உள்ளடக்கத்துக்குச் செல்

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்/படிப்பினால் பதவி

விக்கிமூலம் இலிருந்து

8
படிப்பினால் பதவி பெற்றவர்


“மனிதன் தன்னுடைய நாற்பது வயதிற்குள்ளாகவே ஒரு நிலைக்கு வந்துவிட வேண்டும். அப்பொழுதுதான் அவனுடைய பிற்கால வாழ்க்கை நன்றாக இருக்கும் இல்லாவிட்டால் அவன் வாழ்க்கை முழுதும் கஷ்டப்பட வேண்டியதுதான்” என்று மனோதத்துவ நிபுணர்கள் கூறுவர். இதை, ஆலிவர் வெண்டல் ஹோம்ஸ் என்பவர் பூரணமாக நம்பக் கூடியவர். அவருக்கு 39 வயது முடியும்வரை அவருடைய வாழ்க்கை ஒரு சரியான பாதைக்கு வரவில்லை. இதனால் அவர் மனம் வருந்தி இனி தாம் முன்னுக்கு வரவே முடியாதோ என்று எண்ணினார். இதை தம் மனைவியிடமும் சொன்னார். அவருடைய மனோ நிலையை அறிந்து அவரது மனைவி அவரைத் தேற்றுவதற்காக சில வார்த்தைகள் சொன்னார் அவர் சொன்ன வார்த்தைகள் எதிர்பாராத வகையில் பலித்தும் விட்டது. அதுவரை சட்டம் படித்துவிட்டு, ஒரு டாலர்கூட சம்பாதிக்காத வெண்டல் எதிர்பாராத வகையில் ஹார்வர்டு

சட்டக்கல்லூரியில் சட்டப் பேராசிரியராக அழைக்கப்பட்டார். மாதம் 900 டாலர் சம்பளம் என்று கூறினார். இதைக் கேட்டதும் வெண்டலுக்கு நம்பவே முடியவில்லை. இம்மாதிரியான பெரிய பதவி தமக்குக் கிடைக்குமா என்ற ஆச்சரியப்பட்டார்.

வெண்டலின் பள்ளிப் படிப்பு முடிந்ததும் சட்டப் படிப்புப் படிக்க முனைந்தார். இதைக்கண்ட அவரது தகப்பனார் மனம் வருந்தினார். அந்தக் காலத்தில் அமெரிக்காவில் வக்கில் உத்தியோகம் செய்பவர்களுக்கு வருமானம் அதிகமாகக் கிடைக்காது. மேலும், அப்போது வெண்டலுடைய குடும்பம் மிகவும் வறுமையில் இருந்து வந்தது. அதனால், வருமானம் இல்லாத வக்கீல் படிப்பை விட்டுவிட்டு, வேறு படிப்பில் கவனம் செலுத்துமாறு வெண்டலிடம் அவர் தகப்பனார் கூறினார். அந்தச் சமயம் அமெரிக்காவில் உள் நாட்டு கலகம் மூண்டது அதற்கு இளைஞர்கள் தேவை என்று அரசாங்கம் அறிவித்ததும் வெண்டல் சட்டப் படிப்பை விட்டு ராணுவத்தில் சேர்ந்தார்.

வெண்டல் தம் வேலையில் கண்ணும் கருத்துமாக இருப்பவர்; எவருக்கும் அஞ்சாதவர், தயவு தாட்சண்யமின்றி நடுநிலையிலிருந்து எதையும் செய்யக்கூடியவர். அவருடைய பயமற்ற தன்மையையும், வேலையில் இருந்த ஆர்வத்தையும் விளக்க ஒரு சம்பவத்தைக் கூறலாம். உள்நாட்டு கலகத்தின்போது அப்பொழுது ஜனாதிபதியாக இருந்த லிங்கோலினுடைய அரண்மனையைப் பாதுகாக்கும் படையில் வெண்டல் இருந்தார். ஒரு நாள் ஜனாதிபதி லிங்கோலின் தம்முடைய அரண்மனை மாடியின் முற்பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது கலகக்காரர்கள் அரண்மனையின் எதிரில் துப்பாக்கி சகிதமாகக் கூடியிருந்தனர். இதனால் ஜனாதிபதிக்கு அபாயம் ஏற்படலாம் என்று பாதுகாப்பான இடத்திற்குப் போகும்படியும் அவரிடம் ஒரு ராணுவ அதிகாரி கூறினார். ஆனால் ஜனாதிபதி போக மறுத்துவிட்டார். ராணுவ அதிகாரி வேறு வழியின்றி தாம் வந்த வழியே திரும்பிப் போய்விட்டார். ஆனால் கலகக்காரர்கள் துப்பாக்கியால் ஜனாதிபதியை சுடுவதற்கு குறி வைத்ததைப் பார்த்த வெண்டல், சிறிதும் தயங்காமல் “டேய் உள்ளே போடா” என்று உரத்த குரலில் சொன்னார். ஜனாதிபதி திடுக்கிட்டு உள்ளே போகத் திரும்பியபோது அவருக்குப் பக்கவாட்டில் ஒரு குண்டு பாய்ந்த சென்றது. ஜனாதிபதி தற்செயலாக உயிர்த்தப்பினார். பிறகு அவர் வெண்டலை அழைத்து அவருடைய கடமை உணர்ச்சிக்கு மெச்சினார். வெண்டல் மரியாதையின்றி பேசியபோதிலும் மன்னித்ததாகவும் கூறினார்.

