வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்/இராமனும் இராவணனும்

விக்கிமூலம் இலிருந்து





9. இராமனும் இராவணனும்



மிழ்நாட்டில் வழங்கும் வடநாட்டுப் பெருங்கதைகள் இரண்டு: ஒன்று இராமாயணம்; மற்றொன்று பாரதம். இரண்டுமே ஆரியர்கள் சிந்துசமவெளிக்கு வந்த பிறகு நடந்த கதைகள்—அல்லது–எழுதி வைத்த கதைகள் என்பர் ஆராய்ச்சியாளர். அவற்றை வடமொழியிலும் தமிழிலும் நல்ல காவியமாகவும் இலக்கியமாகவும் சிறந்த புலவர்கள் எழுதி வைத்துச் சென்றார்கள். தமிழில் கம்பர் தம் முழு ஆற்றலையும் பயன்படுத்தி இராமாயணம் என்னும் சிறந்த காப்பியத்தை எழுதியிராவிட்டால், நாட்டில் இத்துணை நாள் அந்த இலக்கியமும் அதில் வழங்கும் வரலாறும் உலவமாட்டா என்பது உண்மை. அதுபோன்றே வடமொழியில் வான்மீகியாரது வாக்கே அவ்வரலாற்றை வாழ வைக்கின்றது. பாரதமும் வடமொழியில் வியாசராலும் தமிழில் வில்லிபுத்துரராலும் வாழ்ந்துவருகின்றது. இரு பெரு வரலாற்றுக் காலத்தையும் பற்றி ஆராய்ச்சியாளர் பல்வேறு கருத்துக்களைக் கொண்டுள்ளனர்.

ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்த காலம் இன்றைக்கு 3,500 ஆண்டுகளுக்கு உட்பட்ட காலமாகும். இந்த இரு கதைகளும் அக்காலத்துக்குப் பின் எழுதப்பட்டனவேயாகும். இரண்டில் எது முந்தியது என்பது இன்னும் முடிவு செய்யப் பெறவில்லை. சிலர் இராமாயண காலம் முந்தியது என்பர்; சிலர் பாரத காலத்தை முன்னுக்குக் கொண்டு செல்வர். திரு பானர்ஜி அவர்கள் மகாபாரதமே காலத்தில் முந்தியது எனவும், இராமாயணம் மிக மிகப் பிந்தியதெனவும் காட்டுவர்[1]. இவரைப் போன்றே வேறு ஆசிரியர் சிலரும் குறித்துள்ளனர்[2]. எனினும், சிலர் இராமாயணமே காலத்தால் முந்தியதெனக் காட்டுகின்றனர். பின்னதினும் முன்னதே வலியுடைத்தென்பது பலருடைய வாதமாகும். பரதனுடைய வமிசத்தவரே பாரதர் என்பதும், அப் பரதன் வழியே இந்தியா பாரத நாடு என வழங்கப்பட்டதென்பதும் எனவே அப் பரதனுடைய பரம்பரையை விளக்கிக்காட்டும் பாரதமே முற்பட்டதென்பதும் பலர் காட்டும் ஏற்புடைக் காரணங்களாகும், வேதத்திலும் இராமாயணத்தைக் காட்டிலும் பாரதமே முன்னால் குறிக்கப்பெற்றுள்ளது[3] . மற்றும், இராமாயணம் எழுதிய வான்மீகியாரது காலம் விண்டர் நிட்ஸ் என்பவரால் கி. மு மூன்றாம் நூற்றாண்டெனத் தீர்மானிக்கப்படுகிறது[4]. ஆனால், பாரதத்தின் காலமோ, கி. மு. பதினான்காம் நூற்றாண்டாக இருக்க வேண்டுமென்று இராய் செளதிரி அவர்கள் பல ஆதாரங்களைக் கொண்டு ஆராய்ந்து, அறுதியிடுகின்றார்[5].” வின்சென்ட் ஸ்மித்து அவர்கள் இரண்டும் ஏறக்குறைய ஒரே காலத்தனவாகத்தான் இருக்க வேண்டுமென்றும், பாரதத்தின் பெரும்பகுதி கி. பி. 200லே தான் எழுதப் பெற்றிருக்க வேண்டுமென்றும், இராமாயணத்திலும் சில பகுதி வான்மீகியால் எழுதப்படவில்லை என்றும் காட்டி யுள்ளார்.[6] இவை பற்றிய ஆராய்ச்சிகளெல்லாம் நமக்குத் தேவை இல்லை. என்றாலும், வரலாற்று ஆசிரியர் பலர் காட்டியுள்ளபடி தமிழ் நாடு இலக்கிய வளம் சிறந்து விளங்கிய கடைச்சங்க காலத்தை ஒட்டியும் அதற்கு முன்னும் வடக்கும் தெற்கும் எவ்வகையில் இணைந்திருந்தன என்பதைக் காட்ட இவை ஒரளவு துணை செய்கின்றன என்னலாம்.

