உள்ளடக்கத்துக்குச் செல்

வாழ்க்கை நலம்/043-061

விக்கிமூலம் இலிருந்து



43. கோள் கேளற்க, சொல்லற்க!

மானுடம் உறவுகளால் ஆயது; உறவுகளால் வளர்வது, உறவுகளுக்காகவே மானுடம் அமைந்தது. சமூக அமைப்பு மானுடத்தினிடையில் வளரும்—உறவுகளால் அமைந்தது; வளர்ந்து இயங்குவது; வாழ்வது.

உறவுக்கு எதிரான பகை, தீயது; பகை தீயது; "யாரொடும் பகை கொள்ளற்க" என்பது இராம காதை தரும் அறிவுரை. உறவு முறிந்து பகை வளர வாயில்கள் பல உண்டு. சொத்துரிமையின் காரணமாக உறவுகள் முறியக்கூடும். இஃது அருகிய வழக்கே!

நம்பிக்கையின்மை காரணமாக உறவுகள் முறியும். இந்த வகையில் பிரிவும் பெரும்பான்மையல்ல. ஒருவருக்கும் மற்றவருக்கும் இடையில் இருக்கும் உறவு, பகையாக மாறுவது மூன்றாவது மனிதரின் தலையீடு. அதுவும் கோள் சொல்லுதல் மூலம் தலையீடு.

கைகேயி உத்தமத்தாய். ஆனால், கூனியின் தலையீட்டால் அந்தத் தூய அன்பு திரிந்தது. அதனால் ஒரு வரைப் பற்றி அவர் இல்லாதபோது நமக்கு ஆயிரம் நலம் பயக்கும் செய்திகளை முன்னுரையாகக் கூறி, உடன் அந்த மூன்றாம் மனிதரைப் பற்றிச் சொல்லும் செய்திகளைக் கேளற்க! ஒரோவழி கேட்டாலும் பொருளாகக் கொள்ளற்க.

காற்றுப் புகாத நெருக்கமிக்க உறவுகளுக்கிடையிலும் கோள் சொல்லுவோர் புகுந்து விளையாடுவர்; பிரித்துவிடுவர். நமக்கு நன்மைபோலச் சொல்வர். நீதிச் சார்புடையன போலச் சொல்லுவர்! நயத்தக்க நாகரீகம் என்பர். ஆன்றோர், சான்றோர் நெறி என்பர். அவ்வளவும் பச்சைப் பொய். தாம் கூறும் கோள் விலை போக இவ்வளவு நடிப்பு! கவனமாக இருக்க வேண்டும்: விழிப்பாக இருக்க வேண்டும்.

மற்றவர்களைப் பற்றி ஒருவரிடம் பேசாதே; எதுவும் கூறாதே, கோள் சொல்லுதலும் தீது. ஆதலால் நாம் யாதொரு கோளும் யாரைப் பற்றியும் கூறக் கூடாது. பிறர் சொல்லும் கோளைக் கேட்கவும் கூடாது.

கோள் தற்சார்பு இனிப்பு முடிய கொடிய நஞ்சு. இதய வலிமையுடையோரைக் கூட எளிதில் வீழ்த்தும் இயல்பு கோளுக்கு உண்டு. ஒரு நன்மையே விளையுமென்றாலும் கோள் வாயிலாக அந்த நன்மை வளரவேண்டாம்.

கோளுக்கு உடன் வரும் தோழமைச் சொல் முகமன் (முகஸ்துதி). இதையும் தவிர்த்து விடுக. கோள் சொல்லுபவன் நச்சுத்தேள். கோள் சொல்வோர் உறவே வேண்டாம். ஒவ்வொரு நாளும் உறவுகளைக் காண்க ; வளர்த்துக்கொள்க; வையகத்தில் வாழ்வாங்கு வாழ்க!

"https://ta.wikisource.org/w/index.php?title=வாழ்க்கை_நலம்/043-061&oldid=1142295" இலிருந்து மீள்விக்கப்பட்டது