வாழ்க்கை நலம்/025-061

விக்கிமூலம் இலிருந்து

25. தன்னலம் அற்றலே நல்லொழுக்கம்!

ஒழுங்குகள், ஒழுக்கத்திற்கு முன்னோடி. ஒழுக்கங்கள் நெறிவழிச் செயற்பட ஒழுங்குகள் தேவை. ஒழுக்கம் தன் ஆக்கத்திற்குரியது; பிறருக்குத் தீங்கு செய்யாதது. ஒழுக்கம் பல துறையின. ஒழுக்கம் என்பது விரிந்த பரந்த பொருளுடையது. ஒரு நற்குணம், நற்செயல் மட்டுமே ஒழுக்கத்திற்கு அளவுகோலாக அமையாது.

ஒழுக்கம் இரு வகையினது. ஒன்று தன்னிலை ஒழுக்கம். பிறிதொன்று சமூக ஒழுக்கம். தன்னிலை ஒழுக்கம் தலைப்பட்டு நிற்போர் பலர் சமுதாய ஒழுகலாறுகளின்றி வாழ்வர். சமுதாய ஒழுகலாறுகளில் தலைப்பட்டு நிற்போர் பலர் தன்னிலை ஒழுக்கம் திரிந்து நிற்பர். ஒன்றையன்றிப் பிறிதொன்றில்லை. ஒரோவழி இருப்பினும் பயன் தராது.

தனி நிலையில் வளரும் ஒழுகலாறுகள் உடல் நலத்திற்கு உற்ற துணை; ஆன்ம நலத்திற்கு அரண். அதனால் அறிவு நலம் சிறந்து விளங்கும். முதுமை நிலையிலும் இளமை பேணலாம். எப்போதும் செயற்படலாம். ஓயாது உழைத்திட ஒழுக்க நலம் துணை செய்யும்.

சமூக நல ஒழுக்கங்கள் சமூகத்தைச் சீரமைக்கும். சூழ்நிலை வாழ்க்கைக்கு இசைந்ததாக அமையும், நல்லெண்ணம் வளரும்; நம்பிக்கை வளரும்; என்றும் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும்.

நாடு பரப்பளவில் பெரியது. பலகோடி மக்கள் வாழ்வது. இந்நாட்டில் - பலகோடி மக்கள்

வாழுமிடத்தில் நல்லெண்ணம் இன்றியமையாதது. ஒருவருக்கும், பிறிது ஒருவருக்கும் இடையே நல்லுறவு வேண்டும். மொழி, சமயம், எல்லைகள் கடந்த நிலையில் உறவுகள் கால்கொள்ள வேண்டும். இந்த நிலையில்தான் நாடு வளரும்; நலமுறும். ஒரு நாட்டுணர்வு நிலையிலான ஒருமைப்பாட்டில் நிலைகொள்ள தேசிய ஒழுகலாறுகளை மேற்கொள்ள வேண்டும்.

தேசிய ஒழுகலாறு என்பது ஒரு நாட்டு மக்களிடையில் வழிவழியாக வளர்ந்து வந்துள்ள ஆன்மநேய ஒருமைப்பாடு. பொதுநல அடிப்படைகள் ஆகியவைகளைத் தொடர்ந்து வளர்க்க வேண்டும். பாதுகாக்க வேண்டும்.

ஒவ்வொரு நாட்டிலும் தேசிய ஒழுகலாறுகள் என்று சில, வளர்ந்து இடம்பெற்றுள்ளன. அத்தேசீய ஒழுகலாறுகள் காலத்திற்கு இசைந்த வகையில் புதுப்பொலிவுடன் பேணப்படுதல் வேண்டும். ஒழுக்க நெறிக்கு அரண் செய்து வளர்வது பொதுநலம். அதாவது பிறர் நலம் பேணுதல். தன்னலம் ஒழுக்கக் கேடு.

        "உலகம் வேண்டுவது ஒழுக்கமே!
         சுயநலம் தீயஒழுக்கம்!
         சுயநலம் அற்றதே நல்லொழுக்கம்!"

என்றார் விவேகானந்தர்.

வாழ்தல் என்பது இன்பமான ஒன்று. இன்ப வாழ்க்கையே இயற்கை. இன்ப நலன்களுக்காகவே உயிருடன் வாழ்கின்றோம். ஆனால், ஒழுக்க நலன்களே அச்சத்தை நீக்கும். இன்புறுந் திறனளிக்கும்; அமைதி வழங்கும். அதனால் உயிருடன் வாழ்தல் பயனுடையதாகிறது. உயிர் இன்றியமையாததுதான்! ஆனால், அதனினும் நல்லது ஒழுக்கம்.

      "ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
       உயிரினும் ஓம்பப் படும்."(குறள்—113)

"https://ta.wikisource.org/w/index.php?title=வாழ்க்கை_நலம்/025-061&oldid=1142276" இலிருந்து மீள்விக்கப்பட்டது