தமிழ் இலக்கியங்களில் இராமாயணம் பாரதம் என்னும் இரண்டுமே வழக்கத்தில் உள்ளதைக் காண்கிறோம். கடைச் சங்ககாலத்தில் அக் கதைகளை யாரும் தமிழில் மொழி பெயர்க்கவில்லை என்றாலும், அவற்றின் குறிப்புக்கள் சங்க இலக்கியத்தில் இடம்பெறுவதைக் காணலாம்.

'வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த
பல்வீழ் ஆலம் போல
ஒலிஅவிந் தன்றுஇவ் அழுங்கல் ஊரே.’

                               (அகம். 70 : 15.17)

என்று இராமன் கடற்கரையில் மந்திராலோசனை செய்யும் காலத்தில் அவன் பறவைகள் ஒலியை அடங்கினதைக் காட்டுகின்றது அகநானூறு.

'கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வெளவிய ஞான்றை
நிலம்சேர் மதர்அணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிங் தாஅங்கு’

                                     (புறம். 378 : 18-21)

எனச் சீதையின் அணிகளைக் கிட்கிந்தையில் குரங்குகள் கண்ட சிறப்பினையும் இராவணன் சீதையைக் கவர்ந்து சென்றதையும் புறநானூறு குறிக்கின்றது.

'இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன்
உமைஅமர்ந்து உயர்மலை இருந்தன னாக
ஐயிரு தலையின் அரக்கர் கோமான
தொடிப்பொலி தடக்கையின் கீழ்புகுத்து அம்மலை
எடுக்கல் செல்லாது உழப்பவன் போல, என்று

                                 (கலி. 38 : 1-5)

கலித்தொகை இராவணன் கயிலையை எடுக்க நினைத்த திறனை விளக்கிக் காட்டுகின்றது. இவ்வாறே பல பாரதக் கதைகளும் சங்க இலக்கியத்தில் காட்டப்பெறுகின்றன. பாரதப் போரில் சோறிட்டுப் புகழ் பெற்ற சேரமன்னனைப் பற்றி இந்நூலின் மற்றொரு கட்டுரை நன்கு விளக்கிக் காட்டுகின்றது இன்னும் அரக்கு இல்லில் தீ வைத்ததையும் (கலி. 25 : 1-4), கன்னன் சூரியன் மகன் என்பதையும் (கலி. 108 : 13), திரெளபதியின் கூந்தலைத் துச்சாதனன் பிடித்து இழுத்ததையும் (கலி. 101 : 13), வீமன் அரக்கு மாளிகையிலிருந்து ஐவரைக் காத்ததையும் (கலி. 25 : 7-8). வீமன் துரியோதனன் தொடையை முறித்து உயிர் குடித்ததை யும் (கலி. 52 : 2, 3) கலித்தொகை வாயிலாகக் காணலாம். இவை பற்றிய ஆராய்ச்சிகளெல்லாம் ஈண்டு நமக்குத் தேவை இல்லை. இவையெல்லாம் கடைச்சங்ககாலத்திலேயே வட நாட்டு இரு பெருங்கதைகளும் தமிழ்நாட்டு மக்களுக்கு அறிமுகமாய் இருந்தன என்பதைக் காட்டுகின்றன.

