உள்ளடக்கத்துக்குச் செல்

வாழும் வழி/மக்களாய்ப் பிறந்தோர் வாழும் வழி

விக்கிமூலம் இலிருந்து


1. வாழ்வியல்


1. மக்களாய் பிறந்தோர் வாழும் வழி

மக்களாய்ப் பிறந்தோர் வாழும் வழி என்ன?

“ஒரு நாள் இன்ப வாழ்வு வேண்டுமானால் முடி திருத்தும் கடைக்குச் செல்; ஒரு மாத இன்ப வாழ்வு வேண்டுமானால் ஒரு குதிரை வாங்கிக்கொள்; ஓராண்டு இன்ப வாழ்வு வேண்டுமானால் ஒரு புது வீடு கட்டிக்கொள்; வாணாள் முழுவதும் இன்ப வாழ்வு வேண்டுமானால் நல்லவனாய் நட.” என்பது ஓர் இத்தாலியப் பழமொழியாம். இந்தக் கருத்து நம் நாட்டுச் சூழ்நிலைக்கு எந்த அளவுக்குப் பொருந்துமோ?

முடி திருத்தும் கடைக்குச் சென்று முகத்தை வழித்துக்கொண்டு, ஆகா! என்ன அழகு நம் முகத்தில்! எவ்வளவு வழவழப்பு பளிங்கு போல் பள பளப்பு! என்று வியந்துகொண்டே நிலைக்கண்ணாடியின் முன் நின்று நீட்டி நெளித்து அழகு பார்த்து மகிழ்ந்து பெருமை கொள்கின்றனர் மக்கள். மறுநாள் காலையில் தூங்கி எழுந்து பார்த்தால்; அதே முகத்தில் சொர சொரப்பு. எழுந்ததும் பார்க்க வேண்டுமே அந்த முகத்தின் அழகை!

ஒரு குதிரை வாங்கி ஏறி ஊர்ந்து செல்லின், (அல்லது ஒரு காரே வாங்கினும்,) ஒரு மாதம் சுற்றியடித்துப் பார்த்தால் அலுத்துப் போகிறது. பிறகு நாளடைவில் பழைய ஆர்வத்திற்கிடனின்றி எளிமையாய் விடுகிறது.

ஒரு புது வீடு கட்டினும், ஓராண்டு வரையும் வருவார் போவார்க்கெல்லாம் அதன் ஒவ்வொரு பகுதியையும் காட்டிக் காட்டி விளக்கி விளக்கிப் பெருமை கொண்ட பின்னர், சுவர், கதவு, தூண் முதலியவற்றின் வண்ணநிறம் மங்கமங்க, உடையவரது உள்ளத்தெழுச்சியும் மங்குகிறது.

ஆனால், மக்கள் பெயரளவில் வடிவ அமைப்பில் மட்டும் மக்களாய் இன்றி, உண்மையில் மக்கட் பண்புடையராய் - நல்லவராய் நடந்து கொண்டால் அவர் தம் வாழ்நாள் முற்றிலும் அவர்க்கு இன்பமே பேரின்பமே!

அஃதாவது, ஒருவன் புத்தழகும் புதுப் பொலிவும் உடையவனாய், புத்தெழுச்சி கொண்டவனாய், புது வண்டி பெற்றவனாய், புதுமனை புகுந்தவனாய்க் காணப்படினும், அவனிடம் நீதியோ நேர்மையோ ஒழுக்கமோ பண்பாடோ மானமோ மதிப்போ இல்லையெனின் அவன் நிலை யாது? அவன் வாழ்வு எத்தகையது? அவனை முன்னே விட்டுப் பின்னே எள்ளி நகையாடுமன்றோ உலகம்! ‘இதோ போகிறான் பாருங்கள் இவன் செய்த செயல் தெரியுமா?” என்று ஏசுமே மக்கள் கூட்டம்!

இதனாலேயே, ‘வாணாள் முழுவதும் இன்ப வாழ்வு வேண்டுமானால் நல்லவனாய் நட’ என்று கூறிற்றுப் போலும் அந்தப் பழமொழி.

