வரலாற்றுக் காப்பியம்/இராவணலங்கை

விக்கிமூலம் இலிருந்து

இராவணலங்கை

தஞ்சைநாட்டு கோடிக்கரைக்கும்
இலங்கை தலை மன்னார் துரைக்கும்
இடையில் கிடந்ததொரு நெடுந்தீவே
தென்னிலங்கை என்ற ராவண லங்கை
திண்டிவனம் தெற்காக ஏழுகல் அளவில்
கீழ் மாவிலங்கை என்றதொரு மூதூர்
சிற்ப வளத்தோடு சிறக்கின்றது இன்றும்
பாலாற்று வெளிமுதல் குசத்தலை பொன்முகலி
வடபெண்ணை வரையுள்ள அருவா வடதலையை
மாவிலங்கை என்பதே வரலாற்று மரபு
மாவிலங்கையின் மறு பதிப்பாக
தெற்கில் அமைந்ததே தென்னிலங்கை
தென் திசையாண்ட தென்னவரின் வழித்தோன்றல்
அரக்கன் எனப்பட்ட இராக்கதிர் கோமான்
அரக்கன் என்றது அருக்கனின் திரிபே
அரும் பொருள் உணராத ஆரியம் பழித்தது
இருளில் ஒளி உமிழும் விழியுடையான்
இராக்கதிர் கோமான் என்பதே அவன் பெருமை
ஐயிரண்டு திசைமுகத்தும் தன்புகழை வைத்தான்
தலமுதலூழியில் வானவர் தருக்கற
புலமகளாளர் புரிநரம்பாயிரம்
வலி பெறத் தொடுத்த வாக்கமை பேரியாழ்

இசைக்கும் திறன்மிகு பெரும் புலவன்
வெள்ளி மலைக் கீழிருந்து விளரி பாடினான்
அழுத முகத்தோன் என்று ஆரியம் பழித்தது
அப்பரும் ஆதிசைவச் சுந்தரரும்
சீர்காழிப்பிள்ளை சிவஞான சம்பந்தரும்
பாட்டுக்குப் பாட்டு பரவசப் பட்டு
பக்தியில் பெரிய னென்று முத்திரை வைத்தார்
இராவணனுக்கு ஈசுவரன் சிறப்புமுண்டு
இழிமகனானால் ஈசுவரத் தகுதி வாய்க்குமோ
கரிய நிறத்தவனை கார்வண்ணன் என்றாங்கு
இராவண்ணத்தவனை இராவணன் என்றார்
அவன் கொடிபறந்த கோட்டைகள் இருபத்தைந்து
அனுமப்படை அணைபோட்டுக் கடந்த கீழக்கரை
கடலோடையே சேதுக் கால்வாய்
அனுமன் கோயில் கொண்ட மணற்குன்று
மகேந்திர மென்ற பெயரில் இன்றுமுண்டு
ராமலிங்கத்தின் ஒருகோடி தனுக்கோடி
மறுகோடி மகேந்திரம் என்பார்
கோடிக் கரைக்கு கொஞ்சம் மேற்காக
கோரையாற்றின் மறுகரையிலுள்ள
ஜாம் பவானின் ஓடையும் சரித்திரச் சான்றே
இலங்கை கடலுன் மாய்ந்து போனதால்
சிலம்பை இசைத்த சேரத்து இளங்கோ

தொலைந்ததைச் சொல்ல தொல்லிலங்கை என்றான்
ஆநிரைக் கவர்தல் மகளிரைச் சிறை எடுத்தல்
பகைவரைப் போருக்கு அழைக்கும் மரபாதலின்
சீதையைச் சிறை எடுத்தான் மற்றபடி
அவள் மானத்துக்குத் தீங்கு இழைத்திலன்
சரித்திரச் சாயலே இதிகாசமாயிற்று
ராவணன் காலத்து வாலியும் வதைக்கப்பட்டான்
ராமனுக்கு அவன் பகை அன்று ஆயினும்
ராவணனுக்கு அவன் நண்பன் என்பதால்
சுக்ரீவன் சார்பில் சூழ்ச்சியாக
மறைந்திருந்து கொன்றான் இலக்கியம் மன்னிக்கவில்லை
நீதியின் குரல் ஏனென்று கேட்கின்றது
தண்டகன் தென்திசை வந்தபோது
கிஷ்கிந்தை அவனுக்கு சிற்றரசானது
அதனால் ராமனுக்கு வாலிமேல் ஆதிக்கம்
தம்பியிருக்கத் தாரத்தை பற்றியது
தவறென்பதற்கே வாலிவதம் என்பார்
இந்த வகையில் எத்தனையோ கதைகள்
தாடகை வதத்திலிருந்து சம்புகன் வதம்வரை
ஆதிவால்மீகி சீதையைத் தேடதென்பால்
அனுமனை ஆற்றுப் படுத்தும் போது
பொதிகையைச் சொல்லி பொன் வேய்ந்த
கபாடபுரத்தின் தொன்மையையும் சொல்லுகின்றார்
ஆதலின் ராமன் காலத்து மூதூர்

தலைசங்க காலக்கடல் துறைப் பட்டினம்
அலவாய் என்பதும் அறிய வருகின்றது
அறுபடை வீட்டில் ஒன்றென்னும்
செந்நிலம் பதியே கபாடபுரம்
வீர மகேந்திரம் என்று சொல்லுவார்
கந்த மாதனம் என்ற கரையாதகுன்று
செந்தில் ஓரத்தில் இன்றும் உண்டு
வள்ளிக் குகை என்று வழங்குகின்றார்
வடபுலத்தில் வந்து கலந்த ஆரியமும்
தென்புலத்து லெமூரிய வழிக்குலமும்
மோதிக் கொண்ட வரலாற்று நிழற்படமே
ராமகதை உள்ளிட்ட தேவாசுரப்போர்கள்
அசுர் என்றாலும் சூரியனென்றே பொருள் சொல்வார்
ஆரியக் கூற்றுப்படி அசுரர் அரக்கர்
வெறுப்புக்குரிய பழிப்புரை யானார்
இராவணன் குலத்துக்கு முன்னவன் புலத்தியன்
அன்னவன் பழந்தமிழ்ச் சித்தர்களில் ஒருவன்
இலங்கை குஞ்சரத்தில் இருக்கை கொண்டிருந்த
அகத்தியனுக்கு பெண் கொடுத்த மைத்துனன்
இந்த உறவில் இராவணன் அகத்தியனுக்குப் பேரன்
பாட்டனும் பேரனும் பாட்டிசைத்தப் போட்டியை
கந்தர்வத்தால் பிணித்த கதையாகத் திரித்தார்
பிரம்ம புத்திரரில் ஒருவனும் புலத்தியன்
பெயர் ஒற்றுமை கொண்டு மரபு வழியை மாற்றினார்

ஆரியத்துக்கு முரண்பட்டு வேள்வியை எதிர்த்த
தென்புலத்து நாகக் குலத் தோன்றலான
இராவண்ணத்தவனுக்கு நிறத்திலே வெளுத்த
ஆரிய புலத்தியன் தாதைவழி ஆவனோ
இதிகாச புராணத்தில் திரிந்தோ திரித்தோ
ஏறிவிட்ட குலமுறைப் படலங்கள்
சரித்திரப் பார்வைக்கு முன் நிற்பதில்லை
அரக்கென்று குரக்கென்று ஆரியம் பழித்தாலும்
தமிழ்க் குலத்துக்கு அவர்கள் தாயாதியரே