வாழும் வழி/விஞ்ஞான வித்தின் விரிவு

விக்கிமூலம் இலிருந்து


4. விஞ்ஞானவியல்


15. விஞ்ஞான வித்தின் விரிவு

உலகம் முன்னினும் இவ்விருபதாம் நூற்றாண்டில் பெருவளர்ச்சி பெற்றுள்ளதென்பது கண்கூடு. வளர்ச்சியென்றால் நாடகத்தில் அதிலும் பேசும் படக்காட்சியில் ஒரே விநாடியில் குழந்தை பெரிய மனிதனாக ஆகிவிடுகின்ற அத்தகைய வளர்ச்சியன்று. வீட்டில் குழந்தை படிப்படியாக வளர்ந்து பெரிய மனிதனாக ஆகும் வளர்ச்சியைப் போன்றதே உலகின் வளர்ச்சியும். இந்நுட்ப முணராதார் சிலர், உலகின் இன்றைய புதுவளர்ச்சியின் பொலிவு நோக்கிப் புகழ்ந்து, பழைய மந்த நிலையைப் பழித்து இழித்துரைக்கின்றனர். இஃது எம்மட்டுப் பொருந்துமென்று சற்றாராய்வோம்.

மனிதனுக்கு ஒவ்வொரு பருவத்தில் ஒவ்வொரு துறையில் ஒவ்வொரு விறுவிறுப்பு முனைப்புற்றிருக்கும். அவ்வவ்வதனை அவ்வப்போது ஒரு வெற்றியாகக் கருதி அவன் வரவேற்கின்றான். குழந்தைப் பருவத்தில் குழந்தை, தன்னைப் பிறர் தூக்கி வைத்திருக்கும்போது, அவர்களுடைய பிடியிலிருந்து தப்பித்தன்தாயின் மடியை யடைவதில் ஒரு விறுவிறுப்புக்கொள்கின்றது. அடைந்த போது வெற்றிக்கறிகுறியான மெய்ப்பாடுகள் அதன் மெய்யிற்படுகின்றன. அயல்நாட்டின் மேல் அணுகுண்டு வீசி வெற்றியடைந்தவர் கொள்ளும் மனமகிழ்ச்சிக்குக் குறைந்ததாக அக்குழந்தையின் மனமகிழ்ச்சியை மதிப்பிட்டுவிடமுடியாது. மேலும் ஓரளவு வயதுமுதிர்ந்த சிறுவன், மற்றைய பிள்ளைகள் வெறித்துப் பார்க்கப் பார்க்க, தான் அவர்கள் எதிரில் உயர்ந்த தின்பண்டம் தின்பதிலும், சிறந்த வெடி (பட்டாசு) வெடிப்பதிலும், விலையேறப் பெற்ற விளையாட்டுப் பொருள்கள் வைத்துக்கொண்டு விளையாடுவதிலும், மதிப்பிற்குரிய ஆடையணிகள் அணிவதிலும் விறு விறுப்புக்கொண்டு வெற்றி மாலை சூடுகிறான். இன்னுஞ் சில்லாண்டுகள் சென்றதும், முறையே விளையாட்டிலும் கல்வியிலும் மற்றைய மாணவரை வெல்ல விரும்புகின்றான். அடுத்து, நடையாலும், உடையாலும், அழகாலும், ஆற்றலாலும் மற்றைய இளைஞரினும் தானே கன்னியரின் கண்களைக் கவர்ந்து வாகைசூட வேண்டுமென்று விறுவிறுக்கின்றான். பின்னர் தொடர்ந்து பட்டம் பதவி, அரசியல் முதலியவற்றில் ஏனையோரினுஞ் சிறந்து செல்வத்தில் புரண்டு செம்மாந்திருக்கக் கனவு காண்கிறான். கனவு நனவாகி வாகைமேல் வாகை வகைவகையாக வருவதும் உண்டு. எல்லா ஆட்டபாட்டங்களும் அடங்கிய காலத்து, யேசுவைப்போல், புத்தரைப் போல், காந்தியைப்போல் மாநிலம் மதிக்கவேண்டுமென்று விரும்பி அதற்குரிய நாடகமேடையில் ஏறி நடிக்கத் தொடங்கிவிடுகிறான்.