வாழ்வு என்றால் வாழ்தல் என்றால் என்ன? என்று பார்ப்போமா? எந்த அகராதியைப் பார்த்தால் இதற்குப் பொருள் காணலாம்! வேண்டியதில்லை - பணம் போட்டு வாங்கிய எந்த அகராதியும் நமக்கு வேண்டியதில்லை. மக்கள் அகராதியில் அஃதாவது - மக்களின் பேச்சு வழக்கில் இஃது எந்தப் பொருளில் ஆளப்படுகிறது என்று நோக்குவோமே!

“அவர் எண்பது ஆண்டுகள் வாழ்ந்தார்”, “என் மகள் மதுரையில் வாழ்கிறாள்”, “அது வாழ்ந்த குடும்பம்'”, “அவருக்கு வாழ்வுவந்துவிட்டது, இனிமேல் நம்மைத் திரும்பிப் பார்ப்பாரா” - “அவர்கள் வாழாதும் வாழ்ந்து வாழைக்குலை சாய்ந்தார்கள்”.

முதலிய வாக்கியத் தொடர்களை நோக்கின், வாழ்தல் என்பதன் பொருள் ஓரளவு புலனாகக் கூடும். ‘என்பது ஆண்டுகள் வாழ்ந்தார்’ என்பதில், வாழ்தல் என்றால் உயிர் வாழ்தல் என்றுதானே பொருள்? ‘மகள் மதுரையில் வாழ்கிறாள்’ என்பதில், மகள் கணவனுடன் ஒன்றிக் குடியும் குடித்தனமுமாய் இருக்கிறாள் என்பது கருத்தன்றோ? ‘அது வாழ்ந்த குடும்பம்’ என்பதில், சீரும் சிறப்புமாய் விளங்கிய குடும்பம் என்பது பொருள் அல்லவா? ‘அவருக்கு வாழ்வு வந்துவிட்டது’ என்பதில், பட்டம் பதவி பணம் முதலியன பற்றிச் செருக்கு வந்து விட்டது என்பது கருத்து. ‘வாழாதும் வாழ்ந்து வாழைக் குலை சாய்ந்தார்கள்’ என்பதில், வாழை வளர்ந்து வாழ்ந்து பல கீழ்க்கன்றுகளை ஈன்று, இறுதியில் குலை தள்ளிச் சாய்வது போல், மக்கள் பிறந்து வளர்ந்து குழந்தைகளைப் பெற்றுப் பேரப் பிள்ளைகளையும் கொண்டு குடும்பம் செழிக்க முழு நிறைவோடு முடிதலைக்குறிக்கும்.

மேற்குறிப்பிட்டுள்ள வாழ்வுகள் அனைத்தும் ஆறறிவு பெற்ற உயர்திணைப் பொருளாகிய மக்களுக்கு மட்டுந்தானா உண்டு? அஃறிணைப் பொருள்களாகிய பறவை விலங்குகட்கும் உண்டன்றோ? அவையும் உழைக்கின்றன, உண்ணுகின்றன, உறங்குகின்றன, குஞ்சு குட்டிகளை ஈனுகின்றன, நெடுநாள் உயிர் வாழவுஞ் செய்கின்றன. எனவே, அவற்றின் வாழ்வும் மக்களின் வாழ்வும் ஒன்றுதானா? இடையே வேற்றுமை யாதாக இருக்கலாம்? மக்கள்தம் வாழ்வு எத்தகையதாய் இருக்க வேண்டும்?

