வாழ்க்கை நலம்/022-061
ஒழுகுதல், ஒழுக்கம் என்று பாராட்டப் பெறுகிறது. அதாவது ஒருவருடைய வாழ்க்கை நடைமுறைகள் ஒழுக்கம் என்று கணிக்கப்பெறும். ஒருவர் தனக்கும் தன்னோடு வாழும் மற்றவர்களுக்கும் கேடுகள் வாராது வாழ்வது ஒழுக்கமுடைய வாழ்வாகும்.
இப்பிறப்பு, சிறப்புடைய ஒன்று. இதற்கு இணையானது எதுவும் இல்லை. இதுவும் ஒரே ஒரு தடவை தான். தேர்வுகள் பல தடவை எழுதுவது போல, வாழ்க்கைத் தேர்வு பல தடவை எழுத இயலாது; எழுத முடியாது. ஆதலால் வாய்த்த இந்தப் பிறப்பைப் பயனுறு வகையில் வாழ்ந்து, வாழ்க்கையின் பயன் காணவேண்டும்.
ஒழுக்க நிலையில், த ற் சா ர் பா ன ஒழுக்கம் முதல் நிலையினது. அதாவது ஒருமனிதன் தன்னைத் தான் கொண்டொழுகுதல்; தன்னுடைய சுவைப் புலன்களைத் தூய்மையாக வைத்துக் கொள்ளல். உலகின் எல்லாவித நோய்களுக்கும், துன்பங்களுக்கும், தீமைகளுக்கும் அடிப்படைக் காரணம், சுவைநுகர்வின் பாற்பட்ட இழிவுத் தன்மையே! வளர்ந்து வரும் மருத்துவ மனைகள், காவல் நிலையங்கள் ஆகியன மானிடரின் சுவைப் புலன்கள் கெட்டவழித் தோன்றும் நோய்களிலிருந்தும் தீமைகளிலிருந்தும் மானுடத்தை மீட்கவேயாம். மானிடர் புலன்களின் மீது கவனம் செலுத்தித் துய்மை காக்கவேண்டும் புலன்கள் தூய்மைக்குத் துணை செய்வது ஆசைகளிலிருந்து தப்பிப்பது. தேவையை அடைய நினைப்பது ஆசையல்ல. அளவற்று வெறி பிடித்த நிலையில் அடைய நினைப்பதே வெறுக்கத்தக்க ஆசை.
புலன்களில் தூய்மை காத்தால், தாமே பொறிகளில் தூய்மை காணப்பெறும், பொறிகள் மீது தனி ஆணை செலுத்தி நெறிப்படுத்திக் கொள்ளவேண்டும். நமது வாழ்க்கை என்ற தேர் பத்துக் குதிரைகள். பூட்டிய தேர் ஆகும். இந்தப் பத்துக் குதிரைகள் புலன்களும் பொறிகளுமாகும். இவைகளின் பிடி நமது கையில் இருப்பதே ஒழுக்கம் நிறைந்த வாழ்வு. ஒழுக்கமுடையார் என்றும் நலமுடன் வாழ்வர்; வெற்றிகளுடன் வாழ்வர்; பலருக்கும் பயன்பட வாழ்வர். வாழ்க்கையின் பெரும் பகுதி ஒழுக்கத்தால் சிறப்பது. வாழ்க்கைப் பயணத்தின் நெடிய வரலாறு ஒழுக்கத்தாலேயே எழுதப் பெறுகிறது.
அடுத்து ஒழுக்கத்தின் இரண்டாவது நிலை, சமுதாய ஒழுக்கம் எனப்படும். அதாவது பலருடன் ஒத்திசைந்து வாழ்தல். விதண்டா வாதங்களும், பிணக்கும், பகையும் சமூகத்தை அரித்து அழிக்கும் கரையான்களாகும். சமுதாயமே தனிமனிதனை உருவாக்கும் பட்டறை. ஆதலால், சமுதாய ஒழுகலாறுகள் கண்டிப்பாகப் பின் பற்றத் தக்கன, சமுதாயத்தின் மதிப்பைக் கெளரவித்தலில் தனிமனித ஒழுகலாறு சிறப்படைய வழி உண்டு. மதிப்பீட்டுப் பொறுப்புள்ள சமுதாய அமைப்பு, சமுதாய ஒழுக்கம் சீர்கெடின் தனிமனித ஒழுகலாறும் சிறக்க இயலாது. ஆக ஒழுக்கமுடையராக வாழ்தலே வாழ்க்கை.
"ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்"
என்பது ஒரு சிறந்த குறள். ஆம்! ஒவ்வொருவருக்கும் அவர்தம் உயிர்பெரியது; எல்லாவற்றிலும் பெரியது. சாக யாரும்விரும்புவதில்லை. அதனால்தான் ஓரறிவுயிர் முதல் ஆறறிவு உயிராகிய மானிடன் வரையில் எல்லாஉயிர்களும் உயிர்க்காப்பு முயற்சியில் முன்னணியில் நிற்கின்றன. உயிர்க்காப்பு முயற்சியின் அளவுக்கு ஒழுக்கப் பாதுகாப்பு முயற்சி கால்கொள்ளவில்லை. உயிரோடு வாழ்தல், வாழ்தலின் பயன்காண! அதாவது வையகம் பயனுற வாழ்ந்து நிலத்திடை நீள்புகழ்பெறுதல். இதற்கு ஒழுக்கம் துணை செய்யும். உயிரோடு வாழ்ந்தும் ஒழுக்கமிலாமையால் நோய்களுக்கு இரையாகியும், சமுதாய ஒழுகலாறு இன்மையால் ஊரவர் பழி தூற்றவும் வாழ்ந்து பயன் என்ன? இத்தகையோர் வாழாமையே கோடி தரும்.
குடிமை- குடிமைப்பண்பு- Citezenship என்பது புதிய நாகரிகத்தின் வடிவம். ஆனால் திருக்குறள் குடிமைப் பண்பு பற்றிப் பேசுகிறது.
"ஒழுக்க முடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்"
அதாவது, நாடு தழுவிய நிலையில், ஒத்தது அறிந்து ஒழுகுதலே குடிமைப் பண்பு. நமது நாட்டுக்கு என்று சில நாட்டு ஒழுகலாறுகள் தேவை. முதலாவது நாட்டு ஒழுக்கம் சமயச் சார்பற்ற (SECULAR) ஒழுக்கம். இரண்டாவது பலமொழிகளைக் கற்றல். மூன்றாவது சுதந்திரத்தை - ஜனநாயக மரபுகளைப் பாதுகாத்தல். இவைகளைத் தேசீய ஒழுக்கங்கள்-என்று கூறலாம். இந்த ஒழுக்கங்களை மேற்கொண்டு ஒழுகுவது இந்தியக் குடியுரிமை பெற்ற ஒவ்வொருவரின் கடமையுமாகும்.