உள்நாட்டுக் கலகம் முடிந்த பிறகு, வெண்டல் ராணுவத்திலிருந்து நீக்கப்பட்டார். அதே சமயம் அவருக்குக் கலியாணமும் ஆயிற்று ராணுவத்திலிருந்ததற்காகக் கிடைத்த சம்பளத்தைக் கொண்டு அவர் தம் மனைவியுடன் ஒரு சிறு அறையில் குடும்பம் நடத்தலானார். அவர் விட்டாலும் சட்டப் படிப்பு அவரைவிடவில்லை. அதிலேயே அவருடைய மனம் சென்றதால் அதையே மீண்டும் படிப்பது என்று தீர்மானித்தார்; படித்தும் முடித்தார்.

வருமானந்தான் ஒன்றுமில்லாதிருந்தது. இதனால் மனம் உடைந்து போனார் வெண்டல். ஆனால், அதற்காக அவர் சும்மா இருந்து விடவில்லை. சும்மா இருக்கும் சமயம் அமெரிக்க அரசாங்க சட்டத்தைப்பற்றி நன்கு ஆராய்ச்சி செய்யலானார். ஆராய்ச்சியை எல்லாம் அவர் ஒரு புத்தகமாக எழுதினார். புத்தகம் வெளியாயிற்று. ஆனால் பலன்தான் கிடைக்கவில்லை.

அப்போது அவருக்கு 39 வயது பூர்த்தியாகி இருந்தது. இத்தனை நாட்கள் வரை வாழ்க்கை ஒரு நிலையில் ஸ்திரமாக ஆகாமல், இனி எங்கே ஆகப் போகிறது என்று அவர் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் போதே அவருக்கு சட்டக் கல்லூரியில் பேராசியர் பதவி கிடைத்தது.

பேராசிரியர் வேலையில் அமர்ந்த அவர் சிறிது நாட்களுக்குள்ளாகவே அதைவிட்டுவிட வேண்டியதாயிற்று. முஸ்ஸா செஸ்ட் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக இருந்தவர் பதவியை ராஜினாமா செய்து விட்டார். அப்பதவிக்கு தகுதியான ஆள் வெண்டல் தான் என்று கவர்னர் தீர்மானித்தார். உடனே அவரை அழைத்து சுப்ரீம்கோர்ட் நீதிபதியாக நியமித்தார்.

இதிலிருந்து அவர்தம் கடமையைச் சரிவரச் செய்ததின் மூலம், அமெரிக்க அரசாங்க சுப்ரீம் கோர்ட் பிரதம நீதிபதி வரை பதவி வகித்தார். அவர் தம்முடைய 90 வயது வரை அப்பதவியிலேயே இருந்து வந்தார்.

வெண்டல் நகைச்சுவையாகப் பேசக் கூடியவர். எப்பொழுதும் தத்துவப் புத்தகங்கள், சட்டப் புத்தகங்கள், முதலியவற்றைப் படித்துக் கொண்டே இருப்பார்.

காலஞ்சென்ற ஜனாதிபதி ரூஸ்வெல்ட் அவருடைய நெருங்கிய நண்பர். அவர் ஜனாதிபதியாகத் தேர்ந்து எடுக்கப்பட்டதும் தனது சந்தோஷத்தையும் மரியாதையையும் தெரிவித்துக்கொள்ள வெண்டல் வீட்டிற்கு வந்தார். அப்பொழுது வெண்டல் பிளாட்டோவின் தத்துவங்களைப் படித்துக்கொண்டிருந்தாராம். இதைக் கண்ட ரூஸ்வெல்ட் ‘இந்த வயதில் ளிாட்டோவை ஏன் படிக்கிறீர்கள்?’ என்று கேட்டாராம்.

அதற்கு வெண்டல் சிரித்துக்கொண்டே “என் அறிவை விருத்தி செய்து கொள்வதற்காக” என்றாராம் அப்போது அவருக்கு வயது 93 !