ஆம்! மக்களாய்ப் பிறந்தோர் வாழும் வழி என்ன? என்னும் வினாவிற்கு நாம் விடை காணவேண்டும். இவ்வளவு நாள் நாம் எது எதையோ வாழ்வு என்று எண்ணிக்கொண்டு, உலக வழக்கில் பேசியும் பெற்றும் வருகிறோமே, அது அது மட்டும் மக்களுக்கு வாழ்வாகிவிட முடியாது; பறவை விலங்குகளுங்கூட அத்தகைய வாழ்வியலை ஏறத்தாழப் பெற்றுள்ளன; ஆகவே மக்களாய்ப் பிறந்தோர் வாழவேண்டிய வாழ்வு வேறு ஏதோ உளது. அதனை நாம் கண்டுபிடித்தாக வேண்டும்; கண்டுபிடித்தால் மட்டும் போதுமா? கடைப்பிடித்தும் வாழ்ந்து பார்க்க வேண்டும், வாழ்ந்தேயாக வேண்டும்; அதுதான் உண்மையான மக்கள் வாழ்வு என்ற திட்டவட்டமான உறுதியான முடிவுக்கு இப்போது நாம் வந்துவிட்டோம் என்று கருதுகிறேன்.

அவ்வாறு மக்கள் வாழ்வுநெறிக்கு வேண்டிய வழியைக் கண்டுபிடிக்க நாம் முயலுமுன், நம் முன்னோருள் எவரேனும் ஏதேனும் கண்டுபிடித்துள்ளனரா? அப்படியிருப்பின், அந்த வழியும் நம் அறிவுக்குப் பொருந்தின் நாம் ஏன் அதனைக் கடைப்பிடித்தால் ஆகாது? அவ்வாறு கண்டுபிடித்துக் கூறிப்போந்தவர் எவராயிருக்கலாம்?

சுற்றி வளைத்துக்கொண்டு காலத்தைக் கடத்துவதேன்? வாழ்க்தைத் துணை நூலாகிய திருக்குறளை வையகத்திற்கீந்த வள்ளுவரே நமக்கு நல்ல வழிகாட்டியாவார். அவர் வாழ்வதற்கு வழிசொல்லியுள்ளார். அஃது என்னென்று நோக்குவோம்.

“வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழாதவர்.”

என்பது திருக்குறள். பழியின்றி வாழ்பவரே உண்மையில் வாழ்பவராகக் கருதப்படுவர்; புகழின்றி வாழ்பவர் உண்மையில் வாழாதவராகவே கருதப்படுவர் என்பது குறட் கருத்து.

இதிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்ள வேண்டும்? ஒருவன் எவ்வளவுதான் படிப்பு - பட்டம் - பதவி பணம் முதலியன பெற்று, மாடமாளிகை கூடகோபுரம் கட்டி வாழினும், நீதியின்றி, நேர்மை யின்றி, பலரும் வெறுத்தொதுக்கும்படிப் பழிச் செயல்கட்கு ஆளாயியிருப்பானேயாயின், அவன் வாழ்வு அத்தனையும் நாடகமேடை வாழ்வாகிவிடும். மற்றொருவன், எவ்வசதியும் அற்றவன்; ஆனால் நேர்மையாளன்; பழியென்றால் உலகமே கிடைக்குமெனினும் விரும்பாதவன்; புகழ் எனின் உயிரும் கொடுக்கக்கூடியவன்; தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன். அத்தகையோன் கஞ்சி குடித்துக் கந்தையே உடுத்தினாலும் அவன் வாழ்வே பெருவாழ்வு பேரின்ப வாழ்வாகும் என்னும் நற்கருத்து இக்குறள் வாயிலாய்ப் பெறப்படுகின்றதன்றோ?

எனவே, வசைநீங்க வாழவேண்டும். இசையுடன் புகழுடன் வாழவேண்டும் என்பது போதரும்.

புகழுடன் வாழவேண்டுமெனின், எவ்வாறு வாழ்வது? எவ்வளவு பணம் எடுத்துக்கொண்டு எந்தக் கடைக்குச் சென்றால் புகழை விலைக்கு வாங்கி வரலாம்? புகழ் என்ன கடைச் சரக்கா?