இனி இராமாயணத்தில் வரும் இராமனையும் இராவணனையும் எண்ணிப் பார்த்தலே, இங்கு நான் செய்ய விழையும் பணி. இராமன் வடக்கிலிருந்து தெற்கே வந்தவன். இராவணன் தெற்கே ஒரு தீவில் ஆண்டவன். தெற்கே வந்த இராமனுடைய மனைவியை இராவணன் தூக்கிக்கொண்டு செல்ல, அதனால் போர் மூள, இராவணன் சுற்றத்தோடு கொல்லப்பட, இராமன் தன் மனைவியை மீட்டுச் சென்றான். இதுதான் இராமயணக் கதையின் அடிப்படை. சாதாரணமாக யாரும் வடக்குத் தெற்கு என்றதும் ஆரியர் திராவிடர் என்றே எண்ணிவிடுகின்றனர்; இராமனை ஆரியன் என்றும் இராவணனைத் திராவிடன் என்றும் கூறிவிடுகின்றனர்; அதனால், வரலாற்றுக் காலத்துக்கு முன் நாடறியாத ஆரிய திராவிடப் போராட்டம் இருந்ததாக எண்ணி மாறுபடுகின்றனர். அதனால் பல சொற்போர்களும், கொள்கை மாறாட்டங்களும் நிகழ்கின்றன. சாதாரண மக்கள் மட்டுமின்றித் தெளிந்த வரலாற்று ஆசிரியர் சிலரும் இந்த வழியில் தவறிவிடுகின்றனர். வரலாற்றுக்கு முற்பட்ட இந்தியாவைக் காட்ட வந்த பானர்ஜி அவர்கள், இராமனுடைய மனைவியை ஒரு திராவிட மன்னன் கொண்டு சென்றான் எனவே குறிக்கின்றார்[7]. மேலைநாட்டு ஆராய்ச்சியாளர் சிலர் இராமாயணம் வடநாட்டிலிருந்து தென்னாட்டுக்குக் குடியேறிய ஆரியர் வரலாற்றை விளக்கும் கற்பனைக் காவியம் போன்றது எனக் கூறுகின்றனர்[8]. இவ் வரலாற்று ஆசிரியர்களும் இவ்வாறு வழங்குவதற்குக் காரணம் வடக்குத் தெற்கு என்னும் திசை மாறாட்டமேயன்றி வேறு அன்று.

ஏழாம் நூற்றாண்டில் சமயத்தைப் பரப்பிய ஞானசம்பந்தர் தம்மை வேதம் காக்கத் தோன்றியவராகவே பாடுகிறார். அவருடைய பல பாடல்களில் வேதம் பற்றியும், வேள்வி பற்றியும், அவற்றைப் பழிப்பார் கொடுமைகளைப் பற்றியும் கூறப்பட்டுள்ளன, அவர் வாய் மொழிப்படி அவரை ஆரிய மரபினர் எனக் கொள்ளவேண்டியுள்ளது. அவர் தம்மைத் தமிழ் விரகன், தமிழ் ஞானசம்பந்தன் என்றெல்லாம் போற்றிக்கொண்டாலும், அவர் வேதத்தைக் காப்பதை விரதமாகக் கொண்டவர் என்பதை அவர் பாடல்கள் நன்கு விளக்கிக் காட்டுகின்றன. என்றாலும், அவரை உலகுக்கு அறிமுகப்படுத்த விரும்பிய சங்கராசாரியார் அவர்கள், அவரைத் ‘திராவிடச் சிசு’ என்று வழங்குவதைக் காண்கிறோம். இவ்வாறு வடக்கு என்றதும் ஆரியர் என்ற எண்ணமும் தெற்கு என்றதும் திராவிடர் என்ற எண்ணமும் உண்டாகிவிடுகின்றன. இன்றும் நாட்டில் இந்தப் போராட்டம் நின்றபாடில்லை, ஸ்மித்து கூறுவது போன்று, ஓரளவு ஆரியர் தம் போராட்டத்தில் திராவிடரை வென்றுவிட்டதாகக் காணப்படினும், இன்னும் அவர்தம் போராட்டம் நீங்கவில்லை என்பதை நாட்டு நிகழ்ச்சிகள் நன்கு காட்டுகின்றன[9]. எனவே, இவற்றை எண்ணி, இராமனையும் இராவணனையும்கூட ஆரியனாகவும் திராவிடனாகவும் காண்கின்றனர். இந்த அடிப்படையிலே நாட்டில் பல போராட்டங்களும் கட்சி வேற்றுமைகளும் வளர்கின்றன. ஆயினும், உண்மையில் ஆராய்ந்து பார்ப்பின், இந்த வேறுபாட்டுக் கொள்கைக்குச் சிறிதும் இடம் இல்லை என்பது நன்கு விளங்கும்.

