வாழ்க்கை நலம்/046-061

விக்கிமூலம் இலிருந்து

46. வேண்டாம் சினம் !

சினம்-கோபம் தீமையுள் தீமை. கோபத்தால் விளையும் தீமை பலப்பல. கோபத்தால் இரத்த நாளங்கள் சூடேறி உடலைக் கெடுக்கிறது. ஏன் கோபம் வருகிறது? எதனால் கோபம் வருகிறது? கோபம் தோன்றும் களங்கள் எவை? எவை? விருப்பு வெறுப்புக்களால் தாக்கப் பெற்றுள்ள மனித மனத்தில் தான் கோபம் எழும்!

காலம் காட்டும் கருவி-கடிகாரத்தை உற்று நோக்குங்கள்! ஓயாது ஓடிக்கொண்டிருக்கிறது. எந்தச் சூழ்நிலையிலும் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. கடிகாரங்களைச் சூழ்நிலை பாதிப்பதில்லை. அதுபோல நமது வாழ்க்கையும் ஓர் இயக்கம்.

எந்தச் சூழ்நிலையிலும் திகைப்பும் அச்சமும் கொள்ளாமல் தொடர்ந்து செயல் செய்தல் வேண்டும். கோபத்தினால் இழப்பேயாம். ஒருபொழுதும் ஆக்கம் இல்லை. கோபம், ஆக்கப்பணிக்கு அடக்கி வைக்கப்பெற்ற வெப்பம் எரிசக்தியாக மாறுவதைப்போல, அடக்கிவைக்கப்பட்ட கோபம் ஊக்கத்தைத் தரும்.

பணிகள் தொடர் நிலைத் தன்மையுடையன. படிப்படியாக வளரும் தன்மையதே மனிதவியல் திறன். முதலில் செய்ய இயன்றதைச் செய்க. அதன் தொடர்ச்சியாகச் செய்ய முடியாததையும் செய்யும் திறன் உருவாகும்.

திருவள்ளுவர் வெகுளாமை என்று பத்துக் குறள்களை ஒதுகிறார். வெகுளி, மனிதனின் நகையைக் கொல்லும்; வகையைக் கெடுக்கும்; இனத்தை சுட்டெரிக்கும்; தோழமையைக் கெடுத்துப் பிரிக்கும் என்றெல்லாம் வெகுளியினால் வரும் கேட்டினை விவரிக்கின்றார். திருவள்ளுவர் வெகுளியை மறந்துவிட வேண்டும் என்று கூறுகின்றார்.

ஆம்! வெகுளியை மறந்து விடவேண்டும். தன்னைச் சேர்ந்தாரைக் கொல்லும் வெகுளி என்றும் கூறுகின்றார். வெகுளியை மறந்து விடுக! வெகுளியை யார் மாட்டும் மறந்து விடுக! யார் மாட்டும் வெகுளி வேண்டாம்.

வெகுளியை மறந்தால் எண்ணியவைகளையெல்லாம் அடையலாம்! கால தாமதமில்லாமல் உடனடியாக உன் விருப்பத்தை அடையலாம்! எப்போதும் அடையலாம். உள்ளத்தில் உள்ளியதை அடையலாம். ஆதலால் வேண்டாம் வெகுளி; விடுமின் வெகுளி!

         மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
         பிறத்தல் அதனான் வரும். (803)

         உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
         உள்ளான் வெகுளி யெனின். (309)

"https://ta.wikisource.org/w/index.php?title=வாழ்க்கை_நலம்/046-061&oldid=1142298" இலிருந்து மீள்விக்கப்பட்டது