வாழ்க்கை நலம்/039-061

விக்கிமூலம் இலிருந்து

39. தீயினும், தீமை தீது!


நல் வாழ்க்கை அமைய, தீமை தரும் செயல்களைச் செய்யாதிருத்தல் வேண்டும். நல்லன செய்தல் வாழ்க்கையின் குறிக்கோள். நல்லன செய்தல் நன்று.

நல்லன செய்வது ஒருபுறம் இருக்கட்டும். தீமையைச் செய்யாது இருத்தல் வேண்டும். தீமையாவன வெறுப்பு, அகங்காரம், பொறாமை, பகைமை, பயம், துாற்றுதல் முதலியன.

இத் தீமைகளிலிருந்து வாழ்க்கை முற்றாக விலக வேண்டும். யாரொருவரையும் வெறுத்தல் கூடாது. நான் என்ற அகங்கார உணர்வு மேலிடுதல் கூடாது. யார் மாட்டும் எவர் மாட்டும் அழுக்காறு கொள்ளுதல் ஆகாது. யாரொடும் பகை கொள்ளுதல் கூடாது. பயம், அதாவது அச்சம் அறவே ஆகாது! மற்றவர்களுடைய சிறுமையை, குற்றங்களைத் தூற்றக்கூடாது. இவை தீமைகள். இவை தம்மைச் சார்ந்தாரை அழிக்கும்.

தீயைவிடத் தீமை கொடிது, தீ சார்ந்ததை மட்டும் எரித்து அழிக்கும். தீமை தோன்றும் இடத்தையும் அழிக்கும். சேரும் இடத்தையும் அழிக்கும் தீ,ஒரோ வழி பயன்படும். தீமை பயன்படாது; அறவே தீது; முற்றிலும் தீது. ஆதலால், தீயன சொல்லற்க. தீயன செய்யற்க. தீமை செய்தலைத் தவிர்த்திட ஒரே வழி நல்லன செய்தலேயாம்.

         தீயவை தீய பயத்தலால் தீயவை
         தீயினும் அஞ்சப் படும்.(குறள் 202)

"https://ta.wikisource.org/w/index.php?title=வாழ்க்கை_நலம்/039-061&oldid=1142291" இலிருந்து மீள்விக்கப்பட்டது