தமிழ் அறிஞர் ஒருவர் இராவணனை ஆரியரின் வேறு பட்டவன் என்றே எழுதியுள்ளார்[10]. இராவணனைப் பெருவீரன் என்பதற்கு யாரும் பின்வாங்கமாட்டார்கள். என்றாலும், அவனுடைய மரபு பற்றி ஆராயும்போதுதான் வேறுபட்ட கருத்து உண்டாகின்றது. இராமாயணத்தில் குரங்குகளாகவும், அரக்கர்களாகவும் காட்டப்பட்டவர்கள் தமிழர்களே என்றும், எனவே அது திராவிடரைப் பழித்துரைக்கும் ஒரு நூலென்றும், அதை ஒதுக்க நினைப்பவர் சிலர். எனினும், காய்தல் உவத்தல் இன்றி இராமாயணத்தை ஆராய்ந்து நோக்கின், அதில் திராவிடர்கள்—சிறப்பாகத் தமிழர்களும் தமிழ்நாடும்.நன்கு போற்றப் படுகிறார்கள். கம்ப ராமாயணத்தில் சீதையைத் தேடவானரரை ஏவும் சுக்கிரீவன், அனுமன் முதலானோர்க்குத் தமிழ்நாட்டைப் பற்றி விளக்கும் பாடல்கள்[11] சிறந்தனவாகவே அமைகின்றன. வான்மீகியாரும் அப்படியே தமிழ் நாட்டைப் பாராட்டியுள்ளார் என வடநூல் அறிந்தவர் கூறியுள்ளனர். எனவே, இராமாயணத்தில் தமிழ்நாடும் அதைச் சுற்றியுள்ள திராவிட நாட்டுப் பிற பகுதிகளும் இழிவு படுத்தப்பெறவில்லை அந்தக் கதை வடக்கே ஆரிய பூமியில் பிறந்த இராமனுக்கும் எங்கோ தெற்கே ஒரு தீவில் வாழ்ந்த அசுரனாகிய ஆரிய இராவணனுக்கும் நடந்த ஒரு பெரும் போராகும். அந்த இராவணன் அறிவாலும் ஆற்றலாலும் பிறவற்றாலும் உயர்ந்தவன் என்பதைக் கம்பரும் வான்மீகியாரும் விளக்குவதாலேயே அறியலாம். எனினும், அவர்கள் அவனைத் திராவிடன் என்று எங்கும் குறிக்கவில்லை; அதற்கு மாறாக, அவனை ஆரியன் என்றே திட்ட வட்டமாகக் குறிக்கின்றார்கள்.

திரு. பூரணலிங்கம் பிள்ளை அவர்கள் தம் நூலில் இராவணன் பேராண்மை உடையவன் என்பதைக் குறிக்கின்றார். அவரும் அவனைத் திராவிடன் எனக் குறிக்கவில்லை. எனினும், சிலர் நாம் மேலே கண்டபடி, இராவணன் தெற்கில் இருந்தமையின் திராவிடன் எனக் கொள்ளுகின்றனர். தெற்கே இருப்பதால் அனைவரும் திராவிடராக மாட்டார். அதே போன்று வடக்கே இருப்பதால் அனைவரும் ஆரியராக மாட்டார். எனினும், இந்தக் கொள்கை எப்படியோ நாட்டில் நிலைத்துவிட்டது. ஆராய்ந்து பார்ப்பின், இராம இராவணர் போராட்டம் இரு வேறு வகைப்பட்ட ஆரிய மரபினருக்கு இடையில் நடைபெற்ற ஒரு போரே என்பது நன்கு விளங்கும்.

தவறு இழைப்பவர், தோல்வியுற்று இறப்பவர் அனைவரும் தம் இனத்தவர் என்ற தாழ்வு மனப்பான்மை தமிழர் சிலரிடம் உள்ளமையே இந்த எண்ணத்துக்குக் காரணமாகின்றது. தோற்றவர் அனைவரும் தமிழர் என முடிவு செய்கின்றனர்; இரணியன், சூரபதுமன், இராவணன் அனைவரும் தமிழரே என்கின்றனர். எனினும், நன்கு ஆராய்ந்து பார்த்தால் அனைவரும் ஆரிய மரபினரே என்பது தெளிவாக விளங்கும். தோல்வி மனப்பான்மையை விட்டுத் தமிழர் எண்ணுவாராயின், இதை ஏற்பர்.

