வாழ்க்கை நலம்/048-061

விக்கிமூலம் இலிருந்து

48. கோபமா? வேண்டாம் !

வெகுளி, சினம், கோபம் ஆகியன ஒரு பொருட்சொற்கள். எல்லா அறநூல்களுமே வெகுளியை அறவே விலக்குகின்றன. வெகுளி, பல தீய செயல்களுக்கு வழி வகுத்து விடுகிறது. சினந்து எழுவதற்குரிய சூழ்நிலைகளை வாழ்க்கையில் சந்திக்காமல் வாழ இயலாது.

ஆனால், எந்தச் சூழ்நிலையிலும் வெகுளாமல் இருப்பதே நல்லது. அதுவே நன்னெறி சார்ந்த வாழ்வு. கோபம் ஏன் வருகிறது? எதிர்பார்க்கும் லாபம் கிடைக்காது போனால் கோபம் வரும்; பேராசையின் காரணமாக கோபம் வரும். வேறு சிலருக்கு இயலாமை ஏற்படும் பொழுதும் கோபம் தோன்றும். கோபம் வெறும் உணர்ச்சி மட்டுமே. கோபத்திற்கு வலிமை கிடையாது.

இந்த உலகில் அனைவருமே தங்கள்மீது அதிக ஆசை காட்டுகிறவர்கள். அவரவர்களும் அவரவர்களுடைய வாழ்க்கை மீது தனிக் கவனம் செலுத்துவது இயற்கை! பெருவழக்கும்கூட! உங்கள்மீது உங்களுக்குப் பெருவிருப்பம் உண்டா? தற்காப்புணர்வு இருக்கிறதா? அப்படியானால் கோபப்படாதீர்கள்!

ஆம்! நீண்டநாள்கள் வாழவேண்டுமா? அறிவில் சிறந்து விளங்க வேண்டுமா? ஆம் எனில் கோபப்படாதீர்கள் ! கோபம் மரணத்தின் வாயில் ! அதனால் இதயத்துடிப்பு கூடும்! குருதி கொதிப்பேறும்; இதயம் பாதிக்கும்! மரணம் வந்து சேரும் !

ஆதலால் மரணத்தைத் தவிர்க்கவும், நீண்டநாள் வாழவும் வேண்டுமானால் கோபப்படாதீர்கள்! கோபம் நிதான்த்தை இழக்கச் செய்யும் ! அவ்வழி சிந்தனைப் புலன் சிதறும். அறிவு கையிகந்து போகும் கோபத்தின் விளைவால், மனிதன் மிருகமாகிறான். ஏன் இந்த அவலம்? கோபம் வேண்டாம்! வேண்டவே வேண்டாம் !

மனித சக்தி அளப்பரிய ஆற்றல் உடையது. படைப்பாற்றல் மிக்கது. இத்தகு அற்புதமான மனித ஆற்றலை ஒன்றுக்கும் பயன்படாத கோபத்தில் பாழாக்கலாமா? அடக்கி வைத்த உஷ்ணம் சக்தியாக மாறுகிறது. அது போலக் கோபம் வரும்போது அக்கோபத்தை உள்ளடக்கி ஆற்றலாக்குக! அந்த ஆற்றல் ஆக்கநிலையில் அற்புதங்கள் செய்யும் யார்மீது உங்களுக்குக் கோபம்? அவர்களையே நட்பாக்கிக் கொள்ளலாம். தீமை நன்மையாக வளரும்!

“எது நடந்தாலும் எப்படி நடந்தாலும் அமைதி இழக்காதவர்கள் பொறுமைசாலிகள்” என்றார் லூயிஸ் டீவென்சன்! அவர் மேலும் விளக்குகிறார். கடிகாரம் எந்தச் சூழ்நிலையிலும் டிக்டிக் என்று ஒரே மாதிரி அடிப்பதைப் போல எந்தச் சூழ்நிலையிலும் ஒரேமாதிரி இதயத்துடிப்பு உடையவராக விளங்கவேண்டும் என்றுகூறுகிறார்.

ஆதலால், நற்பண்புகளுக்கு எதிரிடையான கோபம் வேண்டாம்! வேண்டாம்! கோழைகளின் இயல்பே கோபம் ஆண்மையும் தைரியமும் உடையவர்கள் கோபப்படமாட்டார்கள்! கோபத்துடன் தொடர்பு கொண்டு இழப்பை அடைவதில் என்ன பயன்?

"https://ta.wikisource.org/w/index.php?title=வாழ்க்கை_நலம்/048-061&oldid=1142300" இலிருந்து மீள்விக்கப்பட்டது