வள்ளலார் பாடல்கள் - தெரிவுசெய்யப்பட்டவை
Appearance
வள்ளலார் பாடல்கள் தெரிவுசெய்யப்பட்டவை
[தொகு]பாடல் 01 (உருவராகியும்)
[தொகு]- கடவுள் ஒருவரே என்றுகூறல்
- (அறுசீரடி ஆசிரியவிருத்தம்)
- உருவ ராகியும் அருவின ராகியும் உருவரு வினராயும்
- ஒருவ ரேயுளார் கடவுள்கண் டறிமினோ உலகுளீர் உணர்வின்றி
- இருவ ராமென்றும் மூவரே யாமென்றும் இயலும்ஐ வர்களென்றும்
- எருவ ராயுரைத் துழல்வதென் உடற்குயிர் இரண்டுமூன் றெனலாமோ. -(ஆறாந் திருமுறை- தனிப்பாடல், 160.)
பாடல் 02 (உழக்கறியீர்)
[தொகு]- ஒன்றும்அறியாதவன் இறைவன்பற்றிப் பேசல்
- (எண்சீரடி ஆசிரியவிருத்தம்)
- உழக்கறியீர் அளப்பதற்கோ ருளவறியீர் உலகீர் ஊரறியீர் பேரறியீர் உண்மையொன்று மறியீர்
- கிழக்கறியீர் மேற்கறியீர் அம்பலத்தே மாயைக் கேதமற நடிக்கின்ற பாதமறி வீரோ
- வழக்கறிவீர் சண்டையிட்டே வம்பளக்க வறிவீர் வடிக்குமுன்னே சோறெடுத்து வயிற்றடைக்க வறிவீர்
- குழைக்கறியே பழக்கறியே கூட்டுவர்க்கக் கறியே குழம்பேசா றேயெனவுங் கூறவறி வீரே. (ஆறாந் திருமுறை- தனிப்பாடல், 161)
பாடல் 03 (அன்பெனும்பிடியுள்)
[தொகு]- அன்பே கடவுள்
- (எழுசீரடி ஆசிரியவிருத்தம்)
- அன்பெனும் பிடியுள் அகப்படு மலையே அன்பெனுங் குடில்புகும் அரசே
- அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே அன்பெனும் கரத்தமர் அமுதே
- அன்பெனும் கடத்துள் அடங்கிடுங் கடலே அன்பெனும் உயிரொளிர் அறிவே
- அன்பெனும் அணுவுள் அமைந்தபே ரொளியே அன்புரு வாம்பர சிவமே.