இந்தப் புராண இதிகாசங்களெல்லாம் ஆரியர் வட விந்தியாவுக்கு வந்த பின்னர் உண்டான நூல்களேயாகும். அவர்கள் தங்கள் கருத்துக்களைப் பரப்பவும், தங்கள் ஆதிக்கம் விரிந்துள்ளதைக் காட்டவுமே இராமாயணம் போன்ற கதைகளை எழுதினார்கள் என்பர் வரலாற்று ஆசிரியர். எனவே, இவை நடைபெற்றவை என்றே கொள்ளத் தேவை இல்லை. அன்றி, அவ்வாறு நடை பெற்றவை எனக் கொண்டாலும், அவர்களுக்குள் நடைபெற்ற ஒரு போராட்டமே அன்றி, திராவிடருக்கும் இக்கதைக்கும் தொடர்பே இல்லை. ஆயினும், இராவணன் தெற்கே உள்ள ஒரு தீவில் வாழ்ந்தவனாகக் காட்டப் பெறுகின்றமையின், அங்கே எப்படி ஆரியர் வந்திருக்கக் கூடும் என்ற ஐயம் எழுவது இயல்பு. இதை வெறுங்கற்பனைக் காவியம் எனக் கொள்ளின், தங்கட்கு மாறுபட்டவராகிய திராவிடர் வாழ்கின்ற தெற்கை எல்லையாக்கி ஆரியர் கதை எழுதினர் எனத் தள்ளிவிடலாம். அன்றி, உண்மையாகவே நடந்ததாகக் கொண்டாலும், அந்த இராவணன் ஆண்டதும்இன்றும் வீடணன் மாளாது அரசியற்றுவதுமாகிய தீவு திட்டமாக இந்த இலங்கை அன்று என்பதை அறுதியிட்டுக் கூறமுடியும். சிவதருமோத்திாம் என்னும் நூல் பொதிய மலைக்குத் தென்பால் மகேந்திரமலை இருந்ததெனவும், அதன் அடிவாரத்தில் பொன் மயமான இலங்கை இருந்ததெனவும் குறிக்கிறது.


'துங்கமலி பொதித்தென்பால் தொடர்ந்தஅடி வாரத்தில்
அங்கனக இலங்கையுமேழ் வரைச்சாரல் அடித்தேசம்'

என்பன அவ்வடிகள். இதன் உரையாசிரியர், மகேந்திர மலையின் அடிவாரத்திலுள்ள கனக மயமான இலங்கையின் பகுதி கடலுள் மறைந்ததென்று கூறப்பட்டுள்ளது' எனக்காட்டுகின்றார். இராமாயண காலத்திலோ, மகேந்திரத்திற்கும் இலங்கைக்கும் நடுவில் கடல் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. (கிட்கிந்தா காண்டம்). இன்றும் பொதிய மலைக்குத் தெற்கே அத்தகைய மலை ஒன்றும் இல்லை என்பதை நாம் அறிவோம். எனவே, அது கடலூழிகளுள் மறைந்திருக்க வேண்டும். இலங்கையும் அவ்வாறே அழிவு பெற்றிருக்க வேண்டும். இராவணன் வாழ்ந்த இலங்கைக்கும் இன்றைய இலங்கைக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. வான் வழிப் பறக்கும் ஆற்றலும் மாயச் செயல் வல்ல தீரமும் பெற்ற ஆரிய நாட்டு இராவணன், வடக்கிருந்து வான் வழி வந்து யாரும் நுழைய முடியாத ஒரு தெற்குத் தீவின்கண் தன் நாட்டை அமைத்துக்கொண்டான் என்பதே பொருத்தமானதாகும்.

திரு. வி. கோ. சூரியநாராயண சாத்திரியார் அவர்கள் ஆரியர் கைபர் கணவாய் வழியாக இந்தியாவில் புகுமுன்னரே, மேலை நாட்டு ஆரியர்களோடு அரபிக் கடல் வழியே தமிழர் வாணிபம் செய்தனர் எனக் குறிக்கின்றார்[12]. அவ்வாறு தொடர்பு கொண்ட ஆரியருள் சிறந்த வீரன் அராபிக் கடல் வழியாகத் தெற்கேயுள்ள ஒரு தீவிற் புகுந்து, தன் ஆணையைச் செலுத்திச் சிறந்து விளங்கினான் என்று கொள்வதிலும் தவறு இல்லை. (சாத்திரியார் கொள்கைப்படி ஆரியர் ஐரோப்பாக் கண்டத்து ஸ்காந்திநேவியாவிலிருந்து வந்தவராவர்.) எனவே, ஒரு பிரிவு தரை வழி வடவிந்தியாவுக்கும். ஒரு பிரிவு கடல் வழி இலங்கைக்கும் வந்தன எனக் கொள்வது பொருந்துவதாகும். மற்றும் உள்ள உலகங்களையும் அட்ட திக்குக்களையும் தன் ஆணை வழிப்படுத்திய ஒருவனுக்கு இஃது அரிய செயலன்று. எனவே, எப்படி எண்ணினாலும் அவனைத் திராவிடனாகக் கருதத் தேவை இல்லை என்பது துணிபு.

