வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்/‘பணத்தை எப்படிச் செலவழிப்பது’

விக்கிமூலம் இலிருந்து
10
“பணத்தை எப்படி செலவழிப்பது” என்று தெரியாதவர்


“பணக்காரராக இருந்து இறப்பதே வெட்கப் பட வேண்டிய விஷயம்” என்று ஒருவர் கருதினால் அவரைப் பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்? அத்துடன் தம்மிடமுள்ள பணத்தை எந்த வகையில் செலவு செய்தால் நன்றாக இருக்கும் என்று பொது மக்களிடம் ஆலோசனை கேட்டால் என்ன சொல்வீர்கள்? ஆனால் இப்படிக்கூட யாராவது செய்வார்களா என்று தான் கேட்பார்கள்.

ஆன்ட்ரூ கெரனகி என்ற கோடீஸ்வரர் இறுதிக் காலத்தில் தாம் பணக்காரராக சாக விரும்பவில்லை, அதன் காரணமாக, அவர் பத்திரிகைகளில், தம்மிடமுள்ள பணத்தை எந்த வழியில் செலவு செய்தால் நன்றாக இருக்கும் என்று யோசனை கேட்டு விளம்பரம் செய்திருந்தார். நல்ல யோசனைகளைச் சொல்பவர்களுக்குப் பரிசும் கொடுப்பதாக அறிவித்திருந்தார். இதைக் கண்டு பலர் நகைக்கத்தான்


செய்தார்கள். மற்றபடி யோசனைகூற யாருமே முன்வரவில்லை.

ஆன்ட்ரூ கெரனகியின் பெற்றோர் பணக்காரர்கள் அல்ல. அவருடைய சொந்த ஊர் ஸ்காட்லாந்து. கெரனகியின் தகப்பனார் மிகவும் ஏழை. அவர் சிறு பையனாக இருக்கும் போது அவருடைய தகப்பனார் அமெரிக்காவுக்குச் சென்று குடியேறினார். தகப்பனாருக்கு மேஜை, ஜன்னல் முதலியவைகளுக்கு அழகான முறையில் துணிகளைத் தயாரிக்கத் தெரியும். அமெரிக்காவில் அவர் மேஜையின் மீது விரிக்கும் துணி, திரைத் துணி, ஜன்னல் துணி முதலியவைகளை அழகான பூ வேலைப்பாடுகளுடன் தயாரித்து வீடு வீடாக சென்று விற்று வந்தார். கெரனகியின் தாயார் பூட்ஸ் தயாரிப்பவர்களிடம் வேலை செய்து வந்தாள். ஒருநாள் வருவாய் இல்லாவிட்டால் குடும்பம் பட்டினி என்ற நிலையிலேயே இருந்து வந்தது. கெரனகிக்கு அப்போது போட்டுக் கொள்ள ஒரே ஒரு உடைதான் இருக்குமாம். அதைத் தினமும் இரவு வேளைகளில் அவருடைய தாயார் துவைத்துப் போடுவாராம். அபபொழுது தெல்லாம் கெரனகி தன் பெற்றோர் படும் கஷ்டங்களைக் கண்டு கண்ணீர் விடுவாராம். ஒரு சமயம் அவர் தன் தாயாரிடம் “அம்மா, உங்களை நல்ல நிலைமையில் வைக்கும் வரை நான் கலியாணமே செய்துகொள்ளப் போவதில்லை” என்று கூறினாராம்.

கெரனகி, நான்கு வருஷங்கள் பள்ளியில் படித்து விட்டு, தபால் நிலையத்தில் தந்திச் சேவகனாக வேலையில் அமர்ந்தார். தினம் 18 மணிநேரம் வேலை செய்தார். தந்திச் சேவகன் வேலையிலிருந்து கொண்டே தந்தி அடிக்கும் வேலையையும் கற்றுக் கொண்டார். சிறிது காலத்திலேயே அவர் தந்திக் குமாஸ்தா வேலையில் அமர்ந்தார். பிறகு மேலதிகாரியாகவும் பதவி உயர்ந்தது. இச்சமயத்தில்தான் அவருக்கு எதிர்பாராத வகையில் ‘புதையல்’ ஒன்று கிடைத்தது. அதைப் புதையல் என்று சொல்வதே தகும். ஒருநாள், கெரனகி ஒருவேலையாக ரயிலில் பிரயாணம் செய்து கொண்டு இருந்தார். அப்போது அவர் பக்கத்தில் உட்கார்ந்திருந்த நபர் ஒரு திட்டத்தை அவரிடம் காட்டினார். ரயில் பெட்டிகளில் பிரயாணிகள் தூங்கும்படியான வசதிகளை ஏற்படுத்தும் திட்டமே அது. சக பிரயாணியின் திட்டம் புரட்சிகரமானதாக இருந்ததால், கெரனகி அத்திட்டத்தை ஒரு விலைகொடுத்து வாங்கிக்கொண்டார் அதை ரயில்வே கம்பெனிக்கு நல்ல லாபத்திற்கு விற்றார். அதிலிருந்து அவருக்கு அதிர்ஷ்டக் காற்று அடிக்கத் தொடங்கியது. அச்சமயத்தில் தான் அமெரிக்காவில் புரட்சி ஏற்பட்டது. அதன் காரணமாக ரயில் சாமான்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. உடனே கெரனகி ரயில் சாமான்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றை நிறுவினார். நாளடைவில் வளர்ந்தது. கெரனகி பணக்காரர் ஆகிவிட்டார்.