மனிதனின் இத்தகு வியத்தகு செயல்களுள் எது பழமை? எது புதுமை? எது தாழ்ந்தது? எது உயர்ந்தது? இவையெல்லாஞ் சரிநிகர் சமன். இவற்றுள் ஒன்றுக் கொன்று உயர்வுதாழ்வு கற்பிப்பது கற்பனைமட்டுமன்று: ஆராய்ச்சியின்மையால் நேர்ந்த தவறுமாகும். ஏன்?

காந்தியண்ணலையே எடுத்துக்கொள்வோம். அவர் இளமையில் இயற்றிய செயல்கள் எளியனவாகத் தோன்றின. முதுமையில் முகிழ்த்த செயல்களோ அரும் பெருந் தொண்டுகளாக மலர்ந்தன. அதனால் அவரது இளமையைப் பழமையானது - தாழ்ந்தது என்றிகழவும், முதுமையைப் புதுமையானது - உயர்ந்தது என்று புகழவுஞ் சாலுமா? ஆண்டிற்கேற்ற அறிவிற்கேற்ற அனுபவத்திற்கேற்ற செயல்களே கைவரப்பெற்றன. இதற்கு இயற்கை யென்று பெயர் சூட்டல் நேரிது.

இனியுலகை நோக்குவோம். இவ்வுலகந் தோன்றி ஏறக்குறைய மூன்று கோடி யாண்டுகள் ஆகியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் உய்த்துணர்ந்து உரைத்துள்ளனர். இவ்வாண்டுகளை நூறு நூறு ஆண்டுகளாகப் பகுத்துக் கொண்டோமானால், ஒரு நூற்றாண்டிற்கும் மறு நூற்றாண்டிற்கும் உலக வளர்ச்சியில் பல மாறுதல்கள் ஏற்பட்டிருப்பதை உணரலாம். நீர்ப்பாசி, புல் பூண்டுகளிலிருந்து படிப்படியாக வாலுள்ள குரங்கு, வாலில்லாக் குரங்கு, மனிதன்வரை உயிர்த்தோற்றம் உண்டானதாகக் கருதப்பட்டு வருகின்றது.

மனிதனுக்குத் தொடக்கத்தில் பேசத் தெரியாது. உடை யுடுக்கத் தெரியாது. அந்த அறிவும் அப்போது எட்டவில்லை. சுருங்கச் சொல்லின் பசியுணர்ச்சி யேற்பட்டபோது உணவு தேடி யுண்பதைவிட வேறெதுவுஞ் செய்ய அறியாதவனாகியிருந்தான். இந்நிலையில் வேட்டையாடுவதிலிருந்து பயிர்த் தொழிலுக்குத் தாவினான். படிப்படியாக மண், கல், மரம், இரும்பு முதலியவற்றால் கருவிகள் கண்டு பிடித்தான். தச்சு, நெசவு முதலியன செய்தான். நாளடைவில் வெறும் பேச்சுக்கு மேல் எழுதவும் பழகி, படிக்கவுங்கற்று, பாராளவும் தேர்ச்சி பெற்றான். இப்போது விஞ்ஞான வெறி பிடித்து அணுகுண்டு போடுவதிலிருந்து அயல் கோளங்கட்கு (செவ்வாய்சந்திர மண்டலங்கள்) தாவுவது வரை வந்துவிட்டான்.