இனி, பூரணலிங்கம் பிள்ளை அவர்கள் இராவணன் மரபைப் பற்றி ஆராய்கின்றார்கள். அவர்கள் பின் எவ்வளவு காரணம் காட்டினாலும், அவன் பிரமன் மரபில் வந்தவன்தான் என்பதைக் கூறாதிருக்க இயலவில்லை. அவர்தம் மரபு வழியே அவனை ஆரியன் எனத் திட்டமாகக் காட்டுகின்றது. அவர் காட்டும் மரபுப் பட்டியலை உள்ளபடியே தருகிறேன்.

பிரமன்[13]
மரீசி மனு புலத்தியன்
தேவ வாருணி
விச்சிரவசு
குபேரன்
தேவநிநி
(Devanini)
கரன்
மகோதரன்
மாரீசன்
பிரகத்தன்
கும்பினாசி
புஷ்போற்காதி
(Pushpothkathi)
திரிசிரன்
தூஷணன்
வித்யுத்
சீவூகன்
கலை
(Kalai)
இராவணன்
கும்பகர்ணன்
சூர்ப்பநகை
விபீடணன்
கேகசி
(Kekasi)

இவர்களைத் தவிர்த்து, பிரமன் மக்களுள் இருவராகிய மரீசி, மனு வழியேதான் இந்திரன், வருணன், சூரியன், அக்கினி, வாயு, சந்திரன் ஆகியோர் பிறந்ததையும் காட்டி யுள்ளார். இவற்றையெல்லாம் காணின், இராவணன் யாதொரு கலப்புமற்ற ஆரியப் பரம்பரையினன் என்பது நன்கு விளங்கும்.

என்றாலும், பிள்ளை அவர்கள் அந்தப் பரம்பரையினரை இரண்டு வகையாகப் பிரிக்கின்றனர். ஒரு வகையாரை யட்சர்களென்றும் மற்றொரு வகையாரை இராட்சசர்களென்றும் காட்டுகின்றார். யட்சர்கள் தேவர்களாகிக் கடவுளர்களால் விரும்பப்பட்டுத் தேவருலகத்தில் வாழ்ந்தார்களென்றும், இராட்சசர்கள் தேவர்களுக்கு விரோதிகளாகி வேறு காடுகளிலும் தீவுகளிலும் வாழ்ந்தார்களென்றும் குறிக்கின்றார். அவர் கூற்றின்படியே ஆராய்ந்தால், பிரமன் மரபிலே—அல்லது ஆரிய மரபிலே—பிறந்த இருவேறு மரபினர் இவ்வாறு தமக்குள் வேறுபட்டுப் பிரிந்தனர் என்று கொள்வதே பொருத்தமானதாகும். மற்றும் அந்த வேறுபாடு அவர்தம் முன்னோர்தம் உரிமை மகளிரின் வழிப் பிறந்த மக்களுக்கும், மற்ற மகளிர் வழிப் பிறந்த மக்களுக்கும் இடையில் எழுந்த போட்டியோ என நினைக்க வேண்டியுள்ளது. பின்னாள் நந்தர் மரபில் வேற்று மகளுக்குப் பிறந்த சந்திரகுப்தனுக்கும் நந்தருக்கும் ஆட்சி பற்றி நடந்த ஒரு போரைப் போன்றதே இந்த இராமாயணப் போர் என்று கருத இடமிருக்கிறது.

திரு. பிள்ளை அவர்கள் இராக்கதர்கள் நல்ல நிலையில் வாழ்ந்தார்கள் எனக் காட்டுகின்றார். அது இராமாயணத்திலேயே நன்கு விளக்கப்பட்டுள்ளது. அனுமன் போன்ற பகைவர் வாக்கிலேயே இலங்கையின் ஏற்றத்தையும் சிறப்பையும் புகழ்ந்து கம்பர் இலங்கை எனும் காவல் மாநகரைப் பாராட்டுகின்றார். எனவே, அது பற்றியும் ஐயம் கொள்ளத் தேவை இல்லை. பிள்ளை அவர்கள் அதற்குக் காட்டும் காரணத்தைக் காண்போம். ‘ரக்க்ஷா’ என்ற வடமொழிச் சொல்லிற்குக் காப்பாற்றல் என்ற பொருள் உண்டன்றோ? அந்த அடிப்படையில் 'ரக்ஷிப்பவர்' இராக்கதர் என்கின்றார். இரட்சகர் நாடு ஒரு சிறந்த நாடு (Welfare State) என்கின்றார். இவ்வாறு அகத்தியர் இராமனுக்குப் பஞ்சவடியில் விளக்கிக் காட்டி அவனைத் தென்னாட்டுக்கு அனுப்பினாராம். இது கம்பர் நூலிலில்லை. வான்மீகத்தில் உள்ளது போலும்! எப்படியாயினும், அக் கருத்துச் சரி என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. இராவணன் சீதையைக் கொண்டு சென்ற ஒரு சொடுமையைத் தவிர, வேறு ஒரு கொடுமையும் செய்தறியாதவன் என்பதைக் கம்பரே தம் வாக்கால் விளக்கிக் காட்டுகிறார். அதையும் கண்டு மேலே செல்லலாம்.

