவி - எங்கள் வனதேவி.”

கன்றும் பசுவும் முற்றத்தில் அமைதியாக இக்காட்சியைக் காண்கின்றன. பூமகள் துயரங்கள் விலகிவிட்டதாக மகிழ்ச்சி கொள்கிறாள். பிள்ளைகள், கூடியிருந்த பெண்கள், எல்லோரும் உணவுண்டு, இளைப்பாறும் நேரம் அது.

புதர்களுக்குப்பின் சலசலப்பு. யார் யாரோ பேசுங்குரல்கள் செவியில் விழுகின்றன.

லூ வாய் மூடாமல் கண் மூடி உறங்குபவள், திடுக்கென்று எழுந்திருக்கிறாள். வாருணி எழுந்து ஒடுகிறாள்.

‘சாமி, யார் யாரோ வராங்க! யாரோ அந்தப் பக்கமிருந்து வாராங்க!”

யாரு?

சம்பூகன் முற்றம் தாண்டிச் செல்கிறான். பட்டுத்திரித்துக் கொண்டிருக்கும் நந்தசுவாமியும், பட்டிலவமரத்தடியில் பஞ்சு திரிக்கும் சத்தியமுனியும் என்ன கலவரமென்றறிய விரைந்து முற்றத்துக்கு வருகிறார்கள். பூமகள் உணவுண்ட இடத்தைச் சுத்தம் செய்ய முனைந்திருக்கிறாள். “என்ன? வேதபுரிச் சாலியரா?...”

இல்லை. வந்தவர்கள் முப்புரிநூல் விளங்கும் அந்தணப் பிள்ளைகள். ஒரு சிறுவனைத் துக்கி வந்திருக்கிறார்கள். அவன் விலாவில் அம்பு பாய்ந்து இருக்கிறது.

பூமிஜா திடுக்கிடுகிறாள்.

“யார். யார் செய்தது?”

“இந்த குலம் கெட்ட பயல் இப்படி பிரும்மஹத்தி செய்திருக்கிறான்...” சம்பூகன் அருகில் சென்று அந்த அம்பை எடுக்கிறான். காயம் பெரிது இல்லை. அது பேருக்குத் தொத்தி, சிறிது காயம் விளைவித்துக் குருதிச் சிவப்பு தெரிகிறது.

“இதோ, இவன், இந்தச் சண்டாளன் செய்தான்!” என்று ஆங்காரத்துடன் கத்துகிறான் பெரியவனாகத் தோற்றும் அந்தணன். பூமிஜா குலை நடுங்க, செவிகளைப் பொத்திக் கொள்கிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=வனதேவியின்_மைந்தர்கள்/16&oldid=1304431" இலிருந்து மீள்விக்கப்பட்டது