இவர்களுள், ஆதியில் ஆடையின்றி வாழ்ந்தவன் மூடன் - இப்போது அயல் கோளத்திற்கு தாவுபவன்தான் அறிவாளி என்பது பொருளா? இல்லை. இயற்கை யென்னும் துலைத் தட்டில் எடைபோட்டுப் பார்க்குங்கால் இருவருஞ் சரிநிகர் சமனே அவன்தானே இவன் இவன்தானே அவன் எட்டு வயது சிறுவன்தானே எண்பது வயது கிழவனாவான். முப்பது வயது மனிதன் செய்யுஞ் செயல்களைச் செய்யத் தெரியாமையால் மூன்று வயது குழந்தையை நாம் இகழ்வதுண்டோ - இகழ்ந்தால் அது அறிவீனமல்லவா? இதே முப்பது வயது மனிதன் இப்போது செய்யுஞ் செயலை மூன்று வயதில் செய்தானா? செய்ய இயற்கை இடந்தராதே. 19-ஆம் நூற்றாண்டில் கம்பியில்லாத் தந்தையை (Wireless) கண்டுபிடித்த மார்க்கோனி (Marcony) ஐயாயிரம் ஆண்டுகட்கு முன் இருந்தால் அதனைக் கண்டுபிடித்திருக்க முடியுமா. பத்தொன்பது இருபதாம் நூற்றாண்டுகளில் பேசும் படக் காட்சி, ஒலிபெருக்கி, மின் விளக்கு, மின் வண்டி முதலியவற்றைக் கண்டுபிடித்த தாமசு ஆல்வா எடிசன் ஐயாயிரம் ஆண்டுகட்கு முன் அவற்றைக் கண்டுபிடித்திருக்க முடியுமா? முடியாதன்றோ? மற்றைய விஞ்ஞானிகளும் இத்தகையோரே!

மற்றும், இன்னின்ன பொருளைக் கண்டுபிடித்த பெருமை இன்னின்ன விஞ்ஞானிகட்கு மட்டுந்தான் உரியது என்று சொல்வதும் பொருந்தாத தொன்றேயாம். மாணவன் பத்தாவது வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளா னென்றால், அதற்குக் காரணர் பத்தாவது வகுப்பு ஆசிரியர் மட்டுந்தான் என்று சொல்வது எங்ஙனம் பொருந்தும்? அட்டை வகுப்பு ஆசிரியர் அ-ஆ சொல்லிக் கொடுக்காவிட்டாலும், மேலுந் தொடர்ந்து ஒன்பதாவது வரை மாணவன் படித்துக்கொண்டு வந்திரா விட்டாலும் பத்தாவது வகுப்பாசிரியர் என்ன செய்ய முடியும்? எழுத்தே அறியாத இருபது வயதினன் ஒருவனை ஒன்பது மாதத்தில் பத்தாவது தேர்வில் தேர்ச்சி பெறும்படிச் செய்ய அவராலாகுமா? முடியாதன்றோ?

எனவே, இன்று காணப்படுகின்ற இனி காணப் போகின்ற விஞ்ஞான வெற்றிகளனைத்திலும் பழங்கால மனிதர்க்கும் பங்குண்டு என்பதை மறக்கவும்-மறுக்கவுங் கூடாது. இதனை யின்னுஞ் சிறிது ஆராய்வோம்.

முத்தொழில்

புதிதாக ஒரு பொருளை உண்டாக்கவோ, காப்பாற்றவோ, மறைக்கவோ (அழிக்கவோ) மனிதனால் முடியாது. ஆனால், மனிதனே அம் முத்தொழிலைச் செய்வதுபோல் நமக்குத் தோன்றும். அத்தோற்றம் வெறுங் கானல் நீரே. ஓடம் மனிதனை அக்கரையிற் சேர்க்கிறது என்றெண்ணுகிறோம். அது தவறு. மனிதனே ஓடத்தை அக்கரையிற் சேர்க்கிறான் என்பதே உண்மை. அதுபோல, மனிதன் முத்தொழில் செய்யவில்லை. அவன் ஓடம். மற்றோர் ஆற்றலே அவனைச் செய்விக்கின்றது. அவ்வாற்றலுக்குப் பெயர் இயற்கையென்று சிலரும், இறையென்று சிலரும் இயம்புவர். அதனாலென்ன? தமிழ் என்றாலும் இனிமை என்றாலும் சொல்தானே வேறு? பொருள் ஒன்றுதானே!