'வையம் தந்த நான்முகன் மைந்தன் மகன் மைந்தன்
ஐயன் வேதம் ஆயிரம் வல்லோன் அறிவாளன்
மெய்யன்பு உன்பால் வைத்துள தெல்லாம் வினை வென்றோன்
செய்யும் புன்மை யாதுகொல், என்றார் சிலரெல்லாம்’

                                                   (காட்சிப் படலம், 149)

என்பது கம்பர் வாக்கு. இதில் அவன் வினைகளையெல்லாம் வென்ற மேலோன் என்றும் சீதையைக் கவர்ந்ததே அவன் சிறு தொழில் என்றும் அரக்கியர் கூற்றாகக் கம்பர் காட்டிய உண்மை நன்கு புலனாகும்.

இப்பாட்டு வழியே கம்பர் இராவணன் புலத்தியன் மரபில் பிறந்தவன் என்ற உண்மையை நன்கு நிலை நாட்டு கின்றார். இராவணன் உலகத்தை உண்டாக்கிய பிரமன் வழி வந்தவன் என்றும், வேதங்களில் வல்லவன் என்றும் கம்பர் காட்டுகின்றார். இவ்வாறு பல இடங்களில் இராவணன் ஆரியன் என்பதைக் கம்பர் காட்டுவதை மேற்கோளாகக் காட்டினாலே அவனைப் பற்றிப் பலர் திராவிடன் எனக் கொள்ளும் பான்மை அகலும் என எண்ணுகின்றேன்.

கும்பகருணனிடம் வீடணன் போர் தொடங்குமுன் வருகிறான்; வந்து, அவனையும் தன்னைப்போல இராமனிடம் சரண் அடையுமாறு வேண்டுகின்றான்; இராமனைச் சரண் அடைந்தால், இலங்கையைப் பெறலாம் என ஆசை ஊட்டுகின்றான். எனினும், கும்பகருணன் அதற்காக அவன் பக்கம் செல்ல விரும்பவில்லை. ஆயினும், புலத்தியன் வழி வந்த தனது பிரம மரபு கெடக் கூடாது என்பதே அவன் ஆசை. தம்பி வீடணன் இராமன் பக்கம் சென்றதால், தாம் அனைவரும் இறந்த போதும் அவன் வழி தமது மரபு தழைக்கும் என உணர்ந்தவன் அவன்; எனவே, எதிர்பாராது அங்கே போருக்கிடையில் அவனைக் கண்டதும் பதறுகிறான்; அவனும், போரிடையில் இறந்துவிட்டால் மரபு பொன்றுமே எனக் கவன்று பேசுகிறான்.

'குலத்தியல்பு அழிந்த தேனும் குமரமற்றுன்னைக் கொண்டே
புலத்தியன் மரபு மாயாப் புண்ணியம் பொருந்திற்று என்றுன்
வலத்தியல் தோளை நோக்கி மகிழ்கின்றேன்!

                                            (கும்பகருணன் வதைப்படலம், 127)

எனக் கூறுகின்றான். இதிலும் அவர்கள் மரபு பிரம மரபு என்பது நன்கு காட்டப்பட்டுள்ளது. இனி மற்றோர் இடத்தில் கம்பர் பாடலுக்கு உரையெழுத வந்த வை.மு.கோபலாகிருஷ்ணமாசாரியார் அவர்கள், இராவணன் பிரம குலத்தவன் என்பதைத் தமது உரை மூலம் நன்கு நிலை நாட்டுகின்றார். சுந்தர காண்டத்து ஊர் தேடு படலத்துள் வரும் ஒரு பாடலுக்கு அவர் எழுதும் உரையைக் காண்போம்.