ஒருவன் பெரிய படிப்புப் படித்திருப்பினும், பட்டங்களும் பல பெற்றிருப்பினும், மாபெரும் பதவிகளில் வீற்றிருப்பினும், மலை மலையாய்ச் செல்வங்களைத் திரட்டிக் குவித்திருப்பினும் பிறர்க்குப் பயன்பட மாட்டான் என்றால், அவனைப் பற்றி யாருக்கும் அக்கறையில்லை; கவலையில்லை. எவன் ஒருவன் பலர்க்கும் பலவகையிலும் பயன்படுகிறானோ, அவனைப் பற்றியே மக்களின் பேச்சு மூச்செல்லாம்! எனவே, பிறர்க்கு உதவவேண்டும். அதனால் புகழ் பெருக வாழவேண்டும். இதைத் தவிர உயிர்க்கு வேறு என்ன வேண்டியுள்ளது? இவ்வாறு உதவுபவரைப் பற்றியே மக்கள் உயர்வாகப் பேசிக்கொள்வர். இக் கருத்துக்களையே,

“ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்ல(து)
ஊதியம் இல்லை உயிர்க்கு”,

“உரைப்பார் உரைப்பவையெல்லாம் இரப்பார்க்கு ஒன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ்”

என்னும் குறள்கள் தெளிவுறுத்துகின்றன. ஈண்டு வள்ளுவர், ஈவதால்தான் இசை உண்டாகும்; இசை பெற்று வாழ்தல்தான் வாழ்தலாகும் என்ற குறிப்பை “ஈதல் இசைபட” என்னும் தொடரில் பொதிந்து வைத்திருப்பதை ஊன்றி நோக்குக.

பிறர்க்கு உதவுவது என்றால், சோம்பேறித் தடியர்கட்கெல்லாம் வாரி வாரி வழங்குவதன்று. மக்கள் ஒருவரோடு ஒருவர் அன்பு கொள்ளவேண்டும். ஒருவரையொருவர் மதிக்கவேண்டும். தாம் வந்த வழியினையும் தம் கீழ் உள்ளவர்களையும் திரும்பிப் பார்க்க வேண்டும். தாம் பெரிய மனிதர் என்று செருக்குக் கொண்டு, சமுதாயத்திலிருந்து ஒதுங்கித் தம்மைத் தாமே தனியிடத்தில் சிறைவைத்துக் கொள்ளலாகாது. எல்லோருடனும் கலந்து பழகவேண்டும். எவர் வீட்டிற்கும் போக வேண்டும். பிறர்க்கும் நமக்கும் நடுவே இமயமலை போல் குறுக்கிட்டுத் தடுத்து நிற்கும் வீண் ஆரவார ஆடம்பர முறைகளையெல்லாம் அடியோடு ஆணிவேருடன் களைந்தெறிய வேண்டும். தம்மாலான உதவிகள் அனைத்தையும் பிறர்க்கு அளிக்கத் தம்மை ஆயத்தம் செய்துகொள்ள வேண்டும். அத்தகையோர் வாழ்வே வாழ்வாகும் நிலையான நீடித்த வாழ்வாகும்.

வாழ்வு என்றால் சாகும்வரையும் வாழும் இன்ப வாழ்வு என்று பொருள் கொள்ளும் குறுகிய நோக்கம் எனக்கின்று. தம் வாழ்நாளிலே வாழவேண்டிய முறைப் படி வாழ்ந்தவர்கள் தாம் செத்த பின்பும் வாழ்வார்கள். அதுதான் உண்மையான வாழ்வு தன் செல்வ வளத்தை வாரி வழங்கிய பாரி வள்ளல் இன்றும் மக்களிடையே வாழ்கிறான்; புகழப் பெறுகிறான். அறிவு வளத்தை வாரி வழங்கிய வள்ளுவர் போன்றோர் இன்றும் வாழ்கின்றனர்; இனியும் என்றும் வாழ்வர். இதுதான் நீடித்த நிலையான வாழ்வு. இந்தப் புகழ் வாழ்விற்கு என்றும் அழிவேயில்லை. இதனை வள்ளுவர் பின்வரும் குறளில் குறிப்பிட்டுள்ளார்:

ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பது ஒன்றில்”

மக்களாய்ப் பிறந்தோர் வாழும் வழி இதுதானே!