அங்ஙனம் மனிதனால் முத்தொழில் செய்ய முடியாதென்றால் அவன் செய்வதுதான் என்ன? என்ற வினாவிற்கு விடைவேண்டும். நாற்காலி யுண்டாக்கினவன் யார்? மனிதன். நாடகம் பார்க்கும்போது நடிகன் மேலுள்ள வெறுப்பால், அந் நாற்காலியைத் தூக்கி யடித்து ஒடித்து உடைத்து அழித்து பின் அதனை அடுப்பிலிட்டு எரித்துச் சாம்பலாக்கியவன் யார்? மனிதனே! ஏன் - இங்கு அவன் முத்தொழில் செய்ததாக மேளதாளத்தோடு ஒத்துக் கொள்ளலாமே? முக்காலும் முடியாது. எப்பொழுது நாற்காலியை ஒடிக்கிறானோ, புத்தகத்தையும் துணியையுங் கிழிக்கிறானோ, ஒருவரிடம் ஒரு பொருளைக் கொடுக்கும்போது பதனமாக எடுத்துக்கொண்டு போ என்று நம்பிக்கையிழந்து அறிவுரை புகட்டுகிறானோ, அப்பொழுதே, மனிதனால் எதையும் நிலையாகக் காப்பாற்ற முடியாது என்ற உண்மை வெட்ட வெளிச்சமாகின்றது. நாற்காலி உண்டாக்கினான் என்றால் நடுத்தெருவில் நின்று கொண்டு ‘நாற்காலியே வா’ என்றதுமா நாற்காலி வந்துவிட்டது? பேசும் படத்தில் திடீரெனத் தோன்றும் நாற்காலியும் தச்சன் கைவேலை தங்கியதன்றோ? மனிதன் மரத்தைத்தானே நாற்காலியாகச் செய்தான்? மரம் ஏது? விதையைத்தானே மரமாக்கினான்? அது போகட்டும். நாற்காலியை மறைத்தானென்றால், நடுத்தெருவில் நின்றுகொண்டு ‘நாற்காலியே போ’ என்றதுமே நாற்காலி உலகத்தைவிட்டு முற்றிலும் மறைந்துவிட்டதா? அதனையுடைத்துத் தனித்தனிக் கட்டையாக்கினான்; கட்டையை விறகாக அடுப்பில் இட்டுச் சாம்பலாக்கினானல்லவா? நாற்காலி மறைய வில்லையே; இப்போது சாம்பல் உருவத்திலுள்ளதே! எனவே மனிதன் தன்னுடனேயே தோன்றி உலகில் நிலைத்துள்ள ஒரு பொருளை மற்றொரு பொருளாகச் செய்கின்றான்; அதுதான் அவனால் முடியும் என்ற முடிவுக்கு வருவோம். வருவதென்ன அம்முடிவுதானே நம்மைத் தேடி வரும்.

ஒன்றை மற்றொன்றாகச் செய்யும் மனிதன், ஒரு விநாடியிலாவது அல்லது ஒரு நாழிகையிலாவது ஒரு நாற்காலியின் பகுதிகளனைத்தையுஞ் செய்து பொருத்தி விடுகின்றானா? இல்லை. ஒரு நேரத்தில் ஒரு காலைக் கடைகிறான். தனித்தனியாக நான்கு காலையுங் கடைந்த பின், பின்னால் சாரும் கட்டைகளைத் தனித்தனியாகக் கடைவான். பின் அக்கட்டை தாங்கிகளைச் செய்வான். மேலும் கைப்பிடிகளைச் செதுக்குவான். தொடர்ந்து கைப்பிடி தாங்கிகளையிழைப்பான். அடுத்து, அமருந் தட்டுப் பலகையையும் அமைப்பான். இறுதியிலேயே எல்லாவற்றையும் இணைத்துப் பொருத்துவான். அதற்குப் பெயரே நாற்காலி. அவன் நாற்காலியின் ஒரு காலைத் தவிர மீதி யெல்லாவற்றையுஞ் செய்து விட்டான் இறுதியில் எஞ்சியுள்ள அக்காலைக் கடைந்து கொண்டிருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அப்போழ்து ஒருவர் அவனையணுகி, ‘என்ன செய்கின்றாய்’ என்று கேட்டால், “நாற்காலி செய்கிறேன்” என்றே அவன் பதில் சொல்வானல்லவா? அல்லது - அவன் இன்னும் நாற்காலியின் எந்த உறுப்புகளையும் செய்யவில்லை; முதன்முதலாக ஒரு காலைக் கடையத் தொடங்கியுள்ளான் என்று வைத்துக் கொள்வோம். அப்போது ஒருவர் அவனை நோக்கி, “என்ன செய்கிறாய்” என்று கேட்டால், அப்பொழுதும் அவன் ‘நாற்காலி செய்கிறேன்’ என்றுதானே பதில் சொல்வான். எனவே ஒருவன் நாற்காலி செய்வதற்கு ஒரு நாள் பிடிக்குமென்றால், முதல் விநாடியிலிருந்து கடைசி விநாடி வரையும், அவனால் செய்யப்படும் பொருளுக்குப் பெயர்நாற்காலியே என்பது பட்டப்பகல் ஞாயிறேபோல் திட்டமாய்த் தெரியவருமே!