'முழுவா னவரால் உலகமொரு மூன்றும் காக்கும் ழுதல்தேவர்
மழுவாய், நேமி, குலிசத்தின் வாய்மை துடைத்த மார்பானை’

                                               (ஊர்தேடு படலம், 216)

என்பது கம்பர் வாக்கு. இதற்குச் சிறப்புரை கூற வந்த உரையாசிரியர், 'திரி மூர்த்திகளுள் போர் முயற்சி இல்லாது வேதம் ஒதிக்கொண்டிருப்பவனும் இராவணனது குலத்துக்கு ஆதி புருஷனுமான பிரமனை நீக்கி, இந்திரனைக் காட்டி, அம்மூவரது படைக் கலங்களும் இவனது மார்பில் பட்டு அதனை ஊறுபடுத்த மாட்டாமல் சிறப்பிழந்தன என இராவணனது மார்பின் வலியை வருணித்தார்'. (சுந்தர காண்டம், 269 உரை) என எழுதுகின்றார். எனவே, பிரம குலமே இராவணன் குலம் என்பது தேற்றம்.

இன்னும் எத்தனையோ ஆதாரங்கள் இராமாயணத்திலிருந்து காட்டலாம். எனினும், இவை அமையும் என எண்ணுகின்றேன். மற்றும், இராவணன் வேதம் வல்லவன் என்பது அவன் கயிலையின்கீழ் இருந்து சாம வேதம் ஒதியமையால் நன்கு புலனாகும். மற்றும் சிலவிடங்களில் அவனை ஆசிரியர்கள் 'ஆரிய' என்றே விளிப்பதைக் காண்கின்றோம். அனுமன் அவனைக் கண்டபோது, பல மொழியில் வல்ல சொல்லின் செல்வனாகிய அவ்வனுமன், இராவணனுடன் எம்மொழியில் பேசுவது என எண்ணி, பின் அவனது ஆரியகுல மரபு நோக்கி, ஆரியமொழியில் பேசினான் என்று வான்மீகியார் கூறியுள்ளதாகக் காட்டுவர். எனவே, ஆரிய மன்னனாகிய இராவணனை வலியத் திராவிடனாக்கி, நாட்டில் இந்த ஆரியத் திராவிடப் போராட்டம் இல்லாத அந்தக் காலத்தில் இருந்ததாகக் கற்பனை செய்தல் நாட்டு நலனுக்குத் தேவை இல்லாதது; ஒரு சிறிதும் பொருந்தாது.

எனவே, இராமனும் இராவணனும் ஒரே பிரம குலத்தில் பிறந்தவர்களே என்பதும், தாய்வழித் தந்தை வழி முறையில் இருவேறு வகைப்பட்ட ஆரிய மரபினர்க்கும் யாகம் வளர்த்தல் முதலியவற்றில் மாறுபட்ட கருத்துக்கள் இருந்திருக்கலாம் என்பதும், அவர்கள் பெண் காரணமாகப் பெரும்போர் விளைத்து மாபெருங்காவியம் உண்டாகக் காரணமாய் நின்றார்கள் என்பதும் அந்தப் போருக்கும் தமிழ் நாட்டுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்பதும் இராவணனுடைய இலங்கை இன்றைய இலங்கையாய் இருந்திருக்க முடியாதென்பதும், இவற்றின் அடிப்படையை மறந்து இராமாயணம் ஆரிய திராவிடப் போராட்டத்தின் அடிப்படை என்று கூறுவது நாட்டிற்குத் தேவையற்ற வாதம் என்பதும், ஒரே மரபுக்குள் நடைபெற்ற ஒன்றை நடுவில் தம்மதாகத் தமிழர் கருதுதல் தவறு என்பதும் இந்தக் கட்டுரையால் நன்கு தெளிவாகும்.

  1. Pre-Historic, Ancient and Hindu India, by Banerji, p. 47.
  2. Cambridge History of India Vol. I.
  3. History of India, by Sinha and Banerji, p. 45
  4. A History of India, by Winternitz, Vol. I.
  5. Political History of Ancient India, by Hemchandra Raychaudhrl p. 20
  6. The oxioid History of India, by Vincent A. Smith p. 57. (A. A. Macdonell's History of Sanscrit Litrature)
  7. The Ramayana is outcome of a hero and describing the triumph of a chief of Kosala clan, whose wife was carried away by a Dravidian Chief. (Pre-historic, Ancient and Hindu India, by Banerji, p. 47)
  8. History of India, by Sinha and Banerji, p. 47.
  9. The Oxford History of India (Old edition) by A. V. Smith, p. 47
  10. Ravana the great, by M. S. Pooranalingam Pillai,
  11. கிட்கிந்தா காண்டம், நாடவிட்ட படலம், 26-31.
  12. தமிழ் மொழி வரலாறு, பக், 9, 10.
  13. Ravana the great, p. 17.