விஞ்ஞானத்தின் பிரிவு

மேல் எடுத்துக்காட்டப்பட்ட நாற்காலியின் தோற்றம்தான் விஞ்ஞானத்தின் தோற்றமும். தச்சன் கையில் உளியை யெடுத்ததுமே நாற்காலியென்னுஞ் சொல் பிறந்துவிட்டதைப்போல, இயற்கையாய் விளைந்த காய், கனி, கிழங்குகளை உண்டுவந்த மனிதன் செயற்கைாகப் பயிரிடத் தொடங்கியதுமே விஞ்ஞானம் வெளிப்பிறந்துவிட்டது. தலையில் பொருள்களைச் சுமந்து திரிந்த மனிதன், உருளை செய்து வைத்து இழுக்கத் தொடங்கி அன்றே, பெரிய பெரிய “லாரி”களும் புகைவண்டி முதலியனவும் செய்வதற்கு வித்திட்டுவிட்டான். அவ்விஞ்ஞான வித்து நாளடைவில் படிப்படியாக வேரூன்றி, முளையின்று, தண்டு நீண்டு, கிளைத்து, தளிர்த்து, தழைத்து பூத்துக் குலுங்குகின்றது இன்றைக்கு! (இனி வரப்போகும் விஞ்ஞான வளர்ச்சியைக் காய்கனியாகக் கூறுவது சாலும்.) அன்று தழையை மென்று தண்ணீரைக் குடித்த மனிதனை இன்று ஒன்பது வெண் பொற்காசு செலவில் ஒரு வேளையுணவு உண்ணச் செய்கிறது. அன்று மலைப்பிளவில் வாழ்ந்த மனிதனை, இன்று நூற்றிருபது அடுக்கு மாளிகையுள் நுழைந்து வாழச் செய்கின்றது. அன்று தழையுடுக்கவும் அறியாதிருந்த மனிதனை, இன்று ஆயிரம் வெண்பொற் காசு மதிப்புள்ள ஒரு புடவை வாங்கச் செய்கின்றது. அன்று விலங்கு போல் ஊமையாயிருந்த மனிதனை, இன்று பல்கலைப் புலவனாக்கி வருகின்றது. அன்று சிறு மலைப்பிளவைக் கடக்கவும் அஞ்சிய மனிதனை, இன்று மதி (சந்திரன்) மண்டலத்திற்குச் செல்ல முன்கூட்டிப் பதிவு (Register) செய்ய வைக்கின்றது. விஞ்ஞான வித்தின் விளைவுதான் என்னே!

அன்றைய விஞ்ஞானம் பால் என்றால், இன்றைய விஞ்ஞானம் அதிலிருந்து எடுக்கப்பட்ட நறு நெய்யாகும். அன்றைய விஞ்ஞானம் விறகு என்றால், இன்றைய விஞ்ஞானம் வெந்தழலாகும். அன்றைய விஞ்ஞானம் ஒரு கோழி முட்டையென்றால், இன்றைய விஞ்ஞானம் அம்முட்டையினின்றும் கால், வால், தலை முதலியவற்றோடு வெளிவந்த கோழிக்குஞ்சாகும். இக்குஞ்சு இன்னும் பெரிய கோழியாகும். அன்றைய விஞ்ஞானம் ஒரு சிறிய ஆலம் வித்து என்றால், இன்றைய விஞ்ஞானம் அவ்வித்திலிருந்து தோன்றிய ஆலஞ்செடியாகும். இன்னும் இச்செடி, ஒரு மன்னர் மன்னன் தன் பெரும் படைகளுடன் தங்குதற்குரிய அளவு நிழல்தரும் பெருமரமாக விழுதுவிட்டு விரிந்து படர்ந்து வளர்ச்சி பெறும். விஞ்ஞான வித்தின் விரிவுதான் என்னே!